Wednesday, August 3, 2011

ஜடம்

அவனை முதலில் பார்த்தது எங்கேயென்று யோசிப்பதை விடவும், அடிக்கடி எங்கு பார்த்திருக்கிறேன் என்று யோசித்தால் விடை எளிதில் கிடைத்துவிடும்.

குடிநீருக்காக சென்னை லோல்பட்ட காலத்தின் குறியீடாய் சற்றே தெருவுக்குள் வழிமறிப்பதுபோலத் துருத்தி நிற்கும் அந்தக் கருப்புநிற தண்ணீர்த்தொட்டி! பெரும்பாலும் அதன்மீது ஏதாவது சுவரொட்டி ஒட்டப்பட்டிருக்கும்; கருப்பு என்பதாலோ என்னவோ, அதில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிற சுவரொட்டிகளை அதிகம் பார்த்திருக்கிறேன். மாலை நேரங்களில், முக்கிய சாலையிலிருந்து குறுகலான சந்துவழியாய்ப் புகுந்து, தெருவுக்குள் திரும்பும்போது அந்தத் தொட்டியின் சுவற்றில் சாய்ந்தபடி அவன் உட்கார்ந்திருப்பது வழக்கம். கையிலோ, உதடுகளிலோ பீடியோ சிகரெட்டோ இருக்கும்.

பார்த்தவுடன் அவனை யாருக்கும் பிடித்துவிட வாய்ப்பில்லை. பழுத்த மிளகாய் போல சிவந்திருக்கும் கண்கள்; ஒட்டிப்போன, சவரம் செய்யப்படாத கன்னங்கள்; வெளுத்த உதடுகள்; காறை படர்ந்த பல்வரிசை; அவிழ்த்துவிடப்பட்ட சட்டையின் மேல் பொத்தான்கள்; சற்றே ஆபாசமாய் தூக்கிக்கட்டிய லுங்கி! அவ்வப்போது ’ஹே..ஹே..ஹே!’ என்று ஒரு சிரிப்பு! பள்ளியிலிருந்து திரும்புகிற குழந்தைகள், அவனைக் கடந்து செல்லும்போது சற்று கலவரத்துடன் செல்வதையும் கவனித்திருக்கிறேன்.

அந்தத் தொட்டியருகே ஒரு பிளாஸ்டிக் பொருட்களுக்கான கடை, ஒரு வாடகை சைக்கிள் கடை, ஒரு மளிகைக்கடை, ஒரு சலூன் என்று ஆள்நடமாட்டத்துக்குப் பஞ்சமேயிருக்காது. அவனை அந்தத் தண்ணீர்த்தொட்டிபோலவே, இன்னொரு ஜடப்பொருளாகவேதான் பெரும்பாலானோர் கருதி வந்திருக்கிறார்கள். அந்த ’ஜடம்’ இயங்குவதை, அதிகாலையில் விழிக்கிற பழக்கமுள்ளவர்கள் மட்டுமே பார்த்திருக்கக் கூடும். பார்த்தவர்களில் நானும் ஒருவன்.

ரயில்வே நிலையமருகே அதிகாலையில் வருகிற பால் வண்டியிலிருந்து அவன் ஒருவனே அத்தனை கிரேட்டுகளையும் காலி செய்து இறக்கி வைப்பான். பிறகு, ஆள்நடமாட்டமில்லாத தெருவில் சற்றே அழிச்சாட்டியமாய் சம்மணமிட்டு உட்கார்ந்து செய்தித்தாள்களை ஆங்கிலம், தமிழ், மலையாளம், தெலுங்கு என்று ஒவ்வொரு கடைக்குமாய்ப் பிரித்து, அதில் விளம்பர நோட்டீஸுகளைச் செருகுவான். குறிப்பிட்ட சிலரின் வாகனங்களைக் கழுவிச் சுத்தம் செய்து கொடுப்பான். அதிகபட்சம் எட்டு மணிக்குள் தனது வாடிக்கையான பணிகளை முடித்துவிட்டு, காணாமல் போய்விடுவான். பிறகு, மாலையில் தண்ணீர்த்தொட்டிக்கு வந்து, கையில் கிடைக்கிற காகிதம் அல்லது துணியால் கீழே துடைத்துச் சுத்தம் செய்துவிட்டு உட்கார்ந்துவிட்டால், இரவு பத்துமணி வரையிலும் அங்கிருந்து நகர மாட்டான். அன்றாடம் அவனைப் பார்க்க நேர்ந்தாலும், மற்றவர்களைப் போலவே அவனை நெருங்கவோ, அவன் என்னிடம் நெருங்குவதையோ நான் விரும்பியதில்லை. அந்த ஒரு நாள் வரும் வரை....

வழக்கம்போல குறுக்குவழியில் நான் திரும்பிக்கொண்டிருந்தபோது, அவன் எதிர்ப்பட்டான். கைகளை அசைத்து அசைத்து ’போகாதே!’ என்று குரலெழுப்பினான். அவனையோ, அவனது குரலையோ சட்டை செய்யாமல் நான் தொடர்ந்து அந்தக் குறுக்குவழியின் கடைசிவரைக்கும் போனதும்தான், வழியை மறித்து ஜல்லி கொட்டப்பட்டிருப்பதைக் கண்டேன். மிகுந்த சிரமத்துடன் வண்டியைத் நொடித்து வந்தவழியே திரும்பிக்கொண்டிருந்தபோது, அவன் என்னைப்பார்த்து ’ஹே..ஹே..ஹே!’ என்று சிரித்தான். அனேகமாக, அந்த நிகழ்ச்சிக்குப் பிறகுதான் அவனை நான் மனிதனாய்ப் பார்க்கத் தொடங்கினேன் என்பதை சற்று வெட்கத்துடன் ஒப்புக்கொள்ள வேண்டும்.

அடுத்த சில நாட்களில், ஒரு ஞாயிறன்று சலூனுக்குச் சென்று உள்ளே இடமில்லாததால் வெளியே காத்துநின்றபோது, அவனை மீண்டும் மிகவும் கிட்டத்தில் பார்க்க நேர்ந்தது. அன்று சவரம் செய்திருந்தான்; தலைபடிய வாரி, லேசாகப் பவுடர் கூடப் போட்டிருந்தான். சட்டைப்பையிலிருந்து ஒற்றை சிகரெட்டை எடுத்தவன், அதன் கீழ்ப்பகுதியை நசுக்கி நசுக்கி பாதி புகையிலையை இன்னொரு கையில் கொட்டிக்கொண்டான். பிறகு, கொட்டிய துகள்களை இன்னொரு தாளில் பத்திரமாகச் சேகரித்துவிட்டு, சட்டையிலிருந்து இன்னொரு பொட்டலத்தை எடுத்துப் பிரித்தான். அரிசியில் கல்பொறுக்குகிற கவனத்தோடு அதிலிருந்து எதையெதையோ பொறுக்கி அப்புறப்படுத்தினான். பிறகு, அந்தப் பொட்டலத்திலிருந்ததையும் தாளில் சேகரித்த புகையிலையையும் கலந்து உள்ளங்கையில் வைத்துக் கசக்கினான். பிறகு, சிகரெட்டை உதட்டில் வைத்தபடி உள்ளங்கையிலிருந்த கலவையை சிகரெட்டாலேயே ஊதி உள்ளேயிழுத்து நிரப்பிக்கொண்டான். அதைப் பற்றவைத்தவுடன், ஒரு வினோதமான, முகம்சுளிக்க வைக்கிற நெடி காற்றில் கலந்துவந்து தாக்கியது.

கஞ்சா!

"பொணநாத்தம் நாறுதே!" என்று கடையில் நின்ற பெண்மணியொருத்தி முகம் சுளித்தாள்.

"ஆரம்பிச்சிட்டானா?" என்று எட்டிப்பார்த்த மளிகைக்கடை அண்ணாச்சி," லேய், தள்ளிப்போய் அடிலே! பொம்பிளைகள்ளாம் இருக்காகல்லா?" என்று குரல்கொடுக்கவும், அவன் எழுந்துபோய் தண்ணீர்த்தொட்டியின் மறுபக்கத்துக்குச் சென்றான்.

"எளவெடுப்பான் செத்தும் தொலைய மாட்டேங்கான்!" என்று சலித்துக் கொண்டார் அண்ணாச்சி.

இதற்குள் சலூனுக்குள் பெஞ்சு காலியாகியிருக்கவே உள்ளே சென்று ஒரு செய்தித்தாளை விரித்துப்படிக்கத் தொடங்கினேன். சில நிமிடங்கள் கழித்து, தற்செயலாக தலைநிமிர்த்தியபோது, ஒரு இளம்பெண் அவனிடம் கோபமாகப் பேசுவதையும், அவனது மறுப்பையும் மீறி அவனது சட்டைப்பைக்குள் கையை விட்டு அதிலிருந்த அத்தனை காசையும் பிடுங்கிக்கொண்டு போவதையும் கவனித்தேன்.

"த பாருங்கடா அநியாயத்தை!" சலூனுக்கு வெளியே காத்திருந்த ஒருவர் சொல்லிக்கொண்டிருந்தார். "இந்தப் பொம்பளையை என்ன செஞ்சாலும் தகும்! இவன் தண்ணி தெளிச்சிட்டு எங்கேயாவது போய்த்தொலைய வேண்டியதுதானே?"

அடுத்த சில நாட்களில் அவனைப் பற்றிய பல விபரங்கள் தற்செயலாகவே கிடைத்தன. அவற்றை அப்படியே நம்பவோ, மொத்தமாய் ஒதுக்கவோ எனக்குத் தோன்றவில்லை. அவனை ஒரு வழிப்போக்கனாகவே அறிந்திருக்கிறேன் என்பதால் அவன் மீது பெரிய ஈடுபாடு ஏற்படாததும் ஒரு காரணமாக இருக்கலாம்.

ஒன்றுக்கொன்று தொடர்பற்ற சில நிகழ்வுகளுக்கு மத்தியில் இருக்கிற வெற்றிடங்களை, அனுமானச்சங்கிலிகளால் பிணைத்து, ஊகமாய் ஒரு சோகக்கதையை உருவாக்குதல் எளிது! ஏனோ அத்தகைய ஊகங்களின் உரத்த சத்தத்தை வைத்து, ஒருவர் மீது குற்றம் சுமத்தவும், இன்னொருவரின் மீது பரிதாபப்படவும் என்னால் முடிவதில்லை! அனுபவம் தந்த பாடம் - ஒருவனின் நிகழ்காலத்தை வைத்தே அவன்மீது அனுதாபப்படுவது போதுமானது. பச்சாதாபம் கொள்ள விரும்புகிறவர்கள், அவனது அவலத்தைப் புரட்டிப் பார்ப்பது அனாவசியமானது; பல சந்தர்ப்பங்களில் அருவருப்பானது. மீறி ஒருவரின் கடந்தகாலத்தை அகழ்ந்தால், அவனை உதாசீனம் செய்வதற்குரிய காரணங்களே அதிகம் கிடைக்கிற அபாயம் இருக்கிறது. இரக்கத்திற்குப் பதிலாக வன்மம் முளைக்கலாம். ’இவனுக்கு இது வேண்டும்; இன்னமும் வேண்டும்,’ என்று கருவியபடி தப்பித்துக்கொள்ள வேண்டுமானால் அது உதவும்.

இவன்....?

சுருக்கமாக, அவன் அப்போதிருந்ததைக் காட்டிலும் இன்னும் கொஞ்சம் கண்ணியமாய் இருந்திருக்கத் தகுதியானவன் என்ற அளவில் அவன் மீது சிறிது இரக்கம் பிறந்தது. அதற்கு மேல் ஆராய்ச்சி செய்து நற்சான்றிதழ் வழங்குமளவுக்கு நகர வாழ்க்கையில் அவகாசம் கிடைப்பதில்லையே!

இன்னொரு முறை, மளிகைக்கடைக்குச் சென்றபோது அவன் எனது வண்டியருகே வந்து நின்றான்.

"வண்டி ஒரே அளுக்கா இருக்குதே? தொடைக்கட்டுமா? அஞ்சு ரூபா கொடு போதும்!"

அதன்பிறகு, இரண்டோ மூன்றோ தடவைகள் அவன் எங்கள் காம்பவுண்டுக்கே வந்து வண்டியைத் துடைத்துக் கொடுத்து விட்டான். அடிபம்பிலிருந்து தண்ணீரை தாராளமாய் இறைத்து, பளபளவென்று துடைத்துக் கொடுப்பான். ஒரு முறை பத்து ரூபாய் கொடுத்தேன்! அவன் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் சட்டைப்பைக்குள் போட்டபடி சென்று விட்டான்.

மே, ஜூன் மாதங்களில் பணிப்பளு, சில பயணங்கள் காரணமாய் வழக்கத்தை விட சீக்கிரமாய்ப் போவதும், தாமதமாய் வருவதுமாய் எனது தினசரி வாடிக்கையில் சில தவிர்க்க முடியாத மாற்றங்கள். ஆகையால், தெருவைக் கவனிப்பதையே ஏறக்குறைய மறந்து விட்டேன்.

சில தினங்களுக்கு முன்னர், அந்தக் குறுக்குவழியில் வந்து தெருவுக்குள் திரும்பியபோது, அவனைப் பார்த்தேன் - அந்தத் தண்ணீர்த்தொட்டியில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியில்! அதிர்ச்சி, வருத்தம், அனுதாபம் என்று படிப்படியாய் தீவிரம் குறைந்துபோய், எழுதுகிற இந்தத் தருணத்தில் அவன் செத்துப்போனதும் நல்லதுக்குத்தானோ என்று தோன்றுகிறது.

ஆனால்...

அதே குறுக்குவழியில் மீண்டும் எவரேனும் ஜல்லி கொட்டி வழியை மூடினால், யாராவது எச்சரித்துத் திருப்பி அனுப்புவார்களா என்ற கேள்வி மட்டும் இன்னும் கொஞ்ச நாள் உயிரோடு இருக்கும்!



33 comments:

Unknown said...

ம்ம்ம்..............!!!

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் அருமையான கதை. இது போல் ஆங்காங்கே ஒரு சில விசித்திரப்பிறவிகள் உள்ளனர். அவர்களைப்பற்றி சிலர் புரிந்து கொள்வர். பலருக்குப்புரியாது.

பகிர்வுக்கு நன்றிகள்.

Chitra said...

அவரின் ஊரு ....பெயரு.....வாழ்க்கை முறை..... எதுவும் தெரியவில்லை என்றாலும், முகம் தெரியா அந்த நபரின் இறப்புக்கு, இந்த பதிவை வாசிப்பவரும் அஞ்சலி செய்ய வைக்கும் விதம் எழுதி இருக்கீங்க.

Thuvarakan said...

ஒரு கதை திரைக்காவியமாய் வரிகளில்........

சாந்தி மாரியப்பன் said...

ஜடம்.. சலனத்தை ஏற்படுத்திவிட்டது.

சேலம் தேவா said...

//ஒருவனின் நிகழ்காலத்தை வைத்தே அவன்மீது அனுதாபப்படுவது போதுமானது. பச்சாதாபம் கொள்ள விரும்புகிறவர்கள், அவனது அவலத்தைப் புரட்டிப் பார்ப்பது அனாவசியமானது;//

நிதர்சனமான வரிகள்..!!

நிரூபன் said...

சகோ....
மனதைக் கனக்க வைக்கும் ஒரு கதை. ஆதரவ்ற்றுத் தெருவோரத்தில் இருக்கும் ஒரு மனிதனின் நிகழ்வுகளைப் பதிவு தாங்கி வந்திருக்கிறது.
கதையின் நகர்வு...சோகத்தினைச் சுமந்தவாறு...அவன் வாழ்விற்கு விடிவேதும் கிடைக்காதா எனும் நிலையில் செல்லுகையில்- இறுதியில் தண்ணீர்த் தொட்டியருகே ஒட்டப்பட்டிருந்த நோட்டீஸ் ...மனதினுள் இனம்புரியாத ஒரு வேதனையினைத் தருகின்றது.

பணத்துக்காக வாழ்க்கையை தொலைத்தவன்:)) :(( said...

anubhavam arumai......

பணத்துக்காக வாழ்க்கையை தொலைத்தவன்:)) :(( said...

anubhavam arumai.......

பணத்துக்காக வாழ்க்கையை தொலைத்தவன்:)) :(( said...

arumaiyana anubavam........

அகல்விளக்கு said...

வருத்தம் மேலிடுகிறது...
:(

Unknown said...

வழக்காமான உங்கள் நக்கல், நையாண்டியை எதிர்பார்த்து வந்தேன்! மனம் கனக்கிறது! ஆனாலும் ஆங்காங்கே 'சேட்டை' தெரிகிறது!

Angel said...

படித்து முடித்ததும் மனம் கனத்து போனது .
// ஏனோ அத்தகைய ஊகங்களின் உரத்த சத்தத்தை வைத்து, ஒருவர் மீது குற்றம் சுமத்தவும், இன்னொருவரின் மீது பரிதாபப்படவும் என்னால் முடிவதில்லை! //
சரியாக சொல்லியிருக்கீங்க .
சில நேரங்களில் இப்படியான மனிதர்களை காணும்போது மனம் வேதனையில் துவளும் .

vasu balaji said...

Classic narration. why don't you write like this often.:)

settaikkaran said...

//மைந்தன் சிவா said...

ம்ம்ம்..............!!!//

:-) நன்றி!

settaikkaran said...

//வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் அருமையான கதை.//

இது கதையல்ல சார்; அனுபவம். :-)

//இது போல் ஆங்காங்கே ஒரு சில விசித்திரப்பிறவிகள் உள்ளனர். அவர்களைப்பற்றி சிலர் புரிந்து கொள்வர். பலருக்குப்புரியாது.//

நானும் புரிந்து கொள்ளவில்லை; புரிந்து கொள்ள முயற்சிக்கவும் இல்லை. அவனும் எனக்குள் ஏற்படுத்திய ஒரு சிறிய பாதிப்பைப் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். மிக்க நன்றி சார்!

settaikkaran said...

//Chitra said...

அவரின் ஊரு ....பெயரு.....வாழ்க்கை முறை..... எதுவும் தெரியவில்லை என்றாலும், முகம் தெரியா அந்த நபரின் இறப்புக்கு, இந்த பதிவை வாசிப்பவரும் அஞ்சலி செய்ய வைக்கும் விதம் எழுதி இருக்கீங்க.//

எனக்கும் அவனைப் பற்றி அதிகம் தெரியாது சகோதரி. வாசிக்கிற உங்களுக்கு ஏற்பட்ட அனுதாபம், பார்த்த எனக்கு ஏற்பட்டதனாலேயே எழுதினேன். மிக்க நன்றி!

settaikkaran said...

//Thuvarakan said...

ஒரு கதை திரைக்காவியமாய் வரிகளில்........//

பெயர்களற்ற, அடையாளங்களற்ற மனிதர்கள் சிலரது வாழ்க்கை கதையை விடவும் கட்டிப்போடத் தக்கவை. மிக்க நன்றி!

settaikkaran said...

//அமைதிச்சாரல் said...

ஜடம்.. சலனத்தை ஏற்படுத்திவிட்டது.//

ம்! தமிழ்மண நட்சத்திரமான பிறகு முதல் முறையாக வந்திருக்கிறீர்கள். மிக்க நன்றி!

settaikkaran said...

//சேலம் தேவா said...

நிதர்சனமான வரிகள்..!!//

மிக்க நன்றி நண்பரே! :-)

settaikkaran said...

//நிரூபன் said...

மனதைக் கனக்க வைக்கும் ஒரு கதை. ஆதரவ்ற்றுத் தெருவோரத்தில் இருக்கும் ஒரு மனிதனின் நிகழ்வுகளைப் பதிவு தாங்கி வந்திருக்கிறது.//

கதையல்ல சகோதரம்; அனுபவம். நான் பார்த்தது; இன்னும் அதுகுறித்து யோசிக்கிறேன் என்பதற்கு அடையாளமாகவே இதை எழுதினேன்.

//கதையின் நகர்வு...சோகத்தினைச் சுமந்தவாறு...அவன் வாழ்விற்கு விடிவேதும் கிடைக்காதா எனும் நிலையில் செல்லுகையில்- இறுதியில் தண்ணீர்த் தொட்டியருகே ஒட்டப்பட்டிருந்த நோட்டீஸ் ...மனதினுள் இனம்புரியாத ஒரு வேதனையினைத் தருகின்றது.//

சில சமயங்களில் வாழ்க்கை என்பது ஒரு வட்டம் என்பதைப் புரிய வைக்க பெரிய தத்துவஞானிகள் தேவைப்படுவதில்லை சகோ! சாமானியர்கள் அதன் சாரத்தை எளிதாய்த் தரத் தக்கவர்கள்!

மிக்க நன்றி சகோ!

settaikkaran said...

//பணத்துக்காக வாழ்க்கையை தொலைத்தவன்:)) :(( said...

anubhavam arumai......
arumaiyana anubavam........//

மிக்க நன்றி நண்பரே! :-)

settaikkaran said...

//அகல்விளக்கு said...

வருத்தம் மேலிடுகிறது...:(

ம்! எழுதலாமா வேண்டாமா என்று பலநாட்கள் யோசித்து ஒருவழியாய்....!

மிக்க நன்றி! நீண்ட நாளைக்குப் பிறகு வந்திருக்கிறீர்கள்! :-)

settaikkaran said...

//ஜீ... said...

வழக்காமான உங்கள் நக்கல், நையாண்டியை எதிர்பார்த்து வந்தேன்! மனம் கனக்கிறது! ஆனாலும் ஆங்காங்கே 'சேட்டை' தெரிகிறது!//

ம்! அனுபவம், புனைவு என்ற குறியீடுகளில் இது போல நிறைய எழுத முயன்றிருக்கிறேன் நண்பரே! எப்போதும் நக்கல், நையாண்டியே எழுதுவது சில சமயங்களில் எனக்கே அலுப்பாகி விடுகிறது. :-)

மிக்க நன்றி!

settaikkaran said...

//angelin said...

படித்து முடித்ததும் மனம் கனத்து போனது .//

இதை எழுதப் பலநாட்கள் எனக்குள் ஒரு போராட்டமே நிகழ்ந்தது. :-(

//சரியாக சொல்லியிருக்கீங்க .சில நேரங்களில் இப்படியான மனிதர்களை காணும்போது மனம் வேதனையில் துவளும் .//

அது நமது இயல்பான குணாதிசயம். இன்னும் அப்படி இருக்க முடிவதற்கு இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

மிக்க நன்றி சகோதரி!

settaikkaran said...

//வானம்பாடிகள் said...

Classic narration. why don't you write like this often.:)//

Thank You Sir! I will surely try to write similar posts as frequently as I can. :-)

வெங்கட் நாகராஜ் said...

நெஞ்சில் சலனத்தினை ஏற்படுத்திய ஜடம்.... சில பிறவிகள் இப்படித்தான் இருப்பதே தெரியாமல் இருந்தாலும் பார்ப்பவர்கள் மனதில் ஒரு சுவடை ஏற்படுத்திச் செல்கின்றனர். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்.

settaikkaran said...

//வெங்கட் நாகராஜ் said...

நெஞ்சில் சலனத்தினை ஏற்படுத்திய ஜடம்.... சில பிறவிகள் இப்படித்தான் இருப்பதே தெரியாமல் இருந்தாலும் பார்ப்பவர்கள் மனதில் ஒரு சுவடை ஏற்படுத்திச் செல்கின்றனர்.//

உண்மை வெங்கட்ஜீ! இது போல பல மனிதர்களை நாம் அன்றாடம் சந்திக்கிறோம்; அவர்கள் உயிரோடிருக்கும்போது ஏற்படுத்தாத தாக்கம் அவர்களது மரணத்தில் ஏற்படுகிறது. அதன் விளைவே இந்த இடுகை!


// அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்.//

மிக்க நன்றி வெங்கட்ஜீ!

G.M Balasubramaniam said...

முதன் முறையாக உங்கள் வலைக்கு வருகிறேன் என்று எண்ணுகிறேன். நிகழ்வுகளை கண்டபடி உணர்ந்தபடி எழுதும் உங்கள் நடை நன்றாயிருக்கிறது. பிறர் பற்றிய அபிப்பிராயங்கள் குறித்து நீங்கள் எழுதி இருப்பதும் சிந்திக்க வைப்பது. வாழ்த்துக்கள்.

settaikkaran said...

//G.M Balasubramaniam said...

முதன் முறையாக உங்கள் வலைக்கு வருகிறேன் என்று எண்ணுகிறேன்.//

ஆம் ஐயா! பழுத்த அனுபவஸ்தரான உங்களது வருகை எனக்கு மிகுந்த பெருமிதமளிக்கிறது.

//நிகழ்வுகளை கண்டபடி உணர்ந்தபடி எழுதும் உங்கள் நடை நன்றாயிருக்கிறது. பிறர் பற்றிய அபிப்பிராயங்கள் குறித்து நீங்கள் எழுதி இருப்பதும் சிந்திக்க வைப்பது. வாழ்த்துக்கள்.//

இது போன்ற வாழ்த்துகளும், உற்சாகமூட்டும் பின்னூட்டங்களும் எனது முயற்சிகளை மேலும் மேம்படுத்த உதவும். மிக்க நன்றி ஐயா!

ரிஷபன் said...

உயிரோட்டமான பதிவு. சேட்டையை மீறி உங்களுக்குள் ஒளிந்திருக்கும் கிளாசிக் எழுத்தை தரிசிக்க முடிந்தது.
என் எதிர்பார்ப்பும் இதுவே.. அடிக்கடி முடியா விட்டாலும் அவ்வப்போது இது போல எங்களுக்கு பதிவுகள் தாருங்கள்.

settaikkaran said...

//ரிஷபன் said...

உயிரோட்டமான பதிவு. சேட்டையை மீறி உங்களுக்குள் ஒளிந்திருக்கும் கிளாசிக் எழுத்தை தரிசிக்க முடிந்தது.//

ஆரம்பகாலம் முதலாகவே என்னைக் கவனித்துக் கொண்டிருக்கிற உங்களுக்குத் தெரிந்திருக்கும். நக்கல், நையாண்டி இடுகைகள் எழுதும்போது சில சின்னச் சின்ன பாசாங்குகள் தன்னிச்சையாய் வந்தால் அவை மன்னிக்கப்படும். அனுபவம், புனைவு என்று வருகிறபோது, சற்றுப் பிசகினாலும் அடிப்படையிலேயே கோளாறு என்று புரிந்து விடும். எனவே, நான் நானாகவே எழுத முயல்கிறேன்.

//என் எதிர்பார்ப்பும் இதுவே.. அடிக்கடி முடியா விட்டாலும் அவ்வப்போது இது போல எங்களுக்கு பதிவுகள் தாருங்கள்.//

நிச்சயம் முயற்சிக்கிறேன்! இனி நகைச்சுவை நக்கல்களை கொஞ்சம் குறைத்து விட்டு, நம்மைச்சுற்றியிருப்பதைக் கவனித்து எழுதலாமென்று ஏற்கனவே முடிவு செய்திருக்கிறேன். பார்க்கலாம். மிக்க நன்றி! :-)

நடராஜன் said...

ஒரு பத்து நிமிடங்கள் ஏதோ ஒரு தெருவுக்கு கொண்டு சென்றுவிட்டீர்கள்! //ஒருவனின் நிகழ்காலத்தை வைத்தே அவன்மீது அனுதாபப்படுவது போதுமானது. பச்சாதாபம் கொள்ள விரும்புகிறவர்கள், அவனது அவலத்தைப் புரட்டிப் பார்ப்பது அனாவசியமானது; பல சந்தர்ப்பங்களில் அருவருப்பானது.// சுளீர் வரிகள்!