Thursday, December 16, 2010

பெரிய இடத்து சம்பந்தம்

"யோவ், நீ சொன்ன தகவல் சரிதானய்யா! இந்த ஊருலேயே இதுதான் பெரிய வீடு போலிருக்குது!" என்று மலைப்போடு கூறினார் கந்தசாமி.

"அது மட்டுமில்லே சார், நான் சொன்ன எல்லாத் தகவலுமே சரிதான்! அந்த வீட்டுலே வேலைபார்க்குறவங்களே என் கிட்டே சொன்னாங்க!" என்றார் கோவிந்தசாமி.

"அப்படீன்னா இன்னிக்கு செமத்தியான வேட்டைதான்! ஆனா ஒண்ணு, நாம திட்டம்போட்ட மாதிரியே பேசுவோம். அவங்க வாயாலேயே உண்மையை வரவழைச்சதும் கப்புன்னு நம்ம வேலையைக் காட்டணும். சரியா?"

"சரி சார்!" என்றார் கோவிந்தசாமி.

காம்பவுண்டுக்குள்ளே அவர்களது கார் நுழைந்ததுமே, உள்ளேயிருந்து பெரியசாமி ஓடோடி வந்தார்.

"வாங்க வாங்க!" என்று வாயெல்லாம் கடவாய்ப்பல்லாக வரவேற்று கந்தசாமியையும், கோவிந்தசாமியையும் உள்ளே அழைத்துச் சென்று உட்கார வைத்தார்.

"மிஸ்டர் பெரியசாமி! என் பேரு கந்தசாமி; இது என் தம்பி கோவிந்தசாமி! உங்க பொண்ணு செல்லத்தாயியோட ஜாதகத்தை எங்க ஜோசியர் வெள்ளைச்சாமி கிட்டே காட்டினோம். அது நம்ம கோவிந்தசாமி பையன் கோபாலசாமியோட ஜாதகத்தோடு ரொம்ப நல்லாப் பொருந்தியிருக்காம். பத்துப் பொருத்தமும் பக்காவா இருக்காம்!"

"பத்துப்பொருத்தமா? மொத்தமே எட்டுன்னு தானே சொல்லுவாங்க?"

"அதுவந்து, இப்போ ரீசன்டா இன்னொரு கிரஹம் இருக்கிறதா நாசாவிலே கண்டுபிடிச்சிருக்காங்களாம். எதுக்கு வம்புன்னு அதுக்கும் இடமிருந்து வலம், மேலிருந்து கீழா ரெண்டு பொருத்தம் பார்த்திட்டோம்."

"ரொம்ப சந்தோஷங்க! உங்க பையன் ஜாதகத்தைக் கொடுங்க! நானும் எங்க ஜோசியர் கருப்பசாமி கிட்டே ஒருவாட்டி காட்டிடறேன்." என்று மகிழ்ச்சியோடு கூறினார் பெரியசாமி.

"தாராளமாப் பாருங்க!" என்று ஜாதகத்தை எடுத்து நீட்டினார் கோவிந்தசாமி. "என் பையன் ஜாதகம் யோகஜாதகமுங்க! எந்த தோஷமும் கிடையாது. ஜலதோஷம் கூட இருக்கக்கூடாதுன்னு அவன் குளிக்கிறதே இல்லை!"

"கேட்கவே சந்தோஷமாயிருக்கு! குடிக்கிறதுக்கு ஜில்லுன்னு மோர் கொண்டுவரச் சொல்லட்டுங்களா?" என்று உபசரித்தார் பெரியசாமி.

"மிஸ்டர் பெரியசாமி! ரொம்ப தூரம் காருலே வந்ததுனாலே வயிறு கொடமொடங்குது. மோரு கூட ஒரு ஸ்பூன் வெந்தயமும் கிடைக்குமா?" என்று அடிவயிற்றைத் தடவியவாறே கேட்டார் கோவிந்தசாமி.

"அதுக்கென்ன, கொண்டுவரச் சொல்லுறேன்," என்று பணியாளை அழைத்து உத்தரவிட்ட பெரியசாமி, பிறகு புன்னகைத்தவாறே,"வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன-ன்னு ஒரு பாட்டு இருக்கே, கேள்விப்பட்டிருக்கீங்களா?" என்று கேட்டார்.

"சார்...," என்று எதையோ சொல்ல வாயெடுத்த கோவிந்தசாமியை, கந்தசாமி கையமர்த்தினார்.

"மிஸ்டர் பெரியசாமி! இந்த ஊருலேயே நீங்க தான் பெரிய பணக்காரருன்னு கேள்விப்பட்டோம். வீடு கூட அரண்மனை மாதிரியிருக்கு!"

"என்ன பணக்காரன்? என்ன வீடு? எல்லாம் மாயை தானுங்களே! சும்மாவா பாடி வச்சாங்க? உரித்துப் பார்த்தால் வெங்காயத்தில் ஒன்றும் இருக்காது....!" என்று சிரித்தார் பெரியசாமி.

"நல்ல காரியம் பேசுறபோது எதுக்கு சார் வெங்காயத்தைப் பத்திப் பேசுறீங்க? மனுசன் சாப்புடுற காய்கறிக்கும் கூட சத்வம், ரஜோ, தமோ குணமுண்டாம். வெங்காயமும் பூண்டும் தமோகுணமுள்ள சங்கதியாம். அதுனாலே தான் சுபகாரியங்களிலே அதைத் தவிர்க்கிறாங்க தெரியுமா மிஸ்டர் பெரியசாமி?"

"இதெல்லாம் மூடநம்பிக்கை சார்! அதுனாலே தான் பெரியார் கூட நொடிக்கொருவாட்டி ’வெங்காயம்’னு சொல்லுவாராம். தெரியாதா உங்களுக்கு?" என்று சொன்ன பெரியசாமி, கந்தசாமியின் தொடையில் கோவிந்தசாமி தட்டுவதைக் கவனித்துவிட்டார்.

"என்ன கோவிந்தசாமி சார், எதுக்கு அண்ணன் தொடையைத் தட்டுறீங்க?"

"இல்லை, அண்ணனை கொசு கடிச்சா மாதிரி இருந்தது...!"

"ஆஹா, கொசுக்கடி வாங்குனவரே சும்மாயிருக்கும்போது, தம்பியா லட்சணமா நீங்க அடிக்கிறீங்களே? இந்த மாதிரி பாசமாயிருக்கிற குடும்பத்துலே வாழ்க்கைப்பட என் பொண்ணு கொடுத்து வச்சிருக்கணும்."

"அது போகட்டும்! உங்க பொண்ணுக்கு சமைக்கத் தெரியுமா?"

"என்ன அப்படிக் கேட்டுப்புட்டீங்க? அவ வெங்காய சாம்பார் வச்சா, ஊரு முழுக்க வாசனையடிக்குமே? அவ உப்புமாவுக்கு வெங்காயக் கொத்சு பண்ணுவா பாருங்க, அப்படியொரு ருசியா இருக்கும். அது மட்டுமில்லை, இட்டிலி தோசைன்னா அவ கொஞ்சம் பெருங்காயம் சேர்த்து ஒரு வெங்காயத்தொக்கு அரைப்பா...பிரமாதமாயிருக்கும் போங்க!"

"அண்ணே, மறுபடியும் கொசு!"

"கடிக்கட்டும் விட்டிரு! மிஸ்டர் பெரியசாமி, உங்க பொண்ணுக்கு வெங்காயத்தைத் தவிர வேறு எதுவுமே சமைக்கத் தெரியாதா?" என்று சற்றே எரிச்சலோடு கேட்டார் கந்தசாமி.

"அப்படியில்லீங்க! பொதுவா வெங்காயமுன்னாலே நிறைய பேருக்கு அலர்ஜி! உரிச்சாக் கண்ணுலே தண்ணி வருமுன்னு சோம்பல்படுவாங்க. ஆனா, என் பொண்ணு அப்படியில்லேன்னு சொல்ல வந்தேன். அப்படியே எங்கம்மா மாதிரி! எங்கம்மாவும் அப்படித்தானுங்க! பழைய சோத்தொட சின்ன வெங்காயத்தை பச்சைமுளகாயோட சேர்த்து நசுக்கிக் கொடுப்பாங்க பாருங்க, அப்படியே தேவாமிர்தம் தாங்க!"

"மொத்தத்துலே உங்க ஃபேமிலேயே வெங்காய ஃபேமிலின்னு சொல்லுங்க!"

"கரெக்டாச் சொன்னீங்க! அதுலே பாருங்க, என் ஒரே பையன் டில்லியிலே இருக்கிறான். அவன் அங்கே ஆனியன் இன்ஃபோடெக்குன்னு ஒரு ஸாஃப்ட்வேர் கம்பனி ஆரம்பிச்சு, ஆறுவருசத்துலேயே முன்னூறு கோடி சம்பாதிச்சிட்டான்."

"ஓஹோ!" என்று கந்தசாமி, கோவிந்தசாமியை அர்த்தபுஷ்டியோடு பார்த்துப் புன்னகைத்தார்.

"அப்படீன்னா உங்களுக்கு டில்லியிலே நிறைய தொடர்பு இருக்குன்னு சொல்லுங்க! பிரைம் மினிஸ்டரைத் தெரியுமா?"

"என்னங்க இது, நம்ம மன்மோகன்சிங் தானே பிரைம் மினிஸ்டர். வெள்ளையும் சொள்ளையுமா இருந்துக்கிட்டு இதைப்போயி என்கிட்டே கேட்கறீங்களே?"

இப்போது உள்ளேயிருந்து மோர் வரவும், பெரியசாமி பணியாளைக் கடிந்து கொண்டார்.

"என்னப்பா இது, நான் மோருன்னு சொன்னா மோரை மட்டும்தான் கொண்டு வருவியா? போய் சூடா வெங்காய பஜ்ஜி போட்டுக் கொண்டுவரலாமில்லே? இல்லாட்டி நேத்து நான் வாங்கிட்டு வந்தேனே, வெங்காய பக்கோடா, அதையாவது கொண்டுவரலாமில்லே?"

"மிஸ்டர் பெரியசாமி!" என்று மிடுக்காகக் கூறியபடி எழுந்தார் கந்தசாமி. "எங்களுக்குக் கிடைச்ச தகவல் ஊர்ஜிதமாயிடுச்சு! உங்க வீட்டை சோதனை போடணும்."

"என்னது?" பெரியசாமி அதிர்ந்தார்.

"நீங்க நினைக்கிற மாதிரி நாங்க சம்பந்தம் பேச வரலே! வருமான வரி அலுவலகத்திலிருந்து வர்றோம். உங்க வீட்டுலே சந்தேகத்துக்கிடமான நடவடிக்கைகள் நடக்கிறதா தகவல் கிடைச்சுது. அது தான் வாரண்டோட வந்திருக்கோம்."

"ஐயையோ, என்ன அநியாயம் இது? என் வீட்டுலே அப்படி எந்தத் தப்பும் நடக்கலியே?" என்று அலறினார் பெரியசாமி.

"ஏன் சார் பொய் சொல்றீங்க? வெங்காயம் கிலோ எழுபத்தி அஞ்சு ரூபா விக்குது. உங்க வீட்டுலே பாயாசம் தவிர எல்லாத்துலேயும் வெங்காயம் போட்டுச் சமைக்கிறதா எங்களுக்கு தகவல் கிடைச்சிருக்கு. போதாக்குறைக்கு முந்தாநாள் ஒரு மூட்டை வெங்காயம் கோயம்பேட்டிலே வாங்கியிருக்கீங்க! அதை எங்க ஆளுங்க ரகசியமா போட்டோ எடுத்திருக்காங்க! சொல்லுங்க, இவ்வளவு வெங்காயம் வாங்க உங்க கிட்டே ஏது பணம்?" என்று உறுமினார் கந்தசாமி.

"அட கடவுளே!"

"சொல்லுங்க மிஸ்டர் பெரியசாமி!" என்று ஒத்து ஊதினார். "நேர்மையா பணம் சம்பாதிக்கிறவங்களாலே ஒரே நாளிலே இவ்வளவு வெங்காயம் வாங்கவே முடியாது. உங்க பையன் டெல்லியிலே என்ன பிஸினஸ் பண்ணுறாரு? அவருக்கும் நீரா ராடியாவுக்கும் என்ன தொடர்பு? நீங்க கடைசியா வெங்காயம் வாங்குறதுக்கு யாரு பணம் கொடுத்தாங்க? அது ஹவாலாவுலே வந்த பணம் தானே?"

பெரியசாமி மூர்ச்சையடைந்தார்.

பி.கு: இதில் எதற்கு ஸ்ரேயா படம்? என் இஷ்டம்!

15 comments:

வெங்கட் நாகராஜ் said...

சேட்டை அண்ணாச்சி, என்னா பவர் தெரியுமா அந்த வெங்காயத்துக்கு? தில்லில ஒரு முறை வெங்காயத்தினால ஒரு ஆட்சியே மாறிடுச்சு. இங்க இப்ப வெங்காயம் 40 ரூபா, அங்க 75 ரூபாயா? அம்மாடி! இதுனால அங்கயும் ஆட்சி மாறும்னு நீங்க நினைச்சா நான் பொறுப்பல்ல. : )

மாணவன் said...

//சேட்டை அண்ணாச்சி, என்னா பவர் தெரியுமா அந்த வெங்காயத்துக்கு? தில்லில ஒரு முறை வெங்காயத்தினால ஒரு ஆட்சியே மாறிடுச்சு. இங்க இப்ப வெங்காயம் 40 ரூபா, அங்க 75 ரூபாயா? அம்மாடி! இதுனால அங்கயும் ஆட்சி மாறும்னு நீங்க நினைச்சா நான் பொறுப்பல்ல. : //

பாஸ் இங்க சிங்கையிலயும் வெங்காயம் விலை ஏறிடுச்சு பாஸ்...

விலை சுமாராக 5 kg வெங்காயம் நம்ம ஊரு காசுக்கு Rs300 ஆகும்..

பகிர்வுக்கு நன்றி

மாணவன் said...

//பி.கு: இதில் எதற்கு ஸ்ரேயா படம்? என் இஷ்டம்!..

ஹிஹிஹி... நடத்துங்க நடத்துங்க...

Philosophy Prabhakaran said...

இங்க சென்னையிலே வெங்காய விலை ஏறிப்போச்சுன்னு ஒருத்தன் சமொசாவுல வெங்காயத்துக்கு பதிலா முட்டைக்கோசை வச்சி என்னை ஏமாத்திட்டான்...

Chitra said...

பி.கு: இதில் எதற்கு ஸ்ரேயா படம்? என் இஷ்டம்!


..... Righttu.... no further questions, your honor! :-))

sathishsangkavi.blogspot.com said...

//பெரியசாமி மூர்ச்சையடைந்தார்.//

ஊழல்ல சம்பாரிச்சவுங்களுக்கெல்லாம் இது தான் கதி...

எல் கே said...

தமிழ்நாட்டு மக்கள் இதுக்கீலம் பயப் படமாட்டாங்க, வெங்கட். என்ன ஆனாலும் எவ்வளவு ஊழல் பண்ணாலும் இலவசமா ஒரு டி வி இல்லை வேற எதாவது கொடுத்த, அதையும் காந்தி நாட்டையும் வாங்கிட்டு ஓட்டு போட்டு ஆட்சில உக்கார வச்சிட்டு அப்புறம் புலம்பிகிட்டு இருப்பாங்க

Thoduvanam said...

ஒரு வெங்காய சமாசாரத்தை பெரும் காயமா மாத்திப் புட்டிங்களே!என்க்கு இதிலே ஏதும் சம்பந்தம் இல்லீங்கோ ..ஏதோ ஸ்ரேயா படம் போட்டதை பாக்க வந்தேங்கோ .அம்புட்டுதான்

Anonymous said...

ஐயா சாமி, இந்த பதிவுக்கு டிஸ்கி போட மறந்துட்டேளே.

நீங்க மறந்து போன டிஸ்கி இதோ

டிஸ்கி: ஸ்ரேயா படம் போட்டு ஆம்பிளையாளை உன் பதிவு படிக்க வைக்கறதெல்லாம் ஒரு பிழைப்பா த்தூன்னு யாரும் காறிததுப்பிட்டுப் போன கம்பனி பொறுப்பேற்காது.

எப்பூடி!

vasu balaji said...

:))

suneel krishnan said...

இனி கல்யாணத்துக்கு போனா பொண்ணு மாப்பிளைக்கு சும்மா கடிகாரம் அது இதுனு பரிசு கொடுக்காம ரெண்டு கிலோ வெங்காயம் பார்கள் பண்ணி கொடுக்கலாம் ,சந்தோஷ படுவாங்க

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

ஸ்ரேயாவும் வெங்காயமும் சூப்பர்!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

ஹி... ஹி... விட்டுப்போச்சி!
கதையும் சூப்பர்!

ரவி said...

ஸ்ரேயா படம் சூப்பர்

THOPPITHOPPI said...

//பி.கு: இதில் எதற்கு ஸ்ரேயா படம்? என் இஷ்டம்!//

உங்கள் பின்னூட்டத்தை பார்த்த போதே நினைத்தேன் நீங்கள் இப்படிப்பட்டவராகத்தான் இருப்பீர்கள் என்று.