Thursday, December 30, 2010

பிணந்தின்னும் சாத்திரங்கள்!

இரண்டு வருடங்களுக்கு முன்னர், விதிவிலக்கின்றி அனைத்து ஆங்கிலத்தொலைக்காட்சிகளிலும் அல்லோலகல்லோலப்பட்ட ஒரு பரபரப்பான நிகழ்வு-புது தில்லியருகே ஆருஷி தல்வார் என்ற ஒரு 14 வயது சிறுமியின் படுகொலை! கொடுமை என்னவென்றால், ’இது போன்ற கொலைகள் தினசரி தென்னகத்திலும் நடப்பதை ஏன் இந்த ஆங்கில ஊடகங்கள் கண்டுகொள்வதில்லை?’ என்று குரலெழுப்புமளவுக்கு, பெண்களுக்கு எதிரான பல்வேறு கொடுமைகள் தேசமெங்கும் பன்றிக்காய்ச்சலை விடவும் பயங்கரமாகப் பரவிக்கொண்டிருந்த காலகட்டம் அது. இன்றும் அந்த இழிநிலை தொடர்கிறது.

அண்மையில் செல்வி.ஜெயலலிதா அரக்கோணத்தில் "பெண்கள் வெளியே வரவே அஞ்சும் நிலை," இருப்பதாக, தனது தினசரி அறிக்கைகளில் ஒன்றில் தெரிவித்தபோது, "சென்னையில் மட்டும் என்ன வாழ்கிறது? மாலை ஆறுமணிக்கு மேல் கலங்கரை விளக்கம் தொடங்கி பெருங்குடி வரையிலான ரயில் நிலையங்களில் நடக்கிற அட்டூழியங்கள் எத்தனை?" என்று கேட்கத்தோன்றியது. இதுதான் தமிழகத்தலைநகரத்தின் லட்சணம் என்றால், மற்ற ஊர்களைப்பற்றி என்னவென்று சொல்ல...?

சரி, ஆருஷி வழக்கிற்கு வருவோம்!

T.R.P என்ற மூன்றெழுத்து மந்திரச்சொல்லுக்காக, தொலைக்காட்சிகள் எந்த அளவுக்குத் தரம் தாழ்ந்து போவார்கள், எப்படியெல்லாம் வக்கிரமாக இட்டுக்கட்டித் தனிமனிதர்கள் மீது சேற்றை வாரியிறைப்பார்கள் என்பதற்கு ஆருஷி தல்வார் கொலைவழக்கு ஒரு வேதனையான உதாரணம்; வெட்கத்தகுந்த முன்னுதாரணம் என்றும் கூறலாம்.

எடுத்த எடுப்பிலேயே, உ.பி.காவல்துறை "வேலைக்காரனுக்கும் அந்தச் சிறுமிக்கும் தொடர்பு," என்று துப்பறிந்து பாகிஸ்தான் தீவிரவாதிகளைப் பிடித்துவிட்டதுபோல, பத்திரிகையாளர்களுக்கு பிஸ்க்ட், டீயுடன் இந்தத் தகவலையும் கொடுத்தது.

அதைத் தொடர்ந்து ’பத்திரிகை சுதந்திரம்,’ என்ற பெயரில் என்.டி.டி.வி, சி.என்.என்.ஐ-பி.என், டைம்ஸ் நௌ, ஹெட்லைன்ஸ் டுடே போன்ற ஆங்கிலத்தொலைக்காட்சிகள் அரங்கேற்றிய அசிங்கங்கள் கொஞ்சமா நஞ்சமா?

அந்தச் சிறுமியின் தாயாருக்கும், இன்னொருவருக்கும் தொடர்பு என்று ஊகித்துப் பேசியது ஒரு தொலைக்காட்சி!

இல்லை, இல்லை! அந்த சிறுமியின் பெற்றோர்கள் இருவருமே ஒழுக்கம் கெட்டவர்கள்; ஜோடி மாற்றக் கேளிக்கைகளில் ஈடுபடுகிறவர்கள் என்ற அபாண்டத்தைக் கூறியது ஒரு அடாத ஆங்கிலச்செய்தித் தொலைக்காட்சி!

ஹரியானாவில் நடக்கிற கௌரவக்கொலைகளைச் சாடுகிற இதே தொலைக்காட்சிகள், விசாரணை துவங்குமுன்னரே, அந்தச் சிறுமியின் பெற்றோர்களுக்கு ஒழுக்கச் சான்றிதழ் வழங்கி அவர்களது கௌரவத்தை ஏறக்குறைய படுகொலை செய்தன.

அதெல்லாம் இல்லை! அந்தப் பெண்ணுக்கும், அவளது தகப்பனுக்குமே.....என்று தனது ஞானதிருஷ்டியில் கண்டுபிடித்து விஷம்பரப்பியது இன்னொரு தொலைக்காட்சி!

இந்தப் போட்டாபோட்டியில், அந்தப் பெற்றோர்களின் இழப்பும், ஒரு சிறுமியின் படுகொலையும் பின்னுக்குத் தள்ளப்பட்டு, வக்கிரமான கற்பனைக்கதைகள் வலம்வந்து கொண்டிருந்தன. ஆண்மையற்ற பிரஸ் கவுன்சில், ஒரு ம**க் கூட பிடுங்க வக்கில்லாமல், வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. விளைவு...?

அந்தப் பெண்ணின் தகப்பனே சிறைசெல்ல நேர்ந்தது. ஒரே மகளையும் இழந்து, கணவனும் சிறைக்குப் போகவும், அந்த தாய் ஏராளமான எமன்களோடு போராடி, கணவனை விடுவித்தார். யாராயிருந்தாலும் இயல்பாக எதிர்பார்ப்பதுபோல, உண்மையான குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என்று அவர்களும் எதிர்பார்த்திருக்கலாம்.

ஆனால், ஆண்டின் இறுதியை நெருங்கிக்கொண்டிருக்கிற தறுவாயில், "எந்த ஆதாரமுமில்லை; எந்த சாட்சியமும் இல்லை! இந்த வழக்கில் தொடர்ந்து புலன்விசாரணை செய்ய முடியாது. எனவே, வழக்கை முடித்துக்கொள்ளலாம்,என்று சி.பி.ஐ. நீதிமன்றத்தில் கோரிக்கை தாக்கல் செய்திருக்கிறது.

வெட்கக்கெடு!

சி.என்.என்.ஐ.பி.என் தொலைக்காட்சியில் புளுகுமூட்டைகளை அவிழ்த்த சர்க்கார் என்ற செய்தியாளர், ’நான் சொன்னதெல்லாம் உண்மை,’ என்று அடம்பிடித்தார். (சாயம் வெளுத்துப்போன) என்.டி.டிவியின் பர்கா தத் இதை வைத்து இரண்டொரு நிகழ்ச்சிகள் நடத்தி, தன்னை ஒரு தேவதையாகக் காட்டிக்கொண்டார்.

அண்டப்புளுகும் ஆகாசப்புளுகும் இன்றைய ஊடகங்களில் கைகோர்த்துக்கொண்டு உண்மையை எப்படிக் குழிதோண்டிப்புதைக்கின்றன என்பதற்கு ஆருஷி தல்வார் கொலைவழக்கை விடவும் சிறந்த அல்லது மோசமான உதாரணம் வேறு என்ன இருக்க முடியும்?

கோயபல்ஸின் கொள்ளுப்பேரர்களான இந்தத் தொலைக்காட்சிகள், வெட்கம், மானம், சூடு,சொரணையின்றி ஒரு வருத்தம்கூட தெரிவிக்காமல், துடைத்துப்போட்டுவிட்டு பிசாசுகளைப் போல, அடுத்தவர்களின் இரத்தம் குடிக்கிற கொடுமை தொடர்கிறது. அதிகார புரோக்கர்களான வீர் சங்க்வீ, பர்கா தத் போன்ற இந்தப் பன்னாடைகள் தான் பத்திரிகை சுதந்திரத்தின் பிரதிநிதிகள் என்பது நமது நாட்டின் தலையெழுத்து.

நம்மூர் தொலைக்காட்சிகள் மட்டுமென்ன குறைச்சலா? ஒரு சாமியாரின் படுக்கையறைக்குள்ளே கேமிராவை வைத்து, அவரும் ஒரு நடிகையும் பகிர்ந்த அந்தரங்கங்களை உலகத்தொலைக்காட்சியில் முதல்முறையாக ஒளிபரப்பிப் புண்ணியம் தேடிக்கொண்டது. ’நான் ரொம்ப ஒழுங்காக்கும்,’ என்று எல்லாரும் அவர்களைப் பழித்து, காறி உமிழ்ந்து தத்தம் ஒழுக்கத்தையும், அறச்சீற்றத்தையும் வெளிப்படுத்திக் கொண்டனர்.

2010-ம் ஆண்டின் மிகப்பெரிய வில்லன் - செய்தித் தொலைக்காட்சிகள் தான்! கண்ணில் படுகிறவற்றையெல்லாம் கபளீகரம் செய்கிற இந்த அரக்கனை, கொட்டடியில் கட்டி, லாடமடிக்க வேண்டும்!

"ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம்; ஆனால், ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக்கூடாது!" என்று சொல்வதுண்டு. ஆருஷி தல்வார் வழக்கில் யார் தப்பித்தாரோ இல்லையோ, குற்றவாளிகள் தப்பித்துவிட்டார்கள். நிரபராதிகள் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஜனநாயகத்தின் தூண்களின் மீது சாமானியனுக்கு இருக்கிற நம்பிக்கை மெல்ல மெல்ல தனது இறுக்கத்தை இழந்து வருகிறது. இது நல்லதல்ல!

17 comments:

sathishsangkavi.blogspot.com said...

//2010-ம் ஆண்டின் மிகப்பெரிய வில்லன் - செய்தித் தொலைக்காட்சிகள் தான்!//

உண்மைதான்...

சி.பி.செந்தில்குமார் said...

as usual good post annae

சி.பி.செந்தில்குமார் said...

social awarness post

karthikkumar said...

2010-ம் ஆண்டின் மிகப்பெரிய வில்லன் - செய்தித் தொலைக்காட்சிகள் தான்///
இனி வரும் காலங்களிலும் இதே நிலை இருந்தால்?.....

ஈரோடு கதிர் said...

ஆருசியின் தந்தைதான் கொன்றார் என காவல் துறை ஆணையர் கொடுத்த பேட்டியை அன்று கொண்டாடிய ஊடகங்களின் வியாபார வெறி மறக்க முடியவில்லை

Vidhoosh said...

good post settai.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு சேட்டை. நான் இப்போதெல்லாம் தொலைக்காட்சி பார்ப்பதே இல்லை. எல்லாவற்றையும் தனக்குப் பணம் சம்பாதிக்க ஒரு வழியாகவே தொலைக்காட்சி நிறுவனங்கள் செயல்பட ஆரம்பித்துவிட்டது வருத்தமான விஷயம்.

Rekha raghavan said...

நாடு எங்கோ போய்க் கொண்டிருக்கிறது.

சாந்தி மாரியப்பன் said...

நல்ல பகிர்வு சேட்டை..

சேலம் தேவா said...

ஒரு நல்ல நடுநிலைமையான செய்தி தொலைக்காட்சி எதுவும் இல்லையா இந்த நாட்டில்..?!அந்த டி.ஆர்.பி- ன்ற கருமத்தை முதல்ல ஒழிக்கணும்.எல்லாம் வியாபாரமாயிடுச்சு..!!

முகுந்த்; Amma said...

ரொம்ப யோசிக்க வைக்கிற பதிவு அண்ணாச்சி. பத்திரிக்கை சுதந்திரம்ங்கிர பேரில நியுஸ் சானல்ஸ் பண்ணுர அட்டூழியங்களை சரியா பாயிண்ட் அவுட் பண்ணி இருக்கீங்க.

இன்னும் கொஞ்ச நாளில ஒவ்வொரு மனிதனின் அந்தரங்கங்களும் இதே போல அரங்கேற்றப்படும், அதுவும் ரியாலிட்டி ஷோ அப்படிங்கிற பெயரில டிஆர்பி ரேட்டிங்கை ஏத்தும்.
என்ன செய்ய எல்லாம் தலை விதி. :((

Denzil said...

நியாயமான ஆதங்கம் சேட்டையாரே! மீடியா சுதந்திரங்கிற பேர்ல இவங்க அடிக்கிற கூத்துக்கு என்னைக்கு விடிவுகாலம்னு தெரியலை. இது இரு புறமும் கூர்மையான கத்தின்னு காலம்தான் காட்டிக்கொடுக்கணும்.

ஹேமா said...

மனசுக்குக் கஸ்டமான நிகழ்வுகள்.எப்படித்தான் சாதாரணமாக எடுத்துக்கொள்கிறார்களோ!

சிநேகிதன் அக்பர் said...

இந்தி தொலைக்காட்சிகளுக்கு நம்மூர் தொலைக்காட்சிகள் எவ்வளவோ மேல்.

சண்முககுமார் said...

அடுத்து வரும் ஆண்டு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்

இதையும் படிச்சி பாருங்க
சித்தரை நேரில் பார்த்த அனுபவம் உண்டா?

Philosophy Prabhakaran said...

சரியா சொன்னீங்க... அவங்களைப் பொருத்தவரைக்கும் எல்லாமே வெறும் நியூஸ்தான்... உணர்ச்சிகள் இல்லாத முண்டங்கள்...

ஆர்வா said...

டிஆர்பியை தக்கவெச்சிக்கிறதுக்காக செய்யக்கூடிய சில சில்லறை வேலைகள்...