Tuesday, December 21, 2010

2G-திடுக்கிடும் தகவல்கள்!

சந்தைக்குப் போய் பைநிறைய காய்கறியோடு ஸ்கூட்டரில் வந்து இறங்கியவர், எதையோ மறந்துவிட்டதுபோல, பதட்டத்தோடு மீண்டும் கிளம்பினார்.

"என்ன சார், செல்போனைத் தவற விட்டுட்டீங்களா?"

"என்னை என்ன அவ்வளவு அஜாக்கிரதையான ஆசாமின்னா நினைச்சே? அது பத்திரமாத்தானிருக்கு! ஆக்சுவலி சந்தைக்கு என் வீட்டுக்காரியையும் கூட்டிக்கிட்டுப் போயிருந்தேன். மறந்துபோய் அவளை அங்கேயே விட்டுட்டு வந்திட்டேன்!"

நீதி:01-கைபிடித்தவளை மறந்தாலும், கைபேசியை மறவாதே!

"நேத்து பஸ்ஸுலே வந்திட்டிருந்தேனா? உளுந்தூர்ப்பேட்டை தாண்டினதுலேருந்து விக்கிரவாண்டிவரைக்கும் டவரே கிடைக்கலேடா! பாட்டுக்கேட்க முடியலே! ஃபிகரோட பேச முடியலே! ஒரு எஸ்.எம்.எஸ்.கூட பண்ண முடியலேடா!"

நீதி.02: செல் போனா சொல் போச்சு

"பெட்ரோல் தானே போடப்போறே? நான் ரோட்டுலேயே நிக்குறேன். அங்கே சுவிட்ச்-ஆஃப் பண்ணச்சொல்லுவானுங்க!

நீதி.03: போனைப் பிடித்தவன் பாக்கியசாலி

"எப்போ போன் பண்ணினாலும் என்கேஜ்டுன்னே வருது! அப்படி யாருகூடதான் பேசிட்டிருப்பியோ? இத பாரு, உனக்கும் எனக்கும் ஒத்து வராது. ஒண்ணு ட்யூவல் சிம்கார்டு உள்ள போனா வாங்கு. இல்லாட்டா, உன்னைக் கட் பண்ணிக்கிறேன்."

நீதி.04: ட்யூவல்-சிம் புருஷலட்சணம்

இப்படியெல்லாம் அன்றாடம் நிகழ்வுகள் நடக்கக்காரணம் 2G ஸ்பெக்ட்ரம் தானே?

நமது வாழ்வில் பின்னிப்பிணைந்து விட்ட இந்த அலைபேசியால் ஏற்பட்டுள்ள சர்ச்சைகள் கொஞ்சமா நஞ்சமா? நினைத்தாலே நெஞ்சு பதைபதைக்கிறதே!!

அலைபேசி உபயோகிப்பவர்களுக்கு மூளையில் கட்டி ஏற்படுகிறது என்று சில மாதங்களுக்கு முன்னரே ஒரு செய்தி வெளியானது.

இவ்வளவு ஆபத்தான தகவலை நான் ஏன் உடனடியாகத் தெரிவிக்கவில்லை என்பதற்கு, பொதுவாக மூளை சம்பந்தப்பட்ட எந்த நோயும் எனக்கு வருவதற்கு சாத்தியமில்லை என்பதால், அதை நான் அலட்சியப்படுத்தி விட்டேன் என்பதைத் தவிர வேறு எந்தக் காரணமும் இல்லை.

அதாவது, அதிகமாக அலைபேசியில் பேசப்பேச, நமது மூளையில் மைக்ரோ-வேவ் என்ற நுண்ணலையின் தாக்கம் ஏற்படுகிறதாம். நமது மண்டையோட்டுக்குள் இரண்டு அங்குலங்கள் வரைக்கும் இந்த மைக்ரோ வேவ்கள் ஊடுறுவுகின்றனவாம். (ஹும், பாழாய்ப்போன மைக்ரோ வேவ் சமையலறைக்குள் வந்து படுத்துவது போதாது என்று இது வேறா என்று சம்சாரிகள் முணுமுணுப்பது காதில் விழுகிறது.)

நிறைய மூளையிருப்பவர்களுக்கு அதிகம் போக உள்ளே இடம் இருக்காது என்பதால் தப்பித்தார்கள்; என்னைப் போன்றவர்களின் மண்டையோடுகளுக்குள்ளே ஒரு விஜயசேஷ மஹாலே இருக்கிறதே சாமி!

இதை எனது நண்பரிடம் சொன்னபோது அவர், "சே, வர வர இந்த விஞ்ஞானிகள் தொல்லை தாங்ங்க முடியலேப்பா. நீ என்னடான்னா, செல்போன் உபயோகிச்சா மூளையிலே கட்டி வருமுன்னு சொல்றே! இன்னொருத்தரு செல்போன், மடிக்கணினி உபயோகிச்சா ஆண்மைக்குறைபாடு ஏற்படும்னு சொல்லுறாங்க. மனுசன் அப்புறம் எதைத் தானய்யா உபயோகிக்கிறது? சே!" என்று அலுத்துக்கொண்டார்.

’எதுக்கு வம்பு? எனக்கு அலைபேசியே வேண்டாம்,’ என்று ஓடித்தப்பிக்கலாமுன்னு பார்க்கறீங்களா? ஹை, அது தான் நடக்காது! அடுத்த மிரட்டல் இதோ:

அலைபேசி கோபுரங்களிலிருந்து வெளிப்படுகிற கதிர்வீச்சும் உடல்நலத்துக்கு மிகுந்த கெடுதல் விளவிக்குமாம். இப்போ என்ன பண்ணுவீங்க? கோவில் இல்லாத ஊரில் குடியிருந்து விடலாம். ஆனால், அலைபேசி கோபுரம் இல்லாத ஊரு எங்கே இருக்குதாம்? நல்லா மாட்டிக்கிட்டீங்களா? அனுபவிங்க!

’என்ன சேட்டை ஒரேயடியா பயமுறுத்துறானே,’ன்னு நினைக்காதீங்க! மேலே கூறப்பட்டுள்ள கருத்துக்கள் குறித்து இன்னும் பல காரசாரமான சர்ச்சைகளும், அறிவியல் பூர்வமான ஆராய்ச்சிகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றனவாம். என்ன தான் முடிவா சொல்லுறாங்கன்னு பொறுத்திருந்து பார்ப்போம்.

என்னதான் சொல்லுங்க, விஞ்ஞானம் எவ்வளவு அற்புதமான விஷயத்தைக் கண்டுபிடிச்சாலும், அதைத் தவறாகப் பிரயோகம் பண்ணுறதுலே நம்ம ஆளுங்களை மிஞ்ச யாராலும் முடியாது. சமீபத்துலே செல்போன் சார்ஜரில் வெடிகுண்டு வைத்து, காதலிக்க மறுத்த பெண்ணைப் பழிவாங்க முயற்சி செய்திருக்கிறாரு ஒரு குடியாத்தம் ஆசாமி! யாராவது கோடு போட்டாப் போதுமே, உடனே ஒரு டெண்டர்போட்டு, கான்டிராக்ட் வாங்கி ரோடு போடுறதுலே நம்ம ஆளுங்க கில்லாடிங்க!

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய காதலாயிருந்தாலும், இன்றைய காலகட்டத்துலே செல்போன் இல்லாமல் போயிருந்தால், மெரீனா கடற்கரையில் மதியம் பன்னிரெண்டு மணி வெயிலில் காயப்போட்ட கருவாடுபோல காதலர்கள் காய்ந்து கொண்டிருப்பார்களா? அதே மாதிரி காதல் என்ற ஒன்று மட்டும் இல்லாமல் இருந்தால், பல அலைபேசி நிறுவனங்கள் வருமானமின்றி போண்டியாயிருக்காதோ?

அதனால் தான், இந்த கைபேசிக்கும் காதலுக்கும் அரசியல்வாதிக்கும் ஊழலுக்கும் இருப்பதுபோன்ற மிக நெருங்கின தொடர்பு இருக்கிறது என்று, உத்திரப்பிரதேசத்தில் முஜபர்நகர் என்ற ஊரில் திருமணமாகாத பெண்கள் செல்போன் பயன்படுத்தவே கூடாது என்று பஞ்சாயத்தில் தீர்ப்பளித்திருக்கிறார்களாம்.

அத்தோடு விட்டார்களா என்றால் இல்லை! லேட்டஸ்ட் அதிரடித் தகவல் என்ன தெரியுமா?

திருமணத்துக்கு முன்பே உறவு: செல்போன் பெருக்கத்தால் கள்ளத்தொடர்பு அதிகரிப்பு; ஆய்வில் தகவல்

இப்படியே போனா, சுனாமி வருவதிலிருந்து சேட்டைக்காரன் வலைப்பூ எழுதுவது வரைக்கும் அனைத்துக்குமே அலைபேசிதான் காரணம் என்று இனிவரும் நாட்களில் யாராவது ஆராய்ந்து சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஆகவே, மேற்கூறிய இவை எல்லாவுமே 2G ஸ்பெக்ட்ரம் அலைவரிசையால் ஏற்பட்ட பின்விளைவுகள் என்பதை அனைவரும் புரிந்து கொண்டிருப்பீர்கள்!

(அப்பாடா, ஏன் இன்னும் 2G ஸ்பெக்ட்ரம் பற்றி எதுவும் எழுதவில்லை என்று யாரும் இனிமேல் என்னைக் கேட்க முடியாது. நான் தப்பிச்சேன்!)

22 comments:

Anonymous said...

மக்கா.... ஏதோ பெருசா தகவல் இருக்கப் போகுதுன்னு வந்தா..... பொளுது போச்சு நல்லா........

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Good post...

//அலைபேசி உபயோகிப்பவர்களுக்கு மூளையில் கட்டி ஏற்படுகிறது//
அதிகமா செல் போன் யூஸ் பண்ணினா மூளையே கரைஞ்சு போய்டுமே... அப்புறம் கட்டி எல்லாம் வருமனு கவலையே வேண்டாம்...

//செல்போன் சார்ஜரில் வெடிகுண்டு வைத்து//
அடப்பாவமே...

//காதல் என்ற ஒன்று மட்டும் இல்லாமல் இருந்தால், பல அலைபேசி நிறுவனங்கள் வருமானமின்றி போண்டியாயிருக்காதோ//
அத சொல்லுங்க... கொஞ்சம் ஏமாந்தா காதலர்களுக்கு discount பிளான்னு வந்தாலும் வரும்...

Anonymous said...

சாளரங்கள்(windows) சற்றே சொதப்பியதால் மீண்டும் தருகிறேன்.

மக்கா..... பெருசா ஏதோ தகவல் இருக்குமோன்னு வந்தா.........
பொளுது போச்சு நல்லா.......

Anonymous said...

உங்க பங்குக்கும் எழுதிட்டீங்க போல ! சபாஷ் இரசிக்கும்படியான ஒரு பதிவு

சி.பி.செந்தில்குமார் said...

mudha முத வெட்டு

சி.பி.செந்தில்குமார் said...

வழக்கம் போல காமெடி கலக்கல் அண்ணே

மாணவன் said...

வழக்கம்போலவே உங்கள் ஸ்டைலில் நகைச்சுவை கலந்து கலக்கீட்டீங்க சூப்பர்

தொடருங்கள்

பகிர்வுக்கு நன்றி

ஜெயந்த் கிருஷ்ணா said...

நகைச்சுவையுடன் நல்ல தகவல்கள்...

sathishsangkavi.blogspot.com said...

கல கல பதிவு...

Rekha raghavan said...

ஆஹா செம கலக்கல்!

Unknown said...

கலக்கல்! :-)

சிநேகிதன் அக்பர் said...

இதுதான் திடுக்கிடும் தகவலா. நல்லா கிளப்புறீங்க பீதியை :)

அகல்விளக்கு said...

நீங்களும் ராடியாவும் பேசின டேப் எதுனா ரிலீஸ் பண்ணப்போறீங்களோன்னு வந்தா...

இது இன்னும் நல்லா இருக்கு...

நிகழ்வுகளின் அலசலில் பதிவு அருமை நண்பா...

:-)

pudugaithendral said...

காமெடியா சொல்லியிருந்தாலும் பல விஷயங்கள் யோசிக்க வேண்டியது.

ம்ம்ம் வாழ்த்துக்கள்

vasu balaji said...

2G அச்சாஜி

சிவானந்தம் said...

காமெடி உங்க ரத்தத்துல ஊரியிருக்குது. கலக்குங்க.

suneel krishnan said...

கருத்து அளவா சொல்லிருக்கீங்க சேட்டை ..
இந்த டவர் பிரச்சனை உண்மை ..ஊரில் இருக்கும் சிட்டு குருவிகளின் எண்ணிக்கை குறைஞ்சதுக்கு இது தான் காரணம் அப்டின்னு சொல்லுறாங்க .தூங்கும் போது தலைக்கு பக்கத்துல செல் வெச்சுக்கிட்டு படுக்காதீங்க அப்டின்னு சொல்லுறாங்க .ஒரு பத்து வருஷத்துல நாம எல்லாம் எப்படி இதுக்கு அடிமை ஆனோம் ? ஆச்சர்யம் தான்

வெங்கட் நாகராஜ் said...

2ஜி இருந்ததனால உங்களுக்கு ஒரு இடுகை ஜி. வர ஒரு செய்திகூட விடாம படிச்சு அதை வைத்து இவ்வளவு கோர்வையா ஒரு இடுகை போட எங்கே இருந்து கத்துக்கிட்டீங்க ஜி. அட, என்னோட கருத்துலயும் 2ஜி!

இந்த சமயத்துல எனக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வந்தது: “Breaking News: PM finally breaks silence: The only 2G I know is SoniaG and RahulG….”

dogra said...

அப்பாடா! ரொம்பவே நல்லா எழுதிறீங்க!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

ஆய்வுக் கட்டுரை + நகைச்சுவைக் கட்டுரை
= சேட்டையின் 2ஜி.

பிரபாகர் said...

என்னஜி இன்னும் 2ஜி பத்தி இதுபத்தி இடுகை போடலையான்னு கேக்கறதுக்கு முன்னால தகவல்களை சேர்த்து கோர்த்து அழகாய் கொடுத்திருக்கிறீர்கள் என் சேட்டை நண்பா...

பிரபாகர்...

Admin said...

சிரிக்கும்படி எழுதி இருந்தாலும் சிந்திக்கவேண்டிய பதிவு...