Wednesday, June 2, 2010

வலைப்பதிவாளர் ராசிபலன்.10மகர ராசிக்காரர்களே!
கொஞ்ச காலமாகவே உங்கள் பாடு சற்று திண்டாட்டமாக இருந்து வந்திருக்கிறது. சகபதிவர்களெல்லாம் சகட்டுமேனிக்கு சண்டைபோட்டுக்கொண்டிருக்கையில், அதாவது, சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்கையில் நீங்கள் மட்டும் பின்னூட்டங்களை மட்டுமே எழுதிக்கொண்டிருந்தீர்கள். இருப்பினும், இணையத்தின் உலகப்போரில் எழுதப்பட்ட உங்களது சமீபத்திய பின்னூட்டங்கள் வரலாற்றில் இடம்பெறுகிற வாய்ப்பிருக்கிறது. இதன் காரணமாக பின்னூட்டத்தாலேயே மீண்டும் பிரபலமடைந்து, புதிய இடுகைகளை எழுதுகிற உற்சாகத்தைப் பெறுவீர்கள். ’இது சாத்தியமா?’ என்று ’வினவு’வதை விட்டு விட்டு சோளிங்கருக்கு ஒரு முறை சென்று ’நர்சிம்’மரை தரிசித்து வந்தால் அடுக்கடுக்காகப் பல புதிய இடுகைகளை எழுதி அசத்த முடியும். தோஷம் முற்றிலும் விலகும்வரை அறிஞர் அண்ணா எழுதிய ’வேலைக்காரி,’ மற்றும் கலைஞர் எழுதிய ’பூக்காரி,’ போன்ற கதைகளைப் பற்றிய விமர்சனத்தைக் கூட தவிர்த்தல் நன்மை பயக்கும்.

உங்களது ஜென்மராசியில் அனானி போல வந்து அலப்பறை செய்து கொண்டிருந்த குருபகவான், அலுத்துப் போய் இடம்பெயர்ந்து விட்டபடியால், இனி புதுப்புது இடுகைகளாய் எழுதி புரட்சி செய்வீர்கள் என்பது திண்ணம். குங்குமம், சந்தனம், மல்லிகை,முல்லை போன்ற பெயர்களில் பின்னூட்டம் எழுதுபவர்கள் மற்றும் எதிர்பதிவு எழுதுபவர்களிடம் கவனமாய் இருத்தல் நன்மை பயக்கும். அதே பெயரில் வராவிட்டாலும் விபூதி, ஊமத்தம்பூ போன்ற வெவ்வேறு பெயர்களிலும் பின்னூட்டம் வர வாய்ப்புகள் உள்ளமையால் அதிகப்படியான கவனத்தைச் செலுத்த வேண்டிவரலாம்.

அது மட்டுமல்ல! ரிஷபம், கடகம், கன்னி, மீன ராசி பதிவர்களுடன் சேர்ந்து ’கயிதே,கஸ்மாலம்,பொறம்போக்கு,பேமானி,சோமாறி,’ போன்ற அருந்தமிழ்ச்சொற்கள் குறித்த ஆராய்ச்சியை மேற்கொள்ள இதுவே உகந்த தருணம். இது போன்ற பதிவுகளுக்கு தலா நூறு பின்னூட்டங்களாவது கிடைக்கும் என்று உங்களது தசாபலன்கள் உறுதிபடுத்துகின்றன. இந்த காலகட்டத்தில் ’சாக்கடையில் கல்லெறிவது எப்படி?’, ’மல்லாந்து படுத்து எச்சில் துப்புவது எப்படி?’ போன்ற அறிவுபூர்வமான தொடர் இடுகைகளை எழுதி தமிழுக்கும் தமிழருக்கும் அருந்தொண்டாற்றுகிற அருமையான வாய்ப்பை நீங்கள் பெறுவீர்கள்!

அடுத்த சில தினங்களுக்கு அவரவர் பதிவுகளில் போடுகிற அன்றாடச் சண்டைகளைத் தவிர, பிற பதிவர்களின் இடுகைகளுக்கும் பின்னூட்டம் போடுகிற சாக்கில் குடுமிப்பிடி சண்டை போடுகிற பொன்னான வாய்ப்பு நிறைய பேருக்குக் கிடைக்கும். எதற்கும் இரண்டொரு நாட்கள் கேஷுவல் லீவு எடுத்து வைத்துக் கொள்வது உத்தமம். ஊருடன் ஒத்து வாழ் என்ற பழமொழிக்கேற்ப கார்ப்பரேட் கணிகைகள், கக்கூஸ் மகாத்மியம் போன்ற புதுமையான, இனிவருகிற பதிவர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கப்போகிற இடுகைகளை எழுதி, இதுவரை நாம் எள்ளி நகையாடிய அரசியல்வாதிகளும் நம்மைப் பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கிற அளவுக்கு வலையுலகத்தையே வெடிச்சிரிப்பில் ஆழ்த்தப்போகிறீர்கள்!

விஜய் அரசியல் பிரவேசம், ராவணன் வெளியீடு மற்றும் பிரண்டை அல்வாய் செய்வது எப்படி என்பன போன்ற இடுகைகளை இன்னும் ஒருசில நாட்களுக்கு ஒத்திவைத்து விட்டு, அவரவர் பதிவுகளில் யாரையாவது நாலு வார்த்தை நல்லதாக எழுதித் திட்டுவது சாலச் சிறந்தது. இதை விட்டால், கோஷ்டி சேர்ந்து கொண்டு கும்மியடிக்க அடுத்த வாய்ப்பு கிடைப்பதற்கு இன்னும் ஒரு சில நாட்களாகலாம் என்பதால், காற்றுள்ளபோதே தூற்றி, கண்ணில் படுகிறவர்களையெல்லாம் தூற்றி எழுதி அனைவரும் பிரபலமாகி விடலாம் என்பது உறுதி.

இலக்கியம், ஆன்மீகம் சம்பந்தப்பட்ட இடுகைகளை எழுதுபவர்கள் தற்காலிகமாக அவரவர் வலைப்பதிவுகளிலிருந்து சன்னியாசம் பெறுவது உசிதம். ஏழிலிருந்து பதினைந்து நாட்கள் வரைக்கும் வலைப்பதிவுலகத்தில் நாட்டாமைகளின் வழிபாடு ஜோராக நடக்குமென்பதால், மிச்சம் மீதமுள்ள பதிவர்களும் அர்ச்சனை,அபிஷேக ஆராதனைகளில் தவறாமல் கலந்து கொண்டு பிளாகேஸ்வரரின் பேரருள் பெற்று உய்ய வேண்டுமாய்க் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

அதன் பிறகு.....!

ஜென்மராசியில் குரு இருந்தவரையில் வீட்டில் இணைய இணைப்பின்றி, பென் டிரைவில் மெனக்கெட்டு சுமந்து கொண்டு வந்து அலுவலகக் கணியிலிருந்து இடுகைகளைப் போட்டு அல்லல்பட்டிருப்பீர்கள். இனிமேல் வீட்டிலும் அலுவலகத்திலும் இருந்து அலுக்காமல் சளைக்காமல் பல இடுகைகளைப் போட்டு தூள் கிளப்பப்போகிறீர்கள். ஆனால், தமிழகத்தைச் சேர்ந்த பதிவர்களுக்கு மின்வெட்டு காரணமாக இந்த குருபெயர்ச்சியின் பலன் முழுமையாகக் கிடைக்காது.

மேலும் வீட்டில் கணினியும் இணைப்பும் இருந்தும்கூட, அனுகூலசத்ருக்களாக உங்களை இடுகை போட விடாமல் தடுத்த பிற குடும்ப உறுப்பினர்களின் தொல்லை இனி முன்போல் இருக்காது என்பதால் உங்கள் காட்டில் மழைதான்!

அண்மைக்காலமாக உங்களது வளர்ச்சியொ, மொக்கையோ அல்லது இரண்டுமோ பொறுக்காத வயிற்றெரிச்சல் பதிவர்கள் ஓரிருவர் கோஷ்டி சேர்த்துக்கொண்டு உங்களது வலைப்பூவை இதுவரை பகிஷ்கரித்து வந்திருப்பார்கள். உங்கள் பதிவுக்கு வந்து வாசித்தால் ஜலதோஷம் உட்பட பலதோஷம் வரும் என்று ஒரு சிலர் புரளியும் கிளப்பியிருக்கலாம். ஆனால், இப்போது பல புதிய பதிவர்கள் உங்கள் வலைப்பூவுக்கு வந்து தொடர்ந்து பின்னூட்டமிடுவதோடு பின்தொடரவும் தொடங்குவார்கள்.

நீங்களே மறந்து போன உங்களது பழைய இடுகைகளையும் பலர் படித்துப் பின்னூட்டமிட்டு உங்களை ஊக்குவிப்பதற்கான வாய்ப்புகளும் பிரகாசமாக இருக்கின்றன. இதன் காரணமாக, இதுவரை பெரும்பாலும் மொக்கை இடுகைகளைப் போட்டுக்கொண்டிருந்தவர்களும், திடீரென்று பொறுப்புணர்ச்சி ஏற்பட்டு சுயமாகச் சிந்தித்து சுமாராகவேனும் எழுத முயற்சிப்பார்கள். சகபதிவர்களின் பல இடுகைகளைத் தொடர்ந்து படித்து, ’இவர்களே எழுதும்போது நான் எழுதக்கூடாதா,’ என்ற தன்னம்பிக்கை பிறக்கும். முன்னெப்போதுமில்லாத அளவுக்கு தமிழ்மணத்திலும் தமிழீஷிலும் எப்போதும் முகப்பிலேயே இருப்பீர்கள்.

குருப்பெயர்ச்சி காரணமாக நீசபங்கம் ஏற்பட்டு இதுவரை உங்களைக் கவலையில் ஆழ்த்திய வைரஸ்தோஷம் முற்றிலுமாக நீங்கும்.

அரசுப்பணியில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வு ஏற்படும் என்பதால், இனிமேல் இடுகைகளுக்குப் பஞ்சமேயிருக்காது. மேலும் புதிதாக பலருக்கு வேலைவாய்ப்பும் கணினியும் கிடைக்கிற தருணமென்பதால், பல புதிய வலைப்பதிவாளர்களும் இனிவரும் நாட்களில் உருவாக வாய்ப்பிருக்கிறது.

மேலும் பிற ராசிக்காரர்களுக்கு இடுகை போடுவதில் சற்றே அசுவாரசியம் ஏற்படும் என்பதால், உங்கள் பதிவு சனிக்கிழமை டாஸ்மாக் போல எப்போதும் ஜேஜே என்றிருக்கவும் வாய்ப்பிருக்கிறது.

திருமணமாகாத பதிவர்களுக்கு திருமணம் நடந்தேறும் என்பதால், பழைய கவிதைகளையெல்லாம் இடுகையாகப் போடுகிற அபாயம் இருக்கிறது. ஆனால், திருமணமான பதிவர்கள் எப்போதும் போலவே குலுங்கிக் குலுங்கி அழவைக்கும் பல நகைச்சுவை இடுகைகளை இடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

பின்னூட்டங்களுக்கு சோம்பல் பார்க்காமல் நன்றி எழுதி நற்பெயரை அடைவீர்கள். சகபதிவர்கள் பிரச்சினையில் இருப்பார்கள் என்பதால் உங்கள் பிரச்சினையை சுலபமாக மறந்து மனம் போல் இடுகையிட்டு மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள்.

பிரச்சினைகளை சமாளித்து வெற்றி கண்டு பாராட்டுகளையும் புகழையும் பெறுவீர்கள். அனானிகளின் கவனம் இன்னும் சில காலத்துக்கு உங்கள் வலைப்பதிவில் இருக்காது என்பதால் இனி உங்கள் காட்டில் அடைமழை மட்டுமல்ல; அடையோடு அவியல்மழையும் சேர்ந்தே பொழியும்!

நீங்கள் மேஷ ராசிக்காரரா? இங்கே செல்லவும்!

நீங்கள் ரிஷப ராசிக்காரரா? இங்கே செல்லவும்!

நீங்கள் மிதுன ராசிக்காரரா? இங்கே செல்லவும்!

நீங்கள் கடக ராசிக்காரரா? இங்கே செல்லவும்!

நீங்கள் சிம்ம ராசிக்காரரா? இங்கே செல்லவும்!

நீங்கள் கன்னி ராசிக்காரரா? இங்கே செல்லவும்!

நீங்கள் துலாம் ராசிக்காரரா? இங்கே செல்லவும்!

நீங்கள் விருச்சிக ராசிக்காரரா? இங்கே செல்லவும்!

நீங்கள் தனுசு ராசிக்காரரா? இங்கே செல்லவும்!

24 comments:

Anonymous said...

கலக்கிட்டீங்க நண்பா..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சேட்டைக்காரன் ராசிக்கு வீட்டுக்கு ஆட்டோ வரும்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஏன் சேட்டை.. பலனை பார்த்தா, மகர ராசிக்கு மட்டுமல்ல.. எல்லா ராசிக்கும் பொருந்தும் போல உள்ளதே..

இதுக்கு ஏதாவது பரிகாரம் இருக்கு?..ஹி..ஹி

சாந்தி மாரியப்பன் said...

செம கலக்கலா இருக்கு :-))))

Starjan (ஸ்டார்ஜன்) said...

ஆமா ராசிக்கு என்ன ராசி?..

பிரேமா மகள் said...

யூ டூ சேட்டை?

அகல்விளக்கு said...

செம... சேட்டை...

தனி காட்டு ராஜா said...

கடக ராசி பலன்கள் எதிர்பார்த்தது போல் நடக்காததால் கடக ராசி வலை பதிவர் ஒருவர் ராசி பலன் சொன்ன சேட்டைக்காரன் அவர்களை எலி வலை வீசி தேடி வருவதாகவும் ....எனவே தாங்கள் கொசு வலைக்குள் சென்று ஒளிந்து கொண்டால் நீங்கள் அவரை எளிதாக ஏமாற்றி விடலாம் என கேட்டு கொள்ள படுகிறார்.
சனி,குரு இருவரும் உங்கள் வீட்டுக்கு பக்கத்து வீட்டிலும்,எதிர் வீட்டிலும் முறையே ஆட்சி,நீச்சம் பெற இருப்பதாலும் ,மேலும் தங்களுக்கு 'வலை' தோஷம் வலுத்து இருப்பதாலும் ,9 ஓட்டையில்லாத கொசு வலைகளை சொந்த பணத்தில் வாங்கி ஏழை எளிய மக்களுக்கு தானம் தரும்படி பரிகாரம் பரிந்துரைக்கபடுகிறது .

pudugaithendral said...

பல இடங்களில் ஆமாம்லன்னு சொல்ல வெச்சிட்டீங்க தம்பி

pudugaithendral said...

மேலும் வீட்டில் கணினியும் இணைப்பும் இருந்தும்கூட, அனுகூலசத்ருக்களாக உங்களை இடுகை போட விடாமல் தடுத்த பிற குடும்ப உறுப்பினர்களின் தொல்லை இனி முன்போல் இருக்காது என்பதால் உங்கள் காட்டில் மழைதான்//

இத்தனை நாள் பதிவு போட முடியாம இருந்தக்காரணத்தை கப்புன்னு கண்டுபிடிச்சு சொல்லிட்டீங்க.

ரொம்ப வாறுவீங்கன்னு நினைச்சேன். நல்லவேலை மகரம் தப்பித்தது.

:))

ஜோதிஜி said...

எளுதலாம்

எழுதலாம்

ஜோதிஜி said...

அடேங்கப்பா என்னவொரு திறமை? சிரிப்பதா? அழுவதா? சூப்பரப்பு.

ஜெட்லி... said...

கும்பத்துக்கு சீக்கரம் போடுப்பா....
அது தான் நம்ம ராசி....

முகுந்த்; Amma said...

Good one, Well said

butterfly Surya said...

சூப்பர்.. :) :)

கலக்கல்.

அன்புடன் நான் said...

எல்லாத்திலுமா.... சேட்டை...?

ஹேமா said...

சேட்டைதான் !

மசக்கவுண்டன் said...

நீங்க எழுதியிருக்கிறது ராசிபலன் மாதிரி தெரியலியே?

சிநேகிதன் அக்பர் said...

ராசிக்கே ராசி சரியில்லை போலிருக்கு.

மங்குனி அமைச்சர் said...

சிச்சுவேசன் பதிவு, அசத்து

Anonymous said...

என் ராசி 'மீனம்'ங்கறதால நீங்க எழுதுறத எல்லா ராசிக்குமான ராசி பலன்களை எல்லாம் பொறுமையா படிச்சிட்டே வரேன்.. எனக்கு வரட்டும்; அப்புறம் பேசுறேன் :) நானும் எவ்...வளோ காலம் தான் காத்திருக்கிறது? ;'(

தக்குடு said...

suuuuuuuuperuuu..;)

ரோஸ்விக் said...

இதையே தான் காரமடை ஜோசியனும் சொன்னான்.. :-)))

யுக கோபிகா said...

ஜோதிடம் சொல்லும் approach புதுசா இருக்குது ....இந்த முறையை பிற ஜோதிடர்களுக்கும் அறிமுகம் செய்து வைக்கவும் ..