Friday, January 29, 2010

ஜிம்மாயணம்-01

திடீர்னு நண்பர்கள் எல்லாருக்கும் கனவுலே திருமூலர் வந்து,"மக்கா, உடம்பை வளர்த்தேன்; உயிர் வளர்த்தேனே,"ன்னு அருள்வாக்கு சொன்னா மாதிரி, 2009 டிசம்பர் 31-ந்தேதி நாங்க மூணு பேரும் ஒரு முடிவெடுத்தோம். இந்தப் புத்தாண்டு முதல் தினமும் ஜிம்முக்குப் போயி உடம்பை நல்லாத் தேத்திக்கிட்டு, ஆறுமாசத்திலே ஆர்னால்டு மாதிரி ஆகணுமுண்ணு ஏகமனதா தீர்மானத்தை நிறைவேத்தினோம். (அதுக்கு முன்னாலே எவ்வளவு ஏத்துனீங்கன்னு கேட்கப்படாது!)

"எடுத்த எடுப்புலேயே பாடி-பில்டிங்கிலே எறங்கப்படாது. முதல்லே நம்ம உடம்பை கொஞ்சம் கொஞ்சமா பதப்படுத்திக்கணும்," என்று வைத்தி என்ற நண்பன் சொன்னபோது, எங்கள் மூவரில் அவன் உடம்பில் தான் கொஞ்சம் சதை எனப்படுவதாகிய சங்கதியிருந்தபடியால் ஒப்புக்கொண்டோம்.

"சரிடா! நீ சொல்லுற மாதிரியே செய்யுறோம்," என்று அவனிடம் சரண்டர் ஆகி விட்டோம். "என்னவாவது பண்ணி நாமும் சிக்ஸ்-பேக்காயிரணும். அதுக்கு என்ன வேணும் சொல்லு!"

"நல்லா ஓடுற ஒரு அலாரம் டைம்பீஸ் வேணும்," என்று படுசீரியசாகச் சொன்னான்.

"என்னது?"

"ஆமாண்டா! காலையிலே அஞ்சு மணிக்கு எந்திரிச்சு ஓட வேண்டாமா? நம்ம மூணு பேரோட அலாரம் டைம்பீஸும் இத்தனை நாளிலே ஒருவாட்டியாவது இந்திய நேரத்தைக் காட்டியிருக்காடா?" என்று அவன் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. எங்கள் மூவரிடமும் மூன்று அலாரம் டைம்பீசுகள் இருந்தபோதிலும், எங்களுக்கிருந்த ஒற்றுமை அந்த மூன்றுக்கும் எப்போதும் இருந்தது கிடையாது. வைத்தியின் கடியாரம் T20 உலகக்கோப்பை நடந்தகாலத்திலிருந்து ஜோஹானாஸ்பர்க் நேரத்தையே காட்டிக்கொண்டிருக்கிறது. சுரேந்திரனின் கடியாரத்துக்கு மேன்சனில் "செங்கோட்டை பாஸஞ்சர்," என்று செல்லப்பெயர். என்னுடைய கடியாரம் என்னைப்போலவே எப்போது ஓடும், எப்போது உறங்கும் என்று கண்டுபிடிக்க முடியாதபடி படுத்துவதால் அதை நம்பிப்பயனில்லை. எனவே வைத்தி சொன்னது போல ஒரு நல்ல அலாரம் டைம்பீஸை காலகாலமாக மக்கள் கடியாரம் வாங்குகிற பி.ஆர்.அண்டு சன்ஸ் போயாவது வாங்கியே தீர்வது என்று முடிவானது.

அடுத்து....?

"எக்சர்சைஸ் பண்ணி முடிக்கிறவரைக்கும் டீ,காப்பி எதுவும் சாப்பிடக்கூடாது," என்று வைத்தி சொன்னதும் எங்கள் இருவரது முகங்களும் கணேஷ்விலாஸ் ரவாதோசை போல சுருங்கிப்போனது.

"டேய், காலையிலே காப்பி சாப்பிடாத்தாண்டா எனக்குப் பல்லு விளக்கவே தெம்பு வரும்," என்று உண்மையை ஒப்புக்கொண்டான் சுரேந்திரன்.

"எனக்கும் தான்," என்று நானும் ஒத்து ஊதினேன்.

"காப்பி குடிச்சிட்டு எக்சர்சைஸ் பண்ணினா உடம்பு இன்னும் மோசமாயிடும்," என்று பேரிடியாக ஒரு செய்தியைச் சொன்னான் வைத்தி.

"சரி, சமாளிக்கிறோம்! அடுத்தது என்ன?"

"ஆறுமாசத்துக்கு பொண்ணுங்களை ஏறெடுத்தும் பார்க்கக் கூடாது!" என்று அடிமடியிலேயே கைவைத்தான் வைத்தி. பெயருக்கேற்ற மாதிரியே வைத்தீ வயிற்றில் தீ வைத்து விட்டான்.

"இந்த ஆட்டத்துக்கு நான் வர்லே போடா," என்று நான் வெளிநடப்பு செய்ய முற்பட்டேன். என்ன அநியாயம் இது? பொண்ணுங்க தான் எங்களைப் பார்க்கிறதில்லை; நாங்க பொண்ணுங்களைப் பார்த்தா என்ன குடியா முழுகிப்போயிடும்.

"அடேய்! பொண்ணுங்க நினைப்பு வந்தாலே உடம்பு என்ன எக்சர்சைஸ் பண்ணினாலும் தேறாதுடா! ஒரு ஆறுமாசம் மனசையும் கண்ணையும் கட்டுப்படுத்திக்க முடியாதா?"

"சரி!" வேண்டாவெறுப்பாக ஒப்புக்கொண்டோம். "அடுத்தது என்ன?"

"நிறைய சாப்பிடணும்," என்று வைத்தி சொன்னபோது அவனை அப்படியே கட்டிப்பிடித்து உச்சிமோந்து பாராட்ட வேண்டும்போலிருந்தது. இந்த ஒரு விஷயத்தில் எங்களை கடோத்கஜனாலும் வெல்ல முடியாது.

"கவலையை விடு!" என்று ஒருமித்த குரலில் கூவினோம். "தேவைப்பட்டா கூட ரெண்டு வேளை சாப்பிடலாம்."

"அப்புறம், மத்தவங்க மாதிரி பேண்ட்-ஷர்ட் போட்டுக்கிட்டு எக்சர்சைஸ் பண்ணக்கூடாது," என்றதும் திடுக்கிட்டுப்போனோம்.

"என்னடா விளையாடுறியா?"

"அவசரப்படாதீங்கடா!" என்றான் வைத்தி. "அததுக்குன்னு டிரஸ் இருக்கு! அதை வாங்கிப் போட்டுக்கிட்டுத் தான் எக்சர்சைஸ் பண்ணனும்."

"ஒரு சந்தேகம்! வாங்குற டிரஸை இப்போ போடுற சைஸுக்கு வாங்குறதா? இல்லை ஆறுமாசம் கழிச்சு நாம ஆகப்போற சைஸுக்கு வாங்குறதா?" என்று இப்பொழுதே ஆர்னால்டு ஆகிவிட்டது போல எண்ணியபடி கேட்டான் புத்திசாலி சுரேந்திரன்.

"ஃப்ரீ சைஸா வாங்கிக்கலாம். ஆறு மாசத்துலே உடம்பு எக்கச்சக்கமா ஆயிட்டாக் கூட போட்டுக்கலாம்," என்று நானும் என் பங்குக்கு ஒரு யோசனை தெரிவித்தேன்.

"ஏண்டா வைத்தி? காலையிலே அஞ்சு மணிக்கே எழுந்திரிச்சா தெருவிலே தூங்கிட்டிருக்கிற நாயெல்லாம் டிஸ்டர்ப் ஆகி எந்திரிச்சு நம்மளைத் துரத்திக்கிட்டு வராது?" என்று மீண்டும் ஒரு தீர்க்கதரிசனம் நிறைந்த கேள்வியைக் கேட்டான் சுரேந்திரன்.

"டேய்! நம்ம லொக்காலிட்டியிலே இருக்கிற எல்லா நாய்க்கும் நம்ம மூணு பேரையும் நல்லாவே தெரியும். அந்தக் கவலை உனக்கு வேண்டாம்," என்று டாக்-சைக்காலஜியில் "டாக்"டரேட் வாங்கியவன் போல மிகவும் நம்பிக்கையோடு பதிலளித்தான் வைத்தி.

"டேய் சுரேன்! தேவையில்லாத கேள்வியெல்லாம் கேட்காதே! வைத்தி கூட இருக்கிறபோது நாம நாயைப் பத்தியெல்லாம் கவலைப்படக்கூடாது," என்று நான் சொன்னதை, அவனைப் புகழ்ந்து கூறுவதாக எண்ணி மகிழ்ந்தான் வைத்தி. வாலை ஆட்டாதது தான் மிச்சம்.

"ஸோ, இது தான் நம்மளோட நியூ இயர் ப்ளெட்ஜ்! எல்லாரும் கை கொடுங்க," என்று ஏதோ சாணக்ய சபதம் போல கையை நீட்ட, அவன் மீது இருந்த பழைய வயிற்றெரிச்சலையெல்லாம் சேர்த்து வைத்து இருவரும் அவனது உள்ளங்கையில் ஓங்கி அடித்தோம்.

"நாளைக்கு ஒருநாள் தான் கன்செஷன்! எல்லாரும் அவங்க அவங்க வெயிட்டை ஏதாவது ரயில்வே ஸ்டேஷனிலே பார்த்துக் குறிச்சு வைச்சுக்கோங்க! வாரத்துக்கு ஒரு தடவை எவ்வளவு எடை கூடியிருக்குன்னு நோட் பண்ணி வைச்சுக்கணும்." என்றான் வைத்தி.

"நான் வேண்ணா ஒரு புரோகிராம் எழுதிடறேன்," என்றான் சுரேந்திரன். அவனை விட்டால் மேன்சனில் நாளொன்றுக்கு எத்தனை கொசு கடித்தது, எத்தனை அடிக்கப்பட்டது என்று ஓரக்கிளில் புரோகிராம் எழுதி, விஸுவல் பேசிக்கில் மெனுவெல்லாம் வைத்து விடுவான்.

"சரி, நாளைக்கு புதுகடியாரம் வந்தாகணும்!" என்று உத்தரவிட்டான் வைத்தி.

"அதுக்கு நான் கேரண்டி!" என்றேன் நான்.

அதன்பிறகு ஆறுமாதம் கழித்து சிக்ஸ்-பேக்குடன் சென்னை நகர வீதிகளில் நாங்கள் மூவரும் உலா வருவது போலவும், டெர்மினேட்டர்-V யில் ஆர்னால்டைத் தூக்கி விட்டு என்னைக் கதாநாயகனாக நடிக்க வற்புறுத்தி ஹாலிவுட்டிலிருந்து ஒரு தயாரிப்பாளர் பரங்கிமலையில் பாராசூட்டில் வந்து குதித்து பொடிநடையாக எங்கள் மேன்சனுக்கு வருவதாவும் கனவு கண்டபடியே நான் உறங்கி விட்டேன்.

மறுநாள் கண்விழித்து முண்டாபனியனுடன் கண்ணாடிமுன்பு நின்றபோது எனது பனியனுக்குள்ளே இன்னும் இரண்டு பேரை வாடகைக்கு வரச்சொல்லலாம் போலத்தோன்றியது.

2 comments:

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அருமை..
ஆனா, தமிழ் நாடு ஒரு "ஆர்னால்டு சுச்சு நகினார" இழந்துவிட்டது..
போங்க சார்..

settaikkaran said...

//அருமை..
ஆனா, தமிழ் நாடு ஒரு "ஆர்னால்டு சுச்சு நகினார" இழந்துவிட்டது..
போங்க சார்..//

அப்படியெல்லாம் அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வரப்படாது. பொறுத்திருந்து பாருங்க. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி