Wednesday, January 27, 2010

சோற்றுப்புதூர் சொறிகால்வளவன்.04

(இடம்: அந்தப்புரம்)

(மன்னர் சொறிகால்வளவன் வருவதைக் கண்டு, அரசியார் உலக்கைநாயகி எழுந்து நிற்கிறார்)

சோ.சொ.வ: ராஜநர்த்தகியின்றி ஒரு அரசவையா? வெட்கம்! யாரங்கே? பழரசம் கொண்டு வாருங்கள்!

உ.நா:அரசே! அந்தப்புரத்தில் நம் இருவரையும் தவிர யாரும் இல்லை. சேடியர்கள் அனைவரும் நீங்கள் இந்தப்பக்கம் அரசவைக்குக் கிளம்பியதுமே சாளரம் வழியாகச் சாடிக்குதித்துச் சென்று விட்டனர்.

சோ.சொ.வ:என்ன? அப்படியென்றால் நீ இவ்வளவு நேரம் தனிமையிலா இருந்தாய்?

உ.நா:என்செய்வேன் மன்னா! எனக்கு சாளரம் எட்டவில்லையே!

சோ.சொ.வ:நீ சாதாரண ராணியல்ல;சாம்பிராணியென்று அடிக்கடி நிரூபிக்கிறாய்!

உ.நா:அரசே! உங்களை விட்டு நான் எங்கு செல்வது? எனக்குக் குதிரை ஓட்டவும் தெரியாதே?

சோ.சொ.வ:அது தெரிந்து தானே உன்னை இந்நாட்டின் பட்டத்து ராணியாக்கினேன்? நீயாவது பசியோடு வந்திருக்கும் எனக்கு ருசியாக பழரசம் கொண்டு தருவாயா?

உ.நா:நேற்றுத் தயாரித்த பருப்புரசம்தான் இருக்கிறது. பழரசத்திற்குப் பதிலாக பழைய ரசத்தைப் பருகுகிறீர்களா...?

உ.நா:வெட்கம்! நாடாளும் மன்னனுக்கு நாவுக்கு ருசியாக அருந்துவதற்கும் ஒன்றுமில்லையா?

சோ.சொ.வ:என்செய்வேன் பிரபு! நாளைக் காலை நீங்கள் அருந்தப் பருத்திப்பாலும் இல்லையே! அரண்மனைத் தோட்டத்திலிருந்து அருகம்புல் பறித்து வாருங்கள்! அரைத்துக் கொதிக்க வைத்து அருந்தத் தருகிறேன்.

உ.நா:ரசம் அருந்துவது இருக்கட்டும்! நாளைக் காலை அடங்காவாயர் யானையின் காலில் மிதிபட்டு குழம்பாகப் போகிறார்!

உ.நா:ஐயகோ! என் அண்ணனா?

சோ.சொ.வ:அடடா! அவர் உன் அண்ணன் என்பதை மறந்தே விட்டேனே?

உ.நா:நீங்களும் உங்கள் மறதியும்! இப்படித்தான் அன்றொரு நாள் மறந்துபோய் என் தோழி வேம்பரசியைப் போய் அன்பே ஆருயிரே கட்டிக்கரும்பே என்றெல்லாம் அழைத்தீர்கள்.

சோ.சொ.வ:அது மறந்துபோய் அழைக்கவில்லை

உ.நா:பின்னே?

சோ.சொ.வ:ஆமாமா! மறந்து போய் அழைத்தது தான்! மறந்தே போய்விட்டேன்.

உ.நா:அண்ணா! உங்களுக்கா இந்த கதி? அந்தோ! சொல்லச் சொல்லக் கேட்காமல் என்னைச் சோற்றுப்புதூர் மன்னனுக்குத் தாரை வார்த்ததைத் தவிர நீங்கள் எந்தக் குற்றமும் செய்யவில்லையே?

சோ.சொ.வ:உலக்கைச்செல்வி! உனக்கு இங்கு என்ன குறை? பரந்து விரிந்து கிடக்கும் இந்த சோற்றுப்புதூர் சாம்ராஜியத்துக்கே நீ மஹாராணி!

உ.நா:போதும் உங்கள் பெருமை! பரந்து விரிந்து கிடக்கிறதாம்! அடுத்த நாட்டில் எவரேனும் மிளகாயை வறுத்தால் இங்கு கமறுகிறது. நீங்களே கூட மறதியில் அண்டை நாட்டு அந்தப்புரத்துக்குள் சென்று விட்டு கண்டபடி அடிவாங்கிப் புறமுதுகிட்டு ஓடிவந்தீர்கள். இவ்வளவு ஏன்? நான் நந்தவனத்தில் நீராடுவதை அண்டைநாட்டு மன்னர் உப்பரிகையிலிருந்து எட்டிப் பார்க்கிறார்!

சோ.சொ.வ:அவனைத் தவறாக எண்ணாதே! அவனது ரசனை என்னிலும் மோசமானது.

உ.நா:போதும் உங்கள் கேலி! எங்கள் அண்ணனுக்கு விதித்த தண்டனையை ரத்து செய்து ஆணை பிறப்பிக்கப்போகிறீர்களா இல்லையா?

சோ.சொ.வ:ஒருக்காலும் நடக்காது! எனது செங்கோல் வளைந்ததாகச் சரித்திரமேயில்லை.

உ.நா:போதுமே உங்கள் பிரதாபம்! உங்களது செங்கோலை விற்றுத்தானே போன மாதம் அரிசி பருப்பு வாங்கினோம். அதற்குள்ளாகவே மறந்து விட்டீர்களா?

சோ.சொ.வ:சரி, எனது வெண்கொற்றக்குடை சரிந்ததாக வரலாறே இல்லை.

உ.நா:உங்கள் வெண்கொற்றக்குடையில் விரிசல் விழுந்து அதைப் பற்ற வைக்க ஈயம் கிடைக்காமல் பரணிலே தூசி படிந்து கிடக்கிறது மன்னா!

சோ.சொ.வ:நீ என்ன சொன்னாலும் சரி! விதித்த தண்டனையை மாற்ற மாட்டேன். நாளைக்காலையில் அரசவைக்கு ராஜநர்த்தகி வரவில்லையென்றால் அடங்காவாயரை யானைக்காலில் வைத்துக் கொல்வேன் என்று என் வீரத்தின் மீது ஆணையிடுகிறேன்.

உ.நா:அப்பாடா! உங்கள் வீரத்தின் மீது தானே ஆணையிடுகிறீர்கள்? எனக்குக் கவலை விட்டது.

(தொடரும்)

4 comments:

பிரபாகர் said...

கலக்குங்க பாஸ்... சூப்பரா எழுதறீங்க!

பிரபாகர்.

settaikkaran said...

//கலக்குங்க பாஸ்... சூப்பரா எழுதறீங்க!//

மிக்க நன்றி பிரபாகர் அவர்களே!

Ananya Mahadevan said...

ஆமாமா! மறந்து போய் அழைத்தது தான்! மறந்தே போய்விட்டேன்- சூப்பர் சமாளிஃபிகேஷன். கலக்குறீங்க சேட்டை.அல்டிமேட். அந்த நாட்டுலேயும் ரிசஷன் போல இருக்கு ஒரெ தரித்திர பாட்டு. நெக்ஸ்டு எபிசோடுல சுபிட்சமா காமெடி பண்ணுங்க. :)

settaikkaran said...

//ஆமாமா! மறந்து போய் அழைத்தது தான்! மறந்தே போய்விட்டேன்- சூப்பர் சமாளிஃபிகேஷன். கலக்குறீங்க சேட்டை.அல்டிமேட். அந்த நாட்டுலேயும் ரிசஷன் போல இருக்கு ஒரெ தரித்திர பாட்டு. நெக்ஸ்டு எபிசோடுல சுபிட்சமா காமெடி பண்ணுங்க. :)//

நன்றிங்க! இதை முடிச்சிட்டு அலாவுதீனும் அலுமினியத்தட்டும்-னு எழுதுவேன். அதுலே செழிப்போ செழிப்பு தான்!