Monday, February 8, 2010

ஸ்ரேயா ரசிகர்கள் சூளுரை


அண்மையில் சென்னையில் முதலமைச்சருக்கு நடந்த பாராட்டு விழாவில் நடனமாட மறுத்ததற்காக, த்ரிஷா,பாவனா மற்றும் எங்கள் தங்கத்தலைவி ஸ்ரேயா இனிமேல் நடிக்கும் தமிழ்ப்படங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க மாட்டோம் என்று காளி மார்க் அமைப்பினர், மன்னிக்கவும் பெப்ஸி அமைப்பினர் அறிவித்து விட்டதாக அறிந்து தாங்கொணா வேதனையுற்றோம்.

இனிமேல் ஸ்ரேயா "நடிக்கும்" படங்களுக்கு ஒத்துழைப்பு தரமாட்டோம் என்ற முடிவெடுத்திருப்பது, இதுவரை எங்கள் தானைத்தலைவி தனது முந்தைய படங்களில் "நடித்திருக்கிறார்" என்ற பொருளில் இருப்பது விஷமத்தனமானது மட்டுமின்றி, ஆதாரமேயில்லாத பெரும் அவதூறாகவும் கருத வேண்டியிருக்கிறது. ஏதோ போனால் போகிறது என்று எங்களது தலைவி சற்றே நடிக்க முயன்ற "ஜக்குபாய்," படம் பெயரின் பின்பகுதிக்கு மிகவும் பொருத்தமாக, பாயைப் போல சுருண்டு விட்டிருப்பதால், இனி தயாரிப்பாளர்களின் நன்மைகருதி எந்தப் படத்திலும் இனி நடிப்பதில்லை என்று ஏற்கனவே அவர் வெளியிட்டுள்ள அறிக்கையை அனைவருக்கும் நினைவுறுத்த விரும்புகிறேன்.

எனவே, தமிழ்ப்படங்களில் இனி நடிப்பதில்லை என்று பெருந்தன்மையோடு முடிவெடுத்திருக்கிற எங்கள் தங்கத்தலைவியின் சமூகநோக்கையும் பொதுநலத்தில் அவர் கொண்டுள்ள அக்கறையையும் கருத்தில் கொண்டு, அவரது படங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென்று அகில உலக ஸ்ரேயா ரசிகர் மன்றத்தலைவர் சேட்டைக்காரன், தனது மேன்சனில் யாருமில்லாத காரணத்தால் தனது அறைக்குள் தைரியமாக உரக்கச் சத்தமிட்டு,"அறைகூவல்" விடுத்திருக்கிறார்.

இதையும் மீறி ஸ்ரேயாவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீடிக்குமேயானால், அவரது தொண்டர்கள் வருகிற பிப்ருவரி 29-ம் தேதியன்று சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே (போலீஸ் வரும்வரைக்கும்) கருப்பு ரிப்பன் அணிந்து தங்களது கண்டனத்தைத் தெரிவிப்பார்கள் என்று எச்சரிக்கிறோம். எனக்கு 20 உனக்கு 18 படத்தில் ஸ்ரேயா உபயோகப்படுத்திய கருப்பு ரிப்பன்கள் நாளை அதிகாலை 10:30 முதல் 11:30 வரை கண்ணம்மாபேட்டையருகே அங்குலத்துக்கு ஐம்பது ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்படும். விற்பனை போக மீதமிருக்கும் ரிப்பன்களை மீண்டும் தலைவிக்கே அனுப்பினால், இனிவரும் படங்களில் அதில் அவர் குட்டைப்பாவாடை தைத்துக்கொள்வார் என்பதை ரசிகப்பெருமக்கள் நினைவில் கொள்க.

உடல் மண்ணுக்கு; குடல் ஸ்ரேயாவுக்கு!

(அப்பாடா, எப்படியோ மூணு ஸ்ரேயா படம் போட்டாச்சு! இன்னும் 98 படம் போட்டுட்டா, தலைவி பொறந்த ஹரித்வாருக்குப் போயிட்டு வந்த புண்ணியம் கிடைக்கும்! )

12 comments:

Ananya Mahadevan said...

சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது சேட்டை. அடங்குவீங்களா, மாட்டீங்களா?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

சார்.. சார்.. எனக்கு ஒரு ரிப்பன் சார்..

ப்ளிஸ் சார்..

settaikkaran said...

//சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது சேட்டை. அடங்குவீங்களா, மாட்டீங்களா?//

இந்த எடத்துலே ஒரு பஞ்ச் டயலாக் சொல்லிடறேன்; பின்னாலே உதவினாலும் உதவும்:

"இந்தச் சேட்டைக்காரன் அடங்குறவனில்லே; அடக்குறவன்." -கூட எக்கோ எஃபெக்டையும் சேர்த்துப் படிங்க! வயித்துவலி நின்னுடும். நன்றிக்கா!!

settaikkaran said...

//சார்.. சார்.. எனக்கு ஒரு ரிப்பன் சார்..

ப்ளிஸ் சார்..//

யாருப்பா அங்கே? ஐயாவுக்கு ஒரு இன்ச் ரிப்பன் பார்சல்....!

நன்றிண்ணே

விஸ்வாமித்திரன் said...

/தொண்டர்கள் வருகிற பிப்ருவரி 29-ம் தேதியன்று சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே (போலீஸ் வரும்வரைக்கும்) கருப்பு ரிப்பன் அணிந்து தங்களது கண்டனத்தைத் தெரிவிப்பார்கள் என்று எச்சரிக்கிறோம்/
பெப்ரவரி 29 அன்று மழை பெய்யலாம் என்று அண்ணன் ரமணன் சொன்னதால் திட்டத்தை பெப்ரரி 30௦ அன்று வைக்க ஸ்ரேயா அண்ணாநகர் வட்டம் ரசிகர் மன்றம் சார்பாக தலைவரை கேட்டுக்கொள்கிறேன்

settaikkaran said...

//பெப்ரவரி 29 அன்று மழை பெய்யலாம் என்று அண்ணன் ரமணன் சொன்னதால் திட்டத்தை பெப்ரரி 30௦ அன்று வைக்க ஸ்ரேயா அண்ணாநகர் வட்டம் ரசிகர் மன்றம் சார்பாக தலைவரை கேட்டுக்கொள்கிறேன்//

அடாது மழை பெய்தாலும் விடாது ரிப்பன் கட்டும் அடலேறுகள் நாங்கள்! :-))))

நன்றிண்ணே!!!

சென்ஷி said...

ரைட் ரைட்.... :)

settaikkaran said...

// ரைட் ரைட்.... :) //

ஹி..ஹி! நன்றிங்க!!

அகல்விளக்கு said...

//"நடித்திருக்கிறார்" என்ற பொருளில் இருப்பது விஷமத்தனமானது மட்டுமின்றி, ஆதாரமேயில்லாத பெரும் அவதூறாகவும் கருத வேண்டியிருக்கிறது.//

ஆமாம் சேட்டை....

வர வர இவர்கள் எல்லைமீறிப்போய்க்கொண்டிருக்கிறார்கள்...

எனக்கும் என் ஆபிஸ் மக்களுக்கும் சேர்த்து 15 ரிப்பன் முன்னதாக எடுத்து வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்....

போராட்டம் முடிந்து திருப்பித்தந்து விடுகிறோம்...

settaikkaran said...

//ஆமாம் சேட்டை....

வர வர இவர்கள் எல்லைமீறிப்போய்க்கொண்டிருக்கிறார்கள்...//

என்ன பண்ணுறது? நீங்க அகல்விளக்கு; இவங்கெல்லாம் குழல்விளக்கா இருக்காங்க! ஒரு சின்னப்பொண்ணைப் போயி நடிக்கிறாங்கன்னு சொல்லற அளவுக்கு கல்மனசுக்காரங்களா இருக்காங்களே?

//எனக்கும் என் ஆபிஸ் மக்களுக்கும் சேர்த்து 15 ரிப்பன் முன்னதாக எடுத்து வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்....//

உங்களுக்கு இல்லாததா? இலவசமாவே தர்றேன்.

//போராட்டம் முடிந்து திருப்பித்தந்து விடுகிறோம்...//

இந்த டீலிங் எனக்குப் புடிச்சிருக்கு. நன்றிங்க!!!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

இது செல்லாது.... செல்லாது....

அவங்களுக்கு மட்டும் இனாமா?

உங்கள் மீது நாங்கள் ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்ககூடாது?...

settaikkaran said...

//இது செல்லாது.... செல்லாது....

அவங்களுக்கு மட்டும் இனாமா?

உங்கள் மீது நாங்கள் ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்ககூடாது?...//

ஐயையோ! விட்டா ஜெயமோகன்-சாரு சண்டை மாதிரி ஆயிரும் போலிருக்கே...? உங்களுக்கும் இலவசம் தான் அண்ணே! எல்லாருக்கும் இலவசம் தான்! ஜூட்!!