Tuesday, February 23, 2010

பால்டீ-பன் கனவு


அதென்ன பால்டீ, பன் கனவுன்னு கேட்கறீங்களா? நாளு பூராவும் உழைச்சும் ஒரு டீயும், பன்னும் கூட இல்லாம வெறும் வயத்தோட தூங்குறவனோட கனவு என்னவா இருக்கும்? கண்டிப்பா அதுலே அவன் ஹாங்காங்குலேயே, பேங்க்-காக்குலேயோ யார் கூடவாவது டூயட் பாடிக்கிட்டு இருக்க மாட்டான். அவன் கனவுலே தோசை வந்து "பார்த்த ஞாபகம் இல்லையோ?"ன்னு பாடும். இட்டிலி வந்து "வருவியா வரமாட்டியா...வரலேன்னா உன் பேச்சு கா,"ன்னு பாடும். காப்பி டபரா வந்து,"சிரிச்சுச் சிரிச்சு வந்தா சீனாத்தானா டோய்.."னு பாடும். இவன் வயிறே ஒரு எஃப்.எம்.ரேடியோ ஸ்டேஷனா மாறி, எக்கச்சக்கமாப் பாட்டு ஒலிபரப்பாகிட்டிருக்கும்! ஆனா, அதுலே கூட சுத்தமான தமிழிலே யாராச்சும் பேசுவாங்களாங்கிறது சந்தேகம் தான்!

இவனோட பசியாற, இவனோட கனவு நிறைவேற ஒரு நல்ல வழி பொறந்திருக்கு! நாம எல்லாரும் நினைச்சா இன்னும் கொஞ்ச நாளிலே தமிழ்நாட்டுலே எங்கே பார்த்தாலும் சுபிட்சமாயிருக்கும்! வேலையில்லாத்திண்டாட்டம் இருக்காது; தற்கொலைகள் குறைஞ்சு போயிடும்; ஏன், விலைவாசி கூட குறைஞ்சிடும். ரொம்ப முக்கியமானது என்னான்னா, எல்லாரும் கன்னிமாராவுக்கோ, அங்கங்கே இருக்கிற லெண்டிங் லைப்ரரிக்கோ போயி புத்தகம் வாங்கிப் படிக்க ஆரம்பிச்சிருவாங்க! நாடகம், கூத்து எல்லாம் கொடிகட்டிப்பறக்க ஆரம்பிச்சிடும்! இப்படி நிறைய நல்லது நடக்குறதுக்கு வாய்ப்பிருந்தாலும், ஒரே ஒரு பிரச்சினை மட்டும் வரும். அதைக் கடைசியிலே சொல்லுறேன்.

என்ன ஒரே பீடிகையா போடுறானேன்னு நினைக்காதீங்க! இன்னும் இருக்கு! பள்ளிக்கூடம்,கல்லூரியிலே படிக்கிறவங்க வகுப்பிலேருந்து எஸ்கேப் ஆகி காலை,மதிய காட்சி பார்க்கப்போக மாட்டாங்க! அப்படீன்னா என்னா அர்த்தம், வீட்டுலே பொய் சொல்லி பணம் வாங்கிட்டு வர மாட்டாங்க! அதாவது, இனிமேல் வரப்போகிற தலைமுறை பொய்யே பேசாத அரிச்சந்திரன்களாகிற வாய்ப்பிருக்குது. அது மட்டுமில்லை, பள்ளிக்கூடம், கல்லூரி விட்டு வீட்டுக்குத் திரும்பினதும் புத்தகத்தை எடுத்துப் படிக்க ஆரம்பிச்சிடுவாங்க!

தீபாவளி,பொங்கல்,புதுவருஷமுன்னா முன்னே மாதிரி வீட்டுலே முடங்கிக்கிடக்காம எல்லாரும் வெளியே தெருவே போவாங்க; வருவாங்க! கோயில்குளமுன்னு சுத்துவாங்க! அடுத்த தலைமுறைக்கு நல்ல பழக்கவழக்கங்களெல்லாம் வரும்!

சினிமா பார்க்கப்போனா, கதாநாயகன் அறிமுகமாகிறபோது காதை அடைக்கிற மாதிரி விசிலடிக்கிற கூட்டமும் இருக்காது; கட்-அவுட்டுக்கு பாலபிஷேகம் பண்ணுற கூட்டமும் கண்ணுலே தென்பட மாட்டாங்க! பிளாக்குலே டிக்கெட்டா? ஊஹும், பேச்சுக்கே இடமில்லை போங்க! தியேட்டர் இருட்டுலே காதலர்களோட சில்மிஷங்களெல்லாம் சுத்தமா நின்னுபோயிடும்.

அட,அடிமடியிலேயே கை வச்சிட்டியேன்னு கேட்கறீங்களா? பால்-டீ பன் கனவு மட்டும் நிறைவேறினா காதல் சரிபாதி குறைஞ்சிடுமண்ணே! காதல் குறைஞ்சா தோல்வியும் குறையும்; தோல்வி குறைஞ்சா டாஸ்மாக் வியாபாரமும் குறையும்; தற்கொலையும் குறையும்.

இதெல்லாம் நடக்கிற காரியமான்னு கேட்கறீங்களா?

ஏற்கனவே தமிழக திரைப்படத்துறையினர் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிச்சிட்டாங்க! நாம எல்லாருமா சேர்ந்து எக்கச்சக்கமா ’பிட்’ போட்டு, இப்போ நடிகர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இருக்குற சண்டையை எப்படியாவது பெரிசு பண்ணிட்டோமுன்னா, கொஞ்ச வருஷத்துக்காவது புது தமிழ் சினிமாவே வராதுங்க! இன்னும் கொஞ்சம் முயற்சி பண்ணினோமுன்னா, தமிழ் சினிமாவே இல்லாமப் போயிடும். நாம செய்ய வேண்டியதெல்லாம், ஆளுக்கு ஒரு பக்கம் நின்னுக்கிட்டு நடிகருங்களுக்கும், தயாரிப்பாளருங்களுக்கும் உள்ள சண்டையை இன்னும் நல்லா ஊதி ஊதிப் பெருசாக்கிட்டாப்போதும். தமிழ் சினிமா குளோஸ்!

அப்புறம் கமலா தியேட்டரிலே கன்னடப்படம் ஓடும்! தேவியிலே தெலுங்குப்படம் ஓடும்! என்னை மாதிரி ஆளுங்களுக்கு ரெண்டும் ஒண்ணு மாதிரித்தானிருக்கும். இப்பக்கூட "த்ரீ இடியட்ஸ்," இந்திப் படத்தைப் பார்த்தபோது ஒண்ணும் புரியாம "ஃபோர்த் இடியட்,"மாதிரித் தான் உட்கார்ந்திருந்தேன்.

இல்லாட்டிப் பழைய படங்களைத் திருப்பி ரிலீஸ் பண்ணுவாங்க! அப்புறமென்ன, அயோனாக்ஸிலே "ஔவையார்" படத்துக்கு அட்வான்ஸ் புக்கிங் பண்ணணும். அபிராமியிலே "ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி," பார்க்கலாம். நாமெல்லாம் பி.யூ.சின்னப்பா மாதிரி ஹேர்-ஸ்டைல் வச்சுக்குவோம். பொண்ணுங்கெல்லாம் டி.ஆர்.ராஜகுமாரி மாதிரி புருவத்தை வில் மாதிரி வச்சுப்பாங்க! இப்போ "ஹோஸோன்னா," பாட்டை காலர் ட்யூனா வச்சிருக்கிறவங்களுக்குப் போன் பண்ணினா "அவள் செந்தமிழ்த்தேன்மொழியாள்,"னு டி.ஆர்.மஹாலிங்கம் அண்ணாச்சி பாடுவாக! காதலிக்க ஆளு கிடைக்காதவங்க, காதல்லே தோத்தவங்க "சொப்பன வாழ்வில் மகிழ்ந்தே...,"ன்னு காலர் ட்யூனை வச்சிருப்பாங்க! பழைய படங்களைப் பார்த்துப் பார்த்து பசங்க பொண்ணுங்களை "அன்புக்கரசியே, ஆரமுதே,"ன்னு கொஞ்சுவாங்க! பொண்ணுங்கெல்லாம் பாய் ஃபிரண்ட்சுங்களை "ஸ்ஸ்வாமி,"ன்னு அழைப்பாங்க! கவுண்டமணி,வடிவேலு, விவேக் எல்லாரையும் மறந்திட்டு நாம எல்லாரும் காளி.என்.ரத்தினத்தைப் பத்திப் பேசிட்டிருப்போம். புளிமூட்டை ராமசாமி, டி.ஆர்.ராமச்சந்திரன் ரெண்டு பேரோட காமெடியெல்லாம் சூப்பர் ஹிட்டாயிரும். சரோஜாதேவிக்கு யாராவது கோவில் கட்டுனாலும் கட்டுவாங்க!

ஏன் இந்தக் கொலைவெறி? ஒரு துறையே இல்லாம போயி, ஆயிரக்கணக்கானவங்க வேலையில்லாம திண்டாடுவாங்களேன்னு கேட்கறீங்களா? இந்த அஞ்சாறு வருஷத்துலே தமிழ்நாட்டுலே எத்தனை தொழிற்சாலைகள் மூடியிருக்காங்க, எத்தனை நெசவுத்தொழிலாளிகள், எத்தனை விவசாயிகள், எத்தனை தினக்கூலிகள் பிழைக்க வழியில்லாமத் திண்டாடியிருக்காங்க! அப்பல்லாம் நாம கையைக் கட்டிக்கிட்டு வேடிக்கை பார்த்த மாதிரியே இதையும் பார்க்க வேண்டியது தான். ஆனா, அந்த மாதிரியெல்லாம் ஆகாதுங்க!

ரஜினி மராட்டிப்படத்துலே நடிப்பாரு! கமலைப் பத்திச் சொல்லவே வேண்டாம்! எப்படிப் பார்த்தாலும் இங்கே செட்டில் ஆயிருக்கிற நடிகர்,நடிகைங்க அவங்கவங்க பாஷையிலே படத்திலே நடிப்பாங்க! பேல்பூரி சாப்பிட்டுக்கிட்டே நிறைய போஜ்பூரி படம் பார்க்கலாம். ஆக, சினிமாத்துறைக்கும் பெரிய நஷ்டமொண்ணும் ஆகிராது. ஒழுங்காத் தமிழ் பேசுற ஹீரோ,ஹீரோயின் எத்தனை பேருங்க இருக்காங்க இன்னிக்கு?

சரி, தமிழ் சினிமா இல்லேன்னா சுபிட்சம் வந்திருமான்னு கேட்கறீங்களா? ஏன் வராது? ஒரு அப்பா-அம்மா, ரெண்டு குழந்தைங்க இருக்கிற ஒரு சின்னக் குடும்பம் ஒரு மல்ட்டி-ப்ளெக்ஸிலே சினிமா பார்க்கப்போனா குறைஞ்சது ஆயிர ரூபாய் செலவாகும். ஆக, குடும்பத்துக்கு வருஸத்துகு பன்னிரெண்டாயிரம் மிச்சமாகும். சினிமாவைப் பார்த்து அந்த மாடல் கண்ணாடி வேணும், இந்த மாதிரி டிரெஸ் வேணுமுன்னு கேட்கிறது குறையும். இந்த வகையிலே வருசத்துக்கு ஒரு ஐயாயிரம் ரூபாய் மிச்சம். புது சி.டி.வாங்குற கணக்கிலே ஒரு இரண்டாயிரம் சேர்த்துக்கோங்க! எப்படியும் குடும்பத்துக்கு இருபதாயிரத்துலேருந்து முப்பதாயிரம் வரைக்கும் மிச்சம் பிடிக்கலாம். சுபிட்சமா இல்லையா? விலைவாசியும் குறையும்.

வேலையில்லாத்திண்டாட்டம் எப்படி ஒழியும்? முதல்லே தினமும் சினிமா வாய்ப்பு தேடி எழும்பூரிலே வந்து இறங்குறவங்க கூட்டம் சுத்தமா இருக்காது. எல்லாரும் அவங்கவங்க ஊருலே கிடைச்ச வேலையைச் சந்தோசமாப் பார்ப்பாங்க! ஏற்கனவே வந்தவங்களும் அவங்கவங்க படிப்புக்கு ஏத்த மாதிரி ஒரு வேலையைத் தேடிக்கிட்டுப் போவாங்க! மேன்சன் உரிமையாளர்களுக்கெல்லாம் வருசக்கணக்குலே வராம இருந்த பாக்கியெல்லாம் வசூலாகும். சினிமாவிலே சான்ஸ் கிடைக்கலேன்னோ, சினிமாவைப் பார்த்துட்டு வர்ற வழியிலே பாப்கார்ன் சாப்பிட்டுக்கிட்டிருக்கிற பொண்ணு மேலே ஏற்பட்ட காதல் தோல்வின்னோ யாரும் தற்கொலை பண்ணிக்க மாட்டாங்க!

இதுலே ஒரே ஒரு பிரச்சினை இருக்குன்னு சொன்னேனில்லே! அது என்னான்னா, தமிழ் சினிமாவே சுத்தமா இருக்காதுன்னுறதுனாலே, எல்லாரும் டி.வி.சீரியலுக்கு வந்திருவாங்க! இது வரைக்கும் தினமும் சாயங்காலமான விளக்கேத்திட்டு மங்களகரமா சீரியல் பார்த்து அழுதவங்கெல்லாம் நாள் முழுக்க அழுவாங்க! அதுனாலென்ன, பணத்தை தியேட்டருக்கு அழுதுட்டு, பார்த்துப்புட்டு வயித்தெரிச்சலிலே அழுறதுக்கு வீட்டுலே சீரியல் பார்த்துக்கிட்டு அழுறது எவ்வளவோ தேவலை இல்லீங்களா?

அதுனாலே, தமிழ்நாட்டுலே இருக்கிற எல்லா சங்கங்களும் ஆளுக்கு ஒருத்தரை ஆதரிச்சு, இன்னொருத்தரைத் திட்டி போஸ்டர் அடிச்சு,அறிக்கை விட்டு, இவங்க சண்டையை இப்படியே ஒரு ரெண்டு வருஷம் இழுத்தடிச்சோமுன்னா தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி ஜப்பானை மிஞ்சிடும். பார்த்துட்டேயிருங்க! முதல்லேருந்து ஒருவாட்டி திரும்பப் படிச்சுப் பாருங்க! இதெல்லாம் தமிழ்நாட்டுலே நடக்கணுமுன்னா இவங்க சண்டை நீடிக்கணுமுன்னு எல்லாரும் சாமியை வேண்டிக்கோங்க!

பால்டீ-பன் கனவு பலிக்குங்களா?

30 comments:

Rekha raghavan said...

//இவங்க சண்டை நீடிக்கணுமுன்னு எல்லாரும் சாமியை வேண்டிக்கோங்க!

பால்டீ-பன் கனவு பலிக்குங்களா?

சாமி கடவுளே இந்த பால்டீ-பன் கனவை மட்டும் பலிக்க வச்சுட்டேன்னா உனக்கு நூத்திஎட்டு தேங்கா உடைக்கிறேன்!

ரேகா ராகவன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இவ்வளவு நல்லதெல்லாமா நடக்கு ம்!!!!

Ananya Mahadevan said...

உன்னோட கற்பனைத்திறன் அநியாயமா தெறிச்சு ஓடறதே! வெரி ஆஃப் த டூ மச்! வழக்கம்போல அசத்தல் போ!

பனித்துளி சங்கர் said...

ஆஹா இதுவும் சற்று யோசிக்கவேண்டிய விசயம்தான் . அருமையான பதிவு வாழ்த்துக்கள் !

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

இதுக்கு பேசாம இப்படி பண்ணிடலாம்...
என்னைய முதலமைச்சரா ஆக்குங்க...

ஒரு பஞ்ச் டயலாக்குக்கு ஒரு கோடி , எனக்கு கட்டனும் என்று ஒரு சட்டம் கொண்டுவந்துவிடுகிறேன்..
1 வருசத்தில , எல்லா சினிமாக்காரனுகளும் , அன்ன காவடி ஆகிடுவானுக..

அன்னகாவடி , பட்டாபட்டிக்கு புடிக்காது சொல்லி
அவனுகளை ஆப்கானிஷ்தானுக்கு நாடு கடத்திடுவோம்..

சரின்னா , சட்டு புட்டுனு , பிரச்சாரத்துக்கு ரெடியாகுங்க...

பால்டீ-பன் கனவு என்ன.. ஓவல்டீ-பன் கனவுக்கு கூட்டிக்கொண்டி செல்ல
பட்டாபட்டி ரெடி.. நீங்க ரெடியா?

சைவகொத்துப்பரோட்டா said...

பால்டீ-பன் கனவு, பலிச்சா நமக்கு இதன் அளவு சேமிக்க முடியமா, பலிக்கட்டும் இந்த கனவு.

Unknown said...

nice post

ஜெட்லி... said...

பலிக்க வாய்ப்பில்லை..... :((
நான் பாவும்...

Chitra said...

இந்த கனவு பலிச்சா, உங்களுக்கு பால் டீ பன் எல்லாம் கொடுக்க போறாங்களாம்.

மங்குனி அமைச்சர் said...

ராசா, எந்தவூறு ராசா நீங்க? உங்க வீட்டு பக்கம்லாம் இந்த கொசு மருந்து அடிக்கிற வண்டி வராதா?
கொசு கடினால நைட் தூங்கலைன இப்படித்தான்பா யோசிக்கதொனும். கொசு வலை கட்டிட்டு தூங்கு ராசா, நாங்கல்லாம் பாவம்.

settaikkaran said...

//பால்டீ-பன் கனவு பலிக்குங்களா?

சாமி கடவுளே இந்த பால்டீ-பன் கனவை மட்டும் பலிக்க வச்சுட்டேன்னா உனக்கு நூத்திஎட்டு தேங்கா உடைக்கிறேன்!//

ஹா..ஹா! ரொம்ப நன்றி ரேகா ராகவன் அவர்களே! என்னோட பங்குக்கு அம்பத்து நாலு தேங்காய் நானும் தருவேன். :-)))

settaikkaran said...

//இவ்வளவு நல்லதெல்லாமா நடக்கும்!!!!//

இதுக்கு மேலேயும் நடக்கும் முத்துலட்சுமி அவர்களே! நிறைய கட் பண்ணிட்டேன். மிக்க நன்றிங்க...!!

settaikkaran said...

//உன்னோட கற்பனைத்திறன் அநியாயமா தெறிச்சு ஓடறதே! வெரி ஆஃப் த டூ மச்! வழக்கம்போல அசத்தல் போ!//

நன்றி அபுதாபி அக்கா! எல்லாம் பூவோட சேர்ந்த நார் கதை தான்...!

settaikkaran said...

//ஆஹா இதுவும் சற்று யோசிக்கவேண்டிய விசயம்தான் . அருமையான பதிவு வாழ்த்துக்கள் !//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க...அடிக்கடி வாங்க...!

settaikkaran said...

//இதுக்கு பேசாம இப்படி பண்ணிடலாம்...
என்னைய முதலமைச்சரா ஆக்குங்க...//

இதைத் தான் எல்லாரும் சொல்லுறாங்க..முதல்லே ஒரு சின்னமும் கொடியும் வாங்கிடுங்க அண்ணே

//ஒரு பஞ்ச் டயலாக்குக்கு ஒரு கோடி , எனக்கு கட்டனும் என்று ஒரு சட்டம் கொண்டுவந்துவிடுகிறேன்..
1 வருசத்தில , எல்லா சினிமாக்காரனுகளும் , அன்ன காவடி ஆகிடுவானுக..//

ஆஹா! இது என் அறிவுக்குப் புலப்படலை பார்த்தீங்களா...? அதுக்குத் தாண்ணே நீங்க வேணுங்கிறது....

//அன்னகாவடி , பட்டாபட்டிக்கு புடிக்காது சொல்லி அவனுகளை ஆப்கானிஷ்தானுக்கு நாடு கடத்திடுவோம்..//

நாடு கடத்துறதுக்கு நீங்க தேர்ந்தெடுத்த லொக்கேஷன் சூப்பர்....!

//சரின்னா , சட்டு புட்டுனு , பிரச்சாரத்துக்கு ரெடியாகுங்க...

பால்டீ-பன் கனவு என்ன.. ஓவல்டீ-பன் கனவுக்கு கூட்டிக்கொண்டி செல்ல
பட்டாபட்டி ரெடி.. நீங்க ரெடியா?//

வருங்கால முதல்வர் பட்டா பட்டி வாழ்க....
வருங்கால முதல்வர் பட்டா பட்டி வாழ்க....
வருங்கால முதல்வர் பட்டா பட்டி வாழ்க....

settaikkaran said...

//பால்டீ-பன் கனவு, பலிச்சா நமக்கு இதன் அளவு சேமிக்க முடியமா, பலிக்கட்டும் இந்த கனவு.//

கொஞ்சம் அவசரத்துலே எழுத்திப்புட்டேனுங்க...இல்லாட்டி அமர்த்யா சென் கிட்டே கேட்டு கூட கொஞ்சம் பிட் போட்டிருக்கலாம்...ரொம்ப நன்றிண்ணே...!

settaikkaran said...

//nice post//
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி பேனா மூடி...அடிக்கடி வாங்க..

settaikkaran said...

//பலிக்க வாய்ப்பில்லை..... :((
நான் பாவும்...//

விடுங்க அண்ணே, இது வரை யாரோட கனவு பலிச்சிருக்கு, இது பலிக்க...தைரியமா இருங்கண்ணே...! அடிக்கடி வாங்க, நன்றி...

settaikkaran said...

//இந்த கனவு பலிச்சா, உங்களுக்கு பால் டீ பன் எல்லாம் கொடுக்க போறாங்களாம்.//

புரியுது..புரியுது...என்னை சர்க்கார் ஆஸ்பத்திரியிலே அனுமதிக்கப் போறாங்கன்னு சொல்றீங்க தானே? :-)))

ஹி..ஹி ! ரொம்ப நன்றிங்க...!

settaikkaran said...

//ராசா, எந்தவூறு ராசா நீங்க? உங்க வீட்டு பக்கம்லாம் இந்த கொசு மருந்து அடிக்கிற வண்டி வராதா?//

என்னங்க பண்ணுறது...? இங்கேயும் மங்குனி அமைச்சருங்க பாடு தாங்கலீங்க....! கொசுவே தேவலாம் போலிருக்கு....

//கொசு கடினால நைட் தூங்கலைன இப்படித்தான்பா யோசிக்கதொனும். கொசு வலை கட்டிட்டு தூங்கு ராசா, நாங்கல்லாம் பாவம்.//

நாங்களும் இப்போ வலையிலே தானே இருக்கிறோம்? :-)))))))))

வலை இல்லாட்டி புகை போட்டாக் கூட போதுமண்ணே! (எங்கேயோ புகையுற வாசனை வரலே...?)

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிண்ணே...! அடிக்கடி வாங்க...!!

ஹேமா said...

நாட்டு நடப்பு போற போக்கில இதெல்லாம் சரியாகும்.உங்க கனவு பலிக்கும்ன்னு நினைக்கிறீங்க !

settaikkaran said...

//நாட்டு நடப்பு போற போக்கில இதெல்லாம் சரியாகும்.உங்க கனவு பலிக்கும்ன்னு நினைக்கிறீங்க !//

கனவு காணுங்கள்னு பெரியவங்க சொல்லுறாங்க! இதுவும் ஒரு தினுசான கனவு தான். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க!!

டக்கால்டி said...

முடியல சார்.
தலைப்பை போலவே இடுகையும் வித்தியாசம் மற்றும் குசும்புடன் இருக்கு.

அண்ணாமலையான் said...

ஹா ஹா ஹா ஹா தூள் கெளப்புங்க...

settaikkaran said...

//முடியல சார். தலைப்பை போலவே இடுகையும் வித்தியாசம் மற்றும் குசும்புடன் இருக்கு.//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி டக்கால்டி அவர்களே! அடிக்கடி வாங்க!!

settaikkaran said...

//ஹா ஹா ஹா ஹா தூள் கெளப்புங்க...//

ஆஹா! வாங்க வாங்க! நன்றி அண்ணாமலையாரே! :-))

Unknown said...

நல்லா இருக்கு பாஸூ.. இப்பவே ரெண்டு போஸ்டருக்கு ஆர்டர் குடுத்திருவோம்...

settaikkaran said...

//நல்லா இருக்கு பாஸூ.. இப்பவே ரெண்டு போஸ்டருக்கு ஆர்டர் குடுத்திருவோம்...//

இதை...இதைத்தான் நான் எதிர்பார்த்தேன். எள்ளுன்னா எண்ணையா இருக்கீங்க பாருங்க! :-))
மிக்க நன்றி முகிலன் அவர்களே!!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

என்னாப்பு.. கடை,

இன்னைக்கு லீவா ?.

Starjan (ஸ்டார்ஜன்) said...

நம்ம கனவெல்லாம் பெரிய அளவுல தான்.

கனவு காணுங்கள் _ அப்துல்கலாம்.

இந்த மாதிரி நடந்திட்டா நாட்டில் பிரச்சனையே இல்லதானே!

சேட்டை தான்.