Monday, February 22, 2010

அமெரிக்காவில் ஒரு அம்மா


"குட்டி" படத்திற்கு விமர்சனம் எழுதுகிறேன் பேர்வழி என்று ஒரு கூகிள் குழுமத்தில் ஸ்ரேயாபுராணம் பாடியிருந்தேன். போதாக்குறைக்கு ஸ்ரேயாவின் ஒரு படத்தையும் போட்டிருந்தேன். அதற்கு முதலில் வந்த பதில் இது தான்:

"உருப்படாதவன், உன் மூஞ்சிக்கு இது வேறயா? கண்ணாடியில உன் முக்த்தைப் பாரு!அப்புறம் உனக்குப் பொருத்தமா பாரு!!"

இதற்கெல்லாம் சளைத்தவனா நான்? உடனே பதிலடி கொடுத்தேன்:

"எனக்குப் பொருத்தமா பார்க்கணுமுன்னா, முதல்லே பாஸ்போர்ட் எடுக்கணும். உகாண்டா போக வேண்டியது தான்."

அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் பதில் வந்தது.

"அடப்பாவி! சிரிச்சு வயத்தை வலிக்குது!"

சங்கிலித்தொடராக நிகழ்ந்த இந்த கலாய்ப்பில் "உனக்காக அமெரிக்காவில் பெண் பார்த்து வைத்திருக்கிறேன். சீக்கிரமாக பாஸ்போர்ட் எடு!" என்று மிகவும் கரிசனத்தோடு அல்லது அனுதாபத்தோடு ஒரு மடல் வந்து விழுந்தது.

"அமெரிக்காவா? உங்கள் வீட்டிலிருந்து ஆஞ்சலினா ஜோலி வீடு எவ்வளவு தூரம்?" என்று ஆவலைக் கட்டுப்படுத்த முடியாமல் கேட்டேன். (அப்போது ஆஞ்சலினா ஜோலியும் பிராட் பிட்டும் விவாகரத்து செய்யப்போகிறார்கள் என்ற செய்தி என் காதில் தேன் வந்து பாய்ந்தது போல பரவியிருந்த சமயம்)

"உன்னை ஏர்போர்ட்டில் துப்பாக்கியோடு வரவேற்கிறேன்," என்று பதில் வந்தது.

யார் இவர்? இந்த சேட்டைக்காரனோடு சரிக்குச் சமமாகக் கலாய்க்கிறவர் யாராக இருக்கலாம் என்று கேட்கத்தோன்றுகிறதா? இதோ, கீழே நான் தந்துள்ள சுட்டிகளைச் சொடுக்கிப்படியுங்களேன்:

அக்கினிப்பிரவேசம்

சீதாம்மாவின் குறிப்பேடு ஜெயகாந்தன்


சீதாலட்சுமி சுப்ரமணியன்! கொஞ்சம் அறிமுகமானவர்களுக்கும் "சீதாம்மா." எழுபத்தி ஐந்து வயது! வசிப்பது அமெரிக்காவில்! வாழ்வது மனதளவில் தமிழர்களோடு! இவர்களுக்கு இணையத்தில் நூற்றுக்கணக்கான பிள்ளைகள் இருக்கலாம்; ஆயிரக்கணக்கில் கூட இருக்கலாம். ஆனால், நான் தான் சுட்டிப்பயல்!

இந்தச் சேட்டைக்காரனுக்கு யாரோ செல்லம் கொடுத்துக் கெடுக்கிறார்களோ என்ற சந்தேகமிருந்தால், அம்மா மீது பழி போடலாம். "தாயே யசோதா உந்தன் ஆயர்குலத்துதித்த மாயன் கோபாலகிருஷ்ணன் செல்லும் ஜாலத்தைக் கேளு," என்று கண்ணனைப் பற்றி புகார் சொன்னபோது யசோதை கேட்டமாதிரியே முகத்தளவில் கோபமும் உள்ளளவில் பெருமிதமாகக் கேட்டாலும் கேட்பார்கள் அம்மா.

"எட்டயபுரத்துக்காரி," என்பதில் அம்மாவுக்குப் பெருமை. பக்கத்து ஊர்க்காரனான எனக்கே இருக்கிறபோது அம்மாவுக்கு இருக்காதா? அந்தக் காலத்து முதுகலை தமிழ் இலக்கியம்! அம்மாவைப் பற்றி நான் அதிகம் எழுத விரும்பவில்லை. இந்த இரண்டு கட்டுரைகளையும் படித்தால் எவராலும் ஒரு முடிவுக்கு வர முடியும்.

நான் செல்லப்பிள்ளை மாதிரி! அம்மா சிரத்தையாக சமையல் பண்ணிக்கொண்டிருக்கும்போது கூடத்தில் ஓடிப்பிடித்து விளையாடுபவனாக இருப்பது தான் அம்மாவுக்குப் பிடிக்கும் அல்லவா?

சிந்தனையூற்றாக எழுதித்தள்ளுகிற அம்மா, என்னை மட்டும் சின்னப்பிள்ளையைச் சீண்டுவது போல சிரித்து விளையாடுவார். குழந்தை எதையாவது கிறுக்கினால் அதைப் பார்த்துக் குதூகலிக்கிற அம்மாவாகி உச்சிமோந்து மெச்சுவார். அடிக்கடி காதைப் பிடித்து முறுக்குவதும் உண்டு.

எந்தப் புத்தகம் படிக்க வேண்டும் என்று பட்டியல் தருவார். எட்டு வருடங்களில் வாரத்திற்கு இரண்டு முறையேனும் நான் போய்வருகிற காளிகாம்பாள் கோவில் குறித்து நான் கேள்விப்படாத தகவல்களைச் சொன்னவர். "முதலில் மனிதனாயிரு; ஜாதிமதமெல்லாம் உனக்கெதுக்கு?" என்று சர்வசாதாரணமாகக் கேட்டு ஒரு நிமிடத்தில் என்னை உலுக்கியவர்.

முகம் பார்த்திராத ஒரு அம்மா! ஆனால் நம் எல்லாருக்கும் பக்கத்தில் உட்கார்ந்து சோறு ஊட்டி விடுவது போல ஒரு உணர்வு, அவர்களது எழுத்துக்களை வாசிக்கும்போது ஏற்படுகிறது.

"எதிர்நீச்சல்," திரைப்படத்தில் மேஜர் சுந்தர்ராஜன் தன்னை "படவா ராஸ்கல்," என்று சொல்ல வைப்பதற்காக, நாகேஷ் இறுதிக்காட்சியில் ஒரு நாடகம் ஆடுவாராமே? அதே மாதிரி அம்மாவின் "அடப்பாவி"யைக் கேட்காவிட்டால் உறக்கம் வர மாட்டேனென்கிறது எனக்கு.

நேரில் பார்த்தால் சொல்வார்களா தெரியவில்லை! ஆனால் ஒவ்வொரு முறை எழுத்தில் பார்க்கிறபோதும், நகரவாழ்க்கையின் அவலங்களையெல்லாம் ஒரு கணத்துக்கு ஒத்திவைத்து விட்டு நான் மனம் விட்டுச் சிரிப்பேன்.

15 comments:

சைவகொத்துப்பரோட்டா said...

சுட்டிகளை படித்து விட்டு வருகிறேன் சேட்டைக்கார நண்பா.

Chitra said...

அம்மாவின் பாசமழையில் சேட்டைக்காரன். வாழ்த்துக்கள்.

Ananya Mahadevan said...

அருமை சேட்டை. அம்மாவின் சுட்டிகளை படிக்க ஒரு நல்ல சந்தர்ப்பம். வாழ்க அவர் தாய்மை!

Paleo God said...

ரசித்தேன் நண்பரே..:))

------

விரைவில் ரவுடி ஆக வாழ்துகள்..:))

Thamiz Priyan said...

Good post!

பிரபாகர் said...

அம்மாவைப்பற்றி சொன்ன விஷயங்கள் நீங்கள்
ஏற்கனவே சொன்னதுதான் என்றாலும் இன்னும் பல உபரியான தகவல்கள். இவர்களைப் போன்ற பெரியவர்களின் ஆசிகள் நம் வாழ்வை நன்கு செம்மைப்படுத்தும் நண்பா! இன்னொரு மகனும் இருக்கிறான் அவர்களின் பாசத்தை வேண்டி.

பிரபாகர்.

நஜீபா said...

தீராத விளையாட்டுப் பிள்ளையான சேட்டையை விரைவில் அம்மா திருத்துவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். :-)))

settaikkaran said...

//சுட்டிகளை படித்து விட்டு வருகிறேன் சேட்டைக்கார நண்பா.//


ஓ! தாராளமாக! நன்றிண்ணே!!

settaikkaran said...

//அம்மாவின் பாசமழையில் சேட்டைக்காரன். வாழ்த்துக்கள்.//

நானும் அந்த மழையில் நனைந்து கொண்டிருக்கிறேன் என்பதே உண்மை. நன்றிங்க!

settaikkaran said...

//அருமை சேட்டை. அம்மாவின் சுட்டிகளை படிக்க ஒரு நல்ல சந்தர்ப்பம். வாழ்க அவர் தாய்மை!//

நன்றி! அவரது அன்புக்கு நீங்களும் பாத்திரமானவர் அல்லவா? அதுவும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

settaikkaran said...

//ரசித்தேன் நண்பரே..:))//

மிக்க நன்றி!

//விரைவில் ரவுடி ஆக வாழ்துகள்..:))//

எல்லாரும் பார்த்துக்கோங்க! நானும் ஜீப்புலே ஏறிட்டேன்; நானும் ரவுடிதான்

settaikkaran said...

//Good post!//

நன்றி தமிழ் ப்ரியன் அவர்களே! அடிக்கடி வாங்க! :-)

settaikkaran said...

//அம்மாவைப்பற்றி சொன்ன விஷயங்கள் நீங்கள்
ஏற்கனவே சொன்னதுதான் என்றாலும் இன்னும் பல உபரியான தகவல்கள்.//

நியாயப்படி இந்தப் பதிவில் உங்களது பெயரும் இடம்பெற்றிருக்க வேண்டும். உங்கள் விருப்பப்படி அம்மா எழுதிய இழைகளை அனுப்ப முயன்றபோது தான் இதை ஒரு பதிவாகவே எழுதினாலென்ன என்ற எண்ணம் ஏற்பட்டது. ஆக, நான் நன்றி சொல்ல வேண்டியது உங்களுக்கும் தான்

//இவர்களைப் போன்ற பெரியவர்களின் ஆசிகள் நம் வாழ்வை நன்கு செம்மைப்படுத்தும் நண்பா! இன்னொரு மகனும் இருக்கிறான் அவர்களின் பாசத்தை வேண்டி.//

நீங்கள் சொல்வது முற்றிலும் சரி! மிக்க நன்றி பிரபாகர் அவர்களே!

settaikkaran said...

//தீராத விளையாட்டுப் பிள்ளையான சேட்டையை விரைவில் அம்மா திருத்துவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். :-)))//

சரி,சரி, என்னோட மொக்கையைக் கொஞ்சம் குறைச்சுக்கணுமுன்னு இன்டைரக்டா சொல்ல வர்றீங்க அவ்வளவு தானே? :-))) நன்றி அக்கா!

Mahi_Granny said...

ரொம்பவும் கொடுத்து வைத்தவர் தான் நீங்கள். இந்த வயதிலும் அருமையாக எழுதுகிறார்கள். என் பாராட்டை சொல்லி விடுங்களேன்