![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhq058GX7Nru_ou-spRzt5XqRAplJuD3wwObAwyJuso3qI2JVYZEkz7VdGTZM3u1f0IwSuJehOL7Afis3OTT_aNbcpl1p7em0BKzyR4vWXsrBhPtNc6MLDGmTZM2G9rbmxWq86Gvry69gM/s200/daddy.jpg)
அம்மா என்றால் அன்பு; அப்பா என்றால்...? அழுத்தமாக இருக்குமோ? அப்பாவாக இருப்பதற்கு கண்டிப்பு என்பது மிகவும் அத்தியாவசியமான தகுதி என்ற மாயை ஆண்களை ஆட்டுவிக்கிறது போலும். சில குடும்பங்களில் அம்மா எப்பொழுதும் போல இளகிய மனதுடன், பிள்ளைகளுக்காகப் பரிந்து பேசுகிற பலவீனமான வழக்குரைஞராக இருப்பதும், தகப்பனார்கள் கண்டிப்பான நீதிபதிகளைப் போல தங்களைக் காட்டிக்கொள்ள மிகவும் மெனக்கெட்டு முயற்சிப்பதும் கண்கூடு. ஆனால், நிறைய அப்பாக்களுக்கு தங்களது கண்டிப்பானவன் என்ற அவதாரம், பிள்ளைகளிடமிருந்து விலக்கி வைத்து விட்டதோ என்ற ஒருவிதமான குற்ற உணர்ச்சியை அல்லது உறுத்தலை உண்டாக்கி விடுகிறதோ என்று சில முகங்களைப் பார்த்து ஒரு எண்ணம் ஏற்படுவதுண்டு. இன்று காலையில் எதையோ தேடியபோது, அக்கா திருமணத்தில் எடுத்த புகைப்படத்தைப் பார்த்ததும், வழக்கத்துக்கு மாறாக அப்பாவின் முகத்தில் எனது கண்கள் அதிக நேரம் நிலைத்தன.
பிள்ளைப்பருவத்திலே ஒரு நாள் இரவு! அப்பாவின் விரல்கள் தலைகோதி விட்டுக்கொண்டிருந்தன.
"என்னப்பா?"
"தூக்கத்துலே உளறிக்கிட்டு இருந்தே!"
"நான் இன்னும் தூங்கவேயில்லியேப்பா!"
அரையிருட்டில் அப்பா எழுந்து போவதைப் பார்த்தபோது, அன்று காலையில் அவரிடம் அடிவாங்கியதை அவரது சொறசொறப்பான விரல்கள் அளித்த சுகத்துக்காக மறந்துவிடலாம் போலிருந்தது. உறங்குவது போல நடித்திருந்தால் இன்னும் சிறிது நேரம் அப்பா தொடர்ந்து கோதி விட்டிருப்பாரோ என்று கூடத் தோன்றியது. ஆனால், நாட்பட நாட்பட...
ஒவ்வொரு இரவும் கால்மேல் கால் போட்டபடி, அவர் பீடி பற்றவைத்துக்கொண்டு திண்ணையில் உட்கார்ந்திருப்பது தெருக்கூத்து ராஜாக்கள் போடுகிற வேஷத்திற்குச் சற்றும் சளைத்ததல்ல என்று புரிய சில காலம் பிடித்தது. பிள்ளைகள் வளர்ந்ததும் அப்பாவை விட்டு நிறையவே விலகி விடுகிறார்கள் போலத்தோன்றுகிறது. அதன் காரணமாகத் தான் அவர்களிடம் காணப்படுகிற எரிச்சல்களும், கோபங்களும்....
"சின்னப்புள்ளை...சோத்தை ஊட்டுறிகளோ?" அப்பாவின் இந்தக் கேள்வியில் ஏளனத்தை விடவும் ஏக்கமே அதிகம் இருக்குமோ? எவ்வளவு வளர்ந்தாலும் அம்மாவின் அண்மையில் பிள்ளைகள் மகிழ்ச்சியாக இருக்கிறதைப் பார்க்கிற அப்பாக்கள், ஏன் ஆணாகப் பிறந்தோம் என்று யோசிப்பார்களோ?
அண்ணன்,அக்கா,தங்கை,அம்மாவென்று கலகலவென்று பேசிக்கொண்டிருக்கையில் அப்பா செருப்பைக் கழட்டுகிற சத்தம் கேட்டதும் வீட்டில் அமைதி கும்மிருட்டாய்ப்படரும். குடையை மாட்டி விட்டு உள்ளே போகிற அப்பா, அறையை விட்டு வெளியே வருகிறபோது அவர் அம்மாவைப் பார்க்கிற பார்வையில் கொஞ்சம் பொறாமையிருப்பதைக் கவனித்திருக்கிறேன். ஆனாலும் அடர்த்தியான மீசை, இறுக்கமான முகம், கணீரென்ற குரல் என்று இயல்பாக அமைந்துவிட்ட ஒப்பனைக்குள்ளே பிள்ளைகளின் விரல்தொட வேண்டும் என்ற ஒரு குழந்தைத்தனமான ஏக்கம் அவருக்கு இருந்து வந்திருக்க வேண்டும்.
சென்ற ஞாயிறன்று, வழக்கம்போல தெருவில் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருந்த அந்த சிறுவன் வீசிய வீச்சில் அவன் கையிலிருந்த மட்டை நழுவிப்பறந்துபோய், வேகமாக வந்த ஒரு கால்டாக்ஸியின் முன்பக்கக் கண்ணாடியை உடைத்தது. அடுத்த சில நிமிடங்கள் தெருவே அல்லோலகல்லோலப்பட்டது. ஏதோ பணம் கொடுத்து விஷயத்தை சுமுகமாக முடித்திருப்பார்கள் போலும். ஆனால், விளையாட்டு வினையானதோடு வெட்டிச்செலவையும் ஏற்படுத்தி விட்டதே என்று அந்தச் சிறுவனின் அப்பாவுக்கு ஆற்றாமையும் கோபமும் ஏற்பட, எல்லாரும் பார்த்துக்கொண்டிருக்கவே அவனை நையப்புடைத்துக்கொண்டிருந்ததைப் பார்த்தேன். ஒரு மணிநேரம் கழித்து அந்த சிறுவன் கதவருகேயே நின்று கொண்டிருப்பதையும் பார்த்தேன். ஆனால், வெளியே சென்றுவிட்டுத் திரும்பியபோது அவனைக் காணவில்லை.
கண்டிப்பாக அவன் வீட்டுக்குள் இருப்பான் என்று தெரியும். இன்னொன்றும் தெரியும், அந்தச் சிறுவன் அயர்ந்து உறங்கியதும், உறக்கம் வராத அவனது அப்பா எழுந்து வந்து அடித்த கையாலேயே அவனது தலைமுடியைக் கோதிவிட்டிருப்பார்; அவனது தூக்கத்தைக் கலைக்காமல் உச்சிமோந்திருப்பார். வாய்விட்டு மன்னிப்புக் கேட்பதற்கு அப்பா என்ற அழுத்தம் இடமளிக்காது என்பதால் குழந்தையின் விரல்களைப் பிடித்துக்கொண்டு அப்படியே அவனது முகத்தை இருட்டை ஊடுருவியபடி வெறித்துப் பார்த்திருந்திருப்பார்.
அப்பாக்கள் ஒரு விஷயத்தில் மிகவும் சிக்கனமானவர்கள்; இரண்டு சொட்டுக்கண்ணீர் என்றாலும் அதை யாருக்கும் தெரியாமல் இருட்டில் தான் சிந்துவார்கள். என் அப்பாவைப் போல!
Tweet |
26 comments:
சூப்பர்
உண்ர்வுபுர்வமான உண்மை
அருமையான பதிவு.நான் இப்போது உண்ர்ந்து கொண்டு உள்ள நிஜம்.
தொடருங்கள்
// சூப்பர் //
நன்றி அண்ணாமலையாரே! :-)
//உண்ர்வுபுர்வமான உண்மை அருமையான பதிவு.நான் இப்போது உண்ர்ந்து கொண்டு உள்ள நிஜம். தொடருங்கள்//
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! அடிக்கடி வாருங்கள்!
நெகிழ்ச்சியான பதிவு.
//அப்பாக்கள் ஒரு விஷயத்தில் மிகவும் சிக்கனமானவர்கள்; இரண்டு சொட்டுக்கண்ணீர் என்றாலும் அதை யாருக்கும் தெரியாமல் இருட்டில் தான் சிந்துவார்கள். என் அப்பாவைப் போல!//
ஆத்தாடி, டச் பண்ணிடீங்க தல.
குடையை மாட்டி விட்டு உள்ளே போகிற அப்பா, அறையை விட்டு வெளியே வருகிறபோது அவர் அம்மாவைப் பார்க்கிற பார்வையில் கொஞ்சம் பொறாமையிருப்பதைக் கவனித்திருக்கிறேன். ஆனாலும் அடர்த்தியான மீசை, இறுக்கமான முகம், கணீரென்ற குரல் என்று இயல்பாக அமைந்துவிட்ட ஒப்பனைக்குள்ளே பிள்ளைகளின் விரல்தொட வேண்டும் என்ற ஒரு குழந்தைத்தனமான ஏக்கம் அவருக்கு இருந்து வந்திருக்க வேண்டும்.
............ யாரு இதை எழுதியது? பதிவர்களுக்கு ஜோசியம் சொல்லும் சேட்டைக்காரனா?
அங்கே சிரிக்க வச்சிட்டு, இப்போ நெகிழ வச்சிட்டீங்களே. போதா குறைக்கு, என் அப்பாவின் நினைவுகளை வேற கிளறி விட்டுட்டீங்க.
பதிவு ரொம்ப நல்லா இருக்குங்க.
சேட்டை.. சூப்பர் பதிவு..
( குழந்தைகள் அன்புக்கு கட்டுப்பட்டவர்கள்.. அன்பாலே அவர்களை நல்வழிப்படுத்த முடியும் ..நல்ல உதாரணம் என் தந்தையார்..இதுவரை அடித்ததில்லை..எனக்கு இன்றளவும் அவர் மேல் மரியாதை...
பிறகு தந்தையர், குழந்தைகளை அடிப்பது ஏன் ?
எனக்கென்னவோ, பெரியவர்களின் கோபத்திற்கு வடிகாலாக குழந்தைகளை பயன்படுதுகின்றரோ என்ற ஐயப்பாடு..
குழந்தைகளை அடிப்பவர் , எங்காவது பெரியவர்களை அடிப்பதை
பார்த்திருக்கிறீர்களா?..)
என்னோட பாலிஸி , குழந்தைகளை அடிப்பதில்லை என்பது..
என்னுடைய அண்ணன், அவர் குழந்தையை அடித்ததால் , என்னுடன் 2 வருடங்களாகப் பேசுவதில்லை...
ஏன்னா?
நான் திருப்பி, என் அண்ணனை அடித்ததால் சார்...
எனவே குழந்தைகளை அன்பால் கட்டிப்போடுங்கள்... வன்முறையை உங்களைவிட பெரியவர்களிடம் காட்டுங்கள்.. பதில் கிடைக்கும்..
சாரி சார்.. பின்னூட்டம் கொஞ்சம் பெரியதாகிவிட்டது..
உங்களுக்கு எங்கெங்கு கத்திரி வைக்க வேண்டுமோ , வைத்துக்
பப்ளிஸ் செய்து கொள்ளவும்.
நன்றி...பட்டாபட்டி
நல்லா இருக்கு சேட்டை..
வெளுத்து வாங்கற அம்மாக்கள் சிலரை பாத்திருக்கேன்..அவங்க அடிச்சிட்டு அடுத்த மணி நேரம் முழிச்சிருக்கும்போதே மடியில் போட்டு கொஞ்சரதை பாத்திருக்கேன்.. :)
//நெகிழ்ச்சியான பதிவு.//
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி துபாய் ராஜா அவர்களே
//ஆத்தாடி, டச் பண்ணிடீங்க தல.//
ஹி..ஹி! மிக்க நன்றி சைவக்கொத்துப்பரோட்டா அவர்களே!ஒரு ஃப்ளோவிலே வந்திருச்சு!
//........... யாரு இதை எழுதியது? பதிவர்களுக்கு ஜோசியம் சொல்லும் சேட்டைக்காரனா?//
ஆமாங்க சித்ரா அவர்களே! சேட்டைக்காரனுக்கும் அப்பப்ப சென்டிமென்ட் வந்துருதே, என்ன பண்ண?
//அங்கே சிரிக்க வச்சிட்டு, இப்போ நெகிழ வச்சிட்டீங்களே. போதா குறைக்கு, என் அப்பாவின் நினைவுகளை வேற கிளறி விட்டுட்டீங்க.//
ஒரு சம்பவம், இன்னிக்கு தற்செயலாப் பார்த்த அப்பாவோட போட்டோ- உசுப்பி விட்டிருச்சுங்க
//பதிவு ரொம்ப நல்லா இருக்குங்க.//
மிக்க நன்றி-வருகைக்கும் கருத்துக்கும்.....!
//குழந்தைகள் அன்புக்கு கட்டுப்பட்டவர்கள்.. அன்பாலே அவர்களை நல்வழிப்படுத்த முடியும் ..நல்ல உதாரணம் என் தந்தையார்..இதுவரை அடித்ததில்லை..எனக்கு இன்றளவும் அவர் மேல் மரியாதை...//
எங்க வீட்டுலே தீபாவளி,பொங்கல் மாதிரி அப்பாவோட அடி எப்பவாவது விழுகும். ஒரு வருஸத்துக்கும் சேர்த்துக் கொடுப்பாரு! ஆனா, மறுநாளே அதை மறக்கடிக்கிறா மாதிரி ஏதாவது பண்ணிருவாரு! ஒரு தடவை கிணத்தடியிலே வச்சு,"ரொம்ப வலிச்சுதாடா?"ன்னு கூட கேட்டிருக்காரு
//எனக்கென்னவோ, பெரியவர்களின் கோபத்திற்கு வடிகாலாக குழந்தைகளை பயன்படுதுகின்றரோ என்ற ஐயப்பாடு..//
ஆஹா! இதையே தான் ஒரு அம்மாவும் எனக்கு மடலிலே தெரிவிச்சிருந்தாங்க
//சாரி சார்.. பின்னூட்டம் கொஞ்சம் பெரியதாகிவிட்டது..
உங்களுக்கு எங்கெங்கு கத்திரி வைக்க வேண்டுமோ , வைத்துக்
பப்ளிஸ் செய்து கொள்ளவும். //
பட்டா பட்டி அண்ணனுக்குக் கத்திரியா? வெளாடறீங்களா? :-)))
ரொம்ப மகிழ்ச்சியா இருக்குண்ணே! ஆடிக்கொரு தடவை இந்த மாதிரி கொஞ்சம் சீரியசா முயற்சிக்கும்போது, இவ்வளவு பொறுமையா, நேரத்தைச் செலவு பண்ணி, உற்சாகப்படுத்தியிருக்கீங்க! இதுக்கு நான் நன்றி சொல்லணும். ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றிண்ணே!
//நல்லா இருக்கு சேட்டை..//
மிக்க நன்றி முத்துலட்சுமி அவர்களே!
//வெளுத்து வாங்கற அம்மாக்கள் சிலரை பாத்திருக்கேன்..அவங்க அடிச்சிட்டு அடுத்த மணி நேரம் முழிச்சிருக்கும்போதே மடியில் போட்டு கொஞ்சரதை பாத்திருக்கேன்.. :)//
அம்மா என்றால் அன்பு-ன்னு ஆரம்பிச்சிருந்தேன். அதற்கு அழகான விளக்கமா பின்னூட்டத்திலே கொடுத்திருக்கீங்க! மிக்க நன்றி!
ARUMAIYAANA PATHIVU THANTHAIYIN ANBU KOTTI IRUKKIRATHU. IRUKKAMAANA MUKATHTHUKKUL ADIPATTATHAAL AVARKAL THORAMAAKAVE IRUKKENRANAR. ENNAKKUM ITHA ANUPAVAM UNDU.
நல்லா எழுதறீங்க சேட்டை..
அடர்த்தியான மீசை, இறுக்கமான முகம், கணீரென்ற குரல் என்று இயல்பாக அமைந்துவிட்ட ஒப்பனைக்குள்ளே பிள்ளைகளின் விரல்தொட வேண்டும் என்ற ஒரு குழந்தைத்தனமான ஏக்கம் அவருக்கு இருந்து வந்திருக்க வேண்டும்...இந்த வரிகள் இந்த காலத்து அப்பாக்களுக்கு பொருந்துமா ? இப்போல்லாம் அப்பாக்கள் தான் அம்மாவை விட அன்பை அதிகமா வெளிப்படுத்துகிறார்கள் என்றுதோன்றுகிறது !
//ARUMAIYAANA PATHIVU THANTHAIYIN ANBU KOTTI IRUKKIRATHU. IRUKKAMAANA MUKATHTHUKKUL ADIPATTATHAAL AVARKAL THORAMAAKAVE IRUKKENRANAR. ENNAKKUM ITHA ANUPAVAM UNDU.//
வருக வருக மதுரை சரவணன் அவர்களே! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
//இந்த வரிகள் இந்த காலத்து அப்பாக்களுக்கு பொருந்துமா ? இப்போல்லாம் அப்பாக்கள் தான் அம்மாவை விட அன்பை அதிகமா வெளிப்படுத்துகிறார்கள் என்றுதோன்றுகிறது !//
இதையும் ஒரு இணைய சகோதரி மின்னஞ்சலில் தெரிவித்திருந்தார். :-)) பலவிதமான பரிமாணங்கள் காணவும், அறியவும் கிடைக்கின்றன. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி இளந்தென்றல் அவர்களே!
சேட்டை நண்பா!
எவ்வளவு நெகிழ்வாய் எழுதியிருக்கிறீர்கள்! இதைத்தான் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன். அருமை. எல்லா விஷயங்களிலும் உங்களின் தனி முத்திரையோடு கலக்குகிறீர்கள். வாழ்த்துக்கள்.
பிரபாகர்.
//அப்பாக்கள் ஒரு விஷயத்தில் மிகவும் சிக்கனமானவர்கள்; இரண்டு சொட்டுக்கண்ணீர் என்றாலும் அதை யாருக்கும் தெரியாமல் இருட்டில் தான் சிந்துவார்கள். என் அப்பாவைப் போல//
2, 3 ஜெனரேஷனுக்கு முந்திய அப்பாக்கள் வேண்டுமானால் இப்படி இருந்திருக்கலாம். என்னதான் தவறு செய்தாலும் அதிகபட்சம் 5 நிமிடத்திற்குள் நான் என்னுடைய மகனை சமாதானம் செய்து விடுவேன். எனக்கே தாங்காது என்பதுதான் உண்மை.
ஆனாலும், நெகிழ்ச்சியூட்டும் பதிவு. இதனை ஷேர் செய்த கவுதம் இன்ஃபோடெக் வடிவேலனுக்கும் நன்றி
//எவ்வளவு நெகிழ்வாய் எழுதியிருக்கிறீர்கள்! இதைத்தான் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன். அருமை. எல்லா விஷயங்களிலும் உங்களின் தனி முத்திரையோடு கலக்குகிறீர்கள். வாழ்த்துக்கள்.//
உற்சாகமூட்ட உங்களைப் போன்ற அன்புள்ளங்கள் இருந்தால், எழுதவேண்டும் என்ற உந்துதல் தானாக வருகிறது. மிக்க நன்றி!
//2, 3 ஜெனரேஷனுக்கு முந்திய அப்பாக்கள் வேண்டுமானால் இப்படி இருந்திருக்கலாம். என்னதான் தவறு செய்தாலும் அதிகபட்சம் 5 நிமிடத்திற்குள் நான் என்னுடைய மகனை சமாதானம் செய்து விடுவேன். எனக்கே தாங்காது என்பதுதான் உண்மை.//
நீங்கள் சொல்வதிலும் உண்மை இருக்கிறது. இது போல பலர் எனக்கு எழுதியிருக்கிறார்கள். நாணயத்தின் மறுபக்கம் போலும்.
//ஆனாலும், நெகிழ்ச்சியூட்டும் பதிவு. இதனை ஷேர் செய்த கவுதம் இன்ஃபோடெக் வடிவேலனுக்கும் நன்றி//
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! அடிக்கடி வாங்க!!
Excellent! Crystal clear way of writing.
great job! congrats
//Excellent! Crystal clear way of writing.
great job! congrats//
Thank You Friend! Please do drop in whenever you can.
" Nothing but கலக்கல்...! "
இதுக்கும் மேல சொல்ல
வார்த்தைகள் கிடைக்கலை..
அது என்னவோ, சின்ன வயசில பிடிக்காமல் போன அப்பாவை நாங்கள் அப்பாவானதும் பிடிக்கிறது.
ஏன் அப்படி செய்தார்/நடந்துகிட்டார் என்பதற்கெல்லாம் விடை கிடைக்கிறது.
அப்பா மகன் உறவு - மனசுல ஆயிரம் நெகிழ்விருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் அந்த விறைப்பு
அடுத்த தலைமுறைக்கு நகர்த்தப்படுது.
மனசு முழுக்க பாசத்தை வச்சுகிட்டு எங்க அப்பா எனக்கு காட்டின அதே இறுக்கத்தைதான் நான் என் பிள்ளைகளிடம் காட்டுகிறேன். இது சரியா பிழையா அப்படீன்னு எனக்குத் தெரியாது!!
ஆனால் அப்பா அப்பாதான்!
Post a Comment