Saturday, February 20, 2010

வலைப்பதிவாளர் ராசிபலன்.03

அடுத்து மிதுனராசி வலைப்பதிவர்களின் பலன்களைப் பார்க்கலாமா? (ஹி..ஹி..மறந்திட்டேன்னு நினைச்சீங்களா? விடறதா இல்லை யாரையும்...)

இந்த ராசிக்காரர்கள் மிகவும் மதிநுட்பம் படைத்தவர்கள். மிகவும் புத்திகூர்மையென்பதால் இவர்கள் உறங்குகிறபோது தலையணை கூட வைத்துக்கொள்ள மாட்டார்கள் - கிழிந்து விடும் என்பதால்! ஆத்திலே போட்டாலும் அளந்து போடு என்ற பழமொழிக்கு மிதுன ராசிக்காரர்களை விட சிறந்த உதாரணத்தை எங்கும் பார்க்க முடியாது. பெரும்பாலானோர்கள், அளந்து போட்டாலும் போட்டு விடுவோமோ என்று ஆறு, குளம் பக்கமே போகாமல் குழாய்த்தண்ணீரிலேயே குதூகலமாகக் குளிக்கிறவர்களாக இருப்பார்கள்.

வளவளவென்று பதிவுகளை எழுதுகிற வழக்கமில்லாதவர்கள் இவர்கள். செய்தித்தாளிலிருந்து ஒரு சுட்டியை ஒற்றியெடுத்துப்போட்டு விட்டு, "நாம் எங்கே போகிறோம்?" என்று இறுதியில் ஒரே ஒரு கேள்வியை மட்டும் எழுதி விட்டு பஸ்ஸைப் பிடித்து வீட்டுக்குச் சென்று விடுவார்கள். எதையும் நிதானமாக சிந்தித்துச் சொல்பவர்கள் என்பதால், இவர்களில் பலர் இப்போது தான் "சந்திரமுகி," படத்திற்கே விமர்சனம் எழுதிக்கொண்டிருப்பார்கள் என்பதையும் அறிக.

இந்த ராசிக்காரர்களின் இன்னொரு சிறப்பு என்னவென்றால், செமத்தியான கடுப்பிலும் கூட நன்றி தெரிவிக்கும்போது நிறைய நகைப்பான்களைப் பயன்படுத்துவார்கள். மனதுக்குள் "என் பதிவையா மொக்கை என்று சொன்னாய்?" என்று கறுவியபடியே, பின்னூட்டமிட்ட நண்பரின் அடுத்த பதிவு எப்போது வரும் என்று எம்.என்.நம்பியாரைப் போல கையைப்பிசைந்து கொண்டு காத்திருப்பார்கள். இந்த ராசிக்காரர்கள் பொதுவாக நக்கலில் நயாகராவாகவும், குத்தலில் குற்றாலமாகவும் இருப்பார்கள்.

மிகவும் நுட்பமாகச் சிந்திக்கிற அறிவுஜீவிகளாகவும், மற்ற வலைப்பதிவர்களுக்கெல்லாம் ஒரு முன்னுதாரணமாகவும், அப்பழுக்கற்ற சிந்தனாவாதிகளாகவும் - இவர்களே தங்களைப் பற்றிய கருத்துக்களை வைத்திருப்பார்கள் என்பதை (இப்போதாவது) அறிக! பதிவு போட்டு விட்டு ஜகா வாங்குவதில் படுசமர்த்தர்களாக இருப்பார்கள். புதிதாகப் பதிவு போடுகிறார்களோ இல்லையோ, வாரத்துக்கு ஒரு புதிய கேட்ஜெட்டையும், மாதத்திற்கு ஒரு புதிய டெம்ப்ளேட்டையும் சேர்த்து அல்லது மாற்றி அவரவர் வலைத்தளத்தைப் புதியது போல காட்டுவதில் கில்லாடிகளாக இருப்பார்கள்.

இந்த ராசியைச் சேர்ந்த ஆண் வலைப்பதிவாளர்களுக்கு தாய்க்குலத்தின் ஆதரவு பரிபூரணமாக இருக்கும் என்பதால், அம்மா, மனைவி குறித்த பல புனைவுகளை, அதிலும் குறிப்பாக செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் நிறையப் பார்க்க முடியும்.

முகப்பிலே வீரமான வார்த்தைகளிருந்தாலும் மறுப்புத் தெரிவித்து ஒரு பின்னூட்டம் வந்தாலே வெலவெலத்துப்போய் விடுவார்கள். இவர்களின் வெற்றியின் ரகசியம் என்னவென்றால், இவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பது பெரும்பாலான வாசகர்களுக்கு இறுதிவரையிலும் புரியாமலே இருப்பது தான்.

சரி, மிதுனராசிக்காரார்கள் செய்ய வேண்டியது என்ன? எக்காரணம் கொண்டும் எளிதில் புரிகிற மாதிரி எழுதாமலிருக்கிற பழக்கத்தைக் கைவிடவே கூடாது. இந்த ஒரு மாதத்திற்கு எவரது தொடர்பதிவுகளுக்கும் சம்மதம் தெரிவிக்காமல் இருப்பது உத்தமம். கூடுமானவரை வலையுலகப் பிரமுகர்களின் சண்டை குறித்த பதிவுகளை இன்னும் ஒரு மண்டலத்துக்குத் தவிர்த்தல் நலம். மொக்கை போடுபவர்கள், போனால் போகிறது என்று சற்றே வித்தியாசமாக அதைக் கவிதை வடிவில் முயற்சி செய்தால் பாதகமில்லை. அனேகமாக நீங்கள் எழுதுகிற நகைச்சுவையான பதிவுகளைப் படித்துப் பலர் "நெகிழ்ச்சி தந்த பதிவு," என்று பின்னூட்டமிடுவதற்கான சாத்தியங்களை உங்களது தசாபலன்கள் காட்டுகின்றன.

மேலும் இன்னும் சில நாட்களுக்கு அலுவலகக்கணினியிலிருந்து உங்களால் வெறும் பின்னூட்டங்கள் மட்டுமே அளிக்க முடியும். புதிய பதிவுகள் ஏதும் வராத நிலையில் பிரிந்த நட்புகள் கூடுகிற அறிகுறிகள் இருக்கின்றன. அடிக்கடி கண்ணி தொங்குவதும், இணைய இணைப்பு அடிக்கொருமுறை துண்டிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகளும் காணப்படுகின்றன.

இந்த ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய பதினைந்து நாட்கள் இவை. காரணம், இந்தியா-தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடர் துவங்க இருப்பதால், கொஞ்ச காலத்துக்கு இவரைப்போலவே பலர் சச்சின்,தோனி,ஹர்பஜன் ஆகியோரை சகட்டுமேனிக்குத் திட்டி கடும்போட்டியை ஏற்படுத்துவார்கள். புதுப்பேட்டை,நமச்சிவாயபுரம்,கண்ணம்மாபேட்டை போன்ற இடங்களுக்குச் சென்று புதிய வார்த்தைகளைக் கேட்டறிந்து உங்களது சொற்செறிவை மேம்படுத்தினால், உங்களது கிரிக்கெட் குறித்த பதிவுகள் மேம்படும் என்பதில் சந்தேகமில்லை.

இவையனத்தையும் மீறி உங்களது வாக்கினில், வழக்கத்துக்கு மாறக சில உயர்ந்த சிந்தனைகள் வெளிப்படும் என்பதால், வாசகர்கள் அதற்குண்டான பரிகாரங்களைச் செய்ய வேண்டி வரலாம். அதிகமாகப் பதிவு போடாமல், பிற பதிவுகளுக்குச் சென்று பின்னூட்டங்களை அதிகமாக இட்டால், இந்தக் காலகட்டத்தின் முடிவில் நல்ல பலன் விளையும். அத்துடன் உங்களது நினைவாற்றல் மிகவும் சிறப்பாகி விடும் என்பதால் திடீரென்று டேவிட் லீனின் "ரையான்ஸ் டாட்டர்," மற்றும் பீம்சிங்கின் "படிக்காத மேதை," போன்ற படங்களைக் குறித்து ஒரு ஆய்வுக்கட்டுரை எழுதினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

26 comments:

சைவகொத்துப்பரோட்டா said...

//ராசிக்காரர்கள் பொதுவாக நக்கலில் நயாகராவாகவும்,//


கண்டு பிடிச்சிட்டேன் தல, உங்க ராசி மிதுனம்தானே.

அண்ணாமலையான் said...

ஓஹோ அப்டியா?

கும்மாச்சி said...

சேட்டை எப்போ ஜோசியதொழிலில் இறங்கிநீங்க, வாழ்த்துக்கள், பாத்து சூதானமா நடந்துண்டா, நல்ல காசு பார்க்கலாம்.

Chitra said...

இந்த ராசிக்காரர்கள் பொதுவாக நக்கலில் நயாகராவாகவும், குத்தலில் குற்றாலமாகவும் இருப்பார்கள்.

...........ha,ha,ha,ha,ha...... சூப்பர் மக்கா.

DREAMER said...

சேட்டைஜோசியரே...
ஏன்டா மிதுனராசியில் பிறந்தேனோ என்று என்னை யோசிக்கவச்சிட்டீங்க, உங்க சேட்டைசோதிடத்தை நல்லா அருமையா எழுதியிருக்கீங்க...

நல்ல கற்பனை...

தொடருங்கள் உங்கள் ஆருடப்பணியை

அன்புடன்
ஹரீஷ் நாராயண்

settaikkaran said...

//கண்டு பிடிச்சிட்டேன் தல, உங்க ராசி மிதுனம்தானே.//

ஹாஹா! இல்லேண்ணே! என்னோட நக்கலெல்லாம் ஜூஜூபி! நன்றிண்ணே! இன்னும் ராசி பாக்கியிருக்கில்லா?:-)

settaikkaran said...

//ஓஹோ அப்டியா?//

ஆமாண்ணே! கொஞ்சம் கவனிச்சுக்கச் சொல்லுங்க உங்க நண்பர்களே! :-))

நன்றிண்ணே!!

settaikkaran said...

//சேட்டை எப்போ ஜோசியதொழிலில் இறங்கிநீங்க, வாழ்த்துக்கள், பாத்து சூதானமா நடந்துண்டா, நல்ல காசு பார்க்கலாம்.//

ஆமாண்ணே! வெங்கட்நாராயணா ரோடு பக்கத்துலே ஒரு நல்ல மரத்தடியா ரெண்டு நாளாத் தேட ஆரம்பிச்சிட்டேன். :-)

நன்றிண்ணே!

settaikkaran said...

//...........ha,ha,ha,ha,ha...... சூப்பர் மக்கா.//

ஹி..ஹி! நன்றிக்கா!

settaikkaran said...

//ஏன்டா மிதுனராசியில் பிறந்தேனோ என்று என்னை யோசிக்கவச்சிட்டீங்க,//

அப்படியெல்லாம் அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வந்திரப்படாது. இன்னும் பரிகாரம் சொல்லறது பாக்கியிருக்கில்லா?:-)

//உங்க சேட்டைசோதிடத்தை நல்லா அருமையா எழுதியிருக்கீங்க...//

வந்ததோட நில்லாம நாலுவார்த்தை நல்ல வார்த்தையா சொல்லியிருக்கீங்க! மகிழ்ச்சி!!

//நல்ல கற்பனை...

தொடருங்கள் உங்கள் ஆருடப்பணியை//

நன்றிங்க! அடிக்கடி வாங்க!!

ஜெட்லி... said...

நான் கும்ப ராசி...அதை பத்தி எப்போ போடுவிங்க...??

நஜீபா said...

ராசிபலன் "பலிக்கிறதோ" இல்லையோ, படித்துச் சிரித்ததில் வயிறு "வலிக்கிறது". சேட்டை தொடரட்டும்! சிரிப்பு பரவட்டும்!

Menaga Sathia said...

உங்க சேட்டையெல்லாம் ரொம்ப ரசிக்கத்தக்கவையா இருக்கு...தொடருங்கள்!!

சகோ பிராபகர் அவர்கள் உங்களை அறிமுகம் செய்துள்ளார் அவருடைய பதிவில்.அந்த பதிவின் மூலம் உங்க தளத்துக்கு வந்தால் இங்க செம் சேட்டையா இருக்கு...

புலவன் புலிகேசி said...

நல்ல நகைச்சுவை சேட்டைதான்...வாழ்த்துக்கள்

settaikkaran said...

//நான் கும்ப ராசி...அதை பத்தி எப்போ போடுவிங்க...??//

வாங்க ஜெட்லி அவர்களே! யாரையும் விடுறதா இல்லை; எல்லா ராசிக்காரங்க பலனும், பரிகாரமும் தொடர்ந்து வரும். வருகைக்கு மிக்க நன்றி! அடிக்கடி வாங்க!!

settaikkaran said...

//சேட்டை தொடரட்டும்! சிரிப்பு பரவட்டும்!//

ஆஹா, நம்ம தமிழ்த்தென்றல் அக்காவா? வாங்க வாங்க! நன்றிக்கா!

settaikkaran said...

//உங்க சேட்டையெல்லாம் ரொம்ப ரசிக்கத்தக்கவையா இருக்கு...தொடருங்கள்!!//

மிக்க மகிழ்ச்சி! உங்கள் வருகையும் உற்சாகமூட்டும் வார்த்தைகளும் என்னை மென்மேலும் ஊக்கப்படுத்தும்.

//சகோ பிராபகர் அவர்கள் உங்களை அறிமுகம் செய்துள்ளார் அவருடைய பதிவில்.அந்த பதிவின் மூலம் உங்க தளத்துக்கு வந்தால் இங்க செம் சேட்டையா இருக்கு...//

சில நேரங்களில் உணர்ச்சிப்பெருக்கில் "நன்றி" என்ற ஒரு வார்த்தை மட்டுமே மிஞ்சுகிறது. அதைத் தான் சகோ.பிரபாகருக்கும் உங்களுக்கும் என்னால் தற்சமயம் சொல்ல முடிகிறது. மிக்க நன்றி!!

settaikkaran said...

// நல்ல நகைச்சுவை சேட்டைதான்...வாழ்த்துக்கள்//

வாருங்கள் புலவன் புலிகேசி அவர்களே! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! அடிக்கடி வாருங்கள்!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

வந்தாச்சு சார்.. ரெண்டு நாளா ரொம்ப பிஸி..
ஆமா.. மிதுன ராசிக்கு சூப்பரா எழுதியதால் , சிங்கையில் பாரட்டு விழா நடத்த
முடிவு செய்துள்ளோம்.. ( இப்பவே சொல்லிட்டேன்.. சொந்த காசில தான் வரணும்..ஹி..ஹி..)

இடம் , பொருள் , ஆவி பின்னர் அறிவிக்கப்படும்.. (
சாரி சார்.. ஒரி ப்ளோல வந்திருச்சு..)

இடம் , நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.

settaikkaran said...

//வந்தாச்சு சார்.. ரெண்டு நாளா ரொம்ப பிஸி..
ஆமா.. மிதுன ராசிக்கு சூப்பரா எழுதியதால் , சிங்கையில் பாரட்டு விழா நடத்த
முடிவு செய்துள்ளோம்..//

ஆஹா! பாராட்டு விழாவா? டான்ஸ் எல்லாம் உண்டுதானே? :-))

//( இப்பவே சொல்லிட்டேன்.. சொந்த காசில தான் வரணும்..ஹி..ஹி..)//

அது கெடக்குதுண்ணே! நாம எப்போ டிக்கெட் எடுத்துப் போயிருக்கோம்...?

//இடம் , பொருள் , ஆவி பின்னர் அறிவிக்கப்படும்.. (

சாரி சார்.. ஒரி ப்ளோல வந்திருச்சு..)//

உங்க ஃப்ளோ என்னுத விட பயங்கரமாயிருக்கேண்ணே! :-)

//இடம் , நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.//

இப்பவே, டிவியிலே ஓளிபரப்புற உரிமை பற்றி பேரம் பேசி வைச்சிடறேன். நன்றிண்ணே! சிங்கப்பெருமாள் கோவில் கூட போகாதவனை சிங்கப்பூருக்கே அழைச்சதுக்கு...!

Prathap Kumar S. said...

சாப்பிட்டாச்சாப்பு... ஒரே வெயில் தாங்க முடில..
நாட்டுல மழையே பெய்ய மாட்டுது. சட்டமன்ற தேர்தல் வேற வருது...

இன்னா வேண்ணாலும் எழுதலாம்னு போட்டீங்கல்ல அதான் சம்பந்தமே இல்லாம...

கும்ப ராசிக்கு ஒண்ணு எடுத்துவுடு தல...

settaikkaran said...

//சாப்பிட்டாச்சாப்பு... ஒரே வெயில் தாங்க முடில..நாட்டுல மழையே பெய்ய மாட்டுது. சட்டமன்ற தேர்தல் வேற வருது...

இன்னா வேண்ணாலும் எழுதலாம்னு போட்டீங்கல்ல அதான் சம்பந்தமே இல்லாம...//

வாங்க நாஞ்சிலாரே! உங்க பெயரை தினமும் தமிழ்மணத்துலே பார்ப்பேன். இங்கே பார்க்குறதே மகிழ்ச்சியா இருக்கு! என்னா வேண்ணாலும் எழுதுங்க! :-))

//கும்ப ராசிக்கு ஒண்ணு எடுத்துவுடு தல...//

கண்டிப்பா! எல்லா ராசிக்கும் வந்திக்கிட்டே இருக்கில்லா? நன்றிண்ணே!!

மசக்கவுண்டன் said...

உங்க பக்கம் வந்துட்டனுங்க. நம்ம ஊட்டுலெ எல்லாரும் சௌக்கியமுங்களா?

settaikkaran said...

//உங்க பக்கம் வந்துட்டனுங்க. நம்ம ஊட்டுலெ எல்லாரும் சௌக்கியமுங்களா?//

வாங்க கவுண்டரே! இது நம்ம பக்கமில்லீங்கோ, உங்க பக்கம்தானுங்கோ! நன்றி!

வால்பையன் said...

வலைச்சரம் பார்த்து வந்தேன்!

நல்லா கலாய்கிறிங்க!

கணேஷ் said...

எக்காரணம் கொண்டும் எளிதில் புரிகிற மாதிரி எழுதாமலிருக்கிற பழக்கத்தைக் கைவிடவே கூடாது///

இத்தன் விஷயமா? என் பதிவை நான் எழுதிவிட்டு திரும்பி அதை நான் படித்தாலே எனக்கே அது புரியாதது....

நல்ல இருக்குங்கோ....ஒரு பக்கம் உணமைய இருக்கிற மாதிரி இருக்கே? அது எப்படி?