Saturday, February 13, 2010

வலைப்பதிவாளர் ராசிபலன்.01(பாசத்துக்குரிய அண்ணன் பட்டா பட்டி அவர்கள் எனது மண்ணடிச்சிந்தனைகள் பதிவைப் படித்ததோடு, இன்னும் எழுத வேண்டும் என்ற தனது விருப்பத்தை வெளிப்படுத்தியதைத்தொடர்ந்து, எனது மின்னஞ்சல் பெட்டி இதுபோன்ற மின்னஞ்சல்களால் முன்பதிவு செய்யப்படாத இரயில் பெட்டி போல நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது. {நீங்க வந்து பார்க்கவா முடியும்?}. எனவே, எனது ஜோசிய அறிவை (?) உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கென்றே வலைப்பதிவர்களுக்கான இந்த ராசிபலனை எழுதியுள்ளேன். வருகிற 15-02-2010 தொடங்கி 28-02-2010 வரையிலுமான நாட்களுக்கான, வலைப்பதிவர்களுக்கான சிறப்பு ராசி பலன்கள் இவை. உலகிலேயே வலைப்பதிவர்களுக்கென்று முதல் முதலாக எழுதிய பெருமை உங்களது ஆசியால் எனக்குக் கிடைக்கப்பெற்றிருக்கிறது என்பதை எண்ணுகையில் எனது உள்ளம் பூரிக்கிறது)

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ராசிக்கான பலன்களும், பரிகாரங்களும் விபரமாக அளிக்கப்படும். இடைப்பட்ட காலத்தில் ஏதேனும் விபரீதம் (இதையும் விட!) நிகழ்ந்தால், அதற்கு கம்பனி பொறுப்பல்ல. இனி, ஒவ்வொரு ராசியாகப் பார்க்கலாமா? முதலில்....மேஷம்!

மேஷராசி அன்பர்களே!

வலையுலகில் பரமசாதுவாக இருந்தாலும், முன்னணி வலைப்பதிவாளர்களின் பதிவுகளை ஒன்று விடாமல் படிக்காமல் இருக்க மாட்டீர்கள். மிகுந்த சமூக அக்கறையோடு எழுதும் வழக்கமுள்ள நீங்கள் அண்மைக்காலமாக அடிக்கொருதடவை "பின்நவீனத்துவம்," என்ற வார்த்தையைப் பிரயோகிப்பவர்கள். ஆயிரத்தில் ஒருவன் விமர்சனத்திலிருந்து அணுஆயுதப்பரவல் தடைச்சட்டம் வரைக்கும் எந்தவொரு விஷயமாக இருந்தாலும் அது குறித்து குறைந்தபட்சம் ஒரு பின்னூட்டமாவது படித்திருப்பீர்கள். சக பதிவர்களின் ஆலோசனைகளைப் படித்து "மிக்க நன்றி" என்று பின்னூட்டத்துக்குப் பின்னூட்டம் போட்டாலும், அவர்கள் சொல்வதை ஒரு காதில் வாங்கி இன்னொரு காது வழியாக வெளியேற்றுவதில் நீங்கள் வல்லவர்கள். பொதுவாக தட்டச்சு செய்தபிறகு, அதை ஒரு முறை படித்துப் பார்க்கிற வழக்கம் இல்லாத நீங்கள், அது குறித்து யாரும் குறிப்பிட்டுச் சுட்டிக்காட்டினாலும் பெரிதாக அலட்டிக்கொள்ள மாட்டீர்கள்.

உங்கள் வலைப்பதிவிற்கு ரெகுலராக வந்து மார்க் போடுகிறவர்களை நீங்களும் கைவிடாமல் அவரவர் பதிவுகளைப் படித்து போனால் போகிறது என்று மார்க் அளிப்பவர்கள். பெரும்பாலும் மொக்கை போடுவதைத் தவிர்ப்பதை வழக்கமாக வைத்திருப்பீர்கள் என்றாலும், ஒரு முறை மொக்கை போடத் தொடங்கினால், அதிலே தொடர்ந்து சக்கை போடு போடுவீர்கள்.

பிறரது பதிவுகளைப் படித்து அதிலுள்ள சிறப்பான விஷயங்களை அடைப்புக்குறியில் போட்டு அவரைப்பாராட்டும் உங்களால் சில சமயங்களில் உங்களது படைப்புக்களில் சிறப்பான விஷயங்களைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமாக அமையக்கூடும். இந்த ராசிக்கு சொந்தக்காரர்கள் பெரும்பாலும் வெளிநாட்டிலிருந்து கொண்டு மொக்கை போடுவதை, மன்னிக்கவும், வலைப்பதிவு நடத்துவதை வழக்கமாக வைத்திருப்பார்கள்.

தினசரி காலையில் எழுந்ததும் இன்று யாரைத்திட்டலாம், அதாவது, எதைப் பற்றி எழுதலாம் என்று சதா யோசனையிலேயே இருப்பீர்கள்.(சதா யோசனை என்றால் நடிகை சதாவைப் பற்றிய யோசனையல்ல; எப்போதும் எனப் பொருள் கொள்க!). இதனாலேயே உங்களுக்கு நிறையவே கோபம் வரும். (அதை இந்தப் பதிவின் பின்னூட்டத்தில் காட்டி விட வேண்டாம் என்று கோரிக்கை விடுக்கிறேன்)

எந்த ஒரு விஷயமாக இருந்தாலும், உங்களது நண்பர்கள் முதலில் உங்களது வலைப்பதிவுக்கு வந்து உங்களது கருத்து என்னவென்று அறிந்து கொண்டபின்னரே, தமது வலைப்பதிவில் எழுதுவார்கள்.

இதுவரை 5-ல் இருந்த சனி இப்போது பக்கதிலேயே ஆறாம் இடத்துக்கு வருவது யோகம்தான். கன்னியில் நிற்கும் சனி 3-ஆம் பார்வையாக 8-ஆம் இடத்தையும்; 7-ஆம் பார்வையாக 12-ஆம் இடத்தையும்; 10-ஆம் பார்வையாக 3-ஆம் இடத்தையும் பார்க்கப் போகிறார். இவ்வளவு பேர் பார்க்கிறார்கள் என்பதை உங்களது பதிவுகளை எழுதும்போது நீங்கள் கவனத்தில் கொள்ளுதல் அவசியம்.

இந்த ராசிக்காரர்களின் கூகிள் ஐ.டி.சில சமயங்களில் களவாடப்படலாம். எப்போதும் ஒரு இனம்புரியாத சோர்வாக இருப்பீர்கள் என்பதால், நிறைய காதல் கவிதைகள் எழுத வாய்ப்பிருக்கிறது.

உங்கள் வலைப்பதிவிலிருந்து ஒற்றியெடுத்த விஷயங்களைச் சற்றே ஒப்பேற்றி தங்களது பதிவிலே போடுகிறவர்களை ஆறாம் இடத்திலிருக்கிற சனி சரியாகக் கவனித்துக்கொள்வார். நீங்கள் தமிழ்மணம் நட்சத்திரமாகிறபோது உங்களது உண்மையான பின்னூட்ட சிகாமணிகள் மாத்திரமே உங்களுடன் இருப்பார்கள். உங்களது படைப்புக்களை (?) தவறாகப் பயன்படுத்தியவர்களின் வலைப்பதிவுகள், அவர்களது கூகிள் ஐ.டி.களவாடப்படுமென்பதால் செயலற்று விடுகிற வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.

உங்களது இயல்பான கோபமும் சற்றே தணிந்து, நிறைய சர்தார்ஜீ ஜோக்குகள், தமிழக அரசியல் செய்திகள் என்று வயிறு குலுங்க சிரிக்க வைக்கிற பல பதிவுகளை நீங்கள் படைப்பீர்கள்.

உங்கள் குரு தற்சமயம் பதினொன்றாம் எண் வீட்டில் பருப்புத்துவையலும், வத்தக்குழம்பும் சுட்ட அப்பளமும் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறபடியால், தங்களுக்கு அவரது ஸந்தோஷம் காரணமாக நிரம்ப லாப ஆதாயங்கள் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. பிப்ருவரி 14-ம் தியதிக்குப் பின்னர் உங்களது ஹிட்-கவுன்ட்டரில் எண்ணிக்கை சற்றே சரிவதற்கான தசாபலன்கள் தென்படுகின்றன. பின்னூட்டத்துக்குப் பின்னூட்டமிடுபவர்கள் கவனமாக இருத்தல் மிகவும் அவசியம். பிரபலமாகாதவர்களின் வலைப்பதிவுகளுக்குப் பிரபலமான பதிவர்கள் வருகை தந்து ஸமூகத்திற்கு உபகாரமாக எதையேனும் எழுதும்படி அறிவுரை கூற வாய்ப்பிருக்கிறது என்பதால், அதிக கவனம் தேவைப்படும். இருப்பினும், தங்களது தனிமடல்கள், குறுஞ்செய்திகளால் அவதியுற்று வேறுவழியின்றி உங்களது வலைப்பதிவுக்கு விஜயம் மேற்கொண்டு ஓரிரு வார்த்தைகள் கருத்தென்ற பெயரில் உங்களை ஸந்தோஷப்படுத்துபவர்களின் எண்ணிக்கை குறையாதென்பதால், உங்களது வலைப்பதிவுக்கு தமிழ்மணத்திலும், தமிலீஷிலும் இருக்கக்கூடிய அந்தஸ்தானது அப்படியே இருப்பதற்கான பலன்கள் மிகுந்து காணப்படுகின்றன.

மேலும் அடுத்தடுத்துப் பல தமிழ்த்திரைப்படங்கள் வெளியாக இருப்பதால், தங்களது கற்பனாசக்தியாகப்பட்டது வாயுவேகத்தில் பறப்பதற்கான வாய்ப்புக்கள் மிகப்பிரகாசம். தற்சமயம் பழைய படங்களின் பெயர்களில் புதுப்படங்கள் வருவதால், மற்றவர்களின் விமர்சனங்களை அவரவர் வலைப்பதிவுகளிலிருந்து ஒற்றி ஒட்டுபவர்கள், அவர்கள் பழைய படத்திற்கு விமர்சனம் எழுதியிருக்கிறார்களா என்று சரிபார்ப்பது சாலச்சிறந்தது.

(சீரியசாக ஒரு பின்குறிப்பு: இது வெறும் நகைச்சுவை. வலைப்பதிவர்களோ, ஜோசியர்களோ தவறாக எண்ண வேண்டாம். ஆனால், இதில் ஏதாவது உண்மையிலேயே நடந்தால் எனக்குத் தெரிவிப்பதோடு நூற்றி ஒரு ரூபாய் மணி ஆர்டரும் அனுப்பி வைக்கவும்.)

26 comments:

அண்ணாமலையான் said...

ஏம்பா இந்த பதிவுக்கு எதிர்காலத்துல என்ன எதிர்வின வரும்னு ஜோசியத்த பயன்படுத்தி சொல்ல முடியுமா?

settaikkaran said...

//ஏம்பா இந்த பதிவுக்கு எதிர்காலத்துல என்ன எதிர்வின வரும்னு ஜோசியத்த பயன்படுத்தி சொல்ல முடியுமா?//

சேட்டைக்காரனுக்கு அஷ்டமத்துலே சனி - அது தான் எதிர்வினை! :-)))

அண்ணாமலையான் said...

சரி சரி பரிகாரம் பண்ணிடலாம்.(பயப்படற அளவுக்கு இல்ல) கொஞ்சம் செலவாகும் பரவால்லியா?

Starjan (ஸ்டார்ஜன்) said...

என்னோட ராசி , எப்பவுமே பெரியவங்க ஆசிதான் .

settaikkaran said...

//சரி சரி பரிகாரம் பண்ணிடலாம்.(பயப்படற அளவுக்கு இல்ல) கொஞ்சம் செலவாகும் பரவால்லியா?//

மீதியுள்ள ராசிங்களுக்கும் பலன் போட்டுப்புட்டு, அப்புறம் மொத்தமா ஒரு கான்ட்ராக்ட் பேசிக்கலாமா?:-)))))

settaikkaran said...

// என்னோட ராசி , எப்பவுமே பெரியவங்க ஆசிதான் .//

எனக்கும் அப்படித்தாண்ணே! உங்க எல்லாரோட ஆசியும் இருக்கே! :-)))

அண்ணாமலையான் said...

டீல் ஓகே,

cheena (சீனா) said...

ஸ்டார்ஜன் - நாம ஒரே ராசி போல - ம்ம்ம் -சேட்டைக்காரா - எங்கள வச்சி பலன் சொல்ல ஆரம்பிச்சா எல்லாம் நல்லா வரும் - ஆமா

ப்ரியமுடன் வசந்த் said...

செம்ம...! தொடர்ந்த ராசிகளுக்கும் பலன்கள் சொல்லவும்...!

ரோஸ்விக் said...

என்ன சேட்டை... எல்லா ராசி பலனையும் ஒரே தலைப்புல எழுதிட்டீரு... :-))

ராசிபலன் பாக்குறதுநால ஜோசியருக்குத் தான் நல்ல பலன்னு சில பேரு ஜோசியம் சொல்லிருக்காங்கய்யா...

சைவகொத்துப்பரோட்டா said...

நல்ல வேலை என்னோட ராசி, மேஷ ராசி இல்ல....

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஆகா.. இது சூப்பர்..
இதற்கு பரிகாரமா யார் தலையில் , எவ்வளவு
தேங்காய் உடைக்கவேண்டும் என்பதையும், தெரியப்படுத்த வேண்டுகிறேன்...

மேலும் மஞ்சள் கலர் பட்டாபட்டியோ , அல்லது பச்சைகலர் பட்டாபட்டியோயணிந்தால், செல்வம் கொட்டுமா என்பதையும் தெரியப்
படுத்தவும்.. இத்துடன் ரூ 101 காசாலை அனுப்பியுள்ளேன்..

உங்கள் அக்கவுண்டில் பணம் வந்து சேரவில்லையென்றால் கவலைப்பட வேண்டாம்..

( என்னுடைய முட்டாள் கணக்கன் , என்னுடைய பெயரை
எழுதி எனக்கே அனுப்பியிருப்பான்...நல்ல கட்சி விசுவாசி அடுத்த 20 வருடங்களுக்குள் , அவனுக்கு ஒரு வட்ட பதவியாவது கொடுக்க வேண்டும் என்பது என்னுடைய அவா... காலம் பதில் சொல்லுமா என்பதை பொறுத்திருந்து
பார்ப்போம் )

கார்த்திகைப் பாண்டியன் said...

சரியாத்தான்னே பேரு வச்சு இருக்கீங்க..:-)))

settaikkaran said...

//டீல் ஓகே,//

நன்றிண்ணே

settaikkaran said...

//-சேட்டைக்காரா - எங்கள வச்சி பலன் சொல்ல ஆரம்பிச்சா எல்லாம் நல்லா வரும் - ஆமா//

ஐயா, இவ்வளவு பேர் வந்து நாலு வார்த்தை நல்லதா சொல்லுறதை விட வேறே என்ன பலன் வேணும்? ரொம்ப நன்றிய்யா!

settaikkaran said...

//செம்ம...! தொடர்ந்த ராசிகளுக்கும் பலன்கள் சொல்லவும்...!//

நன்றிண்ணே! ஆமா, எல்லா ராசிக்கும் எழுதிர வேண்டியது தான் - விட்டு வைப்போமா? :-))

settaikkaran said...

என்ன சேட்டை... எல்லா ராசி பலனையும் ஒரே தலைப்புல எழுதிட்டீரு... :-))

இல்லே ரோஸ்விக்கண்ணே! ஒவ்வொரு ராசிக்காத் தான் எழுதுறேன். எல்லாரையும் ஒரே நேரத்துலே கலாய்க்க முடியுங்களா? :-))

ராசிபலன் பாக்குறதுநால ஜோசியருக்குத் தான் நல்ல பலன்னு சில பேரு ஜோசியம் சொல்லிருக்காங்கய்யா...

ஜோசியருங்களைப் பத்தி அதிகம் தெரியாது. நம்ம பதிவை நீங்க படிக்கிறதே எனக்கு நல்ல பலன் தான் அண்ணே! நன்றி!!

settaikkaran said...

//நல்ல வேலை என்னோட ராசி, மேஷ ராசி இல்ல....//

அவசரப்படாதீங்க, என்னோட ராசியும் மேஷமில்லே! ஒவ்வொண்ணா வரப்போகுது பாருங்க!! நன்றிண்ணே!!

settaikkaran said...

//ஆகா.. இது சூப்பர்..இதற்கு பரிகாரமா யார் தலையில் , எவ்வளவு
தேங்காய் உடைக்கவேண்டும் என்பதையும், தெரியப்படுத்த வேண்டுகிறேன்...//

அட ஆமா, பரிகாரம் போட மறந்திட்டேனே? :-((
பரவாயில்லே! எல்லாத்துக்குமா சேர்த்து கடைசியிலே போட்டுரலாம்.

//மேலும் மஞ்சள் கலர் பட்டாபட்டியோ , அல்லது பச்சைகலர் பட்டாபட்டியோயணிந்தால், செல்வம் கொட்டுமா என்பதையும் தெரியப்
படுத்தவும்.. இத்துடன் ரூ 101 காசாலை அனுப்பியுள்ளேன்..//

ஒரே கலரிலே சட்டைபோடாம, ராமராஜன் மாதிரியோ, விஜய் மாதிரியோ சட்டை போட்டா, ஜலதோஷம் உட்பட எந்த தோஷமும் அண்டாதுண்ணே!

//உங்கள் அக்கவுண்டில் பணம் வந்து சேரவில்லையென்றால் கவலைப்பட வேண்டாம்..//

வந்தா பேங்க் மேனேஜர் தான் கவலைப்படுவாரு! சேட்டைக்காரன் கணக்குலே கூட ட்ரான்ஸேக்ஷன் ஆரம்பிச்சிருச்சேன்னு....!

//என்னுடைய முட்டாள் கணக்கன் , என்னுடைய பெயரை
எழுதி எனக்கே அனுப்பியிருப்பான்...நல்ல கட்சி விசுவாசி அடுத்த 20 வருடங்களுக்குள் , அவனுக்கு ஒரு வட்ட பதவியாவது கொடுக்க வேண்டும் என்பது என்னுடைய அவா... காலம் பதில் சொல்லுமா என்பதை பொறுத்திருந்து
பார்ப்போம்//

இப்போதைக்கு இளவட்டம் பதவி கொடுங்கண்ணே! பின்னாலே அவருக்குத் தேவையான பட்டத்தை அவரே பர்மா பஜாருலே வாங்கிக்குவாரு

ரொம்ம்ப நன்றிண்ணே

settaikkaran said...

//சரியாத்தான்னே பேரு வச்சு இருக்கீங்க..:-)))//

ஹி...ஹி..ஹி! ரொம்ப நன்றிண்ணே! அடிக்கடி வாங்க!!

Chitra said...

///////உலகிலேயே வலைப்பதிவர்களுக்கென்று முதல் முதலாக எழுதிய பெருமை உங்களது ஆசியால் எனக்குக் கிடைக்கப்பெற்றிருக்கிறது என்பதை எண்ணுகையில் எனது உள்ளம் பூரிக்கிறது////////

..............வலைப்பதிவுலக சேட்டைக்காரன் என்றால் சும்மாவா? உங்க உள்ளம் - பூரி, சப்பாத்தி எல்லாத்தையும் தான் இக்கும்.
உங்கள் பதிவு, கலக்கல் பதிவு. வாழ்த்துக்கள்.

settaikkaran said...

//.............வலைப்பதிவுலக சேட்டைக்காரன் என்றால் சும்மாவா? உங்க உள்ளம் - பூரி, சப்பாத்தி எல்லாத்தையும் தான் இக்கும்.
உங்கள் பதிவு, கலக்கல் பதிவு. வாழ்த்துக்கள்.//

வாங்க சித்ரா அவர்களே! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! எல்லாம் உங்களை மாதிரி சகபதிவர்களோட ஆதரவுனாலே தான்.

எம்.எம்.அப்துல்லா said...

//இந்த ராசிக்காரர்களின் கூகிள் ஐ.டி.சில சமயங்களில் களவாடப்படலாம் //

அடப்பாவிகளா!!! பக்கத்துல இருந்து பாத்தாமாரியே சொல்லுறாய்ங்களே!!!

உண்மையிலேயே என் பிளாக் போன வருடம் ஹேக் செய்யப்பட்டது :)

settaikkaran said...

//அடப்பாவிகளா!!! பக்கத்துல இருந்து பாத்தாமாரியே சொல்லுறாய்ங்களே!!!//

கொஞ்சம் அசந்தா நான் தான் ஹேக் பண்ணுனேன்னு சொல்லிருவீங்க போலிருக்கே? :-))))

//உண்மையிலேயே என் பிளாக் போன வருடம் ஹேக் செய்யப்பட்டது :) //

உங்களுது மட்டுமா? ஹூம்! வயத்தெரிச்சலை ஏன் கேட்கறீங்க? :-(((

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி எம்.எம்.அப்துல்லா அவர்களே! அடிக்கடி வருகை தாருங்கள்!!

+Ve Anthony Muthu said...

சூப்பர். புடிங்க பதக்கம். ஓட்டுப் போட்டாச்சு.

பிரேமா மகள் said...

என் ராசி மேச ராசிதான்,. பாதி விசயம்தான் ஒத்துப் போகிறது.. அப்போ போலி ஜோசியரா நீங்கள்?