Monday, October 8, 2012

பெருமூச்சு – ஸ்ரீதேவி
இங்கிலீஷ் விங்கிலீஷ்படம் குறித்து எல்லா ஊடகங்களும் சொல்லி வைத்தாற்போலப் புகழ்ந்து தள்ளிக் கொண்டிருப்பதாலும், இணையத்திலும் பெரும்பாலானோர் இந்தப் படம் குறித்த தங்களது விமர்சனங்களை எழுதி முடித்து விட்டதாலும், மிக முக்கியமாக, இன்னும் இந்தப் படத்தை நான் பார்க்கவில்லை என்பதாலும், அது பற்றி எழுதுவதை விடவும், நான் பார்த்து ரசித்த ஸ்ரீதேவியைப் பற்றி எழுதலாம் என்று உத்தேசம்.

                இங்கிலீஷ் விங்கிலீஷ் படம் குறித்த விமர்சனங்கள், ஸ்ரீதேவி மீண்டும் வந்த குஷியால் விளைந்த மிகையான புகழ்ச்சியோ என்று யோசிக்க நேர்ந்தாலும், ஒரு நிமிடம், மாதுரி தீட்சித் மீண்டும் வந்து நடித்த ‘ஆஜா நாச்லேபடம் விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் ஒட்டுமொத்தமாக ஒதுக்கப்பட்டது என்பதையும் ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டியிருக்கிறது!

      குழந்தை நட்சத்திரங்களாக அறிமுகமாகி பின்னர் குமரிகளாக திரையுலகில் வலம்வந்தவர்களில் மலைக்க வைத்தவர்கள் இருவர்தான் என்பது என் கருத்து. முதலாமவர் ஸ்ரீதேவி; மற்றவர் குஷ்பு! ஆனால், ஸ்ரீதேவியின் படங்களோடு உள்ள பரிச்சயம் காரணமாகவும், பின்னாளில் அவர் இந்தித் திரையுலகின் முதல் ‘பெண் சூப்பர் ஸ்டார்ஆனதுவரையிலான அவரது பரிணாம வளர்ச்சியை சராசரி சினிமா ரசிகனாகக் கவனித்தவன் என்ற முறையிலும், எனது ஓட்டு எப்போதுமே ஸ்ரீதேவிக்குத்தான்! சொல்லப்போனால், ஸ்ரீதேவி தனது ஒவ்வொரு பருவத்திலும் நடித்த பல படங்கள் பற்பல காரணங்களுக்காக, (ஸ்ரீதேவி உட்பட!) எனக்குப் பிடித்திருந்தது போலவே பலருக்கும் பிடித்திருக்கக்கூடும் என்பதே என் அனுமானம்.

      நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே!என்று மக்கள் திலகம்
நம் நாடு படத்தில் தூக்கிக் கொஞ்சிய அந்தச் சிறுவன் வேடமிட்ட ஸ்ரீதேவியையும், ‘இதோ எந்தன் தெய்வம் முன்னாலேஎன்று, ‘பாபு படத்தில் நடிகர் திலகம் உச்சிமோந்த அந்தப் பெண் குழந்தையையும், இரண்டு திலகங்களின் சகாப்தத்தில் வாழ்ந்த சாமானிய ரசிகனால் எளிதில் மறக்க முடியாது.

      அவளுடே ராவுகள்படத்தின் மூலம் தென்னிந்தியத் திரையுலகை ஒரு கலக்குக் கலக்கிய ஐ.வி.சசியின் ‘ஆ நிமிஷம்’, ‘ஆலிங்கனம்போன்ற மலையாளப்படங்களில் ஸ்ரீதேவியைப் பார்த்த பருவம் வேறு; பார்வையும் வேறு; அந்த அனுபவங்களும் வித்தியாசமானவை! காரணம், குழந்தையா குமரியா என்ற குழப்பமான இடைப்பட்ட பருவத்தில், தமிழில் சென்சாரின் கத்திரிகளுக்குச் சர்வசாதாரணமாக இரையாகக்கூடிய காட்சிகளில் அந்தப் படங்களில் ஸ்ரீதேவி நடித்திருந்தார். (அப்படங்கள் முறையே ‘நூல்வேலி ‘பகலில் ஒரு இரவுஎன்ற பெயர்களில் தமிழிலும் தயாரிக்கப்பட்டு வெளிவந்தன)

      இந்த இக்கட்டான பருவத்தில், ஸ்ரீதேவி தமிழில் நடித்த படம் ‘மூன்று முடிச்சுஎன்னை வசீகரிக்கவில்லை. அப்போது ‘குமுதம்பத்திரிகையில் வந்த விமர்சனத்தில் தெரிவிக்கப்பட்ட பெரும்பாலான கருத்துக்களுடன் எனக்கு உடன்பாடு இருந்தது. இளம் சிற்றன்னைப் பாத்திரம், குருவி(ஸ்ரீதேவி) தலையில் வைக்கப்பட்ட பனங்காய் என்றாலும், கமல், ரஜினி இருவரும் தேற்றிய படம் என்பதே இன்றளவிலும் எனது கருத்தாக இருக்கிறது. இதைத் தொடர்ந்து வந்த ‘காயத்ரிஅடுத்தடுத்து சுஜாதாவின் கதைகளைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கும் ஒரு அபாயகரமான கலாச்சாரத்துக்கு வித்திட்ட படம் என்று எவ்வித ஈவு இரக்கமுமின்றி நான் சொல்லுவேன்.

      என்னைப் பொறுத்தவரை ஸ்ரீதேவியைக் கண்டுபிடித்தவர் பாரதிராஜா தான் என்பேன்! 16 வயதினிலேபடத்திலிருந்துதான் ஸ்ரீதேவி நட்சத்திரம் என்ற தளத்திலிருந்து நடிகை என்ற பீடத்துக்குத் தாவியேறினார். ஸ்ரீதேவிக்குள்ளிருந்த மயிலுவைக் கண்டெடுத்தவர் பாரதிராஜாதான்! சப்பாணி, பரட்டை, குருவம்மாள், வெள்ளையம்மாள் என்று அந்தப் படம் பல பாத்திரங்களை நம்முடன் நடமாடவிட்டாலும், மயிலு ஏற்படுத்திய தாக்கத்தைச் சொல்லி விளக்க முடியாது.

      தண்டவாளத்தருகே கண்டாங்கிச்சேலையுடுத்தி, ‘யார் வரவுக்கோ ஆவலுடன் காத்திருந்த அந்த மயிலை அறிமுகப்படுத்திய ஆரம்பக்காட்சியில், அந்தப் பெரிய கண்களைக் காட்டி, ‘இது இவளது கதைஎன்று குறிப்பாய்ச் சொன்ன பாரதிராஜாவின் துணிச்சல் அபாரமானது. கருப்பு வெள்ளைப்படங்களும், அறுபதுகளை விட்டு நகர மறுத்த திரைக்கதை பாணிகளும், சுவரொட்டிகளில் கூட பெயர் குறிப்பிடப்படாத அளவுக்குப் பின்னுக்குத் தள்ளப்பட்டிருந்த தொழில்நுட்பமும் வேண்டாவெறுப்பாய் கூடிக் குடித்தனம் நடத்திக் கொண்டிருந்த காலத்தில், பாரதிராஜா காட்டியது ஒரு புதிய படம்; அவர் கொண்டு வந்து நிறுத்தியவை புதிய கதாபாத்திரங்கள்; அவர் நமக்கு அறிமுகம் செய்வித்தது மயில் என்ற ஒரு கிராமத்துத் தேவதையை! அதைத் தொடர்ந்து வந்த காட்சியில் ‘ஆத்தா நான் பாசாயிட்டேன்! என்று ஓடிவந்து இமைசிமிட்டிய அந்த இளம்தேவதையின் அடுத்தடுத்த வெற்றிகள், இன்றைய வரலாறு!

                16 வயதினிலே படத்தின் அறிமுகக்காட்சியிலேயே, பரட்டை தெருவில் சண்டைபோடுவதை வெறுப்புடன் பார்க்கிற அந்த ஒற்றை ஃப்ரேமில் ஸ்ரீதேவியின் நடிப்புத்திறனுக்கு ஒரு அச்சாரம் கொடுத்திருப்பார் பாரதிராஜா. அந்தப் படம் வெளியான புதிதில், மஞ்சள் தாவணியணிந்த பெண்களையெல்லாம் ‘மயிலுஎன்று சொல்லி இளைஞர்கள் மாய்ந்ததும், தேர்தல் பிரச்சாரங்களில் கூட ‘மயிலு சொல்லிச்சு!‘ என்ற இரண்டு வார்த்தைகள் சர்வசாதாரணமாகப் பயன்பட்டதும், ‘கிழக்கே போகும் ரயில்படம் பொன்விழாவே கொண்டாடியபோதும், ‘மயிலு மாதிரி பாஞ்சாலி இல்லைஎன்று பலர் ஆதங்கப்பட்டதும், பாரதிராஜாவுக்கும், ஸ்ரீதேவிக்கும் கிடைத்த வெற்றியின் சான்றுகள்!

      வணக்கத்துக்குரிய காதலியேபடத்தில் இரட்டை வேடம். ‘ஸ்விங் ஸிவிங் ஸ்விங் உனது ஊஞ்சல் நான்என்று ரஜினியுடனும், ‘அடியேனைப் பாரம்மா பிடிவாதம் ஏனம்மாஎன்று விஜயகுமாருடனும் டூயட் பாடிய இரண்டு ஸ்ரீதேவிகளுமே கருப்பு வெள்ளையிலும் கலர்ஃபுல்லாய்த் தெரிந்தார்கள். ஆர்.சி.சக்தியும் கமலும் இணைந்து ஈஸ்ட்மென் கலரில் கழுத்தில் பிளேடு போட்ட ‘மனிதரில் இத்தனை நிறங்களா?படத்தில் ஸ்ரீதேவி உட்பட எதுவும் பிடிக்கவில்லை. (கமல் சொந்தக்குரலில் பாடிய ‘மாமா, மனசு இன்னிக்கு நல்லால்லேபாடல் தவிர). ஆனால் மீண்டும் பாரதிராஜா, கமல் கூட்டணியில் வந்த ‘சிவப்பு ரோஜாக்கள்படத்தின் கதாநாயகி சாரதாவை எளிதாக மறக்க முடியாது (இந்த மின்மினிக்குக் கண்ணிலொரு மின்னல் வந்தது பாடலில் நீச்சலுடை போட்டுக் கொண்டுவந்து, ஹும், அது ஒரு காலம்!) மக்கள் கலைஞரின் 150-வது படமான ‘டாக்ஸி டிரைவர்படத்தைப் பார்க்காதவர்கள், எங்காவது டிவிடி கிடைத்தால் ஸ்ரீதேவிக்காகவேனும் பார்த்து உய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். சுஜாதாவின் கதையைக் கழுவிலேற்றி எடுக்கப்பட்ட ‘ப்ரியாபடத்திலும் முன்பாதியில் உட்கார்ந்து பார்க்க முடிந்ததற்கு ஸ்ரீதேவியின் ஸ்க்ரீன் ப்ரெசன்ஸ் தான் காரணம். ரஜினியெல்லாம் சும்மா ஜுஜூபிதான்!

      ஸ்ரீதேவி-கமல் கூட்டணியில் ‘மீண்டும் கோகிலாஒரு இதமான நகைச்சுவை இழையோடிய அழகான படம். குரு’ ‘ தாயில்லாமல் நானில்லைபோன்ற படங்களை ஸ்ரீதேவிக்காகப் பார்த்த அடங்காப்பிடாரிகளில் அடியேனும் ஒருவன். நீல மலர்கள்என்ற இன்னொரு திராபைப்படத்தைக்கூட, ‘இது இரவா பகலாபாட்டுக்காகப் பார்த்துவிட்டு, ‘பைசா வசூல்என்று வீட்டுக்குக் கிளம்பியதுண்டு. ஆனால், ‘மூன்றாம் பிறை விமர்சகர்களால் காவிய அந்தஸ்து வழங்கப்பட்டு மகுடம் சூடிக்கொண்டது; அதில் பெரிய வியப்புமில்லை. ஸ்ரீதேவி அந்தப் படத்தை ஃப்ரேமுக்கு ஃப்ரேம் ஆக்கிரமித்திருந்தார் என்பதாலோ என்னவோ, இறுதிக்காட்சியில் கமல் மீது அனுதாபம் வரவழைக்க அவரைச் மலையில் உருட்டி, சகதியில் புரட்டி சில சாகசங்களைச் செய்ய வைக்க நேர்ந்தது இயக்குனர் பாலு மகேந்திராவுக்கு! அந்தக் காட்சியில்லாமலே கமலின் நடிப்பு அந்தப் படத்தில் ஒரு மைல்கல் என்பதில் எனக்கு எந்த சந்தேகமுமில்லை. (அட, ‘வறுமையின் நிறம் சிகப்புன்னு கூட ஒரு படமிருக்கில்லே? வேண்டாம், எதையாவது எழுதி யாராச்சும் சண்டைக்கு வரப்போறாங்க!)

      ஸ்ரீதேவி-ரஜினி படங்கள் என்றால் சட்டென்று ஞாபகத்துக்கு வருவது ‘தர்மயுத்தம்’ ‘ஜானிமற்றும் ‘அடுத்த வாரிசுஆகிய படங்கள் தான். ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் சக்கைபோடு போட்டு, அதே படம் பின்னால் தமிழில் தோல்வியடைந்தது ‘நான் அடிமை அல்ல படத்தில்தான். ஜானிபடத்தில் ஸ்ரீதேவியின் கதாபாத்திரம் அற்புதமானது. கதாநாயகனுக்காக உருகுகிற ஒரு பாடகியாக அவர் வாழ்ந்தேயிருந்தார். ஒரு குறிப்பிட்ட காட்சி இன்னும் என் மனதில் பசுமையாய் இருக்கிறது.

      மோசடிப்பேர்வழியான ரஜினியை ஸ்ரீதேவி காதலிக்க, ரஜினி மறுக்க, ஸ்ரீதேவி கோபமாக ‘என்னைக் கேவலமானவன்னு நினைச்சுத்தானே வேண்டாம்கறீங்க?என்று கேட்க, ஒரு வழியாக ரஜினி தானும் காதலிப்பதாகச் சொல்லிவிட்டு, ‘என்ன இப்படியெல்லாம் பேசிட்டீங்க?என்று கேட்க, ‘ நான் அப்படித்தான் பேசுவேன்என்று பதிலளித்துவிட்டு, தலையை அசைப்பார் பாருங்கள்! நோ சான்ஸ்!

      சிவாஜிக்கு மகளாக நடித்து, பின்னாளில் ஜோடியாக நடித்து, வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொண்டவர் ஸ்ரீதேவி! விஸ்வரூபம்மற்றும் ‘சந்திப்புஆகிய படங்களில் சிவாஜியோடு டூயட் பாடியபோது, சிவாஜி ரசிகர்களுக்கே கூட அழுவதா, சிரிப்பதா என்று புரியாமல் மலங்க மலங்க விழித்து வழிந்து கொண்டிருந்தோம். (ஆனால், ‘பட்டாக்கத்தி பைரவன்படத்தை ஸ்ரீதேவியின் காஸ்ட்யூமுக்காகவே பார்க்கலாம்!)

      ஹோசூரில் வசித்த காலங்களில் பார்த்த தெலுங்குப்படங்களில் தேவதா’ ‘பிரேமாபிஷேகம்‘ ‘ஜஸ்டிஸ் சௌத்ரிஆகியவையும் அடக்கம்! காரணம், புரிந்திருக்குமே, ஸ்ரீதேவிதான்! தமிழில் அடக்க ஒடுக்கமாக நடிக்கிற நம்மூர் தேவதைகள், ஆந்திராப் பக்கம் போனால் மட்டும் அதீதமான ஸ்டெப்ஸுலு, கவர்ச்சியான ட்ரெஸ்ஸுலு என்று அக்கிரமம் புரிவதையெண்ணி வயிறெரிந்ததுமுண்டு. அதுவும் ஸ்ரீதேவிகாரு, ம்ம்ம்ம்ம்ம்!

      இந்திப்படங்களில் தென்னிந்தியக் கதாநாயகிகள் நடித்திருக்கிறார்கள்,வெற்றி பெற்றிருக்கிறார்கள்! ஆனால், வைஜயந்திமாலாவும், பத்மினியும் நிச்சயமாக இந்தித் திரையுலகின் முடிசூடா ராணிகளாக இருந்தது கிடையாது. அந்த இடத்தைப் பிடித்த முதல் தென்னிந்திய நடிகை ஸ்ரீதேவிதான்! அதை அவரிடமிருந்து பறிப்பதற்கு ஆனானப்பட்ட மாதுரி தீட்சித்தே போராட வேண்டியிருந்தது.

      ஸ்ரீதேவி நடித்த ‘சோல்வா சாவன்’ (16 வயதினிலே) படத்தைத் தூரதர்ஷனில் பார்த்தபோது, அந்தப் படம் வெற்றியடைந்திருந்தால் ஆச்சரியப்பட்டிருக்க வேண்டும் என்று தோன்றியது. அமோல் பாலேகரிடம் பாரதிராஜா எப்படி ஒரு கமலை எப்படி எதிர்பார்த்தார் என்று புரியவில்லை. ‘சத்மா’ (மூன்றாம் பிறை) படத்தை தில்லி சங்கம் திரையரங்கில் பார்த்தபோதே, ‘இது தேறாதுஎன்பது புரிந்துவிட்டது. (யார் உழைப்பிலும் எந்தக் குறையும் சொல்ல முடியாதபோதும்)

      இந்தித்திரையுலகை டி.ராமராவ், தாசரி நாராயண ராவ் ஆகிய தெலுங்குப்பட இயக்குனர்கள் கிட்டத்தட்ட ஆக்கிரமித்த காலம் அது. ஜிதேந்திரா, ஸ்ரீதேவி, காதர்கான், சக்தி கபூர் என்று சரவணபவன் மினிமீல்ஸ் மாதிரி அடுத்தடுத்துப் பல படங்கள் வெளிவந்து ஓரளவு வெற்றியும் பெற்றன என்பதால், நம்மூர் கமல், ரஜினி, ஸ்ரீதேவி எல்லாரும் ஒரு ரவுண்டு அடித்துக் கொண்டிருந்தார்கள். (ராதா கூட ‘காம்யாப்என்ற படத்தில் நடித்தார். படத்தின் பெயரிலிருந்த காம்யாப்(வெற்றி) அவருக்கு அங்கு கிடைக்கவில்லை)

      மூன்றாம் பிறை தராத கவனிப்பை ஸ்ரீதேவிக்குத் தந்த படம் ‘மிஸ்டர் இந்தியா’.  முதன்முதலாக காமெடி, கிளாமர், நடிப்பு என்று அவருக்குச் செமத்தியான வாய்ப்புகளைக் கொடுத்த படம் அது. நிச்சயமாக இதுவே அவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தபடம். இதையடுத்து அமிதாப்புடன் நடித்த இன்குலாப் தோல்வியடைந்தாலும், இன்னொரு பக்கத்தில் தெலுங்கிலிருந்து தருவிக்கப்பட்ட மசாலாக்கள் கைகொடுத்துக் கொண்டிருந்தன. ரிஷிகபூருடன் ஸ்ரீதேவி நடித்த ‘நகீனா வசூலில் பல சாதனைகளைச் செய்தது. ‘மே தேரி துஷ்மன் துஷ்மன் து மேரா’ என்ற பாடலை வட இந்தியாவில் திருமணங்களின்  பாராத்( மாப்பிள்ளை ஊர்வலம்)களில் தவறாமல் கேட்க முடிந்தது.

      ஸ்ரீதேவியின் இந்திப்படங்கள் பற்றி தனியாகவே ஒன்று அல்லது இரண்டு இடுகைகள் எழுதலாம். விரைவில் எழுதுவேன். அவர் அங்கு அடைந்த வெற்றி மிகுந்த போராட்டங்கள், விமர்சனங்கள், கிண்டல்கள் ஆகியவற்றைக் கடந்து பெற்றது. நடனம் ஆடத்தெரியாது, இந்தி உச்சரிப்பு சரியில்லை, மூக்கு சரியில்லை...என்றெல்லாம் ஓரங்கட்ட முயன்றபோதெல்லாம், ஒரு சூப்பர் ஹிட் படத்தைக் கொடுத்து, அடுத்த படிக்கு முன்னேறியவர் ஸ்ரீதேவி!

      இப்போதைக்கு, மீண்டும் திரைக்குத் திரும்பியிருக்கும் ஸ்ரீதேவிக்கு நல்வாழ்த்துகள்! தன் வயதுக்கேற்ற கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து மீண்டும் ஒரு ரவுண்டு வருவார் என்பதே எனது தற்போதைய எதிர்பார்ப்பு.

15 comments:

சசிகலா said...

யாருக்கு தெரியும் மீண்டும் இளைய கதாநாயகியாக வரவும் செய்வார்களோ ?

Thozhirkalam Channel said...

நல்ல அலசல்...

பால கணேஷ் said...

வரிக்கு வரி ஆமோதிக்கிறேன். நானும் உங்களின் பார்வையிலிருந்து ஸ்ரீதேவியை ரசித்தவன் மற்றும் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் படங்களையெல்லாம் பார்த்தவன் என்கிற முறையில். ஹிந்தியில் அவர் நடித்த படஙகள், செய்த சாதனைகள் மிகச் சிலதான் எனக்குத் தெரியும் என்பதால் இதை நீங்கள் தொடர்நதால் மகிழ்வு எனக்கு. மயிலுவைத் தொட்ர்ந்து எழுதுங்கண்ணா.

Ponchandar said...

கவிக்குயில் - ஸ்ரீதேவி.....
பாலநாகம்மா - ஸ்ரீதேவி.....
ஸ்ரீதேவிக்காக பார்த்தபடங்கள்..

ஹிந்தியில் “சாந்தினி” அவருக்காக ஓடிய படம்.. ஜோத்பூரில் ஒரு திரையரங்கில் பார்தேன்...

“அகல்மந்த்” ஜித்தேந்திராவுடன் தமிழ் பெண்ணாகவே நடித்திருப்பார்.

semmalai akash said...

யப்பாடா! இம்புட்டு இருக்கா? இவங்களைப்பற்றிய தகவல்கள் எல்லாமே புதுசா இருக்கு, நான் இவங்க நடித்தப் படங்களில் பத்து படம்கூட பார்த்திருக்கமாட்டேன். தேட்டர்ல போய் ஒரு படம்கூட பார்த்திருக்க வாய்ப்பில்லை, எனக்கு விபரம் தெரிந்து படம்பார்க்க வந்த காலத்தில் இவங்களுக்குத்தான் கல்யாணம் ஆயிடுச்சே! இவங்க படம் பார்த்தேன் என்று இப்போது ஞாபகம் இருப்பது.

வறுமையின் நிறம் சிவப்பு.
வாழ்வே மாயம்,
16 வயதினிலே
மூன்றாம் பிறை
அப்பறம் இன்னொரு படம் பெயர் ஞாபகம் இல்லை, அதுல இவங்க போதையில் சாரியை நழுவ விட்டுகிட்டே இருப்பாங்க, கமல்ஹாசன் அதை எடுத்து எடுத்து போடுவார். அப்படி ஒரு பாடல் இருக்கு.சரியாக ஞாபகம் இல்லை.
ம்ம்ம் அருமை இவ்ளோ தகவல்களை எங்க கண்முன்னாலேயே கொண்டுவந்து சேர்த்துட்டிங்க..நன்றி ஐயா.

அருணா செல்வம் said...

திறமைக்கு என்றுமே
மதிப்பு இருக்கும் ஐயா.

ஸ்ரீராம். said...

ஸ்ரீதேவி பற்றிய விரிவான அலசல்.
அவருக்கு ஜோடியாக நடித்தவர்களில் பாந்தமான ஜோடி கமல்தான் என்று நினைக்கிறேன்! செம்மலை ஆகாஷ் சொல்லியிருக்கும் படம் குரு! ஹிந்தி ஜுகுனூ வின் தமிழ் வடிவம்! தமிழ்ப் பெண் ஒருத்தி இந்தித் திரையுலகை ஆட்டி வைத்தார் என்ற இடத்தில் ஹேமா மாலினியை மறந்து விட்டீர்கள். இவராவது தமிழில் தடம் பதித்து அங்கு சென்றார். ஆனால் அவர் (ஹேமா) ஸ்ரீதரால் தமிழில் நிராகரிக்கப் பட்டு, அங்கு சென்று ஜெயக்கொடி நாட்டியவர். மனிதரில் இத்தனை நிறங்களா படத்தில் எஸ் பி பியின் அருமையான 'மழை தருமோ' பாடலை விட்டு விட்டீர்களே!

வெங்கட் நாகராஜ் said...

விரிவான அலசல் சேட்டை ஜி!

அடுத்து ஒரு வெற்றிகரமான ரவுண்டு வருவார் என எதிர்ப்பார்க்கலாம்....

Unknown said...

98ல் மளையாளப் படம் இயக்குனர் பரதன் இயக்கிய தேவராகம்..! நமது ஜானகிராமனின் மோகமுள் நாவல் சாயலில் எடுத்த அரவிந்த்சுவாமி நடித்த படம்! மீண்டும் ஸ்ரீதேவியை அதே இளைமையுடன் பார்த்தது.....!பல வருடங்களுக்கு பிறகு...இந்தப் படம்.

Anonymous said...

சூப்பர் சார்... என்னே ஒரு அனுபவ பதிவு... கூடிய சீக்கிரம் ஸ்ரீதேவியின் இந்திப்படங்கள் பற்றி தனியாகவே ஒன்று அல்லது இரண்டு இடுகைகள் போடுங்க சார்....

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஸ்ரீதேவி பற்றிய நல்ல அலச்ல்.

// மயிலு ஏற்படுத்திய தாக்கத்தைச் சொல்லி விளக்க முடியாது.//

ஆமாம் ஆமாம். ;))))) அதே அதே !

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல அலசல்...

தங்களின் ரசனையை ரசித்தேன்...

மாலதி said...

நல்ல அலசல்... .நன்றி ஐயா.

சமீரா said...

நல்ல ஒரு அலசல்.. ஸ்ரீதேவி எனக்கும் ரொம்ப பிடிக்கும்.. நீங்கள் குறிப்பிட்ட பல படங்கள் naan பார்த்ததில்லை.. அவர் நடிப்பில் மிக பிடித்த படம் வாழ்வே மாயம், 16 வயதினிலே இன்னும் சில..

Ranjani Narayanan said...

எனக்கு மிகவும் பிடித்த ஸ்ரீதேவியை பற்றி மிகச் சிறப்பாக அலசி விட்டீர்கள்.

கருப்பு வெள்ளையிலும் அழகு அவர்!

தெலுங்கில் அவர் நடித்த 'க்ஷணக்ஷணம்' சூப்பர்!
(தமிழிலும் 'டப்' செய்யப்பட்டது)