Wednesday, September 21, 2011

மூக்கு ஜோசியம்

மனிதனுக்கு இரண்டு கண்கள், இரண்டு காதுகள், இரண்டு இதழ்கள், இரண்டு புருவங்களைக் கொடுத்த இறைவன் ஒரே ஒரு முக்கை மட்டும் ஏன் வைத்தான் என்பது புரியவில்லை. (மூளையும் ஒன்றே ஒன்றுதானே என்று கேட்பவர்களுக்கு-உங்களுக்கு இருக்கிறது என்பதற்காக, என்னைக் கடுப்பேற்றாதீர்கள்!).

இந்த மூக்கு என்பதை இலக்கியமோ, சினிமாப்பாடல்களோ கண்டுகொள்ளுவதேயில்லை. கண்ணை மலரோடு ஒப்பிடுகிறார்கள்; புருவத்தை வில்லோடு ஒப்பிடுகிறார்கள்; இதழ்களை குங்குமச்சிமிழ் என்கிறார்கள்; பற்களை முத்துக்கள் என்கிறார்கள்; ஆனால், ஒருபாவமும் அறியாத மூக்கைப் பற்றி யாரும் வருணிக்காமலிருப்பதன் காரணமென்ன என்று பலமுறை கஜேந்திரன் டீ ஸ்டாலில் மூக்கைப்பிடித்தபடி கட்டிங்-சாயா குடிக்கையில் நான் மும்முரமாக யோசித்ததுண்டு.

மூக்கு என்றால் சாதாரணமா?

-அவனுக்கு ’மூக்கில் வியர்த்து விடும்’ என்று ஒருவரின் உள்ளுணர்வைப் பாராட்டுவார்கள்.

-’மூக்கு முட்டச் சாப்பிட்டேன்,’ என்று நிறைவோடு ஏப்பம் விடுவார்கள்.

-’அடுத்தவர் விஷயத்தில் மூக்கை நுழைக்காதே,’ என்று நாகரீகத்தைக் கற்றுக்கொடுப்பார்கள்.

-’மூக்கிருக்கிறவரைக்கும் ஜலதோஷமிருக்கும்,’ என்று வாழ்க்கைத்தத்துவத்தை விளக்குவார்கள்.

ஆனாலும், மனித சமுதாயம் மூக்குக்கு இலக்கியத்திலோ, வரலாற்றிலோ அதற்குரிய இடத்தை வழங்காமல் வழிவழியாக வஞ்சித்து வந்திருப்பதை எண்ணினால் அதை நினைத்து மூக்கால் அழ வேண்டும் போலிருக்கிறது. மூக்கை கவுரவிக்காவிட்டாலும் பரவாயில்லை; மூக்கை வைத்து மனிதர்களைக் கேலி செய்பவர்களின் மூக்கறுக்க என்னதான் வழி?

சப்பைமூக்கு, போண்டாமூக்கு, கிளிமூக்கு என்றெல்லாம் சொல்லி மனிதர்களுக்கு அவரவர் மூக்கின்மீதே மூக்குக்கு மேல் கோபத்தை வரவழைப்பவர்களை என்ன செய்யலாம்? மண்ணடியில் ராக்கெட் ராமானுஜம் என்று ஒருவர் மிகப்பிரபலம். அவருக்கும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் எந்த சம்பந்தமுமில்லையென்றாலும், அவரது நீளமான மூக்கு காரணமாக அவரை ராக்கெட் ராமானுஜம் என்று சொல்கிறார்கள். ஆனால், அவர் அது குறித்துக் கவலைப்பட்டதேயில்லை.

"இத்தனை வருஷத்துலே நான் ஒருவாட்டி கூட ஆபீசுக்கு லேட்டாப்போனதில்லை தெரியுமா? நானே லேட்டாப்போனாலும் என் மூக்கு முன்னாடியே போயிருக்கும்!" என்று பெருந்தன்மையோடு தனது மூக்கு குறித்த கிண்டலை அலட்சியம் செய்வார்.

இதே போலத்தான், போண்டாமூக்கு புண்ணியகோடியும்! மயிலாப்பூர் கற்பகம் விலாஸில் மசால்தோசை போடுவதை மந்தவெளி பஸ் ஸ்டாண்டிலேயே கண்டுபிடித்து விடுவார். இந்த ஒரு திறனாலேயே, இரவு வீட்டில் என்ன டிபன் என்பதை அறிந்து வீட்டுக்குள் நுழையும்போதே ’வயிறு சரியில்லை; வெறும் மோர் கொடு,’ என்று இத்தனை நாட்களாய்த் தப்பித்து வருகிறார் என அறிக.

ஆனால், மூக்கின் முக்கியத்துவத்தைக் குறித்து நம்மை விட மேல்நாட்டவர் நன்கு அறிந்திருக்கிறார்கள். ’நெஸ்லே’ நிறுவனத்தில் காப்பி ருசிப்பாளராகப் பணியாற்றும் டேவ் ராபர்ட்ஸ் என்பவர், காப்பியை முகர்ந்து பார்ப்பதற்கு உதவும் தனது மூக்கை 2.7 மில்லியன் டாலர்களுக்குக் காப்பீடு செய்திருக்கிறாராம். அதைத் தொடர்ந்து, பல காப்பீடு நிறுவனங்கள் மூக்குக்கென்றே பல்வேறு காப்பீடு திட்டங்களை மூக்கீது, அதாவது தாக்கீது செய்திருக்கிறார்களாம்.

அது மட்டுமா?

இங்கிலாந்து விஞ்ஞானிகள் சமீபத்தில் குற்றவாளிகளின் மூக்கை வைத்தே அவர்களை மூக்கும் களவுமாய்ப் பிடிப்பதற்காக ஒரு வழிமுறையைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். இதுவரை கைரேகையை நம்பியிருந்த காவல்துறையினர் இனிமேல் குற்றவாளிகளின் மூக்குகளையும் படம்பிடித்து வைத்துக் கொள்வார்கள். அதன்பிறகு, எங்காவது எசகுபிசகாய் ஏதேனும் நடந்தால், சந்தேகத்துக்கிடமான மூக்குகளைக் கைது செய்து, அதாவது அந்த மூக்குக்கு சொந்தக்காரர்களைக் கைது செய்து விடுவார்களாம். (உட்கார்ந்து யோசிப்பாய்ங்க போலிருக்குது)

இதற்காகவே, மனிதர்களின் மூக்குகளை ஆறுவகையாகத் தரம்பிரித்திருக்கிறார்களாம். அவையாவன:


ரோமன்(Roman), க்ரீக்(Greek), நூபியன்(Nubian), ஹாக்(Hawk), ஸ்னப் (Snub) மற்றும் டர்ன்ட்-அப் (Turned-up).

பாத் பல்கலைக்கழகத்தின் டாக்டர். அட்ரியன் இவான்ஸ்,"முக்கைப் படம்பிடிப்பது சுலபம்; மூக்கை மறைப்பது மிகக்கடினம். ஆகவே, மூக்கோடு மூக்கை ஒப்பிடுவதன் மூலம் பல குற்றங்களைத் துப்புத்துலக்கி விடலாம்," என்கிறார். அது மட்டுமா? கிரெடிட் கார்டு, ஏ.டி.ஏம்.மோசடிகளில் ஈடுபடுகிறவர்களின் மூக்கை அடையாளம் காணும் வழிமுறைகள் பற்றியும் பேச் ஆரம்பித்து விட்டார்கள்.

அதெல்லாம் சரி, மூக்கு ஜோசியம் என்ற தலைப்புக்கும் இந்த இடுகைக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா?

ஹிஹி, நம்மாளுங்க விஞ்ஞானம் எதைக் கண்டுபிடித்தாலும் அதை வைத்து, சுலபமாக ஒரு ஓட்டு ஓட்டுவதில் விற்பன்னர்கள் ஆயிற்றே! சென்னை வொயிட்ஸ் சாலையில் ஒரு ஜோசியர் மனிதர்களின் தலைமயிரை வைத்து ஜோசியம் சொல்கிறாராம். (கேட்டால் DNA விஞ்ஞானத்தின் அடிப்படை என்பாரோ என்னமோ)

சைமன் பிரவுன் என்பவர் "தி சீக்ரெட்ஸ் ஆஃப் ஃபேஸ் ரீடிங்," என்று ஒரு புத்தகம் எழுதியிருக்கிறாராம். அதில், மனிதரின் மூக்கை வைத்தே, அவர்களது குணாதிசயத்தைக் கண்டுபிடித்து விடலாம் என்று விளக்கியிருக்கிறாராம். உதாரணத்துக்கு....

ஆறாம் வகையான டர்ன்ட்-அப் (Turned up) மூக்கை உடையவர்கள், "மிகவும் இனிமையானவர்கள்;உற்றார் உறவினருடன் அன்போடு இருப்பவர்கள்; புதிது புதிதாக ஏதேனும் செய்யத் துடிப்பவர்கள்; திருமண உறவில் அதிக நாட்டமும் நம்பிக்கையும் உள்ளவர்கள்," என்றெல்லாம் சொல்லியிருக்கிறாராம். இதற்கு அழகி மர்லின் மன்றோவை உதாரணமாக வேறு காட்டியிருக்கிறார்.

அப்புறம் என்ன, ஆறு வகை மூக்குகளுக்கும் ஆறு இந்தியப் பெயரிட்டு விட்டால் போயிற்று!

கைரேகை ஜோசியம் கொடிகட்டிப் பறக்கும்போது மூக்கு ஜோசியம் சோடையா போய்விடும். வேண்டுமென்றால், பொடிபோடுகிறவர்களுக்கு எக்ஸ்டிராவாக தட்சிணை வாங்கிவிட்டால் போயிற்று!

ஜாதகங்களில் வேண்டுமானால் தோஷம் இல்லாமல் போகலாம். ஆனால், மூக்கு என்று இருந்தால் கண்டிப்பாக ஜலதோஷம் வந்தே தீருமல்லவா? அது போன்ற சமயங்களில் ஸ்பெஷலாக ’சளிப்பெயர்ச்சி’ என்று ஒரு கையடக்கப் புஸ்தகம் போட்டால் பட்டிதொட்டியெங்கும் பெட்டிக்கடைகளில் விற்பனை அமோகமாயிருக்கும்.

தொலைக்காட்சிகளில் ’பிரபல நாசி ஜோசியர்,’ தினசரி மூக்குப்பலன்களைச் சொல்லி காலைமலர்-ல் கலக்கலாம். யார் கண்டார்கள்? இனிவரும் நாட்களில் மூலை முக்கெல்லாம் மூக்கு ஜோசியர்கள் இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

பி.கு: இந்த இடுகையை வாசித்து விட்டு, வியப்பில் மூக்கின் மீது விரலை வைப்பவர்கள், கவனமாக அவரவர் மூக்கின் மீது அவரவர் விரல்களை வைக்குமாறு கோரப்படுகிறார்கள்.

31 comments:

நாய் நக்ஸ் said...

நல்ல முக்கு ஜோசியம் ....
உங்க முக்க இன்சூர் செய்திடீங்களா

வை.கோபாலகிருஷ்ணன் said...

மூக்கு ஒன்றாயினும் ஓட்டைகள் இரண்டல்லவோ.

நவத்துவாரங்களில் அருகருகே ஒற்றுமையாக உள்ளது இந்த மூக்குத் துவரங்கள் மட்டுமே!

மூக்கு இல்லாது போனாலும், காதுகள் இல்லாது போனாலும் மூக்குக்கண்ணாடி அணிவது கஷ்டமல்லவோ! மூக்கு அதைத் தாங்கிப் பிடித்துக் கொள்வதால் தான் கண் பார்வையே தெரிகிறது, என்கிறார், மூக்கண்ணாடி அணிந்தவர்.

மூக்கிலே மட்டும்தான் பொடியேற்ற முடியும் என்கிறார் வ வ ஸ்ரீ என்றொருவர்.

மூக்கில் விரல் வைக்கும்படி மூக்கு சம்பந்தமாக இன்னும் எவ்வளவு தகவல்கள் உள்ளனவோ!

பதிவுக்குப் பாராட்டுக்கள்.

Yoga.s.FR said...

நல்லா மூக்குப் பிடிக்க சாப்பிட்டுட்டு,மூக்கு பத்தி எழுதியிருக்கீங்க போல?

Yoga.s.FR said...

எதுவாயிருந்தாலும் பார்த்து எழுதுங்க!////பாத்து எழுதுறதுக்கு,இங்க என்ன பிளஸ்-டூ எக்ஸாமா நடக்குது

Yoga.s.FR said...

இங்கே வடையெல்லாம் கிடைக்காது! வெரி வெரி சாரி!////அதெல்லாம் ஒண்ணும் வேணாம்,சூடா மசால் தோச கெடைக்குமா?

பொன் மாலை பொழுது said...

/// ’சளிப்பெயர்ச்சி’ என்று ஒரு கையடக்கப் புஸ்தகம் /////
இதுதான் உங்க மூக்கின்...........சாரி உங்க மூளையின் ஸ்பெசாலிடி :)))

சத்ரியன் said...

சேட்டையாரே!

இத்தனை நூற்றாண்டுகளய் நம் இலக்கியங்களில் மூக்கிற்கு உரிய
இடம் தரவில்லை என்ற குறை, உங்களின்
இப்பதிவால் நீங்கியது!

Philosophy Prabhakaran said...

சொன்னா நம்பமாட்டீங்க நேத்து தான் இந்த மூக்கு மேட்டரை பற்றி நானும் சிந்தித்தேன்... அது என்னன்னா பொண்ணுங்க கண் அழகு, லிப்ஸ் அழகுன்னு சொல்றா மாதிரி மூக்கு ஒரு முக்கியமான விஷயம்... ஒருத்தருக்கு மூக்கு இருக்க வேண்டிய சைசில், ஷேப்பில் இல்லையென்றால் அவரது மொத்த உருவமே அழகற்று தெரியும்...

Philosophy Prabhakaran said...

த்ரிஷா மூக்கு பார்த்திருக்கிறீர்களா... மூக்குன்னா அப்படித்தான் இருக்கணும்... அவ்வளவுதான் இருக்கணும்...

நிரூபன் said...

வணக்கம் சகோதரம்,

மூக்குப் பற்றி இம்புட்டு விசயங்கள் இருக்கா..

நகைச்சுவையாகவும், அறிவியல் ரீதியிலும், உடல் அவையங்களின் அடிப்படையிலும் மூக்கினைப் பற்றி அழகாகச் சொல்லியிருக்கிறீங்க.

Unknown said...

மாப்ள மூக்குல இம்புட்டு விஷயம் இருக்காய்யா....நமக்கு மூக்குக்கு மேல கோவத்த விட வேற என்ன இருக்குன்னு நெனச்சி இருந்தேன் ஹிஹி!

இராஜராஜேஸ்வரி said...

கடைசி நேரத்தில் மூக்கை நீட்டி ஜெயிக்கும் பந்தயக் குதிரையாக அருமையான வெற்றிவாகை சூடிய பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

இராஜராஜேஸ்வரி said...

மூக்கால் முணகிக்கொண்டே பதிவிட்டீர்களா?

வெங்கட் நாகராஜ் said...

மூக்கு வைத்தே ஒரு பகிர்வு.... அதுல எத்தனை வகை.... இங்கே ஒருத்தருக்கு நாங்க ”பீரங்கி மூக்கன்” ந்னு பேரே வைத்திருக்கிறோம்... :)

நல்ல நகைச்சுவை பகிர்வு.. நன்றி சேட்டைஜி!

rajamelaiyur said...

I will give nose full sorry nobel award to you

பால கணேஷ் said...

நாம தமிழ்நாட்லதான் மூக்கன், மூக்காயி என்றெல்லாம் பெயர்களை வைத்து மூக்கை கௌரவப்படுத்துகிறோமே... பெண்கள் மூக்கை வர்ணிக்க எள்ளுப்பூ நாசி என்றொரு வர்ணனை நான் கேட்டதுண்டு. அருமையான நடை உங்களுடையது சேட்டையண்ணா.

Unknown said...

சூப்பர் சேட்டை!
என்னென்ன விதமான மூகேல்லாம் இருக்கு! கொழுக்கட்டை மூக்கு, நாய் மூக்கு - மேல் பகுதி சற்றே உள்நோக்கி வளைந்திருக்கும்!
அட்டகாசமான பதிவு!

வெட்டிப்பேச்சு said...

//இந்த ஒரு திறனாலேயே, இரவு வீட்டில் என்ன டிபன் என்பதை அறிந்து வீட்டுக்குள் நுழையும்போதே ’வயிறு சரியில்லை; வெறும் மோர் கொடு,’ என்று இத்தனை நாட்களாய்த் தப்பித்து வருகிறார் என அறிக.//

சிலருக்கு இதுபோன்றவைகள் ஒரு வரம் போல் அமைந்து விடுகிறது..

வாழ்த்துக்கள்

இந்திரா said...

மூக்கை வைத்து என்னமா ஆராய்ச்சி பண்ணியிருக்கு பயபுள்ள..

MANO நாஞ்சில் மனோ said...

எலேய் என் மூக்குல உன் சேட்டையை காட்டிட்டியே ஹி ஹி....

சாந்தி மாரியப்பன் said...

அட்டகாசம் :-))

SURYAJEEVA said...

எனக்கு ரோமன் மூக்கு என்பதை உங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன்..

சென்னை பித்தன் said...

சனிப்பெயர்ச்சி போய் இப்போது சளிப்பெயற்சியா?சூப்பர்.

settaikkaran said...

//NAAI-NAKKS said...

நல்ல முக்கு ஜோசியம் ....உங்க முக்க இன்சூர் செய்திடீங்களா//

நீங்க ஒரு இன்சூரன்ஸ் கம்பனி ஆரம்பிச்சா முத போணி என் மூக்கு தான்! மிக்க நன்றி! :-)

//வை.கோபாலகிருஷ்ணன் said...

மூக்கு ஒன்றாயினும் ஓட்டைகள் இரண்டல்லவோ. நவத்துவாரங்களில் அருகருகே ஒற்றுமையாக உள்ளது இந்த மூக்குத் துவரங்கள் மட்டுமே!//

ஆஹா! அதிசயிக்கத்தக்க தகவல்! ஒட்டிப்பிறந்த ஓட்டைப்பிறவிகள்! :-)

//மூக்கு இல்லாது போனாலும், காதுகள் இல்லாது போனாலும் மூக்குக்கண்ணாடி அணிவது கஷ்டமல்லவோ! மூக்கு அதைத் தாங்கிப் பிடித்துக் கொள்வதால் தான் கண் பார்வையே தெரிகிறது, என்கிறார், மூக்கண்ணாடி அணிந்தவர்.//

உண்மைதான்! மூக்கு ஒரு சுமைதாங்கி; பலருக்கு அது இடிதாங்கி போலிருந்தாலும் கூட! :-)

//மூக்கிலே மட்டும்தான் பொடியேற்ற முடியும் என்கிறார் வ வ ஸ்ரீ என்றொருவர்.//

அடடா, இந்த மேட்டரை மறந்துவிட்டேனே. சரியான வழுவட்டையாகி விட்டேனே! :-)))))

//மூக்கில் விரல் வைக்கும்படி மூக்கு சம்பந்தமாக இன்னும் எவ்வளவு தகவல்கள் உள்ளனவோ! பதிவுக்குப் பாராட்டுக்கள்.//

இருக்கும் ஐயா! மிகவும் நீளமாக இருந்தால் வாசிப்பவர்களுக்கு ஜலதோஷம் மாதிரி பலதோஷம் வந்து விடுமோ என்று தான் தேடியது போதும் என்று நிறுத்திக்கொண்டேன்.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா! :-)

settaikkaran said...

//Yoga.s.FR said...

நல்லா மூக்குப் பிடிக்க சாப்பிட்டுட்டு,மூக்கு பத்தி எழுதியிருக்கீங்க போல?//

மூக்குப் பிடிக்க சாப்பிட்டா அப்புறம் எங்கே எழுதறது? குறட்டைதான்! :-)

//பாத்து எழுதுறதுக்கு,இங்க என்ன பிளஸ்-டூ எக்ஸாமா நடக்குது//

ப்ளஸ் டூ எல்லாம் இல்லே! மைனஸ் ஒன்- ஆகியிரக்கூடாதில்லையா? (அதாவது delete பண்ண வச்சிரக்கூடாதில்லையா?)

//அதெல்லாம் ஒண்ணும் வேணாம்,சூடா மசால் தோச கெடைக்குமா?//

மாவாட்டிக்கிட்டிருக்கேன்; அரைச்ச மாவையே! :-)
வருகைக்கு நன்றி!

//கக்கு - மாணிக்கம் said...

இதுதான் உங்க மூக்கின்...........சாரி உங்க மூளையின் ஸ்பெசாலிடி :)))//

வாங்க வாங்க துர்வாசரே! :-)

சினந்தணிந்து ஆசி வழங்கியதற்கு மிக்க நன்றி! :-)

//சத்ரியன் said...

சேட்டையாரே! இத்தனை நூற்றாண்டுகளய் நம் இலக்கியங்களில் மூக்கிற்கு உரிய இடம் தரவில்லை என்ற குறை, உங்களின் இப்பதிவால் நீங்கியது!//

அப்போ நானும் ஒரு இலக்கியவியாதி-ன்னு சொல்றீங்களா? :-)))
மிக்க நன்றி நண்பரே! :-)

//Philosophy Prabhakaran said...

சொன்னா நம்பமாட்டீங்க நேத்து தான் இந்த மூக்கு மேட்டரை பற்றி நானும் சிந்தித்தேன்... அது என்னன்னா பொண்ணுங்க கண் அழகு, லிப்ஸ் அழகுன்னு சொல்றா மாதிரி மூக்கு ஒரு முக்கியமான விஷயம்... ஒருத்தருக்கு மூக்கு இருக்க வேண்டிய சைசில், ஷேப்பில் இல்லையென்றால் அவரது மொத்த உருவமே அழகற்று தெரியும்...//

ஒரு விதிவிலக்கு ஜோதிகா! கொஞ்சம் எக்ஸ்ட்ரா-லார்ஜ் சைஸ் மூக்குதான் என்றாலும், ஜோவுக்கு அதுவும் ஒரு அழகு. (சூர்யாண்ணே, ஜோ எனக்கு அக்கா மாதிரிண்ணே...அவ்வ்வ்வ்வ்வ்வ்!)

//த்ரிஷா மூக்கு பார்த்திருக்கிறீர்களா... மூக்குன்னா அப்படித்தான் இருக்கணும்... அவ்வளவுதான் இருக்கணும்...//

த்ரிஷாவையா? வி.தா.வருவாயா பார்த்ததுலேருந்து கொஞ்ச நாள் ஜெஸ்ஸி ஞாபகமா, கான்ஸ்டிபேஷன் மாதிரி ரொம்பக்கஷ்டப்பட்டேன். :-)

மிக்க நன்றி நண்பரே! :-)

settaikkaran said...

//நிரூபன் said...

வணக்கம் சகோதரம், மூக்குப் பற்றி இம்புட்டு விசயங்கள் இருக்கா..//

இன்னும் இருக்குன்னு வை.கோ.ஐயா சொல்றாரே சகோ! :-)

//நகைச்சுவையாகவும், அறிவியல் ரீதியிலும், உடல் அவையங்களின் அடிப்படையிலும் மூக்கினைப் பற்றி அழகாகச் சொல்லியிருக்கிறீங்க.//

நான் என்னத்தைச் சொன்னேன் சகோ? எல்லாம் கூகிளாண்டவர் கருணை! கொஞ்சம் கடுகு,உளுத்தம்பருப்பு தாளிச்சிருக்கேன். அம்புட்டுத்தேன்! :-)

மிக்க நன்றி சகோ!

//விக்கியுலகம் said...

மாப்ள மூக்குல இம்புட்டு விஷயம் இருக்காய்யா....நமக்கு மூக்குக்கு மேல கோவத்த விட வேற என்ன இருக்குன்னு நெனச்சி இருந்தேன் ஹிஹி!//

ஆஹா, நீங்களும் என் கட்சிதானா? எனக்குக் கோபம் வந்தா பக்கத்துலே இருக்கிறவங்க மூக்குக்கு மேலேயும் கோபம் வரும்! :-)

மிக்க நன்றி! :-)

//இராஜராஜேஸ்வரி said...

கடைசி நேரத்தில் மூக்கை நீட்டி ஜெயிக்கும் பந்தயக் குதிரையாக அருமையான வெற்றிவாகை சூடிய பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.//

வாவ்! என்ன மாதிரியான உதாரணம்! அசத்தலாய் இருக்கிறது வாசிக்கவே! :-)

// மூக்கால் முணகிக்கொண்டே பதிவிட்டீர்களா?//

ஹிஹி! இல்லீங்க, ஆனா வாசிச்சவங்க எப்படி வாசிச்சாங்களோ பாவம்! :-)
மிக்க நன்றி சகோதரி!

settaikkaran said...

//வெங்கட் நாகராஜ் said...

மூக்கு வைத்தே ஒரு பகிர்வு.... அதுல எத்தனை வகை.... இங்கே ஒருத்தருக்கு நாங்க ”பீரங்கி மூக்கன்” ந்னு பேரே வைத்திருக்கிறோம்... :)//

இதையெல்லாம் பின்னூட்டத்தில் சொல்லக்கூடாது வெங்கட்ஜீ! இடுகையா எழுதுங்க! எல்லாரும் படித்து இன்புறட்டும்! :-)

//நல்ல நகைச்சுவை பகிர்வு.. நன்றி சேட்டைஜி!//

மிக்க நன்றி வெங்கட்ஜீ! :-)

//"என் ராஜபாட்டை"- ராஜா said...

I will give nose full sorry nobel award to you//


Oh, thank you very much. :-)

//கணேஷ் said...

நாம தமிழ்நாட்லதான் மூக்கன், மூக்காயி என்றெல்லாம் பெயர்களை வைத்து மூக்கை கௌரவப்படுத்துகிறோமே... பெண்கள் மூக்கை வர்ணிக்க எள்ளுப்பூ நாசி என்றொரு வர்ணனை நான் கேட்டதுண்டு. அருமையான நடை உங்களுடையது சேட்டையண்ணா.//

வாங்க, நீங்க தான் தகவல் வங்கியாச்சே! உங்களுக்குத் தெரியாததா? :-)
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

//ஜீ... said...

சூப்பர் சேட்டை! என்னென்ன விதமான மூகேல்லாம் இருக்கு! கொழுக்கட்டை மூக்கு, நாய் மூக்கு - மேல் பகுதி சற்றே உள்நோக்கி வளைந்திருக்கும்! அட்டகாசமான பதிவு!//

ஆஹா, முக்காலும் உணர்ந்தவர்னு கேள்விப்பட்டிருக்கேன். நீங்க மூக்காலும் உணர்ந்தவர் போலிருக்குதே! மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//வெட்டிப்பேச்சு said...

சிலருக்கு இதுபோன்றவைகள் ஒரு வரம் போல் அமைந்து விடுகிறது.. வாழ்த்துக்கள்//

உண்மை. சிலருக்குத் தான் அமையுதாம்! :-((
மிக்க நன்றி! :-))))

//இந்திரா said...

மூக்கை வைத்து என்னமா ஆராய்ச்சி பண்ணியிருக்கு பயபுள்ள..//

என் ரேஞ்சுக்கு நான் என்னங்க பண்ணட்டும்? :-))
மிக்க நன்றி! :-)

//MANO நாஞ்சில் மனோ said...

எலேய் என் மூக்குல உன் சேட்டையை காட்டிட்டியே ஹி ஹி....//

அண்ணாச்சி மூக்கோட வெளயாடுறதா? :-))

வருகைக்கு நன்றி அண்ணாச்சி! :-)

//அமைதிச்சாரல் said...

அட்டகாசம் :-))//

மிக்க நன்றி சகோதரி! :-)

//suryajeeva said...

எனக்கு ரோமன் மூக்கு என்பதை உங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன்..//

அப்பாடா, ஏதோ ஒருத்தருக்காச்சும் உருப்படியா ஒரு உபகாரம் பண்ணியிருக்கேன். அது போதும்! :-)
மிக்க நன்றி!

//சென்னை பித்தன் said...

சனிப்பெயர்ச்சி போய் இப்போது சளிப்பெயற்சியா?சூப்பர்.//

பலதோஷங்களில் ஜலதோஷமும் ஒன்றல்லவா ஐயா? :-)
மிக்க நன்றி ஐயா!

Anonymous said...

கிளி மாதிரி மூக்கு...:)

ரிஷபன் said...

மூக்கிற்கு மேல் கோபம் வரும்னு கேள்விப் பட்டிருக்கேன்.. பதிவே வந்துருச்சே..

NAGARJOON said...

I would highly appreciate if you guide me through this. Thanks for the article…
Home study spoken english
English speaking self learning
Home study english speaking
English Home study
Home learning english speaking
English speaking home learning
Speaking English training books
Spoken English learning books
Spoken English learning skills
Spoken english books