Saturday, September 18, 2010

எந்திரன் பார்க்கணும்-ஹௌ இஸ் இட்?

"காதல் அணுக்கள்...,’ என்று இயர்போன் வழியாக எனது காதுகளில் தேனெனப் பாய்ந்து கொண்டிருந்த ’எந்திரன்’ பாடலைக் கேட்டபடி கண்களை மூடி ரசித்துக்கொண்டிருக்க, யாரோ தோளைத் தட்டி எழுப்பினார்.

"சார், தப்பா நினைச்சுக்காதீங்க! நானும் குரோம்பேட்டையிலிருந்தே கவனிச்சிட்டு வர்றேன். நீங்க ரசிச்சுத் தலையாட்டுறதைப் பார்த்தா அனேகமா ’செல்லாத்தா...எங்க மாரியாத்தா,’ பாட்டு கேட்டிட்டிருக்கிறா மாதிரி இருக்கே?"

அந்தப் பெரியவரைப் பார்த்தால், பெரிய போஸ்ட் ஆபீசில் பென்சன் வாங்கப் போகிறவர் மாதிரி இருந்தார்.

"சார், எந்திரன் பாட்டுக் கேட்கிறேன் சார்!" என்று பதில் அளித்தேன்.

"ஐயையே! இங்கேயும் எந்திரனா? டி.வியைப் பார்க்க முடியலே! பேப்பரை வாசிக்க முடியலே! எங்கே பார்த்தாலும் எந்திரன் புராணம் தானா?"

"ஏன் சார் கடுப்பாகறீங்க? டிக்கெட் கிடைக்கலியா?"

"நான் பார்க்க மாட்டேன் சார்! என்னவோ உலகத்துலேயே இல்லாத சினிமா மாதிரி என்ன ஆர்ப்பாட்டம்? போற போக்கைப் பார்த்தா இதைப் பார்க்காட்டா ரேஷன் கார்டை ரத்து பண்ணிருவாங்களோன்னு தோணுது."

"கவலைப்படாதீங்க! ரேஷன் கார்டு இல்லாதவனும் இந்தப்படத்தைப் பார்க்க வருவான். பார்க்காட்டியும் உங்களை நாடுகடத்த மாட்டாங்க! சினிமா தானே சாமீ? என்னவோ பாகிஸ்தான் அணுகுண்டு போடப்போறது மாதிரியில்லே கிடந்து துடிக்கறீங்க எல்லாரும்..?"

"என்ன பெரிய சினிமா? கொள்ளை வியாபாரம். பாதி பேரு இதைப்பத்தி எழுதி, பேசியே பொழுதை வீணாக்கிட்டிருக்காங்க! இந்த நேரத்துலே எத்தனை பத்துப் பாத்திரம் தேய்ச்சிருக்கலாம்? எவ்வளவு துணி தோய்ச்சிருக்கலாம்? எத்தனை பேருக்குப் பல்லு விளக்கியிருக்கலாம்? சே!"

"இப்போ நீங்க என் கூட பேசுற நேரத்துலே எத்தனை கொட்டாவி விட்டிருக்கலாம்? எவ்வளவு கொசு அடிச்சிருக்கலாம்? அவனவனுக்கு எது விருப்பமோ அதைப் பார்க்கிறான், படிக்கிறான், எழுதறான். உங்களுக்கு ஏன் சார் ஜூரம் வருது?"

"இது ஒரு மூளைச்சலவையா உங்களுக்குத் தெரியலியா?"

"மாமனார் மருமகள் பத்திப் படம் வந்தபோது நீங்கல்லாம் என்ன பிள்ளையார் கோவில்லே சிதறு தேங்காய் பொறுக்கிட்டிருந்தீங்களா? ஏன்யா யார் மேலேயோ இருக்கிற கடுப்பைப் போயும் போயும் ஒரு சினிமா கிட்டே காட்டுறீங்க?"

"உங்களைப் பார்த்தா ரொம்பப் படிச்சவங்க மாதிரி இருக்கீங்களே தம்பி?"

"ஐயையோ, அவசரப்படாதீங்க! உங்களைப் பார்த்தாக் கூடத்தான் ரொம்ப புத்திசாலி மாதிரி இருக்கீங்க, அதுக்காக அதுதான் உண்மைன்னு ஆயிடுமா?"

"எவ்வளவு பணம் கொள்ளையடிக்கிறாங்கய்யா ஒரு சினிமாங்கிற பெயரிலே? உங்களையெல்லாம் இப்படியே வச்சு யார் யாரோ கோடீஸ்வரன்களாயிட்டிருக்காங்க!"

"சார், நான் வாங்கப்போறது ஒரு டிக்கெட்! அத வச்சு யாராவது கோடீஸ்வரனானா உங்களுக்கு ஏன் சார் பொறாமை? பாபா படம் ஊத்திக்கிச்சு. உடனே நான் ரஜினிக்குப் பணம் மணியார்டர்லே அனுப்பினேனா? சந்திரமுகி பிச்சுக்கிட்டு ஓடிச்சு! பிரபு என்னைக் கூப்பிட்டு பணத்தைத் திரும்பிக் கொடுத்தாரா?"

"உங்களை ஏமாத்துறது தப்பாத் தெரியலியா? உங்க அறியாமையைப் பயன்படுத்தி யாரோ கொள்ளை லாபம் சம்பாதிக்க அனுமதிக்கலாமா?"

"நீங்க போடுற ஒரு ஓட்டு யாரையோ கோடீஸ்வரனாக்குது! நீங்க டிவியிலே மேட்ச் பார்த்தா யாரோ ஒரு கிரிக்கெட் ப்ளேயர் கோடீஸ்வரனாகுறான். நீங்க உண்டியல்லே போடுற காசு, நீங்க போடுற பிச்சை, நீங்க கட்டுற வரி இதெல்லாம் எங்கே போகுது யாருக்குப் போகுதுன்னு கவலைப்பட்டுக்கிட்டா போடறீங்க? திடீர்னு எதுக்குயா எந்திரன் படத்துக்கு மட்டும் சமூகப்பொறுப்புணர்ச்சி பொத்துக்கிட்டு வருது?"

"டிக்கெட் ப்ளீஸ்!"

பரிசோதகரிடம் எனது மாதாந்திரச்சீட்டை எடுத்துக் காட்டினேன். எதிரே உட்கார்ந்திருந்த அந்த பென்சன் பார்ட்டி முகமெல்லாம் வியர்த்துப் போய்....

"ஐயையோ! நான் மாம்பலத்துலே இறங்கியிருக்கணும். எக்மோர் வரைக்கும் வந்திட்டேனே! சாரி சார்!"

"என்ன சார், டிக்கெட் இல்லாம பயணம் பண்ணுறதுக்கு இப்படியொரு சால்ஜாப்பா?" பரிசோதகர் அந்தப் பெரியவரை நக்கலாகக் கேட்டார்.

"டி.டி.சார்! அவரு பாவம், எந்திரன் படத்தைப் பத்தி ரொம்ப சுவாரசியமா பேசிட்டே வந்தாரா, எங்கே இறங்குறதுங்கிறதையே மறந்திட்டார்!" என்று நான் பரிந்து பேசினேன்.

"நல்லாயிருக்கே! யோவ் பெரிசு! ஓடற ரயிலிலே சினிமாவைப் பத்திப் பேசுறது ரொம்ப முக்கியமா? கிருஷ்ணா, ராமான்னு இருக்க வேண்டிய வயசுலே உனக்கு எந்திரன் கேட்குதா? இப்போ ஃபைன் யாரு வந்து கட்டப்போறாங்க, ரஜினிகாந்தா?"

"சார், அவருக்கு ரஜினிகாந்த் பிடிக்காதாம் சார்!" என்று நான் எடுத்துக் கொடுத்தேன்."அவருக்கு ஏன் எந்திரன் பிடிக்கலேன்னு விளக்கமா சொல்லிட்டிருந்தாரு! அந்த நேரம் பார்த்து நீங்க வந்திட்டீங்க!"

"சரி சரி, பெரியவரே, பார்க் ஸ்டேஷனிலே இறங்கி அபராதத்தைக் கட்டிட்டு அப்புறம் சாவகாசமாப் போகலாம் சரியா?"

பார்க் ஸ்டேஷனில் டி.டியோடு பெரியவர் இறங்கும்போது என்னைத் திரும்பி, பரிதாபமாக ஒரு பார்வை பார்த்தார். எனக்குச் சிரிப்பு வந்தாலும் நாகரீகம் கருதி அடக்கிக் கொண்டு, மீண்டும் எந்திரன் பாட்டைக் கேட்கத் தொடங்கினேன்.

"பூம்பூம்...ரோபோடா...ரோபோடா..ரோபோடா..!"


இந்தத் தொடர்பதிவுக்கு என்னை அழைத்த "பாகீரதி" கார்த்திக், எனது நன்றிக்குரியவர். இதைத் தொடர யாரைக் கூப்பிடலாம்? ரைட்டு....!

மோதிரக்கைக்காரர் "வாழ்க்கை வாழ்வதற்கே" பிரபாகர்

நிறைகுடம் என்பதற்குப் பொருத்தமான ..துரை அவர்கள்

எங்க ஊருக்காரப் பொண்ணு-சகோதரி நஜீபா அக்தர்!

16 comments:

எல் கே said...

அறுமி சேட்டை. சேட்டையோட வழக்கமான கலக்கல் பதிவு.. சரியான ஆட்களைத்தான் அளித்து இருக்கீங்க தொடர.

ARAN said...

nachh vera enna solla kalkkal.

Anonymous said...

//"ஐயையோ! நான் மாம்பலத்துலே இறங்கியிருக்கணும். எக்மோர் வரைக்கும் வந்திட்டேனே!//

எது... நம்மளால முடிஞ்சுது??? :-)

☀நான் ஆதவன்☀ said...

இந்த பதிவுல எந்திரனை பிடிக்காதவங்கள வயசானவங்கன்னு சொல்ற மாதிரி இருக்குறதால..நான் இப்பவே சொல்லிக்கிறேன் எந்திரன் படம் எனக்கு ரொம்ம்ம்ம்ம்ப பிடிச்சிருக்கு :))

அஷீதா said...

nachunnu irukku chettai unga indha padhivu :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நல்லா தாளிச்சுப்புட்டீங்க சேட்டை, நானும் நம்ம பங்குக்கு கொஞ்சம் கொத்தியிருக்கேன்!

Unknown said...

ஒரு நாள் லேட்டானதுல இப்பிடி நம்ம கான்செப்ட காக்கா தூக்கிக்கிட்டு போயிருச்சே? இன்னும் உக்காந்து யோசிக்கணுமோ?

என்ன எழுதுறதுனு யோசிச்சிட்டு எழுதுறேன்.

பிரபாகர் said...

எந்திரன வெச்சி இடுகை தானே...எழுதிடுவோம்... அழைப்புக்கு நன்றி சேட்டை நண்பா!

பிரபாகர்...

என்னது நானு யாரா? said...

பட்டிமன்றம் சூப்பரா களகட்டுது சேட்ட. யாரை போட்டு வார்றீங்கன்னு தெரியுது. அவங்களுக்கு தேவை மெல்றதுக்கு அவல். கிடைச்சிருச்சி மெல்றாங்க.

சினிமா பாக்குறதும் பாக்காம இருக்கிறதும் தனி மனுஷனோட சுத்ந்திரம் தானே. இதுக்கு போய் எதுக்கு மல்லு கட்டுறாங்க வீனா போனவங்க!

Anonymous said...

நான் பார்ப்பேன் செம!

சிநேகிதன் அக்பர் said...

வினை, எதிர்வினைன்னு படம் வரும் வரை பரபரப்புக்கு பஞ்சமில்லை.

ஆனா சேட்டை சாதாரண விலையைவிட பல மடங்கு டிக்கட் விலை உயர்த்தி விற்கிற எந்த திரைப்படமும் கொள்ளை அடிப்பதாகத்தானே அர்த்தம்.

கிரி said...

:-))

suneel krishnan said...

நான் டிக்கெட் வாங்கிட்டேன் :)

R.Gopi said...

சேட்டை.....

தொடங்கி, அடித்து விளையாடி, நொறுக்கியிருக்கியேப்பா....

இந்த மாதிரி எத்தனை தடவை யார் கிட்ட சொன்னாலும், புரியாத மாதிரியே நடிக்கறாங்கப்பு.....

வெங்கட் நாகராஜ் said...

:))))) உங்கள் பாணியில் ஒரு எந்திரன்....


வெங்கட்.

சி.பி.செந்தில்குமார் said...

அண்ணே,எந்திரன் 300 ரூபாயாம்.

செமயான காமெடி லைன்ஸ்

>>>போற போக்கைப் பார்த்தா இதைப் பார்க்காட்டா ரேஷன் கார்டை ரத்து பண்ணிருவாங்களோன்னு தோணுது."
>>