Sunday, September 12, 2010

தீம்தரிகிட தீம்தரிகிட தித்தோம்

முறுக்கு மீசை, அழுக்கு மேலங்கி, வரிந்து கட்டிய முண்டாசு, கண்களில் காலாக்னியின் ரௌத்திரம்! இவரை இதற்கு முன்பு எங்கோ பார்த்திருக்கிறேனே?

"எக்ஸ்கியூஸ் மீ, நீங்க சாயாஜி ஷிண்டே தானே?"

"சகோதரா!" அந்த மனிதர் என்னை இறுகத்தழுவினார். "இதற்கு முன்னால் ஒருவர் என்னைப் பார்த்து நீங்க எஸ்.வி.சுப்பையாவா என்று கேட்டார். அதற்கு இது எவ்வளவோ மேல்...!"

"ரெண்டுமே இல்லையா? அப்படீன்னா நீங்க யாரு?" என்று மிகவும் சிரமத்துடன் அவரது பிடியிலிருந்து என்னை விடுவித்துக் கொண்டு கேட்டேன்.

"எமது பெயர் சுப்ரமணிய பாரதி! எமக்குத் தொழில் எழுத்து; நாட்டிற்குழைத்தல்; இமைப்பொழுதும் சோராதிருத்தல்!" என்று மீசையை முறுக்கியவாறே கூறினார்.

"நீங்க பாரதியாரா?" என்று அவரை மேலும் கீழும் நோக்கினேன். "அட ஆமாம், நீங்க பாரதியாரே தான். இப்போத் தான் கவனிச்சேன், உங்க கோட்டுலே கூட காக்காய் எச்சம் போட்டிருக்கு!"

"காக்கை குருவி எங்கள் ஜாதி-நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்
நோக்கும் திசையெலாம் நாமன்றி வேறில்லை
நோக்க நோக்க களியாட்டம்!" என்று கூறிக் கலகலவென்று சிரித்தார் பாரதியார்.

"அதெல்லாம் சரி, திடீர்னு தாம்பரம் ஸ்டேஷன் வாசல்லே அம்போன்னு வந்து நிக்கறீங்களே! என்ன சமாச்சாரம்?" என்று கேட்டேன்.

"இன்று என்ன தேதி? செப்டம்பர் பதினொன்று!"

"ஆமாம், ஸ்ரேயாவோட 28-வது பிறந்தநாள்! அதுக்குத் தான் அர்ச்சனை பண்ணப் போயிட்டிருக்கேன்!"

"யாரது ஸ்ரேயா, உங்களது மனைவியா?"

"ஹிஹி! உங்க வாக்குப் பலிச்சா கிருஷ்ணா ஸ்வீட்ஸ்லே ஒரு கிலோ மைசூர் பாகு வாங்கி உங்க வாயிலே போடுறேன். ஆக்சுவலி, ஸ்ரேயாங்கிறது ஒரு சினிமா நடிகை! உங்களுக்குத் தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை, நீங்க குட்டியைப் பார்த்திருக்க மாட்டீங்க!"

"என்ன சொன்னாய்? ஒரு நடிகையையா குட்டி என்கிறாய்? இதுபொறுக்குதில்லை எரிதழல் கொண்டுவா!"

"ஹலோ...ஸ்தூ..ஸ்தூ...! குட்டிங்கிறது ஒரு சினிமாவோட பெயர்! அதுலே ஸ்ரேயா தான் ஹீரோயின்!"

"ஓ! அப்படியா?" என்று ஆசுவாசப்பட்டார் பாரதியார். "ஆக, எமது நினைவுநாள் உமக்கு நினைவில்லை; ஆனால், சினிமா நடிகையின் பிறந்தநாளைத் தவறாமல் நினைவு வைத்திருக்கிறீர்கள் அல்லவா? வாழ்க வாழ்க!"

"கோவிச்சுக்காதீங்க பாரதியாரே! உங்க நினைவுநாளா இன்னிக்கு? கை கொடுங்க! மெனி மோர் ஹேப்பி ரிடர்ன்ஸ் ஆஃப் தி டே!"

"சகோதரா! நீர் தமிழர் தானே? ஏன் ஆங்கிலத்தில் பேசுகிறீர்?" பாரதியாரின் புருவம் சுருங்குவதைப் பார்த்தால், நெற்றிக்கண்ணைத் திறந்து என்னைப் பொசுக்கி விடுவார் போலிருந்தது.

"ஆமாம், நான் பச்சைத்தமிழன், இருந்தாலும் அப்பப்போ தமிழிலும் பேசுவோம், அதாவது அப்பப்போ ஆங்கிலத்திலும் பேசுவோம்னு சொல்ல வந்தேன்," என்று சமாளித்தேன்.

"நல்ல வேளை! தமிழ் அழிந்துவிட்டதோ என்று கொதித்து விட்டேன்!"

"அட நாங்கல்லாம் தமிழை அழிய விடுவோமா? தமிழ் நான்கு மடங்கு வளர்ந்திருக்கிறது பாரதியாரே! முன்னெல்லாம் அறிவுப்புப்பலகையிலே தமிழ் எழுத்து ரெண்டு அங்குலம் தானிருந்தது. இப்போ எட்டு அங்குலம் இருக்கணுமுன்னு சட்டமே கொண்டு வந்தாச்சு! எவ்வளவு வளர்ச்சி பாருங்க!"

"சரி சகோதரா, இன்று விநாயகர் சதுர்த்தியல்லவா? கணபதிராயன் அவனிரு காலைப்பிடித்திட விரும்புகிறேன். அருகே விநாயகர் கோவில் இருக்கிறதா?"

"என்ன இப்படிக் கேட்டுட்டீங்க ? சென்னையிலே டாஸ்மாக் கடைக்கு அடுத்தபடியா ஒவ்வொரு சந்துலேயும் இருக்கிறது விநாயகர் கோவில்தான்! என்னோட வாங்க! பாரீஸுக்குப் போயி இஷ்டசித்தி விநாயகரைக் கும்பிடுவோமா?"

"இதென்ன கொடுமை? எதற்காக பாரீஸுக்குப் போக வேண்டும்? இந்தியாவிலே இஷ்டசித்தி விநாயகரே இல்லையா?"

"ஐயோ, பாரீஸ்னா பிரான்ஸ் தலைநகரம் பாரீஸ் இல்லை; மண்ணடின்னு சொன்னா கௌரவமா இருக்காதுன்னு பாரீஸைப் பிடிச்சுத் தொங்கிட்டிருக்கோம். வாங்க போலாம்! பார்த்து வாங்க, ஏற்கனவே குண்டும் குழியுமா இருக்கும், மழையிலே தண்ணி வேறே தேங்கியிருக்கு! ஜாக்கிரதை!"

"மதறாசப்பட்டணம் மிக மோசமாக இருக்கிறதே?"

"ஐயா, மதறாசப்பட்டணம் நல்ல படமாச்சே? அதைப் போயி மோசமுங்கறீங்க?"

"ஆதிபராசக்தி! எதைச் சொன்னாலும் சுற்றிச் சுற்றி சினிமாவிலேயே முடிக்கிறார்களே? நான் மதராஸ் ஏன் இவ்வளவு மோசமாக இருக்கிறது என்று கேட்டேன்."

"இது இப்போ மதறாஸ் இல்லை! சென்னை!"

"இரண்டுக்கும் என்ன வித்தியாசம் தம்பி?"

"வித்தியாசமா? ஒரு எழுத்தை குறைச்சிட்டோமில்லே? எவ்வளவு நேரம் மிச்சமாகுது?"

"அது போகட்டும் தம்பி, என்னை மண்ணடிக்கு அழைத்துச் செல்வதாகச் சொன்னாயே? எனக்குப் பயணச்சீட்டு வாங்க வேண்டாமா?"

"என்ன சீட்டு?"

"பயணச்சீட்டு தம்பி, டிக்கெட்டு!"

"நீங்கதான் டிக்கெட்டு வாங்கி தொண்ணூறு வருசம் ஆகப்போவுதே! அப்புறம் என்ன?"

"புகழ்வோம் கணபதிநின் பொற்கழலை நாளும்
திகழ்வோம் பெருங்கீர்த்தி சேர்த்தே-இகழ்வோமே
புல்லரக்கப் பாதகரின் பொய்யையெலாம் ஈங்கிதுகாண்
வல்லபகோன் தந்த வரம்." என்று பாரதியார் பாடிக்கொண்டே வந்தார்.

பாரதியாரை ஜன்னலோர இருக்கையில் அமரவைத்து விட்டு, நான் எதிரே அமர்ந்து கொண்டேன்.

"தம்பி, இங்கு யாராவது என்னை அடையாளம் கண்டுகொள்வார்களா?"

"அந்தக் கவலையே உங்களுக்கு வேண்டாம்! நீங்க இருக்கும்போதே யாரும் கண்டுக்கலே, இனிமேலா கண்டுக்கப்போறாங்க? வண்டி மூவ் ஆவுது! இயற்கைக் காட்சியை ரசிச்சுக்கிட்டே வாங்க!"

"கல்விசிறந்த தமிழ்நாடு-புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு-நல்ல
பல்விதமாயின சாத்திரத்தின் மணம்
பாரெங்கும் வீசும் தமிழ்நாடு"

ஜன்னல்வழியாக வேடிக்கை பார்த்தவாறே, பாரதியார் உற்சாகமாக வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தார். சானட்டோரியத்திலும் அடுத்து குரோம்பேட்டையிலும் பயணிகள் ஏற ஏற பெட்டி ஓரளவு நிரம்பத் தொடங்கியது.

"இன்னாடா கால மிதிக்கிறே சோமாறி? வூட்டுலே சொல்லிக்கினு வந்திட்டியா, மவனே தட்டுனா தாராந்துடுவே..பேமானி..."

பாரதியாரின் பக்கத்தில் வந்து நின்றவனின் டாஸ்மாக்கின் சுகந்தம் கூவத்தையே கூச்சப்பட வைத்திருக்கும்.

"பாரதியாரே, என்னவோ பாடினீங்களே, பல்விதமாயின சாத்திரத்தின் மணம் பாரெங்கும் வீசும் தமிழ்நாடுன்னு...மணம் Bar எங்கும் வீசும் தமிழ்நாடுன்னு மாத்திப்பாடுங்க!" என்று கலாய்த்தேன்.

பல்லாவரத்தில் ஆண்களும், பெண்களுமாய் மேலும் கூட்டம் ஏற, பெட்டியில் எல்லா இருக்கைகளும் ஏறக்குறைய நிரம்பின. எதிரே அமர்ந்திருந்த பெண்களை பாரதியார் பெருமையோடு நோட்டமிட்டார். என்ன இருந்தாலும் ’பெண்கள் வாழ்கென்று கூத்திடுவோமடா,’ என்று பாடியவர் அல்லவா? சற்றுத்தள்ளி ஒரு குடும்பத்தினர் அமர்ந்திருக்க, அவர்களின் குழந்தை அழுது கொண்டிருந்தது.

"உஸ்ஸ்! அழாதே! அதோ பாரு, மீசை வச்சிக்கிட்டு தலைப்பா கட்டிக்கிட்டிருக்காரே பூச்சாண்டி மாமா, அவர் பிடிச்சிக்கிட்டு போயிருவாரு!" என்று அந்த அம்மா குழந்தையை மிரட்ட, அதுவோ, "உம்ம்ம்ம்...அவரொண்ணும் பூச்சாண்டியில்லே...பாரதியார்...சோஷல் ஸ்டடீஸ் புச்சோத்துலே படம் போட்டிருக்கு...உம்ம்ம்ம்ம்....!" என்று அழுகையைத் தொடர்ந்தது.

"நல்ல வேளை பாரதியாரே, பாடப்புத்தகத்துலே மட்டும் நீங்க இல்லாமப்போயிருந்தா, அந்தக் குழந்தை உண்மையிலேயே உங்களைப் பூச்சாண்டின்னு நம்பினாலும் நம்பியிருக்கும்!" என்று நான் சொல்லவும், அவர் சிரித்தார்.

பல்லாவரம் போனது. திரிசூலம் வந்தது. வெளிநாட்டு வாசனைத்திரவியங்களின் வாசனையோடு, பகட்டான உடைகளணிந்து, ’இதெல்லாம் ஒரு நாடா...தூ!’ என்ற எக்ஸ்பிரஷனோடு இன்னும் பயணப்பைகளில் அவரவர் வந்த விமானங்களின் பெயரட்டையைக் கூட அவிழ்க்காமல் சிலர் ஏறினர்.

"ஓ ஷிட்! திஸ் இஸ் ஆவ்ஃபுல்லி க்ரௌடட்!"

"யா...ஐ நோ, ஐ திங் வீ ஷுட் ஹேவ் டேக்கன் ய கேப்...!"

"யூ அர் ரைட்..இட்ஸ் ஸோ கன்ஜஸ்டட்! டிஸ்கஸ்டிங்..."

"ஏன் இவ்வளவு கடிந்து கொள்ளுகிறார்கள்? இவர்களுக்கு என்ன பிரச்சினை?" பாரதியார் புரியாமல் கேட்டார்.

"இல்லாட்டி இவங்க வெளிநாட்டுலேருந்து வந்திருக்காங்கன்னு எப்படிக் கண்டுபிடிக்கிறதாம். இது கூட பரவாயில்லே பாரதி, எனக்குத் தெரிஞ்ச ஒருத்தரு மதுரையிலேருந்து சென்னைக்கு விமானத்துலே வந்திட்டு, ஒரு நாள் ஜெட்-லாக்னு லீவு போட்டுட்டாரு தெரியுமா?"

குருடர்கள், கைகால் இல்லாதவர்கள், பெண்கள், வயோதிகர்கள், குழந்தைகள் என்று தினுசு தினுசாக வண்டிக்குள்ளே பிச்சையெடுத்துக் கொண்டிருந்த பிச்சைக்காரர்களை பாரதியார் பார்த்துப் பெருமூச்சு விடுத்தார்.

"சொல்லத் துடிக்குதடா நெஞ்சம்-வெறும் சோற்றுக்கோ வந்ததிந்தப் பஞ்சம்?"

பாவம் பாரதியார்! சென்னைப் பிச்சைக்காரர்களின் மறுபக்கத்தைச் சொன்னால் ’நெஞ்சு பொறுக்குதில்லையே-இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்,’ என்று குமுறிவிடுவாரே என்று பேசாமல் இருந்தேன்.

சரியாக மாம்பலம் ஸ்டேஷனில் இரண்டு போலீஸ்காரர்கள் பெட்டிக்குள் ஏறினர். அவர்களது கையிலிருந்த ஒரு புகைப்படத்தையும், பாரதியாரையும் மாறி மாறிப் பார்த்தனர். தங்களுக்குள்ளே ஏதோ ரகசியம் பேசிக்கொண்டு சரியாக கோடம்பாக்கம் தாண்டியதும், பாரதியாரை நெருங்கினர்.

"ஏய், நீ கொலைகாரன்பேட்டை கோவிந்தன் தானே?"

பாரதியார் அந்த இரண்டு போலீஸ்காரர்களையும் மாற்றி மாற்றிப் பார்த்தார்.

"நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? யாம் சுப்ரமணிய பாரதி!"

"என்னது? பாரதியா? நெத்தியிலே கருப்புப்பொட்டைக் காணோம்?" என்று ஒரு போலீஸ்காரர் மிகவும் புத்திசாலித்தனமாகக் கேட்டார்.

"சார்..சார்!" என்று நான் அலறினேன். "பிளாக் அண்டு வொயிட்டு போட்டோவைப் பார்த்து ஒரு முடிவுக்கு வராதீங்க சார்! அது கருப்புப் பொட்டு இல்லை; சிவப்புப் பொட்டு தான்!"

"பாரதியாரு பொட்டெல்லாம் வச்சுக்கவே மாட்டாரு!" என்றார் இன்னொரு போலீஸ்காரர். "ஆனா, இந்த ஆளைப் பார்த்தா கோவிந்தன் மாதிரி தானிருக்காரு! உண்மையைச் சொல்லு! மதுரே தல்லாகுளம் அசால்டு கேசுலே தேடிட்டிருக்கிற கோவிந்தன் தானே நீ?"

"சார், இவரு உண்மையாவே பாரதியார் தான் சார்!" என்று நான் கெஞ்ச ஆரம்பித்தேன். "இவ்வளவு நேரம் கவிதைகளெல்லாம் சொல்லிட்டு வந்தாரு சார்!"

"யோவ், எனக்குக் கூடத்தான் ’டொட்டடாய்ங்’ பாட்டு மனப்பாடமாத் தெரியும். உடனே நான் வைரமுத்துன்னு சொல்லிட முடியுமா? இந்தாளு கண்டிப்பா கொலைகாரன்பேட்டை கோவிந்தன் தான்! எக்மோரிலே சத்தம் காட்டாம எங்க கூட இறங்கச் சொல்லு!" என்று மிரட்டினார்.

"தம்பி, இதென்ன?" என்று சிரித்தவாறே கேட்டார் பாரதியார்.

"சிப்பாயைக் கண்டஞ்சுவார்-ஊர்ச்
சேவகன் வருதல்கண்டு மனம்பதைப்பார்
துப்பாக்கி கொண்டொருவன்-மிகத்
தூரத்தில் வரல்க்ண்டு வீட்டிலொளிப்பார்!" என்று நானும் வேதனையோடு பாடிக் காட்டினேன்.

"உச்சிமீது வானிடிந்து வீழுகின்றபோதிலும் அச்சமில்லை, அச்சமில்லை, அச்சமென்பதில்லையே!" என்று மீசையை முறுக்கிக் கொண்டார் பாரதியார்.

"உங்களுக்கென்னய்யா? வெள்ளைக்காரனையே எதிர்த்து எழுதினவரு! அதான் தைரியமா பாடுறீங்க! நான் அப்படியா? இன்னிக்கு ஸ்ரேயா பேருலே அர்ச்சனை பண்ண முடியாது. விநாயகர் சதுர்த்திக்கு பிள்ளையாருக்கு ஹேப்பி பர்த்டே சொல்ல முடியாது! கொழுக்கட்டை, சுண்டல் கிடையாது! எக்மோருலே இறங்கப்போறோம். அப்புறம் அரசாங்க விருந்தாளியா புழலுக்குப் போயி கம்பங்களியும் கீரைக்குழம்பும்தான்!" என்று புலம்பினேன்.

இதற்கிடையே இரண்டு போலீஸ்காரர்களில் ஒருவருக்கு கைபேசியில் அழைப்புவரவே அவர் கௌதம் மேனன் படத்தில் வருகிற போலீஸ்போலவே "யெஸ் சார், யெஸ் சார், யெஸ் சார்," என்று பேசிமுடித்துவிட்டு எங்களை நெருங்கினார்.

"சாரி சார்! நீங்க கொலைகாரன்பேட்டை கோவிந்தன் இல்லை சார்! மன்னிச்சுருங்க! அவரு ஆளுங்கட்சியிலே சேர்ந்துட்டாருன்னு இப்பத்தான் அவசரச்செய்தி வந்திருக்கு!"

"பரவாயில்லை காவலர்களே! சென்று வாருங்கள்!" என்று சிரித்தபடியே அவர்களை அனுப்பி வைத்தார் பாரதியார்.

"பாரதியாரே! நான் சொல்றதைக் கேளுங்க! என் கூட இஷ்டசித்தி விநாயகர் கோவிலுக்கு வந்து விநாயகர் சதுர்த்தி கொண்டாடுங்க, அப்புறம் காளிகாம்பாளை தரிசனம் பண்ணுங்க! அப்படியே நேரா பீச் ஸ்டேஷன்லே சரவண பவன்லே மினி மீல்ஸ் சாப்பிட்டுட்டு வந்த சுவடு தெரியாம கிளம்பிடுங்க! உங்களை மாதிரி மீசை வைச்சிருந்தா ஒண்ணு அரசியல்வாதியா இருப்பாங்க, இல்லாட்டி ரவுடியா இருப்பாங்க! தேவையில்லாத தொல்லை! நீங்க பாட்டுக்கு சிலையாகவே இருந்திடுங்க! வருசத்துக்கு ஒருவாட்டி செலவோட செலவா ஒரு மாலை போட்டுருவோம்! அதை விட்டுட்டு நேரா வர்ற வேலையெல்லாம் வச்சுக்காதீங்க! வம்புலே மாட்டிக்குவீங்க!" என்று பாரதியாருக்கு புத்தி சொன்னேன்.

"என் சிலைக்கு மாலை போடுவார்களா? யார் போடுவார்கள்?"

"என்ன இப்படிக் கேட்கறீங்க? அடுத்த வருசம் கொலைகாரன்பேட்டை கோவிந்தன் கூட போடுவாரு பார்த்திட்டேயிருங்க!" என்று சொன்னதும் பாரதியார் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தார்.

18 comments:

எஸ்.கே said...

செம சூப்பர். ஆனாலும் இறந்தநாளுக்கு வாழ்த்து சொன்ன ஒரே ஆள் நீங்கதான்! :-)

Chitra said...

"ஆமாம், நான் பச்சைத்தமிழன், இருந்தாலும் அப்பப்போ தமிழிலும் பேசுவோம், அதாவது அப்பப்போ ஆங்கிலத்திலும் பேசுவோம்னு சொல்ல வந்தேன்," என்று சமாளித்தேன்.


.......அவ்வ்வ்வ்........விட்டால், பாரதிக்கு இன்றைய தமிழ் பேச tuition சொல்லி கொடுத்துருவீங்க போல.
கலக்கல் பதிவு!

என்னது நானு யாரா? said...

சேட்டைகாரா! கலக்கிட்டீங்க! ஜோர் ஜோர்! பலே பலே! வாய்விட்டு சிரிச்சேன் அருமையா எழுதறீங்க! வாழ்க! வளர்க நண்பரே!!

பெசொவி said...

நாட்டின் பரிதாப நிலையை பகடியுடன் சொல்ல உங்களை விட்டால் ஆளே இல்லை போலிருக்கே, வாழ்த்துகள், சேட்டை!

vasu balaji said...

ஆஹா! பாரதியே ரசித்திருப்பார்:))

ப.கந்தசாமி said...

ஆஜர்

சாந்தி மாரியப்பன் said...

கலக்கல் சேட்டை.. இன்றைய சூழலில் பாரதியார் வந்தா இதெல்லாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்போலயே :-))))

cheena (சீனா) said...

அன்பின் சேட்டை

அருமை அருமை - பாரதி நினைவு நாளை அருமையாக - நினைவு கூர்ந்தமை நன்று. நகைச்சுவையின் உச்சம். எழுதும் திறமை. அததனைக்கும் பார்ராட்டுகள் - வாழ்த்துகள்

நட்புடன் சீனா

பிரபாகர் said...

சேட்டை!

பாரதியை நினைவு கூர்ந்த விதம் மிக அருமை. அய்யா சொன்னதுதான் நானும்... அசத்தல்.

பிரபாகர்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ரொம்ப அற்புதமா இருக்கு தல!

suneel krishnan said...

"இல்லாட்டி இவங்க வெளிநாட்டுலேருந்து வந்திருக்காங்கன்னு எப்படிக் கண்டுபிடிக்கிறதாம். இது கூட பரவாயில்லே பாரதி, எனக்குத் தெரிஞ்ச ஒருத்தரு மதுரையிலேருந்து சென்னைக்கு விமானத்துலே வந்திட்டு, ஒரு நாள் ஜெட்-லாக்னு லீவு போட்டுட்டாரு தெரியுமா?"

அட்டகாசம் :):)

ADHI VENKAT said...

சேட்டை சூப்பர். அப்புறம் சரவண பவன்ல மினி மீல்ஸ் சாப்பிடீங்களா? எனக்கு ஒரு பார்சல்.

அகல்விளக்கு said...

அட்டகாசம் தல.....

நாங்கூட மேட்டூர் ரோட்ல அவருக்கு சில வைக்கலாமான்னு யோசிச்சிட்டு இருக்கேன்....

மாதேவி said...

விநாயக சதுர்த்தி,பாரதியார் தினம் சேட்டையின் கைகளில் மிகவும் ரசனை.

புரட்சித்தலைவன் said...

super...........

அன்புடன் மலிக்கா said...

சேட்டை உங்க சேட்டையை மிகவும் ரசித்தேன். நல்ல சிந்திச்சி சிரிக்க வைக்கிறீங்க. வாழ்த்துக்கள்.

Unknown said...

நல்ல நகைச்சுவை..

வெங்கட் நாகராஜ் said...

பாரதியார் இருந்திருந்தால் பாவம்! இப்படித் தான் மாட்டியிருப்பார். சிலையாய் இருப்பதே மேல்!