Thursday, August 26, 2010

கொசுவுடைமை

"சரித்திரத்தை மறப்பவர்கள் மீண்டும் அதில் வாழ்வதற்கு சபிக்கப் படுவார்கள்,’ என்று ஒரு பொன்மொழியுண்டு. ஆனால், இந்த எச்சரிக்கையை மிக அண்மையில் நாம் அனைவரும் மறந்துவிட்டோம் என்பதை எண்ணும்போது, மின்வெட்டின்போது ஒரே நேரத்தில் ஆயிரம் கொசுக்கள் கடித்தது போன்ற உணர்வு ஏற்படுகிறது. ஆம், 20-08-2010 அன்று நமது வாழ்வில் இரண்டறக்கலந்து விட்ட ஒரு வாயில்லா ஜீவனை நாம் நினைக்கத் தவறிவிட்டோம்!

அது தான் கொசு!

கொசுவென்றால் கேவலமா? ஆனானப்பட்ட சிங்கத்தைக் கூட என்னை மாதிரி ஒரு வீரன் வலைவிரித்துப் பிடித்துவிடலாம்; ஆனால், நெப்போலியன் கூட கொசுவென்றால் பயந்தடித்துக் கொண்டு வலைக்குள்ளே படுத்தால்தான் தப்பிக்க முடியும். கொசுவுக்கு அப்படியொரு வீரவரலாறு இருக்கிறது.

என்னவோ, ஏறுதழுவுதல், ஜல்லிக்கட்டு என்பதையெல்லாம் வீரவிளையாட்டு என்கிறார்களே, பின்லாந்தின் பெல்கொசென்னைமீ(Pelkosenniemi) என்ற ஊரில் ’உலக கொசு அடிக்கும் போட்டி’ நடைபெற்று வருகிறதாம். (ஊரின் பெயரிலியே கொசுவும் இருக்கிறது; சென்னையும் இருக்கிறது என்பதைக் கவனிக்கவும்!)

அமெரிக்காவின் மின்னசோட்டாவாக இருக்கட்டும் அல்லது இந்தியாவின் சென்னையாக இருக்கட்டும்: மக்கள்தொகையை விடவும் கொசுத்தொகைதான் அதிகம் என்பதை யாராவது மறுக்க முடியுமா? மாம்பலத்தில் இருக்கிற கொசுக்களைக் கணக்கெடுத்தால், அவற்றுக்குத் தனிமாநிலமே வழங்குமளவுக்கு பெரும்பான்மையிருக்கிறது என்பது புரியும். கொசுக்களுக்கு மட்டும் வாக்குரிமையும் இருந்து, அவைகளும் தேர்தலில் போட்டியிட்டிருந்தால் என்னவாயிருக்கும்? முடியாட்சி போய் குடியாட்சி வந்ததுபோல, குடியாட்சி போய் கடியாட்சி வந்திருக்கும்.(இப்போது மட்டும் என்ன வாழ்கிறது என்று கேட்காதீர்கள் ப்ளீஸ்!)

நாலு லட்சம் கொசுக்கள் சேர்ந்தால், அரைகிலோ எடைகூடத் தேறாது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். வேலை மெனக்கெட்டு நாலு லட்சம் கொசுவைப் பிடித்து எடைபார்த்த அந்த ஆசாமியின் அட்ரஸ் தெரியவில்லை; ஹும், இந்தியாவுக்கு ஒரு நல்ல நிதியமைச்சர் கிடைக்காமலே போய்விட்டார்!

கொசு உண்மையிலேயே ரொம்ப நல்ல ஜீவராசி. அது பெண்களை விடவும், ஆண்களைத் தான் அதிகம் கடிக்கிறதாம் (அதற்கும் உயிர்மேல் ஆசையிருக்காதா பாவம்?) அதிலும் குண்டு குண்டாக இருக்கிற ஆண்களின் ரத்தத்தை அசின் ஃபாண்டா குடிப்பதுபோல ஸ்ட்றா போட்டுக் குடிக்குமாம். இதனாலேயே கொசு அடிப்பதில் பொதுவாக ஆண்கள், குறிப்பாக அரசு ஊழியர்கள் விற்பன்னர்கள் என்று இதுவரை மேற்கொள்ளப்படாத பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால், அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. கடிக்கிற விஷயத்தில் கொசுவும் மனிதர்கள் மாதிரிதான்; ஆண்பெண் பாகுபாடு பார்ப்பதில்லை என்றும் சிலர் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

ஆனால், மனிதனைப் போலவே கொசுவுக்கும் பீர் ரொம்பப் பிடிக்குமாம். இருந்தாலும், கொசுவை விட பீர் பாட்டில் பெரியது என்பதால், பீர் பாட்டிலை விட பெரிய மனிதனைக் கடித்து அவனது இரத்தத்திலிருந்து பீர் குடிக்கிறதாம். டாஸ்மாக்கில் இரண்டு பீர் அடித்தும் ஏறவில்லையே என்று குறைப்பட்டுக்கொள்கிறவர்களுக்கு இனிமேலாவது உண்மை புரிந்தால் சரி!

கடந்த 20-08-2010 அன்று ’உலக கொசு தினம்,’ கடைபிடிக்கப்பட்டதை எத்தனை பேர் அறிவார்கள்?

கொசுக்கடி குறித்து ஏதேனும் தனியார் தொலைக்காட்சியில் ஒரு பட்டிமண்டபம் வைத்திருந்தால், கொஞ்சம் மாமியார்-மருமகள் ஜோக்குகளாவது கேட்டிருக்கலாம்.

  • கடியில் சிறந்தது ஆண்கொசுவா? பெண்கொசுவா?
  • வாழ்க்கையில் அதிகக் கொசு அடிப்பவர்கள் கணவனா? மனைவியா?
  • சலிக்காமல் கடிப்பவர் யார், கொசுவா, காதலியா?

சே, எவ்வளவு தலைப்புகள்! அடிக்க அடிக்க அயராமல் வந்து கடிக்கும் கொசுக்களைப் போல ஆயிரம் தலைப்புகள் தோன்றுகின்றன அல்லவா?

நமது தொலைக்காட்சிகள் எவ்வளவு அருமையான வாய்ப்பை இழந்து விட்டிருக்கின்றன என்று எண்ணும்போது அவர்கள் மீது அனுதாபம் சுரக்கிறது.

அண்டை மாநிலமான ஆந்திராவில் கொசு தினம் கோலாகலமாகக் கொண்டாடப் பட்டிருக்கும்போது,தமிழகம் இந்த விஷயத்தை கண்டுகொள்ளாமல் விட்டதில் ஏதேனும் அரசியல் சூழ்ச்சி இருக்குமோ?

கூட்டணிக்கட்சிகளுக்குள்ளே சில உரசல்கள் ஏற்பட்டு, பலர் சென்னைக்கும் தில்லிக்கும் போய்வந்து கொண்டிருந்தகாரணத்தால், இந்த நேரத்தில் கொசுவுக்கு விழா எடுத்தால் அது கூட்டணி தர்மமல்ல என்று முடிவு செய்திருப்பார்களோ?

மேலும், பல புதிய தமிழ்ப் படங்கள் வரிசையாக வெளியிடவிருந்ததால், உலக கொசு தினம் என்று ஒன்றிருப்பதை மக்கள் அறிந்தால், அடுத்த ஆண்டு முதல் அதை அவர்கள், ’உலக வம்ச தினம்,’ என்று பெயரை மாற்றி விடுவார்கள் என்ற அச்சமும் காரணமாக இருக்குமோ?

உலக கொசு தினத்தன்று, ’இந்தியத் தொலைக்காட்சிகளிலேயே முதல்முறையாக,’ ’வலையைத் தாண்டி வருவாயா?’ படம் காண்பித்திருந்தால், கொசுவின் பெருமையை ரசிகப்பெருமக்கள் உணர்ந்திருப்பார்கள்.

வழமையாக அதிகாலையிலிருந்தே கடிஜோக்ஸ் சொல்லி கழுத்தறுக்கிற பண்பலை வானொலிகள், உலகக் கொசு தினத்தன்று சிறப்புக் கடி நிகழ்ச்சி நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கு ’கொசுநேசன்’ என்ற பட்டம் வழங்கியிருக்கலாம்.

எதுக்குடா பதிவு போடலாம் என்று காத்திருக்கும் வலைப்பதிவாளர்களும் கோட்டை விட்டு விட்டார்கள். ’பசுமையான கொசுக்கடிகள்,’ என்று ஒரு தொடர்பதிவு போட்டு, தலைக்கு முப்பது கேள்வி-பதில் போட்டு எல்லாரையும் ஒரு கடி கடித்திருக்கலாம்.

வடை போச்சே!

16 comments:

Thamiz Priyan said...

;-)))

vasu balaji said...

யார் மறந்தாலும் தான் மறவாத சேட்டைக்கு “கொசு வேட்டைக்காரன்” என்ற விருது வழங்காவிட்டா கொசுக்களால் வரும் 31.8.2010 அன்று “கொஸ்பூ” தலமையில் பொர்ச்சி நடைபெறும்.

Chitra said...

உலக கொசு தினத்தன்று, ’இந்தியத் தொலைக்காட்சிகளிலேயே முதல்முறையாக,’ ’வலையைத் தாண்டி வருவாயா?’ படம் காண்பித்திருந்தால், கொசுவின் பெருமையை ரசிகப்பெருமக்கள் உணர்ந்திருப்பார்கள்.

வழமையாக அதிகாலையிலிருந்தே கடிஜோக்ஸ் சொல்லி கழுத்தறுக்கிற பண்பலை வானொலிகள், உலகக் கொசு தினத்தன்று சிறப்புக் கடி நிகழ்ச்சி நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கு ’கொசுநேசன்’ என்ற பட்டம் வழங்கியிருக்கலாம்.

எதுக்குடா பதிவு போடலாம் என்று காத்திருக்கும் வலைப்பதிவாளர்களும் கோட்டை விட்டு விட்டார்கள். ’பசுமையான கொசுக்கடிகள்,’ என்று ஒரு தொடர்பதிவு போட்டு, தலைக்கு முப்பது கேள்வி-பதில் போட்டு எல்லாரையும் ஒரு கடி கடித்திருக்கலாம்.


......சிரிப்போ சிரிப்பு!!! செம.....

முகுந்த்; Amma said...

என்னாது, உலக கொசு தினமா, இது எப்பொ, தெரியாம போச்சே!.

பிரபாகர் said...

சேட்டை நண்பா... கொசுவினை வைத்து ஒரு கலக்கல் இடுகையினை அளித்திருக்கிறீர்கள். உங்களின் கற்பனைத்திறன், எழுத்தாற்றலை எண்ணி வியக்கிறேன், பெருமைப்படுகிறேன்...

பிரபாகர்...

கணேஷ் said...

இப்படி கொசு தினம் இருப்பது இப்போதுதான் தெரிந்து கொண்டேன்...நல்லா இருக்குங்க...நகச்சுவை கலந்த எழுத்து...

Unknown said...

arumai

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பெண் கொசு மட்டும் தான் கடிக்கும் ந்னு எங்கயோ படிச்ச ஞாபகம்..

அப்பறம் பசுமையான கொசுக்கடிகள் .. அண்ட் கொசு அடிகள் எழுதலாமே.. கொசுவை அடித்து வரிசையாக அடுக்கி எத்தனையாச்சு என்று நாங்கள் போட்டி வைத்திருக்கிறோம். மேலும் கொசுவினை அடித்து அதன் மூக்கை இழுத்து காலை பிச்சி
பூதக்கண்ணாடி
வைத்து ஆராய்ச்சி செய்திருக்கிறோமே..:)

எல் கே said...

anne en postai paarunga nan potruken

பொன் மாலை பொழுது said...

அதெல்லாம் நம்ம "சேட்டை'காக தனி வாரியமாக விடப்பட்ட தலைப்புகள். வேறு யாரும் எழுத உரிமை மில்லை.

// அதிலும் குண்டு குண்டாக இருக்கிற ஆண்களின் ரத்தத்தை அசின் ஃபாண்டா குடிப்பதுபோல ஸ்ட்றா போட்டுக் குடிக்குமாம். இதனாலேயே கொசு அடிப்பதில் பொதுவாக ஆண்கள், குறிப்பாக அரசு ஊழியர்கள் விற்பன்னர்கள் என்று இதுவரை மேற்கொள்ளப்படாத பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன...


இதுதானய்யா நம்ம செட்டையின் ஸ்பெஷாலிட்டி :)

வெங்கட் நாகராஜ் said...

பெண் கொசு மட்டும்தான் கடிக்கும்னு எங்கேயோ படிச்ச ஞாபகம் - ஆண் கொசு பாவம்! அதுக்குக் கடிக்கவே தெரியாது :)

கொசுக்கடி தாங்கலே!

வெங்கட்.

பெசொவி said...

அதெல்லாம் சரி, நீங்கள் இது வரை எத்தனை கொசுவை அடித்திருக்கிறீர்கள்? எத்தனை கொசுக்கடி வாங்கியிருக்கிறீர்கள்? எண்பது போன்ற அறிவுபூர்வமான கேள்விகள் எழுப்பி ஒரு தொடர் பதிவுக்கு யாரையாவது அழைத்திருந்தால்..........................

ச்சே, வட போச்சே!

Anonymous said...

இதுக்கு கொசுக்கடியே தேவல..

//சலிக்காமல் கடிப்பவர் யார், கொசுவா, காதலியா?//

உனக்கு ஆப்பு இருக்குடீ...

ADHI VENKAT said...

உலக கொசு தினம்னு இப்பதான் கேள்விப்படறேன்.

ப.கந்தசாமி said...

பெண் கொசுவிலேயும் கர்ப்பமா இருக்கிற கொசுதான் மனிதர்களைக்கடிக்கும், அதனால அதை அடிச்சா கர்ப்பிணிப் பெண்ணைக் கொன்ற பாவம் வரும் என்று தன்னுடைய ஒவ்வொரு பிரசங்கத்திலேயும் ஸ்வாமி தயானந்த சரஸ்வதி அவர்கள் சொல்லி வருகிறார்கள். சேட்டை இதை மனதில் கொள்ளவேண்டும்.

சி.பி.செந்தில்குமார் said...

anne,thammaanthoondu kosuvai vechu immaamperiya comedy idukaiyaa/?potuhaakkungka.((sorry for english coments,tamil font not working)