Saturday, May 29, 2010

குற்றம்-நடந்தது ஏன்?

சேட்டை டிவியின் நேயர்களுக்கு அன்பான வணக்கங்கள்! இது சொம்பு மார்க் சோளப்பொறி ’குற்றம் நடந்தது ஏன்?’. இன்று நாம் என்னென்ன காணப்போகிறோம்?

தன் பெயருக்கு மிகப்பொருத்தமாக, நூறு கார்களைத் திருடிய கார்மேகம்!

கோட்டூர்புரத்தில் கொள்ளிவாய்ப் பிசாசுகள்!

கார்மேகம்! சென்னையை அடுத்துள்ள பள்ளிக்கரணையில் வசிப்பவர். வாகனங்களைத் திருடுவது இவர் தொழில்! பேபி மோரீஸ் தொடங்கி பி.எம்.டபுள்யூ வரை இவர் திருடாத வாகனமே இல்லை என்று சொல்லலாம். இவரது தொழிலில் ஏற்பட்ட அபாரமான அபிவிருத்தி காரணமாகத் தான் அரபு நாடுகளிலிருந்து பேரீச்சம்பழத்தின் இறக்குமதி அதிகமானது என்றும் ஒருசில பொருளாதார வல்லுனர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து தொண்ணூற்றி ஒன்பது கார்களைத் திருடிய கார்மேகம், நூறாவது முயற்சியில் ஈடுபட்டபோது சட்டத்தின் இரும்புப்பிடியில் மாட்டி, சிறைத்தண்டனை அனுபவித்து அண்மையில் தான் விடுதலையாகியிருக்கிறார். தனது கடந்தகாலம் குறித்து கார்மேகம் என்ன சொல்கிறார் என்று பார்ப்போமா?

"பத்து வருசமா இந்தத் தொழிலிலே தான் இருந்தேனுங்க! இது வரைக்கும் எத்தனையோ வண்டியைத் திருடியிருக்கேனுங்க! ஒரு வாட்டி பேஸின் பிரிட்ஜ் லோகோ-ஷெட்டுலே நிறுத்தி வச்சிருந்த ரயில் இன்ஜினைக் கூடத் திருடியிருக்கேனுங்க! அதுக்கப்புறம் தான் பெரியமேட்டுலே பேரீச்சம்பழ மண்டி ஆரம்பிச்சேன்! சரி, நூறாவது திருட்டை கிராண்டாப் பண்ணனும்கிற ஆசை வந்திருச்சு! அதுனாலே நுங்கம்பாக்கத்துலே ஒரு வீட்டுலே நிறுத்தியிருந்த காரைத் திருடிட்டேனுங்க! இந்த வாட்டி போலீஸ் பிடிச்சிட்டாங்க!"

நூறாவது திருட்டு முயற்சியில் ஈடுபட்டபோது தான் கார்மேகத்தின் வாழ்க்கையில் விதி விளையாடியது. ஆம், அவர் திருடியது ஒரு அரசியல்வாதியின் காரை என்பதை அவர் அறிந்திருக்கவில்லை! அதை அறிந்து கொண்டபோது மிகவும் தாமதமாகி விட்டிருந்ததால், தப்பிக்க வழியே இன்றி அவர் சட்டத்தின் பிடியில் அகப்பட்டுக்கொண்டார்.

"எனக்கு வண்டியை ஸ்டார்ட் பண்ணும்போதே சந்தேகமா இருந்துச்சுங்க! ஜி.எஸ்.டி.ரோட்டுக்குப் போகணுமுன்னு ஆக்சிலேட்டரை அழுத்தினா வண்டி கேதீட்ரல் ரோட்டுக்குப் போயிருச்சுங்க! சரி, அப்படியே ரைட்டுலே வண்டியை ஒடிச்சு போயஸ் கார்டன் போயி ஆழ்வார்பேட்டை வழியா எஸ்கேப் ஆயிரலாமுன்னு பார்த்தா, வண்டி அதுவே லெஃப்டுலே திரும்பி கோபாலபுரத்துக்குள்ளே போயிருச்சுங்க! அப்புறமா பெட்ரோல் தீர்ற வரைக்கும் கோபாலபுரத்தையும் லாயிட்ஸ் ரோட்டுலேயும் சுத்திக்கிட்டே இருந்துச்சுங்க! சரி, பெட்ரோல் தீர்ந்ததுக்கப்புறமாவது நிக்குமான்னு பார்த்தா அது பாட்டுக்கு நிக்காம ஜெனரல் பாட்டர்ஸ் ரோட்டுக்குப் போயிருச்சு!"

அறியாமல் அரசியல்வாதியின் காரைத் திருடிய கார்மேகத்துக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. ஜெனரல் பாட்டர்ஸ் சாலையிலிருந்து விசுக்கென்று திரும்பிய கார் பேகம் சாஹிப் தெருவுக்குள்ளே நுழைந்தது; சத்தியமூர்த்தி பவனை நெருங்க நெருங்க கார்மேகம் திருடிய கார் கட்டுப்பாட்டை முற்றிலும் இழந்து விட்டிருந்தது.

"லாயிட்ஸ் ரோடு, கோபாலபுரத்திலேயெல்லாம் ஒழுங்காத்தான் வண்டி ஓடிட்டிருந்ததுங்க! சத்தியமூர்த்தி பவன் பக்கம் போனதும் என்னாச்சுன்னு தெரியலே! காருக்கு காக்கா வலிப்பு வந்த மாதிரி உதறல் எடுக்க ஆரம்பிச்சிடுச்சு! இன்ஜினுக்கு ஜலதோஷம் வந்து, பானட்டுக்குள்ளேயிருந்து அச்சு அச்சுன்னு ஒரே தும்மல் சத்தம்! சைலன்ஸர் ஓன்னு அலறுதுங்க; ரேடியேட்டருலேருந்து தண்ணியாக் கொட்டுது! என்ன ஏதுன்னு புரிஞ்சுக்கிறதுக்கு முன்னாலே வண்டி சத்தியமூர்த்தி பவனுக்குள்ளேயே போயிருச்சுங்க!"

கார்மேகத்தின் கதை அங்குதான் முடிந்தது. சத்தியமூர்த்தி பவனுக்குள்ளே அந்த கார் நுழைந்ததைப் பார்த்ததும் அங்கிருந்த காங்கிரஸ் தொண்டர்கள் பதற்றமடைந்தனர். அதன்பின் நடந்தது என்ன? கார்மேகமே சொல்கிறார்:

"காம்பவுண்டுக்குள்ளே வண்டி நின்னதும் நிறைய பேரு வந்து என்னை வெளியே இழுத்துப்போட்டு மொத்து மொத்துன்னு மொத்த ஆரம்பிச்சாங்க! எனக்கு ஒண்ணுமே புரியலே; ஒரு வேளை இந்தக் கட்சி ஆபீஸிலே புதுசா யாரு வந்தாலும் இப்படித்தான் வரவேற்பாங்களோன்னு சந்தேகம் வந்திருச்சு ! ஆனாலும், முடிஞ்சவரையிலும் சத்தம் போட்டுப் பார்த்தேன். ’ஐயா, நான் டி.எம்.கே, ஏ.டி.எம்.கே இல்லை, காங்கிரஸ் ஆளுதான், என்னை விட்டுருங்க,’ன்னு கெஞ்சினேன். ஆனா நான் அவங்க கட்சிக்காரன்னு சொன்னதும் முன்னை விட பலமா அடிக்க ஆரம்பிச்சிட்டாங்க! ஏன்னு கேட்டதுக்கு, ’நாங்க மத்த கட்சிக்காரனை என்னிக்குய்யா அடிச்சோம்?’னு கேட்டுக்கிட்டே அடிச்சாங்க! நான் கட்சிக்காரன்னு சொன்னது தப்புன்னு அப்புறம் தான் தெரிஞ்சது! நான் எந்த கோஷ்டின்னு தெரியாததுனாலே ஆளாளுக்கு எல்லா கோஷ்டிக்காரங்களும் ஆசை தீர மொத்துனாங்க! இதுக்குள்ளே போலீஸ் வந்திருச்சு! என்னைப் புடிச்சுக்கிட்டுப் போயி ஜெயிலிலே போட்டு என் உசிரைக் காப்பாத்துனாங்க! அவங்க நல்லாயிருக்கணும்!"

நூறாவது திருட்டு முயற்சியில் தோல்வியுற்று சிறையில் அடைக்கப்பட்டு, சமீபத்தில் வெளியான கார்மேகம் மனம்திருந்தி வாழ்கிறார். அது மட்டுமல்ல, தன்னைப் போன்ற திருடர்களுக்கு நிறைய அறிவுரையும் சொல்ல விரும்புகிறார்:

"நான் திருட்டை ஆரம்பிச்சபோது எனக்கொரு ஆசை இருந்தது. எப்படியாவது ஒரு வாட்டி ஆவடி ஃபேக்டரியிலேருந்து ஒரு டாங்கைத் திருடணுமுன்னு! ஆனா, என்னோட நூறாவது முயற்சியிலே தோத்துட்டதுனாலே நான் திருந்திட்டேன். இவ்வளவு தர்ம அடி வாங்குன அனுபவம் இருக்குறதுனாலே நானே ஒரு கட்சி ஆரம்பிச்சிட்டேன். இந்த மாசக்கடைசியிலே முசிறியிலே தேசீய மாநாடு நடத்தப்போறேன்! அனேகமா எல்லாரும் போஸ்டர் பாத்திருப்பீங்க! அதுலே கோட்டெல்லாம் போட்டுக்கிட்டு போஸ் கொடுத்திருக்கேன்! அந்த டை கூட என்னுது தான்; திருடினதுல்லே! அதுனாலே எல்லாரும் மாநாட்டுக்கு வந்திருங்க!"

"அப்புறம் இன்னொரு விஷயம்! தொண்ணூத்தி ஒம்பது தடவை திருடினவங்க, நூறாவதா ஏதாவது கோவில் உண்டியலை உடைச்சிட்டு அதுக்கப்புறம் தான் திருடப்போகணுமுன்னு இப்போத்தான் புரிஞ்சுக்கிட்டேன். இல்லாட்டா தெய்வகுத்தமாயிரும்! என் வாழ்க்கையிலேருந்து எல்லா திருடங்களும் பாடம் கத்துக்கணும்!"

நேற்று திருடன்; இன்று புதிய அரசியல்கட்சித் தலைவர! இது தான் கார்மேகம்!

ஒரு சிறிய விளம்பர இடைவேளைக்குப் பிறகு, மீண்டும் தொடரும் சொம்பு மார்க் சோளப்பொறி "குற்றம்-நடந்தது ஏன்?"

வெல்கம் பேக் டு ’நடந்தது ஏன்?’

அண்மைக்காலமாக சென்னை கோட்டூர்புரத்தில் கொள்ளிவாய்ப்பிசாசுகளின் கொட்டம் அதிகரித்திருப்பதாகப் பொதுமக்கள் மிகுந்த பீதியை அடைந்திருக்கிறார்கள். இந்தப் பீதியின் காரணமாக அங்கு குடியிருக்கும் மக்கள் மட்டுமின்றி, காலம் காலமாக அங்கு வசித்துவரும் கொசுக்களும் கூட்டம் கூட்டமாக வெளியேறிக்கொண்டிருப்பதாகத் தகவல்கள் வெளியானது. இது பற்றி ஒரு நேரடி ரிப்போர்ட்!

சென்னை கோட்டூர்புரம்! வெயில்காலத்தில் தார் பாலைவனமாகவும், மழைக்காலத்தில் இந்துமகாசமுத்திரமாகவும் காட்சியளிக்கும் பகுதி! இங்கு அண்மைக்காலமாக இரவில் கொள்ளிவாய்ப்பிசாசுகள் உலவுவதாக பொதுமக்கள் பரவலாகப் புகார் தெரிவித்திருக்கின்றனர். இந்தப் பீதியின் காரணமாக, அங்கே வசிப்பவர்கள் ஒவ்வொரு இரவிலும் ஒரு கையில் டார்ச் லைட்டும் இன்னொரு கையில் தண்ணீர் பக்கெட்டுமாக அலைந்து திரிவதாகக் கூறுகிறார் பல்லாண்டுகளாய் அங்கே வசிக்கிற பலவேசம்.

பலவேசம்: "நான் பத்துவருஷமா இங்கே குடியிருக்கிறேன்! இப்பல்லாம் தினமும் ராத்திரியானா எல்லார் வீட்டு மொட்டைமாடியிலேயும் கொள்ளிவாய்ப்பிசாசுங்க கொட்டமடிக்குதுங்க! இங்கே நிறைய சனமெல்லாம் இருக்குறதுனாலே அதுங்கெல்லாம் பயந்துக்கிட்டு கீழே இறங்காம மேலேயே இருக்குதுன்னு வெத்தலை ஜோசியர் சொல்லுறாருங்கோ! நாங்களும் இந்தக் கொள்ளிவாய்ப் பிசாசுங்களை விரட்டுறதுக்காக ஆந்திராவிலேருந்து மந்திரவாதி, கேரளாவிலேருந்து நம்பூதிரி, உள்ளூரிலேருந்து அரசியல்வாதின்னு எல்லாரையும் வரவழைச்சுப் பாத்திட்டோமுங்க! எதுக்கும் மசியாம அன்னாடம் ராத்திரியாச்சுதுன்னா மொட்டைமாடியிலே கொட்டமடிக்குதுங்க!"

இது குறித்து கோட்டூர்புரம் காவல்துறை அதிகாரிகளிடம் பேசினோம். அப்போது அவர் கூறியதாவது:

"பிசாசெல்ல்லாம் ஒண்ணுமில்லேங்க! இந்த ஏரியாவுலே அடிக்கடி மின்வெட்டு ஆவுதுன்னுறதுனாலே ஆம்பிளைங்கெல்லாம் மொட்டை மாடியிலேதான் தூங்குறாங்க! எல்லாரும் பொஞ்சாதியைப் பத்தின பயமேயில்லாம சிகரெட், பீடின்னு குடிக்குறாங்க! கீழே இருட்டுலே இருக்குறவங்களுக்கு அது கொள்ளிவாய்ப் பிசாசு மாதிரி தெரியுதுங்க! மத்தபடி நாங்க இருக்கும்போது எங்க ஜூரிஸ்டிக்சனிலே பிசாசெல்லாம் வரதுக்கு வாய்ப்பேயில்லீங்க!"

இதில் யார் சொல்வது உண்மை? உண்மையிலேயே பிசாசுகள் இருக்கின்றனவா? அல்லது பிசாசுகளைக் கண்டுபிடித்துத் தண்டிக்க சட்டத்தில் இடமில்லையென்று காவல்துறை மழுப்புகிறதா? இது குறித்து பொதுமக்கள் என்ன கருதுகிறார்கள்?

"இது கண்டிப்பா கொள்ளிவாய்ப் பிசாசு தானுங்க! மொட்டைமாடியிலே சிகரெட் புடிக்கிறாங்கங்கிறதெல்லாம் மூடநம்பிக்கைங்க! ஒருவேளை இந்த விஞ்ஞானயுகத்துலே பிசாசுங்க பீடி குடிக்குதோ என்னமோ? போலீஸ் பாத்துக்கிட்டு சும்மாயிருக்குதுங்க! அரசாங்கம் தான் ஏதாவது செய்யணும்!"

இந்த மர்ம முடிச்சு எப்போதும் அவிழும்?

இரவில் அச்சுறுத்துவது யார்? கொள்ளிவாய்ப் பிசாசா? கொள்ளிவாய்ப் புருஷன்களா?

மீண்டும் அடுத்த ’குற்றம்-நடந்தது ஏன்?’ நிகழ்ச்சியில் சந்திப்போமா?

வணக்கம் நேயர்களே!!

25 comments:

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

வந்துட்டேன்;
படிச்சுட்டேன்;
வாக்கும் குத்திட்டேன்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//’நாங்க மத்த கட்சிக்காரனை என்னிக்குய்யா அடிச்சோம்?’னு கேட்டுக்கிட்டே அடிச்சாங்க! நான் கட்சிக்காரன்னு சொன்னது தப்புன்னு அப்புறம் தான் தெரிஞ்சது!//

அது எப்படி நேர்ல பார்த்தமாதிரியே சொல்றீங்க?

பனித்துளி சங்கர் said...

////////அண்மைக்காலமாக சென்னை கோட்டூர்புரத்தில் கொள்ளிவாய்ப்பிசாசுகளின் கொட்டம் அதிகரித்திருப்பதாகப் பொதுமக்கள் மிகுந்த பீதியை அடைந்திருக்கிறார்கள். இந்தப் பீதியின் காரணமாக அங்கு குடியிருக்கும் மக்கள் மட்டுமின்றி, காலம் காலமாக அங்கு வசித்துவரும் கொசுக்களும் கூட்டம் கூட்டமாக வெளியேறிக்கொண்டிருப்பதாகத் தகவல்கள் வெளியானது. இது பற்றி ஒரு நேரடி ரிப்போர்ட்!
/////////

நண்பரே கொசுக்கள்தான் உயிருக்குப் பயந்து ஓடுகிறது ஆனால் இந்த மக்கள் எதற்குப் பயந்து ஓடுறாங்க .நம்ம வேலையே பிறரின் உயிர்களை எடுப்பதுதானே

பெசொவி said...

மிகவும் அருமை! வாழ்த்துகள்!

vasu balaji said...

நாங்க எப்பய்யா மத்தகட்சிக்காரன் அடிச்சோம்:)). சாமி முடியல:)))

ஜெய்லானி said...

//ஒரு வேளை இந்தக் கட்சி ஆபீஸிலே புதுசா யாரு வந்தாலும் இப்படித்தான் வரவேற்பாங்களோன்னு சந்தேகம் வந்திருச்சு //

//’நாங்க மத்த கட்சிக்காரனை என்னிக்குய்யா அடிச்சோம்?’னு கேட்டுக்கிட்டே அடிச்சாங்க//


மரண அடி சும்மா நச்சுன்னு இருக்கு. காங்- கட்சிகாரன் பாத்தா அப்பவாவது அவனுக்கு சுரனை வருமா என்ன ?

ஹேமா said...

பாவம் கோபிநாத்...!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ரைட்.. இப்பவும் நான் டமாசு பண்ண வழியேயில்லாம பண்ணிப்புட்டீங்க சேட்டை..

கலக்கல் ..

Riyas said...

இப்பவுள்ள பிசாசுகலெல்லாம் கோட்டரே அடிக்குதுங்கோ...

அ.முத்து பிரகாஷ் said...

அன்பு சேட்டை பாஸ் !
// ’நாங்க மத்த கட்சிக்காரனை என்னிக்குய்யா அடிச்சோம்?’ //
மொழிபெயர்த்து ராகுல் காந்திக்கு அனுப்பிவைங்க ...
கண்டிப்பா ரெஸ்பான்ஸ் பண்ணுவாரு ...
கைய கொடுங்க தோழர் ....

பொன் மாலை பொழுது said...

// ’நாங்க மத்த கட்சிக்காரனை என்னிக்குய்யா அடிச்சோம்? //

பாவம், விட்டிடுங்க

அன்பரசு said...

//சத்தியமூர்த்தி பவனுக்குள்ளே அந்த கார் நுழைந்ததைப் பார்த்ததும் அங்கிருந்த காங்கிரஸ் தொண்டர்கள் பதற்றமடைந்தனர்.//

காங்கிரஸ்ல தொண்டர்களா? சம்பவம் எப்ப சார் நடந்திச்சு? 1961லா?

அன்பரசு said...

அது கொள்ளிவாய் பிசாசு இல்லீங்ணா, நாந்தான் போதைல சிகரட்ட பத்த வெச்சுட்டு தீக்குச்சியத் தூக்கி குவாட்டர் பாட்டிலுக்குள்ள போட்டுட்டேன்!

மசக்கவுண்டன் said...

சோக்கா இருக்குதுங்கோ.

cheena (சீனா) said...

அனபின் சேட்டை

முடில சேட்டை - படிச்சுப் படிச்சு சிரிச்சுச் சிரிச்சு - வயிறு புண்ணாயிருச்சி - அய்யோ அய்யோ

நல்வாழ்த்துகள் சேட்டை
நட்புடன் சீனா

விஜய் said...

சேட்டை அது எப்படி எங்க ஊரை (முசிறி) மாநாட்டுக்கு செலக்ட் செஞ்சீங்க

காங்கிரஸ் காமெடி வயிறு புண்ணாகிவிட்டது

விஜய்

Ahamed irshad said...

உங்களுக்கு விருது இங்கே பெற்றுக்கொள்ளுங்கள்..

http://bluehillstree.blogspot.com/2010/05/blog-post_25.html

G.Ganapathi said...

இதில் யார் சொல்வது உண்மை? உண்மையிலேயே பிசாசுகள் இருக்கின்றனவா? அல்லது பிசாசுகளைக் கண்டுபிடித்துத் தண்டிக்க சட்டத்தில் இடமில்லையென்று காவல்துறை மழுப்புகிறதா? இது குறித்து பொதுமக்கள் என்ன கருதுகிறார்கள்?

//

அழகா சொல்லிருகிங்க காவல் துறையின் கையாளாக தனத்தை . கற்பனைல கூட அவங்களால ஏதும் பண்ண முடியலையே ஹ்ம்ம்ம் என்ன செய்யலாம் அடுத்த நிகழ்ச்சிய படிக்க வேண்டியது தான் எப்பங்கன்ன அடுத்த பதிவு

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

அருமை .....

தொடர்ந்து எழுத எங்கள் வாழ்த்துக்கள்

ரிஷபன் said...

நாங்க எப்பய்யா மத்தகட்சிக்காரன் அடிச்சோம்
ஹிட் லைன் இதான்..

ஜோதிஜி said...

எப்டிங்க இப்படியெல்லாம் யோசிக்க முடியுது? தாங்க முடியல.சிரிசிரிசிரி

தக்குடு said...

//நான் எந்த கோஷ்டின்னு தெரியாததுனாலே ஆளாளுக்கு எல்லா கோஷ்டிக்காரங்களும் ஆசை தீர மொத்துனாங்க! இதுக்குள்ளே போலீஸ் வந்திருச்சு! என்னைப் புடிச்சுக்கிட்டுப் போயி ஜெயிலிலே போட்டு என் உசிரைக் காப்பாத்துனாங்க!// u r rocking Mr.chettai...:) LOL post!!

வெங்கட் நாகராஜ் said...

நடந்தது ஏன்? கலக்கலான நடை..

Unknown said...

சேட்டைக்காரன் காமடியபாத்து எல்லா கொள்ளீவாய் பிசாசும் ஓடுது

அண்ணாமலை..!! said...

சேட்டை - நடந்தது ஏன்??
உண்மையைச் சொல்லுங்கள்!

'நடக்கனும்னு தோனுச்சு நடந்தேன்'!

அழிம்பு சேட்டை!:)