Tuesday, May 25, 2010

கு.மு.கழகம் உதயமானது!

டாஸ்மாக் மது விறபனை நிலையங்கள் மூலம் 2009-2010ம் ஆண்டில் ரூ.12,401.53 கோடி மொத்த வருவாய் கிடைத்துள்ளதாகவும், இதில் லாபமாகவே ரூ.2,500 கோடி கிடைத்துள்ளதாகவும் அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பைப் படித்து (KMK) குடிமக்கள் முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் வெகுண்டெழுந்துள்ளனர். இது குறித்து கட்சியின் மதுச்செயலாளர், மன்னிக்கவும்,பொதுச்செயலாளர் கிங்ஃபிஷர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கை ஜின்வருமாறு, மன்னிக்கவும், பின்வருமாறு:

"தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை டாஸ்மாக் கழக நிர்வாகிகளைத் தாங்கொணா துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. பார் ஏலம், காலி பாட்டில் விற்பனை மூலம் ரூ.500 கோடி வருமானம் ஏற்பட்டுள்ளதாக அரசுக்குறிப்பு தெரிவிக்கிறது. ஆனால், காலி அட்டைப்பெட்டிகள், பாட்டில் மூடிகள், பேப்பர் மற்றும் பிளாஸ்டிக் கழிவு விற்பனை மூலம் வசூலான சுமார் ரூ.29 கோடி குறித்து அரசு விபரம் தெரிவிக்காதது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. டாஸ்மாக் கழகத் தொண்டர்களின் நல்வாழ்வுக்காக செலவிட வேண்டிய இத்தொகை இருட்டடிப்பு செய்யப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது. இதைக் கண்டித்து கட்சியின் துணைத்தலைவர் விஸ்கி வீரமுத்து ’ரா’வாய் அருந்துகிற போராட்டத்தை ராவோடு ராவாக ஆரம்பிக்கவுள்ளார். குடிமக்கள் அனைவரும் இந்தப் போராட்டத்துக்கு பீராதரவை, மன்னிக்கவும், பேராதரவை அளித்து அரசின் மெத்தனப்போக்கைக் கண்டிக்க வேண்டுமென்று பிராண்டிக்கேட்டுக் கொள்கிறோம், அதாவது, வேண்டிக்கேட்டுக் கொள்கிறோம்."

இதைத் தொடர்ந்து கிங்ஃபிஷர் கிருஷ்ணசாமி நமது நிருபர் மந்தாரம்புதூர் மப்பண்ணனுக்கு அளித்த விபரமான பேட்டி இதோ:

கேள்வி: உங்கள் கோரிக்கை தான் என்ன? ஏன் இந்த புது இயக்கம்?

கி.கி.சாமி: கடந்த ஆறு வருடங்களாக ஒரு குவார்ட்டர் வாங்கினால், ஒரு வாட்டர் பாக்கெட் இலவசமாக வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதை இன்றுவரை அரசு நிறைவேற்றவில்லை. நாங்கள் என்ன பீருக்கா தண்ணீர் பாக்கெட் கேட்கிறோம்? இதைக் கூடவா நிறைவேற்றக் கூடாது?

மேலும் ஒன்றுக்கு மேற்பட்ட குவார்ட்டர் வாங்கினால் தலா ஒரு மிக்சர் பாக்கெட்டோ, வறுத்தகடலையோ வழங்குவதோடு கண்டிப்பாக ஒரு ஊறுகாய்ப் பாக்கெட்டும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் நீண்ட நாளாக நிலுவையில் இருக்கிறது. இதை வலியுறுத்தி நாடெங்கும் குடிமக்கள் முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் நாளை காலை எட்டு மணியிலிருந்து இரவு பதினோரு மணி வரை டாஸ்மாக் கடைகளில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்துவார்கள்.

கேள்வி: இந்த இரண்டு கோரிக்கைகளுக்காகவா கட்சி தொடங்கியிருக்கிறீர்கள்?

கி.கி.சாமி: அது மட்டுமல்ல! அண்மையில் எங்களது சங்கத்தின் முன்னாள் செயலாளர் மெக்டொவல் மேகநாதனை அவரது மனைவி பழஞ்செருப்பால் அடித்துப் படுகொலை செய்திருப்பதையறிந்து சங்கத்தின் உறுப்பினர்கள் கொந்தளிப்பில் இருக்கின்றனர். தமிழக அரசு உடனடியாக பழஞ்செருப்பு, துடைப்பக்கட்டை, உலக்கை போன்ற ஆயுதங்களை மனிதாபிமானத்தின் அடிப்படையில் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்திருக்கிறோம்.

கேள்வி: இது தவிர கு.மு.க.தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்து மனு அளித்திருக்கிறீர்களாமே?

கி.கி.சாமி: ஆம்! எங்கள் கட்சி உறுப்பினர்கள் பல்வேறு சோதனைகளுக்கு மத்தியிலே தினமும் கடமைதவறாமல் குடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறோம். ஆனால் சென்னை போன்ற நகரங்களில் தினமும் தெருநாய்கள் துரத்துவதும் கடிப்பதும் வழக்கமாகி விட்டது. சென்ற மாதம் மட்டும் எங்களது உறுப்பினர்களில் 1234 பேரை நாய்கள் கடித்திருப்பதும், கடித்த நாய்களில் பெரும்பாலானவை அடுத்த அரைமணியில் பரிதாபமாக இறந்து போயிருப்பதையும் மக்கள் அறிவார்கள். எனவே, நாய்களிலிருந்து எங்களது கட்சி உறுப்பினர்களைக் காப்பாற்ற தினமும் ஒவ்வொரு டாஸ்மாக் கடை முன்பும் ஒரு நாய்வண்டியை நகராட்சிகள் நிறுத்தி வைக்க வேண்டும். ஒரு வேளை போதுமான அளவு நாய்கள் கிடைக்காவிட்டால் அதே வண்டியில் எங்கள் உறுப்பினர்களைக் கொண்டு போய் அவரவர் வீடுகளில் விட்டு விட வேண்டும்!

கேள்வி: இதற்காக தனிப்படை அமைக்கச் சொல்லியிருக்கிறீர்களே?

கி.கி.சாமி: தனிப்படை கோரிக்கைக்கான காரணமே வேறு! பள்ளி, கோவில் அருகே டாஸ்மாக் கடைகள் வைக்கக் கூடாது என்று சட்டம் வைத்திருக்கிறார்கள். ஆனால், ஒவ்வொரு டாஸ்மாக் அருகிலும் பாதாளச்சாக்கடைகளைத் திறந்து வைத்திருக்கிறார்கள். குடிபோதையில் எங்கள் உறுப்பினர்கள் அவசரத்தில் உள்ளே இறங்கிவிடுவதால் பலர் ஆந்திராவுக்கே சென்று விடுகிறார்கள். எனவே கடற்படையின் உதவியுடன் காணாமல் போகும் எங்கள் கட்சித்தொண்டர்களைக் கண்டுபிடிக்க சிறப்புப் பாதாளச் சாக்கடைப் பாதுகாப்புக்காவலர் படையை நிறுவ வேண்டும்.

கேள்வி: குடிப்பழக்கம் அதிகமாகிவிட்டதால் மனைவியை அடித்து உதைக்கிற கணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனரே.

கி.கி.சாமி: இது ஆதாரமில்லாத குற்றச்சாட்டு! 2008-2009-ல் எங்கள் உறுப்பினர்கள் மனைவிக்குக் கொடுத்த அடிகளின் எண்ணிக்கை 12,34,567. ஆனால் கடந்த ஆண்டில் இது கணிசமாகக் குறைந்து 12,33,456 ஆகியுள்ளது.

கேள்வி: இதற்குக் காரணம் என்ன?

கி.கி.சாமி: பலவருட அனுபவம் காரணமாக, எங்கள் உறுப்பினர்கள் வீட்டுக்குப் போய் மனைவியை அடிப்பதைக் காட்டிலும் கடையிலேயே யாரையாவது அடிக்கிற பழக்கத்தைக் கடைபிடிக்கத்தொடங்கி விட்டனர். ஒரு உறுப்பினர் அடித்தால் அடுத்த உறுப்பினர் திருப்பி அடிக்கக் கூடாது என்ற சுயக்கட்டுப்பாடு இருப்பதால் மனைவியை அடிப்பதை விடவும் இது உகந்த பழக்கமாகக் கருதப்படுகிறது.

கேள்வி: இப்போது அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்கள் குறித்து ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?

கி.கி.சாமி: இது மிகப்பெரிய மோசடி! 2009-2010ம் ஆண்டில் மட்டும் சுமார் 123 கோடி ரூபாய்க்கு வெள்ளரிக்காய், கொய்யாக்காய்,மாங்காய் ஆகியவை விற்பனையாகியுள்ளன. எங்கள் கழகத்தொண்டர்களின் பேராதரவு காரணமாகத் தான் வெளிச்சந்தையில் இவற்றின் விலை ஏறியது என்பதை நாட்டுமக்கள் நன்கறிவார்கள். மேலும் சென்ற ஆண்டில் மட்டும் 13,24,456 ஆம்லெட்டுகளும், 9,11,987 ஆப்பாயில்களும் அதிகப்படியாக விற்பனையாகியுள்ளன. இது தவிர நாடெங்கும் எண்ணூறு டன் எலுமிச்சங்காய் ஊறுகாயும், ஐநூற்றி எழுபது டன் மாங்காய் ஊறுகாயும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இவை குறித்து அரசின் அறிக்கை குறிப்பிடாதது எங்களது சாதனையை இருட்டடிப்பு செய்வது போலிருக்கிறது.

கேள்வி: அண்மையில் தங்கள் கட்சியின் பொருளாளர் பகார்டி பக்கிரிசாமி நிதியமைச்சரைச் சென்று சந்தித்ததன் நோக்கம் என்ன?

கி.கி.சாமி: எங்கள் கட்சித் தொண்டர்கள் குடிப்பதற்காக எதையெதையோ விற்றும் அடமானம் வைத்தும் அல்லல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். மேலும் பெரும்பாலானோருக்கு ஒரே மனைவி என்பதால் ஆத்திர அவசரத்துக்கு அடகு வைக்க ஒரு தாலி மட்டுமே கிடைக்கிறது. எனவே, இனி அரசே ’வட்டியில்லா புட்டிக்கடன்,"வழங்க வேண்டுமென்று மக்ஜர் அளித்திருக்கிறோம்.

கேள்வி: உங்கள் கட்சியை ஏப்ரல் ஒன்றாம் தேதி துவக்கியிருப்பதற்கு ஏதாவது காரணம் இருக்கிறதா?

கி.கி.சாமி: இருக்கிறது! எங்கள் இயக்கத்தின் தூணாக இருந்த மொடக்குறிச்சி மொடாக்குடியன் அன்றுதான் டாஸ்மாக் கடையிலேயே தனது இறுதி மூச்சை விடுத்தார். இனிவரும் ஆண்டுகளில் அவரது நினைவு நாளன்று எங்கள் தொண்டர்கள் "பீர்ப்பந்தல்" அமைத்து பொதுமக்களின் தாகத்தைத் தணிப்பார்கள். அது மட்டுமல்ல, அன்றைய தினத்தை அரசு விடுமுறையாக அறிவிப்பதோடு அவர் பெயரில் ஒரு தபால்தலையும் வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறோம்.

கேள்வி: டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடக்கூடாது என்று கூட கோரிக்கை வைத்திருக்கிறீர்களே?

கி.கி.சாமி: ஆமாம், பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகைகளின் போது டாஸ்மாக் கடைகளைத் திறந்து வைத்திருப்பது போலவே காந்தி ஜெயந்தி, மகாவீர் ஜெயந்தி, புத்த பூர்ணிமா போன்ற நாட்களிலும் கடைகளை மூடாமல் திறந்தே வைத்திருக்க வேண்டும். எங்கள் கட்சித்தொண்டர்கள் அந்த மாபெரும் மனிதர்களுக்கு அஞ்சலி செய்ய வேண்டாமா?

கேள்வி: உங்கள் கழகத்துக்கென்று புதிய சமூக பொருளாதாரக்கொள்கை வேறு வைத்திருக்கிறீர்களே? அது பற்றி ஓரிரு வார்த்தைகள் கூற முடியுமா?

கி.கி.சாமி: அவசியம் கூறுகிறேன்! எங்களது இயகக்த்தின் வளர்ச்சி காரணமாக, போக்குவரத்துக் காவலர்களின் வருவாய் இரவு நேரங்களில் அதிகரித்திருப்பதை மக்கள் நன்கு அறிவார்கள். மேலும் தமிழகத்தில் நடைபெறும் விபத்துக்களில் 22 சதவிகித விபத்துக்கள் எங்களது வளர்ச்சியால் நடைபெறுகின்றன என்பதால் ஜனத்தொகையை கட்டுப்பாட்டில் வைப்பதில் நாங்கள் ஆற்றிவரும் பெரும் தொண்டை யாரும் மறுக்க முடியாது. மேலும் எங்களது இயக்கத்தின் இமாலய வளர்ச்சி காரணமாக குடல் அறுவை சிகிச்சை மருத்துவர்கள், மனோதத்துவ நிபுணர்கள், ஜோசியர்கள் ஆகியோரின் தொழிலில் வியக்கத்தக்க அபிவிருத்தி ஏற்பட்டிருக்கிறது. எங்கள் கட்சித்தொண்டர்களின் வீட்டுப் பெண்மணிகள் தங்களது பெரும்பாலான நேரத்தைக் கோவில்களிலும் குளங்களிலுமே செலவழிக்கிறார்கள் என்பதால் எங்களால் ஆன்மீகத்துக்கும் பெரும் வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. இவற்றையெல்லாம் மக்களிடம் துண்டுப்பிரசுரங்கள் மூலமாக விளக்க ஆவன செய்து கொண்டிருக்கிறோம்.

கேள்வி: குடிப்பழக்கம் காரணமாக சேமிப்பு கரைந்து விடுவதாக பொதுமக்கள் கருத்துத் தெரிவிக்கிறார்களே? அது குறித்து உங்கள் கருத்தென்ன?

கி.கி.சாமி: இது குறித்து எங்கள் தொண்டர்களுக்கு விழிப்புணர்ச்சி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. குடித்து முடித்ததும் பாட்டில்களைக் கடையிலேயே போட்டு விடாமல் வீட்டுக்குக் கொண்டு வந்து, போதுமான அளவு சேர்ந்ததும் விலைக்கு விற்றால், ஒரு கணிசமான தொகையை சேமிக்க முடியும். மேலும், அலுவலகத்துக்குக் கொண்டு செல்வது போல டாஸ்மாக் கடைகளுக்கும் வீட்டிலிருந்தே தண்ணீரைக் கொண்டு போகத்தொடங்கினால் வாட்டர் பாக்கெட் செலவும் மிச்சமாகும். இது போன்ற ஒரு பத்து அம்சத்திட்டதை நாங்கள் நாடெங்கும் பிரசாரம் செய்ய்த்தொடங்கியிருக்கிறோம்.

கேள்வி: இறுதியாக ஒரு கேள்வி! உங்கள் கட்சி நிர்வாகிகளை நடைபெறவிருக்கிற செம்மொழி மாநாட்டில் பேச அழைக்க வேண்டும் என்று கூறியிருக்கிறீர்களே, இதற்கு என்ன காரணம்?

கி.கி.சாமி: தமிழ்மொழியின் வளர்ச்சிக்காக எங்களது கழகம் அயராது பாடுபட்டு வருகிறது. டாஸ்மாக் கடைகளில் 2004-2005-ல் புதிதாக 112 புதிய வார்த்தைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதுவே 2009-2010ல் 947 வார்த்தைகளாக உயர்ந்துள்ளன. இந்த வார்த்தைகளைத் தமிழ் அகராதியில் சேர்ப்பதோடு இது குறித்து ஆராய்வதற்காக சென்னைப் பல்கலைக்கழகத்தில் ’டாஸ்மாக்காலஜி,’ என்று புதிய பாடத்திட்டத்தையும் அறிமுகம் செய்ய வேண்டும் என்பதே எங்களது அவா.

அடுத்த தேர்தலில் எந்தக் கட்சியோடு கூட்டணி அமைப்பீர்கள் என்ற கேள்விக்கு பதிலளிக்க கிங்ஃபிஷர் கிருஷ்ணசாமி மறுத்து விட்டார். இருந்தாலும், கு.மு.கவின் கட்சிக் கொள்கைகளை ஏற்று, அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் கட்சிக்கு அவர்கள் ஆதரவளிப்பார்கள் என்று பெயர் சொல்ல விரும்பாத சில கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பேட்டியின் போது கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் கோல்கொண்டா கோவிந்தசாமியும், இணைச்செயலாளார் நெப்போலியன் நெடுவளவனும் உடனிருந்தனர்.

31 comments:

manjoorraja said...

வருங்கால முதல்வர் கிங்ஃபிஷர் கிருஷ்ணசாமி

வாழ்க வளர்க


குமுக
துபாய் குறுக்கு சந்து கிளை

பொன் மாலை பொழுது said...

எல்லா சரக்கின் பெயர்களும் சேட்டைக்கு அத்துபடிதான் போலும்.

பீர் பந்தல்,
டாஸ்மாக்காலாஜி

கறு நாக்கு வாயரே சொல்லாதீர்கள். வந்தாலும் வரலாம்.
யார்கண்டது.

வெங்கட் நாகராஜ் said...

அச்சச்சோ இன்னொரு புது கட்சியா - நான் வரல இந்த விளையாட்டுக்கு.

அகல்விளக்கு said...

குமுக - ல கொ.ப.செ. பதவி எனக்குத்தான தலைவரே...

ஈரோடு கதிர் said...

செம ’கிக்’

அகல்விளக்கு said...

ஓஓ.. அது ஆக்குபைடா....

ரைட்டு...

நேசமித்ரன் said...

செம சேட்டை!!!

மசக்கவுண்டன் said...

என்னயும் மெம்பரா சேத்திக்கோங்க, மறந்துடாதீங்க!

பெசொவி said...

கு.மு.க.ன்னா குஷ்பூ முன்னேற்றக் கழகம் இல்லையா?

பனித்துளி சங்கர் said...

நேத்து ஏத்துனதே இன்னும் இறங்கால .
இன்னைக்கு மட்டதான் !

தனி காட்டு ராஜா said...

சரக்கு இல்லாம பதிவு எழுதறான்னு ... குடிகாரபையன் கூட இனிமே சொல்லிற முடியாது .....

அப்பாதுரை said...

ஒரு சொட்டு கூட மிச்சம் வைக்காமல் எல்லா விசயத்தையும் எடுத்துச் சொல்லியிருக்காரு கி.கி.சா. நாலைய மூதல்வார் கி.கி.சா வால்க.அவர் ஆதரவில் பாட்டில் ஊர்வலம் நடத்தப்படும் என்பதை தால்மையுடன் தெரிவிக்கிறேன்.

Prathap Kumar S. said...

வழ்க்ம் அண்ணாத்த,,,நம்ம பிரழ்ச்யைய நழ்ழாவே தெரிழ் வழ்சிருக்க அண்ணாழ்த்த...ரொம் நழ்றிப்பா...வழ்ட்டா....

vasu balaji said...

பிரமாதமான மிக்சிங் சேட்டை:))

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

நாஞ்சில் பிரதாப் says:
May 25, 2010 8:59 PM

வழ்க்ம் அண்ணாத்த,,,நம்ம பிரழ்ச்யைய நழ்ழாவே தெரிழ் வழ்சிருக்க அண்ணாழ்த்த...ரொம் நழ்றிப்பா...வழ்ட்டா....
//

அண்ணே.. கமென்ஸ்ல கலக்கிப்புட்டீங்க.. ஹா.ஹா...

நீச்சல்காரன் said...

குடிமக்களுக்கு ஆயுள் காப்பீடு வழங்க வேண்டி போராடாததால் வெளி நடப்புச் செய்கிறோம்.

இப்படிக்கு,
அனைத்திந்திய குடிமக்கள் முன்னேற்றக் கழகம்
&
மறுமலர்ச்சி குடிமக்கள் முன்னேற்றக் கழகம்.

சிநேகிதன் அக்பர் said...

இதுதானே நடந்திட்டு இருக்கு பாஸ்.

கலக்கல் போங்க.

நாஞ்சிலுக்கு அடிச்சி பார்த்து ஏறாத போதை. படிச்சி பார்த்து ஏறிடுச்சு :)

பிரேமா மகள் said...

அய்ய.. சாராயமா? சீ.. சீ.. நான் இந்த ஏரியா பக்கமே ஒரு வாரத்துக்கு வர மாட்டேன்...

Anonymous said...

நாட்டிற்கு ரொம்ம்ம்ப முக்கியமான பிரச்சனையை அலசி இருக்கும் அண்ணாச்சி வாழ்க..

நான் தமிழன். said...

//பெயர் சொல்ல விருப்பமில்லை says:
May 25, 2010 4:49 PM
கு.மு.க.ன்னா குஷ்பூ முன்னேற்றக் கழகம் இல்லையா?
//

அதானே..

கோமதி அரசு said...

/வட்டியில்லா புட்டி கடன்/

அவசியம் கேட்க வேண்டியது தான்.

வால்பையன் said...

ஹாஹாஹாஹா!

நல்லாயிருக்கு தலைவா!

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

vandhachu.. padichchachu :)

மங்குனி அமைச்சர் said...

எப்பா என்னையும் சேத்துக்க

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//பெரும்பாலானோருக்கு ஒரே மனைவி என்பதால் ஆத்திர அவசரத்துக்கு அடகு வைக்க ஒரு தாலி மட்டுமே கிடைக்கிறது//

ஒன்றுக்கு மேற்பட்ட மனைவி வேண்டும்'னு
கேட்காமல் விட்டாரே, கி.ஃபி.கி.!!!!!!!!!!!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

நான் தலைப்பை பாத்துட்டு குஷ்பு முன்னேற்ற கழகம்னு நெனச்சுட்டேன்... குடிமக்களா... இந்த கழகம் ஒண்ணும் தான் இது வரைக்கும் இல்ல...இப்ப அதுவும் வந்தாச்சா... கடவுளே தமிழ்நாட்டை நீ தான் காப்பத்தணும்...

சாந்தி மாரியப்பன் said...

உங்களுக்கு ஒரு விருது கொடுத்திருக்கேன். கழகத்துக்காரங்க கண்ணுல படாம பாத்துக்கங்க :-))))


http://amaithicchaaral.blogspot.com/2010/05/blog-post_28.html

Ahamed irshad said...

http://bluehillstree.blogspot.com/2010/05/blog-post_25.html

விருது உங்களுக்கு இங்கே வந்து பெற்றுக்கொள்ளுங்கள்..

அண்ணாமலை..!! said...

நகைச்சுவையா எழுதியிருந்தாலும் இதில
மதுவுக்கான விழிப்புணர்வும் இருக்கு!
சூப்பர் சேட்டை!

Unknown said...

உங்க கட்சியிலே உறுப்பினரா சேர என்ன செய்யணும்..

Balaji said...

Haa Haa Haa