Monday, February 11, 2013

வீரபாகு vs மைசூர்பாகு-02

இதன் முதல்பகுதியை வாசிக்க இங்கே சொடுக்கவும். படிக்காவிட்டாலும் குடிமுழுகி விடாது என்பது என் வலைப்பதிவுக்கு வழக்கமாக வருகிறவர்களுக்கு நன்றாகவே தெரியும். 


      காலையில் திருவல்லிக்கேணி புளியோதரை மாதிரி காரசாரமாக இருந்த ஜி.எம்.கமலக்கண்ணன், திடீரென்று திருப்பதி லட்டுபோல தித்திப்பாகப் பேசியது வீரபாகுவின் குழப்பத்தை அதிகரித்தது. அவனது கண்கள் மனைவி செய்து அனுப்பிய மைசூர்பாகை, அரசாங்க மருத்துவமனை நர்ஸ் கையிலிருக்கும் ஊசியைப் பார்ப்பதுபோல கலவரத்துடன் வெறித்துக் கொண்டிருந்தன.

      மாசிலாமணி சார்! இந்த ஸ்வீட்டுக்கு ஏன் மைசூர்பாகுன்னு பேர் வைச்சாங்கன்னு தெரியுமா?

      நான் ஹிஸ்டரிலே ரொம்ப வீக்கு!விக்கிரமன் சினிமாவின் இறுதிக்காட்சியில் திருந்திய வில்லனைப்போல நாத்தழுதழுக்கக் கூறினார் மாசிலாமணி. “நியாயமாப் பார்த்தா இதுக்கு ஜாம்ஷெட்பூர்-பாகுன்னோ, பிலாய்-பாகுன்னோ தான் பேரு வைச்சிருக்கணும்!

      ஏன் அவ்வளவு தூரம்? நம்ம சேலத்துலே கூட ஸ்டீல் ஃபாக்டரி இருக்கே?என்று சந்தடிசாக்கில் தனது பொது அறிவை வெளிக்காட்டி, தனக்கும் அறிவு இருப்பதை நிரூபிக்க முயன்றான் பெத்தண்ணா.

      எது எப்படியோ,நிம்மதிப் பெருமூச்சு விட்டான் வீரபாகு. சாப்பிடாமலேயே, மேனேஜர் கரிசனையாப் பேசினதுலே வயிறு நிறைஞ்சிருச்சு!

      உஷாரா இருங்க வீரபாகு!கிசுகிசுத்தார் மாசிலாமணி. “காஸ் ட்ரபிள் வந்தாக் கூட வயிறு  நிறைஞ்சா மாதிரித்தானிருக்கும்!

      இந்த ஆபீஸ்லே பாஸ் ட்ரபிள் தான் வரும்; காஸ் ட்ரபிள் வரவே வராது!என்றான் பெத்தண்ணா.

      ஹும்! இந்த மைசூர்பாகைப் பார்த்ததும் எனக்கு பழைய ஞாபகமெல்லாம் வருது!என்று பெருமூச்சு விட்டான் வீரபாகு.

      மைசூர்பாகுக்கெல்லாம் ஃப்ளாஷ்பேக்கா? சேரனோட ஆட்டோகிராஃப் மாதிரி உங்களுக்கும் ஏதோ ஸ்வீட்டோகிராஃப் இருக்கும் போலிருக்குதே!

      ஆமா சார்!என்று மோட்டை வெறித்தான் வீரபாகு. “என் மனைவியை நான் ஒரு வேலன்டைன்ஸ் டே அன்னிக்குத்தான் முதமுதலா சந்திச்சேன்.

      அட, நான் கூட அப்படித்தான்! நல்ல நாளும் அதுவுமா நமக்கு இப்படியெல்லாம் நடந்திருக்கு பாருங்க!

      கேளுங்க சார்! கிருஷ்ணா ஸ்வீட்ஸ் கடையிலே மைசூர்பாகு வாங்கும்போது தான் அவளைப் பார்த்து மெய்மறந்துட்டேன்.

      சரிதான், மைசூர்பாகு வாங்கப்போயி அல்வா வாங்கிட்டீங்கன்னு சொல்லுங்க!

      எனக்கு மைசூர்பாகு பிடிக்கும்னு அவ ஒவ்வொரு காதலர் தினத்தன்னிக்கும் மைசூர்பாகு பண்ணுவா! இதுவரைக்கும் ஒரு சிங்கப்பல், ஒரு கோரைப்பல், ஒரு கடவாய்ப்பல் உடைஞ்சாலும்  அவ மைசூர்பாகு பண்ணுறதை மட்டும் நிறுத்தலே!

      கவலைப்படாதீங்க! தெரிஞ்சுதான் கடவுள் நிறைய பல்லு கொடுத்திருக்கான்!

      எப்படிக் கவலைப்படாம இருக்க முடியும்?வீரபாகு குமுறினான். “இன்னிக்கு நான் சாப்பிட வேண்டியதை ஜி.எம்.சாப்பிட்டுட்டாரே! ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆயிடுச்சுன்னா, ஹெட் ஆஃபீஸுக்கு யார் பதில் சொல்றது?

      எதுக்கும் அவரை உஷார்ப்படுத்துறது நல்லது,என்றான் பெத்தண்ணா. “இப்பத்தான் ஜி.எம். ஜாலிமூடுலே இருக்காரே! உள்ளே போயி பேசிடுங்க!

      பெத்தண்ணா சொன்னதிலிருந்த லாஜிக்கைப் புரிந்துகொண்ட வீரபாகு, ஜி.எம்மை எச்சரிக்கலாம் என்று இருக்கையிலிருந்து எழுந்தபோது....

      மிஸ்டர் வீரபாகு!ஜி.எம். ஓடோடி வந்தார். “எதுக்கு எந்திரிச்சீங்க? உட்காருங்க..! இனிமே இந்த ஆபீசுலே நீங்க எந்திரிக்கவே கூடாது.

      சார்...உங்களைப் பார்க்கத்தான்....இழுத்தான் வீரபாகு.

      என்னைப் பார்க்கணும்னா இன்ட்டர்காமிலே கூப்பிடுங்க!ரேஷன் கடை அரிசியில் வடித்த சாதம்போலக் குழைந்தார் ஜி.எம். மிஸ்டர் வீரபாகு! உங்களை ரொம்ப ஓவரா திட்டிட்டேன்னு வருத்தமாயிருக்கு! உங்களைப் போயி அறிவுகெட்ட முண்டம்னு திட்டினேனே? எனக்கு மன்னிப்பே கிடையாது!

      பரவாயில்லை சார்! அதான் மைசூர்பாகு சாப்பிட்டுட்டீங்களே! சரியாப் போச்சு!

      யோவ் பெத்தண்ணா! யோவ் மாசிலாமணி!இரைந்தார் ஜி.எம். “மிஸ்டர் வீரபாகு சீட்டை விட்டு எந்திரிக்கவே கூடாது. புரியுதா?

      ஜி.எம். வந்தவேகத்திலேயே தன் அறைக்குள் செல்லவும், பெத்தண்ணாவும் மாசிலாமணியும் வீரபாகுவை முறைத்தனர்.

      யோவ் வீரபாகு! மைசூர்பாகுலே எதையோ கலந்திருக்காங்களோ உங்க சம்சாரம்?

      நீங்க வேறே!அலுத்துக் கொண்டான் வீரபாகு. “ஒருவாட்டி அவ கடலைமாவுக்குப் பதிலா சீயக்காய்த்தூளைப் போட்டு மைசூர்பாகு கிண்டினா தெரியுமா? நல்ல வேளை, தீபாவளி வந்ததுனாலே அதை வைச்சே குடும்பமே தேய்ச்சுக் குளிச்சிட்டோம்.

      என்னாலே நம்பவே முடியலே!

      எதை? தீபாவளிக்குக் குளிச்சதையா?”

      மாசிலாமணி முறைக்கவே, பார்வையைத் திருப்பிய வீரபாகுவுக்கு ‘சட்டென்று ஞாபகம் வந்தது.

      அடடே! ஸ்டோர்ஸுக்குப் போகணுமே! எழ முயல.......

      மிஸ்டர் வீரபாகு!

      ஜி.எம்.கமலக்கண்ணன் மீண்டும் விரைந்தோடி வந்தார். “எதுக்கு மறுபடியும் சீட்டுலேருந்து எழுந்திருச்சீங்க?

      ஸ்டோர்ஸுக்குப் போ......

      ஸ்டோர்ஸுக்கெல்லாம் நீங்க போகணுமா? இந்தப் பெத்தண்ணாவை அனுப்புங்க! நீங்க சிரமமே படாம இருங்க! பாவம், உங்களை எப்படியெல்லாம் திட்டிட்டேன். வெளக்கெண்ணைன்னெல்லாம் திட்டியிருக்கேனே? வெரி சாரி வீரபாகு! யோவ் பெத்தண்ணா! வீரபாகு சாருக்கு ஸ்டோர்ஸ்லேருந்து என்னென்ன வேணுமோ எல்லாம் வாங்கிக் கொடு! நீங்க உட்காருங்க வீரபாகு!

      ஜி.எம். மீண்டும் அறைக்குள் நுழைந்ததும், மாசிலாமணி இரைந்தார்.
      “என்னய்யா நடக்குது இந்த ஆபீசுலே?

      சார்!”வீரபாகு தலையைப் பிடித்துக் கொண்டான். “எனக்கு ஜன்னல் வழியா வெளியே குதிக்கலாம் போலிருக்கு!”

      அப்படியெல்லாம் சொல்லாதீங்க வீரபாகு!மாசிலாமணி உருகினார். “உங்களை சீட்டை விட்டு எந்திரிக்கவே கூடாதுன்னு ஜி.எம்.சொல்லியிருக்காரு! உங்களுக்குப் பதிலா எங்களை ஜன்னல்வழியா குதிக்கச் சொன்னாலும் சொல்வாரு!

      அடுத்த ஒரு மணி நேரத்துக்கு வீரபாகு இருக்கையை விட்டு நகரவேயில்லை. ஆனால், மதியம் டீ சாப்பிட்டதும், தம்மடிக்க வேண்டும் போலிருக்கவே.....

      மிஸ்டர் வீரபாகு!

      ஜி.எம். கமலக்கண்ணன் மின்னல்வேகத்தில் வந்து நின்றார். “ஏன் சார் என் மனசை இப்படிப் புண்படுத்தறீங்க? நீங்க கொஞ்சம்கூட அலட்டிக்கக்கூடாது. எதுவாயிருந்தாலும் நாங்க பார்த்துக்கறோம். உங்களைப் போயி நான் புண்ணாக்குன்னு திட்டிட்டேனே......

      சார்...வந்து பாத்ரூமுக்கு.....!

      பாத்ரூமுக்கு நீங்களே போகணுமா? மாசிலாமணி போக மாட்டாரா?

      சார், நானென்ன பாத்ரூமுக்கு ப்ளஸ் டூ பரீட்சை எழுதவா போறேன்? எனக்குப் பதிலா ஆள்மாறாட்டம் பண்ணறதுக்கு...?

      மிஸ்டர் வீரபாகு! நீங்க கொஞ்சம் கூட ஸ்ட்ரெயினே பண்ணக் கூடாது.

      ஸ்ட்ரெயின் பண்ணக்கூடாதா? பாத்ரூம் போகாம இருக்கிறதைவிட ஒரு மனுசனுக்கு வேறென்ன ஸ்ட்ரெயின் இருக்கு வாழ்க்கையிலே? ஆளை விடுங்க சார்...!

      நோ! ஜி.எம் நான் சொல்றேன். நீங்க அசையப்படாது!

      ஏன் சார் படுத்தறீங்க?பொறுமையிழந்து கத்தினான் வீரபாகு. “எந்திரிக்கக்கூடாது, நடக்கக்கூடாதுன்னு புள்ளத்தாச்சிக்குச் சொல்றா மாதிரி சொல்றீங்க. வுட்டா ஆபீசுலே வளைகாப்பே நடத்திருவீங்க போலிருக்கே! நானும் அப்போலேருந்து பார்த்திட்டிருக்கேன். ஒரு மைசூர்பாகைத் தின்னுப்புட்டு ராவா ரெண்டு க்வார்ட்டர் அடிச்சா மாதிரி பெனாத்திட்டிருக்கீங்க! என்ன சமாச்சாரம்?

      கோவிச்சுக்காதீங்க மிஸ்டர் வீரபாகு!ஜி.எம். நெருங்கி வந்து வீரபாகுவின் கைகளைப் பற்றிக் கொண்டார். “உங்களைப் பத்திச் சரியாத் தெரியாம வாய்க்கு வந்தபடி திட்டிட்டேன். பாவம் நீங்க, ஏற்கனவே இந்த மாதிரி மைசூர்பாகையெல்லாம் அப்பப்போ தின்னு ரொம்ப நொந்து போயிருப்பீங்க. எப்பேர்ப்பட்ட தியாகி நீங்க? அதைக் கூடப் புரிஞ்சுக்காம உங்களை நான் வேறே கண்டபடி திட்டி வெந்த புண்ணுலே வேல் பாய்ச்சியிருக்கேனே!

      மாசிலாமணியும், பெத்தண்ணாவும் திகைத்து நிற்க, வீரபாகு ஜி.எம்.மை சமாதானப்படுத்தினான்.

      சார், இவ்வளவு நேரம் அந்த மைசூர்பாகுனாலேயா இவ்வளவு எமோஷனலாயிருந்தீங்க? நான் கூட உங்க பெருகுடல் பிளாக் ஆகி, ரத்த ஓட்டம் நின்னுபோயி மறைகழண்டு இப்படியெல்லாம் பெனாத்தறீங்களோன்னு பயந்துட்டேன் சார்! கவலைப்படாதீங்க சார்! எனக்கு ஒண்ணும் ஆகாது! ஹேப்பி வேலன்ட்டைன்ஸ் டே சார்!


(முற்றும்) 

 

17 comments:

அருணா செல்வம் said...

சேட்டை ஐயா...
சிரிச்சி சிரிச்சி வயிறு புண்ணாயிடுச்சி....

கலக்கிட்டீங்க போங்க....
நன்றி.

கவியாழி said...

”எனக்கு மைசூர்பாகு பிடிக்கும்னு அவ ஒவ்வொரு காதலர் தினத்தன்னிக்கும் மைசூர்பாகு பண்ணுவா! இதுவரைக்கும் ஒரு சிங்கப்பல், ஒரு கோரைப்பல், ஒரு கடவாய்ப்பல் உடைஞ்சாலும் அவ மைசூர்பாகு பண்ணுறதை மட்டும் நிறுத்தலே!”
உங்கமேல அவளவு பிரியமோ?

இராஜராஜேஸ்வரி said...

சேட்டை செய்த மைசூர்பாகு..

பால கணேஷ் said...

‘‘சார், நானென்ன பாத்ரூமுக்கு பிளஸ் டூ பரிட்சை எழுதவா போறேன் ஆள் மாறாட்டம் பண்றதுக்கு..?’’ -சூப்பர்ணா! வெடி்ச்சு சிரிச்சேன்!

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா... ஹா... செம சேட்டை...

ezhil said...

இந்த பகுதியி வந்த சிரிப்பால் சென்ற பகுதியையும் உங்கள் சொல்லையும் மீறி சென்று படித்துச் சிரித்தேன்... நன்றி

sethu said...

settai ungalukku kattanum kottai

சமீரா said...

ஹய்யோ பாவம் இந்த வீரபாகுவுக்கு வந்த சோதனையா நினைச்சா எனக்கே இரக்கம் வருது... கலக்கிடீங்க சார்....

குட்டன்ஜி said...

கிலோக்கணக்கில் இதே போன்ற மைசூர்பாகு உங்களுக்குக் இடைக்கட்டும்!

வெங்கட் நாகராஜ் said...

சிரிச்சு மாளல!

ADHI VENKAT said...

// “ஒருவாட்டி அவ கடலைமாவுக்குப் பதிலா சீயக்காய்த்தூளைப் போட்டு மைசூர்பாகு கிண்டினா தெரியுமா? நல்ல வேளை, தீபாவளி வந்ததுனாலே அதை வைச்சே குடும்பமே தேய்ச்சுக் குளிச்சிட்டோம்.“//

சிரிச்சு சிரிச்சு முடியல.....

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

எதிர் பாராத முடிவு. நகைச்சுவை சிகரம் சார் நீங்க.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//”சார்...வந்து பாத்ரூமுக்கு.....!”

”பாத்ரூமுக்கு நீங்களே போகணுமா? மாசிலாமணி போக மாட்டாரா?”

”சார், நானென்ன பாத்ரூமுக்கு ப்ளஸ் டூ பரீட்சை எழுதவா போறேன்? எனக்குப் பதிலா ஆள்மாறாட்டம் பண்ணறதுக்கு...?”//

நல்ல நகைச்சுவையாக இருந்தது.

பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

// ”யோவ் வீரபாகு! மைசூர்பாகுலே எதையோ கலந்திருக்காங்களோ உங்க சம்சாரம்?”

”நீங்க வேறே!” அலுத்துக் கொண்டான் வீரபாகு. “ஒருவாட்டி அவ கடலைமாவுக்குப் பதிலா சீயக்காய்த்தூளைப் போட்டு மைசூர்பாகு கிண்டினா தெரியுமா? நல்ல வேளை, தீபாவளி வந்ததுனாலே அதை வைச்சே குடும்பமே தேய்ச்சுக் குளிச்சிட்டோம்.“//

ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா! சூப்பர் காமெடி. ;)))))

எல் கே said...

சேட்டை ஸ்டைல் தனிதான்

BABA said...

பாக்கியம் ராமாசமிக்குப்பிறகு இவ்வளவு ரசித்து நான் எதையும் படித்ததில்லை.

நன்றி - சேட்டைப்பிரியன்

மாதேவி said...

"ஒரு சிங்கப்பல், ஒரு கோரைப்பல், ஒரு கடவாய்ப்பல் உடைஞ்சாலும் அவ மைசூர்பாகு பண்ணுறதை மட்டும் நிறுத்தலே!” ஹய்யோ....ஹய்யோ.

சீயக்காய் மைசூர்பாகு...சிரித்து முடியலை.

மைசூர்பாகு என்ன தவம் செய்தது :))))