Monday, February 18, 2013

கடலோரக் கப்சாக்கள்-02
எச்சரிக்கை.01:    இதுவும் கொஞ்சம் நீளமான இடுகைதான்!

எச்சரிக்கை.02:   இன்னும் ஒரு பகுதி வரும். அவ்வ்வ்வ்!மரோ சரித்ரா & ஏக் தூஜே கே லியே

      பொதுவாக, கடற்கரையை மையப்படுத்தி எடுக்கப்படுகிற படங்கள் என்றாலே, கண்டிப்பாகக் காதல் வேண்டும் என்ற அழிச்சாட்டியம் தொன்றுதொட்டு தொடர்ந்து வருகிறது. இந்த உபாதையிலிருந்து கே.பாலசந்தர் கூட தப்பிக்கவில்லை என்பதற்கு மரோ சரித்ராஉதாரணம். ஆனால், உண்மையில் இந்த இடுகையின் முதல் பகுதியில் நான் குறிப்பிட்ட படங்கள், இந்தப் பகுதியில் நான் குறிப்பிடப்போகும் படங்கள், இரண்டு பகுதிகளிலும் குறிப்பிட முடியாத அளவுக்கு நான் பார்த்தும் மறந்துபோன படங்கள் என்று மொத்தக் கணக்கைப் பார்த்தால், இன்றளவில் நான் பார்த்ததிலேயே மிகவும் பிடித்தமான கடற்கரைப் படம் ‘மரோ சரித்ராமற்றும் ‘ஏக் தூஜே கே லியேதான் என்று கருதுகிறேன்.

      கே.பாலசந்தர் என்றாலே, பெரும்பாலும் இரண்டு பெண்டாட்டிக்காரனின் இம்சைகள், ஆணாதிக்கம், பெண்ணியம், புதுமை, புரட்சி, உன்னையெல்லாம் எவண்டா படம்பார்க்க வரச்சொன்னது?என்பதுபோல பெஞ்சு டிக்கெட்காரர்களுக்குப் புரியாமல் கதை சொல்லும் உத்தி, ஸ்லோ மோஷனில் சுற்றும் மின்விசிறிகள், அசந்தர்ப்பமாக ஆடுகிற தலையாட்டி பொம்மைகள், ஆங்கிலத்தாளிப்பு, தலையைச் சுற்றி மூக்கைத் தொடுகிற சிம்பாலிசங்கள், ஆரம்பத்தில் படுதீவிரமாக பில்ட்-அப் செய்யப்பட்டு, இரண்டாவது பாதியில் சொதப்புகிற லட்சிய நாயகர்கள் / நாயகிகள் என்று ஒரு ஃபார்முலா இருக்கும். மரோ சரித்ராவிலும் இதுபோன்ற திணிக்கப்பட்ட மேதாவித்தனங்கள் இருந்தாலும், பின்னாளில் வந்து கலக்கிய ‘ஒரு தலை ராகம்படத்தைப் போலவே, ‘மரோ சரித்ராவும் நேரடியாகச் சொல்லப்பட்ட ஒரு கோர்வையான காதல்கதை என்பதில் சந்தேகமில்லை. (கே.பாலசந்தர் குறித்து நான் குழுமங்களில் எழுதிய கட்டுரைத் தொடரை, கொஞ்சம் உடம்பைத் தேற்றிக்கொண்டு, இங்கு இடுவதாக இருக்கிறேன்.)

      சில படங்களை கமலைத் தவிர வேறு யாராலும் செய்ய முடியாது என்பதை, மறுக்க முடியாது. ’16 வயதினிலே’, ‘சிவப்பு ரோஜாக்கள்’, ‘மூன்றாம் பிறை’, ‘சலங்கை ஒலி’, என்று ஒரு 20 படங்களை வரிசைப்படுத்தினால், அவை கமலுக்காகவே எழுதப்பட்ட கதைகள் போலத் தோன்றும். அந்த வரிசையில் ‘மரோ சரித்ரா’ (ஏக் தூஜே கே லியே) அவசியம் இடம்பிடிக்கும். தெலுங்கிலும், ஹிந்தியிலும் கமலை அறிமுகப்படுத்த கே.பி. உருவாக்கிய லாஞ்ச்-பேடுகளாகவே அந்தப் படங்கள் கருதப்படுகின்றன.

      மரோ சரித்ராஎன்ற தெலுங்குக் கறுப்பு-வெள்ளைப் படம் ஏற்படுத்திய தாக்கத்தை, அது ‘ஏக் தூஜே கே லியேவாக இந்தியில் ஏற்படுத்தவில்லை என்பது சத்தியம். தெலுங்கில் கமலுக்கு அப்பாவாக வந்த ரமணாவுக்குப் பதிலாக இந்தியில் பூர்ணம் விஸ்வநாதன் கொஞ்சம் பெட்டராகத் தோன்றினார் என்றாலும், சரிதா நடித்த பாத்திரத்தில் தத்தி அக்னிஹோத்ரி, மன்னிக்கவும், ரத்தி அக்னிஹோத்ரியை கதாநாயகியாக்கியது கொஞ்சம் அன்சஹிக்கபிளாகவே இருந்தது. இருந்தாலும், விசாகப்பட்டணத்தின் கடற்கரையழகை வண்ணத்தில் பார்த்து லயித்ததில், ஏக் தூஜே கே லியே-வும் பெருமளவு ரசிக்கத்தக்கதாகவே அமைந்திருந்தது.

      மூன்று முடிச்சுபடத்தில் வந்த பி.ஆர்.அண்ட் சன்ஸ் காட்சி, நாயகனும் நாயகியும் அவரவர் வீட்டில் துணிதுவைப்பது போன்ற ரிப்பிட்டீஷன் இருந்தபோதிலும், கே.பாலசந்தரால்கூட வேண்டுமென்றே குழப்பாமல், நேர்கோட்டில் கதைசொல்ல முடியும் என்பதற்கு ‘மரோ சரித்ராஒரு அற்புதமான சான்று. ஒரு நிமிடம் கூட தொய்வின்றி, ஆஸ்தான ஒளிப்பதிவாளர் பி.எஸ்.லோக்நாத் மற்றும் மெல்லிசை மன்னரின் துணையுடன் கதையை அற்புதமாக நகர்த்திக் கொண்டு போயிருப்பார். கதாநாயகனின் போட்டோவை கதாநாயகியின் அம்மா எரித்துச் சாம்பலாக்க, அந்தச் சாம்பலை காப்பியில் கரைத்துக் குடித்து விட்டு சரிதா நகர்கிற காட்சியில், கமல் ருத்ர தாண்டவம் ஆடுகிற காட்சிக்கு நிகராக கைதட்டல் அரங்கத்தை அதிரவைத்ததைக் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். தெலுங்கு தெரியாத காரணத்தினால், பல வசனங்கள் புரியாமல்போன குறையை ‘ஏக் தூஜே கே லியேபார்த்தபோது தீர்த்துக் கொண்டேன்.

      கே.பாலசந்தரின் படங்களில் சில சின்னச் சின்னப் பாத்திரங்களுக்கு அதிகம் மெனக்கெடுவதை நீங்கள் கவனித்திருக்கலாம். மன்மத லீலைபடத்தில் வருகிற அந்த அக்கவுண்டண்ட், ‘நிழல் நிஜமாகிறதுபடத்தில் வருகிற மன்மதன் நாயுடு (மௌலி), ‘மூன்று முடிச்சுபடத்தின் மேனேஜர் (பைத்தாரா..பைத்தாரா), ‘அவர்கள்படத்தில் வருகிற ரஜினியின் அம்மா என்று பல உதாரணங்களைச் சொல்லலாம். அதே சமயத்தில் ‘நிழல் நிஜமாகிறது படத்தில் வருகிற சுந்தரிபாய், மன்மத லீலையில் ஒய்.ஜி.மகேந்திரன் (அந்த ஆளை எந்தப் படத்தில் பார்த்தாலும் எனக்கு எரிச்சல் வரும் என்பது வேறு விஷயம்) இப்படிச் சில பாத்திரங்களைப் பார்த்தாலே படத்தைப் பாதியிலேயே விட்டுவிட்டு வீட்டுக்குப் போகலாமா என்று ஒரு மூர்க்கத்தனதை ஏற்படுத்துவதிலும் கே.பி.வல்லவர். மரோ சரித்ரா / ஏக் தூஜே கே லியே படத்தில் மதுமாலினி என்று ஒரு நடிகை சதா சிகரெட் புகையை ஊதி எரிச்சலூட்டுவார். அது தவிர, ரஜா முராத், அஸ்ரானி என்று துக்கடாக் கதாபாத்திரங்களுக்கும் பிரபலங்களைப் போட்டு, ஆச்சரியப்பட வைத்திருந்தார்.

            ஏக் தூஜே கே லியே-வை நான் எத்தனை டஜன் முறை பார்த்தேன் என்று கணக்கிடவில்லை. நாகர்கோவில் ராஜேஷ் திரையரங்கில் ‘ஷோலே’-க்கு அடுத்தபடியாக 50 நாட்கள் ஓடிய இந்திப்படம் ‘ஏக் தூஜே கே லியே.’  அனேகமாக ஐம்பது தடவை பார்த்திருப்பேன் என்று தோன்றுகிறது. இது தவிர தில்லியில் பார்த்த கணக்கும், வி.சி.ஆரில் போட்டு தேயத்தேய ஓட்டிய கணக்கும் இதற்குள் அடங்கா!

அலைகள் ஓய்வதில்லை

இந்தப் படத்தின் படப்பிடிப்பு எங்கள் ஊரிலே நடந்தது என்பதால், அது தொடர்பான நிகழ்வுகளைத் தனி இடுகையாகவே எழுதலாம். முட்டம் கடற்கரை, வடீவீஸ்வரம், கீரிப்பாறை, தடிக்காரன்கோணம், தாமரைக்குளம், கடுக்கரை, காட்டுப்புதூர் என்று பாரதிராஜாவின் படக்குழுவைத் துரத்தித் துரத்திப் படப்பிடிப்பு பார்த்தது ஞாபகம் இருக்கிறது. இதே படம் ஹிந்தியில் ‘லவர்ஸ்என்று எடுக்கப்பட்டபோது, இறுதிக்காட்சியில் குமார் கவுரவையும்-பத்மினி கோலாப்பூரியையும் துரத்துகிற ஊர்மக்களில் ஒருவனானக நானும் நடித்திருக்கிறேன். அதையெல்லாம் அப்புறம் எழுதி வதைப்பதாக உத்தேசம்.

      அலைகள் ஓய்வதில்லை இளையராஜாவின் சொந்தப்படம். பாரதிராஜாவின் படமா என்று கேட்டால், ஹிஹிஹி என்று அசட்டுச் சிரிப்புச் சிரித்துவிட்டு நகர்ந்து விட வேண்டியதுதான். காரணம், ‘நிழல்கள்படம் தந்த தோல்வியிலிருந்து எழுவதற்கு, தனக்குப் பிடித்தமான காதல் கதையை பாரதிராஜா தேர்ந்தெடுத்திருந்தாரே தவிர, 16 வயதினிலேபடத்தில் கதாபாத்திரங்களைச் செதுக்குவதில் அவர் காட்டிய சிரத்தையையோ, ‘கிழக்கே போகும் ரயிலில்அவர் காதல் மலர்வதைப் படிப்படியாகக் காட்டிய நேர்த்தியையோ ‘அலைகள் ஓய்வதில்லைபடத்தில் கிஞ்சித்தும் வெளிப்படுத்தவில்லை. ஒரு ஏழைப்பையன் ஒரு பணக்காரப் பெண்ணை, அதுவும் அடங்காப்பிடாரியான பெண்ணை, காதலிக்கிறான் என்பதுதான் ஒன் லைனர். ஆனாலும், திகட்டத் திகட்டத் தித்தித்த ராஜாவின் இசையில், படத்தின் எல்லா ஓட்டைகளும், விசாரணைக்கமிஷன் அறிக்கைகளைப் போல மாயமாய் மறைந்துவிடவே படம் அபார வெற்றியடைந்தது. அதுவும் ஆரம்பக்காட்சிகளில் கார்த்திக்கும் அவரது விடலைச் சினேகிதர்களும் அடிக்கிற லூட்டி விரசத்தின் உச்சம். (இதே கார்த்திக்-ராதாவை ஜோடியாகப் போட்டு ‘வாலிபமே வா வாஎன்று ஒரு படம் எடுத்திருக்கிறார் பா.ராஜா. ஓசியில் சி.டி. கிடைத்தாலும் பார்த்து விடாதீர்கள்; அந்தப் பாவத்துக்கெல்லாம் நான் ஆளாக விரும்பவில்லை.)
      இளையராஜாவின் இசைக்காகவும், மிகவும் அருகாமையிலிருந்து படப்பிடிப்பைப் பார்த்ததானால் ஏற்பட்ட ஈடுபாடு காரணமாகவும், ‘அலைகள் ஓய்வதில்லைபடத்தை குப்பை என்று என்னால் ஓரங்கட்ட முடியவில்லை. ஆனால், ப்ளஸ் டூ படிக்கிறவர்களின் ‘தெய்வீகக்காதலைவரிந்து வரிந்து நியாயப்படுத்திய இந்தப் படம் நிச்சயமாக பாரதிராஜாவின் சிறந்த படங்களின் வரிசையில் இடம்பெறாது என்றுதான் தோன்றுகிறது.

ஆனந்த ராகம்

      அலைகள் ஓய்வதில்லைபடத்துக்குப் பிறகு, அதே கடற்கரையில், அதே ராதாவை கதாநாயகியாக்கி, அதே இளையராஜாவை இசையமைக்க வைத்து, பஞ்சு அருணாச்சலம் தயாரிப்பில் வெளிவந்த இன்னொரு காதல் கதை. கதாநாயகன் சிவகுமார்.

      சிவகுமாரைப் பொறுத்தவரையில் ‘பத்ரகாளி.அக்னி சாட்சி, ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ ‘ உறவாடும் நெஞ்சங்கள்போன்ற படங்களில் வருகிற கதாபாத்திரங்கள் என்றால் வெளுத்துக்கட்டுவார். ஆனால், அவர் ரொமாண்டிக் ஹீரோவாக நடிக்கும்போது, சில கட்டங்களில் அவரது முகபாவத்தைப் பார்த்தால், அவருக்கு வந்திருப்பது காதலா அல்லது காஸ்-ட்ரபிளா என்று எனக்கு சந்தேகம் எழுவதுண்டு.

     ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்குதோ...இளையராஜாவின் மறக்க முடியாத இசைக்கு இந்த ஒரு பாடலே போதும். இருந்தும், சிவகுமார்-ராதா காதல் ஜோடி சேட்டை-கவிதை போல சம்பந்தா சம்பந்தமில்லாமல் தோன்றவே, படம் மனதில் ஒட்டவேயில்லை. அண்மையில் இந்தப் படம் டிவியில் காட்டப்பட்டபோது, சேனலை மாற்றாமல், நான் டிவியையே அணைத்துவிட்டு, தலைதெறிக்க ஓடி விட்டேன்.

ஸாகர் (ஹிந்தி)

      ஏக் தூஜே கே லியேபடத்துக்குப் பிறகு, கமல் நடித்த சில ஹிந்திப் படங்களை அனேகமாக அவரே மறந்திருப்பார். சனம் தேரி கசம், ‘ராஜ் திலக்போன்ற டப்பாப் படங்களில் அவர் தனக்குக் கிடைத்திருந்த பிரபலத்தை ஏறத்தாழத் தொலைத்திருக்க, அவரைக் கைதூக்கி விட்டது ‘ஷோலேபுகழ் ரமேஷ் சிப்பி இயக்கிய ‘ஸாகர்.

     இந்தப் படத்தை நான் பார்த்ததே ஒரு விபத்து மாதிரி. தில்லியிலிருந்து சென்னைக்குத் திரும்ப, ஜி.டி.எக்ஸ்பிரஸுக்காகக் காத்திருந்தபோது, ரயில் 4 மணி நேரம் தாமதமாகக் கிளம்பும் என்று அறிந்ததும், அப்படியே வெளியேறி பகாட்கஞ்ச் ஷீலாவில் டிக்கெட் வாங்கிப் பார்த்த படம் ‘ஸாகர்’. இந்தப் பட்டிக்காட்டான் 70 எம்.எம்.ஸ்டீரியோஃபோனிக் ஸ்வுண்ட் எஃபெக்டில் பார்த்த முதல் படம் ‘ஸாகர்தான். அதனாலோ என்னவோ படம் ஆரம்பித்தபோது திறந்த வாய், சென்னை வந்து சேரும் வரைக்கும் திறந்தபடியே இருந்தது. அதற்குக் காரணம், படத்தின் பிரம்மாண்டமும், கமலின் நடிப்பும் மட்டுமல்ல. ‘பாபிபடத்துக்குப் பிறகு, பல்லாண்டுகள் கழித்து மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்திருந்த டிம்பிள் கபாடியாவின் பிரவேசமும்தான்.

      டிம்பிளைப் பற்றிச் சுருக்கமாக எழுதுவது பசித்தவன் வாயில் பாலிடால் ஊற்றுவதற்கு ஒப்பாகும் என்பதால், இதை இத்தோடு நிறுத்தி அடுத்த இடுகையில் தொடர்கிறேன். யாரையும் விடுவதாக இல்லை; அடுத்த பகுதியும் வந்தே தீரும். படித்தாலும் சரி, படிக்காவிட்டாலும் சரி!

(அடுத்த பகுதியில் நிறைவுபெறும்...hopefully)

23 comments:

கும்மாச்சி said...

காத்திருக்கிறோம், தொடருங்கள்.

கார்த்திக் சரவணன் said...

அருமை....

நண்பா said...

கலக்கல் சித்தப்பு...

திண்டுக்கல் தனபாலன் said...

எப்படிங்க இப்படி...? பல தகவல்களுக்கு ஒரு பெரிய சல்யூட்...

waiting...

letty said...

i am waiting ... ( for part 3)

bandhu said...

//ஒய்.ஜி.மகேந்திரன் (அந்த ஆளை எந்தப் படத்தில் பார்த்தாலும் எனக்கு எரிச்சல் வரும் என்பது வேறு விஷயம்) //
எனக்கும் தான். அவருக்கு நல்ல நகைச்சுவை சுட்டுப்போட்டாலும் வராது என நம்புகிறேன். ஆனால், சிதம்பர ரகசியம் தொலைக்காட்சி தொடரில் அவரின் நடிப்பை பார்த்து அசந்துவிட்டேன். யுத்தம் செய்யிலும் நன்றாக நடித்திருந்தார். Films have not used him where his strength lies!

Unknown said...

தொடர்கிறேன்...

கரந்தை ஜெயக்குமார் said...

தொடர்கிறேன்

ஸ்ரீராம். said...

- பாலச்சந்தர் பற்றி நீங்கள் சொல்வது அத்தனையும் ஒப்புக்கொள்ள வேண்டியது. அவர் படத்தின் கதாநாயகிகள் கடைசி வரை சந்தோஷமாக இருந்ததே இல்லை!

- அலைகள் ஓய்வதில்லையின் சம காலத்தில் வந்த, இதே கதையம்சம் கொண்ட பன்னீர்ப் புஷ்பங்கள் நல்ல படம்-அ. ஓ வை விட! [ஆனால் உங்கள் தலைப்பான கடற்கரையோரக் காதல் கீழ் இது வராது]

- இது போன்ற பல படங்களுக்கு இளையராஜா இசைதான் பலம். இன்னொரு மட்டமான படம் நல்ல இசைக்கு உதாரண இன்னொரு பாரதிராஜா படம் காதல் ஓவியம்!

- சனம் தேரி கசம் படம் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்தது. ப்ளஸ் ஆர் டி பர்மனின் மயக்கிசை. ராஜ் திலக் பார்க்கவே தோன்றவில்லை!

- முதல் பகுதி என்று நீங்கள் கொடுத்திருக்கும் சுட்டி திறக்கவில்லை.

- பழைய விஸ்வரூபப் பதிவில் நான் கேட்ட கேள்விக்கு நீங்கள் இன்னும் பதில் சொல்லவில்லை!!!!!

வெங்கட் நாகராஜ் said...

நல்ல அலசல்......

ஷீலா - இப்போதெல்லாம் இந்த திரையரங்கம் அவ்வளவு நன்றாக இல்லை! நான் இங்கே தான் ஜுராசிக் பார்க் பார்த்தேன் :)

அடுத்த பகுதிக்கான காத்திருப்புடன்.....

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

உங்கள் பாணியில் சுவையான அலசல்

இராஜராஜேஸ்வரி said...

பசித்தவன் வாயில் பாலிடால் ஊற்றுவதற்கு ஒப்பாகும்..//

கடல் தண்ணீர் ஊற்றுவதும் அப்படித்தான் ...

சமீரா said...

// அவர் ரொமாண்டிக் ஹீரோவாக நடிக்கும்போது, சில கட்டங்களில் அவரது முகபாவத்தைப் பார்த்தால், அவருக்கு வந்திருப்பது காதலா அல்லது காஸ்-ட்ரபிளா என்று எனக்கு சந்தேகம் எழுவதுண்டு// - சிவகுமார் ரொமாண்டிக் சீன் எதுமே எனக்கு எப்போதுமே பிடிப்பதில்லை!!

எதையும் படிக்காம விடறதில்லைங்க சார்......வைட்டிங் அடுத்த பதிவுக்கு!!

வை.கோபாலகிருஷ்ணன் said...

கடலோரக் [கப்சாக்கள்] கலக்கல்கள் அருமை. பாராட்டுக்கள். தொடருங்கள்.

Unknown said...

MMMMMMM. Interesting facts. Good flow with humorous comments.

Waiting for the next episode.....

”தளிர் சுரேஷ்” said...

நான் பார்க்காத பல படங்கள் பற்றிய தகவல்களை சிற(ரி)ப்பாக பகிர்ந்தமைக்கு நன்றி!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Interesting review...pudhu pada reviews padichu bore adichuduchu. Idhu nalla irukkunga. Post part 3 soon

தி.தமிழ் இளங்கோ said...


அன்புடையீர் வணக்கம்! இந்த வாரம் “ வலைச்சரம் ” http://blogintamil.blogspot.in எனது ஆசிரியர் பணியில், நாளைய பதிவில் (21.02.2013) உங்கள் வலைப்பதிவினைப் பற்றி எழுதுகிறேன். நாளைய 21.02.2013 வலைச்சரம் கண்டு தங்கள் கருத்தினைச் சொல்லவும். நன்றி!

Thamizh_Thendral said...

அய்யா சேட்டைக்காரரே,

ஹுஹும் முடியலை. எத்தனை நாளைக்குதான் சிரிப்பு வராத மாதிரியே நடிக்கரது. எப்புடிய்யா இப்படி எழுதரீங்க. மொதல்ல க்ரேஸி மோகன் தான் இப்படி அசத்தலா எழுதுவாருன்னு நெனைச்சுண்டிருந்தேன், அப்புறம் டுபுக்குன்னு (http://dubukku.blogspot.com) ஒருத்தர் எழுதரத பாத்து அலறி அடிச்சு சிரிச்சேன். அதே சமயம் வெட்டிப்பயல்னு (http://vettipaiyal.blogspot.com) ஒருத்தர் எழுதரத பாத்துட்டு இனிமே இவங்களை மாதிரி நான் காமெடி எழுத முடியாதுன்னு ஒரு முடிவுக்கு வந்து, காமெடியே எழுதக்கூடாதுன்னு முடிவு பண்ணினேன். இவங்களைத் தாண்டி ஒருத்தர் காமெடி எழுத முடியாதுன்னும் தீவிரமா நினைச்சுண்டிருந்தேன். சமீபத்துல என் ஃப்ரெண்ட் உங்க விஸ்வரூபம் விமர்சனம் பத்தி சொன்னதும் படிச்சுட்டு ஒரு 20-30 பேருக்கு உங்க ப்ளாக் அட்ரஸ் அனுப்பிட்டு அவங்க ஆபீஸ்ல சிரிச்சு திட்டு வாங்கி அதுக்கு என்னை திட்டினது எல்லாம் தனிக் கதை. இவ்வளவு நல்லா எழுதர உங்களுக்கு ஒரு பின்னூட்டம் போடக்கூடாதுன்னும் நினைச்சுண்டிருந்தேன். உஸ் அப்பா! இருந்தாலும் இப்படி எழுதப் படாது. சூப்பர் சார் உங்க எழுத்து, சடையரிக் ஸ்டைல், நடை, உடை, பாவனைனு சொல்லிட்டே போகலாம். கலக்குங்க.

முரளி இராமச்சந்திரன்.

sethu said...

asusual kalakkal

Unknown said...பாலச்சந்தர் பற்றிய தங்கள் குறிப்பு மிகவும் சரியானதே!

கவியாழி said...

கண்டிப்பாகக் காதல் வேண்டும்.கலக்குங்க.

sury siva said...

// படம் ஆரம்பித்தபோது திறந்த வாய், சென்னை வந்து சேரும் வரைக்கும் திறந்தபடியே இருந்தது//

இது வரைக்குமா !!

எதுக்கும் மூடிக்குங்க சீக்கிரமா... ஏன் என்னா

// டிம்பிளைப் பற்றிச் சுருக்கமாக எழுதுவது பசித்தவன் வாயில் பாலிடால் ஊற்றுவதற்கு ஒப்பாகும்//

ஊத்திக்கினு பாத்தீகளா என்ன ?

பயமா கீதே !
கொஞ்சம் பொறு தம்பி... நான் ஓடிப்போயிடறேன்.

அது சரி....
அது என்ன.
மரோ சரித்ரா, சாகர், ஆனந்த ராகம், ஒரு தலை ராகம் ....

என்னங்க... சங்க காலத்தைப் பத்தி எழுதிட்டு இருக்கீக...
நிகழ்காலத்துக்கு வாங்க... இப்ப என்ன செய்தி....?

தொடருங்க....

சுப்பு தாத்தா.