Tuesday, November 6, 2012

#ட்வீட்டுக்கு #ட்வீட்டு வாசப்படி!
பொதுவாகவே கல்லூரியிலிருந்து சோர்ந்துபோய் வீடுதிரும்புகிறபோது திருப்பதியின் முகம் பஞ்சரான பால்பாக்கெட் போலிருக்கும். அன்று வழியில் பெட்டிக்கடை சண்முகம் அழைத்து, ‘வாத்தியாரய்யா, உங்க வீட்டு விலாசத்தைப் போலீஸ்காரர் விசாரிச்சிட்டுப்போனாருய்யா! கொஞ்சம் உஷாரா இருங்க,என்று சொன்னதும், அடிவயிற்றில் ஒரு பால்குக்கரே  விசிலடிப்பது போலிருந்தது. ‘போலீஸா? என்னையா? எதற்கு?

      வீட்டை அடைந்து, அழைப்புமணியை அழுத்திவிட்டு, மனைவி கதவைத் திறப்பதற்காகக் காத்திருந்தபோது வயிற்றுக்குள் வலையப்பட்டி தவிலின் தனி ஆவர்த்தனம் ஆரம்பித்தது. போதாக்குறைக்கு, கதவைத் திறந்த மனைவி மங்காவின் முகம்,  நாலாக மடித்த நமுத்துப்போன அப்பளத்தைப் போலிருக்கவே, திருப்பதியின் மனதுக்குள் கிலி பரவியது. வீட்டுக்குள் நுழைந்தவாறே, சட்டையைக் கழற்றினான்.

      இது உங்களுக்கே நல்லாயிருக்கா? எடுத்த எடுப்பிலேயே, சின்னத்திரையிலிருந்து வீட்டுக்குள் குதித்துவந்த சீரியல் நாயகிபோல மங்கா மூக்கைச் சிந்தினாள்.

      நல்லாயில்லைதான். ஆனா, வேறே  நல்ல சட்டையில்லையே!

      அதில்லீங்க! நான் ரேஷன் கடைக்குப் போயிருந்தபோது நம்ம வீட்டுக்குப் போலீஸு வந்திட்டுப் போயிருக்காங்களாம். இது உங்களுக்கே நல்லாயிருக்கா?

      ஏற்கனவே என் குடலுக்குள்ளே யாரோ தேங்காய் துருவுற மாதிரியிருக்கு. நீ வேறே அதுலே பச்சைமிளகாய், கருவேப்பிலை சேர்த்து சட்னியரைச்சிடுவே போலிருக்குதே!

      நீங்க என்னவோ தப்புப் பண்ணியிருக்கீங்க,விசும்பினாள் மங்கா. “என் தலையிலே அடிச்சுச் சத்தியம் பண்ணுங்க!

      தலையிலே அடிக்கிறதா? வேணாம்! நீ வேறே பார்லருக்குப் போயி மருதாணியைத் தடவிக்கிட்டு வந்து நிக்குறே! கையெல்லாம் அசிங்கமாயிடும். என்று சொல்லியவாறு, உள்ளே சென்று கைகால் கழுவிவிட்டு திருப்பதி ஹாலுக்குத் திரும்பியபோது, மங்கா கையில் சர்க்கரை இல்லாமல் காப்பியுடனும், கண்ணில் கிளிசரின் இல்லாமல் கண்ணீருடனும் நின்றிருந்தாள்.

      இப்போ எதுக்கு சரண்யா மாதிரி சம்பந்தா சம்பந்தமில்லாம அழறே? போலீஸ் எதுக்கு வந்தாங்களோ யாருக்குத் தெரியும்? காப்பியைக் கொடுத்திட்டு டிவியைப் போடு! வரவர நீ ஆதித்யா டிவி பார்த்தாலும் அழ ஆரம்பிச்சிட்டே!

      டிவியைப் பார்த்தவாறே, காப்பியைப் பருகிய கணவன் திருப்பதியிடம் ரகசியமாகக் கேட்டாள் மங்கா.

      ஏங்க, காலேஜ்லே ஸ்டூடண்ட்ஸ் யாரையாவது அடிச்சிட்டீங்களா?

      அவங்ககிட்டே நான் அடிவாங்காம வந்தாப் பத்தாதா?என்று எரிந்து விழுந்தான் திருப்பதி. “உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? இன்னிக்கு எனக்கு அஞ்சு பீரியட் இருந்திச்சு. ஒவ்வொரு பீரியட்லேயும் நாப்பது நிமிஷம் தொண்டைத்தண்ணி வத்துற அளவுக்குக் கத்திப் பாடம் எடுத்திருக்கேன் தெரியுமா?

      இது எல்லா வாத்தியாரும் பண்றதுதானே?

      முழுசாக் கேளு! அஞ்சு பீரியட்லே ஒண்ணுலேகூட ஒரு ஸ்டுடண்ட் கூட வகுப்புலே கிடையாது. கண்டக்டர் செல்லாத நோட்டைக் கொடுத்திட்டாருன்னு ஸ்ட்ரைக் பண்ணப்போயிட்டாங்க. ஆனாலும் நான் கடமைதவறாம பாடம் நடத்தினேன். காலியாயிருந்த கிளாசுலே கூட போர்டை அஞ்சு பீரியட்லேயும் அம்பதுவாட்டி துடைச்சிருப்பேன் தெரியுமா?

      அப்புறம் எதுக்கு போலீஸ் வருது?

      நீ தீபாவளிக்கு ஸ்வீட்ஸ் பண்ணுற நியூஸ் லீக் ஆயிருக்கும் போலிருக்குது. ஏதாச்சும் சட்ட ஒழுங்குப் பிரச்சினை வந்திருமோன்னு முன்னெச்செரிக்கை நடவடிக்கையா இருக்கலாம். இப்போ என்னை நியூஸ் பார்க்க விடு!

      என்னங்க, ஒண்ணு கேட்டாக் கோவிச்சுக்க மாட்டீங்களே?என்று தயக்கமாகக் கேட்டாள் மங்கா. “நம்ம வீட்டுலேருந்து புழலுக்கு எந்த பஸ்சிலே வரணும்? தெரிஞ்சுக்கிட்டா உங்களைப் பார்க்க ஜெயிலுக்கு வர்றதுக்கு வசதியாயிருக்குமேன்னு....

      முடிவே பண்ணிட்டியா?அலறினார் திருப்பதி. “உனக்குப் புழலுக்கு வர அவ்வளவு ஆசைன்னா, அடுத்தவாட்டி வேப்பம்பூ ரசம் வைக்கும்போது கொஞ்சம் விஷத்தைக் கலந்திரு!

      சும்மாயிருங்க! விஷமெல்லாம் எதுக்கு? வெறும் ரசமே போதும்,என்று அலட்சியமாகச் சொல்லிவிட்டு மங்கா அமைதியாக, திருப்பதி செய்திகளைக் கேட்க ஆரம்பித்தான்.

     அரசியல் பிரமுகரைப் பற்றி அவதூறாக டிவிட்டரில் செய்தி வெளியிட்டவர் கைது!

     ஐயையோ!அலறினான் திருப்பதி. “நான் கூட டிவிட்டர்லே அப்பப்போ எதையாவது எழுதுவேனே? அதுக்காகத்தான் போலீஸ் தேடி வந்துட்டுப்போச்சோ?

      என்னது?மங்கா அதிர்ந்தாள். “நீங்க டிவிட்டர்லே எழுதினீங்களா? என்ன எழுதினீங்க?

      நிறைய எழுதியிருக்கேன்,திருப்பதி தலையைப் பிடித்துக் கொண்டான். “ஆனா, எல்லாருக்கும் பயன்படுற விஷயங்களைத்தானே எழுதியிருக்கேன்.

      குடியைக் கெடுத்தீங்களே!அலறினாள் மங்கா. “யாராவது டிவிட்டர்லே போயி உருப்படியான விஷயங்களை எழுதுவாங்களா? இப்படிப் பத்தாம்பசலியா இருக்கீங்களே?

      மங்கா! நானே கலங்கிப்போயிருக்கேன். நீ வேற பத்தாம்பசலி, பருப்பு உசிலின்னு என் உசிரை வாங்காதே!என்று புலம்பினான் திருப்பதி.

      ஏங்க, உங்க ஃபிரண்டு தளபதிக்குப் போன் பண்ணுங்க!

      ஐயோ, அவன் ஒரு வடிகட்டின முட்டாளாச்சே!

      உங்க ஃபிரண்டு தானே, ஆபத்துக்குப் பாவமில்லை. கூப்பிடுங்க!

      இத்தனை ஆண்டுகளில் முதல்முறையாக மங்கா உருப்படியாக ஒரு யோசனை சொல்லியிருக்கவே, வேறு வழியின்றி நண்பன் தளபதிக்குப் போன் செய்யவும், உடுக்கை இழந்த நண்பனுக்குக் கடுக்காய் கொடுக்காமல், சொடுக்குப் போடுகிற நேரத்தில் மிடுக்காய் வந்து நின்றான் தளபதி.

      டேய் தளபதி, பெரிய சிக்கல்லே மாட்டிக்கிட்டேண்டா! என்னைத் தேடிட்டு போலீஸ் வந்து போயிருக்குது.

      என்னாச்சு? தப்புப் பண்ணுற சாமர்த்தியமெல்லாம் உனக்குக் கிடையாதே, கல்யாணம் பண்ணிக்கிட்டதைத் தவிர!

      டிவிட்டர்லே போயி எதையாவது உளறிட்டேன் போலிருக்குதுடா.

      அது தப்பில்லையே! அதுக்கா போலீஸ் தேடுது? உன்னோட லாப்-டாப்பை எடு. அப்படி என்னதான் எழுதியிருக்கேன்னு பார்க்கலாம்.

      திருப்பதி லாப்-டாப்பை எடுத்து இணையத்தைப் பிடித்து, தனது டிவிட்டர் கணக்குக்குள் நுழைந்து தனது எழுத்துக்களைக் காட்டினான். ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டுவந்த தளபதியின் முகம், திடீரென்று காய்ந்த கல்லில் கவனிக்கப்படாமலே விடப்பட்ட தோசையைப் போலக் கறுத்தது.

      டேய் திருப்பதி! உன்னை போலீஸ் தேடுறதுலே தப்பேயில்லைடா! இது என்னடா எழுதியிருக்கே? எவ்வளவு துணிச்சல் இருந்தா இப்படி எழுதியிருப்பே?

      தளபதியின் கோபத்தைப் பார்த்து திருப்பதியும், மங்காவும் அதிர்ந்தனர்.

      டேய், இது திருக்குறள்டா! இதை எழுதினதுக்கா இவ்வளவு கோபப்படுறே?

      திருப்பதி!தளபதி விரலைச் சொடுக்கினான். “கவர்ன்மெண்ட் பஸ்சுலே எழுதியிருந்தா அது திருக்குறளாயிடுமா? ‘கரம்,சிரம்,புறம் நீட்டாதீர்னு பஸ்சுலே எழுதியிருக்கில்லே, அந்தத் திருக்குறளை டிவிட்டர்லே போட்டியா?
‘சரியான சில்லறை கொடுத்து டிக்கெட் வாங்கவும்னு போட்டிருக்குமே, அந்தத் திருக்குறளை டிவிட்டர்லே போட்டியா? அதையெல்லாம் விட்டுட்டு இதை ஏண்டா எழுதினே?

      டேய், இது ஒரிஜினல் திருக்குறள்! நம்ம ஊருலே மழை பெஞ்சபோது, திருவள்ளுவர் மழையைப் பத்திச் சொன்னது ஞாபகம் வந்தது. அதுனால தான் எழுதினேன்.

      ஓஹோ! எங்க தலைவரைப் பத்தித் தப்பா எழுதிட்டு, பழியைத் தூக்கித் திருவள்ளுவர் மேலே போடறியா? என்ன எழுதியிருக்கே? ‘துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கி துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை ஏண்டா, உனக்கு அவ்வளவு திமிரா? ரிலீஸ் ஆகறதுக்குள்ளேயே துப்பாதவங்களும் துப்புவாங்கன்னா எழுதறே? அதாண்டா எங்காளு யாரோ போலீஸ்லே கம்ப்ளெயிண்ட் கொடுத்திருக்காங்க!

      டேய் நீ சொல்றே துப்பாக்கி வேற; இந்தத் துப்பாக்கி வேறடா!

      அப்படீன்னா இது கள்ளத்துப்பாக்கியா? அது இன்னும் மோசம்!தளபதியின் குரல் தழுதழுத்தது. “உன் பேரு திருப்பதி. உன் சம்சாரம் பேரு மங்காத்தா! அப்படியிருந்தும் இன்னிவரைக்கும் உன்னை நான் விரோதியாப் பார்த்திருக்கேனாடா? நான் இவ்வளவு பெருந்தன்மையா இருக்கும்போது நீ மட்டும் இப்படி எழுதலாமாடா? துரோகி!

      ஐயோ! இதுக்குத்தான் தலை மேலே சத்தியம் பண்ண மாட்டேன்னு சொன்னீங்களா?மங்கா மீண்டும் அழ ஆரம்பித்தாள்.

      என்னது?சீறினான் தளபதி. “இது வேறயா? டேய், இது சைபர் கிரைம் இல்லேடா, ஹண்ட்ரட் கிரைம், தௌசண்ட் கிரைம், டென் தௌசண்ட் கிரைம்!

      மங்கா! அலமாரியிலே திருக்குறள் பரிமேலழகர் உரை இருக்கு. எடுத்திட்டு வந்து இவன்கிட்டே கொடு! என்னைத் திட்டினாக்கூடப் பரவாயில்லை. படுபாவி, திருக்குறளுக்கு புதுசு புதுசா விளக்கம் சொல்றானே? இதுக்கு போலீஸ் பிடிச்சிட்டுப் போனாலே பரவாயில்லை போலிருக்கே?

      டிங் டிங்! அழைப்பு மணி சத்தம் கேட்டு புலம்பலை நிறுத்தினான் திருப்பதி. மங்கா போய் கதவைத் திறக்கவும், முகம் எது, மீசை எது என்று தெரியாத ஒரு போலீஸ்காரர் நின்று கொண்டிருந்தார். அச்சத்தில் திருப்பதியின் உடம்பு அம்பத்தூர் மெயின்ரோட்டில் ஆட்டோவில் போவதுபோலக் குலுங்க ஆரம்பித்தது.

      மிஸ்டர் திருப்பதி வீடு இதுதானே?

      ஆமாம்! மங்காவின் முகத்தில், பதற்றம் ‘ஹவுஸ் ஃபுல்போர்டு போட்டது. “என்னங்க, உங்களைப் பார்க்க போலீஸ் வந்திருக்கு!

      வணக்கம் சார்!திருப்பதியின் பற்கள், விக்கு வினாயகத்தின் கடம் போலச் சத்தம் போட்டன. “என்ன விஷயம்?

      என் பையன் மாமூலன் உங்க கிளாசுலேதான் படிக்கிறான். தெரியுமோ?

      அப்படியா? ஆச்சரியமாயிருக்கே? என் கிளாசுலே ஒருபயலும் படிக்கிறதேயில்லேன்னு நினைச்சிட்டிருக்கேன்.

      ஹிஹி! அதான் சார்,போலீஸ்காரர் தொப்பியைக் கழற்றித் தலையைச் சொரிந்தார். “அந்தக் காலேஜ்லேயே நீங்க ஒருத்தர்தான் பொழைக்கத் தெரியாத, அதாவது புத்திசாலி லெக்சரர்னு சொன்னாங்க. நீங்க என் பையனுக்கு டியூஷன் எடுத்தீங்கன்னா, அவனும் உருப்பட்டிருவான்.கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க சார்!

      இதுக்குத்தான் எங்க வீட்டை விசாரிச்சு வந்தீங்களா?திருப்பதி நிம்மதிப் பெருமூச்சு விட்டார். “நான் என்னவோ ஏதோன்னு பயந்துட்டேன். சரி சார், நீங்க கவலைப்படாதீங்க! உங்க பையனை ஒருவழியாக்கி, அதாவது ஒரு வழிக்குக் கொண்டுவந்திடறேன்.

      தேங்க்ஸ் சார், வர்றேன் சார்!என்று சல்யூட் அடித்துவிட்டுக் கிளம்பினார் போலீஸ்காரர்.

      அப்பாடா தலைக்கு வந்தது..........,என்று எதையோ சொல்ல ஆரம்பித்தவன், தளபதி இருப்பதை அறிந்து பழமொழியைப் பாதியிலேயே நிறுத்தினான்.

      டேய் திருப்பதி!தளபதி எழுந்தான். “உன்னை போலீஸ் விட்டிரலாம். ஆனா நான் விடமாட்டேன்! நீ போட்ட ட்வீட்டுக்கு எனக்குச் சரியான பதில் கொடுத்தே ஆகணும்.

      பதில்தானே? தர்றேன்,என்று ஆசுவாசமாக அமர்ந்தான் திருப்பதி. “மங்கா, தளபதிக்கு பதில் வேணுமாம். அந்த வேப்பம்பூ ரசத்தைக் கொண்டா.

***********************

38 comments:

இராஜராஜேஸ்வரி said...

மங்கா கையில் சர்க்கரை இல்லாமல் காப்பியுடனும்,

கண்ணில் கிளிசரின் இல்லாமல் கண்ணீருடனும் நின்றிருந்தாள். //

திருக்குறள் ட்வீட்டினாலும் தப்பா !

நாய் நக்ஸ் said...

Ultimete
settai......!!!!!!!!!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

தலைப்பே பிரமாதம்.சிரிச்சி மாளல
அபாரமான நகைச்சுவை உணர்வு சார் உங்களுக்கு.

Unknown said...

நாட்டு நடப்பும் நகைச்சுவை தெளிப்பும் அருமை!இருமுறைப் படிப்பத்தேன் மறுமுறையும் படிப்பேன்!

Balaji said...

haa haa haa haa haaa

செம நகைச்சுவை...


‘துப்பார்க்குத் துப்பாய ”துப்பாக்கி” துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை’ ஏண்டா, உனக்கு அவ்வளவு திமிரா? ரிலீஸ் ஆகறதுக்குள்ளேயே துப்பாதவங்களும் துப்புவாங்கன்னா எழுதறே? அதாண்டா எங்காளு யாரோ போலீஸ்லே கம்ப்ளெயிண்ட் கொடுத்திருக்காங்க!”

”டேய் நீ சொல்றே துப்பாக்கி வேற; இந்தத் துப்பாக்கி வேறடா!”

”அப்படீன்னா இது ’கள்ளத்துப்பாக்கி’யா? அது இன்னும் மோசம்!” தளபதியின் குரல் தழுதழுத்தது. “உன் பேரு ”திருப்பதி”. உன் சம்சாரம் பேரு ”மங்காத்தா”! அப்படியிருந்தும் இன்னிவரைக்கும் உன்னை நான் விரோதியாப் பார்த்திருக்கேனாடா? நான் இவ்வளவு பெருந்தன்மையா இருக்கும்போது நீ மட்டும் இப்படி எழுதலாமாடா? துரோகி!”

”ஐயோ! இதுக்குத்தான் ”தலை” மேலே சத்தியம் பண்ண மாட்டேன்னு சொன்னீங்களா?” மங்கா மீண்டும் அழ ஆரம்பித்தாள்.

”என்னது?” சீறினான் தளபதி. “இது வேறயா? டேய், இது சைபர் கிரைம் இல்லேடா, ஹண்ட்ரட் கிரைம், தௌசண்ட் கிரைம், டென் தௌசண்ட் கிரைம்!”

”பதில்தானே? தர்றேன்,” என்று ஆசுவாசமாக அமர்ந்தான் திருப்பதி. “மங்கா, தளபதிக்கு பதில் வேணுமாம். அந்த வேப்பம்பூ ரசத்தைக் கொண்டா.”

சசிகலா said...

“அந்தக் காலேஜ்லேயே நீங்க ஒருத்தர்தான் பொழைக்கத் தெரியாத, அதாவது புத்திசாலி லெக்சரர்னு சொன்னாங்க.

நடைமுறையை சிரித்தபடியே ரசித்தேன் வழக்கம் போல அசத்தல்.

Unknown said...

தங்கவேலு-ஸரோஜா காமெடி பார்த்த உணர்வு..இறுதி வரை புன்சிரியுடனே படித்து முடித்தேன்!

Unknown said...
This comment has been removed by the author.
பால கணேஷ் said...

வேப்பம்பூ வெசம்... ஸாரி. ரசம் அருமை. உங்களின் வார்த்தையாடல்கள் நரசிம்மராவ வம்சத்தைக் கூட சிரிக்க வைத்து விடும்ணா. நான்லாம் எந்த மூலை? குலுங்கிக் குலுங்கிச் சிரித்தேன். சமகால பிரச்னையைத் தொட்டு நகைச்சுவை எழுதியிருக்கும் சமயோஜிதம் இருக்கே... உங்கட்ட இன்னும நிறைய கத்துக்க வேண்டியிருக்கு நான்.

சிகரம் பாரதி said...

Super boss. Arumaiyaana nagaichchuvai. Tamilmanam moolam mudhal varugai. Pls visit my site: http://newsigaram.blogspot.com

kaialavuman said...

படம் ரிலீஸ் ஆகும் முன்பே விமர்சனம் எழுதிவிட்டீர்களே!

இந்த ரசிகர்களும் இனிமேல் உங்களை நன்றாக விளம்பரப் படுத்துவார்கள்!!!

Admin said...

சிரித்தேன்..சிரித்தேன்..சிரித்தேன்..

வெஷம் வேண்டாம் ரசமே போதும்..ஹாஹாஹா..பல இடங்களில் சிரித்தேன்.

Yaathoramani.blogspot.com said...

அசத்தல்
கடைசிவரை சுவாரஸ்யமாகக் கொண்டு சென்ற விதமும்
அழகான டுவிஸ்டுகளும் அருமை
கிரேஸி மோகனுக்கு சரியான போட்டியாளராக
இருப்பீர்கள் போல இருக்கிறதே
தொடர வாழ்த்துக்கள்

சேலம் தேவா said...

சேட்டை எப்போதும் பாறைகள்..!! :) ட்விட்டரிலும் இருக்கீங்களா சார்..?!

மாதேவி said...

சேட்டை ஜாஸ்தி ஆகிவிட்டது. :))) சிரிப்பு கலக்கல்.

"காலியாயிருந்த கிளாசுலே கூட போர்டை அஞ்சு பீரியட்லேயும் அம்பதுவாட்டி துடைச்சிருப்பேன்" ஹா...ஹா.

இந்திரன் said...

செம செம,..... சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாயிடும் போல...... சூப்பர் சூப்பர் மங்கா அந்த வேப்பம்பூ ராசாத்த கொண்டா ஹஹஹா

மலரின் நினைவுகள் said...

சரவெடி

வெங்கட் நாகராஜ் said...

பல இடங்களில் நகைச்சுவை தெரிக்கிறது..... சுவையான இடுகை.

ஸ்ரீராம். said...

உவமைகள் எல்லாமே உளுந்து உளுந்து அதுதான் விழுந்து விழுந்து சிரிக்க வைத்தன! போலீஸ்காரர் பையன் பெயர் மாமூலன்.... சரிதான்...!

சுபத்ரா said...

செம :) செம :)

குறை ஒன்றும் இல்லை !!! said...

கலக்கலா எழுதி இருக்கீங்க நண்பரே !

முரளிகண்ணன் said...

செம கலக்கல் சேட்டைக்காரரே. சரவெடி

Unknown said...

தளபதிக்குப் போன் செய்யவும், உடுக்கை இழந்த நண்பனுக்குக் கடுக்காய் கொடுக்காமல், சொடுக்குப் போடுகிற நேரத்தில் மிடுக்காய் வந்து நின்றான் தளபத

Super example about friendship.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

super

Ponchandar said...

பையன் பெயர் “மாமூலன்” கற்பனை அட்டகாசம் சேட்டை.

வி..வி..சி....

Sathya said...

Such a nice comedy.....

Wonderful Sir....

Sathya

Easy (EZ) Editorial Calendar said...

நல்ல நகைசுவை.....உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி......

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

G.M Balasubramaniam said...


தனியாக எடுத்துப் பாராட்ட முடியவில்லை. அத்தனையும் சிரிப்புக் கொத்து. ரசித்தேன் சேட்டை.

தக்குடு said...

இந்த ரணகளத்துக்கு நடுலையும் நம்ப சேட்டைக்கு கிளுகிளுப்பா எழுத வருது பாருய்யா!! டைமிங் காமெடி! :))

semmalai akash said...

ஹா ஹா ஹா !

ஒரே சிரிப்பு மழை! மழையில் நன்றாகவே நினைந்தேன்.

Ranjani Narayanan said...

'சைபர் க்ரைம் இல்லடா, ஹன்டரட் க்ரைம். தௌசன் க்ரைம்...'

சிரித்து சிரித்து....கலைத்து விட்டேன்!

அமர்க்களம்!
பேனாவை வைத்து நகைச்சுவை, துப்பாக்கியை வைத்து நகைச்சுவை...

கலக்கிடீங்க!

திண்டுக்கல் தனபாலன் said...

பதிவு முடியும் வரை நகைச்சுவை தான்...

நன்றி...
tm15

செழியன் said...


”சும்மாயிருங்க! விஷமெல்லாம் எதுக்கு? வெறும் ரசமே போதும், chance illai sir

Anonymous said...

Settai Rocks!

பொன் மாலை பொழுது said...

// நம்ம வீட்டுலேருந்து புழலுக்கு எந்த பஸ்சிலே வரணும்? ///
தாங்கல சாமீ.
எல்லா வீட்டிலும் அம்மணிகள் இப்படிதான் இருப்பார்களா??

saidaiazeez.blogspot.in said...

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்!
அசத்தல் சேட்டை சார்.
நான் ஸ்டாப் காமெடி என்பது இதுதான்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

நல்லதொரு நகைச்சுவை விருந்து. சிரித்து மகிழ்ந்தேன்.

//டேய், இது சைபர் கிரைம் இல்லேடா, ஹண்ட்ரட் கிரைம், தௌசண்ட் கிரைம், டென் தௌசண்ட் கிரைம்!”//

;)))))

பாராட்டுக்கள. வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

அருணா செல்வம் said...

சேட்டை ஐயா... சிரிச்சி சிரிச்சி எனக்கு வயிறு புண்ணாயிடுச்சி... ரசித்துப் படித்துச் சிரித்தேன்.

”மங்கா! அலமாரியிலே திருக்குறள் பரிமேலழகர் உரை இருக்கு. எடுத்திட்டு வந்து இவன்கிட்டே கொடு! என்னைத் திட்டினாக்கூடப் பரவாயில்லை. படுபாவி, திருக்குறளுக்கு புதுசு புதுசா விளக்கம் சொல்றானே? இதுக்கு போலீஸ் பிடிச்சிட்டுப் போனாலே பரவாயில்லை போலிருக்கே?”

சிரிப்பினுடே தமிழுக்கு நீங்கள் கொடுத்த மதிப்பு என்னை நெகிழ வைக்கிறது.
வாழ்த்தி வணங்குகிறேன்.