Tuesday, October 16, 2012

கன்னமிட்ட கை

ருளடைஞ்சான்பேட்டை காவல் நிலைய வாசலில், மனைவியிடம் குட்டு வாங்கிய கணவனின் மண்டை போல ஒரு திடீர் கூடாரம் முளைத்திருந்தது. தமிழக முற்போக்குத் திருடர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பிச்சுவா பக்கிரி, கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸில் கச்சேரி நடத்தவந்த வித்வானைப் போலக் கம்பீரமாக அமர்ந்திருக்க, பக்கவாத்தியங்களைப் போல அவனைச் சுற்றி, பொருளாளர் அரைபிளேடு அண்ணாவி, செயலாளர் குத்தூசி குப்புசாமி மற்றும் மகளிரணித் தலைவி கொண்டையூசி கோதண்டம் ஆகியோர் அமர்ந்திருந்தனர். பின்னாலிருந்த சுவற்றில் ‘மின்வெட்டைக் கண்டித்து த.மு.தி.ச-வின் சார்பில் காலவரையற்ற உண்ணாவிரதம்என்று எழுதப்பட்டிருந்த பேனர் மாட்டப்பட்டிருந்தது. பந்தலிலிருந்த ஓட்டை வழியாக விழுந்த சூரிய ஒளி, பக்கிரியின் பளிங்கு மண்டையில் பட்டதால், அது ஏ.வி.எம்.ஸ்டூடியோவின் ஃபோகஸ்-லைட் போலாக, பேனர் குளோசப்பில் காட்டிய  ஹன்சிகா மோட்வானியின் முகம்போலப் பளபளப்பாய்த் தெரிந்தது.

      வாபஸ் வாங்கு! வாபஸ் வாங்கு! மின்வெட்டை வாபஸ் வாங்கு!

      வழங்கு! வழங்கு! மின்சாரத்தை வழங்கு!

                ஸ்டேஷன் வாசலில் காவலுக்கு நின்றிருந்த ஏட்டு திருப்பதிசாமி, திருதிருசாமியாகி, ஓரிரு கணங்கள் பார்த்துவிட்டு, இன்ஸ்பெக்டருக்குத் தகவல் தெரிவிக்க உள்ளே ஓடினார்.

      ஐயா! இந்த அதிசயத்தைப் பார்த்தீங்களா?

      ஆமாய்யா!அலுத்துக் கொண்டார் இன்ஸ்பெக்டர். “நேத்து ராத்திரி நம்ம ஏரியாவுலே ஒரு திருட்டுக்கூட நடக்கலை. அதுக்கென்ன இப்போ?

      எப்படிய்யா நடக்கும்? எல்லாத் திருட்டுப்பயலுவளும் ஸ்டேஷன் வாசல்லே இருக்காங்கய்யா!

      ஐயையோ, திருந்திட்டாங்களாமா? என்னையா அக்கிரமம்? இவங்களை நம்பி தீபாவளிக்கு நான் நிறைய பட்ஜெட் போட்டிருந்தேனேய்யா!

      இன்ஸ்பெக்டரும் ஏட்டும் பேசிக்கொண்டிருக்கும்போதே, குத்தூசி குப்புசாமி கையது கொண்டு மெய்யது பொத்தியபடியே ஸ்டேஷனுக்குள் நுழைந்தான்.

      வணக்கம் ஐயாமாருங்களே! நம்ம தலைவரு மின்வெட்டைக் கண்டிச்சு உண்ணாவிரதம் இருக்காருங்க! பெரியமனசு பண்ணி நீங்க ஒரு தபா பந்தலுக்கு வந்து எங்களையெல்லாம் அரெஸ்ட் பண்ணி விழாவைச் சிறப்பிக்கணும்.

      யோவ் குப்புசாமி!இன்ஸ்பெக்டர் சீறினார். “என்னய்யா இது, என்னமோ சடங்குக்கு வந்து மொய் எழுதிட்டுப் போங்கன்னுறா மாதிரி கூப்புடுறே? மரியாதையாக் கலைஞ்சு போறீங்களா இல்லையா?

      ஐயா! நாங்க ஜனநாயகவழியிலே அறப்போராட்டம் நடத்திட்டிருக்கோம். எங்களைக் கலைஞ்சுபோகச் சொன்னா, அது மனித உரிமை மீறலாயிடும்! என்று எச்சரித்துவிட்டு குத்தூசி குப்புசாமி வெளியேறவும், இன்ஸ்பெக்டரும் ஏட்டும் மல்டிப்ளெக்ஸில் தியேட்டர்மாறிப்போய் மாற்றான் படம் பார்த்தது போல மலங்க மலங்க விழித்தார்கள்.

      என்ன கொடுமை சார்?ஏட்டையா குமுறினார். “இந்தப் பயலுகளைப் பிடிச்சு உள்ளே போடுங்க சார்.

      நாட்டு நடப்புத் தெரியாமப் பேசாதேய்யா! சும்மா உண்ணாவிரதம் மட்டுமிருந்தா அவனுக காமெடியனுங்க! அரெஸ்ட் பண்ணி உள்ளே போட்டா ஹீரோவாயிடுவானுங்க! என்னதான் பண்ணுறாங்கன்னு பார்க்கலாம்!

      என்னமோ திட்டம் போட்டிருக்கானுங்க! மஃப்டியிலே யாரையாவது அனுப்பி இவங்க பிளான் என்னான்னு கண்டுபிடிப்போமா சார்?

      யோவ், இவனுங்கல்லாம் ப்ரொஃபஷனல் திருடனுங்க! போலீஸ் காட்டான்குளத்தூருல இருந்தா, கத்திப்பாரா ஜங்க்‌ஷனுலேயே மோப்பம் பிடிச்சிருவானுங்க!

      அப்போ ஒண்ணு பண்ணலாம் சார், எனக்குத் தெரிஞ்சு சேட்டைக்காரன்னு ஒரு ஆளு இருக்காரு! எப்பப் பார்த்தாலும் உடுப்பி ஹோட்டல்லே காப்பி டம்ளர் திருட வந்தவரு மாதிரியே முழிப்பாரு! அவரை அனுப்பி இவனுங்க திட்டமென்னான்னு தெரிஞ்சுக்கலாமா?

      உடனே பண்ணு!

      அடுத்த சில நிமிடங்களில், பிச்சுவாப் பக்கிரியின் அருகில் சேட்டைக்காரன் அமர்ந்துகொண்டு பேச்சுக் கொடுக்க...

      மிஸ்டர் பிச்சுவாப் பக்கிரி! கேட்கறேன்னு கோவிச்சுக்கக் கூடாது! உங்களுக்கும் மின்சாரத்துக்கும் என்ன சம்பந்தம்?

      என்ன அப்படிக் கேட்டுட்டீங்க?எரிந்து விழுந்தான் பக்கிரி. “உங்க வீட்டுக்குக் கம்பி வழியாத்தானே மின்சாரம் வருது? அதே மாதிரி நாங்களும் கம்பி வழியாவோ, பைப் வழியாவோ தான் உள்ளே புகுந்து வர்றோம். இந்த ஒரு சம்பந்தம் போதாதாய்யா?

      இருந்தாலும், திருடறதைத் தொழிலா வச்சுக்கிட்டு, இப்படி சமூக அக்கறை இருக்கிறா மாதிரி பீலா வுட்றது கொஞ்சம் ஓவரா இல்லையா?

      யோவ் சேட்டை! உங்க வீட்டுலே எத்தனை ஜன்னல் இருக்கு? யோசிக்காம சொல்லு பார்க்கலாம்.

      ஜன்னலா...அது வந்து..ஒண்ணு, ரெண்டு...

      என்னய்யா எண்ணிக்கிட்டு? நான் சொல்லட்டுமா? மொத்தம் உங்க வீட்டுலே நாலு ஜன்னல், ஒரு கதவு, ஒரு வெண்டிலேட்டர் இருக்கு.

      எப்படி இவ்வளவு கரெக்டா சொல்றீங்க பக்கிரி?

      யோவ், திருட்டுன்னா சும்மாவா? அதுக்கு எம்புட்டு ஜெனரல் நாலெட்ஜ் வேணும் தெரியுமா? யார் யார் வீட்டுலே எத்தனை ஜன்னல், கதவு இருக்கு? யார் வீட்டுலே கடிக்கிற நாயிருக்கு? யார் வீட்டுலே குரைக்கிற நாய் மட்டுமிருக்கு? எந்த வீட்டுலே புருஷன் குறட்டை வுடுவாரு, எந்த வூட்டுலே பொஞ்சாதி குறட்டை விடுவாங்க? யார் யார் எத்தனை மணிவரைக்கும் என்னென்ன சீரியல் பார்ப்பாங்க? இந்த மாதிரி எல்லா இன்ஃபர்மேஷனையும் கலெக்ட் பண்ணி, அதை Robbetix-ன்னு ஒரு ஸாஃப்ட்வேருலே ஃபீட் பண்ணி வைக்கணும்.

      திருடறதுக்கு ஸாஃப்ட்வேரா?

      உங்களை மாதிரி நெட்டுலேருந்து டோரண்ட் டவுண்லோட் பண்ணி க்ராக் பண்ணின ஸாஃப்ட்வேரில்லைய்யா! நெத்தி வேர்வை நிலத்துலே சிந்த அடுத்தவன் வூட்டுலே ஆட்டையைப் போட்ட காசுலே வாங்கின ஒரிஜினல் ஸாஃப்ட்வேர்!

      செய்யுறது திருட்டு! அதுக்கு இம்புட்டு பில்ட்-அப்பா?

      யோவ் சேட்டை! பார்த்தா பூட்டைத் தொறக்குற கம்பி மாதிரியிருக்கேன்னு சும்மா விடுறேன்! உனக்கென்னய்யா தெரியும் திருடனுங்களைப் பத்தி? எங்களை அரெஸ்ட் பண்ணினா, ‘இது அரசியல் காழ்ப்புணர்ச்சின்னு எந்தத் தலைவராவது கண்டனம் தெரிவிக்கிறாங்களா? நாங்க திருடிட்டு ஹாங்காக், பேங்காக், துபாய்னு போய் ஜாலியா இருக்க முடியுமா? ஒரு பாஸ்போர்ட் உண்டா? எங்களுக்கெல்லாம் ஸ்விஸ் பேங்குலே கூட அக்கவுண்ட் கிடையாது தெரியுமா? நாங்க இங்கேயே திருடி, திருடின பணத்தை இங்கேயே புழங்க விடறோம். எங்களாலே இந்தியப் பொருளாதாரத்துக்கு ஏதாவது பாதகம் இருக்கா சொல்லு?

      பக்கிரி அண்ணே? இதெல்லாம் டூ மச்!

      என்னய்யா டூ மச்? நாங்க ஒண்ணுமண்ணா, உள்ளூர்க்காரனுங்களோட கூட்டுச் சேர்ந்துதான் திருடறோம். எங்க தொழிலிலே அன்னிய முதலீடு உண்டா? ஃபாரின் கொலாப்ரேஷன் உண்டா? எந்த பேங்குலேயாவது எங்களுக்கு வட்டியில்லாக் கடன் கொடுத்திருக்காங்களா? ஐ.பி.ஓ-வுக்குப் போயி எங்க கம்பெனியோட பங்குகளை ஷேர்மார்க்கெட்டுலே வித்திருக்கோமா? இந்தத் திருட்டுத் தொழிலை நாங்க இவ்வளவு வருஷமா எவ்வளவு நேர்மையா நடத்திட்டிருக்கோம்? எங்களைப் பத்தி ரிசர்வ் பேங்கோ, சி.ஏ.ஜியோ ஏதாவது குத்தம் சொல்லியிருக்காங்களா இதுவரை?

      ஆனாலும் இவ்வளவு பெருமை கூடாதுசார் உங்களுக்கு?

      ஏன் கூடாது? எங்க ஆளுங்க எத்தனையோ பேரு கட்சியெல்லாம் ஆரம்பிச்சு பெரிய ஆளாயிருக்காங்க! சுதந்திர இந்தியாவுலே எங்களாலே எவ்வளவு சமுக அரசியல் மாற்றமெல்லாம் நடந்திருக்கு? இம்புட்டுப் பெரிய நாட்டுலே எங்க ஆளுங்க யாராவது ஒருத்தருக்கு ஒரு சிலையாவது வைச்சிருக்காய்யா இந்த சமூகம்?

      அதெல்லாம் விடுங்க! இப்போ மின்வெட்டைக் கண்டிச்சு எதுக்கு நீங்க உண்ணாவிரதம் இருக்கீங்க?  நியாயமாப் பார்த்தா ஊரு இருட்டா இருந்தா உங்க தொழிலுக்குத்தானே ரொம்ப வசதி?

      சேட்டை! நீரு சென்னையிலே இருக்கீரு! ஜாலியா ஒரு மணி நேரம் மட்டும்தான் கரண்ட் இல்லாம, 23 மணி நேரம் நோகாம நோம்பு கும்புடறீரு! மத்த ஊருலே எப்போ கரண்ட் வரும், எப்போ போகும்னு யாருக்குமே தெரியலய்யா! சில ஊருலே ஒரு மணி நேரம்தான் கரண்டே வருதாம். இதுனாலே எங்க தொழில் எம்புட்டு பாதிச்சிருக்கு தெரியுமா?

      எப்படி?

      எப்படியா? ஆரம்பத்துலே இத்தனை மணியிலேருந்து இத்தனை மணிவரைக்கும்தான் பவர்-கட்டுன்னு அறிவிச்சிருந்தாங்க! அதை அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு ஜனங்க அந்த நேரம் மட்டும் வீட்டைப் பூட்டிக்கிட்டு வெளியே போயிட்டிருந்தாங்க. நாங்களும் டென்சன் இல்லாம அந்தந்த நேரத்துலே திருடிட்டிருந்தோம். இப்போ அப்படியா? போன கரண்ட் இப்ப வரும், அப்ப வரும்னு எல்லாரும் கொட்டக் கொட்ட முழிச்சிட்டு வீட்டுக்குள்ளேயே இருக்காங்க! அப்புறம் நாங்க எப்படி வீடுபுகுந்து திருடறது? எங்க புள்ளைகுட்டியெல்லாம் பட்டினியாக் கிடக்குது தெரியுமா?பிச்சுவா பக்கிரியின் குரல் தழுதழுத்தது.

      ஓஹோ! பவர்கட்டுனாலே யாரும் தூங்காம இருக்கிறது உங்க தொழிலுக்கு இடைஞ்சலாயிருக்குன்னு சொல்லுங்க!

      அது மட்டுமா? நிறைய ஊருலே எல்லாருக்கும் பவர்-கட் பழகிப்போயி, கரண்டு வந்து ஃபேன் சுத்த ஆரம்பிச்சா, ஸ்வெட்டரும் குரங்கு குல்லாவும் போட்டுக்கிட்டு கொடைக்கானல் ஊட்டி மாதிரி வெளியே வாக்கிங் போயிடறாங்க. இவங்க வீட்டுலே ஆளு இருக்காங்களா, இல்லையான்னு எப்படிய்யா கண்டுபிடிக்கிறது?

      அடடா, கேட்கவே ரொம்ப சங்கடமாயிருக்கே!

      இதை விட சங்கடம் இருக்கு கேளுய்யா! இப்பல்லாம் எவனும் வீட்டுலே பணத்தை வைச்சுக்கிறதில்லை.பிச்சைக்காரன் கூட கார்டுதான் வைச்சிருக்கான். எங்களுக்குக் கிடைக்கிறதெல்லாம் மிக்ஸி, கிரைண்டர், வாக்யூம் க்ளீனர், டெலிவிஷன், ஃபிரிட்ஜ் மாதிரி சாமானுங்கதான். கரண்டுதான் வர்றதேயில்லையேன்னு எல்லாரும் வீட்டுலே இருக்கிற எலெக்ட்ரிக் சாமான் எல்லாத்தையும் வித்துப்புட்டு அம்மி, ஆட்டுக்கல், உரலுக்கு மாறிட்டாங்க! அதையெல்லாம் எப்படிய்யா திருடுறது?

      கேட்கவே பரிதாபமாயிருக்கு பக்கிரி அண்ணே!

      சொன்னா நம்ப மாட்டீங்க! வசந்த் & கோவுக்குப் போட்டியா கடைபோடுற அளவுக்கு எங்ககிட்டே ஏகப்பட்ட மிக்ஸி, கிரைண்டர், டிவி எல்லாம் இருக்கு! இந்தக் காலத்துலே போய் இதையெல்லாம் எவன்யா வாங்குவான்?ன்னு எல்லாரும் சிரிக்குறாங்கய்யா! இப்படியே போச்சுன்னா, இந்தத் தொழிலே நசிஞ்சு போயி நாங்கல்லாம் நடுத்தெருவுக்கு வந்திருவோமய்யா! பிச்சுவா பக்கிரி விக்கி விக்கி அழ ஆரம்பித்தான்.

      பேசாம நீங்க உங்க போராட்டத்தை டெல்லியிலே போய் நடத்தலாமே பக்கிரி அண்ணே?

      பர்மிஷன் கேட்டிருக்கோம்; ஆனா கிடைக்கலை! நாங்க அங்கே போயி போராட்டம் நடத்தி, அப்புறமா கட்சி ஆரம்பிச்சு, தேர்தல்லே நின்னு ஜெயிச்சு ஆட்சியைப் பிடிச்சிருவோமோன்னு பயப்படுறாங்கன்னு நினைக்கிறோம். நாங்க திருடங்கதான், ஆனா அந்த அளவுக்கு அவங்க மாதிரி மனசாட்சியில்லாம நடந்துக்குவோமா? சொல்லுங்க சேட்டை!

      எனக்கு என்ன பதில் சொல்வதென்றே புரியவில்லை. கூட்டம் மட்டும் சேர்ந்து கொண்டேயிருந்தது. கோஷமும் வலுத்துக் கொண்டே போனது.

      வாபஸ் வாங்கு! வாபஸ் வாங்கு! மின்வெட்டை வாபஸ் வாங்கு!

********************

26 comments:

பழமைபேசி said...

இஃகும்! சேட்டை, சேட்டை, சேட்டை!!

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா... ஹா... ஹா... கலக்கல்...

tm1

வெங்கட் நாகராஜ் said...

Hilarious.... :)

அருணா செல்வம் said...

கலக்குறீங்க சேட்டை ஐயா....

கரண்ட் கட்டால் யார்யாரெல்லாம் கஷ்டப் படுறாங்க.... அடடடா...

சேட்டையை... பூட்டைத் தொறக்கிற கம்பி மாதிறி.... சரியாகத் தான் சொல்லியிருக்கிறீர்கள். சூப்பர்.

Yaathoramani.blogspot.com said...

ஆஹா இதற்குள் இவ்வளவு பிரச்சனை இருக்கா
படித்து முடித்ததும் திருடர்களின் கஷ்ட நிலைமைப்
பார்த்து மிகவும் கஷ்டப்பட்டுப் போனேன்
சுகமான சுவாரஸ்யமான பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

tha.ma 4

ஸ்ரீராம். said...

அடடா.... இம்பூட்டுக் கஷ்டமா அவிங்களுக்கு! :))))))

Unknown said...


பூட்டைத் தொறக்கிற கம்பி மாதிறி.... சரியாகத் தான் சொல்லியிருக்கிறீர்கள். வந்துள்ள உவமைகள் அனைத்தும் மிகவும் பொருத்தம். இவை அனைத்தும் தங்களுக்கு இயல்பாக வருவதே சிறப்பு

தி.தமிழ் இளங்கோ said...

தமிழக முற்போக்குத் திருடர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பிச்சுவா பக்கிரியை பேட்டி கண்டு, நாட்டிலுள்ள எல்லா திருடர்களையும் ஒரு வாங்கு வாங்கி விட்டீர்கள்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

கரண்ட் இல்லன்னாதான் திருடங்களுக்கு கொண்டாட்டம்னு பாத்தா.கரண்டு இருந்தாதான் அவங்க தொழிலும் நடக்குமா?
சூப்பர் சார்.

ஹாலிவுட்ரசிகன் said...//மனைவியிடம் குட்டு வாங்கிய கணவனின் மண்டை போல ஒரு ’திடீர்’ கூடாரம் முளைத்திருந்தது.//

//ஹன்சிகா மோட்வானியின் முகம்போலப்//

இந்த மாதிரி உவமைகளை சேட்டைத்தனமா உங்களுக்கு மட்டும் தான் திங்க் பண்ண முடியும் சார்.. :)))

ரொம்பக் கஷ்டம் தான் ... கடைசில நீங்களும் போராட்டத்துக்கு குரல் கொடுத்தீங்களா?

Unknown said...

அண்ணே, சிரித்து, சிரித்து வயிறு வலிக்குது, அதுவும் //”யோவ் சேட்டை! பார்த்தா பூட்டைத் தொறக்குற கம்பி மாதிரியிருக்கேன்னு சும்மா விடுறேன்!// இந்த வரிகள் :-))))))))))))

சசிகலா said...

அடடா திருட்டுத்தொழிலும் பாதிக்கப்படுதா ?

சிறப்புங்க.

பொன் மாலை பொழுது said...

நடக்கட்டும் நடக்கட்டும்..............

பொன் மாலை பொழுது said...

நடக்கட்டும் நடக்கட்டும்..............

பால கணேஷ் said...

நான் ஸ்டாப் சிரிப்பலைகளை எங்களிடமிருந்து எழுப்ப உங்களால் மட்டும் தாண்ணா முடியும். மிக அசால்டாக அங்கங்கே வந்து விழும் உங்களின் ஸ்பெஷல் உவமைகள் பாயசத்தில் முந்திரி எங்களுக்கு. சூப்பர்.

Balaji said...

ஹா ஹா ஹா ஹா ஹா...
செம சிரிப்பு....

கீழே இருக்கும் வரிகளெல்லாம் ஐயோ செம சிரிப்பு வந்துச்சு...

பந்தலிலிருந்த ஓட்டை வழியாக விழுந்த சூரிய ஒளி, பக்கிரியின் பளிங்கு மண்டையில் பட்டதால், அது ஏ.வி.எம்.ஸ்டூடியோவின் ஃபோகஸ்-லைட் போலாக, பேனர் குளோசப்பில் காட்டிய ஹன்சிகா மோட்வானியின் முகம்போலப் பளபளப்பாய்த் தெரிந்தது.

கையது கொண்டு மெய்யது பொத்தியபடியே ஸ்டேஷனுக்குள் நுழைந்தான்.

மல்டிப்ளெக்ஸில் தியேட்டர்மாறிப்போய் ’மாற்றான்’ படம் பார்த்தது போல மலங்க மலங்க விழித்தார்கள்.

”யோவ், இவனுங்கல்லாம் ப்ரொஃபஷனல் திருடனுங்க! போலீஸ் காட்டான்குளத்தூருல இருந்தா, கத்திப்பாரா ஜங்க்‌ஷனுலேயே மோப்பம் பிடிச்சிருவானுங்க!”

எப்பப் பார்த்தாலும் உடுப்பி ஹோட்டல்லே காப்பி டம்ளர் திருட வந்தவரு மாதிரியே முழிப்பாரு!
இந்த மாதிரி எல்லா இன்ஃபர்மேஷனையும் கலெக்ட் பண்ணி, அதை Robbetix-ன்னு ஒரு ஸாஃப்ட்வேருலே ஃபீட் பண்ணி வைக்கணும்.”
யோவ் சேட்டை! பார்த்தா பூட்டைத் தொறக்குற கம்பி மாதிரியிருக்கேன்னு சும்மா விடுறேன்!

எங்களாலே இந்தியப் பொருளாதாரத்துக்கு ஏதாவது பாதகம் இருக்கா சொல்லு?”


சி.ஏ.ஜியோ ஏதாவது குத்தம் சொல்லியிருக்காங்களா இதுவரை?”

எத்தனையோ பேரு கட்சியெல்லாம் ஆரம்பிச்சு பெரிய ஆளாயிருக்காங்க!

எங்க புள்ளைகுட்டியெல்லாம் பட்டினியாக் கிடக்குது தெரியுமா?” பிச்சுவா பக்கிரியின் குரல் தழுதழுத்தது.

சொன்னா நம்ப மாட்டீங்க! வசந்த் & கோவுக்குப் போட்டியா கடைபோடுற அளவுக்கு எங்ககிட்டே ஏகப்பட்ட மிக்ஸி, கிரைண்டர், டிவி எல்லாம் இருக்கு! ’இந்தக் காலத்துலே போய் இதையெல்லாம் எவன்யா வாங்குவான்?’ன்னு எல்லாரும் சிரிக்குறாங்கய்யா!

நாங்க திருடங்கதான், ஆனா அந்த அளவுக்கு அவங்க மாதிரி மனசாட்சியில்லாம நடந்துக்குவோமா? சொல்லுங்க சேட்டை!”

mrrao said...

Hilarious & hats off to you

Unknown said...

You have got everything that could make you a good screen play writer.
I should definitely appreciate your choice of metaphors and names selected for characters. It helps the reader to get into groove and go with the flow of the story.
Kudos settai ji.

தக்குடு said...

நல்ல கற்பனைவளம் & நையாண்டி :))

Sathya said...

மனசு விட்டு சிரித்தேன்! ஆனாலும் மின் வெட்டை நினைத்தால் வெறுப்பும் வருகிறது
Sathya

கே. பி. ஜனா... said...

அல்சர் மாத்திரை பிளீஸ்! சிரித்து வயிறு புண்ணாகி விட்டது!

ரிஷபன் said...

பொதுவா மாஸ்டர் பீஸ்னு ஏதாச்சும் ஒண்ணுதான் சொல்வாங்க.. உங்களுக்கு நிறைய மாஸ்டர் பீஸ் இருக்கு.. இது அதுல ஒண்ணு.

Babu said...

Super comedy. Vaalthukkal Sir.

இராஜராஜேஸ்வரி said...

இதெல்லாம் டூ மச்!”!!!பார்த்தா பூட்டைத் தொறக்குற கம்பி மாதிரியிருக்கேன்னு சும்மா விடுறேன்!//

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் ரசித்த வரிகள்:

//”வணக்கம் ஐயாமாருங்களே! நம்ம தலைவரு மின்வெட்டைக் கண்டிச்சு உண்ணாவிரதம் இருக்காருங்க! பெரியமனசு பண்ணி நீங்க ஒரு தபா பந்தலுக்கு வந்து எங்களையெல்லாம் அரெஸ்ட் பண்ணி விழாவைச் சிறப்பிக்கணும்.”//

//”அப்போ ஒண்ணு பண்ணலாம் சார், எனக்குத் தெரிஞ்சு சேட்டைக்காரன்னு ஒரு ஆளு இருக்காரு! எப்பப் பார்த்தாலும் உடுப்பி ஹோட்டல்லே காப்பி டம்ளர் திருட வந்தவரு மாதிரியே முழிப்பாரு! அவரை அனுப்பி இவனுங்க திட்டமென்னான்னு தெரிஞ்சுக்கலாமா?”//

//”என்ன அப்படிக் கேட்டுட்டீங்க?” எரிந்து விழுந்தான் பக்கிரி. “உங்க வீட்டுக்குக் கம்பி வழியாத்தானே மின்சாரம் வருது? அதே மாதிரி நாங்களும் கம்பி வழியாவோ, பைப் வழியாவோ தான் உள்ளே புகுந்து வர்றோம். இந்த ஒரு சம்பந்தம் போதாதாய்யா?”//

// ”யோவ், திருட்டுன்னா சும்மாவா? அதுக்கு எம்புட்டு ஜெனரல் நாலெட்ஜ் வேணும் தெரியுமா? யார் யார் வீட்டுலே எத்தனை ஜன்னல், கதவு இருக்கு? யார் வீட்டுலே கடிக்கிற நாயிருக்கு? யார் வீட்டுலே குரைக்கிற நாய் மட்டுமிருக்கு? எந்த வீட்டுலே புருஷன் குறட்டை வுடுவாரு, எந்த வூட்டுலே பொஞ்சாதி குறட்டை விடுவாங்க? யார் யார் எத்தனை மணிவரைக்கும் என்னென்ன சீரியல் பார்ப்பாங்க? இந்த மாதிரி எல்லா இன்ஃபர்மேஷனையும் கலெக்ட் பண்ணி, அதை Robbetix-ன்னு ஒரு ஸாஃப்ட்வேருலே ஃபீட் பண்ணி வைக்கணும்.”//

//”யோவ் சேட்டை! பார்த்தா பூட்டைத் தொறக்குற கம்பி மாதிரியிருக்கேன்னு சும்மா விடுறேன்! உனக்கென்னய்யா தெரியும் திருடனுங்களைப் பத்தி?//

//நாங்க இங்கேயே திருடி, திருடின பணத்தை இங்கேயே புழங்க விடறோம். எங்களாலே இந்தியப் பொருளாதாரத்துக்கு ஏதாவது பாதகம் இருக்கா சொல்லு?”//

//இந்தத் திருட்டுத் தொழிலை நாங்க இவ்வளவு வருஷமா எவ்வளவு நேர்மையா நடத்திட்டிருக்கோம்? எங்களைப் பத்தி ரிசர்வ் பேங்கோ, சி.ஏ.ஜியோ ஏதாவது குத்தம் சொல்லியிருக்காங்களா இதுவரை?”//

//இப்படியே போச்சுன்னா, இந்தத் தொழிலே நசிஞ்சு போயி நாங்கல்லாம் நடுத்தெருவுக்கு வந்திருவோமய்யா!” பிச்சுவா பக்கிரி விக்கி விக்கி அழ ஆரம்பித்தான்.//

அருமையாக நக்கலாக அழகாக எழுதியிருக்கீங்க. பாராட்டுக்கள்.
VGK