Monday, July 4, 2011

அண்ணாஜிப்பழம்-பாகம்.02

முன்கதைச் சுருக்கம் (முழுமையாக வாசிக்க "இங்கே" சொடுக்கவும்)

குடிமக்கள் முன்னேற்றக் கழகத்திடம், ஜன் லோக்பால் சட்டவரைவுக்கு ஆதரவு கோரி, கட்சியின் பொதுச்செயலாளர் கிங்ஃபிஷர் கிருஷ்ணசாமியைச் சந்திக்க அண்ணா ஹஜாரே வருகிறார். அவரை வெளியே காத்திருக்கச் சொல்லுமாறு கு.மு.கவின் கொள்கைப்பரப்புச் செயலாளர் நெப்போலியன் நெடுவளவன் உத்தரவிட்டு விட்டு, கிருஷ்ணசாமிக்கு அண்ணாஜியைப் பற்றி எடுத்துக் கூறுகிறார். அப்போது அண்ணாஜியின் ஒரு செய்தியோடு கு.மு.க-வின் பொருளாளர் பகார்டி பக்கிரிசாமி உள்ளே வருகிறார்.

அண்ணா ஹஜாரேவுக்கு வெளியே காத்திருப்பது ’போரடிப்பதால்’ வந்திருக்கிற தொலைக்காட்சி நிருபர்களுக்கு ஒரு பேட்டி அளிக்கலாமா என்று அனுமதி கேட்பதாக, பக்கிரிசாமி தெரிவிக்கிறார்.

"இன்னாபா படா ரோதனையா கீது? நேத்துத்தானே அல்லா டிவிலேயும் பேட்டி கொடுத்தாரு?" என்று எரிச்சலடைந்தார் நெடுவளவன். "யோசிச்சுச் சொல்லுறோமுன்னு போய்ச் சொல்லு!" என்று பக்கிரிசாமியை திருப்பி அனுப்பினார். "இந்த அண்ணா ஹஜாரேயாலே நாட்கணக்கா சாப்பிடாம இருக்க முடியுது. ஆனா, ஒரு நாளைக்கு ஒரு தபா டிவியிலே மூஞ்சியைக் காட்டலேன்னா கெடந்து அல்லாடுறாருபா!"

"இந்த டிவிக்காரங்களும் அலுக்காம போறாங்களே!" என்று நொந்து கொண்டார் கிருஷ்ணசாமி.

"தலீவரே, லவ் பண்ண ஆளை பிளேடாலே முன்னூறு துண்டா வெட்டிப் போட்ட பொம்பளையோட பேட்டியையே டிவிக்காரனுங்க போடுறானுங்க! இந்த அண்ணாஜியையும், பாபா ராம்தேவையும் மாத்தி மாத்திக் காட்டுறானுங்களே, கங்கையை க்ளீன் பண்ணச்சொல்லி உண்ணாவிரதம் இருந்த ஆளு அம்பேலாயிட்டாரு! எந்த நாயும் அந்த சாமியை ஒரு போட்டோ கூட எடுக்கலே! இந்த டிவிக்காரனுங்களுக்கு யாராச்சும் கூட்டம் கூட்டுனாத்தான் கல்லா களைகட்டுது!"

"சனமும் ஆயிரக்கணக்குலே கூடுதேய்யா?"

"ஏன் கூடாது? ரெண்டாவது சுதந்திரப்போராட்டம்-ன்னில்லே பில்ட்-அப் கொடுத்தானுங்க?"

"ரெண்டாவது சுதந்திரப்போராட்டமா? அப்போ, இந்திரா காந்திக்கு எதிரா ஜெயபிரகாஷ் நாராயணன், ஆசார்ய கிருபளானி, மொரார்ஜி தேசாய் எல்லாரும் போராடி ஜெயிலுக்குப்போனதெல்லாம் ரெண்டாவது சுதந்திரப்போராட்டமில்லியாமா?"

"அட இரு தலீவரே, இன்னும் கொஞ்ச நாளு போனா, அண்ணா ஹஜாரே தான் இந்தியாவுக்கு சுதந்திரமே வாங்கிக்கொடுத்தாருன்னு பேசுனாலும் பேசுவாங்க!"

"அது போகட்டும்! இப்போ நம்ம ஆபீசுலே அண்ணாஜி பேட்டி கொடுக்க விடுறதா வேண்டாமா?"

"பேட்டி கொடுக்கட்டும் தலீவரே! நீ இன்னா பண்றே, சேட்டை டிவிக்குப் போன்போட்டு நம்ம களக்காடு கருமுத்துவை ஒரு தபா வந்து கண்டுக்கினு போவச்சொல்லு! இந்த அண்ணா ஹஜாரேயை நாக்கைப் புடுங்குறா மாதிரி நாலு கேள்வி கேக்கச்சொல்லு!"

"அப்படியே சேட்டையையும் வரச் சொல்றேன்! நம்ம கு.மு.க.கட்சியைப் பத்தி அவன் ஒருத்தன் தான் நாலு வார்த்தை அப்பப்போ எளுதுறான்!"

கு.மு.க.அலுவலகத்தில் பேட்டி கொடுக்கலாம் என்ற தகவலை அண்ணா ஹஜாரேயிடம் தெரிவித்ததும், அவர் முகமலர்ச்சியோடு எல்லா டிவி நிருபர்களையும் அழைத்தார். அவர்களுடன் களக்காடு கருமுத்துவும் சேட்டை டிவியின் மைக்கோடு உள்ளே சென்று அண்ணாஜியிடம் கேள்வி கேட்கத் தொடங்கினான்.

"அண்ணாஜி! பிரதமர் மன்மோகன் சிங் ரொம்ப நல்லவரு. ஆனா, சோனியா காந்தி சகவாசத்தாலே தான் அவராலே ஒண்ணும் பண்ண முடியலேன்னு இதுவரைக்கும் மூணு வாட்டி சொல்லியிருக்கீங்க! அப்புறம் எதுக்கு திரும்பத் திரும்ப சோனியா காந்திக்கே லெட்டர் போடறீங்க? நல்லவங்களுக்கு லெட்டர் போட மாட்டீங்களோ?"

"ஹிஹிஹி!" என்று இளித்தார் அண்ணா ஹஜாரே. "அவங்கதானே காங்கிரஸ் கட்சித்தலைவி. அதுனாலே தான் அப்படி...ஹிஹிஹி!"

"அவங்க அரசாங்கம் முழுக்க பொய்யனுங்களும், பித்தலாட்டக்காரனுங்களும் இருக்காங்கன்னு சொன்னீங்களா இல்லையா? அப்புறம் ஏன் அவங்க கிட்டே தொங்கறீங்க?"

"ஹிஹிஹி! என்ன இருந்தாலும் அவங்க தானே ஆளுங்கட்சித் தலைவி! அதுனாலே தான்..ஹிஹிஹிஹி!"

"அவங்களுக்கு ராஜ்யசபாவுலே பலம் கிடையாதே! பா.ஜ.க.ஆதரவில்லாம லோக்பால் சட்டத்தை கொண்டுவர முடியாதே? நீங்க கேக்குறா மாதிரி லோக்பால் சட்டத்துலே பிரதமரையும் கொண்டுவரணுமுன்னு முன்னே பா.ஜ.க.அரசு ஆட்சியிலே இருக்கும்போதே ஒத்துக்கிட்டாங்களே! அப்புறமா எதுக்கு பா.ஜ.கவை ஓரங்கட்டினீங்க?"

"ஹிஹிஹி! பா.ஜ.கவை ஓரங்கட்டினாத்தானே காங்கிரஸ் நான் சொல்றதைக் கேட்கும்? இது கூட தெரியலியா?"

"அப்புறம் எதுக்கு ஓய் பா.ஜ.க.கூட்டணியிலே இருக்கிற நிதிஷ் குமார் கிட்டே போய் முதமுதலா ஆதரவு கேட்டீங்க?"

"ஏன்னா காங்கிரஸ் கைவிட்டுட்டாங்களே? என்ன பண்ணித்தொலைக்கிறதாம்?"

"காங்கிரஸ் மட்டுமா? பா.ஜ.க, பிஜு ஜனதா தள், கம்யூனிஸ்ட் எல்லாருமே உங்க அடாவடி செல்லுபடியாகாதுன்னு சர்வகட்சிப் பொதுக்கூட்டத்துலே சொல்லிட்டாங்களே?"

"அதுக்கென்ன, இன்னும் நிறைய கட்சி மிச்சம் இருக்கே?"

"அப்போ நீங்க பண்ணுறது சுத்தமான அரசியல்னு ஒத்துக்கறீங்களா?"

"இந்த மாதிரியெல்லாம் கேள்வி கேட்டா அப்புறம் ஊழலை எப்படி ஒழிக்கிறதாம்?"

"அண்ணாஜி! எங்க ஊருலே ஒரு தலைவரு இலங்கைத்தமிழனுக்காக மூணு மணி நேரம் உண்ணாவிரதம் இருந்ததை விடவும் உங்க உண்ணாவிரதம் படுகாமெடியா இருக்குதே! அரசியல் கட்சிகளோட ஆதரவில்லாம லோக்பால் சட்டம் வராதுன்னு தெரிஞ்சே, அவங்களை வாய்க்கு வந்தபடியெல்லாம் திட்டுறீங்க! சட்டத்தை நிறைவேத்தலேன்னா திரும்ப உண்ணாவிரதம்னு சொல்றீங்க! திரும்ப அரசாங்கம் கூப்பிட்டுப் பேசுவாங்க; திரும்ப டிவிக்காரனுங்க உங்க பின்னாலே அலைவாங்க! இப்படி இன்னும் எத்தனை வருஷம் டிராமா போடுறதா உத்தேசம்?"

"நான் ஒரு காந்தீயவாதி!"

"காந்தீயவாதியா? எந்த காந்தி? மகாத்மாவா சோனியாவா?"

(தொடரும்)

8 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//"அப்படியே சேட்டையையும் வரச் சொல்றேன்! நம்ம கு.மு.க.கட்சியைப் பத்தி அவன் ஒருத்தன் தான் நாலு வார்த்தை அப்பப்போ எளுதுறான்!"
//

சூப்பராப்போகுது. சீக்கரமா அடுத்த பகுதி போடுங்க. இல்லாட்டா 5 நிமிட தொடர் உண்ணாவிரதம் இருக்கப்போகிறதா அறிவிப்புக்கொடுப்பேன்.

வெங்கட் நாகராஜ் said...

அட.... சேட்டை டிவி பெட்டியின் பேட்டி-ல இப்பதான் சூடு பிடிச்சுருக்கு.... அடுத்த கேள்வி என்ன சேட்டை....

geeyar said...

சரிப்பா அன்னா டம்மி பீசாவே இருக்கட்டும். காங்கிரஸ்காரனுங்க என்ன மயித்துக்கு அவரிடம் போயி பேசுராங்க. அன்னா ஹசாரே பண்ற தப்பே திருட்டை ஒழிக்கணும் என பலே திருடர்களிடம் போய் பேசுரதுதான்.

ஒரு கதை சொல்லுவாங்க. முதலியார்பட்டி நாடார் தெரு நாயக்கர் மகாலில் நல்லப்பசெட்டியார் தலைமையில் சாதி ஒழிப்பு மாநாடு நடைபெற்றது என்று சொல்லுவார்கள்.

ஏன் ஹசாரேவை பற்றி மட்டும் எழுதுரீங்க. மத்திய அரசு சார்பாக லோக்பால் கமிட்டியில் இருக்கும் கபில்சிபல் (240 கோடி ஊழல்) ப.சி(எம்பி ஆனதே ஊழல்) இத்யாதி இத்யாதி..
அவங்கள பற்றியும் எழுதலாமே. நாடாளுமன்றம் தான் மசோதாவை தயாரிக்கணும் என்றால் உழல் பண்ணாத நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரேனும் இருந்தா முதலில் அவரை கண்டுபிடிக்கணும்.

இணையத்தில் பிளாக் வைச்சிருக்கிறவங்களையெல்லாம் எப்படி பிளாக் பண்றது அப்டினு உங்கள் தலைமையில் ஒரு கமிட்டி வைக்கிரதும் நாடாளுமன்றத்தில் லோக்பால் மசோதா நிறைவேற்றுரதும் ஒண்ணு. ஒண்ணரையணா மதிப்புதேராத பிளாக்கை பிளாக் பண்ண பிளாக் வைச்சிருக்கிரவங்க கிட்டே கருத்து கேட்டாலே கிடைக்காதே. கோடி கோடியா கொள்ளையடிக்கிறவங்க கிட்டே போய் கொள்ளைய நிறுத்த வழி கேட்கிறது.

போபர்ஸ், ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஊழல், ஸ்பெக்ட்ரம் இப்படி எல்லா ஊழலுக்கும் எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தை கூட்டவிடாமல் தவிர்த்ததே. இதுபற்றி எதிர்கட்சிகள் எதுவுமே செய்யாததேன். எல்லாமே ஒரே குட்டையில் ஊரின மட்டைகளே.

மகளிர் மசோதாவே நிறைவேற்றமாட்டாங்க லோக்பால்?

அப்புறம்

ஏதோ நேற்றுதான் உழலும் கருப்பு பணமும் வந்ததா, இதுவரைக்கும் என்ன பண்ணிட்டு இருந்தாங்க அன்னா ஹசாரேவும் பாபா ராம்தேவும்.

1947ல் தான் காந்திஜீ வெள்ளையனே வெளியேறு முழக்கத்தை ஆரம்பித்தார். ஏன் 1946 வரை வெள்ளையனை வீட்டுக்கு விருந்துக்கு அழைத்தாரா.

அவங்களுக்கு பேட்டியாவது கொடுக்க தெரியுது.

settaikkaran said...

//வை.கோபாலகிருஷ்ணன் said...

சூப்பராப்போகுது. சீக்கரமா அடுத்த பகுதி போடுங்க. இல்லாட்டா 5 நிமிட தொடர் உண்ணாவிரதம் இருக்கப்போகிறதா அறிவிப்புக்கொடுப்பேன்.//

உண்ணாவிரதமா? சேட்டை டிவியை கவர் பண்ண அனுப்பட்டுமா ஐயா? :-)

மிக்க நன்றி ஐயா!

settaikkaran said...

//வெங்கட் நாகராஜ் said...

அட.... சேட்டை டிவி பெட்டியின் பேட்டி-ல இப்பதான் சூடு பிடிச்சுருக்கு.... அடுத்த கேள்வி என்ன சேட்டை....//

பேட்டி ஓவர்! அடுத்தது சேட்டையின் ’என்ட்ரீ’. பப்பர பப்பர பாய்ங்க்....!
மிக்க நன்றி வெங்கட்ஜீ! :-)

settaikkaran said...

//geeyar said...

சரிப்பா அன்னா டம்மி பீசாவே இருக்கட்டும். காங்கிரஸ்காரனுங்க என்ன மயித்துக்கு அவரிடம் போயி பேசுராங்க.//

முதல் பந்துலேயே சிக்ஸரா? என்ன மயித்துக்கு...??? :-))

அனேகமாக எனது பக்கம் முதல்முதலா வந்திருக்கிறீங்க! ஒண்ணு சொல்லிக்கிறேன்! இத்தாலி அம்மையார் & கல்லக்குடி கண்ட கருணாநிதி ரெண்டு பேர் படத்தையும் போட்டு "மோசடிக்கும்பலை முறியடிப்போம்; ஜனநாயகம் காப்போம்,"னு தேர்தல் அறிவிச்சதும் என் வலைப்பதிவில் பேனர் போட்டவன் நான். (அது தேர்தல் பிரசாரம் முடிகிற நாள் வரை இருந்தது.). எனவே, நான் அரசியலுக்கோ, அரசுக்கோ வக்காலத்து வாங்கவில்லை என்று தெரிஞ்சுக்குங்க!

நெக்ஸ்டு!

//அன்னா ஹசாரே பண்ற தப்பே திருட்டை ஒழிக்கணும் என பலே திருடர்களிடம் போய் பேசுரதுதான்.//

அதைத்தானே நானும் சொல்றேன்! 2G ஸ்பெக்ட்ரம் ஊழலில் அடிபட்டிருந்த காங்கிரசிடம் போய் பேசுவதை விட்டு விட்டு, அவர் முதலில் எதிர்க்கட்சிகளிடம் பேசி, லோக்பால் சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுமாறு வலியுறுத்தியிருக்க வேண்டாமா? பாராளுமன்றம் அல்லாமல் அதை எப்படி நிறைவேற்றியிருக்க முடியும்? ஜந்தர் மந்தரில் போய் உண்ணாவிரத டிராமா போட வேண்டிய அவசியம் என்ன? அது இல்லாவிட்டால், அண்ணா ஹஜாரே என்றால் யார் என்று இந்தியாவில் பலருக்குத் தெரிந்திருக்காது என்பதால் தானே? முதலில் தன்னை முன்னிறுத்திக் கொண்டு, பிறகு மக்களைத் திரட்ட வேண்டும் என்ற அரிப்பு தானே?

settaikkaran said...

//ஒரு கதை சொல்லுவாங்க. முதலியார்பட்டி நாடார் தெரு நாயக்கர் மகாலில் நல்லப்பசெட்டியார் தலைமையில் சாதி ஒழிப்பு மாநாடு நடைபெற்றது என்று சொல்லுவார்கள்.//

சென்னையில் இந்தக் கதை இப்போ நடக்காது. சாதிப்பெயர்களை எடுத்திட்டாங்க! :-)

//ஏன் ஹசாரேவை பற்றி மட்டும் எழுதுரீங்க. மத்திய அரசு சார்பாக லோக்பால் கமிட்டியில் இருக்கும் கபில்சிபல் (240 கோடி ஊழல்) ப.சி(எம்பி ஆனதே ஊழல்) இத்யாதி இத்யாதி..//

நான் என்னமோ காங்கிரசுக்கு வால்புடிக்கிறதா நெனக்கறீங்க போலிருக்கு; ஏற்கனவே பதில் சொல்லிட்டேன்! :-)

//அவங்கள பற்றியும் எழுதலாமே. நாடாளுமன்றம் தான் மசோதாவை தயாரிக்கணும் என்றால் உழல் பண்ணாத நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரேனும் இருந்தா முதலில் அவரை கண்டுபிடிக்கணும்.//

உங்க சாந்திபூஷன், பிரசாந்த் பூஷன் கூடத்தான் மாயாவதி கொடுத்த நிலத்தை வாங்கினாங்கன்னு செய்தி வந்தது. அதுக்கு என்ன பதில் சொல்றீங்க? :-)

//இணையத்தில் பிளாக் வைச்சிருக்கிறவங்களையெல்லாம் எப்படி பிளாக் பண்றது அப்டினு உங்கள் தலைமையில் ஒரு கமிட்டி வைக்கிரதும் நாடாளுமன்றத்தில் லோக்பால் மசோதா நிறைவேற்றுரதும் ஒண்ணு.//

இணையத்தைப் பத்தி அப்பாலிக்கா சொல்றேன்! நாடாளுமன்றத்தில் லோக்பால் மசோதா நிறைவேற்ற முடியாதுன்னு நீங்க சொல்றீங்க. அதையே தான் நானும் சொல்றேன்! அப்புறம் எதுக்கு உங்க அண்ணாஜி இந்த பம்மாத்து வேலை பண்ணிட்டிருக்காரு? அவர் பண்ணுறது மோசடிவேலைன்னு ஒத்துக்கறீங்களோ? :-))))

//ஒண்ணரையணா மதிப்புதேராத பிளாக்கை பிளாக் பண்ண பிளாக் வைச்சிருக்கிரவங்க கிட்டே கருத்து கேட்டாலே கிடைக்காதே.//

சொந்தமா காசுகொடுத்து வெப்-சைட் வச்சிருக்கிற சாருவும், ஜெயமோகனும் என்ன பாடு படுறாய்ங்க தெரியுமா? :-))))

//கோடி கோடியா கொள்ளையடிக்கிறவங்க கிட்டே போய் கொள்ளைய நிறுத்த வழி கேட்கிறது.//

எப்படி? உண்ணாவிரதம் இருந்தா? :-))))))

//போபர்ஸ், ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஊழல், ஸ்பெக்ட்ரம் இப்படி எல்லா ஊழலுக்கும் எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தை கூட்டவிடாமல் தவிர்த்ததே. இதுபற்றி எதிர்கட்சிகள் எதுவுமே செய்யாததேன். எல்லாமே ஒரே குட்டையில் ஊரின மட்டைகளே.//

அப்போ, அண்ணா ஹஜாரே என்ன மன்னராட்சியைத் திரும்பிக் கொண்டுவரப்போறாரா? நீங்க ரொம்ப குழம்பியிருக்கீங்க அல்லது குழப்ப முயற்சிக்கிறீங்கன்னு நல்லாத் தெரியுது.

//மகளிர் மசோதாவே நிறைவேற்றமாட்டாங்க லோக்பால்?//

திரும்ப முதல்லேருந்தா....? :-))))

//அப்புறம் ஏதோ நேற்றுதான் உழலும் கருப்பு பணமும் வந்ததா, இதுவரைக்கும் என்ன பண்ணிட்டு இருந்தாங்க அன்னா ஹசாரேவும் பாபா ராம்தேவும்.//

பாபா ராம்தேவை விடுங்க! அதெல்லாம் பிசினஸ் பாலிடிக்ஸ்! அண்ணா ஹஜாரேயோட சொந்த மாவட்டத்துலே தொழில்நகரங்கள் என்ற பெயரில் நில ஆக்கிரமிப்பு நடந்தபோது என்ன பண்ணினாரு? விதர்பாவுலே பூச்சிமருந்தைக் குடிச்சு, தூக்குப்போட்டு விவசாயி செத்தபோது அண்ணாஜி என்ன பண்ணினாரு? கூரையேறி கோழிபிடிக்க முடியாதவரு வானமேறி வைகுண்டம் போறாராமா? நல்ல காமெடி!

//1947ல் தான் காந்திஜீ வெள்ளையனே வெளியேறு முழக்கத்தை ஆரம்பித்தார். ஏன் 1946 வரை வெள்ளையனை வீட்டுக்கு விருந்துக்கு அழைத்தாரா.//

ஐயோ பாவம் காந்தி! சேட்டைக்காரன் பிளாகுலெ அவரைப் பத்திப் பேசினாங்கன்னு கேள்விப்பட்டா எந்திரிச்சு வந்திருவாரு! இருந்தாலும், சர் வின்ஸ்டன் சர்ச்சில் காந்தியை half naked fakir-னு சொன்னதும் அவரு ஒண்ணும் எலிசபத் ராணிக்கு கடுதாசு எழுதலே! அண்ணா ஹஜாரே அப்படியா?

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! மீண்டும் வருக! நிறைய எழுதப்போறேன் இன்னும்! :-))))))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பதிவு சூடுபிடிக்குது, அதைவிட பின்னூட்டத்தில் நீங்கள் கொடுத்திருக்கும் பதில்கள் செம...!