Sunday, January 23, 2011

நம்ம துரை ரொம்ப நல்ல துரை

திருநெல்வேலி அல்வா, கோவில்பட்டி கடலைமிட்டாய், கடம்பூர் போளி - இந்த வரிசையில் இன்னொன்றும் இருக்கிறது தெரியுமா? தூத்துக்குடி மெக்ரோன். அடடா, அதுவும் தூத்துக்குடி வி.இ.சாலையில் உள்ள புகழ்பெற்ற கணேஷ் பேக்கரியின் மெக்ரோனை ருசிக்காதவர்கள் ஆயுள்முழுக்க சேட்டைக்காரனின் வலைப்பதிவை வாசிக்கக் கடவது. (கொஞ்சம் கடுமையான சாபமோ?) அப்படியிருக்கும்போது, தூத்துக்குடி வரைக்கும் போய்விட்டு, அந்த மெக்ரோனைச் சாப்பிடாமல் வந்தால், என்னை விக்கிரவாண்டி ரோட்டோர ஓட்டல் பரோட்டா மாஸ்டர் கூட மன்னிக்க மாட்டார். எனவே, சாப்பிட்டுவிட்டுத்தான் மறுவேலை என்று போய், முண்டியடித்து வாங்கி, ஒன்றை வாயில் போட்டு அதன் முந்திரிவாசனையில் கட்டுண்டு எந்திரிக்க முடியாமல் லயித்தபடி சாலையை நோக்கியபோதுதான் அது நிகழ்ந்தது.

பளபளவென்று ஒரு சிவப்புநிற டாடா சுமோ கிராண்டே வந்து நின்றதும், தற்செயலாக எனது பார்வை வாகனத்தின் இலக்கத்தின் மீது விழுந்தது.

"TN-69-P-BOSS"

இப்போதெல்லாம் போஸ்டருக்கு மிக அருகே போய்ப் பார்த்தால்தான் என் கண்ணுக்கு அதிலிருப்பது தமன்னாவா திரிஷாவா என்று தெரிகிறது. எல்லாம் ஒரு வருடமாக என் கண்களை பாதித்திருக்கிற ஸ்ரேயோஃபியா என்ற வினோதமான பார்வைக்குறைபாட்டினால் தான். எனவே, ஒரு வாகனத்தில் நம்பருக்கு பதிலாக ’BOSS' என்று எழுதியிருப்பதைப் பார்த்ததும், சற்றே ஆவல் அதிகமாகி, ஒரு தாவல் தாவி, அந்த வாகனத்தை நெருங்கியதும்தான் அது "BOSS" இல்லை "6055" என்பது புரிந்தது. ’அட!என்னவொரு ரசனை?’ என்று மனதுக்குள் மெச்சியபடி மெக்ரோனோடு நான் அப்பீட் ஆக எண்ணியபோதுதான் அது நிகழ்ந்தது. கதவைத் திறந்தவாறே, கருப்புக்கண்ணாடியணிந்தபடி, கம்பீரமாக, முகமெல்லாம் மீசையாக இறங்கிய அந்த உருவத்தை இதற்கு முன்னர் நான் எங்கோ பார்த்திருக்கிறேனே? எங்கே??

மெக்ரோன் தொண்டைக்குள்ளும், அவரது உருவம் என் மண்டைக்குள்ளும் இறங்கிக்கொண்டிருக்க, யோசிக்க ஆரம்பித்தேன். அடிக்கடி பார்த்த முகம்; ஆனால் எங்கே? பொதுவாகவே நான் டியூப் லைட் என்பது நானிலத்தோர் நன்கறிந்ததே; சமீபத்திய விஞ்ஞானவளர்ச்சியால் நான் டியூப் லைட்டிலிருந்து ஸோடியம் வேப்பர் லைட்டாகி விட்டேனோ என்று எனக்கே தோன்றுமளவுக்கு குழம்பிக்கொண்டிருக்க, அவர் வண்டியை சாத்திவிட்டு, அருகே எங்கோ செல்வதைப் பார்த்துக்கொண்டேயிருந்தேன்.

அடடா, இது...அவரல்லவா? "கனவு மெய்ப்பட வேண்டும்" என்ற பெயரில் ஓசையின்றி ஒரு அற்புதமான வலைப்பூவில் அற்புதமாக எழுதிக்கொண்டிருக்கும் ந.உ.துரை! தமிழ்த்தென்றல் கூகிள் குழுமத்தின் நிர்வாகி! அனேகமாக, கூகிளில் உள்ள அனைத்துத் தமிழ்க்குழுமங்களிலும் அவரையும், அவரது க(வி)தைகளைக் காணலாம். பல குழுமங்களில் பல சந்தர்ப்பங்களில் அவரது புகைப்படங்களைப் பார்த்திருக்கிறேன். ஆஹா, மறக்கிற முகமா அது? முதலிலேயே அடையாளம் தெரிந்திருந்தால் போய் அறிமுகம் செய்து கொண்டிருக்கலாமே? இப்போது அவர் எங்கு போனாரோ? எப்போது திரும்புவாரோ? சரி, கையில் இன்னும் சில மெக்ரோன்கள் இருந்தன. அவற்றை விழுங்கி முடிக்கும் வரைக்கும் காத்திருப்போம். அவர் திரும்பி வந்தால் போய் அறிமுகம் செய்து கொள்ளலாம். இல்லாவிட்டால் ஜூட் என்று முடிவெடுத்து, எனது திட்டத்தின்படியே அடுத்த மெக்ரோனை வாயில் தள்ளி ஆடு தழை குதப்புவது போலக் குதப்பத் தொடங்கினேன். அப்படியே, துரை அவர்களைப் பற்றி நானறிந்த பல தகவல்களை அசைபோடத்தொடங்கினேன்.

ஒரே வார்த்தையில் சொல்வதென்றால் - ந.உ.துரை அவர்கள் "அடக்கம் அமரருள் உய்க்கும்," என்ற திருக்குறளுக்கு மிகச்சரியான உதாரணம். அவரைப் பற்றிப் பேசுகிறவர்களுக்கு, இப்போதெல்லாம் திருக்குறளைப் பற்றியும் எண்ணாமல் இருக்க முடியாது. காரணம், திருக்குறளோடு தொடர்புடைய அவரது சமீபத்திய முயற்சி எதிர்காலத்தில் வியந்து பேசப்படப்போகிற ஒரு சீரிய சாதனை. திருக்குறளின் விளக்கத்தை, அவர் குறள் வெண்பாவின் வடிவத்திலேயே எழுதியிருப்பதைப் பார்ப்பவர்களுக்கு, அவர் இதற்காக மேற்கொண்ட முயற்சி, சிந்திய வியர்வை, வாசித்த நூல்கள், இழந்த உறக்கம், செலவழித்த நேரம் - இவையெல்லாவற்றையும் தாண்டி அவருக்குள்ளிருந்த அசைக்க முடியாத உறுதி ஆகியவை புலப்படும்.

சீதாம்மா என்னிடம் ஒரு முறை கூறியிருந்தார்: "துரையா? அவர் காலையில் தூத்துக்குடியில் இருப்பார். மாலையில் கோயம்புத்தூர். இரண்டு நாட்கள் கழித்துக் கேட்டால் சென்னைக்கு வந்திருக்கிறேன் என்பார். ஆனால், எவ்வளவு பயணம் செய்தாலும், எங்கே போனாலும் குழுமத்தில் தினம் ஒரு மடலாவது போடாமல் இருக்க மாட்டார். அவ்வளவு ஆர்வம் அவருக்கு!"

புதுக்கவிதைகள், ஹைக்கூ, மரபுச்செய்யுள்கள் என அவர் முயன்றிராத களங்களே இல்லை எனலாம். வெறும் வார்த்தைகளால் மட்டுமல்ல, தனது மூன்றாவது கண்ணான கேமிரா கொண்டும், "எனது கோண(ல்)ம்" தன்னை வித்தியாசமாக வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார்.

முன்னைப் போல என்னால் தமிழ்க்குழுமங்களில் எழுத முடியாமல் போனாலும், நான் அவசியம் வாசிக்கிறவர்களில் முதன்மையானவர் ந.உ.துரை அவர்கள்! இதிலென்ன வியப்பு தெரியுமோ? உண்மையில் அவர் ஒன்றும் தமிழ் இலக்கியத்தைப் பாடமாகப் படித்துத் தேர்ந்தவர் அல்லர். அவர் ஒரு கட்டிடக்கலைப் பொறியாளர் என்பதுதான் அவரது ஒவ்வொரு முயற்சியையும் அண்ணாந்து பார்க்க வைக்கிறது.

பரீட்சையில் ’பிட்’ அடித்துத் தேறியவர்கள் பலர்; பிட் அடித்தும் தோற்ற மிகச்சிலரில் அடியேனும் ஒருவன். எனக்கு பக்கத்திலிருப்பவனைப் பார்த்தும் ஒழுங்காகப் எழுத வராது. ஒருமுறை பக்கத்திலிருந்தவனுக்கும் ஒன்றும் விளங்காமல் அவன் விடைத்தாள் முழுக்க ’சரவணபவ...சரவணபவ’ என்று எழுதிக்கொண்டிருக்க நான் அதைப் பார்த்து ’ஆரியபவன்...ஆரியபவன்’ என்று எழுத ஆரம்பித்து விட்டேன். இதைச் சொல்வதற்குக் காரணம் இருக்கிறது.

இப்போது ந.உ.துரை அவரது வலைப்பூவில் எளிய முறையில் "கற்போம் கற்பிப்போம்" என்று ஒரு புதிய தொடர் எழுதி வருகிறார். இது போல யாராவது எனது கல்லூரிக்காலத்தில் சொல்லிக்கொடுத்திருந்தால், நான் மூன்று வருடத்திலேயே இளங்கலைப் படிப்பை முடித்திருப்பேன். (அப்படீன்னா, எனக்கு எத்தனை வருசமாச்சுன்னா கேட்கறீங்க? அதெல்லாம் அரசாங்க ரகசியம்! விக்கிலீக்ஸ்லே பார்த்துக்கோங்க!)

இப்படியாகத்தானே, ந.உ.துரை அவர்களைப் பற்றி தொடர்ச்சியாக சிந்தித்துக்கொண்டிருக்கும்போதே, மீண்டும் அவர் தனது வாகனத்தை நோக்கி வருவதைப்பார்த்தேன். பேசலாமா வேண்டாமா? - ஒரு சிறிய தயக்கத்தோடு இருந்த நான், அவர் தன் கார் கதவைத் திறப்பதைப் பார்த்ததும், துள்ளிக்குதித்து எழுந்து அவரை நெருங்கினேன்.

"வணக்கம்! நான் தான் சேட்டை!"

வியப்பும் மகிழ்ச்சியுமாய் எங்களுக்குள் நிகழ்ந்த உரையாடல் இருக்கிறதே! மறக்க முடியாத அனுபவம்! இணையத்தில் எனக்குக் கிடைத்த சில நல்ல பரிச்சயங்களை நேரில் சந்தித்து, அளவளாவும் வாய்ப்பு அண்மையில் கிடைக்கத் தொடங்கியிருக்கிறது. ஒவ்வொரு சந்திப்பும் இன்னும் நம்மைச் சுற்றிலும் நிறைய அன்பும், வாஞ்சையும் இருக்கின்றன என்ற நம்பிக்கைக்கு உரமேற்றுகிறது.

அந்த வகையில் ந.உ.துரை அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பும், எனக்கு மேலும் பல புதிய நம்பிக்கைகளை உருவாக்கியிருக்கின்றன என்பது மட்டும் மறக்க முடியாத உண்மை.

ந.உ.துரை அவர்களின் முயற்சிகள் வெல்லும் நாள் தொலைவில் இல்லை! காரணம், அவரை விட முயல்பவர்கள் எவரையும் நான் அறிந்ததில்லை.

டிஸ்கி: இதை எழுத அவரிடம் அனுமதி பெறவே ஏறக்குறைய ஒரு வாரமாகி விட்டதுங்க!

28 comments:

manjoorraja said...

ஒவ்வொரு முறையும் சந்திக்க வேண்டும் என திட்டமிட்டும் ஏதோ காரணங்களால் சந்திக்க முடியாமல் தவற விடும் நபர் இவர். விரைவில் சந்திக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

அப்படியே ஏமாத்திகிட்டிருக்கும் உம்மையும்.

பெசொவி said...

அடப்பாவி சேட்டை, இன்னொரு முறை தூத்துக்குடி வரதா இருந்தா, சொல்லிட்டு வாப்பா, நான் அங்கேதான் இருக்கேன்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அட நான் கூட இப்போதான் Tutocourin மேக்ரூன் சாப்பிட்டேன்.. ஹிஹி

அன்புடன் நான் said...

என்னது வெண்பா எழுதுரவரா இவர்... பார்த்தா என்கவுண்டர் செய்யுரவாட்டம் தெரியுயாரு?

ராம்ஜி_யாஹூ said...

பகிர்விற்கு நன்றி
ஞானம் பேக்கரி மக்ரூவனும் சிறப்பு அல்லவா.

எல் கே said...

கவிதை அரசரும், நகைச்சுவை மன்னரும் சந்தித்தீர்களா ?? அருமை

Unknown said...

//பொதுவாகவே நான் டியூப் லைட் என்பது நானிலத்தோர் நன்கறிந்ததே; சமீபத்திய விஞ்ஞானவளர்ச்சியால் நான் டியூப் லைட்டிலிருந்து ஸோடியம் வேப்பர் லைட்டாகி விட்டேனோ//
//அவன் விடைத்தாள் முழுக்க ’சரவணபவ...சரவணபவ’ என்று எழுதிக்கொண்டிருக்க நான் அதைப் பார்த்து ’ஆரியபவன்...ஆரியபவன்’ என்று எழுத ஆரம்பித்து விட்டேன். இதைச் சொல்வதற்குக் காரணம் இருக்கிறது.//
தங்களின் நகைச்சுவை எழுத்துக்கள் மனதை இலேசாக்குகின்றன்..
தேவன், கல்கி நடை.... அசத்தல்..

Unknown said...

துரை அய்யாவுக்கு எம் வந்தனங்கள்..

KANA VARO said...

பகிர்வுக்கு நன்றி சேட்டை!

அன்புடன் மலிக்கா said...

சேட்டை சேட்டையோ சேட்டை..

Chitra said...

திருநெல்வேலி அல்வா, கோவில்பட்டி கடலைமிட்டாய், கடம்பூர் போளி - இந்த வரிசையில் இன்னொன்றும் இருக்கிறது தெரியுமா? தூத்துக்குடி மெக்ரோன். அடடா, அதுவும் தூத்துக்குடி வி.இ.சாலையில் உள்ள புகழ்பெற்ற கணேஷ் பேக்கரியின் மெக்ரோனை


.....சும்மாவே ஊரு நினைப்பில இருக்கேன். இப்போ, இதையெல்லாம் மிஸ் பண்ண வைத்து விட்டீர்களே!

Philosophy Prabhakaran said...

அப்படியே உங்க போட்டோவையும் போட்டிருக்கலாமே...

Philosophy Prabhakaran said...

பிரபா ஒயின்ஷாப் திறப்புவிழாவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்:
http://philosophyprabhakaran.blogspot.com/2011/01/blog-post_24.html

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

எந்திரன் என்பது ரஜினி நடித்த படமாகும்!
இந்தியாவுக்கு பக்கத்தில ஸ்ரீலங்கா இருக்கு!
பிரபுதேவாவுக்கும் நயன்தாராவுக்கும் இந்த வருஷம் கல்யாணம் நடக்குமா?
எலெக்சன் நெருங்கி வர்றதால வெங்காயத்தின் விலை குறையலாம்.......!

என்ன சார் அப்படி பாக்குறீங்க? நீங்க தானே கமெண்டு போடுற பாக்சுல " இன்னா வேண்ணாலும் எளுதலாம் " அப்டீன்னு போட்டு இருக்கீங்க! அதான் நமக்கு தெரிஞ்சத கொஞ்சம் எடுத்துவிட்டேன்!

( என்னது சேட்டைக்காரன் கிட்டேயே சேட்டையா? )

பை த பை ' மாத்தி யோசி ' னு ஒரு கடைய வச்சு ஓட்டிக்கிட்டு இருக்கேன்! அதுல உங்க ப்ளாக்கோட பெயரை வச்சு ஒரு மேட்டர் போட்டு இருக்கேன்! ஒரு எட்டு வந்து பாத்திட்டு போங்க பாஸ்!

சக்தி கல்வி மையம் said...

Nice,
பகிர்விற்கு நன்றி..
See,
http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_24.html

settaikkaran said...

//manjoorraja said...

ஒவ்வொரு முறையும் சந்திக்க வேண்டும் என திட்டமிட்டும் ஏதோ காரணங்களால் சந்திக்க முடியாமல் தவற விடும் நபர் இவர். விரைவில் சந்திக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.//

வாருங்கள் அண்ணே! பார்த்து ரொம்ப நாளாகி விட்டதே? நலமா? :-)

//அப்படியே ஏமாத்திகிட்டிருக்கும் உம்மையும்.//

உலகம் மிகவும் சிறியது என்று புரிந்து கொண்டுவிட்டேன். விரைவில் உங்களையும் சந்திப்பேன். மிக்க நன்றி!

settaikkaran said...

//பெயர் சொல்ல விருப்பமில்லை said...

அடப்பாவி சேட்டை, இன்னொரு முறை தூத்துக்குடி வரதா இருந்தா, சொல்லிட்டு வாப்பா, நான் அங்கேதான் இருக்கேன்!//

அதுக்கென்ன சொல்லிட்டாப் போச்சு! :-)

மிக்க நன்றி!

settaikkaran said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அட நான் கூட இப்போதான் Tutocourin மேக்ரூன் சாப்பிட்டேன்.. ஹிஹி//

எப்புடி? என்னோட இடுகை மாதிரியே இனிப்பா இருக்கா? ஹிஹிஹிஹி!
நன்றி! :-)

settaikkaran said...

//சி. கருணாகரசு said...

என்னது வெண்பா எழுதுரவரா இவர்... பார்த்தா என்கவுண்டர் செய்யுரவாட்டம் தெரியுயாரு?//

வெண்பா எழுதறவங்க மீசை வச்சுக்கப்படாதுன்னு சட்டம் இருக்குதுங்களா? :-)
கம்பர் படத்துலே மீசை பார்த்திருக்கமே? வள்ளுவரு தாடியே வச்சிருக்கிறாரே?
மிக்க நன்றி!

settaikkaran said...

//ராம்ஜி_யாஹூ said...

பகிர்விற்கு நன்றி! ஞானம் பேக்கரி மக்ரூவனும் சிறப்பு அல்லவா.//

ஆமாமா! நீங்களும் முத்துநகர்வாசியா? மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//எல் கே said...

கவிதை அரசரும், நகைச்சுவை மன்னரும் சந்தித்தீர்களா ?? அருமை//

முதல் பாதி ஓ.கே! இரண்டாம் பாதி...? மெய்யாலுமா? :-)
நன்றி கார்த்தி!

settaikkaran said...

//பாரத்... பாரதி... said...

தங்களின் நகைச்சுவை எழுத்துக்கள் மனதை இலேசாக்குகின்றன்..தேவன், கல்கி நடை.... அசத்தல்..//

ஆஹா! மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இவர்களின் புத்தகங்களை வாங்கிப் படிக்க வேண்டும். மிக்க நன்றி!
//துரை அய்யாவுக்கு எம் வந்தனங்கள்..//

மீண்டும் எனது நன்றிகள்!

settaikkaran said...

//KANA VARO said...

பகிர்வுக்கு நன்றி சேட்டை!//

மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//அன்புடன் மலிக்கா said...

சேட்டை சேட்டையோ சேட்டை..//

மிக்க நன்றிங்க! :-)

settaikkaran said...

//Chitra said...

.....சும்மாவே ஊரு நினைப்பில இருக்கேன். இப்போ, இதையெல்லாம் மிஸ் பண்ண வைத்து விட்டீர்களே!//

அடடா, நீங்களும் நம்ம பக்கம்தான்னு மறந்திட்டேனே! :-)
மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//Philosophy Prabhakaran said...

அப்படியே உங்க போட்டோவையும் போட்டிருக்கலாமே...//

அஸ்கு புஸ்கு! எல்லாரும் பின்னங்கால் பிடறிலே பட தலைதெறிக்க ஓடிருவாய்ங்க!

//பிரபா ஒயின்ஷாப் திறப்புவிழாவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்://

ஓ! வந்து போணியும் பண்ணிட்டேனே! மிக்க நன்றி ! :-)

settaikkaran said...

//மாத்தி யோசி said...

எந்திரன் என்பது ரஜினி நடித்த படமாகும்! இந்தியாவுக்கு பக்கத்தில ஸ்ரீலங்கா இருக்கு! பிரபுதேவாவுக்கும் நயன்தாராவுக்கும் இந்த வருஷம் கல்யாணம் நடக்குமா? எலெக்சன் நெருங்கி வர்றதால வெங்காயத்தின் விலை குறையலாம்.......!

என்ன சார் அப்படி பாக்குறீங்க? நீங்க தானே கமெண்டு போடுற பாக்சுல " இன்னா வேண்ணாலும் எளுதலாம் " அப்டீன்னு போட்டு இருக்கீங்க! அதான் நமக்கு தெரிஞ்சத கொஞ்சம் எடுத்துவிட்டேன்!//

யெப்பாடியோவ்! மாத்து மாத்துன்னு மாத்தி யோசிக்கிறீங்களே??? :-)

// என்னது சேட்டைக்காரன் கிட்டேயே சேட்டையா? )//

பண்ணலாம். இங்கிட்டு ஜனநாயகம் தான்! :-)

//பை த பை ' மாத்தி யோசி ' னு ஒரு கடைய வச்சு ஓட்டிக்கிட்டு இருக்கேன்! அதுல உங்க ப்ளாக்கோட பெயரை வச்சு ஒரு மேட்டர் போட்டு இருக்கேன்! ஒரு எட்டு வந்து பாத்திட்டு போங்க பாஸ்!//

பார்த்திட்டோமில்லே! கவுஜ சூப்பரில்லே...! மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//sakthistudycentre-கருன் said...

Nice, பகிர்விற்கு நன்றி..//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)