Saturday, January 22, 2011

குறட்டைச்சத்தம் கேக்கலியா?

பிரபல காது,மூக்கு,தொண்டை மருத்துவர் தொண்டைமானின் கிளீனிக்கில், நர்சரி ஸ்கூலில் குழந்தைக்கு அட்மிஷன் கேட்டு வந்த பெற்றோர்களைப் போல, நோயாளிகள் நீளமான வரிசையில் நின்றிருந்தனர். நல்ல வேளை, முன்கூட்டியே அப்பாயின்ட்மென்ட் வாங்கியிருந்ததால், சிறிது நேரத்திலேயே நாங்கள் உள்ளே...

"குட்மார்னிங் டாக்டர்!"

"குட்மார்னிங்! சொல்லுங்க, என்ன பிரச்சினை?"

"இவன் பேரு வைத்தி!"

"அதுதான் பிரச்சினையா? பேரை மாத்திருங்களேன்!"

"அதில்லை டாக்டர், ராத்திரியிலே ரொம்ப குறட்டை விடுறான். நேத்து இவன் விட்ட குறட்டைச் சத்தத்தைக் கேட்டு, ஊருக்குள்ளே புலி வந்திருச்சுன்னு யாரோ ஃபாரஸ்ட் டிபார்ட்மென்ட்டுக்கு போன் பண்ணிட்டாங்க!"

"அடடா! ஏன் மிஸ்டர் வைத்தி? எத்தனை நாளா இப்படிக் குறட்டை விடுறீங்கன்னு சொல்ல முடியுமா?"

"அவனைக்கேட்டா எப்படி? கூட இருக்கிற எங்களைக் கேளுங்க! எங்களுக்குத் தெரிஞ்சு ஏழெட்டு வருசமா இவன் குறட்டை விடுறான். சில சமயங்களிலே எங்க காதுலேயே டைரக்டா குறட்டை விடுறான் டாக்டர். எங்களாலே தூங்கவே முடியுறதில்லை!"

"இது சகஜம்தான்! ஆராய்ச்சிக்காரங்க என்ன சொல்லுறாங்கன்னா, ஒவ்வொரு மனிசனோட வாழ்க்கையிலும் அடுத்தவங்களோட குறட்டையைக் கேட்டே ரெண்டு வருசம் வீணாப்போகுதுன்னு..."

"ஐயையோ!"

"பதறாதீங்க! குறட்டை விடுறது ஒரு குறைபாடுதான்! அதுனாலே குறட்டை விடுறவங்களுக்கு எந்த ஆபத்துமில்லை!"

"நாசமாப் போச்சு! அவனுக்கு ஆபத்தில்லை! எங்க காது ஜவ்வு கிழிஞ்சிரும் போலிருக்கே டாக்டர்?"

"இங்க பாருங்க தம்பி, சர் வின்ஸ்டன் சர்ச்சில் தெரியுமா? அவரு ஓவரா குறட்டை விடுறாருன்னு அவரோட வேலை பார்த்த ஆளுங்க அதிகாரபூர்வமா புகார் தெரிவிச்சிருக்காங்க. அது மட்டுமா? பிரின்ஸ் சார்லஸ் குறட்டை சத்தம் தாங்காம லேடி டயானா நிறையவாட்டி ரூமை விட்டு வெளியே தலைதெறிக்க ஓடியிருக்காங்களாம்."

"ஏன் டாக்டர், பொம்பிளைங்க குறட்டை விட மாட்டாங்களா? ஒரே ஆம்பிளை பேரா சொல்றீங்க?"

"பொம்பிளைங்களும் குறட்டை விடுவாங்க. ஆனா, இந்த விஷயத்துலே பொம்பளைங்க எட்டடி பாய்ஞ்சா ஆம்பிளைங்க பதினாறடி பாய்வாங்க!"

"ஆனாலும் கடவுள் மனிசனுக்கு மட்டும் இந்த குறட்டையை வச்சுத் தொலைச்சிருக்க வேண்டாம்!"

"யாரு சொன்னாங்க? நாய், பூனையெல்லாம் கூட குறட்டை விடும்? வேண்ணா ஒருவாட்டி கவனிச்சுப் பாருங்க!"

"இவன் ஒருத்தன் குறட்டையைக் கவனிச்சே மாசத்துலே ரெண்டுநாள் ஸிக்-லீவ் போட வேண்டியிருக்கு. அது போதாதா? ஏன் டாக்டர், மனிசங்க ஏன் குறட்டை விடுறாங்க?"

"அதாவது சுவாசத்துவாரத்துலே ஏற்படுற அடைப்புக் காரணமாத்தான் குறட்டை விடுறாங்க! இதை அவங்களாலேயே கட்டுப்படுத்த முடியாது. ரொம்ப ஸிவியரான கேஸாயிருந்தா ஒரு ஆபரேஷன் பண்ணினாப் போதும்..."

"என்ன ஆபரேஷன் டாக்டர?"

"அதுக்குப் பேரு யுவுலோபலட்டோபாரிங்கோப்பிளாஸ்ட்டி."

"ரொம்ப பெரிய ஆபரேஷனோ? பெயரே இவ்வளவு நீளமாயிருக்கு? நீங்க சொல்லி முடிக்கிறதுக்குள்ளே எனக்கே குறட்டை வர்றா மாதிரி இருந்திச்சு!"

"அது நீங்க இல்லை! உங்க வைத்திதான் குறட்டை விட ஆரம்பிச்சிட்டாரு!"

"ஐயையோ, உட்கார்ந்து தூங்கும்போதும் குறட்டை வருமா டாக்டர்?"

"உறுதியா சொல்ல முடியாது. சில சமயம் குறட்டை வந்தாலும் வரலாம். வராமலும் போகலாம்."

"என்ன டாக்டர், நம்ம ரமணன் வானிலை அறிக்கை மாதிரி சொல்றீங்க?"

"இருங்க! ஹெட்-ஃபோனை மாட்டிக்கிட்டு கேட்கிறேன்."

"காது பத்திரம் டாக்டர்! இவனாலே சேலையூரிலே பாதிபேரு செவிடா அலையுறாங்க!"

"ம்ம்ம்ம்ம்! உங்க வைத்தி உண்மையிலேயே சூப்பராக் குறட்டை விடுறாரு! சபாஷ்! பலே!"

"என்னது, என்னவோ நாரத கான சபாவிலே நித்யஸ்ரீ மகாதேவன் கச்சேரி கேக்குறா மாதிரி சொல்றீங்க? முதல்லே இவனோட தனி ஆவர்த்தனத்தை நிறுத்துங்க டாக்டர்!"

"என்னோட இத்தனை வருஷ சர்வீஸ்லே இப்படியொரு கேஸை நான் பார்த்ததேயில்லை. இவரோட குறட்டை இவருக்கு நிறைய பேரும் புகழும் கொண்டுவரப்போகுது."

"எப்படி டாக்டர்? அடுத்த ஜனாதிபதியாகப்போறானா?"

"உங்க வைத்தியோட குறட்டை சாதாரணமான குறட்டையில்லை!"

"பின்னே என்ன மசாலா குறட்டையா?"

"அதாவது இந்த உலகத்துலேயே ரொம்ப சத்தமான குறட்டை யாருது தெரியுமா? இங்கிலாந்துக்காரர் மெல்வின் ஸ்விட்சர். இவர் சாதனை கின்னஸ் புஸ்தகத்துலே வந்திருக்குது. அவரோட குறட்டைச்சத்தம் 92 டெசிபல். அதுக்கடுத்தபடியா ஃபுட் பெளெண்டர், ஜேக் ஹாமர், செயின் ஸான்னு நிறைய பேரு இருக்காங்க! உங்க வைத்தி மனசு வைச்சா இவங்க ரிகார்டையெல்லாம் பிரேக் பண்ணிருவாரு!"

"பாவம், ரஞ்சி டீமுலே விளையாடி செஞ்சுரி செஞ்சுரியா அடிச்சு ரிக்கார்ட்-பிரேக் பண்ணனுமுன்னு ஆசைப்பட்டான். கடைசியிலே குறட்டை விட்டா சாதனை பண்ணனும்?"

"வருத்தப்படாதீங்க! இனிமேல் உங்க நண்பர் குறட்டை விட்டா அதை என்கரேஜ் பண்ணுங்க! இவரோட பேரு கின்னஸ் புத்தகத்துலே வந்தா அது பெருமையா இல்லையா?"

"சரி டாக்டர்!"

அன்று இரவில்...

"வைத்தி! வைத்திக்கண்ணு! இந்தாடா உனக்காகவே ஏலக்காய், கிராம்பு, பச்சைக்கற்பூரம் எல்லாம் போட்டு எருமைப்பால் கொண்டுவந்திருக்கேன். குடிச்சிட்டு நல்லா சத்தம்போட்டு குறட்டை விட்டு சமர்த்தாத் தூங்கணும். சரியா?"

"ஏண்டா உசிரை வாங்குறீங்க? முன்னெல்லாம் குறட்டை விட்டா, எழுப்பி அப்புவீங்க? திடீர்னு என்னடா ஆச்சு?"

"எல்லாம் காரணமாத்தான்!"

வைத்தி தூங்க ஆரம்பித்ததும், நானும் சுரேந்திரனும் பிளாஸ்க் நிறைய சுக்குக்காப்பியும், கையில் வாய்ஸ்-ரிகார்டருமாக தூங்காமல் கண்விழித்து படுக்கையருகில் அமர்ந்து, குறட்டையை பதிவு செய்து கொண்டிருந்தோம். அன்று முதல்.....

கின்னல் புத்தகத்தில் எங்கள் நண்பனின் பெயரைக் கொண்டுவருகிற எங்களது முயற்சி தொடர்கிறது. உங்களுக்கு விருப்பமிருந்தால் நீங்களும் இதற்கான பயிற்சியை மேற்கொள்ளலாம். ஆனால், பயிற்சி வீட்டோடு இருந்தால் நல்லது. பணியிடத்தில் பயிற்சி மேற்கொண்டால், விளைவு விபரீதமாகி விடலாம். கீழே இருக்கிற காணொளியில் நடப்பது போலே...!


25 comments:

பொன் மாலை பொழுது said...

// இவரோட குறட்டை இவருக்கு நிறைய பேரும் புகழும் கொண்டுவரப்போகுது.//

// எப்படி டாக்டர்? அடுத்த ஜனாதிபதியாகப்போறானா? //

ஹ ஹ ஹ ஹா ..................... இதெல்லாம் ரொம்பதா ஓவரு சேட்ட!
வீடியோ பிரமாதம். சேட்ட மாதிரி ஆளுங்க எல்லா இடத்திலும் இருப்பாங்க போல!

கோமதி அரசு said...

கின்னஸ் புத்தகத்தில் உங்கள் நண்பர் பெயர் இடம் பெற வாழ்த்துக்கள்.

புலிகுட்டி said...

குறட்டை விட்டா கின்னஸ்ல இடம் பிடிக்கலாம்.சுத்தி வளைச்சி சொன்னாலும் சூப்பரா சொல்லி இருக்கிங்க.

ப.கந்தசாமி said...

நான் சினிமாத் தியேட்டர்ல குறட்டை விட்டு போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் போனவனாக்கும். பார்க்க- என் அடுத்த பதிவை.

Speed Master said...

கின்னஸ் புத்தகத்தில் உங்கள் நண்பர் பெயர் இடம் பெற வாழ்த்துக்கள்.

ADHI VENKAT said...

உங்க நண்பர் இப்ப குறட்டையே விடுவது இல்லையா! :)

சேலம் தேவா said...

பரட்டை விடறியே குறட்டை.. ஹி.ஹி.. ரைமிங்கா சொல்லிப் பாத்தேன்.நல்லா இருக்குங்க சேட்டை..!!

Anonymous said...

நன்றி நண்பரே உங்கள் comment க்கு . இது சென்னை யை கேவலப்படுத்தும் விஷயமல்ல. சென்னை யை திருத்த நானும் சே குவேரா போல் போராளியல்ல. புதிதாக சென்னைக்கு வரும் இளவயது பசங்களுக்கு ஒரு விழிப்புணர்வு முயற்சி. இது கூட அநீதிக்கு எதிரான போராட்டமே. ஆனால் அமைதி யான முயற்சி. அவ்வளவே. இதன் மூலம் இருவர் எச்சரிக்கையானால் கூட எந்த பதிவிற்கு வெற்றியே.
இதன் மூலம் எனக்கு புது நண்பராக நீங்கள் கிடைத்தால் அது கூட வெற்றியே.
உங்கள் நண்பராக நான் ரெடி நீங்கள் ரெடியா. நான் உங்க follower பா.

பெசொவி said...

//"அதுக்குப் பேரு யுவுலோபலட்டோபாரிங்கோப்பிளாஸ்ட்டி."//

முழு பேரை கேக்கறதுக்குள்ள மூணு கொட்டாவி விட்டுட்டேன்
இந்தக் கொட்டாவி வராம இருக்கறதுக்கு ட்ரீட்மென்ட் ஏதாவது இருக்கா?
:)

Chitra said...

ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... குறட்டுறீங்க ... சாரி, கலக்குறீங்க..... ஹா,ஹா,ஹா...

settaikkaran said...

//கக்கு - மாணிக்கம் said...

ஹ ஹ ஹ ஹா ..................... இதெல்லாம் ரொம்பதா ஓவரு சேட்ட! வீடியோ பிரமாதம். சேட்ட மாதிரி ஆளுங்க எல்லா இடத்திலும் இருப்பாங்க போல!//

என்ன சொல்ல வர்றீங்க? நானும் அப்படி ஆபீஸ்லே தூங்குவேன்னா? இது அபாண்டம். அதெல்லாம் பண்ண மாட்டேன். அப்பாலே, எப்புடி வலைப்பதிவு எழுதுறதாம்...? :-))

நன்றி நண்பரே!

settaikkaran said...

//கோமதி அரசு said...

கின்னஸ் புத்தகத்தில் உங்கள் நண்பர் பெயர் இடம் பெற வாழ்த்துக்கள்.//

ஏகமனதாகப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப் பட்டு விடுவானோ வைத்தி? :-))

மிக்க நன்றி!

settaikkaran said...

//புலிகுட்டி said...

குறட்டை விட்டா கின்னஸ்ல இடம் பிடிக்கலாம்.சுத்தி வளைச்சி சொன்னாலும் சூப்பரா சொல்லி இருக்கிங்க.//

குறட்டை, கொட்டாவின்னு எல்லாத்துக்கும் கின்னஸ் ரிகார்டு இருக்குதாமில்லே?
மிக்க நன்றி நண்பரே! :-)

settaikkaran said...

//DrPKandaswamyPhD said...

நான் சினிமாத் தியேட்டர்ல குறட்டை விட்டு போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் போனவனாக்கும். பார்க்க- என் அடுத்த பதிவை.//

ஆஹா! சிங்கம் சிலிர்த்துக்கிட்டு எழுந்திரிச்சு போலிருக்கே! தூள் கிளப்புங்க ஐயா! வந்திருவோமில்லே? :-)
மிக்க நன்றி ஐயா!

settaikkaran said...

//Speed Master said...

கின்னஸ் புத்தகத்தில் உங்கள் நண்பர் பெயர் இடம் பெற வாழ்த்துக்கள்.//

என்ன எல்லாரும் இப்படியே சொல்றீங்க? ஒருத்தருக்கும் சாதனை படைக்கிற ஆசையே இல்லையா? :-)
மிக்க நன்றி நண்பரே!

settaikkaran said...

//கோவை2தில்லி said...

உங்க நண்பர் இப்ப குறட்டையே விடுவது இல்லையா! :)//

சரிதான், அவனது சாதனை முயற்சி ஆரவாரமாகத் தொடர்கிறது. :-))
மிக்க நன்றி!

settaikkaran said...

//சேலம் தேவா said...

பரட்டை விடறியே குறட்டை.. ஹி.ஹி.. ரைமிங்கா சொல்லிப் பாத்தேன்.நல்லா இருக்குங்க சேட்டை..!!//

ரைமிங் மட்டுமில்லே; உங்களுக்கு நல்ல டைமிங்கும் இருக்கு! :-))
மிக்க நன்றி நண்பரே!

settaikkaran said...

//செந்தில் குமார் said...

நன்றி நண்பரே உங்கள் comment க்கு . இது சென்னை யை கேவலப்படுத்தும் விஷயமல்ல. சென்னை யை திருத்த நானும் சே குவேரா போல் போராளியல்ல. புதிதாக சென்னைக்கு வரும் இளவயது பசங்களுக்கு ஒரு விழிப்புணர்வு முயற்சி. இது கூட அநீதிக்கு எதிரான போராட்டமே. ஆனால் அமைதி யான முயற்சி. அவ்வளவே. இதன் மூலம் இருவர் எச்சரிக்கையானால் கூட எந்த பதிவிற்கு வெற்றியே.//

நண்பரே, உங்கள் வலைப்பூவுக்கு மீண்டும் வருவேன். :-)
ஏதோ பேருந்தில் மணிபர்சைப் பறிகொடுத்தோம், செல்போனைப் பறிகொடுத்தோம்- போகிறது என்று காவல்துறைக்குப் போகாமல் விட்டு விட்டால்கூட பெரிதில்லை. ஆனால், உங்கள் இடுகையில் குறிப்பிடப்பட்ட சம்பவம் அதிர்ச்சி வரவழைப்பது. அதை அவசியம் நீங்கள் புகாராகத் தெரிவித்திருக்க வேண்டும். இன்று உங்களது நண்பர்; நாளை நீங்களோ நானாகவோ கூட இருக்கலாம் அல்லவா?

மேலும், இத்தனை வருட சென்னை வாழ்க்கையில் நடந்ததைக் காட்டிலும், எனக்கு கிருஷ்ணகிரி, கோவில்பட்டி, உடுமலைப்பேட்டை போன்ற ஊர்களில் மிக மிக கசப்பான சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அதை வைத்து நான் அந்தந்த ஊர்களைப் பற்றி ஒரு முன்முடிவுக்கு வர முடியாதல்லவா? அதைத் தான் குறிப்பிட விரும்பினேன்.

//இதன் மூலம் எனக்கு புது நண்பராக நீங்கள் கிடைத்தால் அது கூட வெற்றியே.//

நண்பரே! ஒரு இடுகையை வாசித்து விட்டு, இவருக்கு நமது கருத்தைத் தெரிவிக்கலாம் போலிருக்கிறதே என்ற உட்குரல் கேட்டாலொழிய நான் எழுதுவதில்லை. நீங்கள் எனது நண்பரே தான்; சந்தேகமேயில்லை! :-))

மிக்க நன்றி நண்பரே!

settaikkaran said...

//பெயர் சொல்ல விருப்பமில்லை said...

முழு பேரை கேக்கறதுக்குள்ள மூணு கொட்டாவி விட்டுட்டேன். இந்தக் கொட்டாவி வராம இருக்கறதுக்கு ட்ரீட்மென்ட் ஏதாவது இருக்கா? :)//

இந்தப் பெயரைக் கேட்டதனால் தான் இடுகையே எழுதத்தோன்றியது. :-)
இதில் அந்த அறுவை சிகிச்சையின் பெயரிலிருக்கிற இழையைச் சொடுக்குங்க! அதில் பல விபரங்கள் உள்ளன. மிக்க நன்றி நண்பரே!

settaikkaran said...

//Chitra said...

ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... குறட்டுறீங்க ... சாரி, கலக்குறீங்க..... ஹா,ஹா,ஹா...//

இருக்காதா பின்னே? தூக்கத்திலேயே எழுதின இடுகையாச்சே? :-)
மிக்க நன்றி!

சிநேகிதன் அக்பர் said...

//"என்ன டாக்டர், நம்ம ரமணன் வானிலை அறிக்கை மாதிரி சொல்றீங்க?" //

இதை படிச்ச உடனே சிரிப்பு வந்துடுச்சு :)

ஆனாலும் மனுசன் டெய்லி வந்து வானிலை அறிக்கை சொல்றதை பார்க்கும் போது. எனக்கு தோணும் இன்னுமா இந்த ஊர் நம்மள நம்புதுன்னு :)

குறட்டை பற்றிய விவரங்களோடு நகைச்சுவை கலந்து சொல்லிய விதம் சூப்பர் சேட்டை.

இந்த குறட்டை காரர்களோட எனக்கு நிறைய அனுபவம் இருக்கு. அவங்களால இடைஞ்சல் வேணாம்னு நினைச்சா அவங்களுக்கு அரை மணி நேரம் முன்னாடி தூங்குறது பெட்டர். :)

வெங்கட் நாகராஜ் said...

குறட்டை ஸ்பெஷல்!! குறட்டை சத்தம் தாங்காமல் விவாகரத்து வாங்கிக் கொண்டவர்கள் கூட இருப்பதாகப் படித்தது நினைவுக்கு வந்தது சேட்டை. என் அறை நண்பர் ஒருவர் குறட்டை விடும்போது ஏதோ ராக்கெட் கிளம்புவது போல சத்தம் வரும்! அதற்காகவே நான் வேறு அறைக்கு மாற்றிக் கொண்டு போயிருக்கேன்!!!

settaikkaran said...

//சிநேகிதன் அக்பர் said...

இதை படிச்ச உடனே சிரிப்பு வந்துடுச்சு :) ஆனாலும் மனுசன் டெய்லி வந்து வானிலை அறிக்கை சொல்றதை பார்க்கும் போது. எனக்கு தோணும் இன்னுமா இந்த ஊர் நம்மள நம்புதுன்னு :)//

பொதுவாகவே வானிலை அறிக்கை பற்றி ஓரிடத்திலாவது நையாண்டி செய்தேயாக வேண்டும் என்று எழுதப்படாத விதியொன்று இருக்கிறதாமே! :-)

//குறட்டை பற்றிய விவரங்களோடு நகைச்சுவை கலந்து சொல்லிய விதம் சூப்பர் சேட்டை.//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணே!

//இந்த குறட்டை காரர்களோட எனக்கு நிறைய அனுபவம் இருக்கு. அவங்களால இடைஞ்சல் வேணாம்னு நினைச்சா அவங்களுக்கு அரை மணி நேரம் முன்னாடி தூங்குறது பெட்டர். :)//

ஆமாமா..புகைபிடிப்பவர்களை விடவும், அவர்களுக்கு அருகில் இருப்பவர்களுக்குத் தானே பாதிப்பு அதிகமாம். இதுவும் அது போலத்தானே...! :-))

settaikkaran said...

//வெங்கட் நாகராஜ் said...

குறட்டை ஸ்பெஷல்!! குறட்டை சத்தம் தாங்காமல் விவாகரத்து வாங்கிக் கொண்டவர்கள் கூட இருப்பதாகப் படித்தது நினைவுக்கு வந்தது சேட்டை. என் அறை நண்பர் ஒருவர் குறட்டை விடும்போது ஏதோ ராக்கெட் கிளம்புவது போல சத்தம் வரும்! அதற்காகவே நான் வேறு அறைக்கு மாற்றிக் கொண்டு போயிருக்கேன்!!!//

ஆம் ஐயா! நானும் அது போன்ற பல தகவல்களை வாசித்தேன். ஆனால், இடுகையின் நீளம் கருதி எழுதவில்லை. குறட்டையினால் பல நண்பர்களோடு சண்டை போட்டிருக்கிறேன் நானும்...! :-)

மிக்க நன்றி ஐயா!

சமுத்ரா said...

அருமை..குறட்டை பற்றி அருமையான தகவல்களைச் சொன்னீர்கள்..நன்றி.:0