Thursday, January 20, 2011

உங்கள் விரலே உங்கள் கண்ணை....!

Your PC is watching you, 24X7

எனது இடுகைகளுக்காக பல செய்தித்தாள்களின் இணையதளங்களுக்கு செல்வது எனது வாடிக்கை. அப்படிச் சென்றபோது எனது கண்களில் பட்ட ஒரு செய்தியை வாசித்து அதிர்ந்து போய்விட்டேன். அதை உங்களிலும் பலர் வாசித்திருக்கலாம்; வாசிக்கும் வாய்ப்பில்லாதவர்களுக்காக, அந்த செய்தியின் சுட்டியை அளித்திருக்கிறேன். அத்துடன், செய்தியின் சுருக்கமான மொழிபெயர்ப்பையும்..........

"நிகேதா சிங் (பெயர் மாற்றம்) என்ற 26 வயதுப் பெண்மணிக்கு ஒரு நாள் அலுவலகத்தில் அதிர்ச்சியான செய்தி காத்திருந்தது. அவரது சக ஊழியர் ஒருவர், நிகேதா தனது வீட்டில் உடைமாற்றிக்கொண்டிருக்கிற வீடியோவை பல நண்பர்கள் இணையத்தில் பார்த்துத் தகவல் கூறியதாகத் தெரிவித்தார். உடனே, காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில், விசாரணையில் நிகேதாவின் வீட்டுக் கணினியில் இருந்த வெப்-கேமிராவில் அவரது தினசரி நடவடிக்கைகள் பதிவு செய்யப்படுவது தெரிய வந்தது. இதில் அதிர்ச்சிதருகிற தகவல் என்னவென்றால், கணினியை அணைத்து வைத்தபிறகும், வெப்-கேமிரா மட்டும் தனியே இயங்க வழி செய்கிற மென்பொருள் ஒன்றை நிகேதாவின் காதலனே நிறுவியிருக்கிறார் என்பதுதான். நிகேதாவின் படங்களைத் திருட்டுத்தனமாகப் படமெடுத்து, அதை இணையத்தில் வியாபாரம் செய்திருக்கிறார்."

இது எப்படி சாத்தியம் என்று புரியாதபோதிலும், இது போன்ற பல தில்லுமுல்லு மென்பொருட்கள், ஆபாசக் குறுந்தகடுகளுக்கு அடுத்தபடியாக சர்வசாதாரணமாக விற்பனை செய்யப்படுவதாகவும் அந்த செய்தி கூறுகிறது. இந்த மென்பொருட்கள் புது தில்லியின் மையத்தில் இருக்கிற பாலிகா பஜார் என்ற நவீன வணிக வளாகத்தில் சர்வசாதாரணமாகக் கிடைக்கிறது என்று வாசித்தபோது எனக்கு பெரிதாக ஆச்சரியம் ஏற்படவில்லை. 2008-ல் புது தில்லி சென்றிருந்தபோது ஆபாச குறுந்தகடுகள் வெளிப்படையாக அங்கு பாலிகா பஜாரிலும், கன்னாட் சர்க்கஸிலும் விற்பனை செய்யப்படுவதை என் கண்ணாலேயே பார்த்தேன். இதே போல, மும்பை லாமிங்டன் ரோட்டிலும், சென்னை பாரிமுனை, பர்மா பஜாரிலும் ஆபாச சிடிகள் விற்பனை செய்யப்படுவதை அனைவரும் அறிவர். (கேரளாவைப் பற்றி சொல்லவே வேண்டாம்!)

இது போன்ற மென்பொருட்களின் வளர்ச்சி எப்படியிருக்கிறது என்றால், கணினியே இல்லாமல் வீடியோக்களை இணையத்தில் பரவ விடுகிற அளவுக்கு முன்னேற்றம் (?) ஏற்பட்டிருக்கிறதாம். அந்தரங்கங்களைப் படமெடுத்து அம்பலத்தில் புழங்கவிடுகிற இது போன்ற மென்பொருட்களின் விலை வெறும் இருநூறு ரூபாயிலிருந்து அதிகபட்சம் ஐநூறு ரூபாய் தானாம். என்ன கொடுமை இது?

ஒன்றல்ல; இரண்டல்ல- இது போல பற்பல மென்பொருட்கள் கிடைப்பதால், அதை ஒரு கணினியில் நிறுவினால் போதுமாம். அதன் பிறகு, கணினியை முடக்கினாலும் வெப்-கேமிரா மட்டும் இயங்குவதோடு நடப்பதை பதிவும் செய்து விடுமாம். ஸ்பாம் மின்னஞ்சல்கள் மூலமாகவும் இத்தகைய மென்பொருட்கள் உங்களது கணினியில் தானே தரவிறக்கமாக வாய்ப்புகளும் உள்ளதாம். (கணினி குறித்து அறிந்தவர்கள் இதுபற்றி இன்னும் விரிவாக எழுதினால் நன்றியுடையவனாக இருப்பேன்)

செல்போன் கேமிராக்களின் மூலம், பெண்களை பொது இடங்களில் படம்பிடித்து இணையத்தில் பரவ விடுகிற வக்கிரப்புத்திக்காரர்கள் குறித்து நாம் அவ்வப்போது வாசித்துக்கொண்டு தானிருக்கிறோம்.

இன்டெர்நெட் மையங்களில், ரகசியக் கேமிராக்கள் பொருத்தப்பட்டு, அங்கு வருகிற பெண்கள் மற்றும் காதல்ஜோடிகளைப் படம் பிடித்து விற்பனை செய்கிற கூட்டத்தை சில மாதங்களுக்கு முன்னர் ஆந்திராவில் கைது செய்தார்கள். இது குறித்து இணையத்தில் எனக்குப் பரிச்சயமான சகோதரி ஒருவர், தனக்கு வந்த ஒரு மடலை எனக்கு எழுதி, அதை இடுகையாக எழுதும்படி கேட்டுக்கொண்டிருந்தார். அப்போது, நான் இணையத்தில் ஒரு தேவையில்லாத சர்ச்சையில் ஈடுபட்டு, ஒரு சிறிய இடைவேளை விட்ட நேரம். மேலும், இது போன்ற இடுகைகளை எழுதினால், ’அட, இப்படியும் கூட செய்யலாமா?’ என்று ஓரிருவர் கிளம்பினாலும் விபரீதமாகி விடுமே என்ற அச்சத்தில் எழுதாமல் இருந்தேன். இது குறித்து சில பெண் பதிவர்களிடம் ஆலோசனையும் கேட்டிருந்தேன். எங்கள் அனைவருக்குமே இது குறித்து எழுத மிகுந்த தயக்கமாக, இல்லை இல்லை, பயமாகவே இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆனால், இந்த செய்தியை நம் நட்புகளோடு பகிர்ந்து கொள்வது அவசியம் என்று பட்டதால், உடனே எழுதி விட்டேன். வீட்டில் கணினி, வெப்-கேமிரா வைத்திருப்பவர்கள் ஜாக்கிரதையாக இருங்கள்!

உங்கள் விரலே உங்கள் கண்ணைக் குத்தி விடப்போகிறது.

44 comments:

டக்கால்டி said...

நாம் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். விழிப்புணர்வு என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் தானாகவே உள்ளிருக்கும் ஒரு உந்துதல் உணர்வு...சில பேருக்கு சொல்லி புரிய வைக்கலாம்.சில பேர் அனுபவித்து தான் புரிந்து கொள்கிறார்கள்.

மதுரை சரவணன் said...

விஞ்ஞான வளர்ச்சி அழிவிற்கு என்பதில் மிகவும் வேதனைக்குரியதாகவே உள்ளது.. தங்கள் தாய் , தங்கைகளை நினைத்து பார்க்காதவர்கள் இவர்கள்... நடு ரோட்டில் நிற்கவைத்து சுட வேண்டும்.

Philosophy Prabhakaran said...

கவனமாக இருக்க வேண்டியது வெப் கேமராவிடம் அல்ல... காதலன்களிடமிருந்தும் தவறான காதலிலிருந்தும்... கூடவே வக்கிரமான ஆண்களிடம் இருந்தும்...

ப.கந்தசாமி said...

உபயோகமான தகவல்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ada paavikala. Ippadi koodavaa nadakuthu

சேலம் தேவா said...

தொழில்நுட்பம் வளரவளர இதுபோன்ற இம்சைகளையும் சந்திக்க வேண்டியிருக்கிறது..!!அவசியமான பதிவு..!!

மாணவன் said...

மிகவும் தெளிவா சொல்லியிருக்கீங்க..
முடிந்தவரை நாம்தான் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் குறிப்பாக பெண்கள் கவணமாக இருக்க வேண்டும்

இதுபோன்ற அறிவியலின் வளர்ச்சி ஒருபக்கம் வியக்க வைத்தாலும் அதை தவறான வழியில் பயன்படுத்தும் வக்கிரபுத்திக்காரர்களை என்ன செய்வது???

வேறொன்றும் சொல்வதற்கில்லை

விழிப்புணர்வு பகிர்வுக்கு நன்றி நண்பரே

பொன் மாலை பொழுது said...

தொழில் நுட்பம் என்பது தினமும் வளரத்தான் செய்யும். நாம்தான் நமது தேவை அறிந்து மட்டும் இவைகளை பயன்படுத்த வேண்டும். தாங்கள் மிகவும் அல்ட்ரா மாடர்ன் ஆக இருப்பதாக பிறருக்கு காட்டிகொள்ளும் இளம் ,படித்த பெண்கள் தான் இந்தவகை அவலங்களில் சிக்கிகொள்கிரார்கள். வசதி வாய்ப்புக்கள் கிடைப்பது பணத்தினால் ,இப்படி தேவை இல்லாமல் கண்ட வகைகளில் மாட்டிக்கொள்வது போதிய அறிவும் தெளிவும் இல்லாத புத்தியினால்.இதற்கு தொழில் நுட்பங்களை குற்றம் சொல்வானேன்?

settaikkaran said...

//டக்கால்டி said...

நாம் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். விழிப்புணர்வு என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் தானாகவே உள்ளிருக்கும் ஒரு உந்துதல் உணர்வு...சில பேருக்கு சொல்லி புரிய வைக்கலாம்.சில பேர் அனுபவித்து தான் புரிந்து கொள்கிறார்கள்.//

விழிப்புணர்வு தேவை என்பது உண்மைதான் நண்பரே! ஆனால், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்துவருகிற இந்தத் தொழில்நுட்பம் குறித்து உடனுக்குடன் அனைவரும் அறிந்து கொள்ளுவது நடைமுறையில் மிகவும் கடினமல்லவா? கணினியைப் பற்றி தெரிந்தவர்கள் மட்டும் தான் இணையம், வெப்-கேமிரா ஆகியவற்றைப் பயன்படுத்துகிறார்கள் என்று அறுதியிட்டுச் சொல்ல முடியாதே!

அனைவ்ரும் ஆபத்தைப் புரிந்து கொண்டால் சரிதான்! மிக்க நன்றி!

settaikkaran said...

//மதுரை சரவணன் said...

விஞ்ஞான வளர்ச்சி அழிவிற்கு என்பதில் மிகவும் வேதனைக்குரியதாகவே உள்ளது.. தங்கள் தாய் , தங்கைகளை நினைத்து பார்க்காதவர்கள் இவர்கள்... நடு ரோட்டில் நிற்கவைத்து சுட வேண்டும்.//

ம்..உணர்ச்சிவேகத்தில் இப்படித்தான் கூறத்தோன்றுகிறது. ஆனால், இது போன்ற செயல்களுக்கான தண்டனைகளை கடுமைப்படுத்துவதும், குற்றங்களை எளிதில் கண்டுபிடிக்க வழிவகை செய்வதுமே உடனடித்தேவைகள். மிக்க நன்றி!

settaikkaran said...

//Philosophy Prabhakaran said...

கவனமாக இருக்க வேண்டியது வெப் கேமராவிடம் அல்ல. காதலன்களிடமிருந்தும் தவறான காதலிலிருந்தும்... கூடவே வக்கிரமான ஆண்களிடம் இருந்தும்...//

பசுத்தோல் போர்த்திய புலிகளை அவ்வளவு எளிதில் அடையாளம் காண முடிவதில்லை என்பதே வேதனை. இது சாத்தியப்பட்டிருந்தால், எவ்வளவோ நன்றாக இருந்திருக்கும் என்பது உண்மைதான். மிக்க நன்றி!

settaikkaran said...

//DrPKandaswamyPhD said...

உபயோகமான தகவல்.//

மிக்க நன்றி ஐயா! :-)

settaikkaran said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ada paavikala. Ippadi koodavaa nadakuthu//

இப்படியும், இன்னும் இதற்கு மேலும்...! :-(

மிக்க நன்றி நண்பரே!

settaikkaran said...

//சேலம் தேவா said...

தொழில்நுட்பம் வளரவளர இதுபோன்ற இம்சைகளையும் சந்திக்க வேண்டியிருக்கிறது..!!அவசியமான பதிவு..!!//

ஆம். கூடவே இந்த மாயவலையில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது குறித்த சிந்தனைகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. மிக்க நன்றி!

settaikkaran said...

//மாணவன் said...

மிகவும் தெளிவா சொல்லியிருக்கீங்க..முடிந்தவரை நாம்தான் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் குறிப்பாக பெண்கள் கவணமாக இருக்க வேண்டும்.//

உண்மை. கணினி விற்பன்னர்களாயிருப்பவர்களுக்கே தண்ணி காட்டுகிற தொழில்நுட்பம் பற்றி கணினி குறித்த அடிப்படை ஞானம் மட்டுமே உள்ளவர்களுக்கு எப்படி விளங்க வைப்பது என்பதே சவாலாய் இருக்கும்.

//இதுபோன்ற அறிவியலின் வளர்ச்சி ஒருபக்கம் வியக்க வைத்தாலும் அதை தவறான வழியில் பயன்படுத்தும் வக்கிரபுத்திக்காரர்களை என்ன செய்வது???//

குற்றங்களைக் கண்டுபிடிக்கிற வழிகளை துரிதப்படுத்த வேண்டும். தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும்.

//விழிப்புணர்வு பகிர்வுக்கு நன்றி நண்பரே//

மிக்க நன்றி நண்பரே!

settaikkaran said...

//கக்கு - மாணிக்கம் said...

தொழில் நுட்பம் என்பது தினமும் வளரத்தான் செய்யும். நாம்தான் நமது தேவை அறிந்து மட்டும் இவைகளை பயன்படுத்த வேண்டும்.//

உண்மை நண்பரே! எனக்குத் தெரிந்தவர்கள் பலர் தங்கள் பிள்ளைகளை அயல்நாட்டுக்கு அனுப்பி விட்டு, தினமும் வெப்-கேமிராவில் பார்த்து மின்னரட்டை செய்பவர்கள். அவர்களுக்கு அது இன்றியமையாததாகி விட்டதே!

//தாங்கள் மிகவும் அல்ட்ரா மாடர்ன் ஆக இருப்பதாக பிறருக்கு காட்டிகொள்ளும் இளம் ,படித்த பெண்கள் தான் இந்தவகை அவலங்களில் சிக்கிகொள்கிரார்கள்.//

நண்பரே! என்னிடமும் கூட கணினி, இணையம், வெப்-கேமிரா அனைத்தும் உள்ளது. இது நவீனத்துவத்தின் அடையாளம் என்பதைக் காட்டிலும், நமது பணியை சுலபமாக்கும் கருவிகள் என்ற அளவில் தான் பலருக்கு இருக்கிறது என்று நம்புகிறேன்.

//வசதி வாய்ப்புக்கள் கிடைப்பது பணத்தினால் ,இப்படி தேவை இல்லாமல் கண்ட வகைகளில் மாட்டிக்கொள்வது போதிய அறிவும் தெளிவும் இல்லாத புத்தியினால்.//

இதுவும் பெரும்பாலும் உண்மைநிலையில்லை என்பதையே நான் ஏற்கனவே கூறியிருக்கிறேன். தொழில்நுட்பம் அவசியமே; அதன் தவறான பயன்பாடு குறித்த முன்ஜாக்கிரதை ஏற்பட வேண்டும். அவ்வளவே!

//இதற்கு தொழில் நுட்பங்களை குற்றம் சொல்வானேன்?//

பொதுப்படையாக, தொழில்நுட்பத்தைக் குற்றம் சொல்ல முடியாது. ஆனால், இந்த இடுகையில் குறிப்பிடப்பட்ட மென்பொருள்கள் தொழில்நுட்பத்தின் இருளான பக்கத்தை வெளிச்சம் போடுகிறது என்றே கருதுகிறேன். வைரஸ் மென்பொருட்களும் தொழில்நுட்பம் தான். அதற்காக, அவற்றை அங்கீகரிக்க முடியாதே!

மிக்க நன்றி நண்பரே!

Chitra said...

very nice post. கூடுமானவரை - கணினிகளை படுக்கை அறையில் வைப்பதை தவிர்க்கலாமே.

டக்கால்டி said...

விழிப்புணர்வு தேவை என்பது உண்மைதான் நண்பரே! ஆனால், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்துவருகிற இந்தத் தொழில்நுட்பம் குறித்து உடனுக்குடன் அனைவரும் அறிந்து கொள்ளுவது நடைமுறையில் மிகவும் கடினமல்லவா? கணினியைப் பற்றி தெரிந்தவர்கள் மட்டும் தான் இணையம், வெப்-கேமிரா ஆகியவற்றைப் பயன்படுத்துகிறார்கள் என்று அறுதியிட்டுச் சொல்ல முடியாதே! //

சரி தான் பாஸ், உடை மாற்றும் போதும், குளிக்கும் போதும், அந்தரங்கத்தின் போதும் ஆதாரத்துக்கு சேதாரம் ஆகாமல் பார்த்துக் கொள்வது இன்றைய காலத்தில் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் அத்தியாவசியமானதாகிறது!!!
வர வர ஆண்களின் கற்புக்கும் நாட்டில் பாதுகாப்பே இல்லாம போச்சுங்க!!!

settaikkaran said...

//டக்கால்டி said...

சரி தான் பாஸ், உடை மாற்றும் போதும், குளிக்கும் போதும், அந்தரங்கத்தின் போதும் ஆதாரத்துக்கு சேதாரம் ஆகாமல் பார்த்துக் கொள்வது இன்றைய காலத்தில் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் அத்தியாவசியமானதாகிறது!!!//

அறிந்தே வம்பை விலைக்கு வாங்கினால், அழிவுதான்! அதில் சந்தேகமேயில்லை!

//வர வர ஆண்களின் கற்புக்கும் நாட்டில் பாதுகாப்பே இல்லாம போச்சுங்க!!!//

கற்பு என்பது சுதந்திரம் மற்றும் கட்டுப்பாடு இவற்றின் சரிவிகிதமான கலவையாய்த் தானிருக்க வேண்டும். அது பெரிய சப்ஜெக்ட்டு நண்பரே! :-) ஆனால், பொதுவாக ஒரு பாதுகாப்பற்ற சூழல் இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளுகிறேன். மிக்க நன்றி நண்பரே!

settaikkaran said...

//Chitra said...

very nice post. கூடுமானவரை - கணினிகளை படுக்கை அறையில் வைப்பதை தவிர்க்கலாமே.//

கண்டிப்பாக! இது போன்ற முன்ஜாக்கிரதை நடவடிக்கைகள் ஒரு நல்ல துவக்கமாய்த்தான் இருக்கும். மிக்க நன்றி!

பெசொவி said...

Thanks for the awakening post!

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு. பல நேரங்களில் அறிவியல் வளர்ச்சி, மனிதனுக்கே பாதகங்களை ஏற்படுத்தும் விதமாக பயன்படுத்தப்படுகிறது. நாம்தான் முன்னெச்சரிக்கையுடன் செயல்படவேண்டும்.

settaikkaran said...

//பெயர் சொல்ல விருப்பமில்லை said...

Thanks for the awakening post!//

மிக்க நன்றி நண்பரே!

settaikkaran said...

//வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு. பல நேரங்களில் அறிவியல் வளர்ச்சி, மனிதனுக்கே பாதகங்களை ஏற்படுத்தும் விதமாக பயன்படுத்தப்படுகிறது. நாம்தான் முன்னெச்சரிக்கையுடன் செயல்படவேண்டும்.//

ஆம் ஐயா! அணுசக்தி பெரிய கண்டுபிடிப்பாக இருந்தாலும், அணுகுண்டு ஆபத்தை விளைவிப்பதைப் போன்றே, அறிவியல் வளர்ச்சி காரணமாக அழிவு சக்திகளும் மலிந்து விடுகிற அபாயம் இருக்கிறது.

மிக்க நன்றி ஐயா!

pudugaithendral said...

:(

settaikkaran said...

//புதுகைத் தென்றல் said...

:( //

மிக்க நன்றி!

Unknown said...

இந்த தகவல் எனக்கு புதிதாக உள்ளது, பகிர்வுக்கு நன்றி சார்

Unknown said...

இன்றைய காலகட்டத்தில் மிக அவசியமான பதிவு! எப்போதும், யாரிடமும் விழிப்பாக இருக்க வேண்டும் பெண்கள்!

settaikkaran said...

//ஜீ... said...

இன்றைய காலகட்டத்தில் மிக அவசியமான பதிவு! எப்போதும், யாரிடமும் விழிப்பாக இருக்க வேண்டும் பெண்கள்!//

நிச்சயமாக! இதே கருத்துள்ளவர்களை சந்திக்க முடிந்தது மகிழ்ச்சியளிக்கிறது. மிக்க நன்றி ஜீ!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பயன்படுத்திய பின் இணைப்பிலிருந்து அகற்றி வைப்பது எங்கள் வீட்டில் பழக்கம் இருக்கு.... நல்லதுக்குத்தான் போல..

Angel said...

good,useful, awareness post,thanks.

சி.பி.செந்தில்குமார் said...

அப்படிப்போடுங்க.. நீங்களும் கமெண்ட்ஸுக்கு ரிப்ளை பண்ண ஆரம்பிச்சது சந்தோஷம். அவசியமான விழிப்புணர்வுப்பதிவுதான்

Ponchandar said...

பாதிக்கப் படுவது பெண்களே ! ! அதுவும் வக்கிரம் பிடித்த ஆண்களால்...

settaikkaran said...

//இரவு வானம் said...

இந்த தகவல் எனக்கு புதிதாக உள்ளது, பகிர்வுக்கு நன்றி சார்//

எனக்கும் புதிதாகவும், புரியாமலும் இருந்தது நண்பரே! :-(
மிக்க நன்றி!

settaikkaran said...

//முத்துலெட்சுமி/muthuletchumi said...

பயன்படுத்திய பின் இணைப்பிலிருந்து அகற்றி வைப்பது எங்கள் வீட்டில் பழக்கம் இருக்கு.... நல்லதுக்குத்தான் போல..//

கண்டிப்பா! எந்தக் கணினியிலே எந்த மென்பொருள் ஒளிஞ்சுக்கிட்டிருக்கோ யாரு கண்டாங்க? மிக்க நன்றி!

settaikkaran said...

//angelin said...

good,useful, awareness post,thanks.//

மிக்க நன்றி!

settaikkaran said...

//சி.பி.செந்தில்குமார் said...

அப்படிப்போடுங்க.. நீங்களும் கமெண்ட்ஸுக்கு ரிப்ளை பண்ண ஆரம்பிச்சது சந்தோஷம். அவசியமான விழிப்புணர்வுப்பதிவுதான்//

இந்த மாற்றத்துக்கு நீங்க தான் தல காரணம்! உங்க இடுகையில் இதைச் சுட்டிக்காட்டி, எல்லாரையும் போல என்னையும் பதில் எழுத ஒரு உந்துதல் கொடுத்தது நீங்க தான்! மிக்க நன்றி!

settaikkaran said...

//Ponchandar said...

பாதிக்கப் படுவது பெண்களே ! ! அதுவும் வக்கிரம் பிடித்த ஆண்களால்...//

ஹும், இதுவும் உண்மைதான்; ஒப்புக்கொள்ளத்தான் சங்கடமாக இருக்கிறது. மிக்க நன்றி!

suneel krishnan said...

மிக முக்கியமான விஷயம் ,பகிர்ந்தமைக்கு நன்றி சேட்டை

கே. பி. ஜனா... said...

விழிப்புணர்வை ஏற்படுத்தும் பதிவு! நன்றி!

settaikkaran said...

//dr suneel krishnan said...

மிக முக்கியமான விஷயம் ,பகிர்ந்தமைக்கு நன்றி சேட்டை//

மிக்க நன்றி டாக்டர்!

settaikkaran said...

//கே. பி. ஜனா... said...

விழிப்புணர்வை ஏற்படுத்தும் பதிவு! நன்றி!//

மிக்க நன்றி!

senthu said...

Hi I am a IT person. I am working as a system administrator and security professional. As per your writing, it is not possible with just software. there may be a specialized Hardware. in this case that web camera it self have that capability.

settaikkaran said...

//Blogger senthu said...

Hi I am a IT person. I am working as a system administrator and security professional. As per your writing, it is not possible with just software. there may be a specialized Hardware. in this case that web camera it self have that capability.//

Mr Senthu,

I am not an IT person; just an undergraduate in Arts. I have just highlighted the problem that was published in a leading newspaper with the original link as well. I am alien to these technical nuiance and intricacies. Perhaps, you have a valid point! thank you very much.