Friday, January 14, 2011

காணாப் பொங்கல்!

அது ஒரு கனாக்காலம்!

பொங்கல் நெருங்க நெருங்க, தினசரி தபால்காரர் கொண்டுவரும் வண்ண வண்ண வாழ்த்துக்களை வாங்கி, அச்சிடப்பட்ட எழுத்துகளுக்குக் கீழே உருட்டி உருட்டியெழுதப்பட்டிருக்கிற வாசகங்களில், எழுதி அனுப்புபவர்களின் முகத்தைக் கற்பனையாய்த் தேடிப்பார்த்து ரசித்து, சில சமயங்களில் கண்ணோரங்களில் ஈரம் கோர்த்த காலம்.

ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாய், அனுப்புகிறவர்களின் அன்பின் அளபீடுகளாய், சில சமயங்களில் அவர்களது கையிருப்பை மறைமுகமாய் உணர்த்துகிற அடையாளச்சின்னங்களாய், வருடினால் அவர்கள் கையொப்பமிட்ட விரல்களின் ஸ்பரிசத்தை உணரவைத்த காலம்.

சில சமயங்களில் எவரது வாழ்த்துக்களையோ வாங்கியதும், மனதுக்குள் குற்ற உணர்ச்சி முள்ளாகித் தைத்ததுண்டு. அடடா, இவ்வாண்டு இவனுக்கோ அல்லது இவளுக்கோ வாழ்த்து அனுப்ப மறந்து விட்டோமே?

சில சமயங்களில் இந்த வாழ்த்துக்கள், இறுக்கமான உறவுகளின் புழுக்கத்தைத் தணிக்கிற இதமான காற்றாகவும், சில சமயங்களில் இவை காதல் கடிதங்களுக்கு ஒரு முன்னேற்பாடாகவும், சில சமயங்களில் மறைமுகமான மன்னிப்புக் கோரிக்கைகளாகவும், சில சமயங்களில் இவை புதைபட்டுக் கிடக்கிற கசப்பான அனுபவங்களை அகழ்ந்தெடுக்கிற ஆயுதங்களாகவும் இருந்ததுண்டு.

ஒவ்வொரு ஆண்டும், இன்னாருக்கெல்லாம் வாழ்த்து அனுப்ப வேண்டும் என்று திட்டமிடுவதும், ஆற அமர ஒரு பட்டியலிடுவதும், கடைத்தெருவில் தொங்குகிற வாழ்த்துக்களைக் காணும்போதெல்லாம் அந்தப் பட்டியலை மனக்கண்ணால் சரிபார்த்து, அதில் சில பெயர்களைக் கோர்த்தும் நீக்கியும், இறுதிப்பட்டியல் தயாராகும் வரையில் நாட்கணக்காக தயார்ப்படுத்திக் கொண்டேயிருந்ததுமுண்டு.

ஒவ்வொருவரது ரசனைகள், நம்பிக்கைகள், எதிர்பார்ப்புகள் ஆகியவற்றையும் மனதில்கொண்டுதான் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் வாழ்த்துகள் கொள்முதல் செய்யப்பட்டு வந்தன.

விரித்தால் மொட்டு மலர்வது போல விரியும் தாமரை போலிருக்கிற வாழ்த்துகள்...

ஓரங்களில் சரிகைத்தூள் ஒட்டிய வாழ்த்துகள்...

தெய்வங்கள், தலைவர்கள், நடிக நடிகையர், கேலிச்சித்திரங்கள், மிருகங்கள், பறவைகள், இயற்கைக்காட்சிகள் என்று ஒவ்வொருவருக்கென்றும் ஒவ்வொரு வாழ்த்து வாங்கிவந்து, இதற்கென்று நேரத்தை ஒதுக்கி ஒவ்வொருவருக்கும் தனித்தனியாய் இரண்டுவரிகளேனும் எழுதி அனுப்பியதுண்டு.

அதே போல,

வருகிற ஒவ்வொரு வாழ்த்தையும், கிளிஞ்சல்களைச் சேகரிக்கிற குழந்தையைப் போல பத்திரப்படுத்தி வைத்துக்கொள்வதும், இடம்பெயரும்போதெல்லாம் அவற்றைச் சுமையாகக் கருதாமல் உடனெடுத்துச் செல்வதும், எப்போதாகிலும் எவருடனேனும் கருத்து வேற்றுமை ஏற்படுகிறபோது, மூண்டெழுகிற சினத்தை அவர்கள் அனுப்பிய வாழ்த்துகளைக் கிழித்து வெளிப்படுத்துவதும்...இவையெல்லாமே அந்தக் கனாக்காலத்தோடு பின்னிப்பிணைந்த ஞாபகச்சித்திரங்களாய் இருந்து வந்திருக்கின்றன.

ஆனால், சேகரித்து வைத்த இந்த வாழ்த்துகளை ஒன்றாய்ப் பரப்பி அழகுபார்க்கையில், வாழ்க்கையில் எத்தனை நட்புகளை ஈட்டியிருக்கிறோம், எத்தனை இதயங்களிலிருந்து நமக்கென்று சில மணித்துளிகளை இரவல் வாங்கியிருக்கிறோம் என்றெல்லாம் வரவுசெலவுக்கணக்குப் போட்டு மலைத்துப்போகிறோமா இல்லையா?

இப்போதெல்லாம் பொங்கல் வாழ்த்துகள் ஏறக்குறைய வழக்கொழிந்து விட்டன. மின்னஞ்சல்களும், குறுஞ்செய்திகளும் இரண்டொரு வார்த்தைகளில் வாழ்த்துச் சொல்கிற சம்பிரதாயத்தை மிகவும் எளிதாக்கி விட்டு விடுகின்றன.

இப்போது கடைகடையாய் ஏறி வாழ்த்துகளைத் தேர்ந்தெடுத்து, வகைப்படுத்தி, கையொப்பமிட்டு, அஞ்சல்தலையொட்டி அனுப்புமளவுக்கு நேரமில்லாமல் போய்விட்டது. அப்படியெல்லாம் எப்போதோ இருந்திருக்கிறோம் என்பதற்கு அடையாளமாய், ஒவ்வொரு வீட்டிலும் ஏதோ ஒரு பழைய பெட்டியில், வந்து சேர்ந்த வாழ்த்துக்களெல்லாவற்றையும் ஒரு பைக்குள் திணித்து பத்திரமாய் வைத்திருக்கிறோம்.

அவைகள் அப்படியே இருக்கட்டும். இன்னும் நாம் அன்புகொடுத்து அன்புவாங்கி வாழ நினைக்கிறவர்கள் என்பதற்கு இருக்கிற ஆதாரங்கள் அவை.

அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்! :-)

39 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மிக அருமையான பதிவு சேட்டை..இப்பொழுது தான் அந்நினைவுகளை மனசில் ஓட்டிக்கொண்டிருந்தேன். அப்படியே இங்கே இருக்கின்றது.

\\சில சமயங்களில் எவரது வாழ்த்துக்களையோ வாங்கியதும், மனதுக்குள் குற்ற உணர்ச்சி முள்ளாகித் தைத்ததுண்டு. அடடா, இவ்வாண்டு இவனுக்கோ அல்லது இவளுக்கோ வாழ்த்து அனுப்ப மறந்து விட்டோமே?// அய்யோ அப்படியே..

நன்றி நன்றி..

பொன் மாலை பொழுது said...

என்ன பழைய நினைவுகளில் மூழ்கிவிடீர்களோ?
இவைகள் எல்லாம் பழங்கதைகளாய் போய்விட்டது சேட்டை. இப்போது யாருக்கு நேரமிருக்கு வாழ்த்துக்களை தபாலில் அனுபவும், பெறவும்.

இனிய பொங்கல் வாழ்த்துக்கள் சேட்டை

ஜெயந்த் கிருஷ்ணா said...

இனிய பொங்கல் வாழ்த்துக்கள் சேட்டை

சிநேகிதன் அக்பர் said...

நாம நல்லா வாழ்றதுக்காக கஷ்டப்பட்டு உழைக்கிறோம். ஆனா வாழத்தான் நேரம் இருக்க மாட்டேங்குது :)

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

ADHI VENKAT said...

வாழ்த்து அட்டைகளை பற்றி சொன்னது உண்மை தான். ஈமெயில், குறுஞ்செய்தி, போனில், இப்படித் தான் வாழ்த்துக் சொல்லிக் கொண்டிருக்கிறோம். இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

Sathish Kumar said...

//வாழ்க்கையில் எத்தனை நட்புகளை ஈட்டியிருக்கிறோம், எத்தனை இதயங்களிலிருந்து நமக்கென்று சில மணித்துளிகளை இரவல் வாங்கியிருக்கிறோம்//


அழகா சொல்லிட்டீங்க...!
இழந்த சுகங்களை நினைத்து ஏங்க வைக்கும் வைர வரிகள் பாஸ்...!

இங்கேயும் கொஞ்சம் வந்துட்டு போங்க...!
http://microscopicalview.blogspot.com/
http://vinmukil.blogspot.com/

சுபத்ரா said...

என்ன ஒரு அழகான கட்டுரை!

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்க்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் சேட்டை!

அன்புடன் நான் said...

வாழ்த்தட்டை அது ஒரு காலமுங்க..... படிக்கையில் நெருடலாவும் ஏக்கமாகவும் இருந்ததுங்க......

உங்களுக்கு என் பொங்கள் வாழ்த்துக்கள்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

உங்களுக்கு என்னுடைய இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

பிரபாகர் said...

இனிய பொங்கல் வாழ்த்துக்கள் நண்பா... விஞ்ஞான வளர்ச்சியினால் இழந்த ஏராளமான விஷயங்களுல் இதுவும் ஒன்று. நினைவுகளைப் புரட்டிப்போடும் இடுகை.

பிரபாகர்...

Philosophy Prabhakaran said...

இனிய பொங்கல் வாழ்த்துக்கள் அங்கிள்... அட்ரஸ் சொல்லுங்க... வாழ்த்து அட்டை அனுப்பி விடணும்...

மாணவன் said...

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

டக்கால்டி said...

நெகிழ்வான இடுகை பாஸ்... பழைய நினைவுகளை அசைபோட வைத்தது. அதே போல முகவரிக்கு வரும் தபால் அட்டைகளை எல்லாம் அம்மா பிறந்த வீடு சீதனத்துடன் சேகரிக்க, அதைத் திருட்டு தனமாக எடுத்து மடித்து ரயில் விட்ட ஞாபகம்...
ஞாபங்கள் மழையாகும்...ஞாபங்கள் குடையாகும்...

Philosophy Prabhakaran said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்...

என்னுடைய தளத்தில் கருத்துப் பொங்கல் வைத்திருக்கிறேன்... வந்து சுவைத்துப் பார்க்கவும்...
http://philosophyprabhakaran.blogspot.com/2011/01/blog-post_15.html

எல் கே said...

சேட்டை பழைய நினைவுகளை கிளறி விட்டீங்க. இனியப் பொங்கல் வாழ்த்துக்கள்

ஜெய்லானி said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.:-)

pudugaithendral said...

பசங்க கிட்ட நேத்துதான் கொசுவத்தி சுத்திகிட்டு இருந்தேன். ம்ம்ம் அது ஒரு காலம் தான். என்னைப்போலவே நீங்களும் இருந்திருக்கீங்க. பகிர்வுக்கு நன்றி

தக்குடு said...

Good one! உங்களுக்கு என்னுடைய இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்...:)

settaikkaran said...

//முத்துலெட்சுமி/muthuletchumi said...

மிக அருமையான பதிவு சேட்டை..இப்பொழுது தான் அந்நினைவுகளை மனசில் ஓட்டிக்கொண்டிருந்தேன். அப்படியே இங்கே இருக்கின்றது.//

மிக்க நன்றி! ஒவ்வொரு பண்டிகையின்போதும் பலருக்கு இதுபோன்ற மலரும் நினைவுகள் வந்தாலும் வரலாம் என்று கருதியே இதை எழுதினேன்.

//நன்றி நன்றி..//

நன்றி உங்களுக்குத்தான் சொல்ல வேண்டும்! நன்றி நன்றி!!

settaikkaran said...

//கக்கு - மாணிக்கம் said...

என்ன பழைய நினைவுகளில் மூழ்கிவிடீர்களோ?//

ஹிஹி! ஆமாம் நண்பரே!

//இவைகள் எல்லாம் பழங்கதைகளாய் போய்விட்டது சேட்டை. இப்போது யாருக்கு நேரமிருக்கு வாழ்த்துக்களை தபாலில் அனுபவும், பெறவும்.//

உண்மைதான். வேகமாகி விட்ட வாழ்க்கையில் பின்னுக்குத் தள்ளப்பட்ட சில வசந்தகாலச்சுவடுகளில் இவையும் அடக்கம் போலும்.

//இனிய பொங்கல் வாழ்த்துக்கள் சேட்டை//

மிக்க நன்றி! உங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்!

settaikkaran said...

வெறும்பய said...

//இனிய பொங்கல் வாழ்த்துக்கள் சேட்டை//

மிக்க நன்றி! உங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்!

settaikkaran said...

//சிநேகிதன் அக்பர் said...

நாம நல்லா வாழ்றதுக்காக கஷ்டப்பட்டு உழைக்கிறோம். ஆனா வாழத்தான் நேரம் இருக்க மாட்டேங்குது :)//

ஆமாங்கண்ணே! சின்னச் சின்ன சந்தோஷங்களைக் கூட சாக்குப் போக்குச் சொல்லி தள்ளிவிட்டு விடுகிறோம்.

//இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.//

மிக்க நன்றி! உங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்!

settaikkaran said...

//கோவை2தில்லி said...

வாழ்த்து அட்டைகளை பற்றி சொன்னது உண்மை தான். ஈமெயில், குறுஞ்செய்தி, போனில், இப்படித் தான் வாழ்த்துக் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.//

ஆமாம். நேரமும் வார்த்தைகளும் மிச்சப்படுகின்றன என்பது உண்மையே! ஆனாலும்....?

//இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.//

மிக்க நன்றி! உங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்!

settaikkaran said...

Sathish Kumar said...

//அழகா சொல்லிட்டீங்க...! இழந்த சுகங்களை நினைத்து ஏங்க வைக்கும் வைர வரிகள் பாஸ்...!//

மிக்க நன்றி நண்பரே!

//இங்கேயும் கொஞ்சம் வந்துட்டு போங்க...!
http://microscopicalview.blogspot.com/
http://vinmukil.blogspot.com/

அவசியம் வருகிறேன் நண்பரே! மிக்க நன்றி!

settaikkaran said...

//சுபத்ரா said...

என்ன ஒரு அழகான கட்டுரை!//

மிக்க நன்றி! :-)

//உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்க்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் சேட்டை!//

உங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்!

settaikkaran said...

சி. கருணாகரசு said...

//வாழ்த்தட்டை அது ஒரு காலமுங்க..... படிக்கையில் நெருடலாவும் ஏக்கமாகவும் இருந்ததுங்க......//

ம்...அந்தக் காலம் மறக்க முடியாததுதான்; அத்தனை காலமொன்றும் ஆகிவிடவில்லையென்றபோதிலும்...!

//உங்களுக்கு என் பொங்கள் வாழ்த்துக்கள்.//

மிக்க நன்றி! உங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்!

settaikkaran said...

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...

உங்களுக்கு என்னுடைய இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.//

மிக்க நன்றி! உங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்!

settaikkaran said...

//பிரபாகர் said...

இனிய பொங்கல் வாழ்த்துக்கள் நண்பா... விஞ்ஞான வளர்ச்சியினால் இழந்த ஏராளமான விஷயங்களுல் இதுவும் ஒன்று. நினைவுகளைப் புரட்டிப்போடும் இடுகை.//

அது சரிதான்! ஆனாலும் விஞ்ஞானம் இவ்வளவு வளர்ந்து, சில மனதுக்கு இதமான மகிழ்ச்சித்தருணங்களையும் கபளீகரம் செய்திருக்க வேண்டாமோ?

மிக்க நன்றி!

settaikkaran said...

Philosophy Prabhakaran said...

//இனிய பொங்கல் வாழ்த்துக்கள் அங்கிள்... அட்ரஸ் சொல்லுங்க... வாழ்த்து அட்டை அனுப்பி விடணும்...//

மிக்க நன்றி! உங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்!

அங்கிள் என்ற உள்குத்துக்கு தனி நன்றி! :-)

settaikkaran said...

//மாணவன் said...

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்//

மிக்க நன்றி! உங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்!

settaikkaran said...

//டக்கால்டி said...

நெகிழ்வான இடுகை பாஸ்... பழைய நினைவுகளை அசைபோட வைத்தது. அதே போல முகவரிக்கு வரும் தபால் அட்டைகளை எல்லாம் அம்மா பிறந்த வீடு சீதனத்துடன் சேகரிக்க, அதைத் திருட்டு தனமாக எடுத்து மடித்து ரயில் விட்ட ஞாபகம்...ஞாபங்கள் மழையாகும்...ஞாபங்கள் குடையாகும்...//

ஹும்! என்னிடமிருக்கிற பொங்கல் வாழ்த்துகளின் எண்ணிக்கையைச் சொல்வதைக் காட்டிலும், எடைபோட்டுப் பார்த்து விடலாம். அவை எனது பொக்கிஷங்கள்!

மிக்க நன்றி!

settaikkaran said...

//Philosophy Prabhakaran said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்...//

மிக்க நன்றி! உங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்!

//என்னுடைய தளத்தில் கருத்துப் பொங்கல் வைத்திருக்கிறேன்... வந்து சுவைத்துப் பார்க்கவும்...http://philosophyprabhakaran.blogspot.com/2011/01/blog-post_15.html//

வந்து பார்க்கிறேன் கண்டிப்பாய் நண்பரே! :-)

settaikkaran said...

//எல் கே said...

சேட்டை பழைய நினைவுகளை கிளறி விட்டீங்க. இனியப் பொங்கல் வாழ்த்துக்கள்//

மிக்க நன்றி! உங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்!

settaikkaran said...

//ஜெய்லானி said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.:-)//

மிக்க நன்றி! உங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்!

settaikkaran said...

//புதுகைத் தென்றல் said...

பசங்க கிட்ட நேத்துதான் கொசுவத்தி சுத்திகிட்டு இருந்தேன். ம்ம்ம் அது ஒரு காலம் தான். என்னைப்போலவே நீங்களும் இருந்திருக்கீங்க. பகிர்வுக்கு நன்றி//

ஆஹா! நிறைய பேர்களின் பழைய நினைவுகளைக் கிண்டிக்கிளறி விட்டிருக்கிறேன் போலிருக்கிறதே! மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//தக்குடு said...

Good one! உங்களுக்கு என்னுடைய இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்...:)//

மிக்க நன்றி! உங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்!

வெங்கட் நாகராஜ் said...

வாழ்த்து அட்டைகள் - நானும் நிறைய அனுப்பி இருக்கிறேன், நிறைய எனக்கும் வந்து இருக்கிறது. அவை என் பொக்கிஷங்களாக வைத்தும் இருக்கிறேன். இன்று வீடு சென்று எல்லாவற்றையும் ஒரு முறை எடுத்துப் பார்க்க வேண்டும் - பழைய நினைவுகளில் மூழ்க வேண்டும். நன்றி சேட்டைக்கார நண்பா!

உங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.

கோமதி அரசு said...

//அவைகள் அப்படியே இருக்கட்டும். இன்னும் நாம் அன்புகொடுத்து அன்புவாங்கி வாழ நினைக்கிறவர்கள் என்பதற்கு இருக்கிற ஆதாரங்கள் அவை.//

ஆமாம் சேட்டைக்காரன், ஒரு பெட்டியில் அன்பு நினைவுகளை சுமந்து கொண்டு இருக்கிறது. ஆதாரங்கள் அழிக்க மனமில்லை.

settaikkaran said...

//கோமதி அரசு said...

ஆமாம் சேட்டைக்காரன், ஒரு பெட்டியில் அன்பு நினைவுகளை சுமந்து கொண்டு இருக்கிறது. ஆதாரங்கள் அழிக்க மனமில்லை.//

மிக்க மகிழ்ச்சி! அவை நமது வாழ்க்கையின் ஆதாரங்களாயிற்றே! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)