Tuesday, January 4, 2011

வெள்ளைச்சட்டை

வெள்ளைச்சட்டை என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். சேலம், கோவை, திருப்பூர், ஈரோடு பகுதிகளில் சுற்றியபோது அங்கே தும்பைப்பூ போல வெள்ளைநிறத்தில் சட்டையும், விசிறிமடிப்புத் துண்டுமாக கண்ணில்பட்டவர்களையெல்லாம் பார்த்து சற்று பொறாமை கொண்டதுண்டு. என் ராசியோ என்னவோ, இதுவரையிலும், எந்த வெள்ளைச்சட்டையும் நிலைத்ததில்லை. எனவே இந்த தீபாவளிக்கு நான் வாங்கிய மினிஸ்டர் வொயிட் வெள்ளைச்சட்டையின் மீது எனக்கு ஒருவிதமான மையலே ஏற்பட்டிருந்தது.

நேற்று மாலை, எனக்குப் பரிச்சயமானவர் ஒருவரின் பேக்கரி திறப்புவிழா! பந்தாவாக வெள்ளைச்சட்டையணிந்து கொண்டு, பெரிய மனிதன்போலக் கிளம்பி முக்கிய சாலையைக் கடக்குமுன், வாகனங்களுக்கு வழிவிட்டுக் காத்திருந்தபோது, ’டமால்’ என்ற ஒரு சத்தம்!

திரும்பிப் பார்த்தபோது சாலையின் நடுவில், ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க நபர் விழுந்திருக்க, அவரது மோட்டார் சைக்கிள் அருகிலிருந்த தபால்பெட்டியின் மீது மோதி நின்றிருந்தது. இந்த மோதலில் சம்பந்தப்பட்ட ஒரு ஆட்டோ, முன்பக்கக் கண்ணாடி முக்காலும் உடைந்துபோய் நின்றிருக்க, ஒரு கணநேரத் தயக்கத்திற்குப் பின்னர், கீழே விழுந்த நபரைத்தூக்கி, சாலையோரத்தில் உட்கார வைக்க நானும் இன்னும் ஒருவருமாக உதவினோம். கண்ணிமைக்கும் நேரத்தில் கூட்டம் சேர்ந்து கொண்டது. படபடப்பு அடங்கி, அந்த நபர் சற்றே ஆசுவாசப்பட்டதும், தற்செயலாக எனது சட்டையைக் கவனித்தேன்! இடதுபக்கம் கைப்பகுதியிலும், சட்டைப்பையைச் சுற்றிலும் அந்த நபரின் தலையிலிருந்து வடிந்த இரத்தம் நனைத்திருந்தது.

"ஆஸ்பத்திரியெல்லாம் வேண்டாம்!" என்று எழுந்திருக்க முயன்றவரை நாங்கள் வற்புறுத்தினோம்.

"வெளையாடாதீங்க சார், தலையிலே அடிபட்டிருக்கு; இரத்தம் கொட்டுது!" என்று அவரிடம் எடுத்துச் சொல்லவும், மோதிய ஆட்டோவிலேயே அவரை உட்காரவைத்து அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம்.

ஆட்டோவிலிருந்து இறங்கியவர், தலையைப் பிடித்துக்கொண்டிருக்க, கைத்தாங்கலாக இருவர் பிடித்தபடி அவரை அவசரச்சிகிச்சைப் பிரிவுக்குச் செல்லும்போது, வரவேற்பரையில் ’அழகிய தமிழ்மகன்’ ஸ்ரேயாவைப் போல, அதிகப்படியான ஒப்பனையும், சீருடையுமாக நின்றிருந்த பெண் ஊழியரும் ஒரு நர்சும் ஒருவரையொருவர் அடித்து விளையாடிக் கொண்டிருந்தனர். அவசர சிகிச்சைப் பிரிவுக்குள்ளே நுழைந்தபோது, ’வனிதா’ படித்துக்கொண்டிருந்த ஒரு நர்ஸ் எழுந்து கொண்டாள்.

"என்ன சார் ஆச்சு?"

"வண்டியிலேருந்து கீழே விழுந்திட்டாரு!"

"படுக்க வையுங்க சார்,"என்று சொல்லிவிட்டு, கையிலிருந்த புத்தகத்தைக் கூட கீழே வைக்காமல் கதவருகே போய் நின்று, "எடீ ப்ரின்ஸீ! டியூட்டி டாக்டர் எவிடே போயி? கேஸ் வன்னிட்டுண்டே!" என்று அறிவித்தார். சிறிது நேரத்தில் ரிசப்ஷனில் சிரித்துப் பேசிக்கொண்டிருந்த அந்த பெண் ஊழியரும், நர்சும் வந்தனர்.

"சார், எமர்ஜென்ஸியிலே கூட்டம் போடாதீங்க சார்! அட்டெண்டர் தவிர மத்தவங்க வெளியிலே வாங்க!" முடுக்கிவிட்ட இயந்திரம்போல, அந்த பெண் ஊழியர் ஒப்பித்தார்.

"மேடம்! இவரு யாரு என்னான்னே தெரியாது. ரோட்டுலே அடிபட்டுக் கிடந்தாரு! கூட்டிக்கிட்டு வந்திருக்கோம்!" என்று நான் எரிச்சலோடு சொன்னேன்.

"மோனி, ஏ.ஓ.சாரினே ஒன்னு விளிக்கு....!"

ஒன்று..இரண்டு...என்று நிமிடங்கள் கடந்து கடந்து, பத்து நிமிடங்கள் வரையிலும் நாதியில்லை!

அடிபட்ட நபர் முனகிக்கொண்டிருக்க, வரவேற்பரை ஊழியர் அவரிடம் விபரங்களைக் கேட்டு, தன் கையிலிருந்த படிவத்தை நிரப்பிக்கொண்டிருந்தார். பிறகு, "யாராவது ஒருத்தர் ரிசப்ஷனுக்கு வாங்க சார், ரிஜிஸ்ட்ரேஷன் பண்ணனும்!" என்றார்.

"எக்ஸ்க்யூஸ் மீ!" என்று படுக்கையிலிருந்தவர் முனகினார். "என் பர்சை எடுத்துக்கோங்க சார்! அதுலே என் லைசன்ஸ், விசிட்டிங் கார்டு எல்லாமிருக்குது! வீட்டுக்குத் தகவல் சொல்லிடுங்க சார்!"

அவர் பெயரைச் சொல்லச் சொல்ல குறித்துக்கொண்டோம். ஒவ்வொருவருக்காக போன் செய்து தகவலளித்துக்கொண்டிருந்தபோது, ரிசப்ஸனிலிருந்து அந்தப் பெண் சைகை காட்டினாள்.

நானும் ஆட்டோக்காரரும் ரிசப்ஷனுக்குப் போனதும், "ஹண்ட்ரட் ருபீஸ் கொடுங்க சார்!" என்றாள் அந்தப் பெண். கையளவு அட்டையை கனகச்சிதமாக ஒரு பிளாஸ்டிக் உறையில் நுழைத்துக் கொடுத்தாள். அங்கிருந்து மீண்டும் அவசர சிகிச்சைப் பிரிவுக்குப்போனபோது, ஏறக்குறைய டாக்டர் மாதிரியே வெள்ளைக்கோட்டும், ஸ்டெதாஸ்கோப்புமாக ஒருவரும், சீருடையில் இரண்டு நர்சுகளும் இருந்தனர். யாரோ ஒருவர் அடிபட்ட தலையைப் பஞ்சு கொண்டு துடைத்துக்கொண்டிருந்தார்.

"ஹெட் இன்ஜூரி ஆயிருக்கு! கொஞ்சம் இன்வெஸ்டிகேஷன் பண்ணனும்!"

"சரி சார்!"

Blood Sugar, Urea, Creatinine, BT CT...என்று மளிகைக்கடை சாமான்கள் பட்டியல் போல நீளமாக எழுதிக்கொடுத்தார். "போய் கேஷ் கவுன்டரிலே பணம் கட்டிட்டு வந்து பில்லைக் காட்டுங்க!"

பணத்தைக் கட்டி பில்லைக் கொண்டுவந்து கொடுத்ததும், சிஸ்டர் பிரின்ஸி யாருக்கோ போன் செய்ய, துவைத்து ஒரு மாமாங்கமாயிருந்த ஒரு வெள்ளை அங்கியணிந்தவாறு, சவரம் செய்வதில்லை என்று சபதம் செய்தவர்போல ஒரு இளைஞர் வந்தார். படுத்திருந்தவரின் முழங்கையில் ஒரு நாடாவை இறுக்கி, ஊசியால் இரத்தம் உறிஞ்சினார். அவரை வாசல்வரைக்கும் வழியனுப்பப்போன பிரின்ஸி, திரும்பி வரும்போது சிரித்துக்கொண்டு வருவதை கவனித்தேன். இதற்கிடையில், அடிபட்டுக் கிடந்தவரின் மனைவியிடமிருந்து போன் வந்ததால், அவர் பேசி விட்டு ஆட்டோ டிரைவரிடம் கொடுத்தார்.

"எக்ஸ்க்யூஸ் மீ சார்!" என்று எங்களிடம் இன்னொரு காகிதம் நீட்டப்பட்டது.

"இவரோட காயத்தை சுத்தப்படுத்த உபயோகப்படுத்தின பஞ்சு, பேண்டேஜ் துணி, சொல்யூஷன் எல்லாத்தையும் நீங்க ரீப்ளேஸ் பண்ணனும் சார்," என்று விளக்கினார், தொந்தியும் தொப்பையுமாய் டை அணிந்து கொண்டிருந்த ஒருவர். அனேகமாக, ஏ.ஓவாக இருப்பார் போலும்!

என்னதான் அடுத்தவர் பணமென்றாலும், சங்கோஜமாக இருந்தது. மருந்துக்கடைக்குப்போனபோது, அம்மிக்கல்லுக்கு சுடிதார் போட்டதுபோலிருந்த ஒரு கண்ணாடிப்பெண்மணி, வாழைக்காய் பஜ்ஜி சாப்பிட்டுக்கொண்டிருந்தார். பக்கத்தில் டிஸ்போஸபிள் டம்ளரில் டீ! நூற்று அறுபது ரூபாயைப் பிடுங்கினார்கள். அதுவரை ஏறக்குறைய ஐந்நூறு ரூபாய் பணால்! அடுத்த செலவு வருமுன்னர், அடிபட்டவரின் குடும்பம் வந்தால் பரவாயில்லையே என்று கவலையாயிருந்தது. ஆனால், ஆஸ்பத்திரியில் விட்டால் தானே?

"இது ஆர்.டி.ஏ.கேசு சார்!"

"அப்படீன்னா...?"

"ரோட் டிராஃபிக் ஆக்ஸிடெண்ட் கேஸ்! போலீஸ் காரங்க விசாரிக்க வருவாங்க!"

"நாங்க தகவல் கொடுக்கலியே?"

"நாங்க கொடுத்திட்டோம் சார்! அப்புறம் எம்.எல்.ஸிக்குன்னு தனி சார்ஜ் இருக்கு!"

"எம்.எல்.ஸியா? அப்படீன்னா...?"

"மெடிக்கோ லீகல் கேஸ்! ஆகமொத்தம் எழுநூற்றி அம்பது ரூபாய்! போய் கேஷ் கவுன்டர்லே....."

கட்டித்தானே ஆகணும்? வேறே வழி?

சிறிது நேரத்தில் அடிபட்டவரின் மனைவி, மகள் இருவரும் வந்து ஆட்டோக்காரரோடு சண்டைபோட்டு ஓய்ந்தபின், அதுவரை செலவழித்த விபரங்களையும், பில்களையும் கொடுத்தோம். முதலில் நன்றி தெரிவித்தனர். பிறகு...

"எதுக்கு சார் இந்த ஆஸ்பிட்டலுக்குக் கொண்டு வந்தீங்க? அரைஞான் கயித்தைக் கூட பிடுங்கிருவானுங்களே?"

"எக்ஸ்க்யூஸ் மீ!"

டியூட்டி டாக்டரும் பிரின்ஸீயும் வந்தனர்.

"ப்ளீடிங் அரெஸ்ட் ஆயிடுச்சு! ஸ்வெல்லிங் இருக்கு! எதுக்கும் ஒரு பிரெயின் சி.டி.ஸ்கேன் எடுத்திடலாமா? ஓ.கேன்னா அவங்களே ஆம்புலன்ஸ் கொண்டுவந்து கூட்டிக்கிட்டுப்போயி, திரும்பி கொண்டுவந்து விட்டிருவாங்க!"

"ஒண்ணும் வேண்டாம்!" அடிபட்டவரின் மனைவி உறுமினார். "ரிட்டயராகிட்டு வீட்டுலே சும்மாயிருக்காம, சின்னப்பசங்களை மாதிரி என்ன மோட்டார் சைக்கிள் வேண்டிக்கிடக்குது? மேற்கொண்டு ஒண்ணும் பண்ண வேண்டாம். டிஸ்சார்ஜ் பண்ணிருங்க!"

"மேடம், அவருக்குத் தலையிலே அடிபட்டிருக்..."

"வீ ஆர் நாட் இன்ட்ரஸ்டட் இன் கன்டின்யூயிங் ஹியர்! டிஸ்சார்ஜ் பண்ணுங்க சார்!"

"ஓ.கே மேடம்! பிரின்ஸீ, ரிசப்ஷன்லே சொல்லி ஏ.எம்.ஏ-லே கையெழுத்து வாங்கிட்டு டிஸ்சார்ஜ் பண்ணிருங்க!"

ஏ.எம்.ஏ? Against Medical Advice!

இந்த மருத்துவமனை ஊழியர்களுக்கு, மரணம் என்றாலும், வலி என்றாலும் பார்த்துப்பார்த்து, சலித்து, அலுத்து, மரத்துப்போயிருக்குமோ?

"ஆட்டோக்காரரே, நான் கிளம்பறேன்! இனி அவங்க பார்த்துப்பாங்க," என்று சொல்லி விடைபெற்றுக்கொண்டு, அடிபட்டவரிடமும் சொல்லிக்கொண்டு வெளியே வந்தபோது, அவரது மனைவி ரிசப்ஷனில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது.

"எத்தனை பில் போடுவீங்க? இவ்வளவு பணம் கட்டியிருக்கு! இன்னும் டாக்டருக்கு, நர்சுக்கு, வார்டுபாய்க்குன்னு தனித்தனியா பில் போடுவீங்களா? இதென்ன ஆஸ்பத்திரியா கசாப்புக்கடையா?"

நாங்கள் உள்ளே நுழைந்தபோது சிரித்து விளையாடிக்கொண்டிருந்த அந்தப் பெண் ஊழியர் பதற்றத்தோடு அவர்களுக்கு சமாதானம் சொல்ல முயற்சித்துக்கொண்டிருந்தார். வெளியேறியபோது டியூட்டி டாக்டரும், பிரின்ஸீ சிஸ்டரும் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் நின்றபடி சிரித்துப் பேசிக்கொண்டிருந்தனர்.

இனியிரண்டு விதிகள் எனக்கு....

1. வெள்ளைச்சட்டை ஆசை வேண்டாம் இனி..

2. ரோட்டில் யாராவது அடிபட்டுக் கிடந்தால்........

30 comments:

பிரபாகர் said...

காப்பற்றத்தான் வேண்டும் நண்பா!... சென்னை போன்ற மாசு படிந்த சூழலில் வெள்ளை சட்டை தேவையில்லைதான்... 

ஆஸ்பத்திரிகளில் பகல் கொள்ளையாய்தான் இருக்கிறது...

பிரபாகர்...

Yoga.s.FR said...

மனிதாபிமான உதவியென்று வரும்போது கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்ய வேண்டும் தான்:ஆனாலும் பணம் பிடுங்கும் மருத்துவ மனைகள் தான் எங்குமே பல்கிப் பெருகியிருக்கின்றன!அரச மருத்துவ மனைகள் ஏறெடுத்தும் பார்ப்பதில்லையென்பது உண்மையே!அரசு தான் இவற்றை நிவர்த்தி செய்ய வேண்டும்!

பொன் மாலை பொழுது said...

அந்த ஆஸ்பத்திரியின் பெயரையும் இடத்தையும் சொல்லாமல் விட்டது தப்பு சேட்டை. வீண் வம்புக்காக இல்லை. இனி வேறு எவரும் அங்கு போய் அவஸ்தை பட வேண்டாம் அல்லவா.
உங்களின் இரண்டு விதிகளும் கூட நிலைக்காது. வெள்ளை சட்டையை விடுங்கள். ரோட்டில் அடிபட்டவருக்கு நம்மால் ஆனவற்றை செய்யவேண்டுவதே இயல்பு. இது chrome-extension://chiikmhgllekggjhdfjhajkfdkcngplp/arrows/dualdown/arrow_only_blue.pngஉங்களுக்கு தெரியும் சொல்லவேண்டுவதில்லை.

Philosophy Prabhakaran said...

// வரவேற்பரையில் ’அழகிய தமிழ்மகன்’ ஸ்ரேயாவைப் போல, அதிகப்படியான ஒப்பனையும், சீருடையுமாக நின்றிருந்த பெண் ஊழியரும் ஒரு நர்சும் ஒருவரையொருவர் அடித்து விளையாடிக் கொண்டிருந்தனர் //

அங்கேயுமா... வெளங்கிடும்...

//
2. ரோட்டில் யாராவது அடிபட்டுக் கிடந்தால்... //

இப்படித்தான் இருக்கு நம்ம நெலமை...

suneel krishnan said...

மனிதாபிமானத்தோடு சேர்த்தாலும் ,அவர்களின் வீட்டு ஆட்கள் வந்து சேரும் வரை டென்ஷன் தான் ..மருத்துவர்களில் சில பேருக்கு -உயிரிழப்புக்கள் பழகிய விஷயம் ,நமக்கு குடும்பத்தினரின் மறைவு -பேர் இடி ,துக்கம் ,மருத்துவர்களுக்கு -அது மற்றும் ஒரு சம்பவம் .நல்ல வேலை சேட்டை போலீஸ் வரல ,அவுங்க கிட்ட வேற ஏகப்பட்ட போர்மாளிட்டி ,நாம தான் இடிச்சொம்ன்க்ரா மாறி

sathishsangkavi.blogspot.com said...

இன்று நாம் ஒருவரை காப்பாற்றினால் தான் நாளை நம்மை யரோ ஒருவர் காப்பாற்றுவார். அடிபட்டு கிடப்பவர்களை காப்பாற்றும் போது நம் மனதிற்கு ஒரு திருப்தி ஏற்படும்...

மருத்துவமனைகளைப்பற்றி என்ன சொல்வது அவர்களைப் பொறுத்த வரை காசேதான் கடவுளடா...

அகல்விளக்கு said...

வெள்ளை சட்டை ஓக்கே...

ஆனால் மனிதாபிமானம்... ???!!!

:-)

வெங்கட் நாகராஜ் said...

எனக்கும் இது போன்ற அனுபவம் ஒன்று இருக்கிறது சேட்டை. ஏன் அடிபட்டவருக்கு உதவினோம் என்ற எண்ணம் வரும் அளவுக்கு படுத்தினர் ஒரு மருத்துவமனையில். அரசு மருத்துவமனை எனில் இன்னும் அதிகம் தொல்லை....

ஆனாலும் இது போன்ற விபத்துகள் நடக்கும்போது மனது பதறி, இப்பவும் அடிபட்டவருக்கு உதவி செய்யவே தோன்றுகிறது...

Anonymous said...

யோசிக்க வேண்டிய பதிவு தான்.
இந்த மாதிரி பிரச்சனைகளால் தான் மனிதர்களுக்குள் பரஸ்பரம் உதவிக்கென்று யாரும் முன்வருவதில்லை.

எஸ்.கே said...

சோகங்களை கூட நகைச்சுவையாக சொல்லுகிறீர்கள்! அருமை!

Chitra said...

அழுவதா? சிரிப்பதா? ம்ம்ம்......

சிநேகிதன் அக்பர் said...

அடுத்த முறையும் உதவுவீர்கள். ஏனெனில் இளகிய மனம் உள்ளவர்களே அதிகம் சங்கடங்களை சந்திக்கிறார்கள்.

அதை விட முக்கியமான விசயம். அவர்களுக்குத்தான் எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் சந்தோசமாக இருக்க தெரியும்.

சிலருக்கு சில செண்டிமென்ட் உங்களுக்கு வெள்ளை சட்டை :).

சேலம் தேவா said...

சட்டைய சட்டை பண்ணாதீங்க சேட்டை..!!மனசு வெள்ளையா இருந்தா போதும்..!!அடுத்த தடவையும் நீங்க உதவி செய்வீங்கன்னுதான் நினைக்கிறேன்..!! :-))

டக்கால்டி said...

உதவி செய்ய தயங்காமல் சட்டையை சட்டை செய்யாமல் கலக்கிட்டீங்க பாஸ்...

மீண்டும் இது போலொரு சம்பவம் நடந்தால், உதவி செய்யுங்கள். வாழ்த்துகள்!!!

நீங்க ரமணா விஜயகாந்த் ஆவீங்கனு பார்த்தா அடிபட்டவரோட அம்மணி தான் ரமணா ஆகி இருக்காங்க..

அந்த பெண்மணி மருத்துவமனையில் சொன்ன வார்த்தைகள் யதார்த்தம்...

தாராபுரத்தான் said...

மருத்துவ கொள்ளை கூடங்களை நினைத்தாலே பக்குங்குதுங்க.

settaikkaran said...

//பிரபாகர் said...

காப்பற்றத்தான் வேண்டும் நண்பா!... சென்னை போன்ற மாசு படிந்த சூழலில் வெள்ளை சட்டை தேவையில்லைதான்...//

உண்மை. இப்போது வெள்ளைச்சட்டையென்றால் அலர்ஜீ வரும்போலிருக்குது! :-(

//ஆஸ்பத்திரிகளில் பகல் கொள்ளையாய்தான் இருக்கிறது...//

என்னத்தைச் சொல்ல? மனிதன் என்ற நான்கெழுத்தை கேஸ் என்ற இரண்டெழுத்தாகப் பார்க்கிறார்களே நண்பரே?

கருத்துக்கு நன்றி!

settaikkaran said...

Yoga.s.FR said...

// மனிதாபிமான உதவியென்று வரும்போது கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்ய வேண்டும் தான்:ஆனாலும் பணம் பிடுங்கும் மருத்துவ மனைகள் தான் எங்குமே பல்கிப் பெருகியிருக்கின்றன!அரச மருத்துவ மனைகள் ஏறெடுத்தும் பார்ப்பதில்லையென்பது உண்மையே!அரசு தான் இவற்றை நிவர்த்தி செய்ய வேண்டும்!//

உண்மையில் மருத்துவமனையின் அலட்சியத்தைக் காட்டிலும், அடிபட்டவரின் மனைவியும் காசே குறியாகப் பேசியபோதுதான் உண்மையிலேயே மனிதாபிமானம் என்ற ஒன்று இருக்கிறதா இல்லையா என்ற கேள்வி எழுந்து, பிறகு அதுவே ’மனிதாபிமானம் தேவையா?’ என்று கேட்க வைத்தது.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

settaikkaran said...

கக்கு - மாணிக்கம் said...

//அந்த ஆஸ்பத்திரியின் பெயரையும் இடத்தையும் சொல்லாமல் விட்டது தப்பு சேட்டை. வீண் வம்புக்காக இல்லை. இனி வேறு எவரும் அங்கு போய் அவஸ்தை பட வேண்டாம் அல்லவா.//

நான் வெளியேறுகிற தறுவாயில் அடிபட்டவரின் மனைவி ’நுகர்வோர் நீதிமன்றம்,’ என்று எதையோ சொல்லிக்கொண்டிருந்தார். அதனால், முதலில் இதை எழுதுவதா வேண்டாமா என்றே நிரம்ப யோசித்தேன் நண்பரே!

//உங்களின் இரண்டு விதிகளும் கூட நிலைக்காது. வெள்ளை சட்டையை விடுங்கள். ரோட்டில் அடிபட்டவருக்கு நம்மால் ஆனவற்றை செய்யவேண்டுவதே இயல்பு. இது chrome-extension://chiikmhgllekggjhdfjhajkfdkcngplp/arrows/dualdown/arrow_only_blue.pngஉங்களுக்கு தெரியும் சொல்லவேண்டுவதில்லை.//

உண்மைதான்! அவரவர் இயல்பை அவ்வளவு எளிதாக மாற்றிக்கொள்ள இயலாதுதான். அன்றிருந்த மனநிலையில், அப்படி எழுதினேன் என்பதே உண்மை. நிறைய தெரிந்து வைத்திருக்கிறீர்கள் கக்கு மாணிக்கம்! நீங்களும் இது போன்ற நிகழ்வுகள் குறித்த உங்களது பார்வையை இடுகையாய் எழுதினால் பயனளிக்கும். கருத்துக்கு மிக்க நன்றி!

settaikkaran said...

//Philosophy Prabhakaran said...

\\//
2. ரோட்டில் யாராவது அடிபட்டுக் கிடந்தால்... //\\

//இப்படித்தான் இருக்கு நம்ம நெலமை...//

அப்படித்தான் தோணுது நண்பா! கருத்துக்கு மிக்க நன்றி!

settaikkaran said...

dr suneel krishnan said...

// மனிதாபிமானத்தோடு சேர்த்தாலும் ,அவர்களின் வீட்டு ஆட்கள் வந்து சேரும் வரை டென்ஷன் தான் ..மருத்துவர்களில் சில பேருக்கு -உயிரிழப்புக்கள் பழகிய விஷயம் ,நமக்கு குடும்பத்தினரின் மறைவு -பேர் இடி ,துக்கம் ,மருத்துவர்களுக்கு -அது மற்றும் ஒரு சம்பவம் .நல்ல வேலை சேட்டை போலீஸ் வரல ,அவுங்க கிட்ட வேற ஏகப்பட்ட போர்மாளிட்டி ,நாம தான் இடிச்சொம்ன்க்ரா மாறி//

நல்ல தனியார் மருத்துவமனைகளும் இருக்கத்தான் செய்கின்றன - விதிவிலக்குகளாய்! விபத்துக்களை அவர்கள் அணுகுகிற முறையைப் புரிந்து கொள்ள முடிந்தாலும், உயிரைக் காப்பாற்றுவதில் அசிரத்தையோ அன்றி பணத்தாசை ஒன்று மட்டுமே முன்னிலையிலோ இல்லாமல் இருத்தல் தானே விரும்பத்தக்கது?

கருத்துக்கு மிக்க நன்றி!

settaikkaran said...

சங்கவி said...

// இன்று நாம் ஒருவரை காப்பாற்றினால் தான் நாளை நம்மை யரோ ஒருவர் காப்பாற்றுவார். அடிபட்டு கிடப்பவர்களை காப்பாற்றும் போது நம் மனதிற்கு ஒரு திருப்தி ஏற்படும்...//

உண்மை. உயிர் போகிற அளவுக்கு அவருக்கு அடிபடவில்லை என்றாலும் கூட, காயமடைந்தவரை மருத்துவமனையில் சேர்க்க உதவியது திருப்திதான்.

//மருத்துவமனைகளைப்பற்றி என்ன சொல்வது அவர்களைப் பொறுத்த வரை காசேதான் கடவுளடா...//

கடவுள் ஏன் கல்லானார்? :-((

கருத்துக்கு மிக்க நன்றி!

settaikkaran said...

அகல்விளக்கு said...

//வெள்ளை சட்டை ஓக்கே...ஆனால் மனிதாபிமானம்... ???!!!//

அந்த நேரத்தில் மனிதாபிமானம் என்றெல்லாம் பெரிதாக எண்ணவில்லை நண்பரே! உடனடியாக அவருக்கு சிகிச்சை தேவை என்பது மட்டும் தான் தோன்றியது. ஆனால், தொடர்ந்த கசப்பான அனுபவங்கள் தான்.....!

கருத்துக்கு நன்றி!

settaikkaran said...

வெங்கட் நாகராஜ் said...

//எனக்கும் இது போன்ற அனுபவம் ஒன்று இருக்கிறது சேட்டை. ஏன் அடிபட்டவருக்கு உதவினோம் என்ற எண்ணம் வரும் அளவுக்கு படுத்தினர் ஒரு மருத்துவமனையில். அரசு மருத்துவமனை எனில் இன்னும் அதிகம் தொல்லை....//

இந்த இடுகையைப் பற்றி பல நண்பர்கள் என்னிடம் இதே போலச் சொன்னார்கள். எல்லாருக்கும் கசப்பான அனுபவங்கள் இருப்பது மலைப்பாகவும், அவநம்பிக்கை அளிப்பதாகவும் இருக்கிறது ஐயா!

//ஆனாலும் இது போன்ற விபத்துகள் நடக்கும்போது மனது பதறி, இப்பவும் அடிபட்டவருக்கு உதவி செய்யவே தோன்றுகிறது...//

இதுவும் உண்மையே! நாமெல்லாம் அப்படித்தான் போலிருக்கிறது. :-)

கருத்துக்கு நன்றி ஐயா!

settaikkaran said...

//இந்திரா said...

யோசிக்க வேண்டிய பதிவு தான்.இந்த மாதிரி பிரச்சனைகளால் தான் மனிதர்களுக்குள் பரஸ்பரம் உதவிக்கென்று யாரும் முன்வருவதில்லை.//

ஆமாம் என்று சொல்ல வேண்டிய துரதிர்ஷ்டவசமான நிலை! இது மாற என்ன நடக்க வேண்டும் என்பது புரியவில்லையே! கருத்துக்கு நன்றி!

settaikkaran said...

எஸ்.கே said...

//சோகங்களை கூட நகைச்சுவையாக சொல்லுகிறீர்கள்! அருமை!//

இது சோகம் என்பதை விட, ஒருவிதமான ஏமாற்றம் எனக் கொள்ளலாம். கருத்துக்கு நன்றி!

settaikkaran said...

Chitra said...

//அழுவதா? சிரிப்பதா? ம்ம்ம்......//

இந்தக் கேள்வி இன்னும் என்னைத் துரத்திக்கொண்டிருக்கிறதே! :-)

நன்றி!

settaikkaran said...

சிநேகிதன் அக்பர் said...

//அடுத்த முறையும் உதவுவீர்கள். ஏனெனில் இளகிய மனம் உள்ளவர்களே அதிகம் சங்கடங்களை சந்திக்கிறார்கள்.//

நீங்கள் சொல்வது நிசந்தான் அண்ணே! ஆனால், இப்படி ஏன் இருக்கிறது என்ற வினா மண்டையைக் குடைந்து கொண்டிருக்கிறது.

//அதை விட முக்கியமான விசயம். அவர்களுக்குத்தான் எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் சந்தோசமாக இருக்க தெரியும்.//

ஆஹா, அண்ணே! இதில்தான் நான் கொஞ்சம் ’வீக்’. கொஞ்சம் சொல்லிக்கொடுத்துத் தேற்றி விடுங்கண்ணே!

//சிலருக்கு சில செண்டிமென்ட் உங்களுக்கு வெள்ளை சட்டை :).//

செண்டிமென்ட் ஓவர்! :-)

கருத்துக்கு நன்றி!

settaikkaran said...

சேலம் தேவா said...

//சட்டைய சட்டை பண்ணாதீங்க சேட்டை..!!மனசு வெள்ளையா இருந்தா போதும்..!!அடுத்த தடவையும் நீங்க உதவி செய்வீங்கன்னுதான் நினைக்கிறேன்..!! :-))//

சட்டை போனதை விடவும், தொடர்ச்சியான அந்த நிகழ்வுகள் தான்....சரி, போகட்டும் விட்டு விடலாம். கருத்துக்கு நன்றி! :-)

settaikkaran said...

டக்கால்டி said...

//உதவி செய்ய தயங்காமல் சட்டையை சட்டை செய்யாமல் கலக்கிட்டீங்க பாஸ்... மீண்டும் இது போலொரு சம்பவம் நடந்தால், உதவி செய்யுங்கள். வாழ்த்துகள்!!!//

என்னுடன் இன்னொருவரும் இருந்தார். விபத்தில் தொடர்புடைய ஆட்டோக்காரரும் வந்தார்.

//நீங்க ரமணா விஜயகாந்த் ஆவீங்கனு பார்த்தா அடிபட்டவரோட அம்மணி தான் ரமணா ஆகி இருக்காங்க..//

இவ்வளவு தூரம் அவரை ஆஸ்பத்திரி வரைக்கும் அழைத்துக்கொண்டு போனதே எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. இதில் நானெங்கு விஜயகாந்த் ஆவது? :-))

//அந்த பெண்மணி மருத்துவமனையில் சொன்ன வார்த்தைகள் யதார்த்தம்...//

உண்மை. ஆனால், அவரும் என்னை அன்று ஏமாற்றி விட்டார். :-(

கருத்துக்கு நன்றி!

settaikkaran said...

தாராபுரத்தான் said...

//மருத்துவ கொள்ளை கூடங்களை நினைத்தாலே பக்குங்குதுங்க.//

விதிவிலக்காக நல்ல மருத்துவமனைகளும் உள்ளன ஐயா. ஆனால், அமையணுமே?

நீண்ட நாட்கள் கழித்து உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி ஐயா! மிக்க நன்றி!