Monday, November 29, 2010

எண்டே எடியூரப்பா....!


"சார், உங்களைப் பார்க்க ஒருத்தர் வந்திருக்காரு!" என்று காரியதரிசி கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவின் காதில் வந்து கிசுகிசுத்தார்.

"முடியவே முடியாது. நான் பதவி விலகவே முடியாது!" என்று இரைந்தார் எடியூரப்பா. "யார் வந்தாலும் இது தான் என் பதில்னு சொல்லி அனுப்பிடு போய்யா!"

"கோவிச்சுக்காதீங்க சார்! நீங்க பதவி விலக மாட்டீங்கன்னு தெரியும். அதுக்காக, வர்றவங்க போறவங்க கிட்டேயில்லாம் திருப்பித் திருப்பிச் சொல்லாதீங்க சார்! இன்னிக்குக் காலையிலே கூட ஒருத்தர்கிட்டே இப்படித்தான் கத்தினீங்க!"

"கத்தாம பின்னே என்னய்யா பண்ணச்சொல்றே? எல்லாப் பயபுள்ளையும் ஏன் இன்னும் ராஜினாமா பண்ணலேன்னு கேட்குறான்!"

"அதுக்காக பால்பாக்கெட் போடுறவன் கிட்டேயெல்லாமா கத்துவீங்க?"

"என்னது? பால்பாக்கெட் போட வந்தானா?" அதிர்ந்தார் எடியூரப்பா. "நான் பத்திரிகைக்காரன்னு நினைச்சு விரட்டிட்டேனே!"

"இப்படித்தான், பால்காரன், இஸ்திரிக்காரன், காய்கறிக்காரன்னு யார் வந்தாலும் கத்திக் கூச்சல்போட்டு விரட்டிடறீங்க சார்!"

"யோவ், முதல்லே அவங்களைக் கூப்பிட்டு சமாதானப்படுத்துய்யா. எனக்கோ நேரம் சரியில்லை. இப்பல்லாம் எனக்கு யார்தான் ஆப்பு வைக்கிறதுன்னு ஒரு வெவஸ்தையே இல்லாமப் போயிட்டிருக்கு!"

"அதை நான் கவனிச்சுக்குறேன்; முதல்லே ஆர்யான்னு ஒரு நடிகர் வந்திருக்காரு! உள்ளே அனுப்பட்டுங்களா?"

"சீக்கிரம் அனுப்புய்யா!"

அடுத்த நிமிடமே....

"சாமியே சரணம் ஐயப்பா! என் பேர் ஆர்யா!"

"சாமியே சரணம்! உட்காருங்க ஆர்யா! என்ன விஷயமா என்னைப் பார்க்க வந்திருக்கீங்க?"

"நீங்க ஒரு தமிழ்ப்படத்துலே நடிக்கிறதா கேள்விப்பட்டேன். அதுனாலே தான் உங்களுக்கு வாழ்த்துச் சொல்லிட்டுப் போகலாமுன்னு வந்தேன்."

"ஓஹோ, ரொம்ப சந்தோஷம்! நான் கேமிராவுக்கு முன்னாலே நடிக்கிறது இது தான் ஃபர்ஸ்ட் டைம். கேமரா இல்லாம சமீபத்துலே கூட தில்லிக்குப்போயி பட்டையைக் கிளப்பியிருந்தேனே! நிதின் கட்கரி, சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி எல்லாரும் அசந்து போயிட்டாங்க!" என்று பெருமிதத்தோடு தெரிவித்தார் எடியூரப்பா.

"நானும் பார்த்தேனே! அதுலேயும் நீங்க பேசின வீரவசனம் இருக்கே? பழசிராஜாவுலே மம்முக்கா கூட அவ்வளவு ஆக்ரோஷமாப் பேசலே! உங்களுக்குத் தமிழ் சினிமாவுலே ஒரு நல்ல எதிர்காலம் காத்திட்டிருக்கு சார்!"

"ஹிஹி! என்ன சாப்பிடறீங்க? காப்பி, டீ...?"

"கட்டஞ்சாயா!"

"என்னது?"

"ஓ சாரி சார், கட்டஞ்சாயான்னா ப்ளாக் டீன்னு அர்த்தம் சார்! நான் தமிழ்ப்படத்துலே நடிச்சாலும் கட்டஞ்சாயா தான் சாப்பிடுவேன். தினமும் ப்ரேக்-ஃபாஸ்ட் கப்பக்கிழங்குதான்! தமிழனையெல்லாம் பாண்டின்னு தான் செல்லமாக் கூப்பிடுவேன். ஆனா, திங்குற சாப்பாடுமட்டும் தமிழன் போடுற காசுதான்! கறக்குற மாட்டோட வாலை முறுக்கறதுன்னா எங்களுக்கு சக்கப்பிரதமன் சாப்பிடுறா மாதிரி!"

"நான் மட்டுமென்ன? கும்பிடறதெல்லாம் சிதம்பரம், ஸ்ரீரங்கம்னு எல்லாம் தமிழ்நாட்டு சாமியைத் தான். ஆனா, காவிரித்தண்ணி மட்டும் கொடுக்கவே மாட்டேனே?" என்று எடியூரப்பா வாய்விட்டு சிரித்தார்.

"எனக்கொரு குறை சார், ஆந்திராக்காரன் தமிழனை ’அரவாடு’ன்னு கூப்பிடுறான். நாங்க தமிழனை ’பாண்டி’ன்னு கூப்பிடுறோம். நீங்க மட்டும் தமிழனுக்கு கன்னடத்துலே ஒரு நல்ல பெயர் இன்னும் வைக்காம இருக்கீங்களே, அது ஏன் சார்?"

"பேரு வைக்காட்டி என்ன, வருசா வருசம் காவெரி டெல்டாவிலே இருக்கிற தமிழனோட அடிவயித்துலே கைவைக்கிறோம்; ஏதாவது மொரண்டு பண்ணினா இங்கிருக்கிற தமிழன் முதுகிலே மொத்து வைக்கிறோமில்லே? அது போதாதா?"

"சரியாச் சொன்னீங்க சார்! நீங்க நடிக்கிற தமிழ்ப்படத்துக்கு ’பூலோக ரட்சகன்,’ன்னு பேரு வச்சிருக்காங்க! பூமியைக் காப்பாற்றுகிறவன்னு அர்த்தமாகுது! பூமிக்கும் உங்களுக்கும் இருக்கிற சம்பந்தம்தான் எல்லாருக்கும் தெரியுமே? சூப்பர் டைட்டில் சார்!"

"தேங்க் யூ!"

"ஆனா, பாருங்க சார், இந்தப் படத்துக்கு வரிவிலக்கு தரமாட்டாங்க தமிழ்நாட்டுலே! அதுனாலே அதோட பெயரை ’ஐ’ன்னு வச்சிருங்க! சிக்கலிருக்காது!"

"இது ஏதோ காமெடிப்பட டைட்டில் மாதிரியிருக்குதே! நான் நடிக்கிறது ஐயப்பசாமி பக்திப்படமாச்சே! சாமியைக் கொச்சைப்படுத்துறா மாதிரி இருக்காதா?"

"அட நீங்க வேறே, தமிழ்நாட்டுலே நிறைய பேரு ஒவ்வொரு சீசன்லேயும் ஐயப்பசாமியை வச்சுக் காமெடிதான் பண்ணிட்டிருக்காங்க! அங்க சாமியைக் கிண்டல் பண்ணினா சீக்கிரம் பெரிய ஆளாயிரலாம். கிடைச்ச சான்ஸை கோட்டை விட்டிராதீங்க சார்!"

"நான் கூட தமிழ் சினிமான்னதும் என்னமோ ஏதோன்னு பயந்து போயிருந்தேன். இன்னும் கொஞ்சம் டிப்ஸ் கொடுங்க ஆர்யா!’

"சொல்றேன் கேளுங்க! சினிமாவுலே என்ன வேண்ணா வசனம் பேசலாம். ஆனா, வெளியிலே பேசும்போது கொஞ்சம் கவனமாப் பேசுங்க! இதை நானே இப்போ தான் புரிஞ்சுக்கிட்டிருக்கேன்."

"அடடா, என்னாச்சு?"

"அத ஏன் கேட்கறீங்க சார், தமிழனோட ரசனை சரியில்லேன்னு சொல்லிட்டேன். அதுக்குப் போயி பல்லடத்துலே செருப்பு மாலையெல்லாம் போட்டுட்டாங்க!"

"ஐயையோ!"

"பதறாதீங்க சார், செருப்பு மாலை என் போஸ்டருக்குத்தான். பாலாபிஷேகம்னாலும் சரி, செருப்புமாலைன்னாலும் சரி, அது போஸ்டருக்குத்தான்னு தமிழ்நாட்டுலே ரொம்பத் தெளிவாயிருக்காங்க!"

"கொஞ்சம் பயமாத்தானிருக்கு ஆர்யா!"

"இதுக்கெல்லாம் பயப்படலாமா? அடுத்தவாட்டி முதல்வருக்கு பாராட்டுவிழா நடக்கும்போது போய் ஒரு டான்ஸ் ஆடி, உடான்ஸ் விட்டா எல்லாம் சரியாயிடும்."

"அது எப்போ நடக்குமோ யார் கண்டாங்க?"

"அதுதான் அடிக்கடி நடக்குதே! மாசாமாசம் அமாவாசை வருதோ இல்லியோ, பாராட்டுவிழா கண்டிப்பா வந்தே தீரும். அந்த மாதிரி சீக்கிரமே ஒரு விழா வந்தா, என்னோட படமும் ரிலீஸ் ஆயிடும்."

"அட, தமிழ்நாட்டுலே அரசியல், சினிமா ரெண்டுமே படு ஈஸியா இருக்கும்போலிருக்குதே! இருந்தாலும், என்னோட முதல்படம்கிறதுனாலே நான் கொஞ்சம் அடக்கியே வாசிக்கிறேன்."

"கரெக்ட்! சினிமாவுலே வேண்ணா என்னத்தை வேண்ணா காட்டலாம். பொண்ணு பார்க்க வந்தவன் கிட்டே ஒருத்தி, தன்னை தோட்டக்காரன் உட்பட நாலஞ்சு பேரு கெடுத்திட்டாங்கன்னு சொன்னா அது காமெடி! ஒரு போலீஸ் ஸ்டேஷனிலே கள்ளப்புருசனும் கள்ளக்காதலியும், கூடவே இன்னும் மூணு கள்ளக்காதலங்களும் பஞ்சாயத்துக்கு வர்றா மாதிரி காட்டுனா அதுவும் காமெடி! கல்யாணமாகாத ஒருத்தன் ஒரு பொண்ணை பலவந்தம் பண்ணுறா மாதிரி காட்டுனா அதுவும் காமெடி! ஆனா, மேடையிலே மட்டும் பேசிட்டா, பொத்துக்கிட்டு வந்திரும். உடனே கொடும்பாவிதான்; செருப்புமாலைதான்!"

"அது சரி, உங்களுக்கு சங்கமெல்லாம் இருக்கே, அவங்கல்லாம் சப்போர்ட்டுக்கு வர மாட்டாங்களா?"

"அட நீங்க வேற, சங்கத்துலே பெரிய ஆளாயிருக்கிறவங்க வெவகாரமே சந்தி சிரிச்சிட்டிருக்கு. இதையெல்லாம் கவனிக்க நேரமில்லாம எல்லாரும் அவங்கவங்க கட்சிவேலையிலே மும்முரமாயிருக்காங்க! மிஞ்சி மிஞ்சிப்போனா ரெண்டு மூணு அறிக்கை வரும். அப்புறம் எல்லாரும் இளிச்சுக்கிட்டு போஸ் கொடுத்திட்டு போட்டோ எடுத்துப் போடுவாங்க! அவ்வளவு தான்!"

"அதுதானே பார்த்தேன். அப்போ, ஒண்ணும் வில்லங்கம் வராதுங்கறீங்க!"

"வரவே வராது. தமிழ்நாட்டுலே அரசியலும் சினிமாவும் ஒரே குட்டையிலே ஊறின மட்டைங்க! இதிலேருந்து அங்கே போனாலோ, அதிலிருந்து இங்கே வந்தாலோ பெரிய வித்தியாசம் ஒண்ணுமில்லே! அதுனாலே தைரியமா நடிங்க! யாரு கண்டா? உங்களை வச்சு தமிழ்நாட்டுலே பா.ஜ.க.வளர்ந்தாலும் வளர்ந்திரும்."

"அப்போ தமிழ்நாட்டுலேயும் எங்க கட்சி இருக்கா?"

"அட என்னங்க இது, அதுக்கு எவ்வளவு இடம் வேணும்? அதுவும் ஒரு மூலையிலே பிசுக்கு மாதிரி ஒட்டிக்கிட்டுதானிருக்கு! ஓ.கே.சார்! ஆல் தி பெஸ்ட்!"

"ரொம்ப நன்றி ஆர்யா! உங்க படம் ரிலீஸ் ஆனா, என்னையும் கூட்டிக்கிட்டுப் போங்க! அது சரி, ரிலீஸ் ஆகுமா?"

"ஆகாம என்ன, அது ஸ்ரேயா நடிச்ச படம், அத ரிலீஸ் பண்ணலேன்னா சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போறதா சேட்டைக்காரன்னு ஒருத்தர் அறிவிச்சிருக்காரு! கண்டிப்பா ரிலீஸ் ஆகும். வரட்டுமா, சாமி சரணம்!"

"சாமி சரணம்!"

5 comments:

பனித்துளி சங்கர் said...

வழமை போல் தினசெரி நிகழ்வுகளை நகைசுவையில் கலந்து அள்ளிக் கொடுத்திருக்கிங்க நண்பா அருமை . பகிர்வுக்கு நன்றி

Unknown said...

corract point

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

settai kalakal...

Desikadasan said...

//தமிழ்ப்படத்துலே நடிச்சாலும் கட்டஞ்சாயா தான் சாப்பிடுவேன். தினமும் ப்ரேக்-ஃபாஸ்ட் கப்பக்கிழங்குதான்! தமிழனையெல்லாம் பாண்டின்னு தான் செல்லமாக் கூப்பிடுவேன். ஆனா, திங்குற சாப்பாடுமட்டும் தமிழன் போடுற காசுதான்! கறக்குற மாட்டோட வாலை முறுக்கறதுன்னா எங்களுக்கு சக்கப்பிரதமன் சாப்பிடுறா மாதிரி!"

"நான் மட்டுமென்ன? கும்பிடறதெல்லாம் சிதம்பரம், ஸ்ரீரங்கம்னு எல்லாம் தமிழ்நாட்டு சாமியைத் தான். ஆனா, காவிரித்தண்ணி மட்டும் கொடுக்கவே மாட்டேனே?"//

True. :(

Amudhavan said...

என்ன சேட்டைக்காரன், கர்நாடகத்தைப் பற்றிய இந்தத் தகவல் உங்களுக்கு இன்னமுமா எட்டாமல் இருக்கிறது? கர்நாடகத்தில் தமிழர்களைக் 'கொங்கரு' என்றுதான் அழைப்பார்கள். இன்னும் கொஞ்சம் பேர் 'காட்பாடி' என்றழைப்பார்கள். அதுவும் கொங்கரு என்பதை ஏதோ ஒரு கெட்டவார்த்தைப் போல உச்சரிப்பதில் சிலருக்கு அவ்வளவு திருப்தி......