Tuesday, November 16, 2010

தோம் தாத்தா!

"சித்ரகுப்தா! அனேகமாக நாம் இந்தியாவை நெருங்கிக் கொண்டிருக்கிறோம் என்று நினைக்கிறேன்,’ முகத்தைச் சுளித்தபடியே கூறினார் எமதர்மராஜன்.

"எப்படி சொல்கிறீர்கள் பிரபோ?" வினவினார் சித்ரகுப்தன்.

"கப்பு தாங்கமுடியலேடா சாமீ!"

"பிரபோ! தங்களுக்கு விஷயம் தெரியாதா? இந்தியாவில் அறுபது கோடி மக்களுக்கு கழிப்பறை வசதிகள் கிடையாது என்று சென்ற ஆண்டு ஐ.நா.சபை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதே!

"ஆகாயமார்க்கமாக வரும்போதே கவனித்தேன். அதனால் தான் மக்கள் சாலையோரங்களிலும், ரயில்வே தண்டவாளங்களருகிலும் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்களா? நம் நரகத்தை விட இது மோசமாக இருக்கும் போலிருக்கிறதே சீனா கூனா?"

"பிரபோ! இது குறித்து பேசுவதால் முகம் சுளிக்க மாட்டீர்கள் என்றால் ஒரு தகவல் சொல்கிறேன். சரியான கழிப்பறை வசதிகள் இல்லாத பல பகுதிகளில் பெண்களும், குழந்தைகளும் இருட்டில் தங்களது இயற்கை உபாதைகளைக் கழிக்கச் செல்லும்போது திருடர்கள், சமூக விரோதிகள் போன்றோரிடம் அகப்பட்டு வருகிறார்களாம்."

"அது மட்டுமல்ல சீனா தானா! சுகாதாரமற்ற சூழலில் இருப்பதால் தினமும் ஐந்து வயதுக்குட்பட்ட ஆயிரம் குழந்தைகள் வயிற்றுப்போக்கு போன்ற நோய்களினால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கிறார்களாமே! அதனால் தான் மேலோகத்தில் எப்போதும் இந்தியர்களின் பெரும்பான்மையே அதிகமாக இருக்கிறது."

"என்ன கொடுமை பிரபோ? ஒரு பக்கம் இந்தியாவுக்கு வருகை புரிந்த அமெரிக்க ஜனாதிபதி ’இந்தியா எழுச்சி பெற்ற நாடு’ என்று சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். இங்கோ கோடானுகோடி மக்களுக்கு காலையில் ’இருக்கவே’ இடமில்லை போலிருக்கிறதே?"

"சரி சரி, இங்கு வந்த முகூர்த்தமோ அல்லது இதைப் பற்றியே பேசிக்கொண்டிருந்ததாலோ, எனக்கும் உடனடியாக கழிப்பறைக்குப் போக வேண்டும் போலிருக்கிறது சித்ரகுப்தா!"

"அதோ பாருங்கள் பிரபோ! நவீன இலவசக் கழிப்பறை!"

எமதர்மராஜனும், சித்ரகுப்தனும் தங்களது இயற்கை உபாதைகளை முடித்து விட்டு வெளியேறியபோது வாசலில் இருந்த அந்த ஆசாமி, ’தலைக்கு ரெண்டு ரூபா கொடு!" என்றார்.

"என்னது? வெளியே இலவசம் என்று தானே போட்டிருக்கிறீர்கள்?" என்று குழப்பத்தோடு கேட்டார் எமதர்மராஜன்.

"யோவ்! இலவசமா கொடுக்க இது என்ன கலர் டிவியா? கேஸ் அடுப்பா? காசைக் கொடுத்திட்டுப் போவியா, சட்டம் பேசிட்டிருக்கே...?"

"இது அநியாயம்,’ என்று பொருமினார் சித்ரகுப்தன். "வெளியே இலவசம் என்று சொல்லி உள்ளே காசு வசூல் செய்கிறீர்களே?"

"என்ன அநியாயத்தைக் கண்டுட்டே? நம்ம நாட்டைக் கூடத்தான் ஜனநாயக நாடுன்னு சொல்லுறாங்க! உள்ளே அப்படியா இருக்கு? இந்த மூத்திர செட்டுக்கு லட்ச ரூபாய் கொடுத்து குத்தகைக்கு எடுத்திருக்கேன் தெரியுமா? மாசா மாசம் போலீஸ், கார்பரேஷன், ஹெல்த் இன்ஸ்பெக்டருன்னு மாமூல் வெட்டினாத் தான் பொழைப்பு நடத்த முடியும். சும்மா பேசாதே நைனா...நாலு ரூபாயைக் கொடுத்திட்டுப் போ!"

"நரனே, இவர் யார் தெரியுமா? எமதர்மராஜன்! பாசக்கயிற்றை வீசி உன் உயிரைப் பறித்து விடுவார் ஜாக்கிரதை!" என்று சித்ரகுப்தன் எச்சரித்ததும் அந்த ஆசாமி முதல் முறையாக இருவரையும் ஏறிட்டுப் பார்த்து விட்டு சற்றே கலக்கமடைந்தான்.

"கோச்சுக்காதே வாத்யாரே! அசப்புலே கவுண்டமணி-செந்தில் மாதிரி இருந்தீங்களா, அதான் உங்க கிட்டே காசு வாங்குனாத் தப்புல்லேன்னு கேட்டுட்டேன். நீ போ வாத்யாரே, காசெல்லாம் வேண்டாம்!"

"என்ன கொடுமை சித்ரகுப்தா? இந்தியாவை வளர்ச்சி பெற்ற நாடு என்கிறார்கள். இப்படி அடிப்படை வசதிகளுக்குக் கூட பொதுமக்களை அல்லல்படுத்திக் கொண்டிருக்கிறார்களே? அப்புறம் எப்படி வெளிநாட்டிலிருந்து வருகிற சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை உயரும்? சும்மாவா இன்னும் பல நாடுகள் இந்தியாவை சுகாதாரமற்ற நாடு என்று கேலி பேசுகிறார்கள்?"

"பிரபோ! பொதுமக்கள் இது குறித்துப் பேசவோ குரல் எழுப்பவோ சங்கோஜப்படுகிறார்கள். இதுவே திருமணமில்லாமல் சேர்ந்து வாழ்வது பற்றியோ அல்லது ஓரினச்சேர்க்கை பற்றியோ இருந்தால் மணிக்கணக்கில் பேசுவார்கள்; எழுதுவார்கள்; வழக்குப் போடுவார்கள்; தொலைக்காட்சியில் பேட்டியளிப்பார்கள். ஆனால், ஒரு சாதாரண மனிதனின் அன்றாடத்தேவையோடு சம்பந்தப்பட்ட இது பற்றி யாரும் வாய்திறந்து பேசுவதை அநாகரீகம் என்று எண்ணுகிறார்கள்." என்று விசனப்பட்டார் சித்ரகுப்தன்.

"அட மாங்காய் மடையர்களா? ஒரு மனிதன் படுக்கையறைக்குப் போகிறானோ இல்லையோ, கழிவறைக்குக் கண்டிப்பாகப் போகத்தானே வேண்டும்?" என்று பொரிந்தார் எமதர்மராஜன்.

"இவர்களுக்கு ஹரியானா மாநிலம் எவ்வளவோ தேவலாம் பிரபோ! அங்கே மணமகனின் வீட்டில் கழிப்பறை இல்லையென்றால் பெண் கொடுப்பதில்லை என்று ஒரு விழிப்புணர்ச்சிப் பிரசாரம் நடந்து வருகிறது!NO TOILET: NO BRIDE" என்று தகவலளித்தார் சித்ரகுப்தன்.

"பலே பலே! பொதுவாக ஆண்கள் பெண்களிடம் வரதட்சணை கேட்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஹரியானாவில் பெண்கள் ஆண்களிடம் போறதட்சணை கேட்கிறார்களா?" என்று வாய்விட்டு சிரித்தார் எமதர்மராஜன்.

"சரியாகச் சொன்னீர்கள் பிரபோ!"

"சீனா கூனா! இந்தியாவில் கைபேசியிருக்கிற பலருக்குக் கழிப்பறை வசதியில்லை என்று கூட ஐ.நா.சபை ஒரு முறை சொல்லியிருக்கிறது. தெரியுமா?" என்று தலையிலடித்துக் கொண்டார் எமதர்மராஜன்.

"பிரபோ! இதனால் இதுபோன்ற சூழலில் வசிப்பவர்கள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. காற்று, நீர் என்று அசுத்தம் எங்கெல்லாமோ பரவி அதன் காரணமாக பெரும்பாலான இந்தியர்கள் இளவயதிலேயே பலவிதமான நோய்களால் பாதிக்கப்பட்டு அவர்களது ஆயுள் குறைந்து வருகிறது!"

"உண்மைதான் சீனா தானா! அந்தக் காலத்துப் பெரியவர்கள் தொண்ணூறு வயதுவரையிலும் கூட மிகவும் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். அதன் ரகசியம் என்ன என்று தெரியுமா?"

"என்ன பிரபோ?" சித்ரகுப்தன் ஆர்வத்தோடு கேட்டார்.

"நாளைக்கு இரண்டு; வாரத்துக்கு இரண்டு; மாதத்துக்கு இரண்டு; ஆண்டுக்கு இரண்டு."

நாளைக்கு இரண்டு முறை உடலிலிருக்கிற கழிவை அப்புறப்படுத்துவது...
வாரத்துக்கு இரண்டு முறை எண்ணை தேய்த்துக் குளிப்பது.
மாதத்துக்கு இரண்டு முறைதான் தாம்பத்திய உறவு.
வருடத்துக்கு இரண்டு முறை விளக்கெண்ணையை உட்கொண்டு குடலைச் சுத்தம் செய்து கொள்வது!

இவற்றில் முதலும் கடைசியுமாய் இருப்பவை, ஏறக்குறைய ஒன்றுதான்! மனிதனின் உடலில் சேருகிற கழிவை அகற்றுவது, ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு மிக முக்கியமானது என்பது தான் அது! ஆனால், பணக்காரர்கள் மென்மேலும் பணக்காரர்களாகி, ஏழைகள் மென்மேலும் ஏழைகளாகிக்கொண்டிருக்கிறார்கள். அதனால், சுகாதாரமற்ற சூழலில் வசிக்கிற மக்கள் அடிப்படை வசதிகளும் இல்லாமல் இருப்பதும் இந்தியாவின் முன்னேற்றத்துக்கு மிகப்பெரிய தடைக்கல் தான்! இதைப் புரிந்து கொள்ள வேண்டியவர்கள் விரைவில் புரிந்து கொண்டால் நாட்டுக்கு நல்லது. இல்லாவிட்டால், பச்சிளம் குழந்தைகள் வயிற்றுப்போக்கு போன்ற நோய்களுக்கு லட்சக்கணக்கில் இரையாவதைக் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர வேறு வழியில்லை!"

"பிரபோ! இதற்காகத் தான் உலகெங்கும் நவம்பர் 19-ம் தேதி ’உலகக் கழிப்பறை தினம்(WORLD TOILET DAY),’ என்று கருதப்படுகிறது. மனிதனின் இந்த அத்தியாவசியத் தேவையை வலியுறுத்தி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. சங்கோஜம் பார்க்காமல் இந்தியர்களும் இந்த நாளைக் கவனத்தில் கொண்டு, அவரவர்களால் இயன்ற அளவு விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கலாம்."

"சீனா கூனா! நம்மாளுங்க காதலர் தினம் தான் கொண்டாடுவாங்க! கழிப்பறை தினம் கொண்டாடுவாங்களா?"

"என்ன செய்வது பிரபோ? இந்தத் தலைமுறை கழிப்பறை தினம் குறித்து அறிந்து, உரியதைச் செய்யாவிட்டால், அடுத்த தலைமுறை ’கல்லறை தினம்’ நிறைய கொண்டாட வேண்டி வரும்."

"தோம் தாத்தா...!"

ஒரு வேண்டுகோள்: முதலில், இதை ஒரு தொடர்பதிவாக்கலாம் என்று எண்ணியிருந்தேன். இதை வாசிக்கிறவர்கள் அனைவரும் இந்த முக்கியமான விஷயம் குறித்து இடுகைகள் எழுதி இயன்றவரை விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த உதவுமாறு இப்போது உங்கள் அனைவரிடமும் கோரிக்கை வைக்கிறேன். நன்றி!

29 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்ல பதிவு சேட்டை..

உண்மையில் வீட்டுவேலைக்கு வருகின்ற பெண்களுக்கு அந்த வீட்டில் இயற்கை உபாதையைப்போக்கிக்கொள்ள அனுமதிப்பல்லை...கடைகண்ணிகள் கட்டிவிட்டிருப்பார்கள் மொத்தம் 20 க்டை இருக்கும் ஒரே ஒரு கழிப்பறை அதும் கூட பூட்டுப் போட்டிருக்கும்.. இப்படி தொடர்ந்து 10 மணிநேரத்திற்கும் மேலாக உழைக்கின்றவர்களுக்கு கூட அந்த வசதியை செய்து தருவதை யோசிக்கமாட்டார்கள்.

பனித்துளி சங்கர் said...

///////////பிரபோ! தங்களுக்கு விஷயம் தெரியாதா? இந்தியாவில் அறுபது கோடி மக்களுக்கு கழிப்பறை வசதிகள் கிடையாது என்று சென்ற ஆண்டு ஐ.நா.சபை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதே!

"ஆகாயமார்க்கமாக வரும்போதே கவனித்தேன். அதனால் தான் மக்கள் சாலையோரங்களிலும், ரயில்வே தண்டவாளங்களருகிலும் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்களா? நம் நரகத்தை விட இது மோசமாக இருக்கும் போலிருக்கிறதே சீனா கூனா?"/////////



அசத்தல் நண்பரே . இந்த பதிவை வாசித்து விட்டு சிரிப்பதை விட அதிகம் சிந்திக்க வைத்திருக்கிறீர்கள் .அடிப்படை வசதிகளே இல்லாத நமது தேசம் பற்றி என்னும்பொழுது வேதனைப்பட வேண்டியதாகத்தான் இருக்கிறது . பகிர்வுக்கு நன்றி தல

பொன் மாலை பொழுது said...

இங்கு எல்லாமே டூ லேட் வகைதான். நம் மக்களுக்கு உணரவில்லை என்றால் யாரை சொல்லி என்ன?
வீட்டு, கட்டிட உரிமையாளர்கள் இந்த விஷயத்தில் சற்று நியாயமான முறையில் செயல்படவேண்டும். நாலு அடிக்கு நாலு என்ற சிறு அளவில் கூட இடம் ஒதுக்க அவர்கள் தயார் இல்லை என்பது கேவலம்.
அவசியமான ஒரு கருத்துக்கோவை.
--

Yoga.s.FR said...

Good post!!!!!!!!

சாந்தி மாரியப்பன் said...

நல்ல பதிவு சேட்டை..

துளசி கோபால் said...

good post.

செல்லு இல்லாதவன் புல்லுன்ற பழமொழிக்கேற்ப எல்லோர் கையிலும் செல்லு.

அதுலே பேசிக்கிட்டே கண்ட இடத்தில் 'இறக்கி' வச்சுட்டுப் போறாங்க.

சுத்தமான நாடு இல்லை என்று வெளிநாட்டுக்காரன் சொன்னால் மட்டும்...பத்திக்கிட்டு வருது .

சேலம் தேவா said...

சிரிப்போட கூடிய சிந்திக்கவைக்கும் பதிவு..!!

தனி காட்டு ராஜா said...

//இதை வாசிக்கிறவர்கள் அனைவரும் இந்த முக்கியமான விஷயம் குறித்து இடுகைகள் எழுதி இயன்றவரை விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த உதவுமாறு இப்போது உங்கள் அனைவரிடமும் கோரிக்கை வைக்கிறேன்.//

இடுகை எழுதுனா விழிப்புணர்ச்சி வந்துருமா ?

பெசொவி said...

//"பிரபோ! பொதுமக்கள் இது குறித்துப் பேசவோ குரல் எழுப்பவோ சங்கோஜப்படுகிறார்கள். இதுவே திருமணமில்லாமல் சேர்ந்து வாழ்வது பற்றியோ அல்லது ஓரினச்சேர்க்கை பற்றியோ இருந்தால் மணிக்கணக்கில் பேசுவார்கள்; எழுதுவார்கள்; வழக்குப் போடுவார்கள்; தொலைக்காட்சியில் பேட்டியளிப்பார்கள். ஆனால், ஒரு சாதாரண மனிதனின் அன்றாடத்தேவையோடு சம்பந்தப்பட்ட இது பற்றி யாரும் வாய்திறந்து பேசுவதை அநாகரீகம் என்று எண்ணுகிறார்கள்."//

Well Said!

venkat said...

//"என்ன செய்வது பிரபோ? இந்தத் தலைமுறை கழிப்பறை தினம் குறித்து அறிந்து, உரியதைச் செய்யாவிட்டால், அடுத்த தலைமுறை ’கல்லறை தினம்’ நிறைய கொண்டாட வேண்டி வரும்."\\

நச்சின்னு இருக்கு உரைக்கட்டும்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

தேவையான பதிவு நண்பா.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பதிவு சேட்டை. இங்கே இப்போது கழிப்பறை கம் காஃபி ஹவுஸ் என்ற பெயரில் கூத்தடித்துக் கொண்டு இருக்கிறது தில்லி அரசாங்கம். வெட்கம்.

vasu balaji said...

good one chettai:)

ஹேமா said...

இந்தப் பதிவு சேட்டையாக இல்லை.அக்கறையோடு எழுதியிருக்கிறீர்கள் !

Philosophy Prabhakaran said...

// இலவசமா கொடுக்க இது என்ன கலர் டிவியா? கேஸ் அடுப்பா? //
செம நக்கல்... சேட்டைக்காரன் டச்...

// நவம்பர் 19-ம் தேதி ’உலகக் கழிப்பறை தினம்(WORLD TOILET DAY) //
இந்த பதிவெழுத ஒரு ஆராய்ச்சியே செய்திருக்கிறீர்கள் போல...

ADHI VENKAT said...

சிந்திக்க வைக்கும் பதிவு சேட்டை. கழிப்பறை இருக்கிறதோ இல்லையோ எல்லோர் கையிலும் செல்போன் இருக்கிறது.

பிரபாகர் said...

விழிப்புணர்வை ஊட்டக்கூடிய, சமுதாய அக்கறை கொண்ட அசத்தல் இடுகை!... கலக்கல் நண்பா!...

பிரபாகர்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

சிரிக்க வைத்ததுடன் சிந்திக்கவும் வைத்த பதிவு.. மிகவும் தேவையான ஓன்று நண்பரே..

கோமதி அரசு said...

நல்ல பதிவு.

கழிப்பறை இல்லாதவீட்டுக்கு பெண் கொடுக்கமாட்டேன் என்று பெற்றோர்கள் முடிவு எடுப்பது நல்லதே.

கழிப்பறை விழிப்புணர்வு அவசியம் தேவை.

பள்ளிகளில் சுத்தமாய் இல்லை கழிப்பறைகள் என்று வெகு நேரம் சிறுநீர் கழிக்கமல் உடல் துன்பத்திற்கு ஆளான குழந்தைகள் இருக்கிறார்கள்.

பள்ளிகள், அலுவலகங்கள் மற்றும் பொது மருத்துவமனை, பேருந்து நிலையங்கள் எல்லாம் கழிப்பறை சுத்தம் கவனிக்க பட வேண்டியது மிக மிக அவசியம்.

ஆர்வா said...

எவ்ளோ சீரியஸான விஷயத்தை எவ்ளோ அழகா கொஞ்சம் கூட போரடிக்காம எழுதி இருக்கீங்க.. வெரி நைஸ்

ஆர்வா said...

வரதட்சணை, போறதட்சணை..... பேரு சரியாத்தான் வெச்சிருக்காங்க சேட்டைக்காரன்னு..........

NaSo said...

உண்மைதான் சேட்டை. கழிப்பறை அமைக்க அரசு உதவி செய்வதாக சொல்கிறார்கள். ஆனால் கடைசியில் மக்களிடம் போய் சேர்வது என்னவோ ஆயிரம் ரூபாய் தான்.

THOPPITHOPPI said...

பதிவுகள் ஒவ்வொன்றும் அருமை

வாழ்த்துக்கள்

அரசூரான் said...

இந்தியா சுற்றுலா & சுகாதாரத்துறை மற்றும் அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சகதிற்க்கு இந்த பதிவ பார்சல் பண்ணுங்க சேட்டை.

மாணவன் said...

மிகவும் தேவையான விழிப்புனர்ச்சியுடன் சிந்திக்கக்கூடிய தகவல்களை உணர்வுகளுடன் பகிர்ந்துள்ளீர்கள்

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

நன்றி
நட்புடன்
மாணவன்

மாணவன் said...

நான் உங்களின் 220 ஆவது இதயத்துடிப்பு

நன்றி

சென்னை பித்தன் said...

//நம்மாளுங்க காதலர் தினம் தான் கொண்டாடுவாங்க! கழிப்பறை தினம் கொண்டாடுவாங்களா?"//

காதல் போயின் சாதல்.மத்தது எங்க வேண்டும்னாலும் போகலாம்.எனவே காதலே முக்கியம்னுதான் நினைப்பாங்க.
நல்ல இடுகை.

Anonymous said...

நகைச்சுவையாகச் சொன்னாலும் கசக்க வைக்கும் உண்மை தான்.

பித்தனின் வாக்கு said...

அட நீங்க ஒன்னு அதுக்கு பக்கத்திலேயே ஒரு கையேந்தி பவனும் இருக்குமே, எமனுக்கும், சீனாதானவுக்கும் ரெண்டு இட்லி வடை சாப்பிடக் குடுக்கலாமே.
நல்ல பதிவு.