Wednesday, November 10, 2010

கையிலே காசு; வாயிலே தோசை!

எக்ஸ்க்யூஸ் மீ! ஒரே ஒரு சீரியஸ் பத்தி...(அப்புறம் மிச்சம் மொக்கையென்று சொல்லவா வேண்டும்?)

"ஓய்வுநேரத்தில் சம்பாதிக்க வேண்டுமா?"

அண்மைக்காலமாக, பேருந்துகளிலும், ரயில்வண்டிகளிலும் இதுபோன்ற நோட்டீஸ்கள் பல்கிப் பெருகிவிட்டன. பத்து ரூபாய் சம்பாதிக்க சிங்கியடிக்க வேண்டியிருக்கிற இந்தக் காலகட்டத்தில், உட்கார்ந்தவாறே லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்று ஆசைகாட்டுகிற ஆசாமிகள் பெருகிவருவதைப் பார்த்தால் வேடிக்கையாக இருந்தது. அதே சமயம், எனது சட்டைப்பையில் எவனிடமோ நான் ஏமாந்து வாங்கித் தொலைத்த ஐநூறு ரூபாய் கள்ளநோட்டு இடியாகக் கனத்துக் கொண்டிருந்தது. உழைத்த காசு கையில் தங்க மாட்டேனென்கிறது; உழைக்காமல் காசு சம்பாதிக்க விரும்புகிற கூட்டமும், அவர்களின் பேராசையை பயன்படுத்தி மொட்டையடிக்கிற கும்பலும் தைரியமாக செல்போன் நம்பருடன் நோட்டீஸ் அடித்து சுதந்திரமாக உலவிக்கொண்டிருக்கிறது.

ஜெய் ஹோ!


அலுங்காமல் குலுங்காமல் காசு சம்பாதிக்க அப்படி என்னதான் வழி இருக்க முடியும்? ஒரு தடவை கேட்டுத்தான் பார்ப்போமே?

உடனே அந்த நோட்டீஸில் அச்சடிக்கப்பட்டிருந்த அலைபேசி எண்களில் ஒன்றைத் தொடர்பு கொண்டேன்.

"குட்மார்னிங்!" என்று ஸ்ரேயாவைப் போல இனிமையான குரல் மறுமுனையில் எதிரொலித்தது. (’அடப்பாவி, நீ ஸ்ரேயாவை விட மாட்டியா?’ என்று கறுவாதீர்கள்! நான் சொன்னது பின்னணிப் பாடகி ஸ்ரேயா கோஷல்!)

"என் பேர் சேட்டைக்காரன்! உங்க நோட்டீஸ் பார்த்தேன். அதான் என்ன விபரம்னு தெரிஞ்சுக்கலாமேன்னு தான்....."

"தேங்க்ஸ் ஃபார் காலிங் மிஸ்டர் சேட்டைக்காரன்! நீங்க இப்போ என்ன பண்ணிட்டிருக்கீங்க?"

"வேர்க்கடலை தின்னுக்கிட்டிருக்கேன்!"

"அதைக் கேட்கலே! நீங்க என்ன வேலை பார்த்திட்டிருக்கீங்கன்னு கேட்டேன் சார்!"

"ஓ அதுவா? பேசின் பிரிட்ஜ் ஷெட்டுலே ரயில் டயருக்குப் பஞ்சர் ஒட்டுற வேலை பார்த்திட்டிருக்கேன்!"

"இங்கிலீஸ் பேசுவீங்களா?"

"ஓ! இங்கிலீஸ்லே பாடவே செய்வேன்! ரிங்கா ரிங்கா ரோசஸ்.....!"

"அவ்வளவு தான் தெரியுமா?"

"இல்லையே...டிங் டாங் பெல்..புசீஸ் இன் த வெல்....ஹூ புட் ஹர் இன்...?"

"கம்ப்யூட்டர் தெரியுமா?"

"பழக்கமில்லீங்க; யாருங்க அவரு?"

"செல்போன் வச்சிருக்கீங்களா?"

"இல்லீங்க! இது பக்கத்து பாசஞ்சர் கிட்டேயிருந்து ஆட்டையைப் போட்டது!"

"கல்யாணம் ஆயிருச்சா?"

"அவரு தூங்கிட்டிருக்காரு! எழுப்பிக் கேட்கட்டுங்களா?"

"அவருக்கில்லே சார்! உங்களுக்கு கல்யாணம் ஆயிருச்சா?"

"இன்னும் ஒருவாட்டி கூட ஆவலீங்க!"

"அப்புறம் ஏன் பணம் சம்பாதிக்கணும்னு ஆசைப்படறீங்க?"

"அது வந்துங்க, ஒரு நாளாவது பார்க் ஹோட்டல்லே போய் பாயா சாப்பிடணுமுன்னு ஆசைங்க!"

"ஓ.கே! குட் அம்பிஷன்! எங்க அட்ரஸை நோட் பண்ணிக்கோங்க! எப்படி பணம் சம்பாதிக்கிறதுன்னு ஒரு டூ அவர்ஸ் டிரைனிங் கொடுப்போம். அதுக்கு டெலிகேட் ஃபீஸ் ஒரு நானூத்தித் தொண்ணூத்தி ஒம்பது ரூபாய் கேஷ் எடுத்திட்டு வாங்க!" என்று சொல்லிவிட்டு, அந்தப் பெண் எனக்கு முகவரியைச் சொல்ல நான் குறித்துக் கொண்டேன்.

"உங்க பேர் என்ன மேடம்?"

"கலாவதி!"

"தேங்க்ஸ் மேடம்!"

சரி, கையிலிருக்கிற ஐநூறு ரூபாய் கள்ளநோட்டையும் பைசல் பண்ணிவிடலாம்; அப்படியே கலாவதியையும் பார்த்து விடலாம். போனஸாக, உழைக்காமல் பணம் சம்பாதிக்கிற யோசனை கிடைத்தால், ராஜா அண்ணாமலைபுரத்தில் ஒரு டியூப்ளெக்ஸ் அபார்ட்மென்ட் வாங்கி, வாசலில் ஒரு ஃபோர்டு ஐகானையும் நிறுத்தி விடலாம். ஒரு ஐப்போட்! அப்புறம் ஒரு 3G கைபேசி! வைத்தியையும், சுரேந்திரனையும் அழைத்துக் கொண்டு எஸ்கேப்பில் படம்...இப்படியே யோசிக்க யோசிக்க, கனவில் கலாவதி கருப்புக்கண்ணாடி போட்டுக்கொண்டு கடற்கரையில் நடக்க, நான் பின்னால் பாடிக்கொண்டே போவது மாதிரி ஒரு காட்சி கண்முன்னே தோன்றி மறைந்தது.

"வா செல்லம் வா வா செல்லம்......! நடக்கிற பட்டாம்பூச்சி நீ தானே?"

குறிப்பிட்ட நாளில், லயோலா கல்லூரிக்குப் பின்பக்கத்திலே, மகாலிங்கபுரம் போகிற வழியில் இருந்த அந்தக் கட்டிடத்தின் மாடிக்குள் நுழைந்தபோது, எனக்கு முன்னாலேயே ஜீன்ஸ் போட்ட இளைஞர்கள் முதல் ஜிப்பா போட்ட பெருசுகள் வரை, ஆண்களும் பெண்களுமாய் ஒரு நூறு பேர் உட்கார்ந்தபடியும், நின்றபடியும் நின்றிருந்தனர். கலாவதியைக் காணோமே? யாரிடம் கேட்கலாம்?

"யெஸ் மிஸ்டர்! உங்க பேர் என்ன?"

குரல்வந்த திசையில் பார்த்தபோது, அர்ஜெண்டாக ஒரு பல்செட்டுக்கு அட்வான்ஸ் கொடுத்துவிட்டு வந்ததுபோல, அசப்பில் என் அப்பத்தா போல ஒரு பெண்மணி! என்னை நோக்கி அவள் புன்னகைத்ததில் என் வயிற்றுக்குள் யாரோ புளியோதரை பிசைவது போலிருந்தது.

"ஐயாம் கலாவதி!"

என்னது? கலாவதியா? இல்லை..நீ காலாவதி!

"என் பேர் சேட்டைக்காரன்!"

"ஓ! உட்காருங்க! இந்த அப்ளிகேஷனை ஃபில்-அப் பண்ணுங்க!"

மூளைக்குள்ளே ’வா செல்லம் வா வா செல்லம்,’ பாட்டு நின்றுபோக, பரவை முனியம்மா கண்முன்தோன்றி ’யே இந்தா..யே இந்தா..யே இந்தா...,’ என்று நக்கலாகப் பாடுவது போலிருந்தது. போதாக்குறைக்கு இருக்கிற கூட்டத்தைப் பார்த்தால், என் முறை வருவதற்கு ரொம்ப தாமதமாகும் போலப் பட்டது. வேறு ஏதாவது அதிரடியாகச் செய்து சீக்கிரமாக அங்கிருந்து ’எஸ்’ ஆக வேண்டியது தான்.

"மிஸ் கலாவதி! பார்த்ததுமே கேட்கணுமுன்னு நினைச்சேன்! நீங்க தானே அலங்கோலங்கள் சீரியல்லே ஹீரோயினா வர்றீங்க?"

"நோ!" என்று கலாவதியின் முகம் கூச்சத்தில், பொறித்த ஜவ்வரிசி வடாம் போல சிவக்கவும், ஓமன் படத்தை ஒண்டியாகப் பார்ப்பது போல எனது அடிவயிற்றில் கிலி படர்ந்தது. "அது நானில்லை; நடிகை தேவாங்கினி!"

"அசப்பிலே தேவாங்கு மாதிரியே...ஐ மீன்..தேவாங்கினி மாதிரியே இருக்கீங்களா, அதான் சந்தேகப்பட்டுக் கேட்டேன்!"

அவ்வளவு தான்! காலாவதி சரணாகதியாகி விட்டாள்.

"மேடம்! கடோத்கஜன்னு எனக்குத் தெரிஞ்ச ஒரு டைரக்டர் ’குடும்பம் ஒரு குருமா’னு சீரியல் எடுக்குறாரு! அதுலே ரெண்டு அம்மா, மூணு அக்கா, நாலு தங்கை, அஞ்சு அண்ணி, ஆறு அத்தை, ஒரே ஒரு அப்பா வர்ற மாதிரி கதை! உங்களுக்கு அப்ஜெக்ஷன் இல்லேன்னா, நான் சிபாரிசு பண்ணறேன்."

"நெஜமாவா? அந்த டைரக்டரோட நம்பர் தெரியுமா?"

"இப்போ ரிலீஸ் ஆயிட்டாரு! அதுனாலே எல்லாரும் பேர் சொல்லித்தான் கூப்பிடறோம் . அது போகட்டும்! உழைக்காமலே பணம் சம்பாதிக்கலாமுன்னு சொல்லுறாங்களே! அது எப்படீங்க? வீடு வீடாப் போயி ஏதாவது சோப்பு விக்கணுமா? இன்சூரன்ஸுக்கு ஆள் பிடிக்கணுமா?"

"நீங்க வேண்டியவருங்குறதுனாலே சொல்றேன். எதையும் விக்க வேண்டாம். சுத்தமா உழைக்கவே வேண்டாம்!"

"எப்படீங்க? சுத்தமா உழைக்காம பிச்சையெடுத்துத்தான் காசு சம்பாதிக்க முடியும்!"

"யூ ஆர் ராங் ! பிச்சையெடுக்கிறதுக்கு சங்கீத ஞானம் வேண்டும். "தில்லையம்பல நடராஜா’ விலேருந்து ’அரிமா..அரிமா’ வரைக்கும் எல்லாப் பாட்டும் மனப்பாடமாத் தெரிஞ்சிருக்கணும். நடிக்கத் தெரிஞ்சிருக்கணும். வாய்ஸ் மாடுலேஷன் ரொம்ப முக்கியம். நாங்க சொல்லுற தொழில்லே அதெல்லாம் அவசியமே இல்லை."

"அப்படீன்னா, ஏதாவது சீட்டுக்கம்பனி ஆரம்பிக்கணுமா?"

"அதுக்கு ஒரு ஐயாயிரம் ரூபாயாவது இருந்தாத்தானே கரண்ட் அக்கவுண்டே ஆரம்பிக்க முடியும்? எங்க தொழிலுக்கு அதுவும் தேவையில்லை!"

"அப்படீன்னா, வீடு வீடாப்போகவும் வேண்டாம்! உழைக்கவும் வேண்டாம்! முதலீடும் வேண்டாம்! நீங்க சொல்லுறதைப் பார்த்தா, என்னை மாதிரி ஒருத்தரை ஹீரோவாப் போட்டு படம் எடுக்கப் போறீங்களோ?"

"சேச்சே! நடக்குற காரியமா அதெல்லாம்? இந்தக் காலத்துலே மிருகங்களை வச்சு யாரு படம் எடுக்கிறாங்க?"

"புரிஞ்சு போச்சு! ஆசிரமம் ஆரம்பிச்சு, சாமியார் வேசம் கட்டினா, அஞ்சாறு வருசத்துலே மெடிக்கல் காலேஜ், இன்ஜினியரிங்க் காலேஜ்னு ஆரம்பிச்சு பணம் கோடி கோடியாக் கொட்டும். சரிதானா?"

"ஐயையோ! உங்களுக்கு விசயமே தெரியலே! சாமியாராப் போனவங்க எல்லாராலும் சம்பாதிக்க முடியாது. அதுக்கு அட் லீஸ்ட் ஒரு பாம்புப்புத்து, ஆலமரத்தடியாவது வேணுமே? நாங்க சொல்லுறதுக்கு எதுவுமே வேண்டாம்!"

"அப்போ அரசியலா?"

"வெளையாடறீங்களா! அரசியலுக்கு எவ்வளவு முதலீடு பண்ணனும். குறைஞ்சபட்சம் யார் வீட்டுக்காவது அனுப்புறதுக்கு ஒரு ஆட்டோவாவது வேணாமா? ஒரு பத்து ஃபிளக்ஸாவது வைக்க வேண்டாமா?"

"ஓஹோ! கலாவதி மேடம்! கண்டிப்பா உழைக்காம நேர்மையா யாராலேயும் லட்சாதிபதியாவோ, கோடீஸ்வரனாவோ சீக்கிரமா ஆக முடியாது. இருக்கிற மொள்ளமாறித்தனம் எல்லாத்தையும் சொல்லிட்டேன். அதெல்லாம் இல்லேன்னு நீங்களும் சொல்லிட்டீங்க! அப்புறம் எப்படித்தான் சீக்கிரம் பணக்காரனாவுறதாம்? தயவு செய்து சொல்லுங்களேன்!"

"மிஸ்டர் சேட்டைக்காரன்!" என்று கிசுகிசுப்பாகக் கூறினாள் கலாவதி. "நாங்க ரயில், பஸ் எல்லா இடத்திலேயும் அடிச்சோமில்லே! அதே மாதிரி நோட்டீஸ் நிறைய அடிச்சு அதுலே உங்க செல்போன் நம்பரைப்போட்டு நீங்களும் எல்லா இடத்துலேயும் ஒட்டுங்க! அதைப் பார்த்திட்டு நிறைய பேரு ஐநூறு ரூபாயை எடுத்துக்கிட்டு இங்கே வருவானுங்க! அதுலே உங்களுக்கு நூறு ரூபாய் கமிஷன்! ஒரு வாரத்துக்கு நூறு கேணயன் வந்தா உங்களுக்குப் பத்தாயிரம் ரூபாய்! மாசத்துக்கு நாற்பதாயிரம் ரூபாய்! எப்படி?"

அடப்பாவீங்களா!

"கலாவதி மேடம்! என்ன பேத்தறீங்க? ஒரு நோட்டீசை ஒட்டுனா, வாரத்துக்கு நூறு கேணயன் வந்திருவானா?"

"ஏன் வர மாட்டான்? இப்போ நீங்க வரலியா....?"

ஐயோ சாமீ! யாராச்சும் எனக்கொரு AK-47 வாங்கித்தாரீயளா?

30 comments:

Praveenkumar said...

மிகவும் நகைச்சுவையாக உள்ளது. ரசித்துப் படித்தேன்.சூப்பர்.

மங்குனி அமைச்சர் said...

ஹா,ஹா,ஹா,...............உன்னாலதான்யா இப்படியெல்லாம் யோசிக்க முடியும்

பிரபாகர் said...

ரொம்ப ரசிச்சி படிச்சேன் நண்பா!... சும்மா சூப்பாரா இருந்துச்சி... காலாவாதியான ஒரு மேட்டரை இப்படி கலகலக்க வைக்க உங்களால் மட்டும்தான் முடியும்...

பிரபாகர்...

பெசொவி said...

//"நெஜமாவா? அந்த டைரக்டரோட நம்பர் தெரியுமா?"

"இப்போ ரிலீஸ் ஆயிட்டாரு! அதுனாலே எல்லாரும் பேர் சொல்லித்தான் கூப்பிடறோம் //

Top! :)))))))))

ரகளை ராஜா said...

யோவ் ...... என்ன மனுசன்யா நீ சிரிச்சி சிரிச்சி... வயிறு வலிக்குதுயா.....

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கற்பனை, அது கற்பனையாக மட்டும் இருந்தால். உண்மையே அதுவெனில் வருந்த வேண்டிய விஷயம் – ஏமாறுபவர்கள் இருக்கும் வரை, ஏமாற்றுபவர்களும் இருப்பது உண்மைதான்.

வழக்கம்போல உங்கள் கலக்கலான பதிவு.

Radhakrishnan said...

கலக்கல். நடக்கத்தான் செய்கிறது.

Unmaivirumpi said...

இன்னாமா கலக்கி இருக்கீங்க , முழு நீள காமெடி பீஸ் , நீங்க இல்ல சார் இந்த பதிவு , அதோடு கருத்து சொல்லி கந்தசாமி ரேஞ்சுக்கு உயர்ந்துடீங்க, உண்மையில் இது ஒரு விழிப்புணர்வு பதிவு, ஆச பட்டா மோசாம போயிருவாங்கன்னு அழகா சொல்லப்பட்ட பதிவு.

அது சரி, நீங்க ட்விட்டர் இருக்கீங்களா ?

Rekha raghavan said...

படிக்க சுவாரசியமா இருக்கே! நோட்டீஸ் அடிக்க அச்சகத்துக்கு கிளம்பிட்டேன்.

ரேகா ராகவன்.

Paleo God said...

ஹா ஹா இனி அந்தப் போஸ்டரப் பாக்கறப்பல்லாம் சிரிக்கவேண்டியதுதான்! :)

Prabu M said...

ஒவ்வொரு வரியும் ரசித்து சிரித்தேன்...
சூப்பர் சேட்டை :)

எல் கே said...

நன் ரொம்ப நாளா யோசிச்சேன் அதை படிச்சிட்டு ... இப்படியும் இருக்குமோ ??

vasu balaji said...

இந்த சனியன் இப்ப குறுஞ்செய்தில வேற தொறத்துது. இதுல வேற வகை பிரிச்சி, சம்பளம் சொல்ற அழகிருக்கே:))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:)

Chitra said...

அதைப் பார்த்திட்டு நிறைய பேரு ஐநூறு ரூபாயை எடுத்துக்கிட்டு இங்கே வருவானுங்க! அதுலே உங்களுக்கு நூறு ரூபாய் கமிஷன்! ஒரு வாரத்துக்கு நூறு கேணயன் வந்தா உங்களுக்குப் பத்தாயிரம் ரூபாய்! மாசத்துக்கு நாற்பதாயிரம் ரூபாய்! எப்படி?"


.......ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... நீங்களே அவர்களுக்கு ஐடியா கொடுப்பீங்க போல.... ஹா,ஹா,ஹா....

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அட சேட்டை.. பச்சபுள்ளைய பொயி ஏமாத்தியிருக்கானுகளே.. விளங்குவானுகளா?..


சரி சிடுங்க.. நடந்த்தது நடந்துபோச்சு..

வரும் சனிக்கிழமை, பாக்கெட்ல ரூ2000 எடுத்துக்கிட்டு பேஸின் ப்ரிட்ஸ்னாண்ட வாங்க.. நான் சொல்லிக்கொடுக்கிறேன் எப்படி பில் கேட்ஸ் ஆகனுமுனு..


ஹி..ஹி

sathishsangkavi.blogspot.com said...

சின்ன மேட்டரா இருந்தாலும் அதை ரசிக்க வைக்கிற உங்க திறமைக்கு வாழ்த்துக்கள்...

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

//என்னது? கலாவதியா? இல்லை..நீ காலாவதி!//

இது நீங்க கலாவதின்னு பெயர் தற்செயல எழுதிட்டு continue பண்றப்ப எழுதினதா? இல்லை, இந்த கோக்குக்காக தேர்ந்தெடுத்த பெயரா? சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

// இருக்கிற மொள்ளமாறித்தனம் எல்லாத்தையும் சொல்லிட்டேன்//

அரசியலை மொள்ளமாறித்தனம்னு சொன்னதுக்க் கண்டிப்பாக ஆட்டோ வரும், சில சமயம் டாட்டா சுமோ கூட வரும்னு நினைக்கிறேன்.

கண்டிப்பாக சிரிப்பது நிறுத்தில் கொள்ளாமல் சிந்திக்க வேண்டிய விஷயம். என்ன தான் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் உழக்காமல் சம்பாதிக்க முடியாது எந்ற உயரிய தத்துவத்தை சொன்ன சேடைக்காரனுக்கு வாழ்த்துக்கள்.

Learn said...

உங்கள் படைப்பு மிக அருமையா இருக்கு

உங்கள் படைப்புகளை நமது தமிழ்த்தோட்டம் கருத்துக்களத்திலும் பூக்க விடலாமே http://tamilthottam.nsguru.com

சாந்தி மாரியப்பன் said...

:-)))))))))))))))))))

ADHI VENKAT said...

வழக்கம் போல் கலக்கல் சேட்டை. விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதிவு.

Philosophy Prabhakaran said...

சூப்பர் சேட்டை... என் மனசுல இருந்தத அப்படியே சொன்னா மாதிரி எழுதியிருக்கீங்க... அதுவும் உங்களது வழக்கமான நகைச்சுவை பாணியில்...

சூர்யா - மும்பை said...

மக்கா நானும் அது மாதிரி நோட்டீஸ் பாத்து இருக்கேன் இது வரை ட்ரை பண்ணலை இப்போ காப்பா திட்டே ஆனா நடை அருமை ஜமாய்.

ரோஸ்விக் said...

கலாவதி - காலாவதி, டைரக்டர் நம்பர் - இன்னும் பலப்பல விஷயங்கள் அசத்தல் சேட்டை. :-)

புலிகுட்டி said...

ஓய்வுநேரத்தில் ஓய்வுதான் எடுக்கனும்.அதவிட்டுட்டு கலாவதியை தேடி போனா சேட்டை மட்டும் இல்லை எல்லாமே காலாவதியாயிடும்.கீழே ஏகே 47 இருக்கு தற்கொலை மட்டும் செய்து கொள்ள வேண்டாம்.இதை எப்படி பார்கிறது என்று ப்ரியமுடன்......வசந்த்திடம் கேட்கவும்.(எப்படியாவது படத்தை ஓட்டவும்)[ma][im][IMG]http://i1201.photobucket.com/albums/bb360/mlakshankumar/kil_e0.gif[/IMG][/im][/ma]

விமல் said...

Super.

பொன் மாலை பொழுது said...

சேட்ட .....இது ரொம்ப தப்பு. தொழில் ரகசியத்த இப்படி பப்ளிக்ல போட்டு உடைக்கலாமா ?
ஆமா....சேட்ட டி.வி. என்னா ஆச்சு. ?? ஊத்தி மூடியாச்சா?
--

suneel krishnan said...

அட்டகாசம் !!

கே. பி. ஜனா... said...

//"நெஜமாவா? அந்த டைரக்டரோட நம்பர் தெரியுமா?"

"இப்போ ரிலீஸ் ஆயிட்டாரு! அதுனாலே எல்லாரும் பேர் சொல்லித்தான் கூப்பிடறோம் //
very humourous!

சுபத்ரா said...

காமெடிக்கு ஒரு அளவு வேண்டாமா?

என்ன இது சின்னப்பிள்ளத் தனமா... ராஸ்கல்(சிரிச்சிட்டே இருக்குற என்னைய சொன்னேன்)

நட்ட நடு ராத்திரியில இந்தப் பதிவைப் படிச்சிட்டு நான் சிரிச்ச சத்தத்தக் கேட்டுத் தூங்கிட்டு இருந்த என் அம்மா எழுந்துவந்து என்ன ஆச்சுனு கேட்டு, நான் ஒன்னுமில்லையேனு சொல்லவும் நாலு ரைடு விட்டுட்டுத் தூங்கப் போயிட்டாங்க ;D

அவங்க போனதுக்கு அப்புறம் தான் சிரிச்சுகிட்டே இந்தக் கமெண்ட்ட கமெண்ட்டுறேன் :)