Tuesday, August 24, 2010

அப்பாவின் மேஜைவிளக்கு (புனைவு முயற்சி)

தற்செயலாக கண்களுக்கும் கைகளுக்கும் அது தட்டுப்பட்டது. அன்றே அதை புதுப்பிக்க வேண்டுமென்று பசுபதி முடிவெடுத்திருந்தான்.

ஒரு காலத்தில் அப்பாவின் மேஜைக்கு கம்பீரமும் அழகும் சேர்த்த மேஜைவிளக்கு. மொழுமொழுவென்று அடர்கருப்புத்தேக்கில் நுட்பமாகச் செதுக்கப்பட்டிருந்த இரண்டு யானைகள்; அவற்றின் தந்தங்கள் அசல் யானைத்தந்தத்திலேயே செதுக்கி, சொருகப்பட்டிருந்தன. எதிரும் புதிருமாய் இரண்டு யானைகளும் துதிக்கைகளைத் தூக்கிக் கொண்டிருக்க, அவற்றின் மேலே நடுநாயகமாய் ஒரு பெரிய தாமரைப்பூ மலர்ந்திருக்கும். அதில் விளக்கு பொருத்துகிற துளை திறமையாக வெளியே தெரியாதவாறு அகழ்ந்து வைத்திருக்கப்பட்டிருக்கும். இளஞ்சிவப்பு நிறத்தில் மேலே ஒரு குடை கவிழ்ந்திருக்கும்.

மாலையில் அயர்ந்து வரும் அப்பா, கத்தை கத்தையாய் ஏதேதோ காகிதம் கொண்டுவருவார். கைகால்களைச் சுத்தம் செய்துவிட்டு, கடனே என்பதுபோல காப்பியைக் குடித்துவிட்டு, அந்த மேஜைவிளக்கைப் போட்டுக்கொண்டு, தனது பழைய ஹால்டா தட்டச்சு இயந்திரத்தில் வேலை செய்ய ஆரம்பித்தால், பத்து பதினோரு மணிவரையிலும் வாசல்வரைக்கும் தட்தட்டென்று ஓசை கேட்கும். பசுபதிக்கு அப்பா இல்லாத நேரத்தில் அவரது நாற்காலியில் அமர்ந்து கொண்டு, அந்த மேஜை விளக்கை மிக அருகாமையிலிருந்து பார்த்து ரசிப்பது மிகவும் பிடிக்கும். அப்பாவின் தட்டச்சு இயந்திரத்தின் மூடியைக் கவனமாகத் திறந்து, ஏதேதோ எழுத்துக்களை அழுத்தியதும், உற்சாகத்தில் எம்பிக்குதிக்கிற அந்த எழுத்துக்கம்பிகளைப் பார்த்து ரசிப்பான்.

’பேப்பரில்லாம டைப் பண்ணக்கூடாது! ரோலர் கெட்டுரும்," என்று ஒருநாள் கையும் களவுமாக மாட்டிய தனக்கு அப்பா அறிவுரை கூறியதோடு, ஏ..எஸ்..டி..எஃப்..செமிகோலன்..எல்..கே..ஜே...என்று தட்டச்சு சொல்லிக்கொடுத்த நாளை அவனால் மறக்க முடியாது. பல வருசங்களுக்குப் பிறகு, அப்பாவின் சொரசொரப்பான விரல்களின் ஸ்பரிசத்தை அன்று அவன் மீண்டும் உணர்ந்தான். அதன்பிறகு, அப்பா தான் அவனுக்கு தட்டச்சு, சுருக்கெழுத்து இரண்டுக்கும் ஆசான்! பிட்ஸ்மேன் பசுபதிக்குக் கடவுளானார்; அப்பாவிடம் ஒரு புது அன்னியோன்னியம் ஏற்பட்டது. ஆறே மாதத்தில் அப்பாவின் சுமையைப் பகிர்ந்து கொள்ளுமளவுக்கு, பசுபதிக்கு தட்டச்சு கைவந்த கலையாகி விட்டது.

அதெல்லாம் பல வருடங்களுக்கு முன்பு! இப்போது அந்த வீடுமில்லை; அந்த ஊருமில்லை! அம்மாவையும் சிலநோய்கள் அள்ளிக்கொண்டு போய்விட்டிருந்தது. ஒரே பிள்ளை பசுபதியோடு அப்பாவும் நகரத்துக்குள் வந்து ஒண்டியாகிவிட்டது. அவரது மேஜையும், தட்டச்சு இயந்திரமும் அடிமாட்டுவிலைக்குப் போனது. பசுபதிக்குத் திருமணமாகி, குழந்தைகள் பிறந்து, பல ஆண்டுகள் உருண்டோடிக்கொண்டிருக்க, அப்பாவின் வாழ்க்கையில் செயற்கையான சிரிப்பு, வலுக்கட்டாயமான சமரசங்கள், தவிர்க்கமுடியாத அவமானங்கள் என ஒன்றன்பின் ஒன்றாய் வந்து ஒட்டிக்கொண்டன.

அப்பாவின் தோற்றம் இத்தனை வருடங்களில் நிறைய மாறிவிட்டது. ஒருமுறை மயக்கம்போட்டு விழுந்தவரைத் தூக்கியபோதுதான், அவர் எவ்வளவு மெலிந்து விட்டிருக்கிறார் என்பது புரிந்தது. மருத்துவமனையில் கண்விழித்துப் பார்த்துவிட்டு, "பேபிக்கு ஸ்கூலிலே சாப்பாடு கொண்டு போகணுமேடா?" என்று கேட்டபோதுதான், முதல்முறையாக மாமனாருக்காக மருமகளின் கண்ணில் ஈரம் ஊறியது. ஆனால், எல்லாமே தற்காலிகமான உணர்ச்சிகள்! ஒரு கோபக்கணத்தில் பல நல்ல தருணங்களைக் காலின்கீழே போட்டு மிதித்துவிட்டு மீண்டும் அலட்சியத்தைப் புனைந்துகொள்ளுகிற சாமானிய மனிதர்கள் தானே!

"இப்போ இந்த ஒடஞ்சுபோன விளக்கை சரிபண்ணி என்ன பண்ணப்போறீங்க?"

"வீணா, அப்பாவுக்கு அறுபதாவது பொறந்தநாள் வருது! இதை சரிபண்ணி பரிசா கொடுத்தா எவ்வளவு சந்தோஷப்படுவாரு?"

"என்னமோ பண்ணுங்க! மாசாமாசம் இரண்டாயிரம் சொச்சத்துக்கு மருந்து, ரெண்டு மாசத்துக்கு ஒருவாட்டி செக்-அப்! பொண்ணைப் பெத்திருக்கோமுங்கிறது ஞாபகமிருந்தா சரிதான்!:

"என்ன பண்ணலாம்? தொரத்திரட்டுமா?"

இந்தக் கேள்விக்கு வீணா பதில் அளித்ததில்லை. விளக்கை அணைத்துவிட்டு, இருட்டுக்குள்ளே முகத்தை ஒளித்துக்கொள்ளுவாள். ’தொரத்திடுங்க,’ என்று சொல்லாதவரையிலும், நல்லவள்தான் என்று தன்னைத் தானே சமாதானப்படுத்திக்கொண்டு பசுபதியும் உறங்க முயற்சி செய்வான். ஆனால், அப்பாவுக்குப் பக்கத்தில் அமர்ந்து ’நான் இருக்கேன்,கவலைப்படாதீங்கப்பா!’ என்று ஒருவார்த்தை சொல்ல அவனுக்கு ஒரு இனம்புரியாத தயக்கமும், ஒருவேளை அவர் அதைக்கேட்டு அழுதுவிடுவாரோ என்ற அச்சமும் இருந்தது.

ஒருவகையில் அந்த யானைவிளக்கைப் புதுப்பித்து அப்பாவுக்குப் பரிசளிப்பதன் மூலம், அவரது வியர்வைக்கு நன்றி தெரிவித்துவிடலாமோ என்ற நப்பாசை! மிகவும் உள்ளுக்குள் அகழ்ந்து நோக்கினால், அவனது நோக்கத்தில் பழியிலிருந்து தப்பித்துக்கொள்ளுகிற சுயநலமே அதிகம் இருக்கும் என்று அவனே அறிவான்.

"சூப்பராயிருக்குப்பா!" புதுப்பிக்கப்பட்ட அந்த மேஜைவிளக்கை, பசுபதி வீட்டுக்குக் கொண்டுவந்தபோது, அதைப் பார்த்து மகள் பேபி உற்சாகமிகுதியில் கூவினாள்.

"பாலீஷ் போட்டிருக்கா? ரெண்டு யானையும் எப்படிப் பளபளக்குதுங்க?" என்று வீணாவும் அதிசயித்தாள்.

"இந்த மாதிரி மரம் இப்போ எங்கேயும் கிடைக்காதுன்னு அந்த ஆசாரி சொல்லுறாரு," என்று பெருமையுடன் சொன்னான் பசுபதி. "ஷேடுதான் அதே கலர் கிடைக்கலே! அதுனாலேன்ன, இதுவும் நல்லாவேயிருக்கு!"

"அதெல்லாம் சரிதான், உங்கப்பா தான் பேப்பர் கூடப் படிக்கிறதில்லையே! இதைப் போயி அவருக்கு....."

"வீணா, சில விஷயங்களிலே நீ தலையிடாம இருக்கிறதுதான் நல்லது! பேபி, தாத்தா பர்த்-டேக்கு நாம இதை பரிசாக் கொடுக்கப்போறோம். நல்லா ரிப்பனெல்லாம் கட்டி நீதான் கொடுக்கிறே, சரியா?"

"சரிப்பா!"

அப்பாவின் பிறந்தநாளும் வந்தது. பேபி முந்தையநாளே அந்த மேஜைவிளக்கை ஒரு அட்டைப்பெட்டியில் வைத்து, வண்ணக்காகிதங்களால் அலங்கரித்து இளநீல ரிப்பனைச் சுற்றி, வாழ்த்து அட்டையையும் ஒட்டி வைத்திருந்தாள். அதிகாலையில் எழுந்து வரவேற்பரையில் உட்கார்ந்திருந்த தாத்தாவுக்கு, பேத்தி முகமலர்ச்சியோடு பரிசைக் கொண்டு போய் கொடுக்க, பசுபதியும் வீணாவும் புன்சிரிப்போடு வேடிக்கை பார்த்தனர்.

"ஹேப்பி பர்த்டே தாத்தா!"

"தேங்க்யூடா என் செல்லம்! இதென்ன, தாத்தாவுக்கு பரிசா? என்னது இவ்ளோ பெரிசாயிருக்கு....?"

"பிரிச்சுப் பாருங்க தாத்தா! அசந்து போயிடுவீங்க!"

முகமலர்ச்சியோடு அப்பா அந்தப் பொட்டலத்தை அவிழ்ப்பதை பசுபதி மகிழ்ச்சியோடு பார்த்தான். தனது கடந்தகால துணையை, புதுப்பொலிவோடு பார்த்து அப்பா என்ன சொல்வார், என்ன செய்வார் என்றறிய அவனுக்கு ஆவலாயிருந்தது. பொட்டலத்தை முழுக்கப் பிரித்து, அந்த விளக்கை வெளியே எடுத்ததும்.....

அப்பாவின் முகம் வெளிறியதை பசுபதி கவனித்தான். ஒருகணம் நிலைகுலைந்தவர் போல சாய்ந்து உட்கார்ந்து கொண்டவர், பிறகு அந்த விளக்கை நெஞ்சோடு தழுவிக்கொண்டு விசும்பி விசும்பி அழத்தொடங்கினார்.

"அம்மு..! அம்மு!"

அம்மாவின் நினைவில் அழுது கொண்டிருந்த அப்பாவை பசுபதி செயலற்று நோக்கிக்கொண்டிருந்தான். அவனது மனது, வைத்துக்கொள்ள இடமில்லையென்று இதுவரை விற்றுமுடித்த எத்தனையோ பழைய சாமான்களைப் பட்டியல் போடத்தொடங்கியது.

25 comments:

பிரபாகர் said...

Voted... Will read and comment later Nanpaa!

Prabhagar...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நேற்றுத்தான் “தனக்கான வருத்தம் “ ந்னுஒரு வங்காளக்கதை படிச்சேன்.. ஒரு வய்சானவரோட கதை. அதைப்படிச்சப்ப கலங்கினமாதிரி யே இதும் க்லங்க வைக்குது.. வயசானபின் அவஙக நினைக்கிறதை சொல்லமுடிந்தாலும் சொல்லத்தெரியாத குழந்தைகள் போலத்தான்.. :(

அகல்விளக்கு said...

தம்மைத்தவிர யாரும் முழுதாய் புரிந்து கொள்ள முடியாதவை....

உணர்வுகள்.....

ஆழமான சிறுகதை நண்பா....

Mohan said...

கதை மிகவும் உணர்வுபூர்வமாக இருந்தது. கடைசியில் எடுக்கும் முடிவு அருமை. வாழ்த்துகள்!

பிரபாகர் said...

படித்து மனம் கனக்கிறது நண்பா!... சிறு விஷயம்கூட இழந்த பல விஷயங்களை நினைவு படுத்தும்.... இது போல் நிறைய புனைவுகளை எதிர்ப்பார்க்கிறேன்...

பிரபாகர்...

Rekha raghavan said...

அருமையான கதை . பாராட்டுகள் .

ரேகா ராகவன்.

ஸ்ரீராம். said...

எல்லோருக்கும் வயதாகும்.
இந்த உணர்வுகள் பொது...

//ஒரு கோபக்கணத்தில் பல நல்ல தருணங்களைக் காலின்கீழே போட்டு மிதித்துவிட்டு மீண்டும் அலட்சியத்தைப் புனைந்துகொள்ளுகிற சாமானிய மனிதர்கள் தானே!//

அருமையான வரிகள்.

நெகிழ்த்தி விட்டீர்கள் சேட்டை.

Thamiz Priyan said...

என்ன சொல்ல..? கொஞ்சம் பாரமாக இருக்கின்றது.

Unknown said...

நெகிழவைக்கும் கதை ...

Jey said...

சேட்டை...
சூப்பர்பா.., என்ன சொல்ரது..கொஞ்சம் நெஞ்சு கணத்துப் போச்சி..

Jey said...

சேட்டை என் பிளாக் பக்கம் ஃப்ரியா இருக்கும் போது வாப்பா.
http://pattikattaan.blogspot.com/

vasu balaji said...

ம்ம்ம்.

ஹேமா said...

உணர்வோடு உறவின் கலக்கம் கதை அருமை.

பா.ராஜாராம் said...

//அப்பாவின் தோற்றம் இத்தனை வருடங்களில் நிறைய மாறிவிட்டது. ஒருமுறை மயக்கம்போட்டு விழுந்தவரைத் தூக்கியபோதுதான், அவர் எவ்வளவு மெலிந்து விட்டிருக்கிறார் என்பது புரிந்தது. மருத்துவமனையில் கண்விழித்துப் பார்த்துவிட்டு, "பேபிக்கு ஸ்கூலிலே சாப்பாடு கொண்டு போகணுமேடா?" என்று கேட்டபோதுதான், முதல்முறையாக மாமனாருக்காக மருமகளின் கண்ணில் ஈரம் ஊறியது//

கதையின் உயிரோட்டமான பகுதி, ரொம்ப பிடிச்சிருக்குங்க.

சிநேகிதன் அக்பர் said...

நெகிழவைத்த கதை சேட்டை.

a said...

Kathai rompa nalla irukku....

Chitra said...

மனதை நெகிழ வைத்த கதை.... நல்லா இருக்குங்க!

முகுந்த்; Amma said...

கதை மனதை தொட்டு விட்டது.
அழுத்தமான முடிவு, நெகிழ்ந்தேன்.

Rajasurian said...

classic

Philosophy Prabhakaran said...

கதை சூப்பர் ஜி... உண்மை சம்பவத்தின் புனைவா... இல்லை முற்றிலுமே கதையா...

Anonymous said...

உணர்வுகளைப் பிரதிபலிக்கும் பதிவு..

சேட்டை?? அவ்வளவு நல்லவனா நீ???

வெங்கட் நாகராஜ் said...

சூழ்நிலைக் கைதிகளாக ஆக்கி வைத்திருக்கும் பல பெரியவர்களின் கதையை அப்படியே வடித்திருக்கீங்க சேட்டை. ஹேட்ஸ் ஆஃப் டு யு!

வெங்கட்.

ஹுஸைனம்மா said...

என்ன சொல்லன்னு தெரியலை. கதை எதார்த்தம்.

ADHI VENKAT said...

அருமையான கதை. சிறு பொருளும் அதன் தொடர்பான நினைவுகளுக்கு கொண்டு சேர்க்கும்.

கோமதி அரசு said...

நெஞ்சை நெகிழ வைத்த கதை.