Friday, March 19, 2010

வலைப்பதிவாளர் ராசிபலன்.07

அடுத்து நாம் காணப்போகிறவர்கள், ஹி..ஹி.ஹி! துலாம் ராசிக்காரர்கள்! இவர்கள் இருக்கிறார்களே, ஹி..ஹி..ஹி! அவர்கள் சிரிக்காமல் மற்றவர்களை சிரிக்க வைப்பதில் மகா கெட்டிக்காரர்கள்! ஆனால், மற்றவர்களைச் சிரிக்க வைக்கிற இவர்களைச் சிரிக்க வைப்பது பெருங்கஷ்டம்!

இவர்கள் வலைப்பதிவு ஆரம்பிக்கப் பட்ட பாட்டைக் கேட்டால் கண்ணப்பன்மெஸ் இட்லி கூடக் கரைந்து விடும். ஆனால், தற்சமயம் இவர்கள் நிச்சயம் மிகவும் பிரபலமாகியிருப்பார்கள் என்பது உறுதி!பதிவு எழுதாவிட்டால் அதிக பின்னூட்டங்கள் போட்டாவது இவர்கள் தமிழ்மணம் முகப்பில் இருந்தே தீருவார்கள். மிகுந்த பொறுப்புணர்ச்சி உள்ளவர்கள் என்பதால், தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னை என்பதைக் கூட புத்தகத்தை சரிபார்த்தோ, வாத்தியாரைக் கேட்டோ உறுதிப்படுத்திக்கொண்டு தான் எழுதுவார்கள். இவர்களது பதிவுகளால் சர்ச்சை வராது என்றாலும், பின்னூட்டத்தில் அவ்வப்போது பல மொக்கைகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். துலாம் ராசிக்கார பதிவர்கள் எப்பொழுது பதிவு எழுதுவார்கள் என்பது அவர்களுக்கே தெரியாது என்பதும் இவர்களது தனிச்சிறப்பாகும். சொந்த வலைப்பதிவில் எழுதுவது போதாதென்று நண்பர்களின் பதிவுகளிலும் இவர்கள் அவ்வப்போது தத்தம் கைவரிசையைக் காட்டுவதுமுண்டு.

துலாம்ராசிக்கார வலைப்பதிவர்கள் இயல்பாகவே மிகவும் நேர்மையானவர்கள் என்பதால், அவர்களது பதிவுகளுக்கு அவர்களே "மொக்கை" என்று பின்னூட்டம் போட்டுக்கொள்ளுவார்கள். இவர்களைக் கட்டுப்படுத்துவது என்பது சகபதிவர்களுக்கு இயலாத காரியமாக இருக்கும் என்பதால், பின்னூட்டம் போட்டு விட்டு எதற்கு வம்பு என்று ஒதுங்கி விடுவார்கள். துலாம் ராசிக்காரப் பதிவர்கள் எழுதுகிற பதிவுகள் எங்கிருந்து சுடப்பட்டவை என்பதை மற்றவர்களால் ஒருபோதும் கண்டுபிடிக்கவே முடியாது. போதாக்குறைக்கு, எவ்வளவு மொக்கையான பதிவைப் போட்டாலும், அதற்குப் பின்னாலே ஏதாவது சமூகநோக்கு இருக்கிறது என்று சர்வசாதாரணமாக சால்ஜாப்பு சொல்லி சமாளிக்கும் திறன் படைத்தவர்களாயிருப்பார்கள். தட்ஸ் டமில், மாலைமலர், தினமலர் இணையதளங்களில் இருந்து சுட்டிகளைச் சுட்டுப்போடுவது இவர்களுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி!

இவர்களுக்கும் புத்தகங்கள் என்றால் கொள்ளைப்பிரியம். புத்தகக் கண்காட்சியில் புத்தகங்கள் வாங்குகிறார்களோ இல்லையோ, அது குறித்து ஒரு பதிவு கண்டிப்பாக எழுதியே தீருவார்கள். அப்படியே புத்தகம் வாங்கி விட்டாலும் கூட, வாங்கிய அதே ஆர்வத்தோடு படிக்க மாட்டார்கள் என்பதால் ஒரே புத்தகத்தைத் திரும்பத் திரும்ப வாங்குகிற அபாயமும் இருக்கின்றது. இவர்களில் பலருக்கு எண்கணிதம், ஜோதிடம் போன்றவற்றில் ஈடுபாடு இருக்கும் என்பதால், மூட நம்பிக்கைகளை எதிர்க்கிற பதிவுகளைக் கூட பஞ்சாங்கம் பார்த்து, முகூர்த்த நேரத்தில் தான் போடுவார்கள். பெரும்பாலும் பேருந்து, இரயில் பயணங்களின் போதே அடுத்த பதிவுக்கான கரு இவர்களுக்கு உதயமாகும் என்பதால்,உற்சாக மிகுதியில் தன் தொடை என்று எண்ணி பக்கத்து சீட்காரரின் தொடையில் தட்டி விடுவார்கள். மேலும் உட்கார்ந்தபடியே உறங்கும் வல்லமை பெற்றவர்கள் என்பதால், இவர்களது பதிவுகளில் இரண்டு பத்திகளுக்கு நடுவே உள்ள இடைவெளியில் ஒரு பாய் விரித்து படுத்து உறங்கலாம்.

திட்டமிடுவதில் மட்டுமின்றி, திட்டுவதிலும் இவர்கள் படு கெட்டிக்காரர்களாக இருப்பார்கள். கடமையுணர்ச்சி, நியாயம் ஆகியவற்றை இவர்கள் நிறைய எதிர்பார்ப்பார்கள்(மற்றவர்களிடமிருந்து மட்டும்!). இவர்களை நன்கு அறிந்தவர்கள் முதுகுக்குப் பின்னால் "பழைய பஞ்சாங்கம்," என்று பகடி செய்தாலும், ஓட்டுப்போடுவதிலும், பின்னூட்டம் இடுவதிலும் இவர்கள் காட்டும் அக்கறைக்காக மரியாதையுடன் வைக்கப்பட்டிருப்பார்கள்.

துலாம் ராசிக்காரர்களே! பதினோராம் இடத்திலிருக்கிற சனி பன்னிரெண்டாவது இடத்துக்குச் செல்வதால், உங்களுக்கு விரயச்சனி என்று சொல்லப்படுகிற ஏழரைச்சனி ஆரம்பித்திருக்கிறது. இருந்தாலும், இது குறித்து நீங்கள் கவலைப்படத்தேவையில்லை( வந்து படிப்பவர்கள் தான் கவலைப்பட வேண்டும்!). தவறுதலாக, ஏற்கனவே போட்ட பதிவையே திரும்பவும் போடுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. அலைச்சல் அதிகமாகி, கூகிளில் எதையோ தேடப்போய் காணாமல் போய் விடுகிற வாய்ப்பிருக்கிறது. எந்தப் பதிவைப் போடுவதாக இருந்தாலும், ஒரு முறைக்குப் பல முறை யோசித்து விட்டு, போடாமல் இருப்பதே சாலச் சிறந்தது. பல புதுப்புது சிந்தனைகள் உருவாகினாலும் கூட, சரியான தலைப்பு கிடைக்காமல் அல்லாடுவீர்கள்! கணினியால் சில்லறைச் செலவுகள் ஏற்படும்; பென் டிரைவால் வைரஸ் வரும். எதற்கும் எல்லாப் பதிவுகளிலும் வரிக்கு ஒரு நகைப்பானைப் போட்டு வைப்பது நல்லது. வாசகர்களின் ஓட்டளிப்பும், பின்னூட்டங்களும் தாமதமாகலாம்.

குறிப்பாக, பிற பதிவர்களுக்கு ஓட்டளிக்கும்போது, முழுமையாகப் படித்து விட்டு ஓட்டளிப்பது நன்மை பயக்கும். இல்லாவிட்டால் இரண்டு வலைப்பதிவர்களின் குடுமிப்பிடி சண்டை மடல்களுக்கு ஓட்டளித்து "அருமையான பதிவு" என்று பின்னூட்டம் போட்டுப் பின்னால் வாங்கிக் கட்டிக் கொள்வீர்கள்.

நீங்கள் எழுதவிருக்கிற பதிவை உங்கள் நண்பர் எவரேனும் எழுத வாய்ப்பிருக்கிறது என்பதால், உங்கள் அடுத்த பதிவு குறித்து யாரிடமும் சொல்லாமலிருப்பது நல்லது. எழுதாமலே விட்டு விட்டால் அதை விட நல்லது.

காதல் கவிதைகள் முன்போல் எழுத வராமல் மிகவும் கஷ்டப்பட நேரிடலாம். ஒரு வாரம் "பதியா விரதம்," கடைபிடித்தால் தோஷங்கள் விலகலாம். கூகிளில் இன்விசிபிளாக இருப்பது சென்சிபிளாக இருக்கும்.

இருந்தாலும் உங்களது இந்தத் தற்காலிகப் பின்னடைவுகள் விரைவில் சரியாகி, முன்னைப் போல பல அறுவையான, மன்னிக்கவும், அருமையான பதிவுகளை எழுதி ஓட்டு மேல் ஓட்டு வாங்குவீர்கள். சிரமதசை முடிந்ததும், புதிய டெம்ப்ளேட்டுகளும், மேலதிகமான இன்னபிற கேட்ஜெட்டுகளும் உங்கள் வலைப்பதிவுக்கு அழகு சேர்க்கும்.

மொத்தத்தில் நேர்மையைத் தனிக்குணமாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்கள், நேர்மையாய் இருப்பவர்கள் சந்திக்கிற எல்லா சோதனைகளையும் சந்திப்பார்கள். (இந்தப் பதிவைப் படிக்கிற சோதனை உட்பட!)

நீங்கள் மேஷ ராசிக்காரரா? இங்கே செல்லவும்!

நீங்கள் ரிஷப ராசிக்காரரா? இங்கே செல்லவும்!

நீங்கள் மிதுன ராசிக்காரரா? இங்கே செல்லவும்!

நீங்கள் கடக ராசிக்காரரா? இங்கே செல்லவும்!

நீங்கள் சிம்ம ராசிக்காரரா? இங்கே செல்லவும்!

நீங்கள் கன்னி ராசிக்காரரா? இங்கே செல்லவும்!

மற்ற ராசிக்காரர்களுக்குச் சொல்லவா வேண்டும்? உங்கள் பலன்களும் வந்தே தீரும்!

16 comments:

மங்குனி அமைச்சர் said...

ஐ , நான் தான் பஸ்டு, இன்னு படிக்கல , இரு போய் படிச்சிட்டு வர்றேன்

துளசி கோபால் said...

ஹாஹாஹாஹா

சைவகொத்துப்பரோட்டா said...

கலக்குறீகளே அப்பு!!

Paleo God said...

ப்ரொஃபெஷனல் சேட்டை..:))

Bavan said...

// ஒரு முறைக்குப் பல முறை யோசித்து விட்டு, போடாமல் இருப்பதே சாலச் சிறந்தது. பல புதுப்புது சிந்தனைகள் உருவாகினாலும் கூட, சரியான தலைப்பு கிடைக்காமல் அல்லாடுவீர்கள்! கணினியால் சில்லறைச் செலவுகள் ஏற்படும்; பென் டிரைவால் வைரஸ் வரும். எதற்கும் எல்லாப் பதிவுகளிலும் வரிக்கு ஒரு நகைப்பானைப் போட்டு வைப்பது நல்லத//

ஆஆஆ.... என்னா சார் பயமுறுத்துறீங்க?? அவ்வ்...

//காதல் கவிதைகள் முன்போல் எழுத வராமல் மிகவும் கஷ்டப்பட நேரிடலாம்.//

அட..:D

// (இந்தப் பதிவைப் படிக்கிற சோதனை உட்பட!)//

ஹாஹா... தலிவா கலக்கல்... :D பிரமாதம்...:D எக்சலன்ட்..:D

மங்குனி அமைச்சர் said...

இது புள்ளைக்கு அழகு , கண்ணாடில பாரு எவ்வளவு அழகா இருக்குன்னு

முகுந்த்; Amma said...

//சுடப்பட்டவை என்பதை மற்றவர்களால் ஒருபோதும் கண்டுபிடிக்கவே முடியாது. போதாக்குறைக்கு, எவ்வளவு மொக்கையான பதிவைப் போட்டாலும், அதற்குப் பின்னாலே ஏதாவது சமூகநோக்கு இருக்கிறது என்று சர்வசாதாரணமாக சால்ஜாப்பு சொல்லி சமாளிக்கும் திறன் படைத்தவர்களாயிருப்பார்கள். //


இதனை துலாம் ராசிகாரியான நான் கடுமையாக எதிர்க்கிறேன் :))). கலக்கல்ங்க!!

மசக்கவுண்டன் said...

எல்லா ராசி பலனும் எனக்குப்பொருந்தற மாதிரியே இருக்குதுங்க. நானு எந்த ராசிங்க?

அஷீதா said...

chettai sir...

dhanusu raasi pathi eppo eludhuveenga?

Unknown said...

கண்டுபிடிச்சிட்டேன்.. சேட்டைக்காரன் துலாம் ராசி.. :))

Unknown said...

/மசக்கவுண்டன் said...
எல்லா ராசி பலனும் எனக்குப்பொருந்தற மாதிரியே இருக்குதுங்க. நானு எந்த ராசிங்க//

ரெம்ப அப்பாவியா இருக்காப்ல?

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

அடப்பாவி நான் நெஜமாவே ராசிபலன்னு நெனச்சு படிக்க ஆரம்பிச்சுட்டேன்(நான் தான் அப்பாவி ஆச்சே). சூப்பர். நல்லா இருக்கு பதிவு. அது சரி,.....உங்க ராசி என்ன???

சிநேகிதன் அக்பர் said...

சூப்பரப்பு.
உங்க கூட சேர்ந்த எல்லாமே ராசியா இருக்கே.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

//குறிப்பாக, பிற பதிவர்களுக்கு ஓட்டளிக்கும்போது, முழுமையாகப் படித்து விட்டு ஓட்டளிப்பது நன்மை பயக்கும். இல்லாவிட்டால் இரண்டு வலைப்பதிவர்களின் குடுமிப்பிடி சண்டை மடல்களுக்கு ஓட்டளித்து "அருமையான பதிவு" என்று பின்னூட்டம் போட்டுப் பின்னால் வாங்கிக் கட்டிக் கொள்வீர்கள்//

என்ன சேட்டை..அதுக்குத்தானே, நாங்க கடை தொறந்து வச்சுட்டு , பரிகாரம் பண்ணி கொடுத்துட்டு இருக்கோம்...
.
அப்புறம்.. யாருக்காவது சந்தேகம் இருந்தா, நம்ம கடைக்கு அனுப்பி வையுங்க..( உங்களுக்காக, 10% டிஸ்கவுண்ட் கொடுக்கிறோம்)

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமை அருமை

அச்சு said...

kalakkal pathivu.