Sunday, October 8, 2017

த்ரீ-இன்-ஒன்:03

1. தாஜ்மஹால்ஒரு செய்தி வந்தால், அதை முழுமையாகப் படிக்காமல், வாயால் வடை சுடுவதில் நம்மில் பலர் சமர்த்தர்களாக இருப்பதைப் பார்க்க முடிகிறது. ஒரு பிரபல பதிவர், தாஜ்மஹாலை சுற்றுலாத்தலங்களிலிருந்து நீக்கி ஒரு சட்டமே இயற்றி விட்டதுபோல ஒரு பதிவு எழுதியிருக்கிறார். அப்படியொரு சட்டம் இயற்றப்பட்டதா, எப்போது என்று விஷயம் தெரிந்தவர்கள் வந்து சுட்டியளித்தால் அவர்களுக்குக் கோடிப்புண்ணியம். மேலோட்டமாக, சமூக வலைத்தளங்களில் வருகிற செய்திகளை வைத்து, இஷ்டத்துக்கு அடித்து ஒரு பதிவு போட வேண்டியது. யாராவது வந்து ‘ஐயா, இது தவறு’ என்று பின்னோட்டம் போடவும் முடியாது. அப்புறம் என்ன, ஆளாளுக்கு பொய்களை அள்ளித் தெளிக்க வேண்டியதுதான்; அதைப் பற்றியெல்லாம் யோசிக்காமல் தலையாட்டுகிற ஃபாலோயர்ஸ் வேறு! எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே? :-)


உண்மையில், மேம்படுத்தப்பட வேண்டிய சுற்றுலாத்தளங்கள் என்ற பட்டியலில் தாஜ்மஹால் இல்லை. அவ்வளவுதான். இதை அதிகாரபூர்வமாக தெரிவித்ததோடு, தாஜ்மஹால் மற்றும் அதன் சுற்றுப்புற வளர்ச்சிக்கு ரூ.156 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதையும் தெரிவித்தாயிற்று. இது ஊடகங்களிலும் வெளியாகி, முதலில் விஷமச்செய்தி பரப்பிய தொலைக்காட்சிகளே பொத்திக்கொண்டாகி விட்டது.  ஆனால், நம் தமிழகத்தில் சில பேருக்கு தாஜ்மஹால் மீது அவ்வளவு பாசம். எவ்வளவு பாசமென்றால், நம் தமிழகத்தில் இருக்கிற மதுரை மீனாட்சி கோவில் ஆகச்சிறந்த சுத்தமான கோவில் என்ற அறிவிப்பைக்கூட உதாசீனம் செய்துவிட்டு, எங்கோ இருக்கிற தாஜ்மஹாலைப் பற்றி இவர்களுக்கு அப்படியொரு அக்கறை! இந்த மாதிரி நாலு பதிவுகள் எழுதி ‘மதச்சார்பின்மை மாணிக்கம்’ என்ற பட்டம் வாங்கிக்கொள்ள அப்படியொரு அரிப்பு இவர்களுக்கு.

தாஜ்மஹால் காதல் சின்னமாம்! மக்கள் வரிப்பணத்தில் ஒரு கொழுப்பெடுத்த மொகலாய மன்னன், தனது எத்தனையோ மனைவிகளில் ஒருவருக்குக் கட்டிய நினைவுச்சின்னம் காதல் சின்னமாம். தாஜ்மஹாலின் நிஜங்களைப் பற்றி சற்றும் அறியாமல், போகிற போக்கில் பொங்கல் வைக்கிற இந்தப் போராளிகளைப் பார்த்து சிரிப்பதா அழுவதா தெரியவில்லை.

கவலை வேண்டாம்! தாஜ்மஹாலைப் பற்றிய உண்மைகளை வெகுவிரைவில் ‘அவமானச் சின்னம்’ என்ற பெயரில் தொடர்கட்டுரையாக எழுதவிருக்கிறேன். மதச்சார்பின்மை பேசுகிற மண்ணாங்கட்டிகள் வந்து, திராணியிருந்தால் நான் முன்வைக்கிற கருத்துக்களுக்கு மறுப்புத் தெரிவிக்கட்டும்.

2. பொருளாதாரம்....ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..ப்ப்பா!


டிமானிடைசேஷன் மற்றும் GST காரணமாக ஏப்ரல் தொடங்கி ஜூன் 2017 வரையிலான காலாண்டில் வளர்ச்சி குறைந்திருக்கிறது என்று தனது நீண்ட உரையில் பிரதமர் நரேந்திர மோடி சொன்னாலும் சொன்னார்; பொருள்விளங்காய் உருண்டைகளுக்குள் உறங்கிக்கொண்டிருந்த பொருளாதார மேதைகள் எல்லாம் விழித்துக் கொண்டுவிட்டார்கள். ‘ஆஹா, மோடியே சொல்லிட்டாரு; நாட்டுல பொருளாதாரம் நாசமாப்போச்சு,’ என்று ஆளாளுக்குக் கிளம்பி விட்டார்கள். அட அரைவேக்காடுகளா, மீதமுள்ள நேரத்தில் மோடி ‘இந்தியாவில் இத்தனை வளர்ச்சி நிகழ்ந்திருக்கிறது’ என்று புள்ளிவிபரங்களுடன் அளித்த தகவல்களை எடுத்துப் போட்டு ‘இது தவறு; இதுதான் உண்மையான புள்ளி விபரம்’ என்று பதிவெழுத ஒருத்தரையும் காணோம். சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்?


இப்போதும் ஒன்றும் குறைந்துபோய் விடவில்லை. மோடி அந்தக் கூட்டத்தில் தெரிவித்த புள்ளிவிபரங்கள் தவறானவை என்று ‘சரியான(?!)’ புள்ளிவிபரங்களுடன் எழுத யாரேனும் ஒரு புத்திஜீவி பதிவர் வராமலா போய்விடுவார்? காத்துக்கொண்டிருக்கிறேன்.

ஆனால், ஒருத்தரும் வரப்போவதில்லை. அவர்களுக்கு ஒரு பதிவு எழுதியதும் விஷயம் முடிந்துபோனது. அப்புறம் இருக்கவே இருக்கிறது காதல் கவிதை, கத்திரிக்காய் கவிதை, சமையல் குறிப்புக்குப் போய் பின்னோட்டம் போடுவது, கும்பல் சேர்த்துக்கொண்டு கும்மியடிப்பது...! பொருளாதாரம் பற்றிப் பேசுவதற்கெல்லாம் கொஞ்சம் அடிப்படை அறிவு வேண்டும். அவர்கள் என்ன செய்வார்கள் பாவம்?

3. கமல், ரஜினி, சுஹாசினி இன்ன பிறர்....


எனது முந்தைய பதிவொன்றில் எழுதியதுபோல, அரசியலுக்கு வர ரஜினியைவிட கமலுக்கு அருகதை அதிகம். கமல் வந்தால் வெல்வார் என்று பொருளல்ல. ஆனால், ரஜினியை விட கமலுக்கு சமூகப்பொறுப்பு சற்று அதிகம் என்பதை அவ்வப்போது வெளிப்படுத்தியிருக்கிறார். அவரது கருத்துக்களில் பெரும்பாலானவை எனக்கு ஏற்புடையதல்ல. ஆனால், குறைந்தபட்சம் தனது கருத்துக்களை வெளிப்படுத்துகிற துணிவாவது அவருக்கு இருக்கிறது.


என்னைப் பொறுத்தவரை....

தமிழகத்தில் தாமரை மலர வேண்டும்; பாஜக ஆட்சி வர வேண்டும் என்பது விருப்பம். இது உடனடியாக நடைபெறாவிட்டாலும் நாளடைவில் நடந்தே தீரும். அதற்கு ஒத்தாசை செய்வதற்கு வலையுலகத்திலும் வெளியிலும் நிறைய மதச்சார்பின்மை பேசுகிற மண்டூகங்கள் மலிந்து கிடக்கின்றனர். இவர்கள் தினமும் மோடி, மோடியென்று பேசிப்பேசியே, தமிழகத்தில் என் போன்றவர்கள் விரும்புகிற மாற்றத்தைக் கொண்டு வந்தே தீருவார்கள்.

நியாயப்படிப் பார்த்தால், ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க தொண்டர்களைவிட மோடியை தமிழகத்தில் அதிகம் பிரபலமாக்குகிறவர்கள் இவர்களே!ஆகவே இவர்களுக்கு இந்த சந்தர்ப்பத்தில் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Please continue the good work. :-)14 comments:

Avargal Unmaigal said...


அரைவேக்காடுகள் மோடி சொன்னதை வைத்து பதிவு எழுதுகின்றன ஆனால் முழு வேக்காடுகள் என்று சொல்லி கொள்பவர்கள் மோடி போட்டோ ஷாப்பில் போடும் புள்ளிவிபரங்களை அப்படியே உண்மை என்று நம்பி அதை பரப்பிக்கொண்டு இருக்கிறதுகள் என்னத்த சொல்ல இதுக்குமேல

middleclassmadhavi said...

தாஜ்மஹால் குறித்து பதிவிட்டு இருப்பது - (புன்)சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது. கமெண்டுகள் குறித்தே எனக்கு பலவித ஆதங்கங்கள் இருக்கின்றன... தாஜ்மஹால் குறித்த உண்மைகள் பதிவை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.
பொருளாதாரம் குறித்த அடிப்படை அறிவு கொஞ்சம் எனக்கு கம்மி தான்..அதனால் நான் மற்றவர்கள் அடியொற்றி... :-))
அரசியலுக்கு வருவது குறித்து ரஜினி புலி வருது போல் சொல்லி சொல்லி நம்பிக்கை போய் விட்டது. கமல் ஆரம்ப சூரத்தனத்தோடு நிறுத்தாமல் எந்த எதிர்ப்புக்கும் அஞ்சாமல் ஏதேனும் செய்தால் சரி. நிகழ்ச்சியில் வரும் அப்ளாஸ்காரர்கள் அனைவரும் அரசியல் தொண்டர்கள் ஆவார்கள் என அவர் எதிர்பார்த்து ஏமாறாமல் இருக்க வேண்டும்.
மற்றபடி உங்கள் விருப்பம் நிறைவேற்ற நிறைய பேர் ஒத்துழைக்கிறார்கள்! :-))

ஸ்ரீராம். said...

தாஜ்மஹால் தொடருக்காகக் காத்திருக்கிறேன்.

துரை செல்வராஜூ said...

தாஜ்மஹாலைப் பற்றிய தங்களுடைய கைவண்ணத்திற்காகக் காத்திருக்கிறேன்..

நெல்லைத் தமிழன் said...

சேட்டைக்காரர், நகைச்சுவையை கீழே இறக்கிவைத்துவிட்டு, சுத்தியலை எடுத்துவிட்டதுபோல் தெரிகிறதே.

தாஜ்மஹால் விஷயம் - டிமானிடைசேஷன் போது, ஏழைகள் சேர்த்துவைத்த 500/1000 ரூ எதுவும் செல்லாது என்று பயமுறுத்தியதுபோல்தான் பல பதிவுகள், கருத்துகள் வருகின்றன. இடுகைகளைப் பிரபலமாக்க இதெல்லாம் வழி போலிருக்கிறது. நானும் முதலில் இணையச் செய்திகளைப் பார்த்தபோது 'இது என்னடா தாஜ்மஹாலை ஒதுக்குகிறார்கள்' என்று பார்த்து, அப்புறம் 'செய்தியை முந்தித் தரும் புலிகளின்' டெக்னிக்கைப் புரிந்துகொண்டேன்.

பொருளாதாரப் புலிகள் - இவர்களில் அனேகமாக எல்லோரும், பெவிலியனிலிருந்தும், தொலைக்காட்சி முன்பாகவும் உட்கார்ந்து டென்டுல்கர், கோஹ்லி, தோனி எப்படி விளையாடவேண்டும் என்றும், அஷ்வின், குமார், பும்ரா அடுத்த பந்தை எப்படி வீசவேண்டும் என்றும் வகுப்பெடுப்பவர்கள் போன்றவர்கள்.

கமல் நேரம் கிடைத்தபோதெல்லாம் அவரது கருத்தை வெளிப்படுத்தியிருந்தாலும் அவர் திமுக சார்பானவர் என்பதை நேரம் கிடைத்தபோதெல்லாம் வெளிப்படுத்தியிருக்கிறார். நேற்று அவருடைய அண்ணன் சாருஹாசன் அவர்கள் சொன்னதுபோல, கமலும் ரஜினியும் சேர்ந்தாலும், கட்சி என்ற ஒன்று இல்லாததாலும், அவர்கள் வயதை ஒப்பு நோக்கியும், கமலஹாசன் பிராமணர் என்ற லேபிள் நோக்கியும், 10% வாக்குகளுக்குமேல் அவர்களுக்குக் கிடைக்காது. ரஜினி அவரது தொகுதியில் வெல்லுவார், கமல் டெபாசிட் வாங்க முயற்சிக்கலாம்.

நேற்றே பதில் எழுதிவிட்டேன் என்று நினைத்தேன்.

நெல்லைத் தமிழன் said...

தாஜ்மஹாலைப் பற்றி எழுதினீர்கள் என்றால் அந்த ஜோதியில் நானும் கலந்துகொள்வேன்.

தாஜ்மஹாலின் ஒரு பகுதிக்கு (கீழே இறங்கிச் செல்லும் பகுதி) இன்றும் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது.

தாஜ்மஹாலின் மேலே இருக்கும் சின்னம் பற்றி கவர் செய்வீர்கள் என்று நினைக்கிறேன்.

தேஜோமஹாலின் ரெஃபெரென்சும் இருக்கும் என்று நினைக்கிறேன்.

க கந்தசாமி said...

@avargal - அரைவேக்காடு என்பது அரைகுறை என்று பொருள்படும். முழு வேக்காடு என்பது பாராட்டு. என்ன புரிந்ததோ..?

க கந்தசாமி said...

சேட்டை.. பதிவிற்கு நன்றி. தீர விசாரித்து அறிவதே மெய் என்பது மிகச்சரியே.. உங்கள் பதிவு படித்தபின் நானும் இந்த மதச்சார்பின்மை மண்டூகங்கள் (நல்ல சொல்..) பற்றிப் புரிந்துகொண்டேன்.. நன்றி.

settaikkaran said...

//Avargal Unmaigal//

//முழு வேக்காடுகள் என்று சொல்லி கொள்பவர்கள் மோடி போட்டோ ஷாப்பில் போடும் புள்ளிவிபரங்களை அப்படியே உண்மை என்று நம்பி அதை பரப்பிக்கொண்டு இருக்கிறதுகள் என்னத்த சொல்ல இதுக்குமேல//

பாராட்டியவர்களுக்கு அப்புறம் நன்றி தெரிவிக்கலாம். ஆனால், விமர்சகர்களுக்கு உடனே பதிலளிப்பதுதானே முறை? :-)

நீங்கள் இன்னமும் ஃபோட்டோஷாப், வொயின்ஷாப் என்றுதான் வெட்டியாகப் பேசிக்கொண்டிருக்கிறீர்களே தவிர, அதெல்லாம் வெறும் ஃபோட்டோஷாப் வேலை, அத்தனையும் பொய் என்று புள்ளிவிபரங்களோடு நிரூபிக்க முயற்சிப்பதாய்த் தெரிகிறது. அதாவது, சொன்னதையே சொல்லும் கிளிப்பிள்ளை மாதிரி, கீறல் விழுந்த ரிகார்டு மாதிரி அலுப்பூட்டுவதுதான் உங்கள் உத்தியோ?

G.M Balasubramaniam said...

நாட்டில் பெரும்பாலானவர்களுக்கு இந்தப் பொருளாதார விபரங்கள் தெரியாது அவரவர்பெர்செப்ஷ்ன் படி செய்திகளைப்புரிந்து கொள்கிறார்கள் புள்ளி விவரங்கள் இருக்கட்டும் அவ்வப்போது சிலர் அவிழ்த்து விடும் கதைகளே பல செய்திகளுக்கும் ஆதாரமாக எண்ணப்படுகிறது ஆதியில் தாஜ் மகால் ஒரு சிவ வழிபாட்டுத்தலமாக இருந்தது என்று யாரோ கூறியதைப் படித்தநினைவு இம்மாதிரி செய்திகளை அவரவர் கோட்பாடுகளுக்கு ஏற்ப எழுதுவதே பதிவர்கள் செய்வது எனக்கு மோடி ஆட்சிக்கு ஆதரவு தருவது பிடிக்காத விஷயம் எப்படியோ அவர்கள் மத வாதிகள் என்னும் எண்ணம் வேரூன்றி விட்டது பலரும் என்னைப்போல்தான் இருப்பார்களென்று நினைக்கிறேன்

settaikkaran said...

//middleclassmadhavi//

//தாஜ்மஹால் குறித்த உண்மைகள் பதிவை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.//

கூடிய விரைவில் எழுதுவேன். :-)


//பொருளாதாரம் குறித்த அடிப்படை அறிவு கொஞ்சம் எனக்கு கம்மி தான்..அதனால் நான் மற்றவர்கள் அடியொற்றி... :-))//

பொருளாதாரம் குறித்து எனக்கும் பெரிதாக ஒன்றும் தெரியாது. ஆனால், அன்றாடம் செய்தித்தாள்கள் வாசிப்பதால், யாராவது புளுகினால் உடனே தெரிந்து விடுகிறது. அவ்வளவுதான். :-)

//கமல் ஆரம்ப சூரத்தனத்தோடு நிறுத்தாமல் எந்த எதிர்ப்புக்கும் அஞ்சாமல் ஏதேனும் செய்தால் சரி. நிகழ்ச்சியில் வரும் அப்ளாஸ்காரர்கள் அனைவரும் அரசியல் தொண்டர்கள் ஆவார்கள் என அவர் எதிர்பார்த்து ஏமாறாமல் இருக்க வேண்டும்.//

அவராலும் பெரிதாக எதையும் சாதிக்க முடியாது. இங்குள்ள அரசியல் சூழல் அப்படி. மற்றபடி நல்லது நடந்தால் சரிதான். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

settaikkaran said...

//Blogger ஸ்ரீராம்தா//

//Blogger துரை செல்வராஜூ//

எழுத ஆரம்பித்துவிட்டேன். விரைவில் பதிவிடுவேன் என்று நம்புகிறேன். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.:-)

settaikkaran said...

//Blogger நெல்லைத் தமிழன்//


//சேட்டைக்காரர், நகைச்சுவையை கீழே இறக்கிவைத்துவிட்டு, சுத்தியலை எடுத்துவிட்டதுபோல் தெரிகிறதே.//

அப்படியெல்லாம் இல்லை. விரைவில் பாலாமணி-கிட்டாமணி வருவார்கள். ஆந்தைக்குளம் ஐயாக்கண்ணுவும் வர வாய்ப்பு உள்ளது. சர்வநிச்சயமாக சோற்றுப்புதூர் சொறிகால் வளவனும் வருவார். :-)

//நானும் முதலில் இணையச் செய்திகளைப் பார்த்தபோது 'இது என்னடா தாஜ்மஹாலை ஒதுக்குகிறார்கள்' என்று பார்த்து, அப்புறம் 'செய்தியை முந்தித் தரும் புலிகளின்' டெக்னிக்கைப் புரிந்துகொண்டேன்.//

குறிப்பிட்ட இடுகையில் பின்னூட்டம் இட்டவர்களும் ஏறத்தாழ இதே மனநிலையில்தான் இருந்திருக்கிறார்கள். இன்றுவரை அந்தப் பதிவர் எனக்கு பதில் அளிக்கவில்லை.இவர்கள் எல்லாம் அவ்வளவுதான். :-)

//பொருளாதாரப் புலிகள் - இவர்களில் அனேகமாக எல்லோரும், பெவிலியனிலிருந்தும், தொலைக்காட்சி முன்பாகவும் உட்கார்ந்து டென்டுல்கர், கோஹ்லி, தோனி எப்படி விளையாடவேண்டும் என்றும், அஷ்வின், குமார், பும்ரா அடுத்த பந்தை எப்படி வீசவேண்டும் என்றும் வகுப்பெடுப்பவர்கள் போன்றவர்கள்.//

ஆஹா! உண்மை. Captial என்றால் என்ன, Turnover என்றால் என்ன, Profit என்றால் என்ன என்று தெரியாதவர்கள்கூட, பொருளாதாரம் பற்றியெல்லாம் பேசுவது எவ்வளவு வேடிக்கையாக இருக்கிறது தெரியுமா? செம காமெடி! :-)

//ரஜினி அவரது தொகுதியில் வெல்லுவார், கமல் டெபாசிட் வாங்க முயற்சிக்கலாம்.// :-)

கொஞ்சம் அரசியலில் பிஸியாகி விட்டேன். உடனடியாக பதிலெழுத முடிவதில்லை. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்! :-)

settaikkaran said...

//கருத்து கந்தசாமி//

//தீர விசாரித்து அறிவதே மெய் என்பது மிகச்சரியே.. உங்கள் பதிவு படித்தபின் நானும் இந்த மதச்சார்பின்மை மண்டூகங்கள் (நல்ல சொல்..) பற்றிப் புரிந்துகொண்டேன்.. நன்றி.//

நான்தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். இதுபோன்ற பதிவுகளுக்கு ஆதரவாகப் பின்னூட்டமிடுகிற துணிச்சல் உங்களைப் போன்று நிறைய பேருக்கு வர வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

மிக்க நன்றி.