Thursday, August 31, 2017

த்ரீ-இன்-ஒன் பதிவு

ஒன்று: கிரிக்கெட்


என்னுடைய மிகச்சிறிய வாசிப்பனுபவத்தில் சுஜாதாவின் சில கட்டுரைகள் ’பசக்’கென்று ஞாபகம் இருக்கின்றன. அதில் ஸ்ரீரங்கம்-தஞ்சாவூர் அணிகளுக்கு இடையே நடந்த ஒரு கிரிக்கெட் போட்டி பற்றி, விலா எலும்பு நோகச் சிரிக்க வைத்து ஒரு அனாயசாமான கட்டுரை எழுதியிருந்தார். 

அனேகமாக அந்தக் கட்டுரையில் அவர் குறிப்பிட்டிருந்த ரங்கு கடை போல ஒரு தூங்குமூஞ்சி கடையில் நாமும் நம் ஊர்களில் எப்போதாவது கடனுக்கு கத்திரி சிகரெட் வாங்கிப் புகைத்திருக்கலாம். அந்த மேலவீதி அம்பிபோல உருப்படியாக ஒரு பேட், பால் கூட இல்லாமல் வெளியூர் டீமையெல்லாம் மாட்ச் ஆடக் கூப்புடுகிற சவடால் சினேகிதர்களும் நமக்கு அவசியம் இருந்திருக்கிறார்கள். சுஜாதா பாணியிலேயே ‘கச்சலாக’ இருந்து, ஆட்டம் பார்க்க அழகாய் இல்லாதபோதும் பந்தைத் ’தேக்கி அடிக்கிற’ சாமர்த்தியமுள்ள நோஞ்சானை நாமும் பார்த்திருப்போம். ’த்ரோ’ மாதிரி பந்து போட்டு ’சாலக்காக’ விக்கெட் எடுப்பவர்களையும் நாம் அறிவோம். 

இவ்வாறாக, ‘தோற்பது நிஜம்’ என்று நெற்றியில் ரெட்-ஆக்ஸைடால் எழுதப்பட்ட அணிகள் சில சமயங்களில் ராட்சச டீம்களை மண்ணைக் கவிழ வைக்கிற மகோன்னதங்களும் நம் அனுபவத்தில் இருக்கத்தான் செய்யும். (அடியேனின் அணி செயிண்ட் ஜோசப் அணியை பாளையங்கோட்டையில் தோற்கடித்துவிட்டு நான்குநேரி வரை பாடிக்கொண்டு வந்து, வள்ளியூர் தாண்டுமுன் தொண்டை வற்றியதும் ஞாபகத்துக்கு வருகிறது. வழக்கம்போல நான் அதிலும் ஒன்றும் கிழிக்கவில்லை.)

இதைப்போலத்தான்! தென் ஆப்பிரிக்காவுக்குத் தண்ணி காட்டிய (வாடிக்கையான) மதர்ப்பில் சற்றே ஓவராக காலரை உயர்த்திய இங்கிலாந்து அணியை, பார்த்தாலேயே பரிதாபம் வரவழைக்கிற ஒரு மேற்கு இந்திய அணி, லீட்ஸ் மைதானத்தில் பதம் பார்த்திருப்பது, சுஜாதாவின் கட்டுரை உட்பட பல சங்கதிகளை ஞாபகப்படுத்தியது. கிரிக்கெட் திமிர் பிடித்தவர்களின் மண்டை வீங்கக் குட்டும் என்பதற்கான சமீபத்திய உதாரணம். இங்கிலாந்து அணி ஒரு தொடர் ஜெயித்தால் பதினோரு பேர்களும் இருபத்தி இரண்டு பேர்களுக்கான வீறாப்பு பேசுவது வழக்கம். பின்னால், சொப்பை அணியிடம் அடிவாங்கி, கேப்டன் பதவி விலகி, போன மாதம் லங்காஷேர் கவுன்டியில் முன்னூறு ரன்கள், முப்பது விக்கெடுகள் ( 45 மாட்சுகளில்) எடுத்தவரை கேப்டனாக்குவதும் பாரம்பரியம் என அறிக.


அப்புறம், நம்ம இந்தியா இலங்கையை அடித்து நொறுக்கியது பற்றியெல்லாம் ஒன்றும் சொல்வதற்கில்லை.  பதினோரு பல்குத்தும் குச்சிகளை ஈவு இரக்கமில்லாமல் நொறுக்கியது குறித்துப் பெருமைப்பட்டால், கோலிக்கு ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள் என்று பயில்வான் பக்கிரிகள் காத்திருக்கிறார்கள். அம்புட்டுத்தேன்.


2.அரசியல்

கமல்ஹாசன் மீது எனக்கிருக்கிற அபிமானம், ஓ.பி.எஸ் மீது டிடிவி.தினகரனுக்கு இருக்கும் அபிமானத்துக்குச் சற்றும் குறைந்ததல்ல என்று இங்கு தொடர்ந்து வருகிறவர்களுக்குத் தெரியும். இருந்தும், தற்போது அவர் ‘ட்விட்டர்’ல் விடுகிற கீச்சுகளுக்கு நான் ரசிகனாகிக் கொண்டிருக்கிறேன். கமல் - ரஜினி இருவரில் அரசியலுக்கு வருகிற தகுதி யாருக்கு அதிகம் இருக்கிறது என்று கேட்பதைவிட, அந்தத் தகுதி முதலில் யாருக்கு இருக்கிறது என்று கேட்டால், நிச்சயம் கமல்ஹாசனுக்கே இருக்கிறது. போதாக்குறைக்கு ‘சுயமரியாதை’ வீரர் வேறு! இந்து மதத்தை எள்ளி நகையாடுவதில் சமர்த்தர் என்பது கூடுதல் தகுதியாகும்.  நிச்சயம் மக்கள் கமலுக்கு ஓட்டுப் போடுவார்கள் என்றே நம்புகிறேன். அட, ஓவியாவுக்குப் போட்டவர்கள், கமலுக்குப் போடாமலா இருப்பார்கள்?

சீரியஸாகவே, கமல் அரசியலுக்கு வந்தால் ஆதரிக்கலாம். சீரியஸாகவே, அவரது கருத்துக்கள் சிறப்பாகவே இருக்கின்றன. சீரியஸாகவே, அவர் எடுத்திருக்கிற நிலைப்பாடு சரியானது; பொருத்தமானதும் கூட! 

இத்தனை நாட்கள் என்ன செய்து கொண்டிருந்தாராம்? ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது வாய்பொத்திக்கொண்டு இருந்தாரே?’


இது சொத்தை வாதம்!

ஜெ. உயிரோடு இருந்தபோது, நம் வலையுலகிலேயே கூட எத்தனைபேர் துணிச்சலாக எழுதினார்கள்? உண்மைத்தமிழன், ஜாக்கி சேகர், புதுகை அப்துல்லா..... அட, இன்னும் ஐந்து விரல் கூட தேறவில்லையே!

ஜெ..உயிரோடு இருந்திருந்தால், ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்தியிருப்பார்களா? சந்தேகம்தான்! ஓ.பி.எஸ்-ஸை ‘மிக்சர்’ என்று நக்கலடித்ததுபோல, ஜெவை யாராவது நக்கலடித்திருப்பார்களா? ஊஹும்!

இதில் கமல் மட்டும் என்ன பாவம் செய்தார்? அவரும் உறுமீன் வருமளவு வாடியிருந்து ட்வீட்டுகிறார். 

தனது படங்களின் படப்பிடிப்புக்களைக் கூட தமிழகம் தவிர்த்துப் பிற மாநிலங்களில் வைத்துக்கொள்கிற ரஜினியை விட, கமல் தைரியமானவர் என்றுதான் தோன்றுகிறது. மேலும், தமிழகத்தைப் பற்றி ரஜினிக்கு என்ன தெரியும்? கல்யாண மண்டபத்தில் கூடுகிற விசிலடிச்சான் குஞ்சுகளை தமிழக மக்கள் என்று நினைத்தால் அப்புறம் கதை கந்தலாகி விடும். அம்புட்டுத்தேன்.


3. ஆன்மீகம்


ஹர்யானாவில் குர்மீத் சிங் ராம் ரஹீம் இன்சான் என்ற மதகுரு பாலியல் குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்டதை வைத்துக் கொண்டு, சில அரைவேக்காடுகள் இந்துமதத்தை மட்டம் தட்டி எழுதிக் கொண்டு வருகின்றன. அவர் பிறப்பால் ஒரு சீக்கியர் என்பது ஞாபகம் இருக்கட்டும். பா.ஜ.க மட்டுமல்ல, காங்கிரஸ் மட்டுமல்ல, முலாயம் சிங் யாதவ் உட்பட பல அரசியல் தலைவர்கள் அவருடன் அனுசரித்துப் போயிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

”சரி, கேரளாவில் அடுத்தடுத்து பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான கிறித்துவப் பாதிரியார்கள் குறித்து நமது செக்யூலர் பதிவர்கள் ஏன் இன்னும் கொதிக்கவில்லை?

ஜாகீர் நாயிக் என்னும் இஸ்லாமிய மதகுரு, மதமாற்றம் மற்றும் தீவிரவாதத்தை ஊக்குவித்ததைப் பற்றி ஏன் எழுதவில்லை?”


..................ன்று கேள்விகள் எழலாம். கேட்க வேண்டாம்.


பி.கு:

எழுதாமல் இருந்தால் ‘ஏன் எழுதுவதில்லை?’ என்று கேட்க வேண்டியது. எழுதினால் கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டியது. ஆனால், பெண் பதிவர்கள் பதிவுகளுக்கு மட்டும் தவறாமல் போய் கருத்தும் எழுதி, த.ம.ஓ.ந-வையும் குறிப்பிட வேண்டியது.

வலையுலகம் மாறவேயில்லை. அட போங்கய்யா!19 comments:

Unknown said...

தொடர்ந்து உங்களிடம் இருந்து 3in1பதிவுகளை எதிர்பார்க்கிறேன் :)
சுஜாதா எழுதியது ,குமுதத்தில் படித்த ஞாபகம் ,ரசித்ததுண்டு :)
நம்ம கமல் பொங்கினால் ,அங்கே' கமல் 'ஆலயம் பற்றிக் கொண்டு எரிவதால் அரசியலுக்கு வருவது நல்லதே :)
மதத்தின் பெயரால் ஏமாற்றுவோர் மட்டுமல்ல ,மதவாதிகள் கூட தண்டிக்கப் பட வேண்டியவர்களே:)

பி கு வில், நீங்கள் ஒரு மூத்த பதிவரைப் பற்றி எழுதி இருந்ததை நானும் ரசித்தேன் ,அதில் ஒரு சின்ன திருத்தம் ,கருத்தும் எழுதி ...பல கருத்துக்கள் என இருக்க வேண்டும் :)

நெல்லைத் தமிழன் said...

படித்தேன். சில தவறுகளைப் பார்த்தேன். முக்கியமானது விட்டுப்போயிருக்கிறது. வர்றேன்ன்ன்..

Unknown said...

முப்பெரு அலசல்! முற்றிலும் நன்று!

நெல்லைத் தமிழன் said...

1. பாளையங்கோட்டையில் தோற்கடித்தது திருச்சி செயின்ட் ஜோசப் அணியா அல்லது பாளையங்கோட்டை செயின்ட் ஜான்ஸ் அணியா?

இடுகையை கொஞ்ச நாள் முன்னமேயே எழுதிட்டீங்களா? பங்களாதேஷ் ஆஸ்திரேலியாவை துவைத்து காயப்போட்டதை இதுல எழுத விட்டுட்டீங்களே.

2. "இது சொத்தை வாதம்!" - அரசியலுக்கு நான் பின்னூட்டம் எழுதறதில்லை. இருந்தாலும் சொல்றேன். கமலஹாசன், 'அதிமுக ஊழல்' அப்படின்னு சொல்லிட்டு முரசொலி விழாவுல கலந்துகொள்ளும்போதுதான் அவர் சொல்றதுக்கு கிரெடிபிலிட்டி வர்றதில்லை. ஜெவை அப்போ எதிர்க்க பயப்பட்டிருக்கலாம், தவறில்லை, ஆனால் திமுகாவையோ காங்கிரசையோ ட்வீட் பண்ணினமாதிரி (அப்போவும் இப்போவும்) தெரியலையே. இது யாரோ நட்டுவச்ச மரத்தை, இவர் வந்து எடுத்துக்கொள்ளலாம் என்று நினைப்பதுபோல்தானே இருக்கிறது.

3. ஆன்மீகம் - நீங்கள் எழுதியுள்ளது சரிதான். செக்யூலர் பதிவர்கள் இதைப் பற்றி எழுதியிருந்தால், உங்கள் கேள்விகளில் அர்த்தம் இருக்கிறது.

உங்கள் பி.கு - பொதுவா, ஒருத்தர் மெனக்கெட்டு பின்னூட்டம் எழுதி, அதற்கு தள ஆசிரியர் பதில் சொல்லலைனா, நீங்கள் சொன்னதுபோல் 'வலையுலகம் மாறவேயில்லை, அட போங்கய்யா!!' என்று சொல்லலாமல்லவா?

ஸ்ரீராம். said...

கிரிக்கெட்டில் பங்களாதேஷ் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதை விட்டு விட்டீர்கள்!

கமலா, ரஜினியோ அரசியலில் என்ன சாதிப்பார்கள் என்று தெரியவில்லை. கமல் சுயநலக் காரணத்துடன் உள்ளே வருகிறார். ரஜினி வருவாரா என்பது கேள்விக்குறிதான்!

மதகுருக்கள் பற்றிய கேள்விக்கு ஜே... ரைசா குரலில் பின்குறிப்புப் படித்தேன். சந்தேகமே வேண்டாம். நான் போகும் பதிவுகளில் கட்டாயம் தம வாங்கிட்டு விடுவேன். அரசியல், மற்றும் வெறெந்தக் காரணமும் பார்க்க மாட்டேன். இங்கும் போட்டு விட்டேன்!

settaikkaran said...

Blogger Bagawanjee KA


//நம்ம கமல் பொங்கினால் ,அங்கே' கமல் 'ஆலயம் பற்றிக் கொண்டு எரிவதால் அரசியலுக்கு வருவது நல்லதே :)//

கமல் - கமல் ஆலயம்; நல்லாயிருக்கு! எமர்ஜன்சிக்குப் பிறகு மே.வங்கத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வர முடியவில்லை. பாப்ரி மசூதி இடிப்புக்குப் பிறகு உ.பியில் காலூன்ற முடியவில்லை. குஜராத்தில்கூட கோட்டை தகர்ந்தே போயிருக்கிறது. இதுபோல தென்னகம் பாஜகவுக்கு இருக்கலாம். ஆனால், நிச்சயம் நீண்ட நாளைக்கு இது நீடிக்காது என்று நம்புகிறேன். :-)

//மதத்தின் பெயரால் ஏமாற்றுவோர் மட்டுமல்ல ,மதவாதிகள் கூட தண்டிக்கப் பட வேண்டியவர்களே:)//

மதவாதிகள் என்பதற்கு ஒவ்வொரு அரசியல் கட்சியும் ஒவ்வொரு பொருள் கற்பித்து வருவதால் வந்த வினைதான் இதெல்லாம்.

//பி கு வில், நீங்கள் ஒரு மூத்த பதிவரைப் பற்றி எழுதி இருந்ததை நானும் ரசித்தேன் ,அதில் ஒரு சின்ன திருத்தம் ,கருத்தும் எழுதி ...பல கருத்துக்கள் என இருக்க வேண்டும் :) //

நான் எந்தப் பதிவரையும் குறிப்பிடவில்லை. நேரில் சந்திக்கும்போதெல்லாம் எழுதுங்க எழுதுங்க என்று சொல்லிவிட்டு, எழுதினால் கண்டும் காணாமல் போகிற என்னுடைய நெருங்கிய நண்பர்கள் சிலருக்குத்தான் அது. :-)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! :-)

settaikkaran said...

Blogger புலவர் இராமாநுசம்

ஐயா வருகை அகமகிழ்வு
அதுவே எனக்கு மனநெகிழ்வு!

நன்றி ஐயா

settaikkaran said...

//நெல்லைத் தமிழன்//

{1. பாளையங்கோட்டையில் தோற்கடித்தது திருச்சி செயின்ட் ஜோசப் அணியா அல்லது பாளையங்கோட்டை செயின்ட் ஜான்ஸ் அணியா?}

ரெண்டும் இல்லை. செயிண்ட் ஸேவியர்ஸ்! 40 வருஷம் முன்னாடி நடந்தது. மறந்திட்டேன். :-)

{இடுகையை கொஞ்ச நாள் முன்னமேயே எழுதிட்டீங்களா? பங்களாதேஷ் ஆஸ்திரேலியாவை துவைத்து காயப்போட்டதை இதுல எழுத விட்டுட்டீங்களே.}

ஆமால்ல? ஆனால், பங்களாதேஷில் எல்லாருமே திணறுவதால், கடினமாக இருக்குமென்று நினைத்தேன். ஆனால், ஆஸ்திரேலியா தோற்குமென்று நினைக்கவில்லை. ஸோ ஸாட்! :-(

{2. "இது சொத்தை வாதம்!" - அரசியலுக்கு நான் பின்னூட்டம் எழுதறதில்லை. இருந்தாலும் சொல்றேன். கமலஹாசன், 'அதிமுக ஊழல்' அப்படின்னு சொல்லிட்டு முரசொலி விழாவுல கலந்துகொள்ளும்போதுதான் அவர் சொல்றதுக்கு கிரெடிபிலிட்டி வர்றதில்லை. ஜெவை அப்போ எதிர்க்க பயப்பட்டிருக்கலாம், தவறில்லை, ஆனால் திமுகாவையோ காங்கிரசையோ ட்வீட் பண்ணினமாதிரி (அப்போவும் இப்போவும்) தெரியலையே. இது யாரோ நட்டுவச்ச மரத்தை, இவர் வந்து எடுத்துக்கொள்ளலாம் என்று நினைப்பதுபோல்தானே இருக்கிறது.}


அவர்தான் நாத்திகவாதியாச்சே! அவர் போக இப்ப தி.மு.க.தவிர வேறு என்ன கட்சி இருக்கு? :-)

அப்புறம், எப்படியாவது ஆட்சி கவிழ்ந்து, தி.மு.க தேர்தலில் ஜெயிச்சு ஆட்சிக்கு வந்தால், தைரியமாக ‘விஸ்வரூபம்’ படத்தை ரிலீஸ் பண்ணுவாரே? அதையும் கவனியுங்க! :-)

{3. ஆன்மீகம் - நீங்கள் எழுதியுள்ளது சரிதான். செக்யூலர் பதிவர்கள் இதைப் பற்றி எழுதியிருந்தால், உங்கள் கேள்விகளில் அர்த்தம் இருக்கிறது.}

நீங்க பாராட்டிட்டீங்க, இன்னும் யார் யார் வந்து வையப்போறாங்களோ தெரியலை. பார்க்கலாம். :-)

{உங்கள் பி.கு - பொதுவா, ஒருத்தர் மெனக்கெட்டு பின்னூட்டம் எழுதி, அதற்கு தள ஆசிரியர் பதில் சொல்லலைனா, நீங்கள் சொன்னதுபோல் 'வலையுலகம் மாறவேயில்லை, அட போங்கய்யா!!' என்று சொல்லலாமல்லவா?}

கரெக்ட்! நானே பல பின்னூட்டங்களுக்கு நன்றிகூட சொல்லாமல் இருக்கிறேன். அதை பின்னூட்டம் இடும் இடத்துலேயே குறிப்பிட்டும் இருக்கிறேன். ஆனால், இதற்கு முந்தைய பதிவுக்கு பதில் போட்டிருக்கிறேன் என்று ஞாபகம். இன்னொன்று, நான் யாரிடமும் போய் ‘ஐயா எழுதுங்க, அண்ணா எழுதுங்க,’ என்றெல்லாம் சொன்னதில்லை. எல்லாருக்கும் ஏதாவது ஒரு பிரச்சினை இருக்கும் அதனால் எழுதாமல் இருப்பார்கள் என்று எண்ணிக் கடந்து போகிறவன் நான்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

settaikkaran said...

//ஸ்ரீராம்//

{கிரிக்கெட்டில் பங்களாதேஷ் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதை விட்டு விட்டீர்கள்!}

ஆனைக்கே அடிசறுக்கும்போது நான் ஒரு பூனைதானே! மன்னிச்சிடுங்க ஸ்ரீராம்! :-)

{கமலா, ரஜினியோ அரசியலில் என்ன சாதிப்பார்கள் என்று தெரியவில்லை. கமல் சுயநலக் காரணத்துடன் உள்ளே வருகிறார். ரஜினி வருவாரா என்பது கேள்விக்குறிதான்!}

யாராலும் நன்மை கிடையாது. ஆனால், கமலுக்கு அப்படியொரு எண்ணம் இருப்பதாகவாவது காட்டிக் கொள்கிறார். ரஜினி தனது பஞ்ச் டயலாக்குகளை மட்டும் நம்பிக் கொண்டிருக்கிறார் என்று எண்ணுகிறேன். :-)


{மதகுருக்கள் பற்றிய கேள்விக்கு ஜே... }

(ரைசா குரலில் பின்குறிப்புப் படித்தேன். சந்தேகமே வேண்டாம். நான் போகும் பதிவுகளில் கட்டாயம் தம வாங்கிட்டு விடுவேன். அரசியல், மற்றும் வெறெந்தக் காரணமும் பார்க்க மாட்டேன். இங்கும் போட்டு விட்டேன்!}

நீங்கள்தான் தவறாமல் ஆஜர் ஆகிறவர் ஆச்சே ஸ்ரீராம்! மிக்க நன்றி!

நெல்லைத் தமிழன் said...

"ரெண்டும் இல்லை. செயிண்ட் ஸேவியர்ஸ்! 40 வருஷம் முன்னாடி நடந்தது. மறந்திட்டேன். :-)"

சேட்டைக்காரன் சார்... அப்படியே கேட்காமலேயே இருந்திருக்கலாமே என்று எண்ணவைத்துவிட்டீர்களே. எங்கள் காலேஜைத் தோற்கடித்தவரை, அதுவும் எங்கிட்ட பெருமை பீத்திக்கொண்டவரை, இப்போது என்ன பண்ணலாம், நீங்களே சொல்லுங்கள். 40 வருஷம்னா, 78களா?

பாளையங்கோட்டைல, செயின்ட் சேவியர்ஸ் பொதுவா 'அப்பிராணி' குரூப் என்றும் செயின்ட் ஜான்ஸ் கொஞ்சம் அடாவடி குரூப் என்றும் பெயர். (நானே ஒரு ஹாக்கி மேச்'ல அவங்க சேவியர்ஸ்ட, 0-5 னு பின்'தங்கி இருந்தபோது, கடைசி நேரத்துல அவங்க கோச், பிளேயர்கள்ட, அடிச்சு அடாவடியா விளையாடுங்க, ரெஃப்ரியைப் பத்திக் கவலைப்படாதீங்க (நிஜமாவே மட்டையால் ஆளை அடிக்கச்சொன்னார்) என்று சொன்னதை நான் கேட்டிருக்கிறேன் (1979ல்).

settaikkaran said...


நெல்லைத் தமிழன்

//எங்கள் காலேஜைத் தோற்கடித்தவரை, அதுவும் எங்கிட்ட பெருமை பீத்திக்கொண்டவரை, இப்போது என்ன பண்ணலாம், நீங்களே சொல்லுங்கள். 40 வருஷம்னா, 78களா?//

77 என்று ஞாபகம். வ.உ.சி.மைதானத்தில் ஒரே நேரத்தில் இரண்டு மேட்சுகள் நடந்தன. Friendly Match போலத்தான் இருந்தது. அந்தக் குழுவிலிருந்த சிலர் பல வருடங்கள் என்னுடன் தொடர்பில் இருந்தார்கள். நாங்கள் ஜெயித்தது ஒரு ஃப்ளூக்கில் தான்! :-)

நாகர்கோவில் இந்துக்கல்லூரி ஸ்காட் கிறித்துவக் கல்லூரி சண்டைபற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஒரு கல்லூரிக்குள் இன்னொரு கல்லூரி மாணவர்கள் புகுந்து அடித்து நொறுக்கிய வரலாறெல்லாம் உண்டு. ஹூம்ம்ம்ம்! :-))

வலிப்போக்கன் said...

நன்றாகவே உட்காரந்து யோசித்து இருக்கீங்க...தலைவரே....!!!

G.M Balasubramaniam said...

கிரிக்கட் என்ற வுடன் நினைவுக்கு வருவ்து பெங்களூரில் என்னோடு கிரிக்கட் விளையாடிய ஒருவர் மாநில மந்திரியானார்

settaikkaran said...

//வலிப்போக்கன்
நன்றாகவே உட்காரந்து யோசித்து இருக்கீங்க...தலைவரே....!!!//

ஆமாம்! இந்த மாதிரி நல்லா உட்கார்ந்தே ரொம்ப நாளாச்சு. :-)))))
வருகைக்கு நன்றி!

settaikkaran said...

//G.M Balasubramaniam
கிரிக்கட் என்ற வுடன் நினைவுக்கு வருவ்து பெங்களூரில் என்னோடு கிரிக்கட் விளையாடிய ஒருவர் மாநில மந்திரியானார்//

என்னோடு கிரிக்கெட் விளையாடியவரும் மாநில அமைச்சரானார். பெயர் நயினார் நாகேந்திரன். :-)

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

மூன்றும் சுவாரசியம். //வழக்கம்போல நான் அதிலும் ஒன்றும் கிழிக்கவில்லை.)// ISI முத்திரை சேட்டை.
Cricket is a game of uncertainty என்பது எவ்வளவு உண்மை.

விஸ்வநாத் said...

//ஆனால், பெண் பதிவர்கள் பதிவுகளுக்கு மட்டும் தவறாமல் போய் கருத்தும் எழுதி, த.ம.ஓ.ந-வையும் குறிப்பிட வேண்டியது.// யாராயிருக்கும் அது ?

Thangaraj said...

Supper sir

Thangaraj said...
This comment has been removed by the author.