Thursday, June 19, 2014

கிட்டாமணியை வெட்டென மற..!அரோகரா ஆஸ்பத்திரி வாசலில் பத்து வருடங்களாக டயர் மாற்றாத அந்தக் காவல்துறை ஜீப் சத்தியத்துக்குக் கட்டுப்பட்டு சர்ரென்று பிரேக் போட்டு நின்றது. அதிலிருந்து இன்ஸ்பெக்டர் வாறண்ட் வள்ளிக்கண்ணு துள்ளியிறங்கி உள்ளே நுழைந்தார். வள்ளிக்கண்ணுவைப் பார்த்த டாக்டர் ஊளம்பாறை உலகப்பனின் முகம் தண்ணீர் தெளித்த தக்காளிப்பழம் போலப் பளபளத்தது.

”வாங்க இன்ஸ்பெக்டர்! உங்களைப் பார்த்ததும்தான் எனக்கு ஐ.சி.யூவுக்குப் போன கேஸு வார்டுக்கு வந்த மாதிரியிருக்கு!”

“எதுக்கு அவசரமா வரச்சொன்னீங்க டாக்டர்? அஸால்ட் கேஸா? சூஸைட் கேஸா? டவுரி கேஸா? டொமஸ்டிக் வயலன்ஸ் கேஸா?”

“என்ன சார், நரம்புத்தளர்ச்சி நாட்டுமருந்து விளம்பரம் மாதிரி  அடுக்கிட்டே போறீங்க?” டாக்டர் எரிச்சலுடன் கேட்டார். “எங்க ஹாஸ்பிட்டல்லே ஒரு வித்தியாசமான கேஸ் அட்மிட் பண்ணியிருக்கோம்.”

”ஐயோ பாவம்!” என்று வாய்தவறிச் சொன்ன இன்ஸ்பெக்டர் உடனே சுதாரித்துக் கொண்டு, ”சரி, அதுக்கு என்னை எதுக்குக் கூப்பிட்டீங்க? அந்த பேஷியண்டுக்கு போலீஸ் பாதுகாப்பு வேணுமா?” என்று கேட்டார்.

“”பேஷியண்ட்டுக்கு வேண்டாம் சார், பேஷியண்டோட புருஷனுக்குத்தான் பாதுகாப்பு வேணும் போலிருக்கு!” டாக்டரின் குரல் பேட்டரி பழுதான பழைய லாம்பி ஸ்கூட்டரின் ஹாரன்போலச் சன்னமாக ஒலித்தது.

”டாக்டர்!’ இன்ஸ்பெக்டர் பொறுமையிழந்து இரைந்தார். “பிரிஸ்கிருப்ஷன் மாதிரிக் குழப்பாம, பில் மாதிரி பளிச்சுன்னு சொல்லுங்க! என்ன மேட்டர்?”

”சொல்றேன் இன்ஸ்பெக்டர்! எனக்கு பாலாமணின்னு ஒரு லேடி பேஷியண்ட் இருக்காங்க. டிவி சீரியல் பார்த்துப் பார்த்து மனநிலை பாதிக்கப்பட்டு அப்பப்போ கவுன்ஸிலிங்குக்காக என்கிட்டே வருவாங்க. அவங்க புருஷன் பேரு கிட்டாமணி!”

”அவரு எப்படி இருக்காரு?” இன்ஸ்பெக்டர் இடைமறித்தார்.

“அவர் எப்பவும்போல நார்மலா அரைலூசு மாதிரித்தான் இருக்காரு!” என்ற டாக்டர் தொடர்ந்தார். “ஆனா, திடீர்னு பாலாமணி கிட்டாமணியை புருஷனே இல்லைன்னு சொல்றாங்க. ஒரிஜினல் ;புருஷன் கிட்டாமணியை எங்கேயோ ஒளிச்சு வைச்சிட்டு அவர் மாதிரியே இருக்கிற இன்னொரு ஆளு கிட்டாமணி பேரைச் சொல்லிக்கிட்டு வந்திருக்காருன்னு சொல்றாங்க.”

”ஓ மை காட்!” வள்ளிக்கண்ணுவின் வாய் வள்ளுவர்கோட்டம் வாசல்கதவு போலத் திறந்தது. ”கட்டின மனைவியே சொல்றாங்கன்னா, ஒரு வேளை உண்மையா இருக்குமோ? யாராவது கடத்தியிருப்பாங்களோ?”

“ஐயையே! அந்தக் கிட்டாமணி அவ்வளவு வொர்த் இல்லீங்க! பொடி வாங்கறதுக்கே பொஞ்சாதிகிட்டே பொய்சொல்லி தினமும் பதிமூணு ரூபா வாங்குறவரு! அவரைக் கடத்திட்டுப் போனா மூக்குச் சிந்தின கர்ச்சீப் மட்டும்தான் கிடைக்கும்.”

”அப்புறம் ஏன் பாலாமணி அப்படிச் சொல்லணும்?”

“இது ஒரு மனநிலை பாதிப்பு இன்ஸ்பெக்டர்! இதுக்கு கேப்கிராஸ் டில்யூஷன்னு பேரு! இதனாலே பாதிக்கப்பட்ட புருசனுங்க திடீர்னு பொஞ்சாதியை டூப்ளிகேட்னு சொல்லுவாங்க; பொஞ்சாதிங்க புருஷனை டூப்ளிகேட்னு சொல்லுவாங்க! இது ஒரு அபூர்வமான மனவியாதி! கோடியிலே ஒருத்தருக்குத்தான் வரும்!”

“அடடா, அப்போ எல்லோருக்கும் வராதா? சே!” இன்ஸ்பெக்டர் அலுத்துக்கொண்டார். “ஹும், அதுக்கெல்லாம் அதிர்ஷ்டம் வேணும்.”
   
   ”உங்க சொந்தக்கவலையெல்லாம் அப்புறம் இன்ஸ்பெக்டர்! உடனடியா இந்த டூப்ளிகேட் புருஷனைப் போலீஸ்லே பிடிச்சுக் கொடுத்திட்டு ஒரிஜினல் புருஷனைக் கூட்டிட்டு வரலேன்னா, கிட்டாமணியையும் என்னையும் கொலை பண்ணிடுவேன்னு அந்த பாலாமணி அழும்பு பண்ணிட்டிருக்காங்க!” டாக்டர் உலகப்பன் அழுது விடுவார் போலிருந்தது.

      ”என் சர்வீஸுலே…..!” என்று இன்ஸ்பெக்டர் வள்ளிக்கண்ணு தொடங்க, “இப்படியொரு கேஸைப் பார்த்ததேயில்லை,” என்று முடித்தார் டாக்டர் உலகப்பன். “போலீஸைப் பார்த்தா கொஞ்சம் பயப்பட்டு ட்ரீட்மெண்ட்டுக்கு ஒத்துழைப்பாங்கன்னு நினைக்கிறேன். தயவு செய்து கூட வாங்க ஸார்.”

      ”அந்தக் கிட்டாமணி எங்கேயிருக்காரு?” வள்ளிக்கண்ணு கம்பீரமாய்க் கேட்டார்.

      ”அதோ, உறிஞ்சி முடிச்ச ஸ்ட்ராவுக்கு உடுப்பு மாட்டி விட்டது மாதிரி உட்கார்ந்திட்டிருக்காரே அவர்தான்!” என்று டாக்டர் உலகப்பன் காட்டிய திசையில், கிட்டாமணி பஞ்சரான காருக்கு ஜாக்கி போட்டதுபோல, முகத்தைக் கையால் தாங்கியபடி அமர்ந்திருந்தார்.

      ”மிஸ்டர் கிட்டாமணி!” என்று டாக்டர் அழைத்ததைக் கேட்டு எழுந்த கிட்டாமணியின் முகம் இன்ஸ்பெக்டரைப் பார்த்ததும் பத்து தடவை சலவை செய்யப்பட்ட பிளாட்பார பனியனைப் போலச் சுருங்கியது. மாசக்கடைசியில் கலெக்‌ஷனுக்கு வந்த கேபிள் டிவிக்காரரைப் பார்ப்பதுபோல இன்ஸ்பெக்டரைக் கலவரத்துடன் பார்த்தவாறே நெருங்கினார்.

      ”மிஸ்டர் கிட்டாமணி! இது இன்ஸ்பெக்டர் வள்ளிக்கண்ணு!”

      ”ஹலோ மிஸ்டர் கிட்டாமணி,” வள்ளிக்கண்ணு கை நீட்டினார். 

“கங்கிராஜுலேஷன்ஸ்… சாரி…..ஐ மீன்… டாக்டர் சொன்னதைக் கேட்டதிலேருந்து எனக்கு ரொம்ப வருத்தமாயிருக்கு. கவலைப்படாதீங்க.  நீங்கதான் பாலாமணியோட ஒரிஜினல் புருஷன்னு எப்படி நிரூபிக்கிறேன்னு பாருங்க. வாங்க, மூணு பேரும் போய்ப் பேசுவோம்.”
   
   ”எனக்கு பயமாயிருக்கு இன்ஸ்பெக்டர்!” கிட்டாமணி கிடுகிடுமணியானார். “ஏற்கனவே என் ஜாதகப்படி புதனும் சுக்கிரனும் வீடு மாறிட்டாங்கன்னு சொல்றாங்க.”

      ”கவலைப்படாதீங்க, அவங்களுக்கு ரெப்கோ பேங்குலே லோன் கிடைச்சா அடிக்கடி வீட்டை மாத்தாம, சென்னைக்குப் பக்கத்துலேயே திண்டிவனத்துலே சொந்த வீடு கட்டிக்குவாங்க. இப்ப வாங்க.”

டாக்டரும் இன்ஸ்பெக்டரும் பாலாமணியிருந்த அறைக்குள் நுழைய, அவர்கள் இருவருக்கும் பின்னால் கிட்டாமணி பதுங்கியவாறே சென்றார். இரண்டு கைகளிலும் தலா ஒவ்வொரு ஆப்பிளை வைத்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்த பாலாமணி, சட்டென்று தலையணைக்கு அடியில் ஒளித்துவைத்துவிட்டு நிமிர்ந்து உட்கார்ந்தாள்.

“மிசஸ் பாலாமணி!” டாக்டர் உலகப்பன் பேசினார். “உங்களைப் பார்க்க உங்க புருஷன் வந்திருக்காரு பாருங்க.”

“ஐயையோ!” பாடி ஃபேக்டரியின் பத்துமணிச் சங்குபோல அலறினாள் பாலாமணி. ”என் புருஷன் போலீஸ்காரர் இல்லை.”

“அட இவர் உங்க புருஷனில்லீங்க,” டாக்டர் இரைந்தார். “இவர்தான் உங்க புருஷனைத் தேடிக் கண்டுபிடிச்சவரு. பேரு இன்ஸ்பெக்டர் கொள்ளிக்கண்ணு… சாரி, இன்ஸ்பெக்டர் வள்ளிக்கண்ணு.”

“உங்க புருஷன் இதோ இருக்காரு பாருங்க,” என்று வள்ளிக்கண்ணு பதுங்கியிருந்த கிட்டாமணியை இழுத்து முன்னால் நிறுத்த…

“டேய்…. நீ மறுபடியும் வந்திட்டியா…?” என்று பாலாமணி தலையணையை எடுத்து வீசினாள். “என் புருஷனை எங்கேடா ஒளிச்சு வைச்சிருக்கே? மரியாதையா உண்மையைச் சொல்லு.”

“இவர்தாம்மா உங்க புருஷன்!” டாக்டர் உலகப்பன் கூறினார். “நாங்க சொல்றதுலே நம்பிக்கையில்லையா? இவரு ஒரு இன்ஸ்பெக்டர், நான் ஒரு டாக்டர்…”

“அதுனாலதான் நம்பிக்கையில்லையோ என்னமோ!” கிட்டாமணி முனகினார்.

”இவரு என் கிட்டாமணி இல்லை,” அலறினாள் பாலாமணி.”அவரை மாதிரியே இருக்கிற யாரையோ கூட்டிக்கிட்டு வந்து என்னை ஏமாத்தவா பாக்கறீங்க?”

“ஐயோ பாலா…!” கிட்டாமணி உருகினார். “சத்தியமா நான் உன் கிட்டாமணி தான்! என்னை மாதிரி இன்னொருத்தனெல்லாம் இருக்க சான்ஸே இல்லை. கடவுள் ஒரே தப்பை ரெண்டு வாட்டி செய்ய மாட்டாரு.”

“மிசஸ் பாலாமணி!” இன்ஸ்பெக்டர் உறுமினார். “உங்க புருஷனுக்கு மூக்குப்பொடிப் பழக்கம் உண்டுதானே? இவரோட மூக்கைப் பாருங்க. ஏதாவது வித்தியாசம் தெரியுதா? இவர்தான் உங்க கிட்டாமணி. கூட்டிக்கிட்டுப் போய் கண்கலங்காமப் பார்த்துக்குங்க.”

”இல்லை… இல்லை.. இல்லை!” பாலாமணி சீரியல் நாயகியைப் போல முகத்தை இடமிருந்து வலமாகவும் வலமிருந்து இடமாகவும் ஆட்டியபடி மறுத்தாள். “என் கிட்டாமணி இவரில்லை. இது யாரோ ஒரு டுபாக்கூர்!”

“தெரியுதில்லே? அப்புறம் ஏன் சந்தேகப்படறீங்க?” டாக்டர் இடைமறித்தார். “சத்தியமா இவர்தான் அந்த டுபாக்கூர்… இவர்தான் உங்க புருஷன்.”

பாலாமணி மூவரையும் மாறி மாறிப் பார்த்தாள். பிறகு…

“சரி, நீங்க சொல்றபடி இவர் என் புருஷன்னா,  நான் கேட்கிற மூணு கேள்விக்குச் சரியாப் பதில் சொல்லணும். சரியா?”

“என்னம்மா இது அநியாயமா இருக்கு?” இன்ஸ்பெக்டர் தலையைச் சொரிந்தார். “எந்தப் புருஷனாவது பொஞ்சாதி கேட்குற கேள்விக்கு பதில் சொல்லுவானா? லாஜிக்கே உதைக்குதே!”

”இன்ஸ்பெக்டர் சார், சும்மாயிருங்க,” டாக்டர் உலகப்பன் கையமர்த்தினார். “மிசஸ் பாலாமணி, நீங்க கேளுங்க. மிஸ்டர் பாலாமணி பதில் சொல்றாரா பார்ப்போம்.”

அண்ணா பல்கலைக்கழகத்தில் கலந்தாய்வுக்கு வந்ததுபோல கிட்டாமணி கலவரத்துடன் பார்க்க, பாலாமணி தொண்டையைச் செருமிக் கொண்டு முதல் கேள்வியைக் கேட்டாள்.

“என்னோட பிறந்த நாள் எப்ப வரும்னு சொல்லுங்க?”

“என்னது?” கிட்டாமணி அதிர்ந்தார். “எடுத்த எடுப்புலேயே இவ்வளவு கஷ்டமாக் கேட்டா எப்படி? ஏதாவது க்ளூ கிடைக்குமா?”

“இங்கே என்ன சொல்லுங்க வெல்லுங்க புரோகிராமா நடந்திட்டிருக்கு?” சீறினாள் பாலாமணி. “என்னோட பிறந்த நாள் கூடத் தெரியாத இவரு எப்படி என் புருஷனா இருக்க முடியும்? இவரை அரெஸ்ட் பண்ணிட்டுப் போய்த் தூக்குலே போடுங்க.”

“அவசரப்படாதீங்க மிசஸ் பாலாமணி,” டாக்டர் அமைதிப்படுத்த முயன்றார். “வொய்ஃபோட பிறந்த நாள் தெரியாட்டி தூக்குலே போடணும்னா நாங்கல்லாம் என்னத்துக்கு ஆகுறது? புதுசா மூணு கேள்வி கேளுங்க.”

கிட்டாமணியும் பார்வையாலேயே ‘ப்ளீஸ்’ என்று கெஞ்ச, பாலாமணி அடுத்த கேள்வியைக் கேட்டாள்.

“எங்க கல்யாணம் எந்த ஹால்லே நடந்ததுன்னு சொல்லுங்க!”

“ஹாலா?” தலையைச் சொரிந்தார் கிட்டாமணி. “இத்தனை வருசத்துக்கப்புறம் எப்படி ஞாபகமிருக்கும். ஆஹா, ஞாபகம் வந்திருச்சு. வாணி மஹால்… கரெக்டா?”

“மூஞ்சி!” பாலாமணி பழிப்புக் காட்டினாள். “அது விஜயா சேஷ மஹால்.”

“சரி விடுங்க, அவர் ஒண்ணும் நாயுடு ஹால்னு சொல்லிடலியே?” இன்ஸ்பெக்டர் சமாளிக்க முயன்றார். “அடுத்த கேள்வி…?”

“கல்யாணம் முடிஞ்சதும் நாங்க எங்கே போனோம் ஞாபகமிருக்கா?”

“ஓ!” உற்சாகமாகச் சொன்னார் கிட்டாமணி. “கடைசிப்பந்தியிலே சாப்பிடப்போனோம். என் இலையிலே ஜாங்கிரியே வைக்கலை.”

”தப்பு, சினிமாவுக்குப் போனோம்!” என்ற பாலாமணி, அதிரடியாக அடுத்த கேள்வியை எடுத்து விட்டாள்.

“தலை தீபாவளிக்கு எங்க அம்மா என்ன போட்டாங்க?”

“எங்க அம்மாகூட சண்டை போட்டாங்க!” என்றார் கிட்டாமணி.

“இதுவும் தப்பு! உங்களுக்கு மோதிரம் போட்டாங்க,” என்ற பாலாமணி தனது இறுதி அஸ்திரத்தை விடுத்தாள்.

“நாம ஹனிமூனுக்குப் போனபோது நான் கேட்ட ஒரு விஷயத்தை நீங்க கடைசிவரைக்கும் மறந்துபோய் வாங்கியே தரலே. அது என்ன?”

“அப்பவே மறந்துபோனது இப்போ எப்படி ஞாபகத்துக்கு வரும்?” கிட்டாமணி பரிதாபமாகக் கேட்டார்.

“அவ்வளவுதான்!” கூச்சலிட்டாள் பாலாமணி. “இதுக்குமேலே ஒரு நிமிஷம் இங்கேயிருந்தாலும் கொலையே விழும். முதல்லே இங்கேயிருந்து போங்க!”

நொந்துபோய் வெளியேறிய கிட்டாமணியின் தோளில் சசிகுமார் போல கைபோட்டு ஆதரவாகப் பேசினார் இன்ஸ்பெக்டர்.

“விடுங்க கிட்டாமணி! அவங்களே வேண்டாம்னு சொன்னப்புறம் உங்களுக்கென்ன? கிட்டாதாயின் வெட்டென மற-ன்னு படிச்சதில்லையா?”

“இன்ஸ்பெக்டர்!” டாக்டர் வியந்தார். “உங்களுக்கு நாலடியார் கூடத் தெரியுமா?”

“யோவ் டாக்டர், நான் சொன்னது மூணே மூணு வார்த்தை. அது உங்களுக்கு நாலடியாரா? நல்லவேளை, குற்றாலக்குறவஞ்சியான்னு கேட்காம விட்டீங்களே?”

”மிஸ்டர் கிட்டாமணி,” டாக்டர் யோசனையோடு சொன்னார். “உங்களுக்கும் உங்க மனைவிக்கும் மட்டும் தெரிஞ்ச ஏதாவது ஒரு விசேஷமான சமாச்சாரத்தை ஞாபகப்படுத்திப் பாருங்களேன்.”

“யுரேகா!” கூவினார் கிட்டாமணி. “இன்னும் அரைமணி நேரத்துலே வர்றேன் டாக்டர்.”

கிட்டாமணி தலைதெறிக்க ஓடுவதை டாக்டரும் இன்ஸ்பெக்டரும் வியப்புடன் பார்த்தார்கள். கால்டாக்ஸிபோல காலதாமதம் செய்யாமல் பிட்சாவைப் போலக் குறித்த நேரத்தில் அரைமணி கழித்து வந்து சேர்ந்தார் கிட்டாமணி. அவரது கையில் ஒரு ஃப்ளாஸ்க் இருந்தது.

“மிஸ்டர் கிட்டாமணி, இந்த ஃப்ளாஸ்கிலே என்ன இருக்குது?”

“டாக்டர், இதைக் கொண்டுபோய் என் பாலாமணிக்கு ஊத்திக் கொடுங்க. அவளுக்கு உடனே ஞாபகம் வந்திடும்.”

இன்ஸ்பெக்டர் பேயறைந்தது போல் பார்த்துக் கொண்டிருக்க, டாக்டர் ஃப்ளாஸ்கை எடுத்துக் கொண்டு பாலாமணியின் அறைக்கு ஓடினார். அதுவரை முகத்திலிருந்த கவலையும் குழப்பமும் காணாமல்போய், கிட்டாமணி பெருமிதத்துடனும் பூரிப்புடனும் கைகளைக் கட்டியவாறு கம்பீரமாகப் போஸ் கொடுத்தபடி நின்றார். சில நிமிடங்கள் கழித்து….

“என்னங்க…?” என்று கூவியபடி பாலாமணி கிட்டாமணியைப் பார்த்துக் கைகளை நீட்டியவாறு ஓடிவந்தாள்.

“பாலா….” அன்பே வா படத்து எம்.ஜி.ஆர் மாதிரி கிட்டாமணியும் மனைவியை நோக்கி ஓடினார். இருவரும் கைகளைக் கோர்த்துக் கொள்ள, இருவரது கண்களிலிருந்தும் வாஷர் பழுதான வாட்டர் டாங்கரைப் போல நீர்ப்பெருக்கு ஏற்பட்டு தரையில் கொட்டியது.

“அந்த ஃப்ளாஸ்குலே என்ன டாக்டர் இருந்திச்சு?” இன்ஸ்பெக்டர் ஆர்வத்தை அடக்கமாட்டாமல் கேட்டார்.

“மிஸ்டர் கிட்டாமணி தன் கைப்பட தக்காளிரசம் வைச்சுக் கொண்டு வந்திருந்தாரு!” டாக்டர் நிம்மதிப் பெருமூச்சுடன் கூறினார்.

மனைவிக்கு மீண்டும் ஞாபகம் வந்த மகிழ்ச்சியில், டாக்டர் உலகப்பன் கொடுத்த பில்லை வாங்கிக்கொண்டு பணம் செலுத்தப் போனார் கிட்டாமணி. இன்ஸ்பெக்டரும் டாக்டரும் பாலாமணியை நெருங்கினார்கள்.

“மேடம்! ஒரு தக்காளி ரசத்தை வைச்சு அவர்தான் உங்க புருஷன்னு கண்டுபிடிச்சிட்டீங்களே? மிஸ்டர் கிட்டாமணியோட தக்காளி ரசம் என்ன அவ்வளவு ஸ்பெஷலா?”

“ஆமாம்!” ஆனந்தக்கண்ணீரைத் துடைத்தபடியே கூறினாள் பாலாமணி. “எப்பவாச்சும் எனக்கு உடம்பு சரியில்லேன்னா, அவர்தான் தக்காளி ரசம் வைச்சுக் கொடுப்பாரு. அப்படியொரு கேவலமான தக்காளி ரசத்தை என் புருஷனைத்தவிர வேறே எந்த ஆம்பிளையாலேயும் வைக்க முடியாது. ஃப்ளாஸ்கைத் திறந்தவுடனேயே இது என் புருஷன் வைச்ச ரசம்னு தெரிஞ்சிடுச்சு!”

”காட் இஸ் க்ரேட்! வாழ்க தக்காளி ரசம்!”

*******************************************************

15 comments:

G.M Balasubramaniam said...


அன்புள்ள சேட்டை. நீண்ட இடைவெளிக்குப் பின் உங்கள் பதிவு. எதைக் குறிப்பிட்டுப் பாராட்டுவது. உங்கள் பேனாவில்( ஐ யாம் சாரி; உங்கள் கணினியில்) நகைச்சுவை வழிந்தோடுகிறது. எப்படித்தான் கற்பனை ஊற்று பெருக்கிடுகிறதோ. நலம் தானே. ? வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

Mahesh Prabhu said...

உங்கள் பதிவு இன்று வெளி வரும், நாளை வெளி வரும் என பல நாள் எதிபார்த்திருந்தேன்.

காத்திருக்க வைத்தாலும் கலக்கிபுடீங்க கலக்கி.........

”தளிர் சுரேஷ்” said...

ஆரம்பம் முதல் கடைசி வரை கலகலவென்று ஒரே சிரிப்பு மயம்தான்! அசத்தல் பதிவு! வாழ்த்துக்கள்!

திண்டுக்கல் தனபாலன் said...

ஐயோ... ஐயோ... சூப்பர் சார்...

தொடர்ந்து பகிர்ந்து கொள்ளுங்கள்...

BABA said...

நீ......................ண்ட இடைவெளிக்குப்பிறகு வந்தாலும், லேட்டாக வந்தாலும், லேட்டஸ்ட்டாக வந்ததாக சொல்வார்களே, அது போல பின்னி பெடலெடுத்து விட்டீர்கள்.

பொன் மாலை பொழுது said...

எங்கய்யா அப்பப்ப காணாம போயிடுறீங்க :)))

வெங்கட் நாகராஜ் said...

நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்தாலும் முழு நீள நகைச்சுவை பதிவுடன் வந்ததில் மகிழ்ச்சி.


ஒவ்வொரு வரியும் சிரித்தேன்.....

நலம் தானே....

விஸ்வநாத் said...

// ஐ.சி.யூவுக்குப் போன கேஸு வார்டுக்கு வந்த மாதிரியிருக்கு//
// “பிரிஸ்கிருப்ஷன் மாதிரிக் குழப்பாம, பில் மாதிரி பளிச்சுன்னு சொல்லுங்க! //
//அவர் எப்பவும்போல நார்மலா அரைலூசு மாதிரித்தான் இருக்காரு//
//உறிஞ்சி முடிச்ச ஸ்ட்ராவுக்கு உடுப்பு மாட்டி விட்டது மாதிரி உட்கார்ந்திட்டிருக்காரே அவர்தான்//
//சென்னைக்குப் பக்கத்துலேயே திண்டிவனத்துலே//
// கால்டாக்ஸிபோல காலதாமதம் செய்யாமல் பிட்சாவைப் போலக் குறித்த நேரத்தில் //

சொல்லிக்கிட்டே போகலா; அருமை;நன்றி;

saamaaniyan said...

“என்ன சார், நரம்புத்தளர்ச்சி நாட்டுமருந்து விளம்பரம் மாதிரி அடுக்கிட்டே போறீங்க?”

“பிரிஸ்கிருப்ஷன் மாதிரிக் குழப்பாம, பில் மாதிரி பளிச்சுன்னு சொல்லுங்க! என்ன மேட்டர்?”

“அவர் எப்பவும்போல நார்மலா அரைலூசு மாதிரித்தான் இருக்காரு!”

யோவ் டாக்டர், நான் சொன்னது மூணே மூணு வார்த்தை. அது உங்களுக்கு நாலடியாரா? நல்லவேளை, குற்றாலக்குறவஞ்சியான்னு கேட்காம விட்டீங்களே?”

கண்னில் நீர வர சிரித்தேன் !

இது சில உதாரணங்கள்தான் ! உதாரணம் சொல்லவேண்டுமானால் மொத்த கதையையுமே சொல்ல‌ வேண்டும் ! அருமை ! அருமை !

அப்புசாமி சீதாப்பாட்டிக்கு பிறகு தமிழ் ஊடகங்கள் மறந்துவிட்ட தமிழ் நகைச்சுவை இலக்கியம் உங்களால் உயிர்ப்பெறுகிறது என்றால் மிகையில்லை.

நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr

( தங்களுக்கு நேரமிருப்பின் எனது வலைப்புவினை படித்து எண்ணங்களை பின்னூட்டமிடுங்கள்.நன்றி )

இராஜராஜேஸ்வரி said...

கிட்டாமணி பஞ்சரான காருக்கு ஜாக்கி போட்டதுபோல, முகத்தைக் கையால் தாங்கியபடி அமர்ந்திருந்தார்.

கதை மிகவும் சிரிக்கவைத்தது... பாராட்டுக்கள்.

வல்லிசிம்ஹன் said...

வரிக்கு வரி சிரிப்பா. சிரிக்க வைத்த சகோதரருக்கு மிக நன்றி. ரசமில்லாத தக்காளி ரசம் காப்பாற்றியதே ஒரு சுவைதான். அத்தனை காரக்டர்களும் அக்மார்க் நல்லெண்ணேய்.

அருணா செல்வம் said...

படித்துச் சிரித்தேன் சேட்டை ஐயா.

மாதேவி said...

தக்காளி ரசம்.... ஹா.....ஹா...

Unknown said...

தக்காளி வீசி பழி வாங்குவதுபோல் கிட்டாமணி தக்காளி ரசம் வைத்து பழிவாங்குவார் போலிருக்கே !
த ம +1

மணவை said...

அன்புள்ள அய்யா அவர்களக்கு,

வணக்கம்.

எனது ‘வலைப்பூ’ பக்கம் வந்து பார்வையிட்டு தாங்கள் கருத்திடுமாறு அன்புடன் அழைக்கின்றேன்.
-மாறத அன்வுடன்,
மணவை ஜேம்ஸ்.
manavaijamestamilpandit.blogspot.in