Friday, March 15, 2013

மசாலாவே மங்கையின் பாக்கியம்வேண்டுகோள்: இணையம் பக்கவே வர இயலாத சூழல். சகபதிவர்களின் பல அருமையான இடுகைகளை வாசிக்கவும், கருத்திடவும் முடியாமல் போயிருப்பதோடு, எனது இடுகைகளுக்குப் பின்னூட்டமிட்டவர்களுக்கு தனித்தனியாக நன்றி சொல்லவும் முடியாத நிலை. புரிந்துகொண்டு, பொறுத்தருளுமாறு கோருகிறேன். அனைவருக்கும் நன்றி!மசாலாவே மங்கையின் பாக்கியம்

                ஞாயிற்றுக்கிழமை!
     
      கணவர் கிட்டாமணி வீட்டிலிருக்கிற வாய்ப்பை நழுவ விட்டுவிடக் கூடாது என்று, பலநாள் தயக்கத்தை உதறிவிட்டு, துணிச்சலாக பாட்னா பருப்புருண்டைக் குழம்பு செய்துமுடித்த பாலாமணி, எதற்கும் இருக்கட்டும் என்று தாயே காமாட்சி, என் மாங்கல்யத்தைக் காப்பாத்து,’ என்று வேண்டிக்கொண்டிருந்தாள். பிட்சாவுக்காகக் காத்திருக்கும்போது பிச்சைக்காரன் வந்து கதவைத் தட்டுவதுபோல, அசந்தர்ப்பமாக அழைப்புமணி அடிக்கவே, எரிச்சலுடன் கதவைத் திறந்தாள். எதிரே ஆய்ந்துபோட்ட அகத்திக்கீரையின் தண்டைப்போல நின்றிருந்தவரை இதற்கு முன்பு எங்கோ பார்த்தது போலிருந்தது.

              யாரு  நீங்க? அவரு வெளியிலே போயிருக்காரே!

          வந்துட்டாரு! இப்போ வெளியிலேதான் நின்னுட்டிருக்காரு!என்று அந்த நபர் அசட்டுச்சிரிப்பு சிரித்ததும், ‘இந்தக் கேவலமான அசட்டுச்சிரிப்பையும் இதற்கு முன்னால் எங்கோ பார்த்திருக்கிறோமேஎன்று பாலாமணி யோசித்துக் கொண்டிருக்கும்போதே...

          என்ன பாலாமணி, என்னைத் தெரியலியா?” எனவும், அகப்பையால் அலுமினியைச்சட்டியைச் சுரண்டுவதுபோலிருக்கிற இந்தக் கரகரப்பான குரலையும் இதற்கு முன்னால் எங்கோ கேட்டிருக்கிறோமேஎன்று யோசித்த பாலாமணிக்கு ‘கடல்‘ படம் பார்த்த கடைக்கோடி ரசிகனைப் போல, மிகவும் லேட்டாகப் புரிந்தது.

          அட நீங்களா?” என்று கணவனுக்கு வழிவிட்டாள். என்னாச்சுங்க, சலூனுக்குப் போனா எப்பவும் உரிச்ச கோழி மாதிரி வருவீங்க? இன்னிக்கு வித்தியாசமா, பொறிச்ச கோழி மாதிரி வந்திருக்கீங்களே? தலைக்கு டைபோட்டிருக்கீங்களா? புடிக்காதுன்னு சொல்லுவீங்களே? போறதுக்கு முன்னாடி என்கிட்டே ஒரு வார்த்தை சொல்லியிருக்கக் கூடாதா? நான்கூட யாரோ பழநிக்குப் பாதயாத்திரை போக பிச்சை கேட்க வந்திருக்காங்களோன்னு நினைச்சிட்டேன். கதவைத் திறந்தவுடனேயே சொல்லியிருக்கக் கூடாதா?”

                பாலாமணி! ஹேர்-கட் பண்ணிட்டு வந்திருக்கிற புருஷன்கிட்டே இவ்வளவு கேள்விகேட்டா எப்படி? பிய்ச்சுக்க முடிகூட இல்லை!

      ஹேர்-கட்டுக்கும் கேள்விக்கு பதில் சொல்றதுக்கும் என்னங்க சம்பந்தம்?அடுத்த கேள்வியை எடுத்து விட்டாள் பாலாமணி. “முடியை உபயோகிச்சா பதில் சொல்லப்போறீங்க? மூளையை உபயோகிச்சு பதில் சொல்ல வேண்டியதுதானே?

      மூளையா? இன்னும் என்னைப் பத்தின தப்பான அபிப்ராயம் மாறலியா?பெருமூச்சு விட்டார் கிட்டாமணி.

      சரிசரி, தெரியாத்தனமா மூளையை ஞாபகப்படுத்திட்டேன். வருத்தப்படாதீங்க,என்ற பாலாமணி, திடீர்னு எதுக்காக ‘டைபண்ணினீங்க? ஊருலே நாலு பேர் நாலுவிதமாப் பேச மாட்டாங்களா? ஏதோ, உங்க தலை நான் பண்ணற ஊத்தப்பம் மாதிரி பாதி வெள்ளை, பாதி கருப்பா இருந்தவரைக்கும் மத்தவங்க கண்ணுக்கு நான் ‘யங்காத் தெரிஞ்சிட்டிருந்தேன். இப்போ அதையும் கெடுத்திட்டீங்களா?

      நீ இப்படிச் சொல்றே. ஆனா, நிறைய பேரு நீதான் தலைக்கு ‘டைஅடிச்சிட்டிருக்கிறதா என்கிட்டே சந்தேகமாக் கேட்குறாங்க! அவங்க வாயை அடைக்கிறதுக்குத்தான் நானும் ‘டைபண்ணிக்கிட்டேன்.

      பரவாயில்லை. உங்க தலை முன்னேயெல்லாம் காக்கா எச்சம்போட்ட மாதிரி இருந்திச்சு. இப்ப பெட்டரா இருக்கு.

      எப்படி? மாடு சாணிபோட்ட மாதிரியிருக்கா?

      சரிசரி, போய்க் குளிச்சிட்டு வாங்க! இன்னிக்கு சாம்பார்பொடி, ரசப்பொடி, மசாலாப்பொடியெல்லாம் அரைச்சுத் தர்றதா பிராமிஸ் பண்ணியிருக்கீங்க! ஞாபகமிருக்கா?

      அதனாலேதானே ‘டைபண்ணினேன்? என்று அவசரத்தில் உளறிய கிட்டாமணி நாக்கைக் கடித்துக் கொண்டார்.

      என்னது?

      அதாவது...என்று சுதாரித்தார் கிட்டாமணி. “மில்லு திறந்திருக்கான்னு பார்க்கப் போயிருந்தேனா, எதிர்த்தாப்புலே சலூன் திறந்திருந்திச்சு. மசாலாவை நான் அரைக்கலேன்னா, என் தலையை நீ அரைச்சிருவேன்னு எதுக்கும் தயாரா ஹேர்-கட் பண்ணிட்டு வந்திட்டேன்.

      கணவரின் பதில் திருப்தியளிக்காவிட்டாலும், மசாலாவுக்காக மேற்கொண்டு கேள்வி கேட்காமல் நகர்ந்தாள் பாலாமணி.

      கிட்டாமணியும் தே.மு.தி.க-விலிருந்து தப்பித்த எம்.எல்.ஏவைப் போலக் குளியலறைக்குள் புகுந்தார். பாத்ரூம் வெண்டிலேட்டர் வழியாக எங்கிருந்தோ ‘தேரே மேரே பீச் மே...கைஸா ஹை யே பந்தன் அஞ்சானா...என்ற ‘ஏக் தூஜே கே லியேபாடல் கேட்டது. உடனே கிட்டாமணிக்கு, சில தினங்களுக்கு முன்னர், அரவை மில் அண்ணாசாமியைச் சந்தித்தது ஞாபகத்துக்கு வந்தது. ஃப்ளாஷ்-பேக்!

      கிட்டாமணி சார்! போனவாட்டி நீங்க மசாலா அரைக்க வந்தபோது என்ன நடந்ததுன்னு ஞாபகமிருக்கா?

     ஓ! என்னை நிக்க வைச்சிட்டு நீ லேடீஸுக்கு முதல்லே அரைச்சுக் கொடுத்துக் கடுப்பேத்தினே!

      அட அதில்லை சார்! உங்களுக்கு முன்னாலே ஒரு நார்த்-இண்டியன் லேடி நின்னுட்டிருந்தாங்களே! பார்க்கிறதுக்கு ஹிந்தி நடிகை ஷீலா தீட்சித் மாதிரி இருந்தாங்களே!

     உன் வாயிலே 100 கிராம் வரமிளகுப்பொடியைப் போட! அது ஷீலா தீட்சித் இல்லை; மாதுரி தீட்சித்! ஷீலா தீட்சித் முதலமைச்சர் தெரியுமா?

      ஏதோ ஒரு தீட்சித்! அந்தப் பொண்ணு தினமும் கடைக்கு வந்து உங்களைப் பத்தி விசாரிக்குது கிட்டாமணி சார்!

     என்னைப் பத்தி விசாரிக்குதா? எதுக்குய்யா?

     யாருக்குத் தெரியும்? நீங்க வந்தா உங்க வீட்டு அட்ரஸ், செல்போன் நம்பர் எல்லாத்தையும் கேட்டு வைக்கச் சொல்லிச்சு! எனக்குத் தெரியும்னாலும், உங்களைக் கேட்காமக் கொடுக்கிறது தப்புல்லியா?

      அது சரி, என்னை எதுக்குத் தேடுது அந்தப் பொண்ணு?

     என்ன கிட்டாமணி சார், இந்தக் காலத்துலே பொறுப்பா மசாலாவெல்லாம் அரைச்சுக் கொடுக்கிற ஆம்பிளைங்க கிடைக்கிறது எவ்வளவு கஷ்டம்?

     ஏன், நீ கூடத்தான் நாள்பூராவும் மசாலா அரைக்கிறே?

      அது என் தொழில்சார். ஆனா, உங்களை மாதிரி வீட்டுக்காக மசாலா அரைக்கிற ஆம்பிளைங்க, கார்த்தி நல்ல படத்துலே நடிக்கிறதைவிட அபூர்வம் சார். அதுவும், உங்களைப் பத்தி விசாரிக்கும்போதெல்லாம், அதோட முகத்திலே தெரியுற சந்தோஷமிருக்கே! அந்த டிப்ரஷனை பார்த்தா உங்களுக்கே புரியும்.

     டிப்ரஷன் இல்லை. அது எக்ஸ்பிரஷன்! இப்போ நீ இங்கிலீஷ் பேசலேன்னு கலைஞர் பொதுக்குழுவைக் கூட்டித் தீர்மானமா போட்டாரு?

      சார், விஷயத்தைச் சொல்லிட்டேன். பார்த்து சூதனமா நடந்துக்குங்க! எந்தக் காரணத்தைக் கொண்டும் நான் இதை உங்க வீட்டு ஆன்ட்டிகிட்டே சொல்ல மாட்டேன்!

     என் சம்சாரத்தை நீ ஆன்ட்டின்னு சொன்னது தெரிஞ்சா என்னை ஆண்டியாக்கி பழனிக்கு அனுப்பிருவா! நீ ஏதோ தப்பாப் புரிஞ்சிட்டிருப்பேன்னு நினைக்கிறேன். அந்தப் பொண்ணு வயசென்ன, என் வயசென்ன? அது லஸ்ஸி டம்ளர் மாதிரி கும்முன்னு இருக்கு. நான் பேப்பர்-கப் மாதிரி நசுங்கிப்போய்க் கிடக்கேன். எதையாவது கற்பனை பண்ணி, என்னையும் உசுப்பேத்தாதே!

     நீங்க கேள்விப்பட்டதில்லியா? காதலுக்குக் கண்ணில்லேன்னு சொல்வாங்க தெரியுமா? முதல் மரியாதை படம் பார்க்கலியா நீங்க?

      அப்போ என் சம்சாரத்தை வடிவுக்கரசின்னு சொல்றியா?

     இல்லை சார், நீங்க சிவாஜி மாதிரின்னு சொல்றேன். அந்தப் பொண்ணு என்னதான் சொல்லுதுன்னு பார்க்கலாமே?

     இத பாரு, என் போன் நம்பர்லாம் கொடுக்காதே! அது வந்து விசாரிச்சா, அடுத்தவாட்டி மசாலா அரைக்க வரும்போது சந்திக்கலாம்னு சொல்லு. சரியா?

     குளியலறையில் கிட்டாமணியின் ஃப்ளாஷ்-பேக் முடிந்தது.

      குளித்து முடித்துவிட்டு, சீவிமுடித்துச் சிங்காரித்துக் கொண்டு, செண்ட் பூசிக்கொண்டு, கண்ணாடியின் முன்பு நின்று அழகுபார்த்தவாறே முணுமுணுத்தார்.

     தேரே மேரே பீச் மே....தேரே மேரே பீச் மே..

      அர்த்தம் தெரியாம எதுக்கு ஹிந்திப்பாட்டு பாடறீங்க?என்று கையில் காப்பியுடன் பாலாமணி வரவும், வெலவெலத்துப்போனார் கிட்டாமணி.

      யாருக்கு அர்த்தம் தெரியாது? தேரே மேரே பீச் மே...அப்படீன்னா, நானும் நீயும் பீச்சுக்குப் போலாமான்னுதானே அர்த்தம்?

      அப்படியில்லை....உனக்கும் எனக்கும் எப்படி இந்த உறவுன்னு அர்த்தம்...

      ஓஹோ!என்று கண்களை மூடிய கிட்டாமணியின் கனவுசீனை பாலாமணியின் காப்பி கலைத்தது.

      காப்பியைக் குடிச்சிட்டுக் கிளம்புங்க. சண்டேன்னா நிறைய கூட்டம் வரும்!

                ஏன் இப்படி அண்ணா ஹஜாரேயோட அடுத்த வீட்டுக்காரி மாதிரி எல்லா விஷயத்துக்கும் அவசரப்படுத்தறே?

      ஐயோ!பாலாமணி கிட்டாமணியின் தாவாங்கட்டையைப் பிடித்துக் கொஞ்சினாள். “இத்தனை வருஷத்துலே நீங்க ஒரு காரியம் பண்ணி, நான் ரொம்ப சந்தோஷப்பட்ட காரியம் என்ன தெரியுமா?

      உன்னைக் கட்டிக்கிட்டதுதானே?

      இல்லீங்க! நீங்க அரைச்சிட்டு வந்தீங்களே மசாலா! ஆஹா! நானும் எத்தனையோ வாட்டி அதே மில்லுலேதான் அரைச்சிட்டு வந்திருக்கேன். ஆனா, இந்த மணம், இந்தப் பக்குவம் இதுவரைக்கும் வந்ததேயில்லை. அதென்னமோ தெரியலேங்க, இந்தப் பொடியைப் போட்டுச் சமையல் பண்ணினா, அப்படியே ஒரு நார்த்-இண்டியன் வாசனை வருது!

      “என்னது? நார்த்-இண்டியன் வாசனையா?

      ஆமாங்க! அதுனாலே தான் நான் நம்ம ஊரு டிஷ் பேரையெல்லாம் கூட நார்த்-இண்டியன் பேரா மாத்திட்டேன். அலஹாபாத் அரைச்ச சாம்பார், கான்பூர் காரக்கொழம்பு, பாட்னா பருப்புருண்டைக் குழம்பு...

      பாட்னாவா? பானிபட் பருப்புருண்டைக் குழம்புன்னு வைச்சிருக்கலாமே?

      ஏன், அந்த ஊருலே என்ன விசேஷம்?

      மூணு போர் நடந்திருக்கே!

      சும்மாயிருங்க! எல்லாத்துக்கும் ஒரு கைமணம் வேணும்! நீங்க போனதுக்கப்புறம் நம்ம வீட்டு சாப்பாட்டு டேஸ்ட்டே மாறிடுச்சு! நீங்க ஒரு நாள் கூட கண்டுபிடிக்கவேயில்லையா?

      மூக்கைப் பிடிச்சிட்டுச் சாப்பிடறவன் எப்படிக் கண்டுபிடிப்பான்?

      என்னது?

      அதாவது, மூக்குமுட்ட சாப்பிடறவன் எப்படிக் கண்டுபிடிப்பான்னு கேட்டேன்.

      சரி, காப்பி ஆறிடப்போவுது. சூடாச் சாப்பிட்டுக் கிளம்புங்க!

      ரயிலுக்குப் போகிற அவசரத்தில் டாஸ்மாக்கில் குவார்ட்டர் அடிக்கிறவனைப் போல, ஒரே மடக்கில் பாலாமணியின் காப்பியை ‘ஆன் தி ராக் குடித்துவிட்டு, சிறியதும் பெரியதுமாய் இருந்த அடுக்குகளைத் தூக்கிக் கொண்டு அண்ணாசாமியின் அரவை மில்லை நோக்கி நடந்தார். அடுத்த வீட்டில் குடிவந்திருந்த சேட்டு வீட்டு டிவியில் ஹிந்திப்பாடல் கேட்டது.

தேரே மேரே பீச் மே...தேரே மேரே பீச் மே...!
     
      வாசலுக்கு வந்ததும் எதிரே ஒரு கழுதை வந்தது. நல்ல சகுனம் என்று எண்ணிக் கொண்டார். விரைந்து அண்ணாசாமி மில்லை அடைந்தபோது, கடையில் ஈ, காக்காயைக் காணோம்.

      அண்ணாசாமி, என்னாச்சு?

      அதான் தமிழிலே புதுசா மகாபாரதம் ஆரம்பிச்சிட்டாங்களாமே டிவியிலே? அது முடிஞ்சதுக்கப்புறம்தான் ஜனங்க வருவாங்க!

      மத்தவங்க வராட்டிப் பரவாயில்லை!என்று அண்ணாசாமியின் காதருகே சென்று கேட்டார். “அந்தப் பொண்ணு இன்னிக்கு வரும்னு சொன்னியே, வருவாளா?

      கிட்டாமணி சார்! உங்க வாயிலே சர்க்கரையைத்தான் போடணும். யாருமே வர மாட்டாங்களோன்னு நினைச்சேன். அங்க பாருங்க சார், அந்தப் பொண்ணே அன்ஃபார்ச்சுனேட்டா வந்திட்டிருக்கு பாருங்க!

      அன்ஃபார்ச்சுனேட் இல்லை; அன் எக்ஸ்பெக்டட்! நீ மிஷின்லே மசாலா அரைக்கிறதோட நிறுத்திக்க! இங்கிலீஷை ஒண்ணும் பண்ணாதே!என்றவாறு திரும்பிய கிட்டாமணி தூரத்தில் அந்தப் பெண் வருவதைப் பார்த்தார்.

      அண்ணாசாமி! உனக்கு ஹிந்தி தெரியுமா?

      தெரியாது!

      நல்ல வேளை!

      அந்தப் பெண்ணின் முகம் கிட்டாமணியைப் பார்த்ததும், முட்டக்கோசைப் போல மலர்ந்தது. ஓட்டமும் நடையுமாக விரைந்து வந்து கொண்டிருந்தாள்.

      கிட்டாமணி சார்! உங்களைவிட அந்தப் பொண்ணுக்குத்தான் எமர்ஜென்ஸி போலிருக்கு!

      அது எமர்ஜென்ஸி இல்லை; அர்ஜென்ஸி!

      நமஸ்தே!என்று கிட்டாமணியைப் பார்த்துக் கைகூப்பினாள் அந்தப் பெண். “போனவாட்டி மசாலா அரைக்க வந்தபோது, உங்க பாத்திரமும் எங்க பாத்திரமும் ஒரே மாதிரி இருந்ததாலே இந்த அண்ணாசாமி எங்க மசாலாவை உங்க டப்பாவுலேயும், உங்க மசாலாவை எங்க டப்பாவுலேயும் மாத்திப் போட்டுட்டார். இப்போ எங்க வீட்டுலே தினமும் சவுத்-இண்டியன் மணத்தோட சமைக்கிறோம். ஆனா, அதுவே எங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு! அதான் உங்க வொய்ஃப் கிட்டே கேட்டு சவுத்-இண்டியன் மசாலா எப்படி அரைக்கிறதுன்னு கேட்கணும்னு ஆசையாயிருக்கு! உங்க வீடு எங்கே இருக்கு அங்கிள்...?

      அந்தப் பெண் ‘அங்கிள்என்று சொன்னதும், கிட்டாமணியின் மண்டையில் ஒரு கண்டாமணி விழுந்ததுபோன்ற அதிர்ச்சி ஏற்பட்டது.

      டப்பா...மசாலா...சவுத்-இண்டியன்... நார்த்-இண்டியன்...சம்பந்தா சம்பந்தமில்லாமல் புலம்பிய கிட்டாமணியைப் பார்த்து அந்தப் பெண் குழம்பி நின்றாள். அடுத்து நடந்தவையெல்லாம்....எதற்கு, கிட்டாமணியின் வயிற்றெரிச்சலைக் கொட்டி ஆகப்போவது என்ன?

      ஒருவழியாக, கிட்டாமணி வீடு திரும்பிக் கொண்டிருந்தபோதும், பக்கத்து வீட்டு சேட்டின் டிவியில் ஹிந்திப்பாட்டு கேட்டது.

     யே க்யா ஹுவா? கைஸே ஹுவா? கப் ஹுவா? க்யூன் ஹுவா?

     அப்படீன்னா என்ன அர்த்தம்?வீட்டுக்குள் நுழைந்ததும் பாலாமணியிடம் கேட்டார் கிட்டாமணி.

      இது என்னாச்சு? ஏன் ஆச்சு? எப்படி ஆச்சு?

      ஓஹோ!

      சோகப்பாட்டுங்க!

      அது மட்டும் நல்லாப் புரியுது!என்று சட்டையைக் கழற்றப் போனவரைப் பார்த்து, கண்ணாடியில் தெரிந்த பிம்பம் கைகொட்டிச் சிரித்தது.

********
 18 comments:

வெங்கட் நாகராஜ் said...

அடிப் பொளியாயிட்டு ஒரு பகிர்வு! :)

சிரித்து மாளல!

வை.கோபாலகிருஷ்ணன் said...

கதை மிக் அருமை. நல்ல நகைச்சுவை விருந்து படைச்சுட்டீங்க.

ஒரே சிரிப்பு தான்.

பாராட்டுக்கள்.

கடுகு said...

<<”அன்ஃபார்ச்சுனேட் இல்லை; அன் –எக்ஸ்பெக்டட்! நீ மிஷின்லே மசாலா அரைக்கிறதோட நிறுத்திக்க! இங்கிலீஷை ஒண்ணும் பண்ணாதே!” >>
பக்கென்று வாய் விட்டுச் சிரித்தேன்.
பி எஸ் ஆர்

இராஜராஜேஸ்வரி said...

மசாலாப்பொடியுடன் கூட சொக்குப்பொடியும் தூவி
நகைச்சுவை விரவிய அருமையான கதை..

இதே மாதிரியே வீட்டிற்கும் மசாலா மாற்றாமல் - இல்லை இல்லை - மாற்றி மாற்றியே
அரைத்துக்கொடுங்கள் ஐயா..

Unknown said...

ஏக் காவோன் மே..ஏக் பேதால் ரெஹதாதா..!

சமீரா said...

ஆஹா அங்கிள் சொல்லி கிட்டமணி சார் இப்படி பண்ணிடுச்சே அந்த பொண்ணு!! பாவம் கிட்டமணி!!!
நல்ல நகைசுவை சார்...

sethu said...

super

sethu said...

super

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா... ஹா... நல்ல நகைச்சுவை...

Renga said...

//அண்ணா ஹஜாரேயோட அடுத்த வீட்டுக்காரி மாதிரி எல்லா விஷயத்துக்கும் அவசரப்படுத்தறே?//

Excellent!!!!!!

YESRAMESH said...

நல்ல நகைச்சுவை. இந்த கதையெல்லாத்தையும் புத்தகமா போடுவீங்களா.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

எப்படித்தான் எழுதறீங்களோ தெரியல. அபார திறமை சார் உங்களுக்கு.
பத்திரிகைகளில் எழுதி இருக்கீங்களா?
எழுதுங்க சார்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...


அந்த பொண்ணு சிங்கிளா இருக்கும் போது தானே அங்க்கிள்னு சொல்லிச்சு?

R. Jagannathan said...

உங்கள் சைட்டுக்கு ரெகுலர் ஆக வர இந்த பதிவு என்னை உசுப்பேற்றிவிட்டது. நல்ல நடை, நல்ல நகைசுவை! கடுகு சார் கையால் மாலை போட்டுக்கொண்ட கழுத்து உங்களுடையது. என் இந்த சிறிய மாலையையும் போட்டுக் கொள்ளுங்கள்! - ஜெகன்னாதன்

அருணா செல்வம் said...

நல்ல நகைச்சுவைப் பதிவு.
சிரித்து மகிழ்ந்தேன் சேட்டை ஐயா.

இராய செல்லப்பா said...

பாவப்பட்ட ஆண் ஜன்மங்களின் கதைகளில் இதுவும் ஒன்று.

இராய செல்லப்பா said...

சரியானதொரு கதையை எடுத்துக்காட்டியிருக்கிறீர்கள். கணவன் கல்லாயிருந்தால் உளி கொண்டு செதுக்கத்தான் வேண்டும் என்ற கருத்து அருமையானது. மனைவி கல்லாயிருந்தால்?

Try 🆕 said...

சிரிப்பு சிரிப்பு இடைவிடாத சிரிப்பு