Saturday, January 26, 2013

விஸ்வரூபம்-ஒரு மாறுபட்ட பார்வைஎடுத்த எடுப்பிலேயே நான் தரவிருக்கிற அதிர்ச்சியான செய்தியை உங்களில் பலரால் ஜீரணிக்க முடியாமல் போகலாம் என்பதால், கையில் ஜெலுஸலுடன் இந்த இடுகையை வாசிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
     
      விஸ்வரூபம்படத்தின் சி.டிக்கள் எல்லாக் கடைகளிலும் கிடைக்கிறது என்று கேள்விப்பட்டதும், பவர் ஸ்டாருக்கு பத்மஸ்ரீ விருது என்று கேள்விப்பட்டதுபோல அதிர்ந்துதான் போனேன். இந்த சி.டி.விஷயத்தில் ஏற்கனவே ஒரு முறை நான் ஏமாந்த சரித்திரப்பிரசித்தி பெற்ற சம்பவத்தை இங்கே நினைவுகூர வேண்டியது எனது கடமையாகிறது. போன வைகுண்ட ஏகாதசியன்று, போகிற வழிக்குப் புண்ணியம் தேடலாமே என்று ஒரு சி.டி.கடைக்குப் போய் ‘நல்ல பக்திப்படத்தோட சி.டி.இருந்தாக் கொடுப்பா! பகவான் புகழ் பாடுறா மாதிரியிருக்கணும்,என்று கேட்கப்போய், அந்த ஆள் அந்தக்காலத்து ஜோதிலட்சுமி நடித்த ‘ஃபைட்டர் பகவான்தெலுங்கு டப்பிங் படத்தின் சிடியைக் கொடுத்து விட்டார். வேறு வழியின்றி அந்தப் படத்தைப் பார்த்து நான் பெருமாளின் பேரருள் பெற்று உய்தது வேறு கதை. ஆகவே, இம்முறை நான் ஒன்றுக்கு இரண்டு முறை உரத்துச் சொன்னேன். “எனக்கு விஸ்வரூபம் பட சி.டி.தான் வேணும்!”.  அவ்வண்ணமே இருபது ரூபாய்க்கு விஸ்வரூபம் படத்தின் சி.டியை வாங்கிக்கொண்டு வந்து சூட்டோடு சூடாகப் பார்த்தும் விட்டேன்.

      படம் ஆரம்பித்ததிலிருந்து இறுதி வரை, சொல்லொணாத் திகைப்பிலும், மலைப்பிலும் ஆழ்ந்து விட்டேன். யான் பெற்ற திகைப்பு பெறுக இவ்வையகம் என்ற நோக்கத்தாலும், விஸ்வரூபத்தைப் பற்றித் திட்டியாவது இடுகை போடுவதே பதிவலட்சணம் என்பதாலும், எனது விமர்சனத்தை இங்கே அளித்திருக்கிறேன்.

கதை

     இந்தப் படத்தின் டைட்டிலில் கதைஎன்று கார்டு காண்பித்தார்கள் என்பதால், முடிவதற்குள் எப்படியாவது அது வந்தே தீரும் என்ற நம்பிக்கையோடு காத்திருந்தேன். தோராயமாக கதைச்சுருக்கத்தைக் கீழே தந்திருக்கிறேன். அது யாதெனில்....

      கதாநாயகன் மிகவும் நேர்மையான, அப்பாவியான, ஏழையான ஆனால் சுமோ வீரரைப் போல கொழுக் மொழுக்கென்றிருக்கும் ஒரு கிராமத்துவாசி. அவனுக்கு ஒரு தங்கை, ஒரே ஒரு மனைவி. அந்தக் கிராமத்துக்கு மூன்று வில்லன்கள் வரவே, கண்டிப்பாக ஒரு கற்பழிப்புக்கும், ஒரு கொலைக்கும் பக்காவாய் கேரண்டி ஆரம்பத்திலேயே அளிக்கப்படுகிறது. அப்பாவிக் கதாநாயகன் பட்டணத்துக்கு வந்து, வழக்கம்போல செய்யாத குற்றத்துக்காக ஹைதராபாத் ஸ்டூடியோ ஜெயிலுக்குப் போக, வில்லனில் ஒருவன் தங்கையை நாசப்படுத்த, மற்றவர்கள் கதாநாயகியை உதாசீனப்படுத்த, ஜெயிலிலிருந்து வெளியே வந்த நாயகன், இண்டெர்வல் வருவதற்குள் அவசர அவசரமாக கள்ளக்கடத்தல்காரனாகி விடுகிறார். (பதிவராவதுதான் சுலபமென்றால், ஸ்மக்ளராவது அதைவிட சுலபம் போலிருக்கிறது!) நாயகனின் மகன் இங்கிலாந்தில் படித்துவிட்டுத் திரும்பிவந்து, அப்பாவின் சுயரூபத்தை அறிந்து விலகிப்போக, அப்பா ஒருசில போராட்டங்களுக்குப் பின்னர் வில்லன் கோஷ்டியைத் தீர்த்துக்கட்டி, ஆறே முக்கால் நிமிடம் வசனம் பேசிவிட்டு, மகனின் மடியில் உயிரை விடுகிறார்.நடிப்பு

      கதாநாயகனாகவும், அவரது மகனாகவும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தோன்றுகிறார். படத்தில் ஒவ்வொரு காட்சியிலும், ஒவ்வொரு ஃப்ரேமிலும் சிவாஜி மட்டுமே தென்படுகிறார். மற்றவர்கள் இடப்பற்றாக்குறை காரணமாக கண்ணிலேயே படவில்லை. ஏழையாக அவர் தோன்றும் ஆரம்பக்காட்சிகளில், அவர் அணிந்துவரும் விதவிதமான சஃபாரி சூட்டுகள் கண்ணையும் கருத்தையும் கொள்ளை கொள்கின்றன. ‘என்னை யாருன்னு நினைச்சே..பணமூட்டையை விரிச்சே...என்ற பாட்டுக்கு சிவாஜி ஆடுகிற ஆட்டத்தில் முன்னறிவிப்பில்லாமல் கரண்ட்-கட் ஆகிவிட்டது என்றால் பாருங்களேன். ‘தான் ஆடாவிட்டாலும் தன் சதையாடும்என்ற பழமொழியை சிவாஜியை ஆடவைத்து உலகிற்கு உணர்த்திய பத்மாலயா பிக்சர்சுக்கு என் சார்பில் ஒரு செட் கல்தோசையும் வடைகறியும் பார்சலாக அனுப்ப எண்ணியிருக்கிறேன்.

      கதாநாயகியாக சுஜாதா அற்புதமாக அழுதிருக்கிறார். என் இத்தனை வருட சர்வீசில் சுஜாதா இந்தப்படத்தில் கஷ்டப்பட்டதுபோல, வேறெந்தப் படத்திலும் கஷ்டப்பட்டதேயில்லை. (சிவாஜியோடு பாடுகிற ஒரு டூயட் உட்பட!). அதிலும், இரண்டாவது சிவாஜி ‘மம்மி...மம்மிஎனும்போதெல்லாம் பொங்கிவருகிற சிரிப்பை லாவகமாக மறைத்து, தான் ஒரு தேர்ந்த நடிகை என்பதைத் திரும்பத் திரும்ப மெய்ப்பித்திருக்கிறார்.

      இரண்டாவது கதாநாயகியாக வரும் ஸ்ரீதேவியும் சிவாஜியும் ரொமான்ஸும் காட்சிகளில் இளமை பொங்கி வழிந்து, நான் கால்வழுக்கிக் கீழேயே விழுந்துவிட்டேன். ‘வாழ்க்கையில் எனக்கொரு புதுராகம்...பாடலில் சிவாஜிக்கு நிகராக டான்ஸ் ஆடி(?!?!!??!!), அப்ளாஸ்களை அள்ளுகிறார்.

இசை

      மெல்லிசை மன்னரின் இசைதான் மிகப்பெரிய ஆறுதல். குறிப்பாக டூயட் காட்சிகள் படத்தில் நகைச்சுவை இல்லாத குறையைப் பெருமளவு தீர்த்திருக்கின்றன. ‘கண்ணா லட்டு தின்ன ஆசையாபார்த்துக் கூட நான் இவ்வளவு குலுங்கக் குலுங்கச் சிரிக்கவில்லை. இருந்தாலும், ‘ராஜா...தீ.....ராஜனுக்.....கு....என்ற பாடலை டி.எம்.சௌந்தர்ராஜன், கடற்கரை ரயில் நிலையத்தின் கழிப்பறையில் ரிகார்டிங் செய்தது போல, மூக்கைப்பிடித்தவாறு பாடியிருப்பது அனாவசியம். இதே பாடலை அவர் அப்படியே சாந்தி தியேட்டரில் பதிவு செய்திருந்தாலும், இதே எஃபெக்ட் கிடைத்திருக்கும். நான் பட்டகடன் எத்தனையோ பூமியில் பிறந்துஎன்று இறுதியில் சிவாஜி பாடும்போது, அந்தக் கடனுடன் எனது இருபது ரூபாயையும் சேர்த்துக் கொள்ள வேண்டியதுதான் என்பது புரியாமல் இல்லை.

இயக்கம்

      இந்தப் படத்தின் இயக்குனர் ஏ.சி.திருலோக்சந்தர் படு சுறுசுறுப்பு. பொதுவாக இவர் தன் பாத்திரங்களை அறிமுகப்படுத்துமுன்னரே இடைவேளை வந்துவிடும். இருந்தாலும், இது அமிதாப் பச்சன் நடித்த இந்திப் படத்தின் ரீமேக் என்பதால், தனது பிளேடைக் கொஞ்சம் குறைத்துக் கொண்டிருப்பது நல்ல முன்னேற்றம்.

      இந்தப் படத்துக்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பு என்று புரியவில்லை. ஒரிஜினல் இந்திப் படத்தில், அமிதாப் பச்சன் ஆரம்பத்தில் ஒரு புலியோடு சண்டை போடுவார். ஆனால், இதிலோ ‘சிவாஜிக்கு ஸ்ரீதேவி ஜோடிஎன்று கேள்விப்பட்டு, ‘இந்தக் கொடுமைக்கு நாங்க உடன்பட மாட்டோம்,என்று எல்லாப் புலிகளும் முதுமலையை விட்டு வேறு புதுமலைக்குப் போய்விட்டதால், சிவாஜி ஒரு யானையை ‘ஏய்...ஏய்...டுர்ர்ர்ர்ர்..டுர்ர்ர்ர்ர்ர்ர்என்று மாட்டை ஓட்டுவதுபோல, விரட்டுவதாகக் காட்சியை மாற்றியமைத்திருக்கிறார்கள். ஸ்ரீதேவியை சிவாஜிக்கு ஜோடியாகப் போட்டது குழந்தைத் தொழிலாளர் சட்டத்தை மீறுவதாகுமா என்று ராம் ஜெட்மலானியோ, பல்கிவாலாவோ விளக்கினால் நன்று. மற்றபடி இந்த ‘விஸ்வரூபம்பணம்போட்டுப் படமெடுத்த தயாரிப்பாளர் ஒருவரைத் தவிர வேறு யாருக்கும் எந்த வருத்தத்தையும் தருவதற்கான சாத்தியமே இல்லை. இவை எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது, ‘உலகம் உருண்டை, அதுவும் சின்ன உருண்டை இல்லை; மிகப்பெரிய உருண்டைஎன்று ஒவ்வொரு காட்சியிலும் மண்டையில் ஓங்கிக் குட்டுவதுபோல குறிப்பால் உணர்த்தியிருக்கிறார்கள்.

      திரைக்கதையமைப்பில் இந்த ‘விஸ்வரூபம்ஒரு உச்சம். இந்தப் படத்தை அகிரோ காரசேவு பார்த்திருந்தால், படம் முழுக்க மூக்கில் விரலை வைத்துக் கொண்டிருப்பார். (இன்னும் உயிரோடு இருக்கிறோமா என்று பார்க்கத்தான்..)


விஸ்வரூபம் தரும் பயன்கள்

     இந்தப் படத்தின் சி.டியின் கீழே ஒரு எலுமிச்சம்பழத்தைக் கட்டி வாசலிலே தொங்கவிட்டால், ஈ, கொசு, கரப்பான் பூச்சி, பல்லி போன்ற ஜந்துக்களிடமிருந்தும், எலி, பெருச்சாளி, மாமனார், மாமியார் போன்ற பிராணிகளிடமிருந்தும் விடுதலை பெறலாம். அதேபோல இப்படத்தின் சி.டியை ஈசானமூலையில் இரண்டடி தோண்டி புதைத்து வைத்தால் காத்து கருப்பு அண்டாது.

      திருமணம் ஆகாதவர்கள், புத்திரபாக்கியம் இல்லாதவர்கள் தொடர்ந்து பதினோரு நாட்களுக்கு வெறும் வயிற்றில் இப்படத்தைப் பார்த்துவந்தால், பன்னிரெண்டாவது நாள் தாத்காலில் காசி ராமேஸ்வரத்துக்கு டிக்கெட் வாங்குவது திண்ணம்.

      இதைக் கன்னடத்தில் டப்பிங் செய்து ஜெகதீஷ் ஷெட்டருக்கு அனுப்பினால், காவிரித்தண்ணீரை டாங்கர்களில் கொண்டுவந்து மேட்டூர் அணையில் கொட்டுவார் என்பது உறுதி. இதை வறுத்துப் பொடிசெய்து பத்தடி தூரத்திலிருந்து முகர்ந்து பார்த்தாலே, பர்கோலக்ஸ் சாப்பிட்ட பலன் கிடைக்கும் என்பதை அறிக!

விஸ்வரூபம் உண்மையிலேயே ஒரு உலகப்படம் என்பதில் ஐயமில்லை!

அப்பாடா! பதிவர் என்ற முறையில் என் கடமையை ஆற்றிவிட்டேன். நிம்மதி!
 33 comments:

கார்த்திக் சரவணன் said...

//பதிவராவதுதான் சுலபமென்றால், ஸ்மக்ளராவது அதைவிட சுலபம் போலிருக்கிறது//

//ஏழையாக அவர் தோன்றும் ஆரம்பக்காட்சிகளில், அவர் அணிந்துவரும் விதவிதமான சஃபாரி சூட்டுகள் கண்ணையும் கருத்தையும் கொள்ளை கொள்கின்றன//

//இத்தனை வருட சர்வீசில் சுஜாதா இந்தப்படத்தில் கஷ்டப்பட்டதுபோல, வேறெந்தப் படத்திலும் கஷ்டப்பட்டதேயில்லை. (சிவாஜியோடு பாடுகிற ஒரு டூயட் உட்பட!). அதிலும், இரண்டாவது சிவாஜி ‘மம்மி...மம்மி’ எனும்போதெல்லாம் பொங்கிவருகிற சிரிப்பை லாவகமாக மறைத்து, தான் ஒரு தேர்ந்த நடிகை என்பதைத் திரும்பத் திரும்ப மெய்ப்பித்திருக்கிறார்.//சேட்டையின் அக்மார்க் முத்திரை...

கார்த்திக் சரவணன் said...

//பத்மாலயா பிக்சர்சுக்கு என் சார்பில் ஒரு செட் கல்தோசையும் வடைகறியும் பார்சலாக அனுப்ப எண்ணியிருக்கிறேன்//

பத்மாலயா பிசாசுக்கு என்று படித்துவிட்டேன்.... ஹிஹி

Robin said...

//இந்தப் படத்துக்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பு என்று புரியவில்லை.// சில இஸ்லாமிய அரசியல் கட்சிகள் தங்கள் இருப்பைக் காட்டிகொள்(ல்)வதற்காக செய்யும் சேட்டைதான் இது.

ஸ்ரீராம். said...

ஹிந்தியில் இது என்ன படம்?[பெயர்?]

middleclassmadhavi said...

En magan En nee sirichittE irikkEnnu visaaruchchuttu poRAn! Nice.

S.Raman, Vellore said...

இந்தப் படம் ரிலீஸான தீபாவளி அன்று, பத்தாவது படிக்கும் போது என்று ஞாபகம், முதல் நாளே
முண்டியடித்துக் கொண்டு போய்
பார்த்தேன். யப்பா, மிகச் சிறந்த
காமெடி. மகன் சிவாஜி, சுஜாதாவிடம்
ஒரு டயலாக் சொல்வார் பாருங்கள்.
அம்மா என்று அழைத்து விட்டு,
இப்டி கூப்ட சிக்ஸ் மன்த்ஸ் ட்ரெயின்ங் எட்தேன். அடப்பாவிகளா,
இப்படியா தமிழை அவமானப்படுத்துவது? பிறந்த கன்றுக்குட்டி கூட உடனே அம்மா என்று சொல்லி விடுமே!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

வழக்கம் போல விஸ்வரூப சேட்டை அட்டகாசம்.

வவ்வால் said...

பழைய விஷ்வரூபம் படத்துக்கு இந்த சூடான வேளையில் யாராவது விமர்சனம் எழுதி மொக்கை போடமாட்டாங்களானு நான் எதிர்ப்பார்த்துக்கொண்டேயிருந்தேன் :-))

ஹி....ஹி நான் படம் பார்க்க்கவில்லை இல்லை எனில் அந்த மொக்கையை நானே செய்திருப்பேன் :-))

இளமையான சிரிதேவியை காண்பதற்காகவே படம் பார்க்கலாம் போல இருக்கே, சிடி எங்கே கிடைக்குது?

இராஜராஜேஸ்வரி said...

அப்பாடா! பதிவர் என்ற முறையில் என் கடமையை ஆற்றிவிட்டேன். நிம்மதி!

கடமை தவறாத சேட்டைக்குப் பாராட்டுக்கள்...

Unknown said...

அட்டகாசம் போங்க.. என் சேட்டையும் கொஞ்சம் வந்து பாருங்க ! http://youvaah.blogspot.in/2013/01/blog-post_9.html

பால கணேஷ் said...

எக்žஸலண்ட்! வரிக்கு வரி ரசித்துப் படித்தேன.

Karthik Somalinga said...

இந்தப் படத்தை உடனே பார்த்தே தீர வேண்டும் என்று உள்ளம் உற்சாகத்தில் துள்ளுகிறது! DTH-இல் எப்போது வெளியாகிறது? :)

கோவை நேரம் said...

அருமை....அப்படியே அந்த சிடியை எனக்கு பார்சல் பண்ணுங்க.,..

ரிஷபன் said...

விஸ்வரூபம் – உண்மையிலேயே ஒரு உலகப்படம் என்பதில் ஐயமில்லை!

எ..ன்ன்..ம்மா.. எ..ன்..னை..யே சொ..ல்..லி..ட்..டானா.. ஹோ ஹோ.. அது வேற ஒண்ணுமில்ல.. சேட்டைக்கு ரெக்கை முளைச்சுடுத்து.. ஆத்தை விட்டே பறந்து போச்சு..

jscjohny said...

பட விமர்சனம் வெகு தூக்கல்ப்பா! சீக்கிரம் ரிலீஸ் பண்ண ஆதரவு கொடுங்க! அண்ணன் சிவாஜியைப் பார்க்க எவ்ளோ காலம்தான் காத்திருக்குறது?

Unknown said...


சேட்டையின் குறும்பு இனிக்கின்ற கரும்பு!

Unknown said...

அழிக ஜனநாயகம்! வாழ்க மதவாதம்! தமிழ் மணத்தின் உறுதி மொழி!
கட்டண சேவை என்கிற பெயரில் தமிழ் மணத்தின் தலையில் உட்கார்ந்து இருக்கு.......

please go to visit http://tamilnaththam.blogspot.com/

Unknown said...

அழிக ஜனநாயகம்! வாழ்க மதவாதம்! தமிழ் மணத்தின் உறுதி மொழி!
கட்டண சேவை என்கிற பெயரில் தமிழ் மணத்தின் தலையில் உட்கார்ந்து இருக்கு.......

please go to visit http://tamilnaththam.blogspot.com/

வெங்கட் நாகராஜ் said...

கலக்கல் சேட்டை அண்ணே...

வெந்நீர் போடச் சொல்லிக் குடுத்துட்டு அண்ணன் காணாம போயிட்டாரேன்னு நினைத்திருந்தேன்.... சூப்பரா ஒரு பதிவோடு வந்து கலக்கிட்டீங்க!

pudugaithendral said...

விஸ்வரூபம் சிடியில பார்த்து அதை விமர்சனம் வேற எழுதியிருக்கீங்க!!! சூப்பர். உங்க பாணியில விமர்சனம் சூப்பர். :))

manichudar blogspot.com said...

படத்தை பார்த்தால் கூட இப்படி சிரிக்க முடியாது. நன்றி.

kumar said...

யோவ் மெய்யாலுமா சொல்றேன் நீ பெரிய அப்பாடக்கர்யா.

வயித்து வலி தாங்க முடியல.இது பாலிக்கா அடுத்த பதிவு

நீ போட்டேனா கண்டி நான் உன்னோட சிரமபட்டு சாகும்

விசிறியாய் ஆகிவிடுவேன்.(die hard fan சரிதான மாமு)

MANO நாஞ்சில் மனோ said...

பின்னே இவிங்கதான் பழைய படத்தின் டைட்டில் வைப்பாங்களா...? நாங்க பழைய படத்தின் விமர்சனம் சொல்லமாட்டோமா என்ன..? ஹி ஹி...

Chitra said...

As usual..... as always!!!!! great sarcastic comedy! Awesome!

YUVA said...

siriche maalale sir.. :) esp.. விஸ்வரூபம் தரும் பயன்கள் awesome :)

சீனு said...

வணக்கம் சார் இன்று உங்கள் பற்றி வலைசரத்தில்

http://blogintamil.blogspot.in/2013/01/tamil-bloggers-2.html

மாதேவி said...

நாங்களும் பார்த்து விட்டோம் விஸ்வரூபம் :)) சேட்டையின் கைகளில் ஹா...ஹா..கலக்கல்.

சமீரா said...

சிரிச்சி சிரிச்சி எனக்கு வயிருபுண்ணாகிடும் போல இருக்கு!!
வரிக்கு வரி செம நகைசுவை!!

நான் கூட முதல்ல ஏதோ புது விஸ்வரூபம்-னு நினைச்சிட்டேன்!! வாழ்க உங்கள் பதிவர் பணி!!!

தெம்மாங்குப் பாட்டு....!! said...

அருமை...!! விஸ்வரூபம் சி.டி யிலான்னு.., நான் அப்புடியே ஷாக் ஆயிட்டேன்..!!

YESRAMESH said...

சிவாஜி சார்னா இளக்காரமா. உங்கனள சும்மா விடக்கூடாது.

YESRAMESH said...

சிவாஜி சார்னா இளக்காரமா. உங்கனள சும்மா விடக்கூடாது.

JJ said...

வாயில் இருந்து இரத்தம் கொட்ட, கையாலேயே கயித்தை கட்டி ஒரு மரத்தை இழுத்து சாய்க்கிற முக்கியமான முதல் டிவிஸ்ட்டை விட்டுட்டிங்களே...!!!!!!!!

NAGARJOON said...

I would highly appreciate if you guide me through this. Thanks for the article…
In site theme park water treatment
Fire water treatment
Insite chlorine generator
Offshore Electrochlorinator
Railways hypochlorite generator
Solar Electrochlorination
Seawater electrochlorinator
Ship ballast water chlorination
Sodium Hypochlorite Generator
Sodium Hypochlorite Generation