Wednesday, August 29, 2012

இந்தப் படம் பார்த்திருக்கிறீர்களா…?            
            படம்: சாரான்ஷ்(1984) சாராம்சம்

            தயாரிப்பு: ராஜ்ஸ்ரீ புரொடக்‌ஷன்ஸ்

            இயக்கம்: மகேஷ் பட்

            நடிப்பு: அனுபம் கேர், ரோஹிணி ஹத்தங்கடி,  
                சோனி ராஜ்தான்


           

ராஜ்ஸ்ரீ புரொடக்‌ஷன்ஸ் என்றால், ‘மைனே பியார் கியா,ஹம் சாத் சாத் ஹைன்’,‘ஹம் ஆப் கே ஹைன் கௌன்’ ‘விவாஹ்போன்ற பாடல்களால் ஆக்கிரமிக்கப்பட்டு மூச்சுத்திணறிய படங்கள்தான் பலருக்கு நினைவு வரக்கூடும். ஆனால், இந்தித் திரைப்படங்களில் தவிர்க்கக் கூடாத படங்கள் என்று விமர்சகர்களால் கருதப்படுகிற பல முத்தான படங்களை, அவர்கள் 60-களிலிருந்து தயாரித்து வந்திருக்கிறார்கள். அவற்றில் குறிப்பிடத்தக்க ஒரு படம் என்று இன்றும் விதந்தோந்தப்படுவது ‘சாரான்ஷ்’.

      சாரான்ஷ்படத்தின் இயக்குனர் மகேஷ் பட் ஒரு சுவாரசியமான மனிதர். சிந்தனையாளர் ஜே.கிருஷ்ணமூர்த்தியின் மீது மிகுந்த அபிமானமுள்ள இவர், இரண்டொரு ஆண்டுகளுக்கு முன்னர் என்.டி.டிவியில் நடந்த கலந்துரையாடலில் ‘இந்தியாவில் ப்ளூ-ஃபிலிம் தயாரித்து வெளியிட அனுமதிக்க வேண்டும்என்று காரசாரமாக விவாதித்தார். (அவரது தயாரிப்பில், அவரது மகள் பூஜா பட் இயக்கத்தில் அண்மையில் வெளிவந்த, சன்னி லியோன் கதாநாயகியாக நடித்த படம் ‘ஜிஸ்ம்-II’ பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்!). அவர் எழுதி இயக்கிய ‘அர்த்படம் தமிழில் பாலு மகேந்திராவின் கைவண்ணத்தில் ‘மறுபடியும்என்ற பெயரில் வெளியாகியிருக்கிறது. ‘அர்த்’ ‘சாரான்ஷ்தவிர ‘ஜனம்’, ‘கப்ஸாபோன்ற படங்களை இயக்கிய இதே மகேஷ், சிரஞ்சீவியின் தயாரிப்பில் தமிழ் ‘ஜெண்டில்மேன்’- படத்தையும், ஷாரூக்கானை இரட்டை வேடத்தில் நடிக்க வைத்து ‘டூப்ளிகேட்என்ற படத்தையும் எடுத்திருக்கிறார். 60-களில் ஏ.வி.எம். தயாரித்து, ராஜ்கபூர்- நர்கீஸ் நடிப்பில் வெளியான ‘சோரி சோரிபடத்தை உட்டாலக்கடி செய்து ‘தில் ஹை கே மான்தா நஹீன்என்றும் எடுத்திருக்கிறார். இப்போதெல்லாம் அவரது படங்களென்றாலே திகிலும், மிதமிஞ்சிய கவர்ச்சியும் என்று ஆகி விட்டது என்றாலும், அவரது ஆரம்பகாலப்படங்கள் இன்றளவிலும் விமர்சகர்களால் தூக்கிப் பிடிக்கப்படுகின்றன. அதில் குறிப்பிடத்தக்க, ஒரு முக்கியமான படம் ‘சாரான்ஷ்’; அனுபம் கேர் என்ற ஒரு அற்புதமான நடிகரை அறிமுகப்படுத்தியது உட்பட இந்தப் படம் நினைவு கொள்ளத்தக்க ஒரு படம்! 

சாரான்ஷ்கதை:

      ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் பிரதானும், அவர் மனைவி பார்வதியும் மும்பை சிவாஜி பார்க்கிலுள்ள ஒரு வீட்டில் வசித்து வருகின்றனர். புலர்ந்தும் புலராத ஒரு காலையில் அமெரிக்காவிலிருந்து வரும் ஒரு தொலைபேசித் தகவல் அவர்களது வாழ்க்கையைப் புரட்டிப் போட்டு விடுகிறது. தங்களது ஒரே மகனை, அமெரிக்காவில் யாரோ அடித்துக் கொன்றுவிட்டார்கள் என்பதே அத்தகவல். பிள்ளையைப் பறிகொடுத்த சோகத்தில் புலம்பும் மனைவியை, பிரதான் தேற்றுகிறார். அந்த இழப்பிலிருந்து மீண்டும் இருவரும் இயல்பு நிலைக்கு மெல்ல மெல்லத் திரும்ப முயற்சிக்கிறார்கள். சோகத்தோடு, பணக்கஷ்டமும் அவர்களைப் படுத்துகிறது.

      மும்பைத் திரையுலகில் போராடுகிற ஒரு இளம் நடிகை சுஜாதாவும், அவளது காதலன் விலாஸும் பிரதான் வீட்டின் ஒரு பகுதியில் வாடகைக்குக் குடியேறுகின்றனர். திருமணமாகாமலே சேர்ந்து வாழ்க்கை நடத்தி, சுஜாதா கர்ப்பமாகி விடுகிறாள். விலாஸ், அரசியல்வாதியான தன் அப்பா கஜானன் சித்ரேயிடம் சுஜாதாவைப் பற்றி சொல்ல அஞ்சவே, பிரதான் அவர்களுக்காகப் பரிந்துபேசப் போகிறார். மிகுந்த செல்வாக்குடைய கஜானன், சுஜாதாவைக் கருக்கலைப்பு செய்துவிட வேண்டும் என்பதோடு, அந்த வீட்டைவிட்டுக் காலி செய்யச் சொல்ல வேண்டும் என்றும் மிரட்டுகிறார்.

      பிரதானும், பார்வதியும் இறந்துபோன மகன் சுஜாதாவின் வயிற்றில் மீண்டும் பிறக்கப்போவதாக கற்பனை செய்து கொண்டிருப்பதால், கஜானன் சொல்வதை ஏற்க மறுக்கிறார்கள். இதைத் தொடர்ந்து வீட்டுக்குள் கல்லெறிவதில் ஆரம்பித்து, அவர்களுக்கு அடுத்தடுத்துப் பல தொல்லைகள் ஏற்படுகின்றன. காவல் நிலையத்தில் கஜானனுக்கு எதிராகப் புகாரைப் பதிவு செய்ய மறுக்கிறார்கள். தங்களது இழப்பையும், வயோதிகத்தையும் தள்ளிவைத்துவிட்டு சுஜாதாவைக் காப்பாற்றுவதே தங்களது கடமை என்று பிரதானும் பார்வதியும் கஜானனுடன் போராடுகிறார்கள்.

      ஆனால், அப்பாவுக்குப் பயந்த விலாஸ், ஒரு நாள் வந்து சுஜாதாவை அழைத்துக்கொண்டு வீட்டைக் காலி செய்துவிட்டுப் போகிறான். மகன் இறந்து போனதைக் கேட்டதைவிடவும், கதறி அழும் பார்வதியை பிரதான் தேற்றுகிறார். வாழ்க்கையில் எதுவும் நிலையல்ல; தனிமை மட்டுமே நிலையானது, என்ற சாராம்சத்தை மனைவிக்கு விளக்குவதோடு படம் முடிகிறது.

சில குறிப்பிடத் தக்க தகவல்கள்:

      பி.வி.பிரதான் என்ற ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் வேடத்தில், இப்படத்தின் மூலம் அறிமுகமான அனுபம் கேருக்கு அப்போது வயது வெறும் 29 தான். காந்தி படத்தில் கஸ்தூரிபாயாக நடித்த பிரபல மராட்டி நாடகக் கலைஞர் ரோஹிணி ஹத்தங்கடி (வசுல்ராஜா எம்.பி.பி.எஸ்-ஸில் கமலுக்கு அம்மா) அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இயக்குனர் மகேஷ் பட், ஜே.கிருஷ்ணமூர்த்தியின் பெரிய அபிமானி என்பதால், வசனங்களில் நிறைய தத்துவார்த்த விசாரம் இருந்தது. குறிப்பாக, இறுதிக்காட்சியில்!

      1985-ம் ஆண்டுக்கான சிறந்த பிறமொழிப் படங்களுக்கான ஆஸ்கார்விருதுக்காக இப்படம் பரிந்துரைக்கப்பட்டது.

      தனது மகனின் அஸ்தி கலசத்தை, விமான நிலையத்தில் வாங்குவதற்காகப் போராடி, பொறுமையிழந்து அதிகாரியின் அறைக்குள் அனுபம் கேர் குமுறுகிற காட்சி கல்நெஞ்சையும் கரையச் செய்யும். இந்தப் படத்துக்குப் பிறகு, அனுபம் கேருக்குத் தொடர்ந்து ஏறுமுகம்தான்!
 

சாரான்ஷ்படத்தைத் தொடர்ந்து, ‘கர்மாஎன்ற சுபாஷ் கய்யின் பிரம்மாண்டமான படத்தில் அனுபம் கேர் வில்லனாக நடித்தார். திலீப்குமார், நசீருத்தின் ஷா, அனில் கபூர், ஜாக்கி ஷ்ரோஃப், நூதன், ஸ்ரீதேவி, பூனம் தில்லான் என்று ஒரு பெரிய நட்சத்திரப்பட்டாளமே இருந்தாலும், இப்படத்தில் திலீப்குமாருக்கு அடுத்தபடியாகப் பேசப்பட்டது அனுபம் கேரின் நடிப்புதான்!

      அனுபம் கேரை நகைச்சுவை வேடத்தில் நடிக்க வைத்தவர் திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜ் தான்! ஒரு கைதியின் டைரிபடத்தை இந்தியில் ஆக்ரி ராஸ்தாஎன்ற பெயரில் கே.பாக்யராஜ் இயக்கியபோது, ஜனகராஜ் ஏற்றிருந்த பாத்திரத்தில் நடித்து அசத்தினார் அனுபம் கேர். குணச்சித்திரம், வில்லத்தனம், நகைச்சுவை என்று பல பரிமாணங்களை வெளிப்படுத்துகிற ஒரு சிறந்த நடிகராக அவர் இன்னும் கருதப்படுகிறார்.

      சாரான்ஷ்’-ன் படத்தொகுப்பாளராகப் பணியாற்றிய டேவிட் தவன், பின்னாளில் கோவிந்தா-கரிஷ்மா கபூர், கோவிந்தா-ரவீணா தண்டன் ஜோடிகளை வைத்துப் பல நகைச்சுவை மசாலாக்களை இயக்கி, இந்தித் திரையுலகின் ‘மினிமம் கேரண்டி டைரக்டர்என்று அறியப்படுபவராய் இன்னும் திகழ்கிறார்.

      பாலிவுட்டில் கால்பதிக்க விரும்புகிற இளம்பெண்ணாக நடித்த சோனி ராஜ்தான், பின்னாளில் மகேஷ் பட்-டின் மனைவியானார். ஏற்கனவே மகேஷ் பட்-டுக்கும் மறைந்த நடிகை பர்வீன் பாபிக்கும் இருந்த உறவு பாலிவுட்டில் மிகப்பிரபலமானது. அதை மையமாக வைத்தே ‘அர்த்’(மறுபடியும்) படத்தை எடுத்திருந்ததாக, மகேஷ் பட்டே பல பேட்டிகளில் ஒப்புக்கொண்டிருக்கிறார்.    

(இந்த வரிசையில் அடுத்து நான் எழுதவிருப்பது ‘சோட்டி ஸி பாத்படமாக இருக்கலாம்.)


18 comments:

கும்மாச்சி said...

அண்ணே இந்தியிலும் கலக்குறீங்க, வாழ்த்துகள்.

Doha Talkies said...

நண்பரே...மகேஷ் பட் ஒரு மாதிரியான இயக்குனர் ஆச்சே?
நம்பி பார்க்கலாமா?
http://dohatalkies.blogspot.com/2012/08/one-flew-over-cuckoos-nest_28.html

MARI The Great said...

பார்க்க முயற்சிக்கிறேன் தல!

ஸ்ரீராம். said...

இந்தப் படம் பற்றி கேள்விப் பட்டதில்லை. சோட்டி சி பாத் பார்த்திருக்கிறேன். தமிழில் பாண்டியராஜனை வைத்து இதே படம் பின்னாளில் காபி அடித்துக் கெடுக்கப் பட்டது! பாடல்கள் ஸ்பெஷல்! சேட்டைப் பதிவில் வித்தியாச புதிய முயற்சி?

வெங்கட் நாகராஜ் said...

சாரான்ஷ் பார்த்து ரசித்திருக்கிறேன் சேட்டை. நல்ல படம் தான்...

எல் கே said...

ஹிந்தி பக்கம் போறதில்லை

ரிஷபன் said...

பார்க்க முயற்சிக்கிறேன் !

திண்டுக்கல் தனபாலன் said...

பார்த்ததில்லை சார்... பார்க்க வேண்டும்...

சுருக்கமான விமர்சனம்... கண்ணொளி இணைப்பிற்கு நன்றி...

அப்பாதுரை said...

ஆவலுடன் காத்திருப்பேன். எழுதுங்க.

பால கணேஷ் said...

நகைச்சுவை தவிர்த்த உங்களின் பரந்து பட்ட வாசிப்பனுபவமும் ரசனையும் இப்போது வெளிப்பட ஆரம்பித்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி எனக்கு. அருமையான பகிர்வு. விட்ராம தொடருங்கண்ணா...

kaialavuman said...

//நண்பரே...மகேஷ் பட் ஒரு மாதிரியான இயக்குனர் ஆச்சே?
நம்பி பார்க்கலாமா?//

பல இயக்குனர்களின் முதல் சில படங்கள் நன்றாகவே இருக்கும். காரணம் புதிதான சிந்தனை, வணிக வெற்றியைவிட அங்கீகாரம் பெற நினைப்பது ஆகியவை காரணம். மகேஷ் பட் இயக்குனராக இருந்தவரை நல்லப் படங்களைத் தந்துள்ளார். ஆனால், தயாரிப்பாளர் ஆனவுடன் வணிக நோக்கம் முன்னிலைப் பட்டுவிட்டது. மேலும், அவர் மகள் நடிக்க வந்தவுடன் மகளை வணிக ரீதியாக நிலை நிறுத்த சில படங்களையும் எடுத்தார். இதனால் கூர் தீட்டப்படாமல் அவருள் இருந்த கதாசிரியரின் ’சரக்கும்’ தீர்ந்து போயிருக்கலாம்.

சாரான்ஷ் அவரின் நல்ல படங்களுள் ஒன்று.

ஸ்ரீராம். said...

சோடி சி பாத் தமிழில் பாண்டியராஜன் நடித்து எடுத்தார்கள் என்று சொல்லியிருந்தேன். ஸாரி, அது சிட்சோர். (நல்லவேளை, இதுவரை யாரும் தப்பைக் கண்டுபிடிக்கவில்லை!)

:))

சக்தி கல்வி மையம் said...

சரி...

சமீரா said...

நிறைய விஷயம் தெரிந்து கொண்டேன் சார் இந்த பதிவில் இருந்து... நன்றி சார்....

Anonymous said...

ரொம்பவும் அனுபவித்து எழுதி இருக்கிறீர்கள்! உங்களை பதிவர் சந்திப்பில் சந்தித்தது சந்தோஷம்! உங்களைப் பற்றி சொல்லிச்சொல்லி என் ஆர்வத்தை தூண்டியது சமீரா தான்!

என் பதிவு: http://ranjaninarayanan.wordpress.com/2012/08/30/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/

முரளிகண்ணன் said...

படம் பார்க்கத் தூண்டும் வகையில் நல்லதொரு அறிமுகம்

settaikkaran said...

//@கும்மாச்சி

அண்ணே இந்தியிலும் கலக்குறீங்க, வாழ்த்துகள்//

மிக்க நன்றி! இன்னும் நிறைய எழுத விருப்பமிருக்கிறது. :-)

//@Doha Talkies

நண்பரே...மகேஷ் பட் ஒரு மாதிரியான இயக்குனர் ஆச்சே? நம்பி பார்க்கலாமா?//

இப்போதுதான் அப்படி! அவரது முந்தைய படங்கள் நன்றாகவே இருக்கும். பாருங்கள்! நன்றி!

//@வரலாற்று சுவடுகள்
பார்க்க முயற்சிக்கிறேன் தல!//

அவசியம் பாருங்கள்! மிக்க நன்றி!

//@ஸ்ரீராம்.

இந்தப் படம் பற்றி கேள்விப் பட்டதில்லை. சோட்டி சி பாத் பார்த்திருக்கிறேன். தமிழில் பாண்டியராஜனை வைத்து இதே படம் பின்னாளில் காபி அடித்துக் கெடுக்கப் பட்டது! பாடல்கள் ஸ்பெஷல்! சேட்டைப் பதிவில் வித்தியாச புதிய முயற்சி?//

மிகவும் பிரபலமான ஒரு வெற்றிப்படம் ‘சாரான்ஷ்’. எனக்குத் தெரிந்து மகேஷ் பட்-டின் ‘அர்த்’ மட்டுமே தமிழில் ரீமேக் செய்யப்பட்டிருக்கிறது என்று ஞாபகம். எல்லாரும் உலகப்படங்கள் குறித்து எழுதும்போது, கொஞ்சம் முற்றத்து முல்லைகள் பற்றியும் எழுதலாம் என்று ஒரு நப்பாசைதான்! :-)

//சோடி சி பாத் தமிழில் பாண்டியராஜன் நடித்து எடுத்தார்கள் என்று சொல்லியிருந்தேன். ஸாரி, அது சிட்சோர். (நல்லவேளை, இதுவரை யாரும் தப்பைக் கண்டுபிடிக்கவில்லை!) :))

ஆஹா! இது எனக்குப் புதுத்தகவல்! நல்லவேளை, அந்தப் படத்தை நான் பார்த்ததில்லை. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

//@வெங்கட் நாகராஜ்

சாரான்ஷ் பார்த்து ரசித்திருக்கிறேன் சேட்டை. நல்ல படம் தான்...//

டெல்லிக்காரராச்சே! பார்க்காமல் இருக்க முடியுமா? மிக்க நன்றி வெங்கட்ஜீ!

//@எல் கே

ஹிந்தி பக்கம் போறதில்லை//

உங்களைப் போன்றவர்களுக்குத் தகவலளிக்கவே இதை ஆரம்பித்தேன் கார்த்தி! :-)

மிக்க நன்றி!

//@ரிஷபன்

பார்க்க முயற்சிக்கிறேன் !//

அவசியம் பாருங்கள்! மிக்க நன்றி!

//திண்டுக்கல் தனபாலன்

பார்த்ததில்லை சார்... பார்க்க வேண்டும்...சுருக்கமான விமர்சனம்... கண்ணொளி இணைப்பிற்கு நன்றி...//

மிக்க நன்றி நண்பரே! சந்தர்ப்பம் கிடைத்தால் அவசியம் பாருங்கள்! :-)

settaikkaran said...

//அப்பாதுரை said...

ஆவலுடன் காத்திருப்பேன். எழுதுங்க.//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

//பால கணேஷ் said...

நகைச்சுவை தவிர்த்த உங்களின் பரந்து பட்ட வாசிப்பனுபவமும் ரசனையும் இப்போது வெளிப்பட ஆரம்பித்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி எனக்கு. அருமையான பகிர்வு. விட்ராம தொடருங்கண்ணா...//

சில விசயங்களில் நான் அப்படியே உங்களைத்தான் பின்பற்றுகிறேன் கணேஷ்ஜீ! அந்த உந்துதல் தொடர்ந்து எழுத வைக்கும்! நன்றி!

//வெங்கட ஸ்ரீநிவாசன் said...

பல இயக்குனர்களின் முதல் சில படங்கள் நன்றாகவே இருக்கும். காரணம் புதிதான சிந்தனை, வணிக வெற்றியைவிட அங்கீகாரம் பெற நினைப்பது ஆகியவை காரணம். மகேஷ் பட் இயக்குனராக இருந்தவரை நல்லப் படங்களைத் தந்துள்ளார். ஆனால், தயாரிப்பாளர் ஆனவுடன் வணிக நோக்கம் முன்னிலைப் பட்டுவிட்டது.//

அவர் இயக்குனராகவே கூட ‘டூப்ளிகேட்’ ‘ஜெண்டில்மேன்’ போன்ற படங்களில் சறுக்கியிருக்கிறார். ‘ஹம் ஹை ராஹீ பியார் கே’ படம் ஒருவிதமான பிராயச்சித்தம் என்றாலும், அவரது பிற்காலப்படங்கள் கொஞ்சம் பொறுமையை சோதித்தவைதான்!

//மேலும், அவர் மகள் நடிக்க வந்தவுடன் மகளை வணிக ரீதியாக நிலை நிறுத்த சில படங்களையும் எடுத்தார். இதனால் கூர் தீட்டப்படாமல் அவருள் இருந்த கதாசிரியரின் ’சரக்கும்’ தீர்ந்து போயிருக்கலாம்.//

மிகவும் சரி! தயாரிப்பாளரானதும் அவருக்குள்ளிருந்த படைப்பாளி மூர்ச்சையடைந்து விட்டார். :-(

மிக்க நன்றி! மிக்க நன்றி! :- )

(இரண்டாவது நன்றி முந்தைய பதிவுக்காக...!)

:-)

//@மனசாட்சி™

ம்//

:-)))))

//@வேடந்தாங்கல் - கருண்

சரி...//

மிக்க நன்றி! :-)

//@சமீரா said...

நிறைய விஷயம் தெரிந்து கொண்டேன் சார் இந்த பதிவில் இருந்து... நன்றி சார்....//

உங்களது வாசிக்கும் ஆர்வமும், உற்சாகப்படுத்தும் ஆர்வமும் மகிழ்ச்சியளிக்கிறது. நன்றி சகோதரி!

//@ranjaninarayanan

ரொம்பவும் அனுபவித்து எழுதி இருக்கிறீர்கள்! உங்களை பதிவர் சந்திப்பில் சந்தித்தது சந்தோஷம்! உங்களைப் பற்றி சொல்லிச்சொல்லி என் ஆர்வத்தை தூண்டியது சமீரா தான்!//

உங்களைச் சந்தித்தது ஒரு மகிழ்ச்சியான, உற்சாகமூட்டும் அனுபவம். உங்கள் பதிவை வாசித்தபோது, மனம் குதூகலமடைந்தேன். மிக்க நன்றி!

//@முரளிகண்ணன்

படம் பார்க்கத் தூண்டும் வகையில் நல்லதொரு அறிமுகம்//

அவசியம் பாருங்கள்! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!