Wednesday, July 18, 2012

சைனா காட்டிய வழியம்மாஅந்தப் புதிய பள்ளிக்கூடம் வாசலில், வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசலுக்கு வருகிற பக்தர்களைப் போல பெற்றோர்கள் நீண்ட வரிசையில் நின்றிருந்தனர்.

     எல்லாரும் வழிவிட்டு நில்லுங்க!போலீஸ்காரர் லட்டியைச் சுழற்றினார். “ஒதுங்குங்க, ஒதுங்குங்க! பிரின்சிபல் வர்றாரு!

     பிரின்சிபல்தானே வர்றாரு?கிட்டாமணி புலம்பினார். “என்னமோ கபில்சிபல் வர்றா மாதிரியில்லே கெடுபிடி பண்ணுறாங்க?

     சும்மாயிருங்க!கணவரை அதட்டினாள் பாலாமணி. “ஸ்கூல் அட்மிஷன் கிடைக்கிற வரைக்கும் வீட்டுலே இருக்கிற மாதிரியே வாயைத் திறக்காம இருங்க!

     போலீஸின் மிரட்டலை விடவும், மனைவியின் அதட்டல் பயமுறுத்தவே, அரசாங்க ஆஸ்பத்திரியில் வாயில் தர்மாமீட்டரை வைத்ததுபோல கிட்டாமணி அமைதியானார். ஆனாலும், தன் குழந்தைக்குத்தான் முதல் நேர்முகத்தேர்வு என்றதை எண்ணி, ஆறுதலும் படபடப்புமாய் எப்போது கூப்பிடுவார்கள் என்று கேட்டையே பார்த்துக் கொண்டிருந்தார்.

     பாப்பா!குழந்தையைக் கொஞ்சினாள் பாலாமணி. “உள்ளே பிரின்சிபல் என்ன கேட்டாலும் டக்கு டக்குன்னு பதில் சொல்லணும் கண்ணு! உள்ளே போய் வெளியே வர்ற வரைக்கும் உங்கப்பாவை மறந்திடணும். இல்லாட்டா அவரு மாதிரியே தத்துப்பித்துன்னு எதையாவது உளறினா வம்பாப் போயிடும்.

     சரிம்மா, ஃபீஸ் கட்டச்சொன்னா மட்டும்தான் அப்பாவைப் பத்தி ஞாபகப்படுத்திக்குவேன். போதுமா?என்றாள் குட்டிப்பாப்பா.

     குட் மதர்; குட் டாட்டர்,என்று தலையிலடித்துக் கொண்டார் கிட்டாமணி. “எப்படியோ, என் பொண்ணுக்கு இந்த ஸ்கூல்லே அட்மிஷன் கிடைச்சிட்டா போதும்.

     மிஸ்டர் கிட்டாமணி! மிசஸ் பாலாமணி!என்று பியூன், கிளைமேக்ஸ் காட்சியில் வில்லன் கத்துவதைப் போல உரக்க அழைத்தான்.

     நாங்கதான்! நாங்கதான்!என்று முண்டியடித்து முன்னால் சென்றனர் கிட்டாமணியும் பாலாமணியும்.

     பிரின்சிபல் கூப்புடுறாரு! உள்ளே போங்க!

     பில்லா-II முதல் நாள் முதல் ஷோவுக்கு முதல் டிக்கெட் கிடைத்த தல ரசிகர்களைப் போல, கிட்டாமணி தம்பதியர் குட்டிப்பாப்பாவை இழுத்துக்கொண்டு ஓடி பிரின்சிபல் அறையை அடைந்தனர்.

     உட்காருங்க!என்று சொன்ன பிரின்சிபலைப் பார்த்தால், தமிழ் சீரியல்களில் ஏழை அம்மா ரோலில் நடிப்பவர்போல கொழுக்கு மொழுக்கென்று படுபுஷ்டியாக இருந்தார்.
    
            பொண்ணோட ஜாதகத்தைக் கொடுங்க!என்று பிரின்சிபல் சொன்னதும் கிட்டாமணியும் பாலாமணியும் அட்ரஸ் தெரியாமல் அண்ணா நகருக்கு வந்தவர்கள்போல விழித்தார்கள்.

     ஜாதகம் கொண்டு வரலை மேடம்! பர்த் சர்டிபிகேட் தான் இருக்கு!

     ஓ!என்று பர்த் சர்டிபிகேட்டை வாங்கிப் பார்த்தார் பிரின்சிபல்,ஓ, செப்டம்பர் மாசமா? என்ன நட்சத்திரம்?

     மகம்!என்று குழப்பத்துடன் கூறினார் கிட்டாமணி.

     சூப்பர்! மகம் ஜகம் ஆளும்னு சொல்லுவாங்க!என்றார் பிரின்சிபல்,அது சரி, பொண்ணுக்கு என்ன போடுவீங்க?

     டிரஸ் தான் போடுவோம்! என்றாள் பாலாமணி.

     அதைக் கேட்கலீங்க? தங்கம் எவ்வளவு பவுன் போடுவீங்க, வெள்ளிப்பாத்திரம் எவ்வளவு? பித்தளைப் பாத்திரம் எவ்வளவு? சீர்முறுக்கு எவ்வளவு செய்வீங்க?

     மேடம்!கிட்டாமணி குழப்பத்தோடு கேட்டார். “இப்பத்தானே ஸ்கூல் அட்மிஷனே ஆகப்போகுது! இப்ப எதுக்குக் கல்யாணத்தைப் பத்தி யோசிக்கணும்?

     இந்த ஸ்கூலிலே எல்லாத்தையும் கேட்டுக்குவோம் சார். அப்பத்தானே அதோட எதிர்காலம் பிரைட்டா இருக்கும்.

     நான் அப்பவே சொன்னேன்,என்று கிட்டாமணி காதில் முணுமுணுத்தாள் பாலாமணி. “ஸ்கூல் கீழ்ப்பாக்கத்துலே இருக்கு. இங்கே பாப்பாவை அட்மிட் பண்ணினா, வீட்டுலே  நீங்க படுத்துறது போதாதுன்னு இங்கேயும் அவஸ்தைப்படும்னு....

     இரு, அவங்க என்னதான் சொல்றாங்கன்னு கேட்போம்!என்ற கிட்டாமணி, “மேடம், எப்படியாவது என் குழந்தைக்கு அட்மிஷன் கொடுத்திருங்க. உங்களுக்குக் கோடி புண்ணியம்.

     அது சரி, உங்களுக்கு வரப்போற மாப்பிள்ளை டாக்டராயிருக்கணுமா, இஞ்ஜினீயரா இருக்கணுமா?என்று கேட்டார் பிரின்சிபல்.

     என்னது?அதிர்ந்தாள் கிட்டாமணி. “என்ன மேடம், வந்ததுலேருந்து பொண்ணு கல்யாணத்தைப் பத்தியே பேசிட்டிருக்கீங்க. நாங்க வந்திருக்கிறது ஸ்கூல் அட்மிஷனுக்கு.

     அடாடா! நீங்க எங்க விளம்பரத்தைச் சரியா பார்க்கலே போலிருக்கு! சமீபத்துலே சைனாவுலே ஒரு ஸ்கூல் ஆரம்பிச்சிருக்காங்க! அந்த ஸ்கூல்லே படிக்கிறபொண்ணுங்களுக்கு, எப்படிப் பணக்கார மாப்பிள்ளைகளை வளைச்சுப் போடுறதுன்னு சொல்லிக்கொடுக்கிறாங்களாம்! பணக்காரப் பசங்க எப்படி இருப்பாங்க, என்ன சாப்பிடுவாங்க, அவங்களை எப்படி மடக்கலாம்னு விலாவரியா சொல்லிக் கொடுக்கிறாங்களாம். அதைப் பாத்துத்தான் இந்த ஸ்கூலையும் நாங்க ஆரம்பிச்சிருக்கோம்.

     என்ன விளையாடறீங்களா?எரிந்து விழுந்தார் கிட்டாமணி. “எதுக்குத்தான் ஸ்கூல் நடத்துறதுன்னு ஒரு விவஸ்தை கிடையாதா? நம்மூரிலே பணக்காரப்பசங்களை மடக்கிறதெல்லாம் பெரிய விஷயமா? பகல் நேரத்துலே எல்லாப் பயபுள்ளைகளும் லேடீஸ் காலேஜ் வாசல்லே நின்னுக்கிட்டிருப்பாங்க. ராத்திரியானா பப்பு, கிளப்புன்னு சுத்திட்டிருப்பாங்க! மெரீனா பீச், சாந்தோம் பீச், எலியட்ஸ் பீச்லே ஒரு சுத்து சுத்தினா எத்தனை இளிச்சவாயனுக சுத்திட்டிருப்பாங்க? இல்லாட்டா, சிட்டி செண்டர், அம்பா ஸ்கைவாக், எக்ஸ்பிரஸ் அவென்யூன்னு போனா வாட்ச்மேன் மாதிரி வாசல்லேயே நின்னுக்கிட்டிருப்பாங்க! பர்கரும் பிஸ்ஸாவும் தின்னு பக்கத்துலே போனாலே கப்படிக்கும்.  இந்த ஸில்லி மேட்டருக்கெல்லாம் ஸ்கூலா?

     புரியுது சார்,என்றார் பிரின்சிபல். “நம்ம ஊருக்கு இதெல்லாம் ஒண்ணுமே இல்லைதான். அதுனாலே தான், நாங்க சைனாவை விட பெட்டரா ஒரு சிலபஸ் வச்சிருக்கோம். அதாவது, உங்க பொண்ணு கல்யாணத்துக்கு ரெடியாகுறதுக்கு முன்னாலே எங்க ஸ்கூலிலேயே ஒரு கல்யாண மண்டபம் ரெடியாயிரும். இதுக்குன்னே புரோகிதர், சமையல்காரர், நாதஸ்வரக்காரர், இவ்வளவு ஏன், சீட்டுக்கச்சேரி, சம்பந்திச்சண்டைக்குக் கூட ஆளை அப்பாயிண்ட் பண்ணப்போறோம். உங்க பொண்ணுக்கு ஸ்கூலிலேயே கல்யாணமும் ஆகியிருக்கும். சொல்லுங்க சார், எப்ப ஃபீஸைக் கட்டப்போறீங்க?

     மேடம்! ஆளை விடுங்க!என்று அலறியவாறு கிட்டாமணியும் பாலாமணியும் குழந்தையை இழுத்துக் கொண்டு வெளியேறினார்கள்.

     சார்...சார்!வரிசையில் நின்ற ஒருவர் கிட்டாமணியை அழைத்தார். “எப்படி சார், அட்மிஷன் கிடைச்சிடுச்சா? என் குழந்தைக்கும் அட்மிஷன் கிடைக்குமா சார்?

     ஓ!என்றார் கிட்டாமணி கடுப்புடன். “உள்ளே போறதுக்கு முன்னாடி, அவங்க கேட்கப்போற கேள்விக்கு பதிலை ரெடியா வச்சிக்கோங்க!

     என்ன சார் கேட்பாங்க?

     உங்க பொண்ணோட தலைப்பிரசவத்தை எங்க வச்சுக்குவீங்க? ஸ்கூல்லேயா? வீட்டுலேயா? “

12 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா..ஹா.. அமர்க்களப்படுத்தி விட்டீர்கள்...

பகிர்வுக்கு நன்றி...
தொடருங்கள்...வாழ்த்துக்கள்...

பாடல் வரிகள் ரசிக்க : "உன்னை அறிந்தால்... (பகுதி 1)”

rajamelaiyur said...

உண்மையில் இப்படி நடந்தாலும் ஆச்சரிய படுவதிர்க்கில்லை

நாய் நக்ஸ் said...

:)))))))))))))))))))))

rajamelaiyur said...

//
Blogger NAAI-NAKKS said...

:)))))))))))))))))))))

///

அருமையான கருத்து பாஸ் .. எப்படி பாஸ் எப்படி அருமையான கமெண்ட் போடுறிங்க ?

Doha Talkies said...

கிட்டாமணி, பாலாமணி ...
குழந்தை பேரு? குண்டுமணி யா?
அசத்தலான பதிவு ..
தொடர வாழ்த்துகள்

பால கணேஷ் said...

அந்த வரி இந்த வரி என்று குறிப்பிட்டுப் பாராட்ட முடியாமல் அனைத்து வரிகளையும் ரசித்துப் படித்து மகிழ்ந்தேன். சைனாவுல இப்படியுமா... அவ்வ்வ்வ். இந்தியாவுல் சீரியஸாவே இப்படி எந்த பிரகஸ்பதிக்காவது தோணிணாலும் ஆச்சர்யமில்ல...

ரிஷபன் said...

இந்தப் பதிவை படிச்சுட்டு இதே ரூட்டுல யோசிச்சாலும் ஆச்சர்யமில்ல.. முழுக்க முழுக்க நையாண்டி தர்பார்.

sathishsangkavi.blogspot.com said...

சேட்டையின் சேட்டையை ரொம்ப நாளைக்கு அப்புறம் மிக மிக ரசித்தேன்...

வெங்கட் நாகராஜ் said...

//”உங்க பொண்ணோட தலைப்பிரசவத்தை எங்க வச்சுக்குவீங்க? ஸ்கூல்லேயா? வீட்டுலேயா? “//

இப்படி நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை....

வரிக்கு வரி சேட்டை... ரசித்தேன்.

Doha Talkies said...

அருமை.ஹி ஹி
சமயம் கிடைக்கும் போது நம்ம ப்ளாக் பக்கம் வந்துட்டு போங்க நண்பரே..
http://dohatalkies.blogspot.com/2012/07/schindlers-list_1072.html

ARIVU KADAL said...

அருமையான நகைச்சுவை கலந்த பதிவு.நீண்ட நாளுக்கு பின் மனம்விட்டு சிரித்தேன். நன்றிகள்.

கோமதி அரசு said...

சமீபத்துலே சைனாவுலே ஒரு ஸ்கூல் ஆரம்பிச்சிருக்காங்க! அந்த ஸ்கூல்லே படிக்கிறபொண்ணுங்களுக்கு, எப்படிப் பணக்கார மாப்பிள்ளைகளை வளைச்சுப் போடுறதுன்னு சொல்லிக்கொடுக்கிறாங்களாம்!//

”உங்க பொண்ணோட தலைப்பிரசவத்தை எங்க வச்சுக்குவீங்க? ஸ்கூல்லேயா? வீட்டுலேயா? “//

எப்படி எல்லாம் கற்பனை செய்கிறேங்க!
நல்ல நகைச்சுவை வாய் விட்டு சிரித்தேன்.