Saturday, February 12, 2011

காதலர்தின சிறப்பு ராசிபலன்கள்

தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளின்போது தொலைக்காட்சியில் சிறப்பு ராசிபலன்கள் சொல்வதுபோல காதலர் தினத்தன்று ஏன் சொல்வதில்லை? அந்தோ, நெஞ்சு பொறுக்குதில்லையே! அதுக்கென்ன, இதுவரைக்கும் நம்ம கையிலே அகப்படாதது காதல் ஒண்ணுதான்; சும்மா விட்டிருவமா? இதோ ஜோதிடகலாநிதி ஆருடஜோதி சேட்டைக்காரன் வழங்கும் காதலர்களின் பன்னிரெண்டு ராசிகளுக்குமான பலன்கள்.

மேஷம் Aries

இன்னும் யாரையும் காதலிக்கவே ஆரம்பிக்கவில்லையா? உங்களுக்கு ஒரு நல்ல செய்தி; விரைவில் உங்கள் உள்ளத்தைக் கொள்ளை கொள்ள ஒருவர் வரப்போகிறார்.

ஏற்கனவே காதலித்துக்கொண்டிருக்கிறீர்களா? உங்களுக்கு இனிமேல் சோதனைதான்! விரைவில் இருவரும் கல்யாணம் செய்து கொள்ளப்போகிறீர்கள்.

ரிஷபம் Taurus

இந்த ராசிக்காரக் காதலர்களுக்கு விரைவில் ஒரு பெரிய கோஷ்டியுடன் எங்காவது ஒரு பார்க்கிலோ, பீச்சிலோ நிறைய காஸ்ட்யூம்களை மாற்றிக்கொண்டு டூயட் பாட ஒரு வாய்ப்புக் கிடைக்கப்போகிறது. உங்களுக்குப் பிடித்த இசையமைப்பாளர்களின் பாடல்களில் ஒன்றை மனப்பாடம் செய்து கொள்வது நலம் பயக்கும்! குத்துப்பாட்டெல்லாம் நல்லா டான்ஸ் ஆடத்தெரிஞ்சவங்களுக்கு மட்டும்தான்! பல ரோடுகள் சேதமடைந்திருப்பதால், கல்லுக்கு எங்கும் பஞ்சமில்லை.

இதுவரை காதலிக்காதவர்களுக்கு! சுக்கிரனின் பார்வை இப்போது உங்கள் மீது விழுந்திருப்பதால், விரைவில் டவுண் பஸ், ஷேர்-ஆட்டோ, ரயில் பயணங்களின்போதோ, ஸ்பென்ஸர்ஸ், அண்ணா நகர், திருவான்மியூர் போன்ற சிக்னல்களிலோ உங்களது எதிர்காலத் துணையை சந்திக்கிற வாய்ப்பு ஏற்படப்போகிறது. (கவனம்: ஐயா, சாமீ தர்மம் பண்ணுங்க என்று வருகிறவர்கள் இதில் அடங்கமாட்டார்கள்!)

மிதுனம் Gemini

’காதலாவது கத்திரிக்காயாவது,’ என்று மார்னிங் ஷோ சினிமா பார்த்தோமா, சரவணபவனில் மினிமீல்ஸ் சாப்பிட்டோமா, ஒன்-ட்வென்ட்டி பான் மென்றோமா என்று இருந்த உங்களுக்கு சனிதசை தொடங்கியிருப்பதால், விரைவில் காதல்வயப்பட்டு கவிழ்த்துப்போட்ட கரப்பான்பூச்சி மாதிரி கஷ்டப்படப் போகிறீர்கள். உங்கள் தசாபலன்களின்படி இந்த கண்டத்திலிருந்து தப்பிப்பது கடினம் என்றாலும், சில நாட்களுக்கு கைபேசி,கணினி போன்ற அனுகூலசத்ருக்களிடமிருந்து விலகியிருந்தால், சனியின் உக்கிரம் சற்றுக் குறைய வாய்ப்பிருக்கிறது; அதாவது பாதிப்பு சற்று தாமதிக்கலாம்.

ஒரேயடியாக மீள்வதற்கு வழியில்லையா என்று கேட்பவர்களுக்கு: ’உடனே திருமணம் செய்து கொண்டு விடுவோம்,’ என்று சொன்னால் மலைபோல வரும் துன்பம் பனிபோல போக வாய்ப்பிருக்கிறது.

கடகம் Cancer

சும்மா சொல்லக்கூடாது. உங்க ராசிப்படி உங்கள் வாழ்க்கைத்துணையை உங்க வீட்டிலேயே பார்த்து முடிவு பண்ணி விடுவார்கள் என்பதால் நிறைய அலைச்சல், செலவு, உளைச்சல் மிச்சமாகும். அதற்கெல்லாம் சேர்த்துவைத்து திருமணத்திற்குப் பிறகு மூன்றும் சேர்ந்து மும்முனைத் தாக்குதல் நடத்தும்.

சிம்மம் Leo

இந்த ராசிக்காரர்கள் எல்லா கிரெடிட் கார்டு பாக்கியையும் விரைவில் அடைத்து விடுவார்கள் என்பதால், புதுக்கார்டுகள், புதுக்கடன், புதுக்காதல் எல்லாம் கைகூடுகிற வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. சூட்டோடு சூடாக, கடன் தலைக்கு மேல் மீண்டும் போவதற்கு முன்னர், திருமணத்தை முடித்துக்கொள்வது உசிதம்.

கன்னி Virgo

’தெரியாத்தனமாகக் காதலித்துத் தொலைத்துவிட்டோமே, இதெல்லாம் நமக்குத் தேவையா என்று தலையில் மடேர் மடேர் என்று அடித்துக்கொண்டிருப்பவர்கள் இந்த ராசிக்காரர்கள். இவ்வளவு நாட்கள் இடைவிடாத சண்டையும் சச்சரவுமாக காதலித்துவிட்டதால், போனால் போகிறது என்று இனி திருமணம் செய்து கொண்டு விடலாம். இன்னும் காதலிக்கவே ஆரம்பிக்காதவர்களுக்கு பூர்வஜென்ம தொடர்புகள் ஏற்படுகிற வாய்ப்புகள் இருப்பதால், மலைப்பிரதேசங்களுக்குப் போக வேண்டிய பல வாய்ப்புகள் ஏற்படலாம். (கு..றிஞ்சி மலர் மலையில் தானே பூக்கும்!)

துலாம் Libra

இந்த ராசிக்காரர்கள் அனேகமாக அவரவர் பட்ஜெட்டுக்குத் தகுந்தவாறு மண்டபத்தைத் தேடிக்கொண்டிருப்பார்கள் என்பது உறுதி. விரைவில் டும்டும் கொட்டப்போகிறது என்பதால், ப்ரிவிலேஜ் லீவ், லோன் ஆகியவற்றிற்கான ஊத்தப்பங்களை, மன்னிக்கவும், விண்ணப்பங்களை தயார் செய்து கொள்ளவும். தன்னந்தனியாக இருப்பவர்களே! திரும்பிப் பாருங்கள் - வில்லங்கம் விரைவு வண்டியிலே வந்திட்டிருக்கு!

விருச்சிகம் Scorpio

இதுவரைக்கும் கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட காப்பாற்றாத காதலர்கள் இனிமேல் புதிய வாக்குறுதிகளை அளித்து விடுவார்கள். காதலுக்கு தைரியமும் திராணியும் மிக அவசியம். எனவே, யாரையாவது பார்த்து காதல் வந்தால், தைரியமாகச் சொல்லிவிடுங்கள். பிரச்சினை வந்தால், இருக்கவே இருக்கிறது திராணி! திரும்பிப் பார்க்காமல் ஓடி விடுங்கள்!

தனுசு Sagittarius

இதுவரை சதா சண்டை,சச்சரவு,கோபம் என்றிருந்த காதலர்களுக்கு, இனிமேல் அதுவே பழகிப்போய் விடும். ஆகையால் இனிமேல் ஒருநாள் சண்டை போடாவிட்டாலும், மனம் பதைபதைத்து "உடம்புக்கு ஒண்ணுமில்லையே?" என்று அக்கறையோடு விசாரிப்பீர்கள்.

உங்களது கனவுக்கன்னி அல்லது கனவுக்காதலன் எப்படியிருக்க வேண்டும் என்று கற்பனை செய்பவர்கள், மறந்து விடுவதற்கு முன்னர் எழுதிவைத்துக்கொண்டு தேடுதல் நன்மை பயக்கும்.

மகரம் Capricorn

பன்னிரெண்டு ராசிகளிலும் காதலர்களுக்கு மிகவும் மோதகமான, அதாவது சாதகமான ராசி இது தான். உங்கள் காதலைப் பற்றி வீட்டில் யாராவது போட்டுக்கொடுத்து விடுவார்கள் என்பதால் இனிமேல் பயமின்றி சந்திக்கலாம். இதுவரை காதலிக்காதவர்களிடம் யாராவது வந்து அசடுவழிந்து அகமகிழச்செய்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகக் காணப்படுகின்றன.

கும்பம் Aquarius

இந்த ராசிக்காரக் காதலர்கள் வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு ரகம். ஒன்று தங்களுக்குள்ளே ஏற்பட்ட மனக்கசப்புகளையெல்லாம் ஒரு மசால்தோசை சாப்பிட்டுவிட்டு மறந்துவிடுவார்கள். இல்லாவிட்டால், ஆளுக்கு ஒரு கப் அருகம்புல் ஜூஸ் குடித்துவிட்டு ஆளை விடு சாமீ என்று போய்விடுவார்கள். இதுவரை காதலிக்காதவர்கள், எப்போது சினிமாவுக்குப் போனாலும் ஒரு எக்ஸ்ட்ரா டிக்கெட் எடுப்பது நல்லது. குருட்டாம்போக்கில் ஜோடி சேர்ந்தாலும் சேரும்.

மீனம் Pisces

இந்த ராசிக்காரர்களிடம் கோடம்பாக்கம் போக வழிகேட்டால், பதில் சொல்வதற்குள்ளாக நீங்கள் கோயம்புத்தூருக்கே போய்வந்து விடலாம். ஆனால், திடீரென்று லெட்டர்-பேட் கட்சிகள் தேர்தல் நேரத்தில் அடைவது போன்ற சுறுசுறுப்பை இவர்கள் அடையவும் வாய்ப்பிருக்கிறது. எனவே காதலில் ஒரு லிரில் புத்துணர்ச்சி ஏற்பட்டாலும் ஏற்படும். புதிதாகக் காதலிக்க விரும்புகிறவர்கள் யுவன் சங்கர் ராஜா பாடல்களை தினமும் குளித்துவிட்டுப் பாராயணம் செய்தால் கைமேல் பலன் கிடைக்கும்.

அனைத்து ராசிக்காரர்களுக்கும்:

ராசியான நிறம்: சிவப்பு
ராசியான உடை: முக்காடு
ராசியான எண்கள்: 'பிஸி’ யாக இல்லாத எல்லா எண்களும்.

டிஸ்கி: எனக்கு ஜோதிடம் தெரியாது என்று எண்ணிக்கொண்டிருப்பவர்கள், இனிமேலாவது புரிந்து கொள்ளட்டும் - எனக்குக் காதலைப் பற்றியும் சுத்தமாகத் தெரியாது. ஆகையால், ஜோதிடர்களும் காதலர்களும் என்னை மன்னிப்பார்களாக!

29 comments:

தங்கராசு நாகேந்திரன் said...

//எனக்குக் காதலைப் பற்றியும் சுத்தமாகத் தெரியாது. ஆகையால், ஜோதிடர்களும் காதலர்களும் என்னை மன்னிப்பார்களாக!//

நம்ப முடியவில்லை இல்லை இல்லை.......

பிரபாகர் said...

கடைசியாய் ரொம்ப தன்னடக்கம் நண்பரே... கலாய்த்தலாய் இருக்கு, அருமை.

பிரபாகர்...

தக்குடு said...

attakaasam mr.chettaikaran...:) kadakam rasipalan sooperoo sooper...:) ha ha

சி.பி.செந்தில்குமார் said...

சேட்டை அண்ணன் பிளாக்ல காதல் மேட்டரா.. இதோ வந்துட்டேன்

சி.பி.செந்தில்குமார் said...

>>>ராசியான நிறம்: சிவப்பு
ராசியான உடை: முக்காடு
ராசியான எண்கள்: 'பிஸி’ யாக இல்லாத எல்லா எண்களும்.


haa haa ஹா ஹா சிவப்பு டேஞ்சர்

cheena (சீனா) said...

நல்லாத்தானே இருக்கு - பல பேருக்கு - காதலும் தெரியாதாம் - ஜோஸ்யமும் தெரியாதாம் - எப்பூடி

எல் கே said...

// எனக்கு ஜோதிடம் தெரியாது என்று எண்ணிக்கொண்டிருப்பவர்கள், இனிமேலாவது புரிந்து கொள்ளட்டும் - எனக்குக் காதலைப் பற்றியும் சுத்தமாகத் தெரியாது. ஆகையால், ஜோதிடர்களும் காதலர்களும் என்னை மன்னிப்பார்களாக!//

இன்னுமா இந்த உலகம் உன்னை நம்புது

Thuvarakan said...

va va settai anna. that was super.

but we lovers never going to forgive you....

Unknown said...

//உங்களுக்கு சனிதசை தொடங்கியிருப்பதால், விரைவில் காதல்வயப்பட்டு கவிழ்த்துப்போட்ட கரப்பான்பூச்சி மாதிரி கஷ்டப்படப் போகிறீர்கள்.//


இது போன்று ரசிக்க வைத்த இடங்கள் ஏராளம்.

Unknown said...

// ப்ரிவிலேஜ் லீவ், லோன் ஆகியவற்றிற்கான ஊத்தப்பங்களை, மன்னிக்கவும், விண்ணப்பங்களை தயார் செய்து கொள்ளவும். தன்னந்தனியாக இருப்பவர்களே! திரும்பிப் பாருங்கள் //
// தங்களுக்குள்ளே ஏற்பட்ட மனக்கசப்புகளையெல்லாம் ஒரு மசால்தோசை சாப்பிட்டுவிட்டு மறந்துவிடுவார்கள்.//
// திடீரென்று லெட்டர்-பேட் கட்சிகள் தேர்தல் நேரத்தில் அடைவது போன்ற சுறுசுறுப்பை இவர்கள் அடையவும் வாய்ப்பிருக்கிறது.//

// புதிதாகக் காதலிக்க விரும்புகிறவர்கள் யுவன் சங்கர் ராஜா பாடல்களை தினமும் குளித்துவிட்டுப் பாராயணம் செய்தால் கைமேல் பலன் கிடைக்கும்.//

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

நம்பலாமா? என்னோட ராசிக்கு சூப்பரா சொல்லி இருக்கீங்க! ( தனுஷு )

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

ஹ..ஹா...ஹா....

Yoga.s.FR said...

"கடகம்" என்ன பாவம் பண்ணியது?(பன்னியது?!)

தினேஷ்குமார் said...

மகரத்துக்கு சொல்லியிருக்கீங்க யாராவது வர்றாங்கலான்னு பார்ப்போம் இதுவரையில்லை ஓகே ஐ அம் வெய்டிங்

வெங்கட் நாகராஜ் said...

ஆஹா காதல் ஜோசியமா! ம்.. நல்லாத்தேன் இருக்கு!!!!

settaikkaran said...

//தங்கராசு நாகேந்திரன் said...

//எனக்குக் காதலைப் பற்றியும் சுத்தமாகத் தெரியாது. ஆகையால், ஜோதிடர்களும் காதலர்களும் என்னை மன்னிப்பார்களாக!//

//நம்ப முடியவில்லை இல்லை இல்லை.......//

நம்பினார் கெடுவதில்லை; மிக்க நன்றி நண்பரே!

settaikkaran said...

//பிரபாகர் said...

கடைசியாய் ரொம்ப தன்னடக்கம் நண்பரே... கலாய்த்தலாய் இருக்கு, அருமை.//

அப்போ முதல்லே ரொம்ப ஆர்ப்பாட்டம் பண்ணிட்டனோ? :-)
மிக்க நன்றி நண்பரே!

settaikkaran said...

//தக்குடு said...

attakaasam mr.chettaikaran...:) kadakam rasipalan sooperoo sooper...:) ha ha//

அப்படீன்னா நீங்க கடகமுன்னு சொல்லுங்க! :-)
மிக்க நன்றி!

settaikkaran said...

//சி.பி.செந்தில்குமார் said...

சேட்டை அண்ணன் பிளாக்ல காதல் மேட்டரா.. இதோ வந்துட்டேன்//

ஐயையோ, கவிதையெல்லாம் எழுதுறதில்லேன்னு செத்துப்போன என் கொள்ளுப்பாட்டிக்கு சத்தியம் பண்ணிக்கொடுத்திருக்கேன்..(காதல் கவிதை!)

//haa haa ஹா ஹா சிவப்பு டேஞ்சர்//

அதே! அதே!! மிக்க நன்றி தல! என்னாலே உங்க பக்கம் வரமுடியாட்டிப்போனாலும், நீங்க தவறாம வந்து உற்சாகப்படுத்துறீங்க!

settaikkaran said...

//cheena (சீனா) said...

நல்லாத்தானே இருக்கு - பல பேருக்கு - காதலும் தெரியாதாம் - ஜோஸ்யமும் தெரியாதாம் - எப்பூடி//

ஆஹா! சீனா ஐயாவே சொல்லிட்டாரு! இனிமேல் அப்பீல் ஏது? மிக்க நன்றி ஐயா!

settaikkaran said...

//எல் கே said...

இன்னுமா இந்த உலகம் உன்னை நம்புது//

அதானே? எப்புடி கார்த்தி? ஏதாவது பில்லிசூனியமா இருக்குமோ? :-)
மிக்க நன்றி கார்த்தி!

settaikkaran said...

//Thuvarakan said...

va va settai anna. that was super. but we lovers never going to forgive you....//

சாபம் கீபம் போட்டுறாதீங்க! என்னை நம்பி ஒரு பிளாக்கே இருக்கு! :-)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

settaikkaran said...

//பாரத்... பாரதி... said...

இது போன்று ரசிக்க வைத்த இடங்கள் ஏராளம்.//

மிக்க நன்றி நண்பரே! :-)

பிடித்த பகுதிகளை எடுத்துக்காட்டி உற்சாகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி!

settaikkaran said...

//மாத்தி யோசி said...

நம்பலாமா? என்னோட ராசிக்கு சூப்பரா சொல்லி இருக்கீங்க! ( தனுஷு )//

அப்படீன்னா, கைவசம் இன்னொரு தொழில் வந்திருச்சா எனக்கு? :-))
மிக்க நன்றி நண்பரே!

settaikkaran said...

//மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

ஹ..ஹா...ஹா....//

மிக்க நன்றி நண்பரே!
(பார்த்து எம்புட்டு நாளாச்சு? நலமா?)

settaikkaran said...

//Yoga.s.FR said...

"கடகம்" என்ன பாவம் பண்ணியது?(பன்னியது?!)//

அனேகமா காதலிலேருந்து எஸ்கேப் ஆயிருக்குமோ? :-)

மிக்க நன்றி!

settaikkaran said...

//தினேஷ்குமார் said...

மகரத்துக்கு சொல்லியிருக்கீங்க யாராவது வர்றாங்கலான்னு பார்ப்போம் இதுவரையில்லை ஓகே ஐ அம் வெய்டிங்//

கீப் வெயிட்டிங்! இல்லாட்டி அடுத்த வருசம் வேறே மாதிரி சொல்றேன்! :-)
மிக்க நன்றி!

settaikkaran said...

//வெங்கட் நாகராஜ் said...

ஆஹா காதல் ஜோசியமா! ம்.. நல்லாத்தேன் இருக்கு!!!!//

பொருந்துதுன்னு சொல்லுங்க! :-))
மிக்க நன்றி ஐயா!

Unknown said...

மீன ராசிக்கு சொல்ல பட்ட கருத்தை வன்மையாக கண்டிக்கும் படி என் காதலை சொன்னங்க !!!!!!!!!!!!!


அவா அதுதான்