Monday, July 26, 2010

வா வாத்யாரே வூட்டாண்ட!

(சிரிங்க; சீரியஸா எடுத்துக்காதீங்க!)

வகுப்புக்கு செல்லாத அரசு கல்லூரி ஆசிரியர்களை பிடிக்க தனிப்படை: உயர்கல்வி மாமன்றம்

"தமிழக உயர்கல்வி மாமன்றம் பிறப்பித்துள்ள இந்த அவசரச்சட்டம் தனிமனித உரிமை மீறல்," என்று பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு பேராசிரியர், முகவரி எழுதாத ஒரு கடிதத்தில் ஸ்டாம்பு கூட ஒட்டாமல் அனுப்பி நமக்குத் தெரிவித்துள்ளார்.

பெருமதிப்புக்குரிய சேட்டைக்காரன் (மெய்யாலுமே அவர் அப்படித்தான் எழுதியிருக்காரு!)

வலையுலகில் இன்றைக்கு மிகவும் நடுநிலையை நீங்கள் ஒருவர்தான் கடைபிடிக்கிறீர்கள் என்று உங்கள் சித்தப்பா, மன்னிக்கவும், பெருவாரியான பொதுமக்கள் கருதுகிற காரணத்தால் அண்மையில் உயர்கல்வி மாமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு குறித்து உங்களது கவனத்தை ஈர்க்கிறேன்.

இந்த உத்தரவு ஏற்கனவே தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதற்கு உதாரணமாக, கீழ்க்காணும் சம்பவங்களை உங்களது கவனத்திற்குக் கொண்டுவர விழைகிறேன்.

சம்பவம்: 1

சென்னையின் பிரபல கல்லூரியில் அறிவியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றும் அண்ணாவி, அவியல் காய்கறிகளை வாங்கிக் கொண்டிருந்தபோது, கையும் காயுமாகப் பிடிபட்டு, கல்லூரி முதல்வரிடம் ஒப்படைக்கப்பட்டார். இன்றுவரை கல்லூரி முதல்வர் அந்தக் காய்கறிகளை அண்ணாவியிடம் திருப்பியளிக்கவில்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இது போன்ற அராஜகங்கள் பல்கிப் பெருகிக் கொண்டிருக்கின்றன என்பதை உங்களது வலைப்பூ வாயிலாக தமிழ்கூறும் நல்லுலகத்துக்கு எடுத்துரைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

சம்பவம். 2

மயிலாப்பூர் தெப்பக்குளம் பேருந்து நிலையமருகே நின்றிருந்த ஒரு புரோகிதரை அதிரடிப்படையினர், அவர் மாறுவேடத்தில் வந்திருக்கும் ஆசிரியராக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்து அழைத்துச் சென்றனர். விசாரணையின் போது, ’அட அபிஷ்டூ, நான் காலேஜ் வாத்தியார் இல்லேங்காணும்; கல்யாணம் பண்ணி வைக்கிற வாத்தியார்! பிரதோஷமாச்சேன்னு கோவிலுக்கு வந்தேன். அலாக்கா அள்ளிண்டு வந்துட்டேளே!" என்று அங்கலாய்த்ததாகத் தெரிகிறது.

இந்த அதிரடி உத்தரவு எந்த அளவுக்கு தனிமனித உரிமைகளை மீறியிருக்கிறது என்பதற்கு இதனைக் காட்டிலும் தக்க சான்றும் வேண்டுமோ?

எனவே இந்த அவசர உத்தரவைத் திரும்பப் பெறுமாறு, நீங்களும் உங்களைப் போல தமிழுலகத்துக்குத் தளராமல் தொண்டாற்றிவரும் சகபதிவர்களும் (அப்படியா? சொல்லவேயில்லை...?) பல்வேறு பதிவுகளை எழுதி, ஆவன செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

பி.கு: உங்களுக்கு நான் கடிதம் எழுதியதாக வெளியில் சொல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். இல்லாவிட்டால் கல்லூரி நேரத்தில் தபால் நிலையம் போனதற்காக எங்களது கல்லூரி முதல்வர் என்னை பெஞ்ச் மீது ஏறி நிற்கச் சொல்லிவிடுவார்.

இந்தக் கடிதத்தில் இருப்பது உண்மைதானா என்று கண்டறிய, நமது தலைமை நிரூபர் (நேத்துத் தான் ’டை’ அடிச்சாரு தலையிலே!) களக்காடு கருமுத்துவைக் களத்திலே இறக்கினோம். அவர் தெரிவித்துள்ள ’பகீர்’ தகவல்களாவன:

  • அரசு உத்தரவுப்படி கையெழுத்துப் போட்டு விட்டு, சொந்தவேலை செய்கிற கல்லூரி ஆசிரியர்களுக்காகவென்றே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால், இனி எல்லாக் கல்லூரி தஸ்தாவேஜுகளிலும் ஆசிரியர்கள் கைநாட்டு தான் போட வேண்டும் என்று அகில இந்திய ஆசிரியர் சம்மேளனம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாம்.

  • இது மட்டுமன்றி, இந்த அவசர உத்தரவு காரணமாக, பல ஆசிரியர்கள் திருந்தி ஒழுங்காக கல்லூரி செல்லத் தொடங்கியிருப்பதாகவும், இதன் காரணமாக தமிழகமெங்கும் வாஷிங் மெஷின்களின் விற்பனை அதிகரித்துள்ளதாகவும் ஆதாரமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் வாத்தியார்களின் சொந்தவேலை கணிசமாகக் குறைய வாய்ப்புள்ளது என்று ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் சங்கம் கருத்துத் தெரிவித்துள்ளது.

  • கல்லூரி நேரத்தில் மதிய உணவு சாப்பிடுவதையும் ஆசிரியர்களின் ’சொந்த வேலை’யாகக் கருத வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் பெட்டிஷன் குப்புசாமி பொதுநல வழக்குத் தொடர்ந்துள்ளதால், ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.

  • இத்துடன் பல்கலைக்கழகங்களில் இருந்து கொண்டே வகுப்புக்குச் செல்லாமல் மட்டம் போடும் மாணவர்களை, மன்னிக்கவும், ஆசிரியர்களைக் குண்டுக்கட்டாகத் தூக்கிக் கொண்டு போய் வகுப்பில் தள்ள, ஒவ்வொரு கல்லூரிக்கும் தலா இரண்டு மாநகராட்சி லாரிகளை அரசு வழங்கத் திட்டமிட்டிருப்பதாகவும் தெரிகிறது.

  • மேலும் பகல்காட்சி, மதியக்காட்சி நேரங்களில் பழைய லாம்பி, பஜாஜ் ஸ்கூட்டர் மற்றும் புல்லட் போன்ற வாகனங்களில் திரையரங்குகளுக்கு வருகிறவர்களைக் கண்காணிக்க ரகசிய படை அமைக்கப்பட்டுள்ளது. இது போன்ற ஓட்டை உடைசல் வண்டிகளில் வருகிறவர்கள் பெரும்பாலும் ஆசிரியர்களாகத் தான் இருப்பார்கள் என்று அண்மையில் போக்குவரத்துத்துறை மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளதாம்.

இது குறித்து களக்காடு கருமுத்து சட்ட நிபுணர் ’லாலா"ப்பேட்டை லட்சுமணனிடம் கேட்டபோது:

"இது கண்டிப்பாக மனித உரிமை மீறல் தான்! இதனால் அதிகம் பாதிக்கப்படப்போகிறவர்கள் மாணவர்கள் தான். காரணம், ஆசிரியர்கள் வராதவரைக்கும் அவர்கள் சுயமுயற்சி எடுத்து எதையோ படித்து எப்படியோ பரீட்சைகளில் தேறி வந்தார்கள். இந்த அவசர உத்தரவு காரணமாக, மாணவர்களுக்கு மீண்டும் பாடங்களில் குழப்பம் ஏற்பட்டு, சந்தேகங்கள் வலுக்க வாய்ப்பிருக்கின்றது. இதனால் இனி வருகிற வருடங்களின் மாணவர்களின் தேர்ச்சி சதவிகிதம் குறைந்தாலும் வியப்பதற்கில்லை! மேலும் போஸ்ட் கிராஜுவேஷன் முடித்தபோது படித்த பழைய மொக்கை ஜோக்குகளையே, திரும்பத் திரும்ப ஆசிரியர்கள் வகுப்பில் போடுவார்கள் என்பதால் மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுகிற வாய்ப்பும் அதிகம். மொத்தத்தில் இது மாணவர்களின் மனித உரிமை மீறல் என்று தான் தோன்றுகிறது."

எனவே, வலையுலகத்தில் உள்ள அனைவரும் இந்தக் கறுப்புச்சட்டத்தை (ஆட்டோ வரும்வரை!) எதிர்த்து தங்கள் கருத்தை பதிவு செய்து ஜனநாயகத்தை நிலையுறுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

கடைசியாகக் கிடைத்த தகவல்: "இதே போன்று சட்டமன்றத்துக்கும், பாராளுமன்றத்துக்கும் போகாமல் டிமிக்கி கொடுக்கிற அரசியல்வாதிகளைப் பிடிக்கவும் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப் படுமா?" என்ற கேள்வி எழுப்பியதற்கு, லாலாப்பேட்டை லட்சுமணனால் பதில் சொல்ல முடியாமல் குலுங்கிக் குலுங்கிச் சிரித்ததால் குடலிலே சுளுக்கு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

22 comments:

அகல்விளக்கு said...

டாப்பு மெசேஜ் தல...

பிரபாகர் said...

என்ன நண்பா! சூடா இடுகைகளை எழுதி அசத்துறீங்க! கலக்குங்க!

பிரபாகர்...

vasu balaji said...

சேட்டை! உண்மையைச் சொல்லும் ஓய். இடுகைச்சாமி கோயில் ஏதாவது இருக்கா. நேர்த்தி ஏதும் பண்ணிட்டு வந்தீரோ. விடாம அடிக்கிறீரே:)))

ஈரோடு கதிர் said...

அப்படிப்போடு

Jey said...

சேட்டையின் , சரவெடி தொடரட்டும்:)

பொன் மாலை பொழுது said...

// இது போன்ற ஓட்டை உடைசல் வண்டிகளில் வருகிறவர்கள் பெரும்பாலும் ஆசிரியர்களாகத் தான் இருப்பார்கள் என்று அண்மையில் போக்குவரத்துத்துறை மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளதாம்.//

யோவ்வ் செட்ட மரியாதையா என் கணக்குல ரூபாய் 100 அனுப்புங்கானும்.
வயிறு வலிக்குது ஓய்.

இருந்தாலும் இது ரொம்ப பாவம் செட்ட அண்ணாத்த.
நம்ம என்ன செய்யலாம் ? வாரம் ஒருதடவ ஒரு கட்டிங் உட அரேஞ் பண்ணலாம்.
ஏதோ நம்ளால ஆனா ஒன்னு.

Chitra said...

கடைசியாகக் கிடைத்த தகவல்: "இதே போன்று சட்டமன்றத்துக்கும், பாராளுமன்றத்துக்கும் போகாமல் டிமிக்கி கொடுக்கிற அரசியல்வாதிகளைப் பிடிக்கவும் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப் படுமா?" என்ற கேள்வி எழுப்பியதற்கு, லாலாப்பேட்டை லட்சுமணனால் பதில் சொல்ல முடியாமல் குலுங்கிக் குலுங்கிச் சிரித்ததால் குடலிலே சுளுக்கு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


....... நாங்களும் வயிறு வலிக்க சிரித்தோமே..... செம .....!!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:)))

பனித்துளி சங்கர் said...

நண்பரே மீண்டும் உங்களின் வருகை அறிந்து பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் / இவளவு நாட்களாக தொலைந்து போயிருந்த சிரிப்பு சத்தம்
இன்று என் இல்லத்து
அறைகளில் . கலக்கல் வாழ்த்துக்கள் நண்பரே தொடருங்கள் .

சிநேகிதன் அக்பர் said...

நல்லா சொன்னீங்க சேட்டை.

Starjan (ஸ்டார்ஜன்) said...

கலக்குறீங்க சேட்டை.

சாந்தி மாரியப்பன் said...

//லாலாப்பேட்டை லட்சுமணனால் பதில் சொல்ல முடியாமல் குலுங்கிக் குலுங்கிச் சிரித்ததால் குடலிலே சுளுக்கு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.//

:-)))))))))))

நீச்சல்காரன் said...

ஹ ஹா ஹ ஹா

சி.பி.செந்தில்குமார் said...

மேலும் பகல்காட்சி, மதியக்காட்சி நேரங்களில் பழைய லாம்பி, பஜாஜ் ஸ்கூட்டர் மற்றும் புல்லட் போன்ற வாகனங்களில் திரையரங்குகளுக்கு வருகிறவர்களைக் கண்காணிக்க ரகசிய படை அமைக்கப்பட்டுள்ளது
செம காமெடியான ஸ்கிரிப்ட் அண்ணே.
நீங்க ஏன் சினி ஃபீல்டுக்கு போகக்கூடாது?

ரிஷபன் said...

இதனால் இனி வருகிற வருடங்களின் மாணவர்களின் தேர்ச்சி சதவிகிதம் குறைந்தாலும் வியப்பதற்கில்லை!
உங்கள் சிரிப்பு சதவீதம் குறையவே இல்லை!

ஜில்தண்ணி said...

வாத்யாரே செம சேட்டைதான்

செம சிரிப்பு போங்க :)

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

அடடா.. எவ்ளோ பெரிய விசயத்த இவ்ளோ சூப்பரா சொல்லிட்டீங்க..
சிரிச்சு முடியல.. அசத்தல்.. :D :D

வெங்கட் நாகராஜ் said...

சேட்டைக்கார நண்பா, லாலாபேட்டை லக்ஷ்மணனுக்கு குடலில் சுளுக்கு ஏற்பட்டது உண்மையோ பொய்யோ, எனக்கு விழுந்து விழுந்து சிரித்ததால், வயிறு மற்றும் கை, கால்களில் சுளுக்கு உண்டானது உண்மை.

Anonymous said...

//இந்த அவசர உத்தரவு காரணமாக, பல ஆசிரியர்கள் திருந்தி ஒழுங்காக கல்லூரி செல்லத் தொடங்கியிருப்பதாகவும், இதன் காரணமாக தமிழகமெங்கும் வாஷிங் மெஷின்களின் விற்பனை அதிகரித்துள்ளதாகவும் ஆதாரமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.//


ஆனா உங்க வீட்லயும் வாஷிங் மெஷின் வாங்கிடீங்களாமே ..

அஷீதா said...

"இதே போன்று சட்டமன்றத்துக்கும், பாராளுமன்றத்துக்கும் போகாமல் டிமிக்கி கொடுக்கிற அரசியல்வாதிகளைப் பிடிக்கவும் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப் படுமா?" என்ற கேள்வி எழுப்பியதற்கு, லாலாப்பேட்டை லட்சுமணனால் பதில் சொல்ல முடியாமல் குலுங்கிக் குலுங்கிச் சிரித்ததால் குடலிலே சுளுக்கு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.//


naanum appolo thedi oduren...sirichi sirichi vaayi sulukkikichi :)))

Anonymous said...

எப்படித்தான் எழுதுறீங்களோ... அருமை

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

கலக்குறீங்க...ha ha ha