Saturday, July 17, 2010

குருபார்வை!

ஒரு குப்பைத் தொட்டியால், எங்களது தெருவின் ஒரு கட்டிடத்தில் ஒரு மினி உலகப்போரே நடந்து ஒய்ந்திருக்கிறது. பாவம், மூடி பிளந்து, வாய் கிழிந்து நீலமா, கருப்பா என்று அடையாளம் காண முடியாத அளவுக்கு நிறம் மாறிப்போயிருந்த அந்தப் பிளாஸ்டிக் குப்பைத் தொட்டியைக் காரணமாக வைத்து, சில வெள்ளை வேட்டிகள் ஒரு வாரகாலத்தை வாக்குவாதத்திலேயே செலவழித்து முடித்தார்கள்.

அப்படி அந்த பிளாஸ்டிக் குப்பைத் தொட்டி செய்த பஞ்சமாபாதகம் தான் என்ன?

"யாராவது காம்பவுண்டு வடகிழக்குப் பக்கத்துலே கொண்டு போய் குப்பைத் தொட்டியை வைப்பாங்களா? அது ஈசான மூலை சார்! வாஸ்துப்படி பார்த்தா அங்கே எந்தப் பொருளையும் வைக்கக் கூடாது! அதுலேயும் குப்பை கொஞ்சம் கூட சேரவே விடக்கூடாது!"

"இல்லியா பின்னே? அது பிரஹஸ்பதி இருக்கிற இடமோன்னோ? குருஸ்தானம்! அதுலே கொண்டு போய் குப்பையைக் கொட்டுவாளோ? என்ன அப்பார்ட்மெண்ட் கல்ச்சரோ என்னமோ போங்கோ!"

"கேட்டீங்களா சாமி என்ன சொல்றாருன்னு...? மாம்பலம் பிருந்தாவன் ஸ்ட்ரீட்டுலே ஒரு வாஸ்து எக்ஸ்பர்ட் இருக்காரு! அவரு என்ன சொல்லுறாருன்னா, ஈசான மூலையிலே ஒரு ஃபவுண்டனோ அல்லது குழாயோ வைக்கணுமாம்! அப்பத்தான் குருபார்வை முழுமையாக் கிடைக்குமாம்!"

"கிழிஞ்சது! இங்கே கார்ப்பரேஷன் தண்ணிக்கே தத்திங்கிணத்தோம் போட்டுக்கிட்டிருக்கோம்! இதுலே ஃபவுண்டன் கேட்குதா உங்களுக்கு? போங்கய்யா, எந்தக் காலத்துலே என்னத்தைப் பேசிட்டிருக்கீங்க?"

ஆஹா! நின்று கேட்டால், நிறைய சுவாரசியமான தகவல்கள் கிடைக்கும்போலிருக்கிறதே என்று ஒரு அரிப்பு ஏற்படவே, மேன்சன் வாசலில் வண்டியை நிறுத்தி விட்டு, எதிர்க் காம்பவுண்டில் நடந்து கொண்டிருந்த காரசாரமான சம்பாஷணையைக் கேட்கத் தொடங்கினேன்.

"சார்! உங்களுக்கோ கோவில்,குளம் எதிலும் நம்பிக்கை கிடையாது. நாங்க அப்படியா? புள்ளை குட்டியோட குடியும் குடித்தனமுமா இருக்கோம்? இங்கே இருக்கிற குப்பைத் தொட்டியை எதிர்ப்பக்கம் வைக்கச் சொன்னா அது ஒரு தப்பா?"

"சாமீ! அங்கே எப்பவும் ரெண்டு கார் நின்னுட்டிருக்கு! அதுக்கு நடுவுலே புகுந்து போயா குப்பை கொட்டுறது? போதாக்குறைக்கு அங்கே ஒண்ணுக்கு ரெண்டு மோட்டார் வேறே வச்சிருக்கீங்க! இங்கே தான் இருக்கட்டுமே, என்ன குடிமுழுகிடப்போகுது?"

வெறும் பன்னிரெண்டு வீடுகள் கொண்ட குடியிருப்பில், ஒரு சாதாரண குப்பைத்தொட்டி விஷயத்தில் கூட ஒத்த கருத்து இன்றி, தெருவே வேடிக்கை பார்க்கிற மாதிரி உரக்கக் கத்தி சண்டை போடுகிற அளவில் தானே நாம் இருக்கிறோம்?

"இந்த நாலு வருசத்துலே இந்த பில்டிங்குலே என்னென்ன நடந்திருக்கு தெரியுமா? முதல்லே மூணாம் நம்பர் வீட்டுப் பெரியவர் செத்துப்போனாரு!"

"யோவ், என்னய்யா பேசறே? அவருக்கு வயசு எண்பத்தி ஒம்பது! இங்கே வரும்போதே உடம்பிலே குழாயைச் சொருகிக்கிட்டுத் தானேய்யா குடிவந்தாரு?"

"அதை விடுங்க! ஒண்ணாம் நம்பர் வீட்டுப் பையன் தூக்குப் போட்டு செத்தானே, அதுக்கு என்ன சொல்றீங்க?"

"அவன் லூசுப்பய! அதான் பெத்தவங்களே சனியன் ஒழிஞ்சதுன்னு தலைமுழுகிட்டு சந்தோசமாயிருக்காங்க!"

"அஞ்சாம் நம்பர் வீட்டுக்காரங்களோட ஸ்கூட்டி காணாமப் போச்சு!"

"ஆமாய்யா, தெருவிலே வண்டியை சாவியோட விட்டுட்டுப் போனா திருடத்தான் செய்வாங்க! இதெல்லாம் ஒரு பிரச்சினையா?"

"நான் ஒண்ணு சொல்றேன் கேளுங்கோ! பேசாம இந்தக் குப்பைத்தொட்டியை காம்பவுண்டுக்கு வெளியிலே வச்சிடலாம்! ஈசான மூலையும் காலியாயிடும்; இருக்கிறவா கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிண்டு கேட்டுக்கு வெளியே போயி குப்பையைக் கொட்டினாப் போதும். என்ன சொல்றேள்?"

"என்னவோ பண்ணுங்கய்யா!"

"சாமீ சொல்றது தான் கரெக்ட்! உடனே அந்த கருமம் பிடிச்ச குப்பைத்தொட்டியை எடுத்து வெளியிலே வச்சிடலாம்."

அப்பாடா! ஒரு வழியாக சமாதானமாயிற்றே!

அன்று இரவு சாப்பிட்டு விட்டுத் திரும்பியபோது, காம்பவுண்டுக்கு வெளியே அந்தக் குப்பைத் தொட்டி கொண்டு வந்து வைக்கப்பட்டிருந்தது. பாவம் அந்தக் குப்பைத்தொட்டி; இத்தனை நாள் பிரஹஸ்பதி இருந்த இடத்தில் இருந்தது, இப்போது நடுத்தெருவில் சீரழிந்து கொண்டிருந்தது.

"இதெல்லாம் ஒரு மேட்டரா? பெத்த அப்பன், ஆத்தாளையே ஒரு நாள் வீதியிலே கொண்டுவந்து நிறுத்துற காலம்டா இது!" என்று என் நண்பன் சொன்னபோது, உறைத்தது.

மறுநாள் காலை! அலுவலகத்துக்குக் கிளம்பிக்கொண்டிருந்தபோது மீண்டும் எதிர்க் கட்டிடத்தில் கூட்டம்! இன்னும் பிரச்சினை தீரவில்லையா?

"சே! கலி முத்திரிச்சுன்னு கேள்விப்பட்டிருக்கேன்! அதுக்காக இப்படியா? போயும் போயும் ஒரு ஒடஞ்சு போன பழைய குப்பைத் தொட்டி! அதையுமா திருடிட்டுப் போவானுங்க?"

"அதை இன்னேரம் ஏதாவது பழைய பேப்பர்காரன் கிட்டே போட்டுக் காசாக்கியிருப்பானுங்க! எல்லாம் உம்மாலே வந்தது. உடனே செக்ரட்டரி கிட்டே சொல்லி புது குப்பைத் தொட்டி வாங்கி வைக்கச் சொல்லுங்க!"

"வாங்கி எங்கே வைக்கிறது?"

"முன்னே எங்கே வச்சிருந்தோமோ, அங்கேயே தான்! இனிமே யாராவது ஈசானமூலை, லூசானமூலைன்னு பேசினீ!ங்க..நடக்கறதே வேறே!"

பொங்கிவந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு நான் அவர்களைப் பார்ப்பதை வேண்டுமென்றே தவிர்த்து நடையைக் கட்டினேன்.

அப்பாடா! குருபார்வை யாருக்குக் கிடைத்ததோ இல்லையோ, அந்தக் குப்பைத்தொட்டிக்குக் கிடைத்து விட்டது.

36 comments:

Unknown said...

Welcome back..

பிரபாகர் said...

வருக நண்பா வருக! மிக்க மகிழ்ச்சி!
படித்து பின்னூட்டமிடுகிறேன்...

பிரபாகர்...

Thamiz Priyan said...

welcome back! ஒருக்கால் அந்த செக்ரட்டரி தான் இரவில் ஒளிச்சு வச்சிட்டாரோ?.. ;-)

பிரபாகர் said...

சிறிய சம்பவம், சொன்ன விதம் அருமை. தொடருங்கள் என் அன்பு சேட்டை!

பிரபாகர்...

சென்ஷி said...

வெல்கம் பேக் தல :)

பிரேமா மகள் said...

ஹை சேட்டை.. ரொம்ப நாள் கழிச்சு...

அதே குறும்போட... நல்ல மெசேஜோட....

சூப்பரு...

Aba said...

வெல்கம் பேக் சேட்டை... சூப்பர் பதிவு..

உமர் | Umar said...

Welcome Back!

Anonymous said...

ஈசானிய மூலை புனிதமான இடமாக பல பழைய வாஸ்து நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது..ஒரு வீட்டின் ஈசானிய மூலையில் கட்டிடம் கட்டுதல்,கழிவு நிர் தேங்குதல்,கழிவு பொருட்கள் கொட்டுதல்,அந்த வீட்டு ஆண்களுக்கு உடல் பாதிப்பை செல்வ வளத்தை பாதிக்கிறது.கடன் தொல்லை ஏற்படுகிறது..இதை அனுபவ பூர்வமாக பல இடங்களில் பார்த்துள்ளேன்..பிறகு உங்கள் விருப்பம்..

பொன் மாலை பொழுது said...

அப்பாடா, சேட்ட வந்தாச்சி, நீங்க இல்லாம, சேட்ட டி வி யும் பாக்கமுடியாம போச்சு.
அந்த திருட்டுபோன குப்பைதொட்டிக்கு நன்றி. பின்ன?
காண போன சேட்ட திரும்ப வந்தாச்சில்ல ??

சரி சரி., டி வி ய போடுங்கையா சீக்கிரம்.
--

அண்ணாமலை..!! said...

சேட்டை..சத்தியமா இது உண்மை..
சொன்னா நம்ப மாட்டீங்க!
நேத்து நைட்-தான் நினைத்தேன்.

"சேட்டைக்காரன் - வம்புக்கு இழுக்கிறேன்!"

அப்படின்னு ஒரு பதிவு போடலாம்னு..
உங்களை மீண்டும் பதிவுலகுக்கு
வரவேற்குறதுக்கு..!
(வரவைக்கிறதுக்கு அல்ல!)

ஆச்சரியம்! நீங்க இதோ
இன்னைக்குப் பதிவு போடறீங்க!
எனக்கும் ஆச்சரியம்தான்!
வருக சேட்டை!

வெங்கட் நாகராஜ் said...

வருக நண்பரே, சேட்டையை தொடருங்கள். கடந்த ஒரு மாத காலமாக எப்போது மீண்டும் வருவீர்கள் என காத்திருந்தது பதிவுலகம். தொடர்ந்து எழுதுங்கள். சரியா, திரும்பவும் பதிவுலகம் அலுத்துவிட்டது என்று சொல்லாமல் எழுதுங்கள், உங்கள் எழுத்து எங்களுக்கு அலுக்காத வரை….

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

வந்து, ஆரம்பிச்சுட்டிங்கள்ல
உங்க திருவிளையாடல்களை,
குப்பைத் தொட்டியிலிருந்து?

நானும் வந்திட்டேன்.

ஜெய்லானி said...

எங்கே தல ஆளையே கானோமே ..

சிநேகிதன் அக்பர் said...

வாங்க சேட்டை.

தொடருங்க உங்க சேட்டையை

vasu balaji said...

Back with a bang. santhosham:)

Ahamed irshad said...

Welcome Back....

Jey said...

ஹஹஹா, ரொம்ப சுவரஸ்யமா எழுதியிருக்கீரு. உங்களின் முந்தய பதிவுகளையும் படித்தேன் நன்றாக இருக்கிறது, தொடர்ந்து எழுதவும்.

Anonymous said...

//ஈசானமூலை, லூசானமூலைன்னு பேசினீ!ங்க.//
ஹிஹி, நாமெல்லாம் திருந்திருவோமா என்னா. தொடருங்க சேட்டையை

பெசொவி said...

//ஈசானிய மூலை புனிதமான இடமாக பல பழைய வாஸ்து நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது..ஒரு வீட்டின் ஈசானிய மூலையில் கட்டிடம் கட்டுதல்,கழிவு நிர் தேங்குதல்,கழிவு பொருட்கள் கொட்டுதல்,அந்த வீட்டு ஆண்களுக்கு உடல் பாதிப்பை செல்வ வளத்தை பாதிக்கிறது.கடன் தொல்லை ஏற்படுகிறது..//
மன்னிக்கணும், எங்க வீட்டுல ஈசானிய மூலைல டாய்லட்டும், செப்டிக் டாங்கும் இருக்கு. கட்டி ஆறு வருஷமாச்சு. ஆண்டவன் அருளால நாங்க நல்லாத்தான் இருக்கோம். என்னைப் பொறுத்தவரை, நாம நல்ல எண்ணத்தோட இருந்துகிட்டு அடுத்தவங்களுக்கு கெடுதல் பண்ணாம இருந்தா, ஆண்டவன் நம்மை நல்லாத்தான் வச்சிருப்பார்.
என்னதான் வாஸ்து பாத்து வீடு கட்டினாலும், பயன்படுத்தற வஸ்து (பொருள்) சரியில்லைன்னா வீடு சரியா வராது. (நன்றி - http://ulagamahauthamar.blogspot.com/2010/06/blog-post_8334.html சுய விளம்பரம்தான்...ஹி...ஹி!)
http://ulagamahauthamar.blogspot.com/2010/06/blog-post_8334.html

☀நான் ஆதவன்☀ said...

:)))

வருக வருக சேட்டை

எல் கே said...

அருமை. மீண்டும் வருக வருக என்று வரவேற்கிறேன்

கண்ணகி said...

கலக்கல் வருகை..

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ha ha ah ....good one

manjoorraja said...

ஈசான மூலைன்னா இன்னாப்பா?

அன்புடன் நான் said...

எல்லாம் வாஸ்து படுத்தும் பாடு!
ஈசான மூலையென்றால் என்ன? (உண்மையிலேயே தெரியல)
தெரு நாறாது இருந்தா சரிதான்.
பகிர்வு நல்லாத்தான் இருக்கு.

ஹேமா said...

மீண்டும் வந்து பதிவுக்கு நன்றி.சுகம்தானே !

//ஈசானமூலை, லூசானமூலை//

நம்மவங்களைத் திருத்தவே முடியாது !

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இவங்க சண்டை போட்டது பதிவுக்கு குருபார்வை
வந்துட்டது.. :)

Periyarmathi said...

Welcome Back!

தனி காட்டு ராஜா said...

:-)

கௌதமன் said...

வாங்க, வாங்க. தொடர்ந்து எழுதுங்க.

சாமக்கோடங்கி said...

சூப்பர் மேட்டரு... அருமையா எழுதி இருக்கிறீர்கள்..மக்கள் தான் சந்தோஷமா இருக்கறதுக்காக எது வேண்டுமானாலும் செய்வார்கள்.. அதைத்தான் இந்த வாஸ்துப் பேர்வழிகள் உபயோகிக்கிறார்கள்.. என்னமோ அந்த குப்பைத் தொட்டியின் மேல் குருபார்வை பட்டதில் எனக்கும் சந்தோஷம் தான்..

சாமக்கோடங்கி said...

தொடர்ந்து எழுதுங்கள்.. நல்லா இருக்கு.. உக்காந்து படிக்கலாம்..

ஸ்ரீராம். said...

கை தட்டலுடன் மீண்டும் வருக வருக என வரவேற்கிறோம்...

நாகராஜன் said...

welcome back settai... engadaa innum kaanomenu paarthen...

ரோஸ்விக் said...

Welcome Back... :-)