சென்னையின் ஒப்பனையற்ற முகத்தைப் பார்க்க விரும்புகிறவர்கள் ஒரு சில முறை கூட்டுவண்டியில் பயணம் மேற்கொண்டால் போதும். சினிமாக்களிலும் புனைவுகளிலும் அனேகரால் எண்ணற்ற முறை எள்ளல்களுக்கு ஆட்படுத்தப்பட்ட இந்த நகரத்தின் எஞ்சியிருக்கிற ஆன்மா மூச்சுவிடுகிற மெல்லிய சத்தம், தடதடவென்ற பேரோசைக்கு நடுவே கூர்ந்து கவனித்தால் துல்லியமாய் ஒலிக்கும். மிகவும் சவுகரியமாக இது உருப்படாத ஊர் என்று உதாசீனம் செய்பவர்களும் இந்த ஒலியை அவ்வப்போது கேட்டிருக்கலாம்.தினசரி வருகிறவர்களுக்கு சின்னச்சின்ன சலுகைகள் தருகிற நட்பு கிடைக்கிறது. பெயர்களை அறியாதபோதிலும் புன்னகைகளைப் பரிமாறிக்கொள்ள இயலுகிறது. செய்தித்தாள் பரிவர்த்தனைகளும், இருக்கைகளை விட்டுத்தருகிற பெருந்தன்மையும், பண்டிகைகளின் போது வாழ்த்துப்பரிமாறல்களும், சில நேரங்களில் இறுக்கமான கைகுலுக்கல்களும் கிடைக்கின்றன. இவை புதியவர்களுக்குக் கிடையாது என்பதே வாடிக்கையாக வருகிறவர்களை ஒரு அங்குலம் உயர்ந்தவர்களாய் எண்ண வைக்கிற வசதி!
’எல்லாம் பறிபோய்விடவில்லை,’ என்று சற்றே நம்பிக்கை துளிர்க்க வைக்கிற பல கணங்களை சென்னை நகரத்தின் மனிதர்கள் அவ்வப்போது அளித்துக் கொண்டுதானிருக்கிறார்கள். உதாரணமாக....
கடற்கரை ரயில் நிலையத்தில் கூடையில் கடலை விற்பனை செய்கிற பெண்மணி. வழக்கம்போல, வண்டி வந்ததும் உள்ளே வந்து கிளம்பும்வரையிலும் சுறுசுறுப்பாக வியாபாரம் செய்து, சில சமயங்களில் கிளம்பியபிறகும் கோட்டை வரைக்கும் வந்து இறங்கிச்செல்வதைக் கவனித்திருக்கிறேன். கடற்கரை ரயில் நிலையத்தில் இப்படி மூன்று நான்கு பெண்மணிகள் எப்போதும் இருப்பர். அருகருகே உட்கார்ந்தபடி, வியாபாரம் இல்லாத சமயங்களில் அவ்வப்போது சிரிப்பும், சின்னச் சின்ன சண்டைகளுமாய், அவர்களுக்கென்று முதலாவது மற்றும் இரண்டாவது நடைமேடைகளுக்கு மத்தியில் ஒரு குட்டி உலகம் இருக்கிறது. மாலைப்பொழுதுகளில் நெற்றியில் குங்குமம் வைத்தபடி பூ விற்பனையைச் செய்து முடித்தபின், வீடு திரும்புமுன்னர் குங்குமத்தை அழித்துவிட்டுச் செல்லும் ஒரு பெண்மணியைப்பற்றி முன்னரே எழுதியதாக ஞாபகம். பார்வையிழந்தவர்களாயிருப்பினும், பிச்சையெடுக்க விரும்பாமல் எதையெதையோ ஆண்டர்சன் தெருவில் மொத்த விலைக்கு வாங்கிவந்து விற்பனை செய்கிறவர்களும், உள்ளங்கை பொசுங்குகிற சூட்டில் மணக்க மணக்க கடலை விற்பனை செய்கிறவர்களும், அண்மைக்காலமாக சற்றே அடாவடித்தனமாக ’காசு கொடு ராசா,’ என்று எரிச்சலூட்டுகிற திருநங்கையரும் சென்னைக் கடற்கரை ரயில்நிலையத்தின் அடையாளங்கள்!
பயணிகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அடையாளம் இருக்கத்தான் செய்கிறது. என்னதான் பெண்கள் பெட்டி காலியாக இருந்தாலும், பொதுப்பெட்டியின் ஜன்னலோரத்தில் உட்கார்ந்தபடி பண்பலை கேட்டுக்கொண்டுவரும் அந்த நடுத்தரவயதுப்பெண்மணி; ’ராஜஸ்தான் டைம்ஸ்’ வாசிக்கிற மார்வாடி ஆசாமி; இரயில்வேயின் அடையாள அட்டை வெளியே தெரியும்படி வைத்துக்கொண்டு, குதிரைப்பந்தயப் புத்தகத்தை தீர்க்கமாக வாசிக்கிற அந்த சந்தனப்பொட்டுக்காரர். இது தவிர காளிகாம்பாள் கோவிலுக்குப் போய்விட்டுத் திரும்புகிறவர்கள்; ஏசு அழைக்கிறார் கட்டிடத்திலிருந்து வெளிறிய ரோஜா நிறத்தில் புடவையணிந்த அந்தப் பெண்மணிகள்; கதவோரமாய் சினேகிதியின் காதில் எதையோ கிசுகிசுத்துச் சிரிக்கவைக்க முயல்கிற புதிய காதலர்கள் - ஒவ்வொரு பெட்டிக்குள்ளும் தொட்டு எடுத்துத் தீட்ட வசதியாய் ஆயிரம் வண்ணங்கள் எப்போதும் இருக்கின்றன.
நெருடல்கள் இன்றி வாழ்க்கை சுவாரசியமாவதில்லை - இந்த ரயில் பயணங்களின் ஆயாசங்களும் அப்படியே! எந்த அனுபவமுமின்றி இதுவரை எவராலும் காலியாக இறங்கியிருக்க முடியாது. ஒவ்வொரு பயணத்தின்போதும், ஏதோ ஒன்று கண்களுக்குத் தட்டுப்பட்டு சிரிப்பையோ, சினத்தையோ மூட்டுகின்றன. அந்த வகையில் சமீபத்தில் புருவங்களைச் சுருக்க வைத்தது, பெட்டிக்குள்ளே வரையப்பட்டிருந்த ஒரு பெண்ணின் நிர்வாணக் கேலிச்சித்திரமும், அதன்கீழ் எழுதப்பட்டிருந்த ஆபாசமான வாசகங்களும்...!
அதை எழுதியவன் எங்கோ மூக்கறுபட்டிருக்க வேண்டும்; தனது முகத்தில் உமிழப்பட்ட எச்சிலைத் தொட்டு எதையோ அருவருப்பாக எழுதி, எங்கோயிருக்கிற எவளுக்கோ பட்டமளித்திருந்தான். கூடவே ஒரு அலைபேசி எண்ணையும் எழுதியிருந்தான். வக்கிரத்தில் புத்திகெட்ட எவனேனும் அந்த எண்ணைத் தொடர்பு கொண்டாலும் வியப்பதற்கில்லை! பெரும்பாலானோரின் புத்தியில் செக்ஸ் என்பது விஸ்தரிக்கப்பட்ட ஒரு பாகமாகி விட்டது. அதனால், அடுப்புக்கரியோ, சாக்பீஸோ அல்லது நூதனமான பேனாக்களோ, அவை எழுதுகிற எழுத்தை வாசித்ததும், மனசு அந்தப் பெண்ணைத் தத்தம் படுக்கையிலே வரவழைக்க யோசிக்க வைக்கிறது. புருஷலட்சணம் என்பது புணர்ச்சியில் ஆளுமை காட்டுவது என்ற மிருகபுத்தியே மேலோங்குகிறதோ? சில நேரங்களில் இந்த so called பெண்ணியவாதிகள் சொல்வதுபோல, ஆண்களில் நிறைய பேர்களுக்கு, பெண்களின் பெயரைக் கூடத் துகிலுரிய வேண்டும் என்ற அரிப்பு அதிகரித்து விட்டதோ?
’இதைப்பற்றியெல்லாம் ஏன் இவ்வளவு யோசிக்கிறோம்?’ என்று, அதைப் பார்த்துவிட்டதை அழித்து சுத்தமாக்க விரும்புவதுபோல ஒரு கேள்வியும் எழுந்தது. ஆனால், கூட்டம் ஏற ஏற, அதைப் பற்றியே கேள்வி மேல் கேள்வியாக எழுந்துகொண்டிருந்தன.
"இதை எழுதியவன் யாராயிருப்பான்? எப்போது எழுதியிருப்பான்? சம்பந்தப்பட்ட அந்தப் பெண்ணே இதை பார்த்திருப்பாளா? அப்படியென்றால், அவன் யாரென்று அடையாளம் கண்டிருப்பாளா அல்லது இப்படி எழுதுபவர்களைப் பற்றியெல்லாம் யோசிப்பது முட்டாள்தனம் என்று அலட்சியப்படுத்தியிருப்பாளா? இவ்வளவு பெரிய நகரத்தில் ஒரே ஒரு கோழையை எப்படிக் கண்டுபிடிப்பது என்று சிரித்திருப்பாளா?"
என்னென்னமோ கேள்விகள்!
"சூடு சுண்டல்! சூடு சுண்டல்!!" என்று அந்தப் பெண்மணி கணீரென்ற குரலில் கூவியபடி உள்ளே நுழைந்ததும், எனது கவனம் சற்றே திசைதிரும்பியது. பளபளவென்று, கருகருவென்றிருந்த கொண்டைக்கடலைச் சுண்டலையும், சற்றே நீளமாக அரிந்து போடப்பட்டிருந்த மிளகாயையும் பார்த்து ’சாப்பிடலாமா?’ என்ற கேள்வி எழுந்து, சற்றுமுன் வரை எழும்பியிருந்த கேள்விகளின் மீது ஏறி நசுக்கியது.
விடுவிடுவென்று நகர்ந்துபோய்க்கொண்டிருந்த அந்தப்பெண்மணி, ஒரு கணம் நிதானித்து, கூடையை இறக்கி வைத்து, தனது இடுப்பிலிருந்து ஒரு துணியை எடுத்து, பெட்டிக்குள்ளே எல்லார் கண்களிலும் படுகிறாற்போல எழுதப்பட்டிருந்த அந்த அருவருப்பான வாசகங்களை சரசரவென்று துடைத்துவிட்டு, மீண்டும் தனது துணியும், கூடையையும் இருந்த இடுப்பிலேயே வைத்துக்கொண்டு, கூட்டத்தோடு கூட்டமாய் மறைந்தாள்.
"நமக்குத் தோணலே பார்த்தீங்களா?" என்று அருகிலிருந்தவர் முணுமுணுத்தார். அவர் ’நமக்கு’ என்று பன்மையில் கூறியது எனக்குப் பிடிக்கவில்லை. என்னையும் தன்னோடு சேர்த்துக் கொண்டதனால் மட்டுமல்ல; என்னை முந்தி அவர் அந்தக் கேள்வியை எழுப்பிவிட்டதால்....!
நானும் அப்படித்தான் கேட்டிருப்பேன்- ’நமக்கு ஏன் தோன்றவில்லை?’ என்று கேட்டு, பழியை மற்றவர்களோடும் பகிர்ந்து கொண்டிருப்பேன்.