Tuesday, March 9, 2010

ஆந்தைக்குளம் ஐயாக்கண்ணு.04


எதுக்கும் முந்தைய பகுதிகளையும் ஒரு வாட்டி வாசிச்சிருங்க!

ஆந்தைக்குளம் ஐயாக்கண்ணு-01

ஆந்தைக்குளம் ஐயாக்கண்ணு-02

ஆந்தைக்குளம் ஐயாக்கண்ணு-03


களக்காடு கருமுத்துவும் ஆந்தைக்குளம் ஐயாக்கண்ணுவும் நட்பில் , உடுப்பி கிருஷ்ண பவனும் ஊசிப்போன வடையும் போல இணைபிரியாமல் இருப்பவர்களாவர். அறுந்த விரலுக்குச் சுண்ணாம்பு கூடத் தராத அளவு தாராளமனம் படைத்த ஐயாக்கண்ணு, சன்னாசிக்கு ஐம்பதாயிரத்தைக் கொடுத்துவிட்டார் என்று கேள்விப்பட்ட கருமுத்துவுக்கு ஆச்சரியத்தில் வயிற்றுப்போக்கே ஏற்பட்டு விட்டது. ஐயாக்கண்ணுவைக் குறித்த பழைய நினைவுகளை அசைபோட அவர் சற்றே பின்னோக்கிச் செல்லவும், பஸ்ஸுக்காகக் காத்திருந்த ஒரு பெண் மீது மோதி செமத்தியாக டோஸ் வாங்கிக்கொண்டார். அந்த அளவுக்கு ஐயாக்கண்ணுவின் சிக்கனமானது ஆந்தைக்குளம் முழுக்க பிரசித்தியானது. உதாரணமாக,

ஒருமுறை, ஊரிலிருந்த கிணற்றைத் தூர்வாரி சுத்தப்படுத்துவதற்காக பஞ்சாயத்திலிருந்து நன்கொடை கேட்டு வந்திருந்தனர். "என்ன குளம் வெட்டப்போகிறீர்களா?" என்று அகமகிழ்ந்த ஐயாக்கண்ணு மிகவும் தாராள மனதுடன் வந்தவர்களுக்கு ஒரு வாளித்தண்ணீரை நன்கொடையாக அளித்தார் என்றால், அவரது தாராள மனத்தை என்ன சொல்வது?

அது மட்டுமா? ஐயாக்கண்ணுவின் மகன் கண்ணாயிரத்துக்குக் கண்பார்வை சற்றே மங்கலாகியதும், அவனுக்கு அப்பாவைத் தவிர மற்ற எல்லாமே இரண்டு இரண்டாகத் தெரிய ஆரம்பித்து விட்டது.

"அப்பா! எனக்குக் கண்ணே தெரியலே! டாக்டரைப் பார்த்துக் கண்ணாடி போடணும்!" என்று அவன் ஐயாக்கண்ணுவிடம் வந்து முறையிட்டான். "எனக்கு தூரத்துப் பார்வை ரொம்பக் குறைஞ்சிருச்சு!"

உடனே ஐயாக்கண்ணு அவனை வெளியே அழைத்துக் கொண்டு போய் வானத்தைச் சுட்டிக்காட்டிக் கேட்டார்: "எலேய், அதோ மேலே இருக்குல்லா, அது என்னது?"

கண்ணாயிரம் பட்டென்று பதில் அளித்தான்: "சூரியன்!"

"லேய்! அவ்வளவு தூரத்துலே இருக்கிற சூரியனே தெரியுதுல்லா? பொறவு எதுக்குலே கண்ணாடி? போலே, போய் பொஸ்தகத்தை எடுத்துப் படிலே!" என்று கடிந்து கொண்டார் ஐயாக்கண்ணு.

இவ்வளவு ஏன்? ஒரு முறை ஆந்தைக்குளத்துக்கு விடுமுறைக்கு வந்த கருமுத்துவுக்கே ஐயாக்கண்ணுவின் தயாளகுணத்தை நேரடியாக அறிகிற வாய்ப்பு கிடைத்தது.

ஒரு முறை ஐயாக்கண்ணு கடைக்குப் போய் வாழைப்பழம் எவ்வளவு விலையென்று கேட்டார்.

"ஒரு ரூபாய்!" என்றார் கடைக்காரர்.

"எழுபத்தஞ்சு பைசாவுக்குத் தரமாட்டியா?" என்று கேட்டார் ஐயாக்கண்ணு.

கடுப்பாகிப்போன கடைக்காரர், "எழுபத்தி அஞ்சு பைசாவுக்குத் தோல் தான் வரும்," என்றார். விடுவாரா ஐயாக்கண்ணு?

"இந்தா இருபத்தஞ்சு பைசா," என்று காசை நீட்டினார். "தோலை நீயே வைத்துக்கொண்டு எனக்குப் பழத்தைக் கொடு!"

இதெல்லாம் கூடப் பரவாயில்லை. ஒரு முறை ஐயாக்கண்ணுவுக்கு உடல்நிலை மிகவும் மோசமாகி, அனேகமாக ஆப்பீஸ் பூட்டி விடும் என்கிற கட்டத்தில், அவர் படுத்தபடுக்கையாய் இருந்தபோது நடந்த சம்பவம் இது. முதலில் அவர் தன் மனைவியை அழைத்தார்.

"பக்கத்துலே தான் இருக்கேன்!" என்று மனைவியின் குரல் வந்தது.

"புள்ளை...?"

"தலைமாட்டுலே நின்னுக்கிட்டிருக்கேன் அப்பா!" என்று குரல் வந்தது.

"பொண்ணு...?"

"கால்மாட்டுலே நின்னுக்கிட்டிருக்கேன் அப்பா!" என்று குரல் வந்தது.

"அடப்பாவீங்களா! எல்லாரும் இங்கே இருக்கீங்கன்னா, அந்த ரூமுலே எதுக்குலே ஃபேன் வெட்டியா சுத்திட்டிருக்கு! உங்கப்பனா பில்லு கட்டுவான்?" என்று அலறினாரே ஒரு அலறல்!

ஆந்தைக்குளம் ஐயாக்கண்ணு.01

ஆந்தைக்குளம் ஐயாக்கண்ணு.02

ஆந்தைக்குளம் ஐயாக்கண்ணு.03