Wednesday, October 4, 2017

த்ரீ-இன்-ஒன்:02


1. மணிமண்டப விவகாரம்:


தனிப்பட்ட முறையில், சிலைகள், மணிமண்டபங்கள் ஆகியவற்றுக்குப் பணத்தைச் செலவிடுவது அரசாங்கங்களுக்கு வெட்டிவேலை என்பதே என் கருத்து. தமிழகத்தைப் பொறுத்தவரையில், வெட்டிச்செலவு செய்வதையே மக்கள்பணியென்று அடித்துச் சொல்கிற அரசியல்கட்சிகளைத்தான் நாம் பன்னெடுங்காலமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். போதாக்குறைக்கு, ஒரு அரசு முன்னெடுக்கிற திட்டங்களை அரசியல் காரணமாக இன்னொரு அரசு நிறுத்தி வைப்பதும் இங்கே சர்வசாதாரணமாக நடைபெறுகிறது. மதுரவாயல்-துறைமுகம் பறக்கும் சாலை; புதிய தலைமைச்செயலகம்; மெட்ரோ ரயில் என்று பல திட்டங்களில் தலைவர்களின் ஈகோ காரணமாக நமது வரிப்பணம் விரயமாகிக் கொண்டிருந்ததை, கொண்டிருப்பதைக் கண்கூடாகப் பார்த்தும் மௌனமாகத்தான் இருந்து வந்திருக்கிறோம். அப்போதெல்லாம், இப்போது சிவாஜி மணிமண்டபமா? மக்கள் வரிப்பணம் என்னாவது? என்று பொங்குகிறவர்கள் பவ்யமாகப் பொத்திக் கொண்டுதான் இருந்தார்கள். ஜெயலலிதா செத்தவுடன் அவனவன் அரசியல் பேசுவதுபோல, இப்போதுதான் பொத்தி வைத்திருந்த பலரது பொறுப்புணர்ச்சி பீறிட்டுக் கிளம்புகிறது பலருக்கு.


சிவாஜி விஷயத்தில் அவரது ரசிகனாய் எனக்கு ஒரு வருத்தமுண்டு. அவருக்குரிய அங்கீகாரத்தை, அவர் உயிருடன் இருந்தபோது மத்திய மாநில அரசுகள் அளிக்கவேயில்லை என்பதே அது. இறந்தபிறகாவது அந்த உன்னதக்கலைஞனுக்கு உரிய மரியாதை செய்திருக்கலாம். ஆனால், அவனுக்கு ஒரு அரசு சிலை நிறுவ, அதை அலைக்கழித்து, மூலையில் கழியவிட்டு, அவன் இறந்து இத்தனை ஆண்டுகள் கழித்தும் 1 கோடி ரூபாய்க்கு ஒரு மணிமண்டபம் கட்டுவதற்கு எந்த அரசுக்கும் இதுவரை துப்பில்லாமல் போய்விட்டது. ஒரு கோடி ரூபாய்! உங்களுக்கு நினைவிருக்கலாம். புதிய தலைமைச் செயலகத்தின் திறப்பு விழா நடக்கவிருந்த நிலையில், கட்டுமானப்பணிகள் தாமதமாக நடைபெறவே, மன்மோகன் சிங், சோனியா காந்தி வருகிறார்கள் என்பதற்காக, திரைப்பட கலை இயக்குனர் தோட்டா தரணியை அழைத்து ஒரு கோடி ரூபாய் செலவில் ஒரு தற்காலிகமான கூரையை அமைக்கச் சொன்னார்கள். அப்போதெல்லாம், நாம் கூவினோமா என்றால் இல்லை.


ஆகவே, சிவாஜியை அவமானப்படுத்துகிற பாரம்பரியத்தை அவரது எதிரிகளுடன் சேர்ந்து அறிவுஜீவிகளும், திடீர் சமூகப்பொறுப்பாளிகளும் இனிதே தொடர்கின்றார்கள். அவர்கள் வாழ்க!


2. பொருளாதாரம் குறித்த பதிவுகள்(?)


முன்னெல்லாம் வலைப்பதிவுகளில் திடீர் கவிஞர்கள், திடீர் திரைக்கதை விற்பன்னர்கள், திடீர் இலக்கியவாதிகள் கிளம்புவார்கள். தற்போது ‘திடீர் பொருளாதார நிபுணர்கள்’ சீசன் போலிருக்கிறது. ஒருவர் இந்தியாவை எத்தியோப்பியாவுடன் ஒப்பிட்டே, ‘சோலி முடிஞ்சுது’ என்று மோர் ஊற்றி விட்டார். யாரும் கவலைப்படத் தேவையில்லை; இந்தியப் பொருளாதாரம் கட்டுப்பாடாக, வலுவான அடிப்படைகளின் ஆதாரத்தில் நிமிர்ந்து நின்று கொண்டிருக்கிறது.


டிமானிடைசேஷனுக்குப் பிறகு 2% GDP தான் வருமென்று மன்மோகன்சிங்கும் சிதம்பரமும் பூச்சாண்டி காட்டினார்கள். அவர்கள் வாதம் பொய்த்துப் போய்விட்டது. Fiscal Deficit அதாவது பற்றாக்குறை என்பது பொருளாதாரத்துக்கு நல்லதா, கெட்டதா என்பது குறித்து பொருளாதார நிபுணர்களுக்கே நிறைய கருத்து வேறுபாடுகள் உள்ளன. அதிகம் போரடிக்காமல், சில உதாரணங்களை மட்டும் கூறி, சில பொருளாதாரக்குறியீடுகள் இருபுறமும் கூர்வாய்ந்த கத்தி என்பதை மட்டும் நினைவூட்ட விரும்புகிறேன்.


ஜூலை 17 மாத இறுதியில் தொடங்கி, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஏறுமுகமாக இருந்து, மிக சமீபத்தில்தான் பலவீனமடைந்தது. ஆகஸ்ட் மாத இறுதியில் ஒரு டாலரின் மதிப்பு ரு.63/ ஆக வலுப்பெற்றது. இதனால், யாருக்கு லாபம்? இறக்குமதி செய்பவர்களுக்கு. யாருக்கு நஷ்டம்? ஏற்றுமதி செய்பவர்களுக்கு. விளைவு? Balance of payments என்று சொல்லக்கூடிய நிலுவைத்தொகை அதிகரிக்கும். இது பொருளாதாரத்தைப் பாதிக்கும். ஆனால்,உண்மையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் வலுவடைவதுதானே விரும்பத்தக்கது? இதுபோன்ற அடிப்படைகளைப் புரிந்துகொள்ளாமல், ஆளாளுக்கு அடித்து விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.


டிமானிடைசேஷன் மூலம் windfall gains வருமென்று யாரும் ஆருடம் கூறவில்லை. பல தொடர்- நடவடிக்கைகளுக்குப் பிறகு அமல்படுத்தப்பட்டபோது, பொதுமக்களுக்கு நிறைய இடைஞ்சல்கள் ஏற்படத்தான் செய்தன. ஆனால், அதன் நீட்சியாக எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள், ஹவாலாப் பணப்புழக்கம், தீவிரவாதத்துக்கு உதவுதல், கள்ள நோட்டுப்புழக்கம், கருப்புச்சந்தைகள் ஆகியவற்றைப் பெருமளவு குறைத்திருப்பதாகவே கருதப்படுகிறது. இன்ஸ்டண்ட் வெற்றியா என்றால் இல்லை; அவ்வளவே!  நேற்றைய செய்தியின் படி கடந்த 15 நாட்களில், சுமார் 2 லட்சம் போலி நிறுவனங்களின் இயக்குனர்கள் சட்டப்படி முடக்கப்பட்டிருக்கிறார்கள். தற்போதைய மத்திய அரசு பொருளாதாரத்தைக் கட்டுப்பாட்டில் வைக்க போதுமான நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டுதான் இருக்கிறது.


GST! இது வரிவிதிப்பு என்று ஒரு பொய்ப்பிரச்சாரம்! பல அடுக்குகளிலிருந்த பலமுனை வரிகளை எளிமையாக்கி, ஒரே விதிப்பாக்குவதுதான் இதன் நோக்கம். இதை அமல்படுத்துவதற்கு முன்பு அனைத்து மாநில முதலமைச்சர்கள், நிதி அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோர்களை அழைத்துப் பலகட்டப் பேச்சுவார்த்தைகள் நடத்தி, பெரும்பான்மையானோரின் சம்மதம் கிடைத்தபின்னர், முறைப்படி லோக்சபா, ராஜ்யசபாவில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


ஏப்ரல் தொடங்கி ஜூன் வரையிலான காலாண்டுக்கான புள்ளி விபரங்களை வைத்து ஜி.எஸ்.டியால் தொழில்துறை முடங்கிவிட்டது என்று பேசுவதெல்லாம் அவசரக்குடுக்கைத்தனம். டிஸம்பர் வரை காத்திருப்பதுதான் புத்திசாலித்தனம்.


3. தமிழ்மணம்


தமிழ்மணத்துடன் எனக்கு ஒரு மனக்கசப்பும் இல்லை; அவ்வளவு பெரிய பதிவன் அல்ல நான். ஆனால், ஒவ்வொரு பதிவிலும் ‘த.ம.ஓ. ந;1’ என்று பல பதிவுகளில் பலர் குறிப்பிடுவது, எழுதியவருக்கும் அவர் எழுத்துக்கும் செய்கிற அவமரியாதை என்று நான் கருதுகிறேன். எனது எழுத்து பிடிக்கலாம்; பிடிக்காமல் போகலாம். ஆனால், அதற்கு ஒரு ஓட்டுப்போட்டால்தான் மரியாதை என்பதும், போடவில்லையென்றால் என் எழுத்துக்கு மரியாதை இல்லை என்று சிலர் புலம்புவதும் சகிக்கவில்லை. இப்படி நான் எழுதுவது ஏற்கனவே என்னுடன் மனக்கசப்பு கொண்டிருக்கிற பலரை இன்னும் விலக்கும் என்பதை அறிந்தே எழுதுகிறேன். If you don't like it, I simply don' care.