Thursday, February 7, 2013

வீரபாகு vs மைசூர்பாகு





      ஜி.எம்-மின் அறையிலிருந்து வெளிப்பட்ட டைப்பிஸ்ட் வீரபாகுவின் முகம், பேண்ட்டோடு வாஷிங்-மெஷினில் துவைக்கப்பட்ட கர்ச்சீப்பைப் போலச் சுருங்கிப் போய்விட்டிருந்தது.

      என்னாச்சு வீரபாகு?அக்கவுண்டண்ட் மாசிலாமணி அக்கறையோடு விசாரித்தார். “இன்னிக்கு கொஞ்சம் ஓவர்டோஸோ? மூஞ்சியைப் பார்த்தா கரியடுப்புலே சுட்ட கத்திரிக்காய் மாதிரியிருக்கு?

      என்னமோ தெரியலே ஸார்! அடுத்தடுத்த அரசு விடுமுறைகளால்   சரக்கடிக்க முடியாமல் போன குடிமகனின் அயர்ச்சியுடன் பேசினான் வீரபாகு. “அந்தாளுக்கு நான் செய்யுற சின்னத்தப்பு கூட பெரிசாத் தெரியுது.

      மறுபடியும் டைப்பிங் மிஸ்டேக்கா?மாசிலாமணி சிரித்தார். “நீர் கமலக்கண்ணன்ங்கிற அவரோட பெயரை காமாலைக்கண்ணன்னு டைப் அடிச்சவராச்சே? இன்னிக்கு என்ன பண்ணினீர்?

      இன்னிக்கு அரைமணி நேரம் லேட்டா வந்தேன்.பரிதாபமாகக் கூறினான் வீரபாகு. “ரயில்வே ஸ்டேஷனிலே சீசன் டிக்கெட் எடுக்க லேட்டாயிடுச்சேன்னு அவசர அவசரமா படியிறங்கினேனா, கால்தடுக்கி அப்படியே ஒரு இருபது படியிலே உருண்டு விழுந்திட்டேன்.

      ஐயையோ அலறினார் மாசிலாமணி. “இதை ஜி.எம்.கிட்டே சொல்றதுக்கு என்னய்யா?

      சொன்னேன் சார்! இறங்கி வர்றதை விட, உருண்டு வந்திருந்தா இன்னும் சீக்கிரமா வந்திருக்கணுமே. அப்புறமும் ஏன் லேட்டுன்னு திட்டுறாரு சார்!

      சே! என்ன பொழைப்புய்யா நம்ம பொழைப்பு!மாசிலாமணி அங்கலாய்த்தார். “வீட்டுலே டென்ஷன்னு ரிலாக்ஸ் பண்ண ஆபீஸுக்கு வந்தா இங்கேயும் பொஞ்சாதியை மாதிரியே டென்சன் கொடுக்கிறானுங்களே! இதுக்கு வீட்டுலேயே இருக்கலாம் போலிருக்குதே!

      அப்படிச் சொல்லாதீங்க சார்!தழுதழுத்த குரலில் கூறினான் வீரபாகு. “என்ன இருந்தாலும் மேனேஜர் மேனேஜர் தான் சார்! கோபத்துலே எவ்வளவு திட்டினாலும், அட் லீஸ்ட், இன்க்ரிமெண்ட் சமயத்துலேயாவது நாம ஏதாவது உருப்படியாப் பண்ணியிருக்கோமான்னு யோசிக்கிறாரே!

      கரெக்ட்!என்றவாறே கடியாரத்தைப்பார்த்த மாசிலாமணிக்கு மதிய உணவு நேரம் ஆகியதைப் பார்த்ததும் பசியில், வயிற்றுக்குள் ஷேர்-ஆட்டோ ஒவர்லோடில் ஓடுவது போலிருந்தது.

      வீரபாகு! வாங்க சாப்பிடலாம்! இன்னிக்கு என் சம்சாரம் புதுசா வாங்கி பாத்னு பண்ணியிருக்கா. கொஞ்சம் டேஸ்ட் பண்ணறீங்களா?

      வேணாம் சார்!வீரபாகு அலுப்புடன் கூறினான். “ஏற்கனவே நான் நொந்து போயிருக்கேன். மாசிமகம் வரைக்கும் என் ஜாதகத்துலே எக்கச்சக்கமா கண்டமிருக்கு! திருச்செந்தூருக்குப் போயி கடல்லே குளிச்சு மொட்டை போடுறவரைக்கும் ரிஸ்க் எடுக்கவேணாம்னு கோழியூர் கோபாலகிருஷ்ணன் கோவிந்தா டிவியிலே சொன்னாரு!

      அந்த முருகன் மேலே பாரத்தைப் போட்டுட்டு சாப்பிடுங்க!

      முருகனா இன்சூரன்ஸ் ப்ரீமியம் கட்டுறாரு?எரிந்து விழுந்தான் வீரபாகு. போனவாட்டி உங்க வீட்டு பிஸிபேளாபாத்தைச் சாப்பிட்டுட்டு, ஹைதராபாத் அப்போலோவுலே ட்ரீட்மெண்ட் எடுக்கும்படியா ஆயிருச்சு. என்னிக்காவது என் வீட்டுச் சாப்பாட்டை மத்தவங்களுக்குக் கொடுத்திருக்கேனா? என்னை மாதிரி நீங்களும் அஹிம்சையைக் கடைபிடியுங்க சார்!

      வாங்கி பாத்! வாங்கிப் பாத்து சாப்பிடுங்க!என்ற மாசிலாமணி, யாரும் சிரிக்க மாட்டார்கள் என்பதால், அவர் ஜோக்குக்கு அவரே விழுந்து விழுந்து சிரித்தார்.

      அடடா!பியூன் பெத்தண்ணா வியந்தான். “நம்ம அக்கவுண்டண்ட் சாரு வர வர பெரிய புலவரு மாதிரி சீடையெல்லாம் கலந்து பேச ஆரம்பிச்சிட்டாரு!

      அது சீடையில்லைய்யா; சிலேடை!வீரபாகு தலையிலடித்துக் கொண்டான். “வவுச்சர்லே ஒழுங்கா நரேஷன் எழுதத் தெரியலை. இவர் கெட்ட கேட்டுக்குக் காளமேகம் மாதிரி சிலேடை வேறே!

      கோவிச்சுக்காதீங்க வீரபாகு!இளித்தார் மாசிலாமணி. “ஒரே ஒரு ஸ்பூன் டேஸ்ட் பண்ணுங்க!

      மிஸ்டர் மாசிலாமணி!” ஹரி படத்தில் எண்ட்ரியாகும் ஹீரோவைப் போலக் குரலை உயர்த்தினான் வீரபாகு. “உங்களுக்கு நெஞ்சிலே தில்லிருந்தா, அதை ஜி.எம்.கமலக்கண்ணனுக்குக் கொடுங்க! உங்களாலே ஆபீசுலே ஒரு நல்ல காரியம் நடந்ததா இருக்கட்டும். மலர்வளையத்துக்கு நான் பணம் தர்றேன்.

                ஜி.எம்.மிடம் டோஸ் வாங்கிய கடுப்பில், தன் மனைவி செய்த வாங்கிபாத்தை உதாசீனம் செய்துவிட்டு ‘தம்மடிக்கஅலுவலகத்தை விட்டு வெளிநடப்பு செய்த வீரபாகுவை வன்மத்தோடு பார்த்தார் மாசிலாமணி.

      இருபது படியிலே உருண்டும் புத்தி வரலை பாரு!கறுவினார். “இத்தனை வருசம் சேர்ந்து வேலைபார்க்கிறோம். ஒரு கஷ்டநஷ்டம்னு சொன்னா பகிர்ந்துக்க வேண்டாமா? அத்தனை வாங்கிபாத்தையும் நான் ஒருத்தனே சாப்பிடணும்னு நினைச்சாலே சம்பளத்துலே இன்கம்டாக்ஸ் பிடிச்சா மாதிரி கிலியா இருக்கே!

      அதுக்காக என் தலையிலே கட்டிராதீங்க சார்!என்று கூறியபடி நகர்ந்தான் பியூன் பெத்தண்ணா. “எனக்கு வூட்டுலே பொண்ணு பார்த்திட்டிருக்காங்க!

      வீரபாகுவாலும், பெத்தண்ணாவாலும் தன் வீட்டு வாங்கிபாத், ஆளுங்கட்சியால் புறக்கணிக்கப்பட்ட எதிர்க்கட்சி தொகுதியாய் உதாசீனம் செய்யப்படவே, மாசிலாமணியின் மனம் என்ற டாஸ்மாக்கில் குப்புறப்படுத்திருந்த மிருகம் எண்ணை கண்டிராத பரட்டைத்தலைபோல எழுந்து நின்றது. ‘இந்த வீரபாகுவுக்கு சரியான பாடம் கற்பிக்கிறேன்.

      சுற்றும் முற்றும் பார்த்தவர், பெஞ்சின் மீது வைக்கப்பட்டிருந்த ஜி.எம். கமலக்கண்ணனின் டிபன் கேரியரைக் கவனித்தார். தற்செயலாகப் பக்கத்தில் பார்த்தவர், தரையில் வைக்கப்பட்டிருந்த வீரபாகுவின் டிபன் கேரியர் சிறுவயதில் ஜி.எம்.வீட்டுக் கேரியரிடமிருந்து பிரிந்த இரட்டைச்சகோதரனைப் போல அச்சாக இருப்பதைப் பார்த்ததும், குரூரமாகப் புன்னகைத்தார்.

      தம்மடித்துவிட்டு வந்து கொஞ்ச நேரம் வேலைபார்த்த பின்னர், ‘விதிவிட்ட வழி, மதிய உணவைச் சாப்பிட்டே விடுவோம்என்று கேரியரை எடுத்து மேஜையில் வைத்துப் பிரித்து எடுத்ததும்....மேக்கப் போடாத நடிகையை க்ளோஸ்-அப்பில் பார்த்ததுபோல அதிர்ந்தார்.

      என்ன இது? பச்சை முள்ளங்கி, பச்சை கேரட், முட்டைக்கோசு.. இதென்ன, கோதுமை சாதம் மாதிரியிருக்கு? என்னாச்சு இவளுக்கு? சமீபத்துலே அவளை நான் எதிர்த்துப் பேசவேயில்லையே! என்ன திடீர்க்கோபம்? முணுமுணுத்தபடி குழம்பியிருந்தவன், அறையிலிருந்து அவசர அவசரமாக வெளிப்பட்ட ஜி.எம்மைப் பார்த்துக் கலவரத்துடன் எழுந்தான்.

      மிஸ்டர் வீரபாகு!என்றவர் அவன் மேஜையிலிருந்த டிபன் கேரியரைப் பார்த்து, “அடடா, நம்ம சாப்பாடு மாறியிருச்சு போலிருக்குதே! என்று அதிர்ச்சியுடன் கூறினார்.

      ஓ! எப்படி...?குழப்பமும் பயமுமாக, எல்டாம்ஸ் ரோடு சிக்னல் போலீசிடம் சிக்கிய ‘எல்போர்டு போல நாக்குழறினான்.நல்ல வேளை சார்! நான் சாப்பிடலை!

      நான் சாப்பிட்டுட்டேனே!சிரித்தார் கமலக்கண்ணன். “தினம் தினம் பத்தியச் சாப்பாடு சாப்பிடறவனாச்சே! சாம்பார், பொறியல் கிடைச்சதும் ஒரு பிடி பிடிச்சிட்டேன்.

      எல்லாத்தியுமா?

      இல்லை வீரபாகு! நான் ஸ்வீட் ஒண்ணுதான் சாப்பிட்டேன். இன்னும் ரெண்டு மூணு இருக்கு!என்றவர் வந்த வேகத்திலேயே மீண்டும் உள்ளே சென்று, மிச்சமிருந்த ஸ்வீட்டுகளுடன் வீரபாகுவின் கேரியரைக் கொண்டுவந்தார். “ஸாரி வீரபாகு! உங்களுக்கு வேண்ணா நான் அஞ்சப்பர்லேருந்து செட்டிநாடு மீல்ஸ் கொண்டு வரச் சொல்லட்டுமா?

      அதை அப்புறம் பார்த்துக்கலாம் சார்! உங்க சாப்பாட்டை என்ன பண்றது?

      ஒண்ணு பண்ணுங்க! நம்ம ஆபீஸ் வாசல்லே.....

      ஸார் ஸார்... நாய்க்கெல்லாம் போடக்கூடாது சார்...

      அட, நம்ம செக்யூரிட்டிக்குக் கொடுங்கன்னு சொல்ல வந்தேன்.

      தர்மசங்கடத்தோடு ஜி.எம். நகர, கொஞ்ச நேரம் முன்பு வாய்க்கு வந்தபடி திட்டிய மனிதர், இத்தனை பவ்யமாகப் பேசியது வீரபாகுவுக்கு ஆறுதலாக இருந்தது.

      என்ன வீரபாகு! ஸ்வீட் கொண்டு வந்திருக்கீங்க போலிருக்குதே! என்ன ஸ்வீட்?

      பார்த்தா மைசூர் பாகு மாதிரியிருக்கு!என்றான் பெத்தண்ணா.

      ஒரு நிமிஷம்!என்று சொன்ன வீரபாகு, ஒரு ஸ்வீட்டை எடுத்து, அதைத் தன்  நெற்றியில் அடித்துப் பார்த்தான்.

      ஸ்ஸ்ஸ்ஸ்! உச்சந்தலையிலேருந்து உள்ளங்கால் வரை பொறி கலங்குது. இது மைசூர்பாகே தான்!என்றான் வீரபாகு.

(தொடரும்)