Sunday, August 22, 2010

எந்திரன் படமும் எல்லீஸ்பேட்டை ஏகாம்பரமும்!

எந்திரன் படம் குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன. அவையாவன:

"எந்திரனும் ஏகாதிபத்தியத்தின் எளக்காரமும்," என்ற தலைப்பில் தோழர் தோசையூர் தொண்டைமான், பொதுவுடமைத் தத்துவத்தை, கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர் பாகு மாதிரி புட்டுப் புட்டு வைத்து ஒரு இடுகை போடப்போகிறாராம்.

"எந்திரனும் எட்டுக்கால்பூச்சியும்," என்ற தலைப்பில் அழிந்துவரும் எட்டுக்கால்பூச்சிகள் காரணமாக, இயற்கையின் எழில் எவ்வளவு சீரழிந்து வருகிறது என்று பேய்வீடு பெரியகருப்பன் என்ற பதிவர் அடுத்த இடுகை ரெடி பண்ணி விட்டாராம்.

"எந்திரன் செய்த எள்ளுருண்டை," என்று சமையல்குறிப்பு இடுகையும் சுடச்சுட பரிமாறத்தயாராக இருப்பதாக, சமையல் திலகம், மோர்க்குழம்பு மோகனா குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறார்.

"எந்திரனும் எரித்ரோமைசினின் பின்விளைவும்,’ என்று டாக்டர் எமதர்மராஜன், மன்னிக்கவும், டாக்டர்.எம்.தர்மராஜன் ஒரு புது இடுகை எழுதப்போவதாக, இன்னும் உயிரோடிருக்கும் அவரது சில நோயாளிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இத்தனை பேர் எழுதும்போது, நமது ஆரூடஜோதி, ஜோதிடமாமணி நங்கநல்லூர் நரசிம்மன் மட்டும் சும்மாவா இருப்பார்? அவரும் "எந்திரனும் ஏழரைநாட்டுச் சனியும்," என்று ஒரு இடுகையை இராகுகாலத்துக்கு முன்னால் நாளை பதிவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவர்களெல்லாம் இவ்வளவு சுறுசுறுப்பாக வலைப்பணி ஆற்றும்போது, நான் மட்டும் சும்மாயிருந்தால் நல்லாவாயிருக்கும்? அதனால், நானும் எழுதிவிட்டேன்.

நேற்று சென்னை மாநகரத் திரையரங்குகளில் பிளாக்கில் டிக்கெட் விற்போரின் அவசரக்கூட்டம் ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்றது. இதற்கு எல்லீஸ்பேட்டை ஏகாம்பரம் தலைமை வகித்தார்.(அப்பாடா, எனக்காவது ஒருவழியா தலைப்புக்குப் பொருத்தமா வந்திருச்சு!). அவர் நிகழ்த்திய உரையிலிருந்து.....

எந்திரன்’ திரைப்படங்கள் குறித்து உலக வரலாற்றிலேயே முதல்முறையாக 1,23,456 இடுகைகளை வலைப்பதிவர்கள் எழுதி சாதனை நிகழ்த்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். பிளாக்கினால்(Blog) ஏற்பட்டுள்ள பரபரப்புக் காரணமாக, பிளாக்கில்(Black) டிக்கெட்டுகளின் டிமாண்டு முன்னெப்போதுமில்லாத அளவுக்கு அதிகரித்திருப்பதாக அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இதனால் கள்ளமார்க்கெட்டில் அட்வான்ஸ் புக்கிங் செய்ய புதிய இணையதளம் அமைக்கப்படவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். உலகத்திலேயே முதல்முறையா பிளாக்-டிக்கெட் விற்பனையில் ’வெயிட்டிங் லிஸ்ட்,’ ’ஆர்.ஏ.ஸி(R.A.C),’ மற்றும் ’தாத்கால்(TATKAL),’ முறைகள் கடைபிடிக்கப்படும் என்று அவர் உறுப்பினர்களின் ஆரவாரத்துக்கிடையே அறிவித்தார்.

இதுவரை வலைப்பதிவுகளில், இன்னும் படம் வெளிவராத நிலையிலேயே குருட்டாம்போக்கில் எழுதப்பட்ட 3579 விமர்சனங்கள் ஒரு புதிய உலக சாதனை என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஒரு வலைப்பதிவர் தனது விமர்சனத்தை 1967-லேயே எழுதிவிட்டதாகக்கூறியிருப்பது அப்பட்டமான பொய் என்றும், அப்போது ரஜினிகாந்த் நடிக்கவே வரவில்லையென்றும், ஆதாரபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் திரைப்படம் வெளியானதும், படத்தின் உண்மைக்கதையோடு குத்துமதிப்பாக ஒத்துப்போகிற முதல் மூன்று வலைப்பதிவர்களின் விமர்சனங்களுக்கு முறையே ஒரு ஃபுல், ஒரு ஹாஃப் மற்றும் ஒரு குவார்ட்டர் பரிசாக வழங்கப்படும் என்றும், ஆறுதல் பரிசுகளாக பத்து பேருக்கு மிச்ஸர் பொட்டலங்களும் வழங்கப்படவிருப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

விஜயார்கே என்ற எழுத்தாளர் தனது கதையைத் திருடித்தான் ’எந்திரன்’ படம் எடுத்திருப்பதாகக் குறிப்பிட்டிருப்பதை எல்லீஸ்பேட்டை ஏகாம்பரம் வன்மையாகக் கண்டித்தார். இதே போல பாட்டி வடை சுட்ட கதையை எழுதிய எழுத்தாளரும், ’எந்திரன்’ படத்தயாரிப்பாளர்கள் தனது வடையை, அதாவது கதையைத் திருடிவிட்டதாகக் கூறியிருப்பதாகவும், ஆதாரமாக ஒரு ஊசிப்போன வடையுடன் உலாத்திக்கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

’பாட்டி வடைசுட்ட கதைக்கும் எந்திரன் படத்துக்கும் எந்த சம்பந்தமுமில்லை; இந்தப் படத்தில் பாட்டி கதாபாத்திரமே கிடையாது என்பதோடு ஒரு காட்சியில் கூட வடை,போண்டா,பஜ்ஜி போன்ற பண்டங்களைக் காண்பிக்கவில்லை,’ என்று உறுதிபடக் கூறியுள்ளார்.

எந்திரன் படத்தின் பெயரை உபயோகித்து, சில வலைப்பதிவர்கள் குடுமிப்பிடி சண்டைபோடுவதை ஏகாம்பரம் வன்மையாகக் கண்டித்தார். "160 கோடி ரூபாய் முதலீட்டில் எடுத்த படத்தின் பெயரை உபயோகித்து நயா பைசா செலவில்லாமல் பதிவர்கள் சண்டைபோட்டுக்கொள்வது விஷமத்தனம்,’ என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக சப்பைமூக்கன் என்ற பதிவர் தனது ’எந்திரன்’ பதிவில் நொள்ளக்கண்ணன் என்ற பதிவருக்கு, ஆறுவருடமாக ஆஸ்துமா நோய் இருக்கிறது என்ற திடுக்கிடும் தகவலை வெளியிட்டிருப்பது, பதிவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு பதிலளித்துள்ள நொள்ளக்கண்ணன், ஒரு வருடத்துக்கு முன்னர், இதே சப்பைமூக்கனுக்கு மெரீனா கடற்கரையில் தான் மசாலாபொறி வாங்கிக் கொடுத்ததையும், அதற்கு ஆதாரமாக பொட்டலக்காகிதத்தை 'ஸ்கேன்' செய்து வெளியிட்டுள்ளதாலும் நிலைமை கட்டுக்கடங்காமல் போகிற அபாயம் இருக்கிறது.

"வலையுலகத்தில் என்ன நடக்கிறது?" என்று அண்மைக்கால நிகழ்வுகள் குறித்து கவலை தெரிவித்து, இன்று மாலை முந்திரிக்கொட்டை என்ற பெயரில் வலைப்பூ ஆரம்பித்த அவசரக்குடுக்கை என்ற பதிவர்(?!) தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

’எந்திரன்’ படத்தின் பெயரை உபயோகித்து பல்லாயிரக்கணக்கான இடுகைகள் எழுதப்படுவதால், ’திரைமணம்’ என்று தனியாகத் தொடங்கியது போதாதென்று, அடுத்தடுத்து ’ரஜினிமணம்,’ ’ஐஸ்வர்யாமணம்,’ ’ஷங்கர்மணம்,’ என்று பலமணங்கள் புரிய வேண்டிவருமோ என்று வலைத்தொகுப்புத் தளங்கள் கலவரமடைந்துள்ளதாகவும் ஆதாரமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், இன்னும் ’எந்திரன்’ வெளிவராத நிலையில் ’சுல்தான்-தி-வாரியரும் சுண்டல்கவிஞர்களும்,’ என்ற தலைப்பில் வெளிவந்துள்ள இடுகை வலையுலகில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

பி.கு: இந்த இடுகையில் உபயோகிக்கப்பட்ட வலைப்பதிவுகளின் பெயர்களும், வலைப்பதிவர்களின் பெயர்களும், இடுகைகளின் தலைப்புகளும் முழுக்க முழுக்க எனது கற்பனையே! உண்மையிலேயே இப்படி யாராவது இருந்து, இதே பெயரில் இதே தலைப்பில் எழுதியிருந்தால் என்னை விட்டிருங்கய்யா! என்னையும் புரட்சியாளர்கள் லிஸ்டுலே சேர்த்திராதீங்க...அவ்வ்வ்வ்வ்வ்வ்!

18 comments:

மதுரை சரவணன் said...

epaadiyellam thalaivarukku perumai sekkireengka parungka. super.

Ahamed irshad said...

Writtu..

முத்து said...

கொளுத்தி போட்டுட்டியே சேட்ட

கும்மாச்சி said...

சேட்டை நீங்களும் எந்திரன் ஜோதில கலந்துட்டீங்க. தலைப்புல இப்போ எந்திரன் சேர்க்லேன்னா, பதிவு வந்த பத்து செகண்ட்ல முகப்புலிருந்து அபீட் ஆயிடும்.

vasu balaji said...

சேட்டை! இது அனியாய அழிம்பு:))

ப்ரியமுடன் வசந்த் said...

போட்டு தாக்கிட்டங்களே தல :)

சூப்பர்ப்...!

ஹுஸைனம்மா said...

என்ன சேட்டை, இவ்ளோ தில்லா எழுதிட்டு, கடைசியில இப்படி “என்னையும் புரட்சியாளர்கள் லிஸ்டுலே சேர்த்திராதீங்க...அவ்வ்வ்வ்வ்வ்வ்!” னு ஒரு கும்பிடு போட்டுட்டீங்களே!!

கலக்கல்!! சூப்பர்!! ரசிச்சுச் சிரிச்சேன்!! நன்றி!!

பெசொவி said...

இவ்ளோ வலைப்பதிவு பேர்களை ரிலீஸ் பண்ணிட்டீங்களே, இதில ஒன்னு ரெண்ட யூஸ் பண்ணிக்கனும்னாலும் காப்பிரைட் பிரச்சினை வருமா?

Jey said...

சேட்டை செய்றதுல... புது புர்ச்சியே பண்ணிட்டியே நைனா...

எல் கே said...

puratchi thalaivar settai vaalga

ஜெ. ராம்கி said...

அடடே..

எந்திரன் மேட்டரில் இந்த சர்வேயும் சேர்த்துக்கோங்க. எந்திரன் திரைப்பட விமர்சனங்களில் இடம்பெறப் போகும் வரிகள்...

1. கமர்ஷியல் படைப்பு, கலைப்படைப்பு அல்ல
2. சரக்கு இல்லை.
3. ஏதோ ஒன்று குறைகிறது.
4. தமிழ் சினிமா ரசனையை பின்னுக்கு தள்ளிவிட்டது
5. அப்படியொன்றும் பிரமாதமில்லை
6. ஒரே இரைச்சல்
7. முதல் பாதி பரவாயில்லை, அடுத்த பாதி அறுவை
8. பிரம்மாண்டம் இருக்கிறது. கதையை காணோம்
9. ஓவர் பில்ட்அப்
10. மேற்சொன்ன அல்லாமும்

வெங்கட் நாகராஜ் said...

கலக்குறீங்க தல!

வெங்கட்.

Unknown said...

சேட்டை.... சேட்டை.....

Anonymous said...

எந்திரனும் எள்ளுருண்டையும்...

நல்லா இருக்கே...

சேட்டை பிடிச்ச ஆளுய்யா நீ.

Jayadev Das said...

//டாக்டர் எமதர்மராஜன், மன்னிக்கவும், டாக்டர்.எம்.தர்மராஜன் // ஹா... ஹா... ஹா... ஹா.... அது சரி சுல்தான் தி வாரியர் படம் எப்பதான் வரும்? ஊசி போன பாட்டி வடை மாதிரி ஆயிடும் போல இருக்கே. அதை காக்கா கூட சீண்டதே!

ப.கந்தசாமி said...

நல்லா இருக்கீங்களா சேட்டை,
அன்புடன் மசக்கவுண்டன்

ஸ்ரீராம். said...

செம சேட்டை....

Philosophy Prabhakaran said...

மறுபடி பார்முக்கு வந்துட்டீங்க போல இருக்கே...